Monday, March 31, 2008

எனக்கே எனக்கா !! - குறுந்தொடர் (1 )

என்னுடைய கதைக்கருக்களின் சுவாரசியம் அதை தொடர்ந்து வாசிக்க வைக்கும் உதவும் வசனங்கள்,வார்த்தைகளின் தட்டுப்பாட்டால் நீர்த்துப்போய்விடுகிறதோ
என்பதைப் பற்றி "மனசுக்குள்மத்தாப்பு" திவ்யா அவர்களுடன் ஆர்குட்டில் உரையாடிக்கொண்டிருக்கும்பொழுது, உதித்த யோசனைதான், என் கதைக்கருக்கு திவ்யா கதையோட்டம் மற்றும் உரையாடல்களை திவ்யா அமைத்துக்கொடுப்பது

சிரத்தைஎடுத்து, இதற்கு நேரம் ஒதுக்கிக்கொடுத்த திவ்யாவிற்கு நன்றி.கதைஓட்டத்தை வாசித்து,மேலும் சில ஆலோசனைகளை வழங்கிய முத்துகுமரன் அவர்களுக்கும் நன்றி. இனி கதைக்குப் போவோம்.

----------------
கார்த்தி மூன்று வருடங்கள் பூனாவில் வேலைப்பார்த்துவிட்டு, சென்னையில் அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து சிலவாரங்களே ஆகிறது. அவனது வேலைப்பிரிவில் அந்த வருடம் கல்லூரி முடித்து, பணியில் சேர்ந்திருந்த ஜெனியிடமும், அவனது மேலாளர் மோகனிடமும் நட்பாக பேச ஆரம்பித்து இருந்தான். மோகன் கார்த்தியை விட அலுவல் நிலையிலும், வயதிலும் சில வருடங்கள் மூப்பாக இருந்த போதிலும்,கார்த்தியுடன் சகஜமாகவே பேசுவார்.


மோகன் கதைப்புத்தகங்களில் வரும் நேர்மறைக் கதாபாத்திரங்களுக்குரிய அத்தனை இலக்கணங்களைக் கொண்டிருப்பதாக கார்த்திக்குப் பட்டது. வெளிப்படையாகப் பேசுபவர் என்பதைவிட இயல்பாக , அதே சமயத்தில் அடுத்தவரின் எல்லைக்குள் செல்லாமல், கனிவுடனும் பரிவுடனும் பேசும் மோகனை எல்லோருக்கும் பிடித்ததைப்போல கார்த்திக்கும் பிடித்தது ஆச்சரியம் இல்லை.

கார்த்தியின் எல்லா நட்புகளும் தோழமைகளும் கற்பூரம் எரிவதைப்போல, கொஞ்சம் நேரம்தான் எல்லாம்.. தன்னுடன் பழகுபவர்கள், தனக்கு மட்டுமே முக்கியத்துவம் தரவேண்டும்,தன்னுடன் மட்டுமே தோழமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணங்களினால் அவனுடனான மற்றவர்களின் நட்பு குறிப்பாக பெண் தோழமை, நெடுங்காலம் நீடித்தது இல்லை.அப்படி தரப்படவில்லை எனில், எத்தகைய அழகிய உறவையும் பொசுக்கிவிடக்கூடிய கோபக்கனல் எப்பொழுதும் எரிமலையாய் அவனுள் தூங்கிக்கொண்டிருக்கும். பெற்றோரை சிறுவயதில் இழந்தபின், சுயநலமான உறவுகளால் எடுத்துவளர்க்கப்பட்டதால் ஏற்பட்ட பாதுகாப்பின்மையால் கார்த்திக்கு தான் நட்ட ரோஜா தனக்காக மட்டும் பூக்கவேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் இருப்பதை மாற்றிக்கொள்ள முடியவில்லை.

கார்த்திக்கு ஜெனியைப்பிடித்திருந்தது, அவள் அழகாய் இருக்கிறாள் என்பதற்காக மட்டும் இல்லை. அவளுக்கும் கிரிக்கெட் பிடிக்கும். அவளுக்கும் பாரதிதாசன் கவிதைகள் பிடிக்கும். ஜெனி அவனுடன் மட்டுமே மதிய உணவு சாப்பிடுவாள். இரண்டு மூன்று முறை விடுதியில் அவளை இறக்கிவிடுமாறு கேட்டிருக்கிறாள். ஒரு முறை கார்த்தியால் வர இயலாதபோது, கிருஷ்ணமூர்த்தி வலிய தான் வருவதாகக் கேட்டபோது, ஆட்டோவில் போய்விடுவேன் என சொன்னபோது கார்த்திக்கு உள்ளூர மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.அலுவலகத்தில் இருந்த அத்தனைப் பேரும் வெள்ளித்திரைப் படத்திற்கு போன போது, அவனருகில் அமருவதற்காகவே அவள் எடுத்துக்கொண்ட பெரும் முயற்சிகள் கார்த்திக்குப் பிடித்து இருந்தன.


மூன்றுநாட்கள் சொந்த விசயமாக வெளியூர் சென்றிருந்த மோகன், ஜெனியையும் கார்த்தியையும் தனது அறைக்கு வரச்சொல்லி தனது நிச்சயதார்த்த புகைப்படஆல்பத்தை மடிக்கணினியில் திறக்கும் முன்.

"நான் பர்ஸ்ட் பார்க்கனும்" என ஜெனி மோகனின் மடிக்கணினியை தன் பக்கம் திருப்பிக்கொண்டு ஒவ்வொரு படமாக நகர்த்திக்கொண்டிருக்க

"இரண்டு வருசம் ஆச்சு, அவளை கன்வின்ஸ் பண்ண?"

"லவ் மேரேஜா , மோகன்?"

"ஆமாம், கார்த்தி,, ஹைதராபாத் ல ஒரே ஆபிஸ்.. அவளோட காதலுக்காக தவமாய் தவமிருந்தேன்... இப்போ அதை எல்லாம் நினைச்சுப்பார்க்கவே சுவாரசியமா இருக்கு. கல்யாணம் முடிஞ்சு மெட்றாஸ்ல செட்டில் ஆவுறது என் விருப்பம், அதனாலதான் அந்த வேலையை விட்டுட்டு சாலரி குறைவாயிருந்தாலும் இங்கே ஜயின் பண்ணேன்.. அவளும் இந்த மாசக்கடைசிலே ரிலீவ் ஆயிடுவா...மேரேஜ்க்குப் பின்ன கொஞ்ச நாள் கழிச்சு அவளுக்கு வேலை டிரை பண்ணலாம்னு இருக்கோம்"

"மோகன் சார், உங்க வருங்கால மனைவி ரொம்ப அழகா இருக்காங்க, மேட் ஃபார் ஈச் அதர்" எனச்சொல்லி அந்த புகைப்படங்களை கார்த்தி பார்ப்பதற்காக அவன் பக்கமாக மடிக்கணினியை ஜெனி நகர்த்தினாள்.

புகைப்படத்தில் மோகனின் அருகே ரம்யா.. கார்த்திக்கு குளிர் அறையிலும் வியர்க்க ஆரம்பித்தது. அதே பழைய காந்தப்புன்னகை..வசீகரம். பார்ப்பவர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும் களையான முகம்... தேவதையைப்போல பட்டுச்சேலையில் மோகனின் அருகே நின்று கொண்டிருந்தாள்.

படபடப்பான மனதுடன் கார்த்தியின் நினைவுகள் சில வருடங்கள் பின்னோக்கிச் சென்றது.

கதையின் தொடர்ச்சியை வாசிக்க இங்கே சொடுக்கவும்

மார்கஸ் டிரஸ்கோதிக்

தொடர்ச்சியான பன்னாட்டு கிரிக்கெட் போட்டிகள், சுற்றுப்பயணங்கள்,ஒவ்வொரு சமயத்திலும் ஆட்டத்திறனை வெளிப்படுத்தியாக வேண்டிய கட்டாயங்கள் , குடும்பத்தை விட்டு வெகுநாட்கள் பிரிந்து இருக்க நேர்தல்,நம்பிக்கை இழத்தல் போன்ற விசயங்களின் நீட்சியான மன அழுத்தப்பிரச்சினைகள் காரணமாக கிரிக்கெட் ஆட்டத்தை விட்டு விலகிச்செல்ல விரும்பிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஷான் டையிட், நியுசிலாந்து ஆட்டக்காரர் லூயிவின்சென்ட் ஆகியோருக்கு முன்னமே இத்தகையதொரு பிரச்சினையினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு , கடைசியில் அதில் இருந்து மீண்டு வர இயலாமலேயே கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சில தினங்களுக்கு முன்னர் ஓய்வுபெற்றவர் தான் இங்கிலாந்து அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மார்கஸ் டிரஸ்கோதிக்.





நேர்த்தியான இடதுகை ஆட்டக்காரரான டிரஸ்கோதிக், 2000 ஆம் ஆண்டு நாட்வெஸ்ட் தொடரின்போது, மாற்று தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார். முதல் ஆட்டத்திலேயே 79 ரன்கள் அடித்து வருகையை பறை சாற்றிய போதும் மற்ற ஆட்டக்காரர்களின் மோசமான ஆட்டத்தால் அந்த சமயத்தில் வலுவாக, முழுப்பலத்துடன் இருந்த ஜிம்பாப்வே அணியுடன் தோற்றுப்போனது. அதன்பின் தொடர்ந்து வந்த ஆட்டங்களில் மற்ற இங்கிலாந்து ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடதபோதும், இவர் தனிஒரு ஆளாக நின்று அணியை கரைச்சேர்க்க போராடுவார். இவரின் முதல் நான்கு ஒருநாள் சதங்கள் அணிக்கு வெற்றி வாய்ப்பைத் தேடித் தர இயலவில்லை. 2002 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக நாட்வெஸ்ட் இறுதிப்போட்டியில் இந்தியா பரபரப்பான சூழலில் வெற்றி பெற, இந்த ஆட்டத்தில் அடித்த சதமும் அணியை வெற்றி பெறச்செய்ய இயலவில்லை. [விபரத்திற்கு இங்கே சொடுக்கவும்
இவர் ஒரு நாள் போட்டிகளில் கடைசியாக இலங்கைக்கு எதிராக அடித்த சதமும் வீணாய்போனது. டிரஸ்கோதிக்கின் சதத்தினால் இங்கிலாந்து குவித்த 321 ரன்களை ஜெயசூரியா , தரங்கா ஜோடி, இங்கிலாந்து பந்துவீச்சை நொறுக்கி எடுத்து, 75 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் அதிரடி வெற்றி பெற்றது. [விபரத்திற்கு இங்கே சொடுக்கவும்




ஒருநாள் போட்டிகள் மட்டுமன்றி டெஸ்ட் ஆட்டங்களிலும் இங்கிலாந்து அணிக்காக துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இவர் 14 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார். இதில் ஒன்று இரட்டைச்சதமாகும். மகிழ்ச்சிக்குரிய விசயம் என்னவெனில் இந்த இரட்டைச்சதம் தென்னாப்பிரிக்கவிற்கு எதிராக இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் வெற்றி பெற்ற ஆட்டத்தில் அடிக்கப்பட்டதாகும். இந்த இரட்டைச்சதத்திற்கு ஊறுகாயாக இரண்டாவது இன்னிங்ஸிலும் ஆட்டமிழக்காமல் ஒரு அரைசதம் அடித்து இங்கிலாந்தின் வெற்றியை உறுதிச்செய்தார்.
[விபரத்திற்கு இங்கேசொடுக்கவும்] இவரின் 9 டெஸ்ட் சதங்கள் இங்கிலாந்து வெற்றி பெற்ற ஆட்டங்களில் இடம்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.




2006 ஆம் ஆண்டு இந்திய சுற்றுப்பயணத்தில் பாதியில் அழுதுகொண்டே நாடு திரும்பியது அவரது கிரிக்கெட் வாழ்வின் முடிவின் ஆரம்பமாக அமைந்தது. சிறந்த ஸ்லிப் பீல்டரான டிரஸ்கோதிக் டெஸ்ட் ஆட்டங்களில் 95 கேட்சுகளைப்பிடித்துள்ளார். பரமவைரியான ஆஸ்திரேலியா அணிக்கெதிராக டெஸ்ட் ரன்களில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதியை அடித்து இருந்தாலும் ,டெஸ்ட் சதம் ஏதும் அடிக்காதது ஏமாற்றமே.



ஹைலி ரோஸ் என்ற பெண்ணை வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொண்ட டிரஸ்கோதிக்கிற்கு இரண்டு மகள்கள் உண்டு. மனஅழுத்தத்தால் பாதிக்கபடாமல் நிதர்சனங்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கொஞ்சம் அதிகமாக இருந்திருந்தால் பன்னாட்டுப்போட்டிகளில் பத்தாயிரம் ரன்களை அடித்திருக்கும் டிரஸ்கோதிக், இன்னும் சிலவருடங்கள் சிறப்பாக ஆடி, இங்கிலாந்து ஆட்டக்காரர்களின் சாதனைகள் பலவற்றை முறியடித்திருக்கக்கூடும். எதுவாக இருந்தாலும் வாழ்க்கையிலும் கிரிக்கெட்டிலும் "No ifs and buts" . விளையாடும்போது "Catalyst" மட்டைகளை உபயோகப்படுத்திய டிரஸ்கோதிக், மீண்டும் சர்வதேச அரங்கில் கிரிக்கெட் சம்பந்தபட்ட வேறுதுறைகளில் மின்னுவார் என நம்பலாம்.

Sunday, March 30, 2008

பதிவர் சந்திப்பு - 30/03/2008, ஞாயிறு மெரினா கடற்கரை



குசும்பன் தனது திருமணத்திற்கு பதிவர்களை அழைக்கவும், அமீரகத்தில் இருந்து விடுப்பில் வந்து இருக்கும் அபிஅப்பா பதிவர்களை சந்திக்கும் முகமாகவும் இந்த பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை சொன்ன நேரத்திற்கு முன்பாகவே, மா.சிவக்குமாருடன் மெரினா கடற்கரை, காந்தி சிலை வளாகத்திற்குச் சென்ற போது அங்கே உண்மைத்தமிழன் எல்லோரையும் வரவேற்க கையில் வேர்க்கடலைப் பொட்டலத்துடன் காத்துக்கொண்டிருந்தார்.



மா.சிவக்குமாரும் உண்மைத்தமிழனும் வலையுலக வசிஷ்ட மாமுனி யார் என விவாதித்துக்கொண்டிருந்த போது அதியமானும் அவர் பின்னயே பாலபாரதி,லக்கிலுக்,நந்தா ஆகியோர் வந்து சேர பதிவர் சந்திப்புக்கான களைக் கட்டியது நடுமையமாக அமைந்திருந்த தண்ணீரற்ற குளத்தில் அமர்ந்து பரஸ்பரம் நலம் விசாரிப்புக்களுக்கு ஊடாகவே குப்புசாமி செல்லமுத்து,பைத்தியக்காரன்,ஆடுமாடு,ஜியோவ்ராம்சுந்தர்,நித்யகுமாரன்,கடலையூர் செல்வம்,இரட்டைப்பதிவர்கள் அதிஷா ,ஆழியூரான்,சுகுணாதிவாகர்,வரவனையான்,டோண்டு,ஊற்று,முரளிக்கண்ணன்,
சந்தோஷ்,ஜேகே,வெங்கட்ரமணன், NHM எழுதி வடிவமைத்த நாகராஜன்,சௌந்தரராஜன்,பாரி வந்தமர்ந்து சந்திப்பின் நாயகர் குசும்பனுக்காகக் காத்துக்கொண்டிருந்தபொழுதே அவர் ஆர்குட் புகைப்படங்களில் காணப்படும் தோற்றத்தைவிட மென்மையாக, கல்யாணபூரிப்புடன் வந்து சேர்ந்தார்.

துணைநாயகர் அபிஅப்பாவிடம் இருந்து பாலபாரதிக்கு போன் வர, இவர் எங்கே இருக்கீங்க எனக்கேட்க, ஏதோ அடுத்த ஸ்டாப்பில் இருப்பது போல, கிண்டியில இருக்கேன் ஒரு ஆட்டோவையும் காணோம் என்று சொல்ல, சரி 5 லிட்டர் கேன் எங்கே எனக்கேட்டதும் போன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. லக்கிலுக்கும் 5 லிட்டர் கேனைப் பற்றி விசாரித்தபோதும் அதே போல் போன் கட் செய்யப்பட்டதாம்.

எல்லோருக்கும் குசும்பன் தனது திருமண அழைப்பிதழ்களை தனிப்பட்ட முறையில் கொடுத்தார். சென்னைப்பதிவர்கள் சார்பாக பதிவர்கள் பைத்தியக்காரன் மற்றும் குப்புசாமி செல்லமுத்து ஆகியோர் குசும்பனுக்கு திருமணப்பரிசளித்தனர்.




தட்டுத்தடுமாறி[ஆட்டோக்கிடைக்காமல்] வந்து சேர்ந்த அபிஅப்பா உற்சாகத்துடன் வந்து சேர்ந்தார். சந்திப்பு முடியும் தருவாயின்போது ஓகையாரும், மரபூர் சந்திரசேகரும் வந்து சந்திப்பில் தங்களின் வருகையைப் பதிவு செய்து கொண்டனர்.

* லக்கிலுக் தமிழ்மணம் டீசர்ட்டை அணிந்து வந்து இருந்தார்.

* நித்யகுமாரன் என்றபதிவர், வலைப்பதிவர் பட்டறைக்காக தயாரித்து யூடியுப் தளத்தில் வலை ஏற்றப்பட்டிருந்த வீடியோவைப்பார்த்து திரட்டிகளில் இணைந்ததாகக் குறிப்பிட்டார்.

* பதிவர் வவ்வாலும் வந்திருப்பதாக வந்திருந்த தகவலை ஒட்டி, இவராக இருக்குமோ அவராக இருக்குமோ என ரகசியமாக அலசப்பட்டது.




* சுண்டல் விற்க வந்த சிறுவர்கள் அனைவரையும் அரைமணி நேரம் கழித்து வா என அனுப்ப, எல்லோரும் ஒரு சேர அரை மணி நேரத்திற்குப்பின் வந்துசேர சுண்டலை பதிவர்களிடம் விற்பதற்கு சிறுவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தள்ளுமுள்ளுக்களை உண்மைத்தமிழன் சமாளித்து அனைவருக்கும் சுண்டல் தர ஏற்பாடு செய்தார்.

* அபிஅப்பா எல்லோரும் எதிர்பார்த்திருந்த 5 லிட்டர் கேனை கண்ணில் காட்டவே இல்லை.

*சுகுணாதிவாகர் சற்று இளைத்திருந்தார். வரவனையான் பிரெஞ்சு தாடி வைத்து,வழமைப்போலவே மினுமினுப்பாக இருந்தார்.



* தமிழ்99 கீபோர்டு ஸ்டிக்கர்களும் NHM எழுதிக்கான குறுந்தகடுகளும் விநியோகிக்கப்பட்டன. நாகராஜன் எழுதியில் புதுப்பதிவர்களுக்கான சந்தேகங்களை விளக்கினார்.

*வெங்கட்ரமணன் பீச் ஸ்டேஷன் வரைப் போய், திரும்ப அதே டிரெயினில் வியர்த்து விருவிருக்க திரும்பிய அனுபவத்தைப்பகிர்ந்து கொண்டார்.


* மெக்காலே கல்விமுறை சிறப்பான ஒன்று என்றும், கல்வி ஆடம்பரம் என்ற நிலையை மாற்றி அத்தியாவசியம் என ஆக்கியவர் மெக்காலே என்றத்தகவலை அதியமான் பகிர்ந்து கொண்டார்.




* பின்நவீனத்துவப்பதிவர்கள் அனைவரும் அரைமணிக்கொருதரம் காணாமல் போனார்கள்.



*டோண்டு, பாலபாரதியின் தொழில்நுட்பவியல் பதிவை வெகுவாகப்பாராட்டினார்.



*முரளிக்கண்ணன் சகபதிவர்களின் பதிவுகளை நினைவுகூர்ந்து பதிவர்களை ஆச்சரியப்படுத்தினார்.

*நந்தா வலைச்சரப்பதிவிற்காக விடியற்காலை வரை விழித்து தட்டச்சு செய்வதாகக்கூறினார்.

*பதிவர் ஜேகேவிற்கு அலுவலகத்தில் ஆணி அதிகமானதால் தேன்கிண்ணம் தவிர வேறுபதிவுகள் எழுத நேரமில்லை என வருத்தப்பட்டார்.

*ஊற்று கலாபன் தனித்தளம் வாங்கியும்,தனது நிறுவனத்தில் பணி உயர்வு கிடைத்தமையால் நிறையப் பதிவுகள் எழுத இயலவில்லை எனத் தெரிவித்தார்.



*கடலையூர் செல்வம், அதிஷா ஆகியோர் முதன்முறை சந்திப்புக்கு வந்திருந்தாலும், எல்லோரிடமும் எளிதாக நட்புப் பாராட்டினர்.

*போன பதிவர் சந்திப்பைப்போலவே, இந்த முறையும் ஆழியுரானின் பைக் ரிப்பேர் ஆகி பாதி வழியில் நின்று, சரிசெய்துவிட்டு தாமதமாக வந்தார்.

*குப்புசாமி செல்லமுத்து எல்லோரையும் வளைத்துக்கட்டி புகைப்படங்களை எடுத்து தள்ளினார்.




பதிவர்கள் தனித்தனிக்குழுக்களாகப் பிரிந்து பேசிக்கொண்டிருக்கையிலேயே அனைவரிடமும் விடைபெற்றுவிட்டு ,மா.சிவக்குமாருடன் வீடு வரும் வழியில் "டட்ச்" முறையில் கோடம்பாக்கத்தில் எது கேட்டாலும் இல்லை என்று சொன்ன உணவகத்தில் சாப்பிட்டு , சகப்பதிவர்களை நட்புரீதியில் சந்தித்த மகிழ்ச்சியுடன் நல்லதொரு மாலைப்பொழுது நிறைவானது.

Sunday, March 23, 2008

ஜெனி கண்டிப்பா வருவாள் - ஒரு நிமிடக்கதை

”புதன்கிழமை என் பேத்தி ஜெனி வரா, திரும்பபோறப்ப என்னை பாம்பே கூட்டிட்டுபோறேன்னு சொல்லி இருக்கா” என கடைசி நான்கு நாட்களாக எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந்த பெரியவர் வேதநாயகத்திடம் விபத்தொன்றில் ஜெனி இறந்து போன விசயத்தை அவரிடம் சொல்லலாமா வேண்டாமா என அவரது கிராமத்து வீட்டில் உறவினர்களிடையே ஒரு பெரும் போராட்டமே நடந்து கொண்டிருந்தது.

கடைசி சில மாதமாகத்தான் எழுந்து நடமாடும் அளவுக்கு உடல்நிலை தேறி இருக்கும்பொழுது இது போன்ற அதிர்ச்சி செய்தியை சொல்ல என்னை வேத நாயகத்திடம் அனுப்பினார்கள்.

“தாத்தா, நம்ம ஜெனி ஒரு ஆக்ஸிடெண்ட்ல கர்த்தர் கிட்ட போயிட்டாங்க”

எந்த சலனமும் இல்லாமல் ஒரு கணம் பார்த்துட்டு “போடா, போய் வேலை இருந்தா பாரு”

சிறிது நேர மௌனத்திற்குப் பின், அறையை விட்டு வெளியே வந்த வேதநாயகம், உறவினர்களிடம்

“என்ன இங்க கூட்டம், ஜெனி வரேன்னு சொல்லி இருக்கா, கண்டிப்பா வருவா, யாரும் தேவையில்லாம எதுவும் பேசவேண்டாம்” சொல்லிவிட்டு உள்ளே போய் போனமுறை ஜெனி அவருக்கு கொடுத்திருந்த பைபிளை எடுத்து வாசிக்கத் தொடங்கினார்.

அடுத்த இரண்டு நாட்களும்,வழக்கம்போலவே அதிகாலையில் எழுந்து குளித்து , சர்ச்சுக்குப் போய் விட்டு வரும்வழியில் கோமதிவிலாஸில் காபி, இட்லி சாப்பிட்டுவிட்டு என மிகச்சாதரணமாகவே வேதநாயகம் நடந்து கொண்ட விதம் எனக்கு புதிராய் இருந்தது.

இத்தனைப் பெரிய துக்கத்தை இவரால் எப்படி
தாங்கிக் கொள்ள முடிகிறது. தாங்கிக் கொள்கிறாரா இல்லை அதிர்ச்சியில் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டாரா என்றக்குழப்பத்தில்,

“தாத்தா,உன்னால எப்படி இப்படி இருகக முடியுது, நிஜமாவே ஜெனி செத்துப் போயிட்டாங்க,”

“போடா பைத்தியக்காரா, ஜெனி நாளைக்கு கண்டிப்பா வருவா, நீ பார்த்துக்கிட்டே இரு” கையில் பைபிளுடன் உள்ளே உறங்கப் போன வேதநாயகம் மறுநாள் காலை எழுந்திருக்கவேவில்லை.
-----------

Thursday, March 20, 2008

வேறொரு பெயர் வேண்டும் - ஒரு நிமிடக்கதை

குறுந்தகவலுக்கான சத்தம் அடிக்க, கைத்தொலைபேசியை எடுத்துப் பார்த்தேன். ஜெனியிடம் இருந்து ஆங்கிலத்தில் ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.

“எனக்கு வேறு ஒரு பெயர் வைக்க உனக்கு வாய்ப்பு கிடைத்தால் நீ எந்த பெயரை எனக்கு சூட்டுவாய்...” என அச்செய்தியில் கேட்கப்பட்டிருந்தது.. பதில் கட்டாயம் எனவும்
குறிப்பிடப்பட்டிருந்ததால் கல்லூரிக்காலங்களில் நான் காதலித்த ரம்யா வின் பெயரைப் பதிலாக அனுப்பி வைத்தேன்.

அடுத்த சில நிமிடங்களில் சின்ன குறுகுறுப்பில் அதே குறுந்தகவலை அவளுக்கு அனுப்பி வைத்தேன். எனக்கு என்ன பெயர் கிடைக்கப்போகிறது என்ற ஆவலுடன் கைத்தொலைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்த 30வது வினாடியில் . “பெர்ணாண்டஸ்” என்று பதில் வந்தது.

விளையாட்டுத்தனமாய் அதுவரை இருந்த மனது, சற்று உணர்ச்சிவசப்பட்டது. உடனே ஜெனியை அழைத்தேன்.

“ஹலோ ஜெனி தாங்க் யூ ஸோ மச்”

“யெஸ் கார்த்தி, தட்ஸ் ட்ரூ, என் அப்பா பெயர் தான் உனக்குக் கொடுப்பேன்,நட்பு மட்டுமில்ல, என் அப்பா என்னிடம் காட்டின வாஞ்சையான பாசமும் வேண்டும்டா, பிளீஸ் தருவியா”

ரம்யாவை விட ஜெனியை அதிகமாக நேசிக்கப்போகிறேன் என்ற உறுதியுடன் “ஸ்யூர் ஜெனி” என்றேன்.

------ *** -------

Wednesday, March 12, 2008

DEAR RAMYA - சிறுகதை

எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விசயங்கள் எதிர்பாராத சமயத்தில் நடந்தால் மகிழ்ச்சியாகத்தானே இருக்கும். கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு முன் தொடர்பைத் துண்டித்துக்கொண்ட பின்னர் திடிரென ஜெனி என்னை தொலைபேசியில் அழைத்தபோது எனக்கு அப்படித்தான் இருந்தது. நடுவில் இந்த 7 மாதங்கள் பேசவில்லை என்ற சுவடே இல்லாமல் , மிகவும் இயல்பாகப் பேசினாள். நானும் இயல்பாகவே பேசினாலும் ஏன் இத்தனை நாள் அவள் என்னிடம் பேசவில்லை என்ற கேள்வி உறுத்திக்கொண்டே இருந்தது.

“ஜெனி, ஏன் இத்தனை நாள்? நான் அப்படி என்ன பெரிய தப்பு பண்ணேன்...புரபோஸ் பண்ணது தப்பா?”

“நான் தப்புன்னு சொல்லலியே!!, நீ புரபோஸ் பண்ண அடுத்த நாள் கூட நான் தானே உன்னைக் கால் பண்ணேன்”

“ம்ம்ம்ம்”

“கார்த்தி, நல்லா யோசிச்சுப்பாரு, நீயும் நானும் போகப் பிளான் பண்ணி இருந்த மூவி டிக்கெட்ல நீ யார் கூட போன?”

“நீ வரலேன்னு சொன்னே, அதனால உன் பிரண்டு ரம்யா கூட போனேன், இதுல என்ன இருக்கு ?”

“எனக்கு அதுப் பிடிக்கல, ஸோ , உன்கிட்ட பேசவேண்டாம்னு இருந்தேன்.. நான் வரலேன்னு சொன்ன பிறகு என் இடத்தில இன்னொரு பொண்ணை நீ கூட்டிட்டுப்போனது உனக்கு சாதாரணமா இருக்கலாம்.. எனக்கு அப்படி இல்லை” என்று ஜெனி சொன்னபோது, இத்தனை தூரம் ”பொசசிவ்” ஆ இருப்பாள் என்று நினைக்கையில் ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும், இந்த பொசசிவ்னெஸ் என் மேலே இருந்திருக்கிறது எனும்போது மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவளிடம் அந்த நிகழ்வுக்காக மன்னிப்புக்கேட்டுக்கொண்ட பிறகுகுடும்பம், வேலை, கிரிக்கெட் என பேச்சு நெடுநேரம் தொடர்ந்தது.

பேச்சு முடிந்தவுடன் கடந்த சில மாதங்களில் எனது தோழியாகவும் ஆகிப்போன ஜெனியின் தோழி ரம்யாவிற்கு “ஜெனியுடன் நான் பேசினேன்” என்று ஒரு வரியில் மின்னஞ்சல் அனுப்பினேன்.

ஜெனி முன்பு போல ரம்யாவிடம் இப்பொழுது நெருக்கமாக பேசுவது இல்லை என்றாலும், அவ்வப்போது மின்னஞ்சல் பரிமாற்றம் இருக்கு என ரம்யா சொல்லக் கேட்டு இருக்கேன். என்னைப்போல ரம்யாவும் நான் ஜெனியிடம் காதல் சொன்னதால் தான் ஜெனி என்னுடன் ஆன தொடர்பைத் துண்டித்துக் கொண்டாள் என நினைத்துக் கொண்டிருக்கிறாள்.

சில நினைவுகளை அசைபோட்டுவிட்டு, ஜெனிக்கு , என்னுடைய அவளுக்கான நினைவுகள், இன்னமும் உயிர்த்து இருக்கும் காதல், பிரிவின் வலி, பாதிப்புகள் என ஜெனி நான் சம்பந்தபட்ட உணர்வுப்பூர்வமான விசயங்களை பெரிய மின்னஞ்சலாக ஆங்கிலத்தில் தயார் செய்து அனுப்பிவைத்தேன். ஜெனியிடம் இருந்து பதிலுக்காக காத்திருந்து இரண்டு , மூன்று நாட்கள் ஓடி ஒரு வாரமும் ஆனது. ஜெனியின் எண்ணுக்கு அழைத்துப்பார்த்தேன். எடுக்கவில்லை தொடர்ந்து முயற்சி செய்தேன். அழைப்பு எடுக்கப்படவில்லை.

"Why no reply for my mail?" என்ற கேள்வியை மட்டும் குறுந்தகவலாக அனுப்பிய அடுத்த நொடி, "Read the mail that you had sent” என பதில் வந்தது.

அவளுக்கு அனுப்பி இருந்த மின்னஞ்சலை மூன்றாவது முறை வாசித்தபோது, காரணம் புலப்பட்டது. ஜெனிக்கான மின்னஞ்சலில் “Dear Ramya" என முதல் வரி இருந்தது.

-------முற்றும்---

Monday, March 10, 2008

அன்று மார்ச் 10, 1928 ஒலிம்பிக் ஹாக்கி தங்கத்திற்கான பயண ஆரம்பம் - மார்ச் 10 ,2008 இந்தியா தகுதிச்சுற்றில் வெளியேற்றம்

நவீன ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பித்த பிறகு முதல் மூன்று ஒலிம்பிக் போட்டிகளில்(1896 - 1904) ஹாக்கி ஆட்டம் இடம்பெறவில்லை. முதன்முறையாக 1908 ஆம் ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில், முதன் முறையாக ஹாக்கி ஆட்டம் இடம்பெற்று ,6 நாடுகள் பங்கேற்க இங்கிலாந்து தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியது. 1912 ஆம் ஒலிம்பிக் போட்டிகளில் ஹாக்கி நீக்கப்பட்டு மீண்டும் 1920 இல் ஆன்ட்வெர்ப் போட்டிகளில் இடம்பெற்று, மீண்டும் இங்கிலாந்தே வென்றது. 1924 பாரிஸ் ஒலிம்பிக்கில் மீண்டும் ஹாக்கி நீக்கப்பட்டது.
இந்தக் காலக்கட்டத்தில் பன்னாட்டு ஹாக்கி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு ஆம்ஸ்டர்டம் ஒலிம்பிக்கில் ஹாக்கிப்போட்டிகள் சேர்க்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டு சேர்க்கப்பட்டது.
இந்தியாவில் 1925 தேசிய ஹாக்கிப்போட்டிகள் நடத்தப்பட்டதும், இந்திய இராணுவ அணியின் வெற்றிகரமான நியுசிலாந்து சுற்றுப்பயணமும் இந்திய அணியை ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்பலாம் என்ற தைரியத்தை, இந்திய ஹாக்கி சங்கத்துக்கு கொடுத்தது. இருந்தபோதும் , அப்போதைய பிரிட்டன் அரசு, ஏற்கனவே நடந்த போட்டிகளில் இங்கிலாந்து தங்கம் வென்றிருக்க, தனது ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் இந்தியாவை எப்படி ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுப்புவது எனத் தயங்கியது. ஒரு வழியாக பிரிட்டிஷ் இந்திய அணி என்ற பெயரில் போட்டிக்கு அனுப்ப பிரிட்டன் ஒப்புக்கொண்டது. அந்தப்போட்டியில் இங்கிலாந்து அணி பங்கேற்கவில்லை.[ இந்தியா சுதந்திரம் அடையும் வரை , இந்திய அணி பங்கேற்கும் எந்த ஹாக்கிப்போட்டிகளிலும் இங்கிலாந்து பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் முதன் முறையாக மோதிக்கொண்டது, சுதந்திரத்திற்குப்பின் 1948 ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டியில் தான். இந்தியா 4 - 1 என்றக்கணக்கில் தங்கம் வென்றது.]

ஆம்ஸ்டர்டம் புறப்படும் முன் பம்பாய் அணியுடன் ஆன பயிற்சி ஆட்டத்தில் பிரிட்டிஷ் இந்திய அணி தோற்றுப்போனது. இந்திய அணியை வழியனுப்ப வந்திருந்தவர்கள் மொத்தம் மூன்றே பேர்.ஹாக்கி சங்கத்தலைவர், துணைத்தலைவர் மற்றும் ஹாக்கி மீது ஆர்வம் கொண்டிருந்த ஒரு பத்திரிக்கையாளர்.

மார்ச் 10, 1928 ஆம் ஆண்டு ஹாக்கிப்போட்டிகளில் இந்திய அணிக்கான பொற்காலத்தை துவக்கும் ஒரு பயணம் கெய்சர் - இ - ஹிந்த் என்ற கப்பலில் தொடங்கியது. மூன்று வாரப்பயணத்திற்குப்பின் ஆம்ஸ்டர்டம் செல்லும் வழியில் இங்கிலாந்தில் கால்பதித்த இந்திய அணி , ஆடிய 11 பயிற்சி ஆட்டங்களில் ஒன்றில் மட்டும் தோல்வி அடைந்தது. ஒரு போட்டி சமனில் முடிந்தது. அந்தக்காலக்கட்டங்களில் இப்படி சொல்லப்படுவதும் உண்டு. "ஹாக்கி மந்திரவாதி" என அழைக்கப்பட்ட தயான் சந்த் , பிரிட்டன் ராணியின் குடையின் கைப்பிடியைக்கொண்டு ஆடி கோல்கள் அடித்தார். ஹாலந்து செல்லும் முன் ஜெர்மனியிலும் பெல்ஜியத்திலும் பயிற்சி ஆட்டங்கள் ஆடிய இந்திய அணி 9 நாடுகளுடன் ஒலிம்பிக் போட்டியில் காலடி எடுத்து வைத்தது.[ இந்த ஆம்ஸ்டர்டம் போட்டிகளில் தான் முதன்முறையாக பெண்கள் களப்போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்]

முதல் போட்டி ஆஸ்திரியாவுடன் 6 - 0 என்ற கணக்கில் எளிதாக வென்றது. தயான்சந்த் 4 கோல்கள் அடித்து இருந்தார்.

அடுத்து பெல்ஜியமுடன் 9 - 0 கணக்கிலும் தொடர்ந்து டென்மார்க்கை 5- 0 கணக்கிலும் வென்று அரை இறுதிக்கு அட்டகாசமாக நுழைந்தது. அரை இறுதியில் 6 - 0 என்று சுவிட்சர்லாந்தை சுருட்டிய இந்தியா இறுதிப்போட்டியில் ஹாலந்தை சந்தித்தது.

50000 பேருக்கு முன்னால் சொந்த மண்ணில் ஆடுகிறோம் என்ற தைரியத்தில் ஆடிய ஹாலந்து அணியை 3 - 0 கணக்கில் வீழ்த்தி தங்கத்தை வென்றது. ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையைப் பெற்றது. பிரிட்டிஷ் இந்தியாவின் கோல்கீப்பர் ரிச்சர்ட் அலன் இந்தப் போட்டிகளில் ஒரு கோல்கள் கூட பெறாதவர் என்ற பெருமையைப்பெற்றார்.
அரை இறுதி வரை ஜெய்பால்சிங் அணித்தலைவராகவும், இறுதிப்போட்டிக்கு மட்டும் எரிக் பின்னிகர் தலைவராக இருந்தார்.



மூன்று பேரினால் வழியனுப்பப்பட்ட இந்திய அணி ஆயிரக்கணக்கானோர் வரவேற்கப்பட இந்தியா வந்து சேர்ந்தனர்.


மார்ச் 10 , 1928 வெறும் மூன்று பேர் வழியனுப்புதலுடன் ஆரம்பித்த ஒலிம்பிக் பயணம், 80 வருடங்களுக்குப்பிறகு அதே மார்ச் 10 ஆம் தேதியான இன்று
தொடர்ந்து 24 ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி. 1928 - 56 வரை 6 தங்கப்பதக்கங்கள். மொத்தம் எட்டுத் தங்கப்பதக்கங்கள். என ஒரு காலகட்டத்தில் பெரும்சக்தியாக விளங்கிய இந்திய அணி மீண்டும் விசுவரூபம் எடுக்கும் என ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளின் முன்னும் ரசிகர்களுக்கு ஏற்படும் நம்பிக்கையை வழக்கமாகப் போட்டிகளில் பங்கேற்று தோற்றுக் குலைக்கும் இந்திய அணி, இந்த முறை தகுதிச்சுற்றுப்போட்டிகளிலேயே வெளியேறி இருப்பது ரசிகர்களை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

வெறும் மூன்று பேரால் வழியனுப்பப்பட்ட அணியை, முப்பது கோடி மக்களும் திரும்பிப்பார்க்க வைத்தது வெற்றி.. வெற்றி மட்டுமே..



வேதனைகளிலும் அதிர்ச்சிகளிலும் மூழ்காமல் , தோல்விக்கான காரணங்களை அலசி ஆராய்ந்து, பழிபோடுவதைத் தவிர்த்து, தேசிய ஆட்டத்திற்கு சர்வதேச அரங்கில் மீண்டும் பழைய பெருமையை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளை இந்திய ஹாக்கி சங்கமும், அரசாங்கமும் ஆட்டக்காரர்களும் , விளம்பரதாரர்களும் எடுத்து வரும் உலகக்கோப்பையையும் 2012 ஒலிம்பிக் தங்கத்தையும் இந்திய அணியினால் வெல்ல வைப்பார்கள் என நம்புவோம்.

படங்கள், விபரங்கள் நன்றி : http://www.bharatiyahockey.org

Sunday, March 09, 2008

தமிழ்மணத்திற்கு நன்றி


தமிழ்மணம் நட்சத்திர வானில், பெரிய நட்சத்திரங்களின் மத்தியில் நானும் ஒரு சிறிய நட்சத்திரமாக மின்ன வாய்ப்பளித்த தமிழ்மணம் தளத்திற்கும், தொடர்ச்சியாக ஆக்கப்பூர்வமான அபிப்ராயங்களைக் கொடுத்துவரும் வாசக பதிவர்/நண்பர்களுக்கும் , நட்சத்திரப்பதிவுகளை தேன்கூடு,தமிழ்ப்பதிவுகள்,தமிழ்வெளி,திரட்டி, கூகுள் வாசிப்பான்கள் மற்றும் இதர தளங்களின் வாயிலாகவும் வந்து வாசித்த அன்பர்களுக்கும் எனது மனதார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த தமிழ்மண நட்சத்திர வார முதற்பதிவுக்கு வந்த வாழ்த்துப் பின்னூட்டங்கள் இந்த சிம்மாசனத்தின் மதிப்பை உணர்த்தின. சென்ற வாரம் நட்சத்திர இடுகைகளுக்கு தாங்கள் அளித்த வரவேற்பைத் தொடர்ந்து பெறும் வகையில் சுவாரசியமான பயனுள்ள தகவல்களுடனும், எனது எண்ண ஓட்டங்களை நல்ல கதைகளாகவும் தந்து மார்ச் 3 இல் உதித்த இந்த "வினையூக்கி" நட்சத்திரம் மேலும் மேலும் பிரகாசமடையும் உறுதி எடுத்து,வரும் வார நட்சத்திரம் "டுபுக்கு" அவர்களுக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டு விடைபெறுகிறேன்.

தமிழ்மண நட்சத்திரமாக எழுதிய இடுகைகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்

நல்ல வேளை நான் அவளைப்பார்த்தேன் - சிறுகதை

ரயிலின் வேகம் அதிகரித்திருப்பது ரயிலின் ஆட்டத்தில் இருந்து தெரிந்தது. கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். மணி மூன்றைக்காட்டியது. விழுப்புரத்தை தாண்டி இருக்கும் என நினைத்துக்கொண்டு மெதுவாக எனது படுக்கையை விட்டு எழுந்து, நீட்டிக்கொண்டிருக்கும் சில கால்களில் இடித்துவிடாமல் நிதானமாக ரயிலின் கதவருகே வந்து கதவைத் திறந்தேன். எதிர்புறம் இருந்த கதவின் பக்கம் பெண்ணின் அழுகை சத்தம் கேட்க, திரும்பிப்பார்த்தேன். கடவுளே!!! ஒரு வினாடி நான் தாமதித்திருந்தாலும் அவள் ரயிலில் இருந்து கீழே குதித்திருப்பாள். முரண்டு பிடித்தவளை உள்ளே இழுத்து கதவை சாத்தி ஒரு அறைவிட்டேன்.

விட்ட அறையில் பொறிகலங்கி, கண்களில் இருந்து தாரை தாரையாக நீர் வர, உடைந்து அழ ஆரம்பித்தாள். அறைந்திருக்கக் கூடாதோ என்று என் மனம் வருத்தப்பட ஆரம்பிக்க

”இப்போ நீங்க தடுத்திட்டீங்க, எப்போதும் நீங்க தடுத்துட்டேவா இருக்கப்போறீங்க”

“சாக நினைக்கிற அளவுக்கு உனக்கு என்ன பிரச்சினை?”

“உங்ககிட்ட சொன்னா நீங்க தீர்த்து வச்சிடுவீங்களா? நீங்க என்ன கடவுளா?” அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே , கையில் துப்பாக்கியுடன் வலம் வந்துகொண்டிருந்த ரயில் காவலர், கண்ணீருடன் இருந்த அவளையும் , என்னையும் ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு கடந்து சென்றார். ரயிலின் வேகம் மெதுவானதால் என்னவென்று வெளியேபார்த்தேன். இப்பொழுதுதான் விழுப்புரம் வருகிறது.

“சரி உன்னைக்காப்பாத்துனதுனால் கடவுள்னே வச்சிக்கியேன்” ரயில் விழுப்புரம் நிலையத்தில் நிற்க கீழே இறங்கினேன்.


“ட்டீ டீ சாயா சாயா” எனக் கத்திக்கொண்டு வந்தவரிடம்

”இரண்டு டீ கொடுப்பா”

வாங்கியதில் ஒன்றை அந்த பெண்ணிடம் நீட்டினேன். கண்களைத் துடைத்துக்கொண்டே ரயில் பெட்டியைவிட்டு கீழே இறங்கி வாங்கிக் கொண்டாள்.

சில நிமிடங்களுக்கு முன் சாகத்துணிந்தவள் எப்படி இவ்வளவு நிதானமாக, சாந்தமான முகத்துடன் டீ யைக் குடித்துக்கொண்டிருக்கிறாள். அவளாகவே பேசட்டும் என அமைதியாக இருந்தேன்.

”திண்டிவனம் முன்ன கூட்ஸ் வண்டி கவுந்துடுச்சாம், டிரெயின் எடுக்க லேட்டாகுமாம்” நான் டீ வாங்கிய நபர் திரும்ப வரும்பொழுது அவராகவே சொல்லிவிட்டுப் போனார்

அருகே இருந்த பெஞ்சில் போய் உட்கார்ந்தேன். கூடவே அவளும் வந்து அருகே அமர்ந்தாள்.

“சரி, இப்போ சொல்லு, உனக்கு தற்கொலைப் பண்ணிக்கிற அளவுக்கு என்னப்பிரச்சினை?”

“லவ் பெயிலியர்”

“லவ்பெயிலியர் எல்லாம் பெரிய விசயமா?” சொல்லும்போதே எனக்கு தொண்டையை அடைத்தது.

“நேத்துதான் திருச்சில அவனுக்கு கல்யாணம், அதைத்தான் அட்டெண்ட் பண்ணிட்டு வரேன் ”

“இவ்வளவு பெருந்தன்மை இருக்கிற நீ ஏன் அப்படி பண்ண?, ” எனக்கு அந்தப் பெருந்தன்மை இல்லையே என்று என் மனதில் ஓடக் கேட்டேன்.

“ஒரே ஆதரவா இருந்த என் அம்மாவும் போன பிறகு அவனை எவ்ளோ நம்பினேன் தெரியுமா!! ”

“லவ் பெயிலியர்னால எல்லோரும் செத்துப்போயிடனம்னு நினைச்சா ஒரே வாரத்தில் மனித இனம் அழிஞ்சுப்போயிடும், “ எப்படி வினாடிப்பொழுதுகள் மனிதனின் மனப்போக்கை மாற்றுகின்றன என என்மேல எனக்கே வியப்பாய் இருந்தது.

“இப்படி அட்வைஸ் பண்றது ஈசி, நான் கூட என் ஆபிஸில இப்படி ஏகப்பட்ட பேரிடம் ஆறுதல் சொல்லி இருக்கேன்.. இதெல்லாம் தனக்கு வந்தால் தான் தெரியும்... அவனால மனசு செத்துபோச்சு, மனசு செத்துப்போன பிறகு இந்த உடம்பு வெறும் ஜடம்தான்.” என அழுகை விசும்பல் களுடன் கோர்வை இல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தவளை , எப்படித் தேற்றுவது என எனக்குத் தெரியவில்லை. எனக்கு அவளைத் தேற்றுவதற்கு அருகதை இருக்கா என தெரியாமல்

“உன்னை ஏமாத்தினவன் முன்ன நீ வாழ்ந்து காட்டுறது தானே நிஜமான பழிவாங்கல், நீ செத்துப்போயிட்டீன்னா எப்படி பழிவாங்குவா? ஆவியா வருவியா?” அவளை இயல்பான நிலைக்கு கொண்டுவர வைக்க. நகைச்சுவையாகப் பேச முயற்சித்தேன்.

“ம்ம்ம்ம்”

“சீட்டுக்கட்டு ஆட்டம் தெரியுமா,”

”தெரியும் சொல்லுங்க”

“அதில தேவையில்லாத கார்டை வச்சிட்டே இருந்தோம்னா, கரெக்ட்டான சீக்வென்ஸ் கிடைக்கிறதுக்கு இன்னொரு கார்ட் உள்ளே கொண்டுவர முடியாது. டிராப் பண்ண வேண்டிய கார்டை டிராப் பண்ணிட்டு புதுசா ஒரு கார்டுக்காக வெயிட் பன்ணனும்.. உன்னைப்பார்த்தால் நல்லா படிச்ச பொண்ணா இருக்க,நல்ல வேலைல இருக்கன்னு நினைக்கிறேன்... ஜஸ்ட் இந்த நினைவுகளை தூரப்போட்டுட்டு அடுத்த காரியத்தைப்பாரு” சில மணி நேரத்திற்கு முன்ன இருந்த என் மனநிலைக்கு நேரெதிராக அவளுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தேன்.

“ம்ம்ம்ம்”

“ஒரு ஆறுமாசம், இல்லாட்டி ஒரு வருஷம் வேற எதாவது ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டுப்போயிடு..அவுட் ஆப் சைட், அவுட் ஆப் மைண்ட்?“

நான் சொன்ன அறிவுரைக்கு எல்லாம் அவள் ம்ம்ம் கொட்டிக்கொண்டிருக்க ரயில் புறப்படப்போகும் அறிகுறிகள் தெரிந்தன. இருவரும் ரயிலில் ஏறினோம்.

“காலைல உன்னை எக்மோர்ல பார்க்கனும், இப்போ போய்நல்லாத்தூங்கு” என அவளை அவளது படுக்கைக்கு அனுப்பிவிட்டு எனது படுக்கைக்குப் போனேன். மறுநாள் காலை எழும்பூர் நிலையத்தில் அவள் இறங்குவதைப்பார்த்தபின் தான் நிம்மதியாக இருந்தது. இரவுப் பார்த்ததைக் காட்டிலும் பகல் வெளிச்சத்தில் அழகாகவே இருந்தாள்.

“வீடு எங்க?”

“அண்ணாநகர், நீங்க”

“நான் திருவான்மியூர்,”

“தட்ஸ் பைன், தாங்க் யூ சோ மச்,தட் வாஸ் எ வொண்டர் புல் கவுன்சிலிங் ... ஹேவ் எ நைஸ் டே” என விடைபெற்று போனவள் திரும்ப வந்து அவளின் பெயருடன் மின்னஞ்சல் முகவரியையும் தொலைபேசி எண்ணையும் ஒரு தாளில் எழுதிக்கொடுக்க, நானும் எனது அலுவலக முகவரி அடங்கிய அட்டையை எடுத்துக்கொடுத்தேன்.

“தாங்க்ஸ், ஐ வில் கால் யூ சம்டைம்ஸ்” என சொல்லிவிட்டு ஆட்டோக்கள் நிற்கும் இடத்தை நோக்கி நடந்தாள்.

நானும் மனதிற்குள் அவளுக்கு நன்றி சொன்னேன். ஒரு வேளை அவள் இந்தப்புறம் அவள் ரயிலில் இருந்து குதிக்கும் முயற்சியை நான் பார்க்காமல் இருந்திருந்தால் அவள் சொன்ன அதே காரணங்களுக்காக நானும் ரயிலில் இருந்து குதித்திருக்கும் எண்ணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி இருப்பேன். நல்ல வேளை நான் அவளைப்பார்த்தேன்.

Saturday, March 08, 2008

சைகை மொழி , கைகளினால் ஒரு மொழி

செவித்திறனும் வாய்பேசும் திறனும் முழுவதுமாகவோ அல்லது குறைவாகவோ பெற்றிருப்போர் கூடும் சந்திப்புகளில் நிறைய சந்தர்ப்பங்களில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் ஆச்சரியப்படுத்தும் விசயங்களில் ஒன்று அவர்களின் உற்சாகத்தை அவர்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் விதம். தங்களுக்குள் நகைச்சுவை,கிண்டல் , கேலி, வருத்தம், ஏமாற்றங்கள் இப்படி மனிதனின் அனைத்து மனவெளிப்பாடுகளையும் தங்களது சைகை மொழி மூலம் படுவேகமாக அடுத்தவருக்கு வெளிப்படுத்துவார்கள்.

உதட்டசைவு, கைகளில் அடையாளங்கள், சொல்ல நினைப்பதற்கு ஏற்ற முகபாவங்கள் ஆகியன மூலம் தாங்கள் சொல்ல வந்ததை சக நண்பர்களுக்கு சொல்லிவிடுவார்கள்.

இந்தியாவில் மும்பை மாநகரத்தில் ஒரு வகையான சைகைமொழியும், கோல்கத்தா, டெல்லி என ஒவ்வொரு மாநகரத்திற்கும் ஒவ்வொரு முறையிலான சைகைமொழியும் சென்னை-பெங்களூர்-ஹைதராபாத் என தென்னிந்தியாவிற்கு ஒரு வகையும் பயன்பாட்டில் இருக்கிறது.
இந்திய சைகை மொழிகள் ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்ட, பிரிட்டிஷ் முறையைத் தழுவி இருக்கின்றன.

பிரிட்டிஷ் முறையில் இரண்டு கைகளையும் பயன் படுத்தும் விதத்தில் சைகை மொழி அமைந்திருக்கும்.



ஆனால் அமெரிக்க சைகை மொழியில் ஒரு கை மட்டுமே பயன் படுத்துவார்கள். பெங்களுரில் குறைவான எண்ணிக்கையில் அமெரிக்க சைகை மொழியும் பயன்பாட்டில் உள்ளது.



பலவகையான சைகை மொழிகள் பயன்பாட்டில் இருப்பதை ஒருங்கிணைத்து , ஒரே வடிவத்தை அதற்கு கொடுக்கும் முயற்சியில் தில்லி,செவித்திறன் இல்லாதோர் சங்கமும், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகமும் இணைந்து செயலாற்றி வருகின்றன.

பிரிட்டன் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஆஸ்திரேலியா,ஆஸ்திரியா,கனடா, பெல்ஜியம், பின்லாந்து மற்றும் இதர ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அந்த அந்த நாடுகளின் மொழியை அடிப்படையாகக் கொண்ட சைகைமொழியை ஒரு மொழியாகவே அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன.

இந்தியாவில் செவித்திறன் அற்றோரும் பங்கேற்கும் முக்கிய அரசாங்க விழாக்களில் அவர்களுக்காகவே ஒரு சைகைமொழி பெயர்ப்பாளர் நிகழ்ச்சியில் பேசுபவர்களின் பேச்சை மொழி பெயர்த்து தரவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரே சைகைமொழி இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்த பின்பு , இந்தியாவிலும் அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.ஏற்கனவே தூர்தர்ஷனில் சைகை மொழியில் செய்தித் தொகுப்பு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 30 லட்சம் செவித்திறன் அற்றோர் இருப்பதில் வெறும் 2% மட்டுமே முறையானக் கல்வி அறிவு பெற்றிருக்கின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் 1000 காது கேளாத குழந்தைகள் பிறக்கும் இந்தியாவில் சைகை மொழியின் பயன்பாடு,முறைப்படுத்தப்பட்டு அதிகரிக்கும்பொழுது அவர்களுக்கு ஏற்ற நல்லதொரு கல்வி முறையை உருவாக்கி ,அவர்களையும் மைய நீரோட்டத்தில் இணைக்க முடியும்.

மைய நீரோட்டத்தில் வாய் பேச இயலாத, செவித்திறன் அற்றோர் கலப்பது , கேட்கும் திறன் வாய் பேசும் திறன் உள்ள நம்மில் சிறுபான்மையினராவது சைகைமொழியைத் தெரிந்து வைத்துக்கொள்ளும்போது இன்னும் முழுமை அடையும். இதுவரை ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற ஐரோப்பிய மொழிகளை அடிப்படையாகக் கொண்டுதான் சைகை மொழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழுக்கான சைகை மொழி இருக்கிறதா என கூகுளில் தேடிப்பார்த்தால் இதுவரை சிக்காததால் , இன்னும் அதற்கான முயற்சிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.[ஒரு வேளை அப்படி ஏதேனும் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தால் உபயோகமான அத்தகவலைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்]

சென்ற வருடம் வெளியான “மொழி” திரைப்படத்தின் இருந்த கதையம்சம், நடிப்பு, இசை , இயக்கம் இவையெல்லாம் தாண்டி அந்தப் படம் செய்த மிகப்பெரிய விசயம், மக்களிடம் சைகை மொழியைக் கொண்டுச்சேர்த்ததுதான். நிறைய நண்பர்கள் சைகைமொழி கற்றுக்கொள்ள ஆர்வப்பட்டார்கள். இந்தப்பதிவை அந்த நோக்கத்துடன் நட்சத்திர வாரத்தில் பதிவு செய்ய மகிழ்ச்சி அடைகிறேன்.

डरना मना ह - டர்ணா மனா ஹை என்ற திகில் படமும் அதில் இருந்து ஒரு சிலக்கதைகளும்


ராத்(இந்தி), தைய்யம்(தெலுங்கு), பூத் மற்றும் ,கௌன்,(இந்தி) போன்ற உறைய வைக்கும் திகில் படங்களையும் இயக்கிய ராம்கோபால் வர்மா மற்றும் தாஃபிக் அகமது ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பில் ப்ராவல் ராமன் இயக்கத்தில் இந்தி மொழியில் வெளிவந்த வித்தியாசமான திகில் படம் டர்ணா மனா ஹாய், தமிழில் பயப்படாதே எனப்பொருள் கொள்ளலாம்.

ஆறு கிளைக்கதைகளும், அவை அனைத்தையும் இணைக்கும் ஒரு கதையும் அமைந்த இபபடம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டாலும் வணிக ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

அடர்ந்த காட்டின் ஊடே நள்ளிரவில் காரில் பயணம் செய்யும் ஆறு நண்பர்கள் கார் பழுதடைய அந்தக் காட்டினுள் மாட்டிக்கொள்கின்றனர். பாழடைந்த வீட்டில் தஞ்சம் அடையும் அவர்கள் நேரத்தைப் போக்க ஒவ்வொருவருவம் ஒரு அமானுடக் கதைகளை சொல்ல ஆரம்பிக்கின்றனர். ஆறு பேரும் சொல்லும் ஒவ்வொரு கதையும் கிளைக்கதையாக விரிகிறது.


அனைவரும் ஒவ்வொருகதை சொல்லி முடித்தவுடன். ஏழாவதாக வரும் நபர், இரவில் அந்தக் காட்டில் வரும் நபர்களை ஒரு தொடர்கொலைகாரன் செய்துவிடுவதாகவும் அது எப்படி நடக்கிறது என்பதையும் விவரிக்கின்றான். இதனிடையில் ஆறு பேரில்
ஒரு பெண்ணைத் தவிர, மற்ற எல்லோரும் கொல்லப்படுகின்றனர். தொடர்கொலைகாரனைப் பற்றி விவரனை செய்தவன் தான் கொலைகாரன் என்பதை புரிந்து கொண்ட மீதமிருக்கும் பெண் தப்பிக்க முயற்சிக்கிறாள்.

துரத்தும் தொடர்கொலைகாரனை அந்தப் பெண் கொன்றுவிட்டு மயக்கமடைகிறாள். மறுநாள் காலை போலிஸ் வர, அவர்களிடம் அங்கு அன்றிரவு நடந்ததை விவரிக்க முயற்சிக்கையில் அவர்கள் அதைக்கேட்காமல் போகின்றனர். அப்பொழுது அவள் பின்னே இரவு கொல்லப்பட்ட 5நபர்களும், அந்த தொடர்கொலைகாரனும் நிற்க, தான் யார் என்பதை உணர்ந்து கொள்வதாகப் படம் முடிவடையும்.

படத்தில் காட்டப்படும் ஒவ்வொரு கிளைக்கதையும் திகில் அம்சங்கள் அனைத்தையும் கொண்டிருந்தாலும், நகைச்சுவை இழையோடும் நானா படேகர், விவேக் ஒபராய் வரும் பகுதி அதி சுவாரசியமாக இருக்கும்.

--------



கல்லறையின் வாசலில் காத்திருக்கும் நானாபடேகர் தூரத்தில் வரும் காரை மடக்கி லிப்ட் கேட்டு ஏறிக்கொள்கிறார். காரை ஓட்டிவரும் விவேக் ஒபராய்

“கல்லறையில உங்களுக்கு என்ன வேலை” எனக் கேட்க

“ஒரு ஆக்சிடெண்ட் என்னையும் என் மனைவியையும் பிரிச்சுடுச்சு, அதனாலதான் கல்லறைக்கு வந்தேன்”

“ஓ உங்க மனைவி இறந்துட்டாங்களா?”

“இல்லை அவ உயிரோடத்தான் இருக்காள், நான் தான் அவளை விட்டு பிரிந்துட்டேன்” என நானாபடேகர் சொன்னதும் விவேக் ஒபராய் சிரிக்க

“நான் நிஜமாத்தான் சொல்றேன்” என பேய், பிசாசு பற்றி தொடர்ச்சியாகப் பேசுக்கொண்டே இருக்கும் நானாபடேகரின் மேல் எரிச்சல் அடையும் விவேக் ஒபராய் எரிச்சல் அடைந்து, அவரைக் காரை விட்டு கீழே இறங்கச் சொல்கிறார்.

கீழே இறங்கும் நானா படேகர்

“இந்த எம்டிவி பக்ரா புரோகிராமோட வின்னர், நீங்க தான், நான் இதுவரை உங்களை மாதிரி ஒரு தைரியசாலியைப் பார்த்ததில்லை” எனப்பாராட்ட

விவேக் ஒபராய் மெல்லிய புன்னகையுடன், “நீங்க பேய் இல்லைன்னு எனக்கு முன்னமே தெரியும் “

“எப்படி கண்டுபிடிச்சீங்க”

“ஏன்னா நாந்தான் பேய்” என விவேக் ஒபராய் சீரியஸாக சொல்ல

“சும்மா விளையாடாதீங்க” எனும் நானாபடேகரிடம் விவேக் ஒபராய் தன் கண்ணாடியைக் கழட்டிக் கண்களைக் காட்டுகிறார். அங்கு கண்கள் இருக்கும் இடத்தில் ஏதும் இல்லாமல் இருக்க அப்படியே நானாபடேகர் மயங்கி சரிகிறார்.

----------

மற்றொரு கிளைக்கதையான , சில்பாசெட்டி, சஞ்சய்கபூர்,ராஜ்பால் யாதவ் வரும் பேய் இல்லாத ஆப்பிள் கதையும் திகிலாக இருக்கும். வித்தியாசமான ஆப்பிள்களை தெருவுக்குப் புதிதாக விற்கவந்திருக்கும் சந்தேகத்திற்கிடமான ராஜ்பால்யாதவிடம்

வாங்கும் சில்பாவிற்கு ஏதோ நெருட.. கணவருக்குக் கொடுக்காமலும் தானும் சாப்பிடாமலும் அந்த ஆப்பிளை பாதுகாப்பாக வைக்கிறார்.






இரவு தூங்கியபின் காலையில் கண்விழித்துப்பார்க்கும் சில்பா தன் கணவன் படுத்திருந்த இடத்தில் கணவன் இல்லாமல் ஒரு ஆப்பிள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார்.
பயந்து போய் வெளியே ஓடும் சில்பாவிற்கு தெருவெங்கும் ஆப்பிள்களாக இருப்பது தெரிகிறது. ஆப்பிள் வாங்கி சாப்பிட்ட எல்லோரும் ஆப்பிள்களாக மாறி இருப்பதைக் கண்டு அதிர்ந்து போகிறார். அங்கே ஆப்பிள் விற்கும் ராஜ்பால் யாதவ், ஒரே ஒரு
ஆப்பிள் மீதம் இருக்கிறது, இலவசமாகத் தருகிறேன் என்று கடைசி ஆப்பிளை சில்பாவிடம் நீட்டுகிறார்.

அந்தரமாலி, சோகையில் கான் வரும் முதற்கதையும் , சாயிப் அலிகான், பொமன் இரானி வரும் புகைப்பிடிக்கும் பழக்கமுடையவர்களைப்பற்றியக்கதையும், அப்தப்சிவதஸ்தானி,இஷா கோபிகர் வரும் பகுதியையும் திகிலூட்டுபவையே. ரகுவீர்யாதவ் வரும் கதை மட்டுமே இருப்பதிலேயே சுமாராக இருக்கும். ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கும் தொய்வில்லாமல் நகரும் இப்படம் இந்தி மொழி அறியாத திகில் படரசிகர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும். பாடல்கள் ஏதுமில்லாமல் வழக்கத்தைவிட குறைவான நேரமே ஓடும் இந்தப் படம் இந்தி திரைப்படங்களில் மட்டுமல்லாமல் இந்தியதிரைபடங்களிலும் மிகவித்தியாசமானப் படமே!!!

Friday, March 07, 2008

ஒரு வார இதழில் படித்து ரசித்தக் கதை

பத்து, பணிரெண்டு வருடங்களுக்கு முன்னர், ஒரு வார இதழில் படித்தக் கதை இது. கதையின் கரு அப்படியே நினைவில் இருக்கிறது. மிகவும் பாதித்த அந்த கதைக்கருவை மறு
உருவாக்கம் செய்து தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அருமையான கருவுடன் முன்பு கதையாகத் தந்திருந்த கதாசிரியருக்கு நன்றிகள்.
---------------------------
மோகனும் ரம்யாவும் சொன்ன நேரத்தில் மதிய விருந்திற்காக கார்த்தியின் வீட்டிற்கு காரில் வந்திறங்கினார். மோகனின் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கார்த்தியும்,அவனது
மனைவி ஜெனியும் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்று உபசரித்தனர். மோகனின் மனைவி ரம்யா கையோடு கொண்டு வந்திருந்த பரிசு பொட்டலத்தை , கார்த்தி , ஜெனி தம்பதியினரின் மூன்று வயதுக் குழந்தை அஞ்சலிக்கு கொடுக்க “தாங்க்ஸ் ஆண்ட்டி” சொல்லி வாங்குவதற்குள்ள ரயில் வரும் சத்தம் கேட்க வெளியே ஓடிப்போனாள்.

“எப்படி கார்த்தி இந்த ட்ரெயின் சத்தத்துல நைட்ல தூங்க முடியுமா?” என மோகன் கேட்க அதற்கு கார்த்தி சிரித்துக்கொண்டே

“பழகிடுச்சு சார், இப்போ இந்த சத்தம் இல்லைன்னா தான் தூங்க முடியாது ”

அஞ்சலிப்பாப்பா கொஞ்சம் டல்லடித்த முகத்துடன் உள்ளே வந்து மோகன் கொடுத்த பரிசு பொட்டலத்தை மீண்டும் கையில் எடுத்துக்கொண்டு சிரித்த சின்னப்புன்னகை உற்சாக
மனநிலைக்கு அஞ்சலிபாப்பா வந்துவிட்டாள் என்றுக் காட்டியது.



“தாங்க் யூ சார், எங்க வீட்டுக்கு நீங்க வந்தது எங்களுக்குப் பெருமை”

“கம் ஆன் கார்த்தி.. நீ எவ்வளவு நாளாக் கூப்பிட்டுக்கிட்டு இருக்க, எங்களால் தான் வரமுடியுறதுல்ல”

மீண்டும் ரயில் சத்தம் கேட்க அஞ்சலிப்பாப்பா வெளியே ஓடினாள். திரும்ப உள்ளே சோகமாக வந்து கார்த்தியிடம் வந்து “கூட்ஸ் டிரெயின் பா” என சொல்லி அவன் மடியில்
படுத்துக்கொண்டாள். ஜெனி அவளை எழுப்பி டீவியில் போகோ சேனலை பார்க்க வைத்து விட்டு கார்த்திக்கும் மோகன் தம்பதியினருக்கும் சாப்பாடு பரிமாற ஆரம்பித்தாள்.

அருமையான விருந்திற்குப் பின் நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்த பொழுது சாய ஆரம்பிக்க மோகனும் ரம்யாவும் புறப்பட்டனர். இருவரும் காரில் ஏறும்போது மீண்டும் ரயில் சத்தம் கேட்க, பாசஞ்சர் ரயில் என அதைப்பார்த்ததும் அஞ்சலிப்பாப்பா உற்சாகமாக குதித்து குதித்து டாட்டா சொன்னாள். மோகனும் ரம்யாவும் குழந்தையின் குதுகலத்தை ரசித்துப்
பார்த்துக்கொண்டிருந்தனர். ரயில் போனதும் திரும்ப டல்லடித்தது முகம். ரம்யாவுடன் வீடுதிரும்பிய

மோகன் மறுநாள் வழக்கத்தை விட சீக்கிரம் கிளம்புவதைப்பார்த்த ரம்யா

“எங்கப் போறீங்க”

“ தஞ்சாவூர் வரை போயிட்டு வரேன், டிரெயின்ல போறேன் ரம்யா, ” கிடைத்த பதிலைப் புரிந்து கொண்டாள்.

தஞ்சாவூர் செல்லும் ரயிலில் கார்த்தி வீடு வரும் பக்கமாக அமர்ந்து கொண்டார். 20 நிமிடத்தில் கார்த்தி ரயில் கார்த்தி வீட்டைக் கடக்க, வேலிக்கு அப்பால் அஞ்சலிப்பாப்பா
ரயிலுக்கு டாட்டா காட்ட, ரயிலில் இருந்து மோகன் திரும்ப டாட்டா காட்டினார். ரயில் போனதும் குஷியாக வீட்டுக்குள் ஓடி வந்த அஞ்சலிப்பாப்பாவின் சந்தோசத்தை கார்த்தியோ ஜெனியோ கவனிக்கவில்லை.
-----------------------------

ஜம்புதுவீப் - சிறுகதை

இயறகையை வெல்ல மனிதன் நடத்திய அறிவுப்போட்டியினால் உலகத்தின் பெரும்பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்ற உலகப்போர்களாலும்,இயற்கை மனிதனுக்கு கொடுத்த தண்டனையான கடல்சீற்றங்களினாலும் மனித இனம் 90 விழுக்காடு அழிக்கப்பட்டு, எஞ்சிய மானுடம் தத்தித் தாவி கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் நாகரிக வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. இன்றைய காலக்கட்டத்தில் இருந்து சுமார் 300 ஆண்டுகளுக்குப்பிறகான காலத்தில் பூமிப்பந்தின் ஒரு பகுதியை ஜம்புதுவீப் என்ற பெயருடன் அசோக் என்னும் அரசன் ஆண்டுகொண்டிருந்தார்.அவருக்கு முதன்மந்திரியாக நரேந்திரா என்பவர் இருந்தார்.

அசோக்கின் தாத்தா காலத்தில் , நம் முன்னோர்கள் கடவுளின் கோபத்திற்கு ஆளானதால் தான் அறிவுவளர்ச்சியின் உச்சத்தில் இருந்த உலகம் அழிந்தது. அதனால் கடவுளின் மேல் நம்பிக்கையும் மரியாதையும் வைக்கவேண்டும் என்று ஏகப்பட்ட வழிபாட்டு ஆலயங்கள் எழுப்பப்பட்டன.அவருடன் உரையாட கடவுளின் மொழி என்று ஏகமனதாக நரேந்திராவின் தாத்தா வீட்டில் புழங்கி வந்த பேச்சுவழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஆனால் அந்த சிலநூறு பேருக்கு மட்டுமே புரிந்த ஒரு மொழியில் வழிபாடுகள் இருக்கக்கூடாது என போராடியவர்களை நரேந்திரா கைது செய்து மன்னன் முன் நிறுத்தி இருந்தார். அந்த வழக்குதான் இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறது.

“அரசே, கடவுளின் மொழியை அவமதித்த இவர்களுக்கு அதிகபட்ச தண்டனையைத் தரவேண்டும்”

“இவர்களின் போராட்டம் யோசிக்க வேண்டிய விசயம், இவர்களுக்கான தண்டனையை அடுத்த வாரம் இறுதி செய்வோம், எதற்கும் சித்தார்த்தா விடம் ஆலோசனை கேட்டுவிட்டுச் சொல்கிறேன்” என்று அசோக் பதிலளித்தபோது நரேந்திராவிற்கு கோபம் தலைக்கேறினாலும் அதைக்காட்டிக்கொள்ளாமல் ”அப்படியே ஆகட்டும் அரசே” என்று சொல்லி வைத்தார்.

ஜம்புதுவீபின் தென்பகுதியில் அமைந்திருந்த ஒரு தீவுப்பகுதியை அமைதியாகவும் நேர்மையாகவும் ஆண்டுகொண்டிருந்த பிரபா என்ற மன்னனுடன் நடத்திய கடுமையான போரின் போது போரின் இழப்புகளை, அன்பின் வலிமையை, சகிப்புத்தன்மையை போர்க்களத்தில் அசோக்கிற்கு உணரவைத்தவர் தான் சித்தார்த்தா.

”வல்லரசு ஆவது முக்கியமல்ல, நல்லரசு தான் சிறப்பு “ என்ற அவரின் பேச்சில் மனமாறிய அசோக், அவரைத் தன்னுடன் வந்து தன் அரசவையில் தனக்கு குருவாக இருக்கக் கேட்டும் சித்தார்த்தா மறுத்துவிட்டார்.

பிரபா வின் நாட்டை அவரிடமே திரும்பக் கொடுத்து அவரை தன் நண்பனாக ஆக்கிக் கொண்ட அசோக், அந்த சம்பவத்திற்குப்பின் அசோக் அடிக்கடி சித்தார்த்தாவின் இடத்திற்கே போய் சந்தித்துவிட்டு , ஆலோசனைகள் கேட்டு வர ஆரம்பித்ததில் இருந்து நரேந்திரா தன் முக்கியத்துவம் குறைந்து வருவதை உணர்ந்தார்.

அடுத்த வாரம் சித்தார்த்தாவின் ஆலோசனையின் படி, போராளிகளை விடுவித்து, ஜம்புதுவீபின் எல்லா மக்களும் பேசும் மொழியில் வழிபாடு நடத்த வேண்டும் என்றும், இருந்த போதிலும் முன்னோரின் முடிவுகளை மதிக்கும் விதத்தில், பழைய வழிபாட்டு மொழியை மக்கள் கேட்டால் செய்யலாம் என்று உத்தரவு பிறப்பித்தார்.

மன்னனுக்கே உரிய கர்வத்துடன், ”கடவுளுக்கும் மனிதனுக்கும் இருந்த இடைவெளியைக் குறைத்துவிட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன்” என்ற வாக்கியத்துடன் தன் பெயர் பொறித்த கல்வெட்டுக்களை வழிபாட்டு தலங்கள் எல்லாவற்றிலும் பதிய வேண்டும் என்ற ஆணையும் இட்டார்.

வேற்று மொழிக்காரனான பிரபாவுடன் அசோக் நட்புப் பாராட்டுவதற்கும், இந்த உத்தரவுக்கும் காரணமான சித்தார்த்தா வின் மேல் நரேந்திராவிற்கு கடும் கோபம் ஏற்பட்டது. மன்னனை மீறி ஏதும் செய்ய முடியாததால் வாய்ப்பு வரும் வரைக் காத்திருந்தார்.

மக்களுக்கு சம உரிமைக்கொடுத்து நேர்மையான ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னர் அசோக், சித்தார்த்தா வின் திடிர் மரணத்தினால் மனமுடைந்துப் போனார். குரு சித்தார்த்தாவின் கோட்பாடுகளை மதித்த ஆனால் அரைகுறையாகப் புரிந்து வைத்திருந்த மகனுக்கு மகுடம் சூட்டிவிட்டு, ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த ஒரு நாள் தூக்கத்தில் கண்கள் திறக்காமலே மரித்துப்போனார்.

அசோக் இறந்து போன பின் சரியான ஆலோசனைகள் தர வேறும் இல்லாத நிலையில் நரேந்திராவின் முக்கியத்துவம் மீண்டும் வலுப்பெற்றது. சித்தார்த்தாவின் கோட்பாடுகளை தனக்கு சாதகமான மாற்றங்களுடன் ஒரு மார்க்கமாக மாற்றிய நரேந்திரா, சித்தார்த்தாவையும், அசோக்கையும் கடவுள்கள் ஆக்கி, ”கடவுளுக்கும் மனிதனுக்கும் இருந்த இடைவெளியைக் குறைத்துவிட்டதை எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன்” என்ற கல்வெட்டுகள் இருந்த இடத்தில் அவர்களின் உருவ பொம்மைகளை மன்னனின் உத்தரவுகள் மூலம் வைத்தார்.

புரியாமல் இருப்பதனால் தான் கடவுளின் மொழி என்ற நரேந்திராவின் கூற்றை ஏற்றுக்கொண்ட புதிய மன்னன் தெற்குப்பகுதியில் ஆட்சி செய்து கொண்டிருந்த பிரபாவையும் வென்று ஜம்புதுவீப்பை வல்லரசு ஆக்கினான்.

கடவுளின் ஆசிர்வாதத்துடன் புதிய மன்னனின் ஆட்சியில் பொன்னும் பொருளும் மக்களிடம் செழித்து நீதியும் நேர்மையும் எங்கும் நிறைந்து பேரரசனாக வாழ்ந்தான் என வரலாற்றில் எழுதப்பட்டது.

------------

Thursday, March 06, 2008

புஷ்பக விமானா (எ) பேசும்படம் - திரைப்பார்வை


எந்த ஒரு திரைப்படம், ஒலிச்சித்திரமாக கேட்டால் கூட கதை ஓட்டம் எளிதாகப் புரிந்துவிடுகிறதோ , அந்தத் திரைப்படம் காட்சி ஊடகமாக தான் செய்ய வேண்டியதை தவறவிடுகிறது. கடை 80 கள் வரை வந்தத் திரைப்படங்கள் பெரும்பாலும் ஒலிச்சித்திரமே , திரைப்படம் பார்த்த அனுபவத்தைத் தரும்.

அந்த சமயத்தில் பரீட்சாத்த முயற்சிகளை செய்ய ஆரம்பித்திருந்த கமலஹாசன், நடித்து சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கன்னடத்தில் வெளிவந்த படம் “புஷ்பக விமானா”. அரை நிமிடத்திற்கும் குறைவான அளவில் மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழ்(பேசும்படம்),தெலுங்கு(புஷ்பக விமானம்),மலையாளம்(புஷ்பக விமானம்),இந்தி(புஷ்பக்) மற்றும் ஆங்கிலத்தில்(Love chariot) என வெளிவந்தது.

சிறுவயதில் இந்தப்படத்தை தூர்தர்ஷனில் பார்க்கும்போது அவ்வளவு ஆர்வமாக பார்த்ததில்லை. டினுஆனந்த் வரும் ஐஸ் கத்தி எறியும் காட்சி மட்டுமே பிடித்து இருந்தது. ஒரு பாட்டு இல்லை, சண்டை இல்லை. கமல் நடித்து இப்படி ஒரு படமா எனத்தோன்றும். கமலஹாசனின் நிறையப்படங்களின் அருமை, காலங்கடந்து தான் விளங்கும் என்பதற்கு இந்தப் படம் சிறந்த உதாரணம்.

போன வருடம் சென்னையில் ராஜ் வீடியோ விஷனில் தள்ளுபடியில் திரைப்பட குறுந்தகடுகள் விற்கிறார்கள் என வாங்கப்போன போது, அங்க நடந்த சுவாரசியமான உரையாடல் இங்கே,

“பேசும்படம் இருக்கா? கமல் நடிச்சது”

“தமிழில்ல எங்களுக்கு ரைட்ஸ் எங்களுக்கு கிடையாது, ஹிந்தில இருக்கு. உங்களுக்கு வேண்டுமா”

மனதிற்குள் சிரித்துக்கொண்டு மிக ஆர்வமாக வாங்கி வந்து கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு பார்த்தேன். ஆரம்பம் முதல் முடிவுவரை ஒரே மூச்சில் பார்த்து முடித்த போது , வசனங்களால் நிரப்பப்பட்டு படம் வெளிவந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில், வசனம் ஏதும் இல்லாமலே , அலுப்புத்தட்டாமால் பார்க்கும் வகையில் படம் வெளிவந்து 20 வருடங்களுக்குப்பிறகும் சுவாரசியத்தைத் தந்த மகிழ்ச்சி, கமலஹாசன் மேல் வைத்திருந்த பிரமிப்பை மேலும் அதிகரித்தது.



கையில் நயா பைசா இல்லாமல் , பகல் கனவு காணும், சடுதியில் உயர்நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் வேலைதேடும் பட்டதாரியான கமலஹாசன் , தெருவில் குடித்துவிட்டு விழுந்துக் கிடக்கும் குடிகார பணக்காரரை(சமீர் கக்கர்) தன் வீட்டில் கட்டி வைத்துவிட்டு , அந்தப் பணக்கார நபராக இடம் மாறுகிறார்.

ஆரம்பத்தில் திடிரெனக் கிடைத்த பணக்கார வாழ்வை ஏகபோகமாக அனுபவிக்கும் கமலஹாசன் , அவர் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு மாஜிக் செய்ய வருபவரின் மகள்(அமலா) மேல் நேசம் வைக்கிறார். ஆரம்பத்தில் குற்ற உணர்ச்சி ஏதுமின்றி இருந்தபோதிலும், போகப்போக பிச்சைக்காரர் (நாரயணா), ஹோட்டல் முதலாளி ஆகிய கதாபாத்திரங்களின் வாயிலாக காசும் பணம் மட்டும் வாழ்க்கையல்ல, உற்சாகம், உழைப்பு , விடாமுயற்சி மூன்றும் ஒரு சேர இருந்தால் வாழ்க்கையில் வெற்றி அடையலாம் என்பதை உணரும் கமலஹாசன் , பணக்கார நபரை அவரின் இடத்தில் மீண்டும் வைத்துவிட்டு , தனது ஏழ்மை நிலையுடன் வேலைத்தேடும் படலத்தை ஆரம்பிக்கிறார். இதனிடையில் பணக்காரரின் மனைவியின் கள்ளக்காதலன்(பிரதாப்போத்தன்) ஏவிவிடும் கொலைகாரன்(டினு ஆனந்த்) இடமிருந்து எப்படித் தப்பிக்கிறார் என்பதையும், பணக்காரரின் மனைவி எப்படி தன் தவறை உணர்ந்து மீண்டும் கணவருடன் சேருகிறார் என்பதையும் அழகாக இயக்குனர் சொல்லி இருப்பார்.

நகைச்சுவை இழையோடும் சோகப்படமா, சோகம் இழையோடும் நகைச்சுவைப்படமா என்ற சிந்தனையைத் தூண்டும் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு காட்சியமைப்பையும் சிலாகித்து சொல்லலாம். இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் பேசக்கூடியவர்கள். ஆனால் அவர்கள் மௌனமாக இருப்பது போலவோ அல்லது தூரத்தில் இருக்கும்படியோ, கண்ணாடித்தடுப்பில் பேசுவது போலவோ காட்சிகளின் கோணங்களை அமைத்து மௌனத்தை மொழியாகக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் விதம் ஆச்சரியத்திற்குரியது. வசனங்களற்ற
இப்படத்தில் எந்த ஒரு இடத்தில் கூட சிறு குழப்பம் கூட வராமல் அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை இயக்குனராக வேண்டும் என்ற கனவுகளோடு இருப்பவர்களுக்கு ஒரு பாலபாடம்.

மெல்லிய நகைச்சுவையைத் தாண்டி, வேலையில்லாத்திண்டாட்டம் , காதல், கள்ளக்காதல், பிரிவு , குடிக்கு அடிமை, பணத்தாசை, உழைப்பின் பெருமை என பல விசயங்களை திரைப்படத்தில் காட்சிக்கு காட்சி செதுக்கி வாழ்வின் எதார்த்தங்களை காட்டும் வகையில் அமைந்திருப்பது இப்படத்தின் இன்னொரு சிறப்பம்சம்.


படத்தின் இறுதியில் அமலா கொடுக்கும் முகவரியுடன் கூடிய கடிதத்தை வாசித்துவிட்டு,அதனுடன் இருந்த ரோஜா மட்டும் கையில் இருக்க , காகிதம் பறந்து போகும் காட்சி மறக்கவே முடியாதது என்றாலும் ரசிக்கும்படியான காட்சிகள் படத்தில் ஏராளம் அவற்றில் சிலவை

* பணக்கார வாழ்வில் , அமைதியான சூழலில் தூங்க இயலாமல் தவிக்கும் கமல், பழைய வீட்டிற்குப்போய் அந்த திரையரங்க ஒலியை ஒலிப்பேழையில் பதிவு செய்து எடுத்துவந்து அதைக்கேட்டபடி துங்கும் காட்சி.

* காலைக்கடன்களை கழிக்க நெடிய வரிசையில் நிற்பது, காலியாக இருக்கும் கழிவறைகளில் இருப்பதில சுத்தமானதை தேர்வு செய்து உள்நுழையும் காட்சி. சமீர் கக்கர் காலைக் கடன்கள் போக உதவிசெய்து, அதை அழகாக பார்சல் கட்டி ஒரு இடத்தில் வைத்து விட்டு போக அதை ஏதோ முக்கியமானதொன்று என எடுத்துப்போகும் ஒரு ஆள் அடுத்த முறை கமலஹாசனைப் பார்த்த மாத்திரத்தில் குமட்டிக்கொண்டு ஓடும் காட்சி.

* சோப்பு தண்ணீரை வாசனைத் திரவியமாக சட்டையில் தடவிக்கொள்வது.

* கமலஹாசன் பிச்சைக்காரர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும். பிச்சைக்காரர் செத்த பிறகு அவரின் பிணத்தின் கிழே கிடக்கும் பணம் பறக்க, அதற்காக பிணத்தை அப்படியே போட்டுவிட்டு பணத்தின் மக்கள் ஓடும் காட்சி.

* ஹோட்டல் முதலாளியின் ஒவ்வொரு கட்ட முன்னேற்றத்தையும் புகைப்படங்களின் மூலம் கமலஹாசன் உழைப்பின் பெருமையை உணருவது

* அமலா பரிசாக , பாழடைந்த பங்களாவில் உயரே பூத்திருக்கும் பூ ஒன்றைக் கேட்கும் காட்சி.

போதும் போதும் சொல்லிக்கொண்டே போனால் மொத்தப்படத்தையும் எழுதிவிடலாம்.



காட்சிகளுக்கு இதமாக எல்.வைத்தியநாதனின் பிண்ணனி இசை அமைந்திருந்ததும் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய விசயம்.

ஆரம்பக்காட்சிகளில் பிண்ணனியாக வரும் வானொலியின் செய்திகள் மட்டுமே அந்தந்த மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டதால் தமிழில் ‘டப்பிங்' பட வரிசையில் சேர்த்திருந்தாலும் , இந்தப்படம் உலக சினிமாக்களில் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல் படம் என்பதற்கு சாட்சியாக imdb தளத்தில் பத்துக்கு ஒன்பதுக்கு அதிகமான மதிப்பை பெற்றிருக்கிறது. வெளியிடப்பட்டக் காலத்தில் பரந்த வரவேற்பைப் பெறாமல் போனாலும், காலம் கடந்தும் காவியங்கள் நிற்கும் என்பதை இந்த புஷ்பகவிமானா பொய்ப்பிக்கவில்லை. மௌனமாய் பேசும் இந்தப்படம் ஒவ்வொரு திரை அபிமானிகளின் வரவேற்பறையை அலங்கரிக்க வேண்டிய படமாகும்

Wednesday, March 05, 2008

அஜீஸ் அகமது வும், Patriotism உம் - சிறுகதை

முதன்முதலில் எனக்கு அஜீஸ் அகமதுவைப் பிடிக்காமல் போனது, ஷார்ஜா மேட்ச்ல அக்யூப் ஜாவித் ஹேட்ரிக் எடுத்தப்ப, அதுக்காக அவன் ரொம்ப சந்தோசப்பட்டப்பத்தான் . அவன் மட்டுமல்ல, அன்றைக்கு அவங்க வீட்டுல இருக்கிற எல்லோருக்குமே இந்தியா தோற்றுப்போய்விட்டதேன்னு ஒரு சின்ன வருத்தம் கூட இல்லை. அவன்கிட்ட ”இந்தியாவில யாருடா உனக்கு பிடிச்ச பேட்ஸ்மேன் “ ன்னு கேட்டால் அசாரூதினைச் சொல்லுவான். கிருஷ்ணமூர்த்திக்கும் அசாரைப்பிடிக்கும் என்றாலும் அஜீஸ் அசாரைப்பற்றி சிலாகித்துச் சொல்லும்போது மட்டும் எனக்கு எரிச்சலா இருக்கும்.

எங்க பிளாக்ல மொத்தம் 12 வீடுகள். அதுல எங்க வீட்டுல மட்டும் தான் அப்போ டீவி கிடையாது. கிருஷ்ணமூர்த்தி வீட்டுல கலர் டீவி இருக்கும். மற்றவங்க வீட்டுல பிபிஎல் சின்ன பிளாக் அண்ட் வொயிட் டீவி. எல்லார் வீட்டிலேயும் டீவி இருந்தாலும் கலர்ல
பார்க்கலாம்னு எங்க செட்டு பசங்க எல்லாம் கிருஷ்ணமூர்த்தி வீட்டுலதான் கிரிக்கெட் பார்ப்போம். அஜீஸ் மட்டும் வரமாட்டான். இன்னொரு பக்கத்துவீட்டுபையன் வாசு, கிருஷ்ணமூர்த்தி வீட்டுல சோபால உட்கார்ந்தப்ப, அவங்க அம்மா ஒன்றுமே சொல்லாமல் இருக்க நான் உட்கார்ந்தப்ப மட்டும் கீழே உட்கார்ந்துக்கப்பா அப்படின்னு சொன்னதுலேந்து கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்குப்போறதை நிறுத்திட்டேன்.

அதுக்கப்புறம் நான் யார் வீட்டுக்கும் ஒளியும் ஒலியுமோ , ஞாயிறுப் படமோ போய் பார்க்கக்கூடாது என முடிவெடுத்து வீம்பாய் இருந்தேன்.
எதேச்சையாய் அஜீஸின் அம்மா, கிரிக்கெட் ஆட்டம் நடக்கும் விடுமுறை நாள் ஒன்றில் என் வீட்டுக்கு வர, “அஜீஸ், வீட்டுல தனியாத்தான் மேட்ச் பார்க்கிறான், நீ வா வீட்டுக்கு” என்று கூப்பிட்டுப்போய் , அங்கு நான் தரையில் உட்கார , ”சோஃபா, உட்காரத்தான் போட்டு இருக்கோம் , அதுல உட்காரு “ உரிமையாய் சொன்னாங்க. அப்போ அப்போ தீனியும் கொடுப்பாங்க.

எனக்கு அங்க நெருடின விசயம் அவங்களுக்குள்ள உருதுல பேசிக்குவாங்க. இங்கிலிஷ் கமெண்ட்ரி புரியாமலேயே மேட்ச் பார்க்கற மாதிரி அவங்க முகபாவங்களை வைத்து
என்ன பேசிக்கிறாங்கன்னு ஓரளவுக்கு புரிந்துகொள்வேன். சனிக்கிழமை சாயங்காலம் போடுற இந்திப்படங்களும் அஜீஸ் பார்ப்பான். நானும் அவன் கூட பார்ப்பேன்.வசனங்களை அவ்வப்போது அவங்க வீட்டுல யாராவது எனக்கு சொல்லுவாங்க. எல்லாம் நல்லாதான் போயிட்டு இருந்துச்சு. இந்த ஷார்ஜா மேட்ச்ல இந்தியாவுக்கு ஒவ்வொரு விக்கெட்டு விழுறப்பயும் கைத்தட்டி குஷியானதும் எனக்கு என்னவோ போல இருந்தது.

அன்றிரவு என் அப்பாவிடம் டீவி வாங்கிக் கொடுத்தாலே கொடு என அடம்பண்ணி , ஒரு வாரம் சாப்பிடாமல் கலட்டா செய்த பின்னர் கதவு வைத்த சாலிடெர் டீவி வாங்கி வந்து வைத்தார். ஆரம்பத்தில் வயலும் வாழ்வும் கண்மணிப்பூங்கான்னு எதுப்போட்டாலும் டீவி முன்னாடியே இருந்து, அலுத்துப்போகும் சமயத்தில் ஆஸ்திரேலியாவுல வேர்ல்ட் கப் வந்தது. விடியக்காலையில மேட்ச் பார்க்கற சுகம் , அதுவும் என் வீட்டு சொந்த டீவில பார்ப்பது பெருமையா இருந்தது.

ஜாவித் மியாண்டட் மங்கி ஜம்ப் பண்ண மேட்ச்ல இந்தியா ஜெயிச்சதுக்கு நான் நாலு சர வெடி வச்சேன். அஜீஸ் ஏதோ அவன் வீட்டுல துக்கம் விழுந்த மாதிரி சோகத்தோட
இருந்தான். கிருஷ்ணமூர்த்தி தான் வம்பை ஆரம்பித்தான்.

“என்ன உங்க பாகிஸ்தான் தோத்துப்போச்சா? ”கிருஷ்ணமூர்த்தியோட நக்கல் எனக்கும் தொத்திக்கொண்டது.

“இல்லடா, கிச்சா, அஜீஸ் ஹேப்பிதான், அசாரூதின் இண்டியாவோட கேப்டனா இருக்கிறவரை இண்டியா ஜெயிச்சாலும் அவனுக்கு சந்தோசம் தான்”

என்று நான் சொல்லி முடிக்கும் முன் என் முகத்தில் ஒரு குத்து விட்ட அஜீஸ், அடுத்து கண்மண் தெரியாமல் கிருஷ்ணமூர்த்தியை துவைத்து எடுத்தான். அன்றிரவு என் அப்பாவிடமும் கிருஷ்ணமூர்த்தி அப்பாவிடமும் அஜீஸ் அகமதின் அப்பா வந்து மன்னிப்புக்
கேட்டார். அஜீஸின் அப்பா போன பிறகு , என் அப்பா ஆரம்பித்தார்.

“நாட்டுப்பற்றுன்னா கிலோ என்ன விலைன்னு கேட்பானுங்க, சரியா வளர்த்திருந்தா இப்படி நடந்திருக்குமா!! எல்லா இடத்திலேயும் இவனுங்க இப்படித்தான் இருக்கானுங்க, கூத்தாநல்லூர்ல பாகிஸ்தான் ஜெயிச்சா வெடிவைப்பானுங்க”

“மெட்ராஸ்ல டிரிப்லிகேன்லயும் இப்படித்தான், இவனுங்களுக்கு மனசாட்சியே இல்லை, இருக்கிறது இங்கே, சப்போர்ட் எல்லாம் வேற எங்கேயோ!அப்போவே போயிருக்கலாம்ல அவனுங்களுக்குன்னு கொடுத்த நாட்டுக்கு !”


அந்த சம்பவத்திற்குப்பிறகு நாங்க யாரும் அஜீஸுடன் பேசுவதில்லை. நாளும் வருடமும் வேகமாக ஓடி 96 வேர்ல்ட் கப்ல திரும்ப பாகிஸ்தானை ஜெயிச்சப்ப , எங்க குவார்ட்டர்ஸ்ல வெடி வைத்து, மைசூர்பக், ஜாங்கிரி எல்லாம் கொடுத்து கொண்டாடினோம். அஜீஸ் செமிபைனல்ஸ்ல இந்தியா தோற்றுப்போகும் வரை வெளியே வரவே இல்லை.

அடுத்த வருடம் +2 க்காக கிரிக்கெட் , டீவி எல்லாம் மூட்டை கட்டிவைக்க படிப்பு ஒன்றே
கதியானது. கிருஷ்ணமூர்த்தி பிட்ஸ் பிலானி போக நான் எஞ்சினியரிங் படிக்க மதுரை போய்விட்டேன். அஜீஸ் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஜமால் முகமது கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்ந்தான். எனக்கு பல விசயங்களைப்புரிய வைத்த கல்லூரி விடுதி வாழ்க்கை, அஜீஸுடன் மீண்டும் ஊருக்கு வரும்போதெல்லாம் பேசவைத்தது. முன்னவிட நிறையப்பக்குவமாய் பேச ஆரம்பித்தான். நிறைய மாறி இருந்தான். அழகாக அந்த குறுந்தாடி, தினம் 5 முறை தொழுகின்றான்.

”இந்த கெட்டப்ல இருக்கிறவன் எல்லாம் குண்டு தானட வைக்கிறீங்கன்னு “ மனசுல நினைத்துக்கொண்டாலும் அஜீஸிடம் கேட்கவில்லை. தொடர்ந்து அங்கேயே எம்சிஏவும் அவன் படிக்க, நான் படிப்பு முடிந்து மெட்றாஸில் வேலை என் மொத்தக்குடும்பமும் மாற்றலாகி, நகரத்தின் விரைவு வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆனபிறகு , அஜீஸ் அகமதுவிடம் இருந்து ஒரு வேலைத் தேட உதவும்படி ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. ரம்யாவிற்கு அந்த மின்னஞ்சலை அனுப்பி நேர்முகத்தேர்வுக்கு ஏற்பாடு செய்து அவனுக்கு
வேலையும் கிடைத்தது.

எனக்கும் ரம்யாவுக்கும் கல்யாணம் முடிந்து வெளிநாட்டில் குடியேறத் திட்டமிட்டுக் கொண்டிருக்கையில், அஜீஸ் தான் வேலையை விட்டுவிட்டதாகவும் , திருச்சியில் விரிவுரையாளராக சேரப்போவதாகவும் எங்களிடம் சொன்னபோது

”அஜீஸ் , உன் டெக்னாலஜி அறிவுக்கு, அடுத்த வருடம் பாரின்ல செட்டில் ஆகிடலாம், எதுக்கு பைத்தியக்காரத்தனமா வாத்தியார் வேலை” என நானும் ரம்யாவும் எவ்வளவு அறிவுரை
சொல்லியும் கேட்கவில்லை.

“கார்த்தி, என் சமுதாய மக்கள் கிட்ட இருக்கிற பெரிய பிரச்சினை யாரும் சரியா படிக்க மாட்டுறானுங்க, படிச்ச என்னைப்போல ஒரு சிலரும் இப்படி வசதியா போய் செட்டில் ஆயிட்டா, காலங்காலத்துக்கும், துபாய்லேயும் சிங்கப்பூர்லேயும் ஒட்டகம் மேய்க்கிற வேலையும் கொத்தனார் வேலையும் தான் செய்ய வேண்டியதா இருக்கும். அங்கேயும் வேலை கிடைக்கலாட்டி உன் கல்யாணத்துல கிச்சா என்னை கிண்டல் பண்ணானே வெடிகுண்டு
பார்ட்டின்னு அதுவே நிரந்தரம் ஆயிடும். லெக்சரரா போறதுனால நான் அவங்களுக்கு சின்ன ஏணியாய் இருக்க முடியுமுன்னு நினைக்கிறேன், விஷ் மி குட் லக் ப்ளீஸ்”

கிருஷ்ணமூர்த்தியின் தொலைபேசி அழைப்பு வர, பழைய நினைவுகளில் இருந்து இயல்புக்கு வந்தேன்.

“கார்த்தி, இண்டியா டாஸ் ஜெயிச்சுட்டானுங்க, ஆபிஸுக்கு லீவு போடு, இப்பொவே போயிடுவோம் ”

“சரிடா, அஜீஸூக்கு பணம் டிரான்ஸ்பர் பண்ணிட்டியா, “

”ஆச்சு , காத்தாலேயே பண்ணிட்டேன்”

அஜீஸீன் முயற்சியால் அவனது கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பெரிய கணிணிப் பயிற்சி மையத்திற்கு ஒரு சின்ன தொகையை நானும் அஜீஸின் வங்கிக் கணக்குக்கு மாற்றிவிட்டு ரம்யாவுடன் கிரிக்கெட் ஆட்டத்திற்கு கிளம்பினேன். சொல்ல மறந்துவிட்டேனே, நாங்கள் இந்த நாட்டுக் குடிமக்கள் ஆகிவிட்டாலும் இன்றைய ஆட்டத்தில் இந்தியாவைத்தான் வெகு உற்சாகமாக ஆதரிக்கப்போகிறோம். இது போன்ற விசயங்கள் ஒருவரின் நாட்டுப் பற்றைக் கேள்விகுறியாகவும் கேலிக்குரியதாகவும் ஆக்காது என்பதை நாங்கள் புரிந்துகொள்ள 10 வருடங்கள் ஆனது.

போன தடவை அஜீஸிடம் பேசியபோது பாகிஸ்தான் கேப்டன் சோயிப் மாலிக்கைப்
பற்றியும் இந்தியாவின் இர்பான் பதானைப் பற்றியும் பெருமையாக சொன்ன போது, முன்பிருந்த நெருடல் ஏதும் இல்லை.

வினோத் காம்ப்ளி - நல்லதோர் வீணை செய்தே !! -



வருடம் 1988, சாரதாஷ்ரம் பள்ளிக்கும் செயிண்ட் சேவியர் பள்ளிக்கும் இடையிலான ஆட்டம், ஒருவர் வலது கை ஆட்டக்காரர், மற்றொருவர் இடது கை ஆட்டக்காரர்.சாரதாஷ்ரம் பள்ளியைச்சேர்ந்த இருவரும் இணைந்து இணையாட்டமாக 600 ரன்களைக் கடந்தும் ஆட்டத்தை முடிக்காமல் தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்க, பயிற்சியாளரின் நெருக்குதல் காரணமாக ஒரு வழியாக ஆட்டத்தை முடித்துக்கொண்டனர். வலது கை ஆட்டக்காரர் அடுத்த வருடமே இந்திய அணியில் அறிமுகமாகி இன்றுவரை தவிர்க்க முடியாத மாபெரும் சக்தியாக இந்திய கிரிக்கெட் அரங்கில் மட்டுமல்லாமல் , உலக அரங்கிலும் உடைக்க முடியாத சாதனைகளை படைத்துவிட்டு சச்சின் டெண்டுல்கர் என்ற மந்திரப் பெயருடன் பீடு நடை போட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் சச்சினை விட நல்ல ஆட்டக்காரர் என்று பயிற்சியாளர் அச்ரேகரால் பாராட்டப்பட்ட, பம்பாய் கிரிக்கெட் மைதானங்களில் டெண்டுல்கரை விட அதிகம் பேசப்பட்ட மற்றொரு இடது கை ஆட்டக்காரர் வினோத் காம்ப்ளி நட்சத்திரமாய் மின்னுவார் என எதிர்பார்க்கப்பட்டு விட்டில் பூச்சியாய் கிரிக்கெட் வானில் இருந்து மறைந்தது கிரிக்கெட் உலகின் வினோத கசப்பான உண்மைகளுள் ஒன்று.





வினோத் காம்ப்ளி தான் ஆடிய முதல் ரஞ்சிப்போட்டியில் ,சந்தித்த முதற்பந்தை சிக்சருக்கு அனுப்பி முதல் தர கிரிக்கெட்டுக்கு அச்சாரம் அளித்தார். கீழ்நடுத்தரவர்க்கத்தைச் சார்ந்த வினோத்காம்ப்ளிக்கு டெண்டுல்கரைப்போல உடனடியாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. டெண்டுல்கர் அறிமுகம் ஆகி மூன்று வருடங்களுக்குப் பின்னரே இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற முடிந்தது. டெஸ்ட் அறிமுக ஆட்டத்திற்கு முன்னர் இங்கிலாந்து அணியுடன் ஆன ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தனது பிறந்த நாளன்று சதமடித்து ஆட்டத்திறனை நிருபித்தார். இவர் சதமடிக்கும்பொழுது மறுமுனையில் நின்றவர் வேறு யாருமல்ல, பம்பாய் கிரிக்கெட் மைதானங்களில் இவருடன் இணைந்து கூரைகளை சிக்சர்களினால் பதம் பார்த்த சச்சின் டெண்டுல்கரே தான். சச்சின் 81 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.





அதைத் தொடர்ந்த டெஸ்ட் போட்டித்தொடரில் மூன்றாவது ஆட்டத்தில், தனது சொந்த மண்ணில், இரட்டைச்சதமடித்து மூன்று வருடக் காத்திருப்புக்கு மட்டையால் பதில் சொல்லிவைத்தார். இந்த ஆட்டத்திற்கு முன்பாக, இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் ஒருவர் ”ஆரஞ்சுப்பழத்தைக்” கொண்டு கூட வினோத் காம்ப்ளியை ஆட்டமிழக்க செய்ய முடியும் என்று ஏளனமாக சொல்லி இருந்தாராம். 100,150,200 யைக் கடந்தும் வினோத் காம்ப்ளியை ஆட்டமிழக்க வைக்க முடியாமல் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் திணற, இங்கிலாந்தின் ராபின் ஸ்மித் , இப்பொழுதாவது அந்த ஆரஞ்சுப்பழத்தை வைத்து காம்ப்ளியை ஆட்டமிழக்கச்செய் என்று அதே பந்துவீச்சாளரிடம் கேட்டாராம்(நன்றி:டெலிகிராப்).

அடுத்து ஜிம்பாப்வே அணியுடன் ஆன டெஸ்ட் போட்டியிலும் இரட்டைச்சதம். அடுத்து வந்த இலங்கைச் சுற்றுப் பயணத்தில் தொடர்ந்து இரண்டு சதங்கள்.கடை 80, ஆரம்ப 90களில் இடதுகை ஆட்டக்காரர் காம்ப்ளியைத் தவிர வேறு யாரும் இல்லாத இந்திய அணியில் இவர் ஆடும் விதம்(அவ்வப்போது இடது கை ஆட்டக்காரர் WV.ராமன் வந்து போனாலும்), காதில் ஒற்றைக்கடுக்கண், தொங்கட்டான், அடிக்கடி மொட்டை அடித்து வித்தியாசமான தோற்றத்தில் ஆடுகளத்தில் இறங்குவது , மட்டையின் கைப்பிடிகளில் இருக்கும் grip கள், என பலவிதங்களில் ரசிகர்களை கவரலானார்.

ஷார்ஜாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் ஷான் வார்னேவின் ஒரு ஓவரில் 22 ரன்கள் அடித்து நொறுக்கியது, ஹீரோ கோப்பை இறுதி ஆட்டத்தில் அரைசதம் என ஒரு நாள் போட்டிகளிலும் கலக்கிய இவர் டெஸ்ட் ஆட்டங்களில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனை இன்னமும் தன் வசமே வைத்துள்ளார்.

புகழ் ஏணியின் உச்சத்தில் இருந்த காம்ப்ளிக்கு அடுத்து வந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் இந்தியச் சுற்றுப்பயணம் அவரின் கிரிக்கெட் வாழ்வை அப்படியேத் திருப்பிப்போட்டது. ஆடிய ஆறு இன்னிங்ஸுகளில் மூன்று டக் அவுட், உட்பட 64 ரன்கள் எடுத்தார். முகத்துக்கு எழும்பும் பந்தை அடிக்க இயலாது என முத்திரைக் குத்தப்பட்டார். பின் வந்த நியுசிலாந்து உடன் ஆன டெஸ்ட் தொடரில் மட்டும் வாய்ப்பளிக்கப்பட்டு டெஸ்ட் அணியில் இருந்து கழட்டி விடப்பட்டாலும் ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து அணியில் இடம்பெற்று வந்தார்.

வினோத் காம்ப்ளியின் டெஸ்ட் ஆட்ட விபரங்களைப் பார்க்க இங்கே சொடுக்கவும்

96 உலகக்கோப்பைப் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் உடனான போட்டியில் ஆம்புரோஸ் முகத்துக்கு வீசிய பந்தை சிக்சருக்கு அனுப்பி , எல்லாவகையான ஆட்டமும் தனக்குத் தெரியும் என நிருபித்த காம்ப்ளி, ஜிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் சதமும் அடித்தார். அந்த உலகக்கோப்பைப் போட்டிகளில் டெண்டுல்கரைத் தவிர சதமடித்த இந்திய வீரர் வினோத் காம்ப்ளி மட்டுமே!! அரை இறுதிப்போட்டியில் பார்வையாளர்கள் குறுக்கீட்டால் , இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்க , வினோத் காம்ப்ளி மனமுடைந்து அழ ஆரம்பித்தார். அந்த அழுகை இன்னமும் கண் முன்னால் நிற்கிறது.

உலகக்கோப்பைக்குப்பின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு அறிவிக்கப்பட்ட அணியில் இவரும் மனோஜ் பிரபாகரும் நீக்கப்பட்டனர். அங்கு சவுரவ் கங்குலி, ராகுல் திராவிட் என்ற இரு சகாப்தங்கள் தங்களது முதல் அத்தியாயங்களைப் பதிவு செய்ய வினோத் காம்ப்ளிக்கு டெஸ்ட் போட்டிகளுக்கான கதவு முழுவதுமாக அடைக்கப்பட்டு அவ்வப்போது ஒருநாள் போட்டிகளில் அதிக வாய்ப்பளிக்கப்பட்டபோதும் வினோத் காம்ப்ளியால் சோபிக்க இயலவில்லை. மொகிந்தர் அமர்நாத்தைப்போல 9 தடவை அணியில் நீக்கப்பட்டு பின்பு அணியில் இடம்பெற்ற காம்ப்ளி ஒரு சில முப்பதுகளையாவது சதமாக மாற்றி இருந்தால் கூட அணியில் இருக்க வைக்கப்பட்டு இருக்கலாம். 2000 க்குப்பிறகு கங்குலித் தலைமையில் இந்திய அணிக்கு இளம் ரத்தம் பாய்ச்சப்பட்டதனால் வினோத்காம்ப்ளியின் பன்னாட்டு கிரிக்கெட் வாழ்வு அஸ்தமனம் ஆனது.

திறமையான ஆட்டத்திறன் இருந்தும், அதிகப்படியான வாய்ப்பு அளிக்கப்பட்டும் ஏன் வினோத்காம்ப்ளியால் தனது நண்பர் சச்சின் டெண்டுல்கர் சாதித்தவைகளில் கால்வாசிக்கூட ஏன் செய்துகாட்ட முடியவில்லை என இன்றும் கிரிக்கெட் பார்வையாளர்களால் அலசப்படுகிறது. தோல்விகளில் இருந்து மீண்டு வருவதைவிட கிடைத்தப்புகழையும் பெருமையையும் தக்கவைத்துக்கொள்வது மிகக்கடினம். உடனடிப்புகழ், புகழினால் கிடைத்தப்பணம், பணத்திற்காக சேரும் காக்கா பிடிக்கும் கூட்டம், அவசியமில்லா சகவாசங்கள் , பழக்க வழக்கங்கள், எல்லாம் ஒன்று சேர்ந்து வினோத் காம்ப்ளியை ஒரு மாயையில் தள்ளி, பாழ்படுத்தியது என்றும் சொல்வார்கள்.

தோல்வி தரும் வலியைவிட வெற்றித்தரும் போதை அபயகரமானது என்பது வினோத்காம்ப்ளிக்குத் தெரியவில்லை. பயிற்சிக்கு நேரம் தவறி வருதல், அணியில் ஒழுக்கமின்மை,தேவையற்ற திரையுலகத் தொடர்புகள், அடிக்கடி அழுத்தத்தினால் மனமுடைந்துபோதல் போன்றவை ஒரு நல்ல சாதனையாளராக வந்திருக்கக்கூடியவரை, வேதனையுடன் கிரிக்கெட் ரசிகர்கள் திரும்பிப்பார்க்கும்படி வைத்துவிட்டது.


திரைப்பட மோகத்தில் ”அனார்த்” என்ற இந்திப்படத்தில் சுனில் செட்டி, சஞ்சய் தத்துடன் ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் தோன்றிய வினோத்காம்ப்ளி அந்தப்படம் ஊத்தி மூடிக்கொண்டதில் அவருடைய திரைக்கனவும் நீர்த்துப்போனது.

சச்சின் டெண்டுல்கர் 90 களில் தொடர்ந்து ஆட்டமிழப்பதுக் குறித்து விவாதங்கள் நடக்கும் அதே வேளையில் , அவரை விட திறமைசாலி என அறியப்பட்ட காம்ப்ளி பெயர், நியுசிலாந்து ஆட்டக்காரர் ஜெஸ்ஸி ரைடர் சமீபத்தில் ஒரு பிரச்சினையில் சிக்கியபோதும் , இளம் வீரர்களுக்கு அதிக வருவாய் வருவதனால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும் என்ற விவாதங்களிலும் அடிபட்ட முரண் நிச்சயம் அலசலுக்குரியது.

மேல்தட்டு மக்களின் மாலை நேரக்கொண்டாட்டங்களில் அதிகம் தலைகாட்டும் வினோத் காம்ப்ளி ஒரு பயிற்சியாளராகவோ, வர்ணனையாளராகவோ கிரிக்கெட் சம்பந்தப்பட்ட குழுக்களில் நிர்வாகியாகவோ மீண்டு வந்து தான் செய்த தவறுகளை வருங்காலத் தலைமுறைகள் செய்யாத அளவுக்கு வழிநடத்த வேண்டும் என்பதுதான் வினோத் காம்ப்ளியின் ஆட்டங்களைப் பார்த்து ரசித்தவர்களின் விருப்பம்.

பண்படுத்திய (பின்) ஊட்டச்சத்துக்கள்

பின்னூட்டங்கள் பெரும்பாலும் சத்தான ஊட்டச்சத்தாகவே இருந்திருக்கிறது. சில சமயங்களில் கசப்பு மருந்தாகவும் இருந்திருக்கின்றன. மிக மிக குறைவான சமயங்களில் நோகடிக்கும் பின்னூட்டங்கள் வந்துள்ளன. ஆனால் அவையும் வலையுலகம் மாதிரியான பொதுச்சூழலில் இயல்பான ஒன்று மறந்து விடுவதுண்டு.

2006,அக்டோபரில் தேன்கூடு போட்டிக்காக எழுதிய “மரணம் மாபெரும் விடுதலை” என்றக் கதைக்கு வந்த ஒரு அனாமதேயப் பின்னூட்டம் நிறைய யோசிக்க வைத்தது. அந்த அநாமதேயம் சத்தியமான அக்கறையுடன் இந்தப் பின்னூட்டத்தை இட்டிருந்தார். அந்தப் பின்னுட்டம் இதுதான்.


நானும் ஒரு பிரபல வலைப்பதிவாளர் தான். உங்க பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன். என் பேருலயே வந்து சொன்னா தப்பா நெனைப்பீங்களோன்னு அனானியா வந்து உங்களை விமர்சனம் பண்ணுறேன்.

நீங்க எழுதற கதையோட தீம் எல்லாம் நல்லா இருக்கு. பிரச்சினை என்னன்னா உரையாடல்கள் இயல்பா இல்லே. உரையாடல்களை கொஞ்சம் அறிவுஜீவித்தனமா அமைக்கணும்னு நெனைச்சி அதுக்கு சரியான பொருத்தமான வார்த்தைகள் கிடைக்காம ஒப்பேத்துறிங்க. முடிஞ்சவரைக்கும் இயல்பு தமிழில் உரையாடல்களை அமைத்து கதை எழுதுங்கள்.

உங்க பதிவு படிக்கிறதுக்கு முன்னாடி வேறு ஒருத்தர் தேன்கூடு போட்டிக்காக எழுதிய படைப்பை பார்த்தேன். முழுக்க முழுக்க வசனங்களால் ஆன கதை என்று சொல்லமுடியாத ஒரு வித்தியாசமான படைப்பு.உரையாடல்களை ரொம்பவும் இயல்பாக நம் நிஜ வாழ்க்கையில் நாம் கேட்கும் வார்த்தைகளாலேயே அமைத்திருந்தார். ஒரு நாய் குரைப்பதை கூட அவ்வளவு இயல்பாக எழுதியிருந்தார். ஆனாலும் அவர் படைப்புகள் சிலவற்றை புரட்டினேன். தீம் கிடைக்காமல் தடுமாறுகிறார் போல.

உங்களுக்கு தீம் ரொம்ப நல்லா திங்க் பண்ண வருது. வார்த்தைகளில் மட்டும் கொஞ்சம் எளிமையை சேருங்கள்.இந்த பின்னூட்டத்தை வெளியிடுவதும், மட்டுறுத்துவதும் உங்களுக்குள்ள உரிமை. ஏதோ சொல்லணும்னு நெனைச்சேன். சொல்லிட்டேன்.


இதைப்பதிப்பித்தவுடன் மீண்டும் அதே அநாமதேயம்


என் விமர்சனத்தை ஏற்றுக்கொண்ட வினையூக்கிக்கு நன்றி.
என்னை யார் என்று
Guess செய்ய முடிகிறதா?
ஐந்து பெயரை சொல்லுங்களேன். அதில் நான் இருக்கிறேனா
என்று பார்க்கிறேன்.
- உங்கள் நலம் விரும்பும் அனானி


என்று சொல்லிவிட்டு தான் யாரென்று இன்றுவரை சொல்லவில்லை. இந்த நட்சத்திர வாரத்தில் கதை எழுதும்திறனை மேலும் செம்மையாக்கிக் கொள்ள முயற்சிகள் எடுக்க வைத்த இந்த அநாமதேயப் பின்னூட்டம் இட்டவருக்கு மனமார்ந்த நன்றிசொல்லிக் கொள்கிறேன்.

இந்தப் பின்னூட்டம் வந்து சிலமாதம் கழித்து pay it forward என்ற கதைக்கு மீண்டும் அநாமதேயமாக ஒரு பின்னூட்டம்ஆங்கிலத்தில் வந்திருந்தது.


Hello Mr. Vinaiooki,

It is crystal clear that the base of your story is from the english movie Pay It Forward. Nothing wrong in redoing thestory, but you have to mention a courtesy.
Oru ezhuthallanukku athu than perumai.
If you tell me this is your own idea and it is really strange coincidence.
Be honest for yourself. Otherwise you can not be at peace.
Good luck...

”காப்பி” அடித்து எழுதப்பட்ட கதை என்றும், நீ நிம்மதியாவே இருக்கமாட்டே என்று சாபம்விடும் விதத்தில் போடப்பட்டிருந்த இந்தப்பின்னூட்டம் அதிர்ச்சியாய் இருந்தது. வருத்தம் இருந்தாலும் உடனே பதில் சொல்ல
விருப்பம் இல்லாமல் விட்டுவிட்டேன். மின்னஞ்சலைத் திறந்ததும்


hello Selvakumar,
I read your story on pay it forward.It was good.Shall i
ask u something????Is this your own story???i am asking you this because i have
seen a movie named pay it forward.
So i just thought to ask u this.Do u
realise that u have not written a story on your own.
Ok.the way u presented
the story was really good.But it would be better if u write stories on your own
thinking.

Thanks
Arthi.

என்று ஒரு மின்னஞ்சல் பெட்டியில் கிடந்தது. சரி அந்த அநாமதேயமாகப் போட்டவர்தான் மின்னஞ்சலும் அனுப்பி இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டு கீழ்கண்ட பதில் அளித்தேன்


Arthi,
Good morning.I am so happy for your comment
as well this mail. Yes it was inspired the movie "Pay it forward". Though I have
not seen the movie yet, I read the reviews sometimes back. The story Title
itself is paying a tribute to that movie. As our bloggers are exposed to English
movies, I thought people would understand that the story is inspired by above
mentioned movie just by giving the name "Pay it forward". It is not intentional
to hide or take credits for this. Sometimes "good things" should be conveyed in
all the possible modes. This pay it forward concept is one of the few. I had
just paid it forward in tamil.

Coming to the point "own thinking" Yes, i
dont want to claim the 40+ stories that I had written are my "own thinking" . we
are bound to be influenced by things "surrounded" us. So none of the stories is
100% free from influences. All my stories are influenced , inspired by the
incidents happened with friends society (fear, beliefs, betrayals emotions ).

I am just a presenter ,At the same time, I present the things which
could bring positive impact and I present it in my own way.

When I
release the book, sure I shall give "credits" to that novel written by Catherine
ryan hide and the movie. Please do visit my site often and pass me your
opinions. Thanks a lot

R.Selvakumar (aka) vinaiooki


இந்தப் பின்னூட்டம் கொடுத்தவரும் யாரென்றுத்தெரியவில்லை. அந்த சமயத்தில் என்னை நானே introspect செய்துகொள்வதற்கும் இதுவும் உதவியாக இருந்தது.

மா.சிவக்குமார் அடிக்கடி , நேர்மறை எண்ணங்களை விதைக்கும் கதைகளை “நெம்புகோல்” கதைகள் என்று சொல்லுவார். நிறைய சமயங்களில் “நெம்புகோல்” கதைகள் அறிவுரைப் பாணியில் அமைந்திருந்தாலும்,
சிறுகதைக்கான இலக்கணங்களை மீறியோ அல்லது பின் தொடராமலோ இருந்திருந்தாலும் யாரேனும் ஒருவரை அதைப் பாதித்து மாற்றத்திற்கு வித்திட்டால் அந்தக் கதைக்கும் எழுதியவருக்கும் பெருமைதான். அவ்வகையான பூரிப்பும் ஒருநாள் எனக்குக் கிடைத்தது. சதீஷ்குமார் என்ற எனக்கு முன்னறிமுகம் இல்லாத ஒரு அன்பர் பிடிஎப் கோப்பாக மின்னஞ்சலில் சுற்றுப்பயணம் வந்துகொண்டிருந்த “கற்கை நன்றே” கதை வாசித்துவிட்டு என்னுடைய editor@vinaiooki.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்து இருந்தார்.

Dear Editor,
I read the above mentioned short story.
Wonderful one.
Really thought provoking one
It really brought tears to
my eyes.
Actually, I myself have around 400 books at my house which I
treasure a lot.
I also have a plan to open a mini library at my home.
This short story was just a mirror image of my thoughts.
Was really a
refreshing thought.
The simple narrative adds value to the story to be read
by one and all.
The only problem is that I was not able to express my
feelings in tamil.
Good job.

Satish Kumar SVN.

எழுத்துப் பயிற்சிக்காக எழுதப்படும் பேய்க்கதைகளால் அறியப்பட்டு இருந்தாலும் நெம்புகோல் கதைகளே மனதுக்கு நெருக்கமானதாக இருக்கின்ற நிலையில் சதீஷ்குமாரின் இந்த மின்னஞ்சல் ஒரு மிகப்பெரும் உந்துசக்தியாக இருந்தது.

அவ்வகையில் இந்த வருடத்துவக்கத்தில் முதல்பதிப்பாக எழுதப்பட்ட காட்டு ரோஜாக்களுக்கும் கடமை உண்டு என்ற கதை முக்கியமானது. இனிவரும் காலங்களில் நெம்புகோல் வகையிலான கதைகளை அதிகம் எழுதவேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தப் பதிவை முடிக்கிறேன்.

பிற்சேர்க்கை :
இந்தப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள கதைகளை கீழ்க்காணும் சுட்டிகளில் வாசிக்கலாம்.
1. மரணம் மாபெரும் விடுதலை
2. Pay it forward
3. கற்கை நன்றே
4. காட்டு ரோஜாக்களுக்கும் கடமை உண்டு

என்னை மேலும் பண்படுத்திக்கொள்ள உங்கள் தனிப்பட்ட அபிப்ராயங்களை rrselvakumar@gmail.com என்ற முகவரிக்கும் தரலாம்.

Tuesday, March 04, 2008

சலீல் அங்கோலா - நடிகராகிப் போன கிரிக்கெட் ஆட்டக்காரர்


இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணங்கள் செய்யும்பொழுது, ”பயணியாக” அணியில் தேர்வாகி, விளையாட வாய்ப்பு ஏதும் தாரப்படாமல் அடுத்த சுற்றுப்பயணத்தில் காரணகாரியமின்றி நீக்கப்படுவதை கிரிக்கெட் வட்டாரங்களில் “அங்கோலட்” என்று சொல்லுவது வழக்கம்.(நன்றி:விக்கீபிடியா). இந்தப் பெயருக்கு சொந்தக்காரர் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சலீல் அங்கோலா.

சுமார் 8 வருடங்கள் அணியில் தேர்வாகி , நீக்கப்பட்டு திரும்பத் தேர்வாகி இருந்தாலும் இவர் ஆடிய மொத்த ஆட்டங்கள் 20 ஒரு நாள் போட்டிகள் மட்டுமே. டெண்டுல்கர் அறிமுகமான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர் அதன்பின் டெஸ்ட் ஆட்டம் ஆட தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



காலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக தொடர்ந்து கிரிக்கெட் ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியாததால் கிரிக்கெட் வாழ்வில் உச்சக்கட்டம் ஆரம்பிக்கும் வயது எனச் சொல்லப்படும் 28 வயதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த இவருக்கு , இயற்கை ஒரு சன்னலை மூடினால், வேறொரு கதவைத் திறக்கும் எனும்படி, சின்னத்திரையில் இவரின் அழகிய ஆஜானுபாகுவான தோறறம் நாயகனாக அறிமுகம் ஆக வாய்ப்பளித்தது. சலீம் துரானி(பர்வீன்
பாபியுடன் சரித்ரா), சந்தீப் பட்டீல் (பூனம் தில்லனுடன் கபி கபி) போல் அல்லாமல் இவரின் சின்னத்திரை வெள்ளித்திரைப்பயணம் வெற்றிகரமாகவே அமைந்தது.



Chahat Aur Nafrat என்ற இவரின் அறிமுகத் தொலைக்காட்சித் தொடர் இவருக்கு கிரிக்கெட்டில் கிடைத்ததை விட அதிக பிரபல்யத்தை ஈட்டித் தந்தது. சோனித் தொலைக்காட்சியின் Bigboss என்ற (மேற்கத்திய bigbrother வகையிலான reality show) நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்தபோது பாலாஜி டெலிபிலிம்ஸ் இவர் அதில் பங்கேற்க கூடாது என நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றப்போது செய்திகளில் அடிபட்டார்.

இவரை முன்னுதாரணமாகக் கொண்டு வினோத் காம்பிளி(அனார்த்), அஜய் ஜடேஜா(கேல்) ஆகியோரும் பெரியதிரைகளில் வலம்வரத்தொடங்கினாலும் அங்கோலாவைப்போல தனக்கென ஒரு இடத்தை அவர்களால் தக்கவைக்க முடியவில்லை.




தொடர்ச்சியாக சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் மின்னிய இவர், சிலமாதங்களுக்கு முன்
நோய்வாய்ப்பட்டதன் விளைவாக , உடல் பருமன் கூடி வயதானவர் போலதோற்றமளிப்பதால் Karam Apnaa Apnaa என்ற தொடரில் வயதானவர் வேடத்தில் நடித்து வருகிறார். உடற்பயிற்சிகள் செய்து மீண்டும் இளமையான சின்னத்திரைக் கதாநாயகனாக இவர் மின்ன வேண்டும் என்பது தான் இந்தி சின்னத்திரை ரசிகர்களின் ஆவல்.

வெள்ளத்தனைய மலர்நீட்டம் - சிறுகதை

எனது நிறுவன உயரதிகாரிகளில் ஒருவர் தான் ராஜினாமா செய்வதாக அனுப்பி இருந்த மின்னஞ்சலை வாசித்து முடித்தேன். இந்த மாதத்தில் இப்படி ராஜினாமா செய்யும் நாலாவது உயர்மட்ட அலுவலர்.இன்னும் சிலரும் போகக்கூடுமோ என்ற எண்ணம் மேலும் அயற்சியைத் தந்தது.

என்னுடைய இந்த நிறுவனம் பொருளாதார ரீதியிலும், அலுவலர்களின் எண்ணிக்கையிலும் மத்தியவகையைச் சார்ந்தது. பத்து வருடங்களுக்குப்பின்னரும் எத்தனை கடும் உழைப்பைக் கொட்டினாலும் என்னால் இப்போதிருக்கும் நிலையைவிட்டு அடுத்த நிலைக்கு கொண்டு
போக இயலவில்லை.

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் என் அலுவலகத்திற்காக உடல் பொருள் உணர்வு எல்லாம்
தந்தும் ஏன் இந்த தேக்க நிலை !!! என் வகுப்புத் தோழன் மோகன், என்னைவிட புத்திசாலி ஒன்றும் கிடையாது. கல்லூரியில் நான் முதற்மாணவனாக தேர்ச்சிப்பெற்று வெளிவந்து ஒரு வருடம் கழித்துத் தான் தேர்வாகாதா பாடங்களை எழுதி முடித்து இரண்டாம் நிலையில் தேர்ச்சிபெற்று வெளிவந்தான். ஆனால் அவன் ஆரம்பித்த நிறுவனம் இன்று மூன்று துணை நிறுவனங்களுடன் எதிர்கால ஆலமரம் என்று வியாபார பார்வையாளர்களால் உற்று நோக்கப்படுகிறது. இத்தனைக்கும் மோகன் பெரிய பின்புலத்தோடுவரவில்லை.

நண்பர்கள் உறவினர்கள் இவர்களிடம் கடன் வாங்கி ஆரம்பித்த பெரிய வணிக முதலைகளுடன் போட்டியிடும் அளவுக்கு வரச்சசெய்ததை என்னால் ஏன் செய்ய இயலவில்லை. இயலாமை/ஆதங்கம் மேலோங்க மோகனுடன் இதைப்பற்றி கலந்தாலோசிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

மறுநாள், நகரத்தின் மையத்தில் அமைந்திருந்த மேல்தட்டுமக்களுக்கான உணவரங்கில் மோகனைசந்தித்தேன்.பரஸ்பர நலம் விசாரிப்பு ஏதுமன்றி நேரடியாக விசயத்திற்கு வந்தேன்.

“உன் கம்பெனிக்கு இப்படி இவ்வளவு வளர்ச்சி, வாட்ஸ் த சீக்ரெட்”

“ஜஸ்ட் ஹார்ட் வொர்க், அவ்ளோதான்”

“உன்னைவிட நான் அதிக நேரம் என் கம்பெனிக்கு கொடுக்கிறேன்...நீ பெரும்பாலான நேரங்களில் கிளப்ஸ், காலேஜ் பங்சன்ஸ் இப்படித்தான் இருக்க”

“கரெக்ட், நான் ஒரு நாளைக்கு என் நிறுவனத்திற்கு கொடுக்கிற நேரம் 4 ஹவர்ஸ் தான்,”

“பிறகு எப்படி உன்னால சக்ஸஸ்புல்லா கம்பெனி ரன் பண்ண முடியுது?, “

“சிம்பிள் கார்த்தி, ஐ டிரஸ்ட் பியுப்பிள்.. என்ன வேலை செய்யனும் அசைன் பண்ணிட்டு , முழு சுதந்திரமும் அவங்களுக்குக் கொடுத்துட்டு நான் அமைதியா இருந்துடுவேன், என்னால பண்ண முடியுற வேலையை என் எம்ப்ளாயி ஒருத்தரால செய்ய முடியும்னா அதுக்கு நான் சந்தோசப்பட்டு அந்த பொறுப்பை அவனுக்குக் கொடுத்திடனும்.. எனக்கு வேலை கம்மி ஆகுதுல்ல... நான் போய் கண்ட்ரி கிள்ப்ல ஜாலியா ஸ்னூக்கர் ஆடலாம்”

“ம்ம்ம்”

“கார்த்தி, நீ கம்பெனி ஆரம்பிச்சப்ப உன்கூட இருந்த ஆட்களில் எத்தனை பேரு உன்கூட இருக்காங்க?”

“யாருமே இல்லை மோகன்..ஆல் ஆஃப் தெம் லெஃப்ட்”

“ம்ம் நான் ஆரம்பிச்சப்ப என்கூட இருந்த ஆட்களில் நிறையபேரு என்கூடத்தான் இருக்காங்க.. என்னோட மத்த கன்சர்ன்ஸுக்கு எல்லாம் அவங்கதான் ரியல் ஹெட், நான் சும்மா பேருக்காகத்தான்.. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு அவங்களையே அபிசியல சொல்லப்போறேன்... நம்ம எம்ப்ளாயிசுக்கு அவங்களுக்கு எதிர்காலம் பிரகாசமான எதிர்காலம் அப்படின்னு உறுதிசெய்யப்பட்டுவிட்டால் நம்மை விட்டு போகவே மாட்டார்கள்., என்
கம்பெனியோட பலமே அது தான்”

“மோகன், இருப்பது ஒரே ஒரு டாப் பொசிசன், மத்தவங்க என்னளவுக்கு வளர்ந்தாலும் நான மட்டுமே தானே தலைவராக நீடிக்க முடியும்.. “

“யெஸ் யூ ஆர் கரெக்ட்.. ஆனால் அதுக்கும் ஒரு சொல்யூசன் இருக்கு.. உன் பொசிசனை அவங்களுக்குக் கொடுத்துட்டு அதுக்குமேலே ஒரு பொசிசனை உருவாக்கி நீ அந்த சேர்ல உட்கார்ந்துக்கோ, உன் ஈகோவை விட உன் கம்பெனி வளர்ச்சி முக்கியமானதாக இருந்தால் இது உனக்கு ரொம்ப ஈசி”

“ம்ம்ம்ம்”

“நானும் கேள்விப்பட்டேன்.. உன் கம்பெனி முக்கியமான ஆட்கள் எல்லாம் ரிசைன் பண்ணிட்டாங்கன்னு, இப்பக்கூட ஒன்றும் குறைந்துப்போய்விடவில்லை, அவர்களில் யாருக்காவது திரும்ப வரவிருப்பமான்னு கேளு, வந்த பிறகு புரோமசனோட பொறுப்பும் கொடு... ஒவ்வொரு லெவலிலும் நீ எம்ப்ளாயிசை நடத்துறவிதம் எல்லா லெவல் எம்ப்ளாயிசுக்கிட்டேயும் டேரக்ட் இம்பாக்ட் இருக்கும்”

“ம்ம்ம்”

“வேலைத் தெரிஞ்சவங்களிடம் எப்படி வேலை வாங்கனும்கிற அறிவு மட்டும்தான் என்கிட்ட இருக்கு.., அதுதான் என் கம்பெனி சக்ஸசோட சீக்ரெட், உன் எம்ப்ளாயிசோட வளர்ச்சிதான் உன் கம்பெனியோட வளர்ச்சி ஸோ டேக் மேக்சிமம் கேர் டு ரிடெயின் தம்”

மோகன் சொல்ல சொல்ல , அவன் வளர்ச்சியில் மேல் வைத்திருந்த பொறாமை குறைந்து பெருமிதம் அதிகமானது, எந்த விசயத்துக்காக மோகனை இவ்வளவு காலம் தவிர்க்க நினைத்திருந்தேனோ , அந்த விசயத்தை மறந்து அவன் மனைவி ரம்யாவைப் பற்றி விசாரித்தேன்.

ஜெனி அருகே வராதே !! - சிறுகதை

அவசரப்பட்டு ஆளைத்தீர்த்துக்கட்டும் கும்பலுடன் நான் வைத்துக்கொண்ட தொடர்பினால் ஏற்பட்ட பயம் இன்று எனது மனைவி ஜெனியை அலுவலகத்தில் இருந்து வரும் வழியில் பார்த்தபோது தொலைந்து போனது. வாளு போய் கத்தி வந்த கதையாக பயம் போய் திகில் பிடித்தது போலானது என் மனம். நிச்சயம் பிரமை இல்லை. அது அவளேதான்.

இந்த திகிலுடன் இவ்வளவு பெரிய பங்களா வீட்டில் மனம் திக் திக் என அடிக்க தனியாக இருக்கும்போது வீட்டு அழைப்பு மணி அடிக்க கதவைத் திறந்தேன். எங்க வட்டார காவல்துறை அதிகாரியும் கூடவே சில காவல்துறை அலுவலர்களும் இருந்தனர்.

“மிஸ்டர் கார்த்திக் , உங்க வொய்ஃப் காணமல் போயிட்டாங்கன்னு நீங்க கொடுத்த கம்ப்ளைண்ட் சம்பந்தமா கொஞ்சம் பேசனும்”

“உள்ளே வாங்க சார்”

காவலதிகாரி வீட்டை நோட்டம் விட்டபடியே உள்ளே நுழைந்தார்.

“கார்த்தி, உங்க வொய்ஃப் காணாமல் போனப்ப என்ன டிறஸ் போட்டு இருந்தாங்க, அவங்க வீட்டை விட்டு போறப்ப என்ன என்ன எடுத்துட்டுப்போனங்கன்னு சொல்ல முடியுமா?”

ஏன் இவர் இப்படி தோண்டித்துருவிக் கேள்வி கேட்கிறார் என்ற எரிச்சல் இருந்த போதும் அவர்கேட்ட தகவல்கள் எல்லாவற்றையும் புகார் மனுவில் எப்படி சொல்லி இருந்தேனோ அப்படியே ஒரு வரிமாறாமல் சொல்லி முடித்தேன்.

“உங்க வொயிஃப்க்கும் உங்களுக்கும் ஏதேனும் பிரச்சினையா, “

“இல்லை சார், எங்களுக்குள்ள குட்டி சண்டைக் கூட வந்தது கிடையாது, நாங்க மேட் பார் ஈச் அதர் ன்னு எல்லோரும் சொல்லுவாங்க, இன்பேக்ட் நாங்க லவ்மேரேஜ் தான் பண்ணிக்கிட்டோம்”

“உங்களுக்கு யார்மேலேயவது சந்தேகம் இருக்கா” என அவர்கேட்டு முடிக்கும் முன்னர் தொலைபேசி அழைக்க அவரே போய் எடுத்தார்.

அடுத்த முனையில் என்ன பேசினார்கள் என்று தெரியாது. ஆனால் காவலதிகாரி ”யா ஓகே , சொல்லிடுறேன்” என பேசிவிட்டு தொலைபேசியைக் கீழே வைத்த பின்

“கார்த்தி, உங்க வொய்ஃப் அவங்க பிரண்ட் மோகன் வீட்டுல இருக்காங்களாம்... இன்னும் கொஞ்ச நேரத்தில இங்கே வந்துடுவாங்களாம்”

“யார் சார் போன்ல”

“உங்க பிரண்டு மோகன் தான் பேசினார்” என சொல்லிவிட்டு அவர் கிளம்பிப்போன பின் அப்படியே பஞ்சு நாற்காலியில் சரிந்தேன். இரண்டு நாட்கள் முன் நடந்த சம்பவம் ஞாபகம் வந்தது.

“ஜெனி, மோகன்கிட்ட பேசுறது எனக்குப்பிடிக்கல, “


“கார்த்தி,, மோகன் ஜெம் ஆஃப் த பெர்சன்ஸ்,,, உனக்கு என் மேலே எப்போதும் சந்தேகம் தான்”

“உங்க பழக்கம் நட்பா மட்டும் இருந்தா பரவாயில்லையே,, அதுக்கு மேலே போகுது,,நம்ம ஆபிஸுல பியுன்லேந்து போர்ட் மீட்டிங்ல டைரக்டர்ஸ் வரைக்கும் அசிங்கமா கிண்டல் அடிக்கிறாங்க”

“ஸோ வாட், எவனெல்லாம் கமெண்ட் அடிக்கிறானோ, அவனை எல்லாம் வேலையை விட்டுத்தூக்கு,, நீ தானே பாஸ்” சொல்லிவிட்டு ஏளனமாய் சிரிக்க கடுப்பாகிப்போனது. ஆத்திரத்தில் நான், விட்ட ஒரு அடியில் சுவற்றின் முனை தலையில் பட, மூர்ச்சையானாள். ம்ஹூம்ஹூம் திரும்ப மூச்சுவரவே இல்லை.

ஒரு வகையில் இதுவும் நல்லதாகிப்போய்விட்டது . மோகனைத் தான் தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முன்பணம் எல்லாம் கொடுத்து வைத்திருந்தேன்.. அவர்கள் முழுப்பணமும்
கொடுத்தால் தான் வேலை முடியும் எனபிரச்சினை செய்கிறார்கள். இனி மோகனைத் தீர்த்துக்கட்ட அவசியம் இல்லை. இவள் செய்த தவறுக்கு அவன் பலிகடா மட்டும் தான். அவளையும் அவளது சில உடமைகளையும் தோட்டத்தில் ஒரு குழி நோண்டி
புதைத்து விட்டு மறுநாள் அழகாய் நடித்து புகார் கொடுத்து நிம்மதியாய் ஒருநாள் கூட ஆகவில்லை. எல்லாம் கனவாய் இருக்கக் கூடாதா!!!

மீண்டும் தொலைபேசி அடிக்க நினைவுக்கு வந்தேன். அதே சமயம் வீட்டு அழைப்பு மணியும் அடித்தது. உறைந்து போய் இருந்த நான் ,எழுந்திருக்க கூடிய நிலைமையில் இல்லை... வாசல் அழைப்பு மணி சத்தம் தானாகவே நின்றது..ஆனால் தொலைபேசி மணி அடித்துக்கொண்டே இருக்க கதவு திறக்கப்படாமலேயே ஜெனி உள்ளெ வந்து தொலைபேசியை எடுத்து “ஹல்லோ” சொன்னாள்..இல்லை சொன்னது.