Wednesday, March 05, 2008

வினோத் காம்ப்ளி - நல்லதோர் வீணை செய்தே !! -வருடம் 1988, சாரதாஷ்ரம் பள்ளிக்கும் செயிண்ட் சேவியர் பள்ளிக்கும் இடையிலான ஆட்டம், ஒருவர் வலது கை ஆட்டக்காரர், மற்றொருவர் இடது கை ஆட்டக்காரர்.சாரதாஷ்ரம் பள்ளியைச்சேர்ந்த இருவரும் இணைந்து இணையாட்டமாக 600 ரன்களைக் கடந்தும் ஆட்டத்தை முடிக்காமல் தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்க, பயிற்சியாளரின் நெருக்குதல் காரணமாக ஒரு வழியாக ஆட்டத்தை முடித்துக்கொண்டனர். வலது கை ஆட்டக்காரர் அடுத்த வருடமே இந்திய அணியில் அறிமுகமாகி இன்றுவரை தவிர்க்க முடியாத மாபெரும் சக்தியாக இந்திய கிரிக்கெட் அரங்கில் மட்டுமல்லாமல் , உலக அரங்கிலும் உடைக்க முடியாத சாதனைகளை படைத்துவிட்டு சச்சின் டெண்டுல்கர் என்ற மந்திரப் பெயருடன் பீடு நடை போட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் சச்சினை விட நல்ல ஆட்டக்காரர் என்று பயிற்சியாளர் அச்ரேகரால் பாராட்டப்பட்ட, பம்பாய் கிரிக்கெட் மைதானங்களில் டெண்டுல்கரை விட அதிகம் பேசப்பட்ட மற்றொரு இடது கை ஆட்டக்காரர் வினோத் காம்ப்ளி நட்சத்திரமாய் மின்னுவார் என எதிர்பார்க்கப்பட்டு விட்டில் பூச்சியாய் கிரிக்கெட் வானில் இருந்து மறைந்தது கிரிக்கெட் உலகின் வினோத கசப்பான உண்மைகளுள் ஒன்று.

வினோத் காம்ப்ளி தான் ஆடிய முதல் ரஞ்சிப்போட்டியில் ,சந்தித்த முதற்பந்தை சிக்சருக்கு அனுப்பி முதல் தர கிரிக்கெட்டுக்கு அச்சாரம் அளித்தார். கீழ்நடுத்தரவர்க்கத்தைச் சார்ந்த வினோத்காம்ப்ளிக்கு டெண்டுல்கரைப்போல உடனடியாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. டெண்டுல்கர் அறிமுகம் ஆகி மூன்று வருடங்களுக்குப் பின்னரே இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற முடிந்தது. டெஸ்ட் அறிமுக ஆட்டத்திற்கு முன்னர் இங்கிலாந்து அணியுடன் ஆன ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தனது பிறந்த நாளன்று சதமடித்து ஆட்டத்திறனை நிருபித்தார். இவர் சதமடிக்கும்பொழுது மறுமுனையில் நின்றவர் வேறு யாருமல்ல, பம்பாய் கிரிக்கெட் மைதானங்களில் இவருடன் இணைந்து கூரைகளை சிக்சர்களினால் பதம் பார்த்த சச்சின் டெண்டுல்கரே தான். சச்சின் 81 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதைத் தொடர்ந்த டெஸ்ட் போட்டித்தொடரில் மூன்றாவது ஆட்டத்தில், தனது சொந்த மண்ணில், இரட்டைச்சதமடித்து மூன்று வருடக் காத்திருப்புக்கு மட்டையால் பதில் சொல்லிவைத்தார். இந்த ஆட்டத்திற்கு முன்பாக, இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் ஒருவர் ”ஆரஞ்சுப்பழத்தைக்” கொண்டு கூட வினோத் காம்ப்ளியை ஆட்டமிழக்க செய்ய முடியும் என்று ஏளனமாக சொல்லி இருந்தாராம். 100,150,200 யைக் கடந்தும் வினோத் காம்ப்ளியை ஆட்டமிழக்க வைக்க முடியாமல் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் திணற, இங்கிலாந்தின் ராபின் ஸ்மித் , இப்பொழுதாவது அந்த ஆரஞ்சுப்பழத்தை வைத்து காம்ப்ளியை ஆட்டமிழக்கச்செய் என்று அதே பந்துவீச்சாளரிடம் கேட்டாராம்(நன்றி:டெலிகிராப்).

அடுத்து ஜிம்பாப்வே அணியுடன் ஆன டெஸ்ட் போட்டியிலும் இரட்டைச்சதம். அடுத்து வந்த இலங்கைச் சுற்றுப் பயணத்தில் தொடர்ந்து இரண்டு சதங்கள்.கடை 80, ஆரம்ப 90களில் இடதுகை ஆட்டக்காரர் காம்ப்ளியைத் தவிர வேறு யாரும் இல்லாத இந்திய அணியில் இவர் ஆடும் விதம்(அவ்வப்போது இடது கை ஆட்டக்காரர் WV.ராமன் வந்து போனாலும்), காதில் ஒற்றைக்கடுக்கண், தொங்கட்டான், அடிக்கடி மொட்டை அடித்து வித்தியாசமான தோற்றத்தில் ஆடுகளத்தில் இறங்குவது , மட்டையின் கைப்பிடிகளில் இருக்கும் grip கள், என பலவிதங்களில் ரசிகர்களை கவரலானார்.

ஷார்ஜாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் ஷான் வார்னேவின் ஒரு ஓவரில் 22 ரன்கள் அடித்து நொறுக்கியது, ஹீரோ கோப்பை இறுதி ஆட்டத்தில் அரைசதம் என ஒரு நாள் போட்டிகளிலும் கலக்கிய இவர் டெஸ்ட் ஆட்டங்களில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனை இன்னமும் தன் வசமே வைத்துள்ளார்.

புகழ் ஏணியின் உச்சத்தில் இருந்த காம்ப்ளிக்கு அடுத்து வந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் இந்தியச் சுற்றுப்பயணம் அவரின் கிரிக்கெட் வாழ்வை அப்படியேத் திருப்பிப்போட்டது. ஆடிய ஆறு இன்னிங்ஸுகளில் மூன்று டக் அவுட், உட்பட 64 ரன்கள் எடுத்தார். முகத்துக்கு எழும்பும் பந்தை அடிக்க இயலாது என முத்திரைக் குத்தப்பட்டார். பின் வந்த நியுசிலாந்து உடன் ஆன டெஸ்ட் தொடரில் மட்டும் வாய்ப்பளிக்கப்பட்டு டெஸ்ட் அணியில் இருந்து கழட்டி விடப்பட்டாலும் ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து அணியில் இடம்பெற்று வந்தார்.

வினோத் காம்ப்ளியின் டெஸ்ட் ஆட்ட விபரங்களைப் பார்க்க இங்கே சொடுக்கவும்

96 உலகக்கோப்பைப் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் உடனான போட்டியில் ஆம்புரோஸ் முகத்துக்கு வீசிய பந்தை சிக்சருக்கு அனுப்பி , எல்லாவகையான ஆட்டமும் தனக்குத் தெரியும் என நிருபித்த காம்ப்ளி, ஜிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில் சதமும் அடித்தார். அந்த உலகக்கோப்பைப் போட்டிகளில் டெண்டுல்கரைத் தவிர சதமடித்த இந்திய வீரர் வினோத் காம்ப்ளி மட்டுமே!! அரை இறுதிப்போட்டியில் பார்வையாளர்கள் குறுக்கீட்டால் , இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்க , வினோத் காம்ப்ளி மனமுடைந்து அழ ஆரம்பித்தார். அந்த அழுகை இன்னமும் கண் முன்னால் நிற்கிறது.

உலகக்கோப்பைக்குப்பின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு அறிவிக்கப்பட்ட அணியில் இவரும் மனோஜ் பிரபாகரும் நீக்கப்பட்டனர். அங்கு சவுரவ் கங்குலி, ராகுல் திராவிட் என்ற இரு சகாப்தங்கள் தங்களது முதல் அத்தியாயங்களைப் பதிவு செய்ய வினோத் காம்ப்ளிக்கு டெஸ்ட் போட்டிகளுக்கான கதவு முழுவதுமாக அடைக்கப்பட்டு அவ்வப்போது ஒருநாள் போட்டிகளில் அதிக வாய்ப்பளிக்கப்பட்டபோதும் வினோத் காம்ப்ளியால் சோபிக்க இயலவில்லை. மொகிந்தர் அமர்நாத்தைப்போல 9 தடவை அணியில் நீக்கப்பட்டு பின்பு அணியில் இடம்பெற்ற காம்ப்ளி ஒரு சில முப்பதுகளையாவது சதமாக மாற்றி இருந்தால் கூட அணியில் இருக்க வைக்கப்பட்டு இருக்கலாம். 2000 க்குப்பிறகு கங்குலித் தலைமையில் இந்திய அணிக்கு இளம் ரத்தம் பாய்ச்சப்பட்டதனால் வினோத்காம்ப்ளியின் பன்னாட்டு கிரிக்கெட் வாழ்வு அஸ்தமனம் ஆனது.

திறமையான ஆட்டத்திறன் இருந்தும், அதிகப்படியான வாய்ப்பு அளிக்கப்பட்டும் ஏன் வினோத்காம்ப்ளியால் தனது நண்பர் சச்சின் டெண்டுல்கர் சாதித்தவைகளில் கால்வாசிக்கூட ஏன் செய்துகாட்ட முடியவில்லை என இன்றும் கிரிக்கெட் பார்வையாளர்களால் அலசப்படுகிறது. தோல்விகளில் இருந்து மீண்டு வருவதைவிட கிடைத்தப்புகழையும் பெருமையையும் தக்கவைத்துக்கொள்வது மிகக்கடினம். உடனடிப்புகழ், புகழினால் கிடைத்தப்பணம், பணத்திற்காக சேரும் காக்கா பிடிக்கும் கூட்டம், அவசியமில்லா சகவாசங்கள் , பழக்க வழக்கங்கள், எல்லாம் ஒன்று சேர்ந்து வினோத் காம்ப்ளியை ஒரு மாயையில் தள்ளி, பாழ்படுத்தியது என்றும் சொல்வார்கள்.

தோல்வி தரும் வலியைவிட வெற்றித்தரும் போதை அபயகரமானது என்பது வினோத்காம்ப்ளிக்குத் தெரியவில்லை. பயிற்சிக்கு நேரம் தவறி வருதல், அணியில் ஒழுக்கமின்மை,தேவையற்ற திரையுலகத் தொடர்புகள், அடிக்கடி அழுத்தத்தினால் மனமுடைந்துபோதல் போன்றவை ஒரு நல்ல சாதனையாளராக வந்திருக்கக்கூடியவரை, வேதனையுடன் கிரிக்கெட் ரசிகர்கள் திரும்பிப்பார்க்கும்படி வைத்துவிட்டது.


திரைப்பட மோகத்தில் ”அனார்த்” என்ற இந்திப்படத்தில் சுனில் செட்டி, சஞ்சய் தத்துடன் ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் தோன்றிய வினோத்காம்ப்ளி அந்தப்படம் ஊத்தி மூடிக்கொண்டதில் அவருடைய திரைக்கனவும் நீர்த்துப்போனது.

சச்சின் டெண்டுல்கர் 90 களில் தொடர்ந்து ஆட்டமிழப்பதுக் குறித்து விவாதங்கள் நடக்கும் அதே வேளையில் , அவரை விட திறமைசாலி என அறியப்பட்ட காம்ப்ளி பெயர், நியுசிலாந்து ஆட்டக்காரர் ஜெஸ்ஸி ரைடர் சமீபத்தில் ஒரு பிரச்சினையில் சிக்கியபோதும் , இளம் வீரர்களுக்கு அதிக வருவாய் வருவதனால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும் என்ற விவாதங்களிலும் அடிபட்ட முரண் நிச்சயம் அலசலுக்குரியது.

மேல்தட்டு மக்களின் மாலை நேரக்கொண்டாட்டங்களில் அதிகம் தலைகாட்டும் வினோத் காம்ப்ளி ஒரு பயிற்சியாளராகவோ, வர்ணனையாளராகவோ கிரிக்கெட் சம்பந்தப்பட்ட குழுக்களில் நிர்வாகியாகவோ மீண்டு வந்து தான் செய்த தவறுகளை வருங்காலத் தலைமுறைகள் செய்யாத அளவுக்கு வழிநடத்த வேண்டும் என்பதுதான் வினோத் காம்ப்ளியின் ஆட்டங்களைப் பார்த்து ரசித்தவர்களின் விருப்பம்.

31 பின்னூட்டங்கள்/Comments:

said...

//வினோத் காம்ப்ளி மனமுடைந்து அழ ஆரம்பித்தார். அந்த அழுகை இன்னமும் கண் முன்னால் நிற்கிறது.//

உங்கள் பதிவை படிக்க ஆரம்பித்தவுடன் மனதில் வந்தது இதுதான். காம்ப்ளி அணிக்கு வந்ததற்கான காரணமே சச்சின் தான் என பெரிய குற்றச்சாட்டும் உண்டு.

said...

கொஞ்ச வருடங்களுக்கு முன்னால வெங்கடபதி ராஜுவும் ஸ்ரீகாந்தும் சிகாகோ வந்திருந்தார்கள். அப்போ ராஜு எங்களோட அமர்ந்து தண்ணி அடித்தார். (ரெம்ப சிம்பிளான மனிதர். தரையில் அமர்ந்து தண்ணி அடிச்சிட்டு கார்பெட்டிலேயே தூங்கிட்டார்).

அவர் சொல்லிய விஷயம் ரெம்ப ஷாக்கிங்கா இருந்துச்சு. வினோத் காம்ப்ளி வெளியேற்றப்பட்டதற்கு அசாருதீனுக்கு அவர்மேல் இருந்த வெறுப்புத்தான் காரணம் என்றும் அது உருவானது ஒரு சில்லறை மோதலில் என்றும் சொன்னார். காம்ப்ளி வெளியேறிய நேரம் அவர் நல்லாத்தான் விளையாடிட்டிருந்தார்.

அவரை மறக்காமலிருக்கும் சிலரில் நீங்களும் ஒருவரா.. நல்லது. அவர் போனால் என்ன இன்னும் திறமையானவர்கள் வந்திருக்காங்களே.

:)

said...

ஹ்ம்ம்...எப்படி எப்படியோ வருவாருன்னு நினைச்ச ஆளு...அவரைப் பார்த்து நானும் கொஞ்ச நாள் லெஃப்ட்ல ஆடிட்டிருந்தேன்...

//அந்த அழுகை இன்னமும் கண் முன்னால் நிற்கிறது.
//

அதை மறக்க முடியுமா...

//தோல்வி தரும் வலியைவிட வெற்றித்தரும் போதை அபயகரமானது //

well said..இதே தான் காம்ப்ளிக்கும் நடந்தது..

said...

//காம்ப்ளி அணிக்கு வந்ததற்கான காரணமே சச்சின் தான் என பெரிய குற்றச்சாட்டும் உண்டு.
//

இளா..
சச்சின் கேப்டனா இருந்தப்ப காம்ப்ளிக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது உண்மைதான்..ஆனா அவரும அதை சரியா பயன்படுத்திக்கல...இன்னிங்க்ஸ் ஆரம்பம் இருக்கும்..ஆனா 30-40ல அழகா காட்ச் தூக்கி கொடுத்து அவுட் ஆயிடுவாரு..

Anonymous said...

//தோல்விகளில் இருந்து மீண்டு வருவதைவிட கிடைத்தப்புகழையும் பெருமையையும் தக்கவைத்துக்கொள்வது மிகக்கடினம். உடனடிப்புகழ், புகழினால் கிடைத்தப்பணம், பணத்திற்காக சேரும் காக்கா பிடிக்கும் கூட்டம், அவசியமில்லா சகவாசங்கள் //

புகழ் கிடைச்சது எல்லாரும் எவ்வளவு சீக்கிரம் மாறீடறாங்க. இதுக்குத்தான் பாரதியார் 'பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும் கவலைகள் என்னை தீண்டத்தகாதென்று' பாடினார் போலிருக்கு.
//காம்ப்ளி பெயர், நியுசிலாந்து ஆட்டக்காரர் ஜெஸ்ஸி டெய்லர் சமீபத்தில் ஒரு பிரச்சினையில் சிக்கியபோதும் , இளம் வீரர்களுக்கு அதிக வருவாய் //
அது ஜெஸ்ஸி ரைடர் Jesse Daniel Ryder - இங்க வெலிங்டனுக்காக விளையாடுவார். அதிகமாக குடிச்சுட்டு பிரச்சனை பண்ணீட்டு I dont have any problem அப்படீன்னு சொல்றார்.
விக்கிபீடியால இவரப்பத்தி படிக்க‌ http://en.wikipedia.org/wiki/Jesse_Ryder

Anonymous said...

//பாரதியார் 'பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும் கவலைகள் என்னை தீண்டத்தகாதென்று' பாடினார் போலிருக்கு.//

ooops
என்னைக்கவலைகள் தின்னத்தகாதென்று அப்படீன்னு இருக்கணும்

said...

இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்க , வினோத் காம்ப்ளி மனமுடைந்து அழ ஆரம்பித்தார். அந்த அழுகை இன்னமும் கண் முன்னால் நிற்கிறது.

மறக்க கூடிய ஆட்டமா அது...

கல்கத்தா ஈடன் பார்க் மைதானம் என்று நினைக்கின்றேன்...

என்னையும் கவர்ந்தவர்...

said...

சின்ன அம்மினி,
நன்றி. அந்தக் கடைப்பத்தி எழுதும்போது இந்தியாவில் மணி இரண்டு. கொஞ்சம் அசதியில் தவறிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. திருத்திவிட்டேன்.

said...

@இளா,
டெண்டுல்கரினால் அவர் அணிக்கு வரவில்லை. 96 வரை அவர் இந்திய அணியில் இருந்தது அவருடைய திறமையினால் மட்டுமே. ஆனால் அதன் பின்பு 1996 - 2000 வரை, தொடர்ந்து சரியாக விளையாடாவிட்டாலும் வினோத் காம்ப்ளி அணியில் இடம்பெற்றது, பெரும்பாலான சமயங்களில் டெண்டுல்கர் “கோட்டாவினால்” தான் கிடைத்தது என்பது நிஜம். டெண்டுல்கர் இந்த விசயத்தில் காம்ப்ளி மட்டுமல்ல அபய் குருவில்லா, சமீர் திகே, நிலேஷ் குல்கர்னி, அகார்கர் என எப்போதும் டெண்டுல்கரின் ”ஆள்” ஒருவர் உள்ளிருப்பார். ஆனால் அது பெரும்பாலும் அவர் பம்பாய் ஆளாக அணியில் இருப்பது தற்செயலாக இருப்பதாக தெரியும்.

ரோஹித் சர்மா திறமையான ஆட்டக்காரர் என்றாலும் தொடரில் பெஞ்சில் உட்காராமல் தொடர்ந்து ஆட வாய்ப்பு கிடைத்தமைக்கு டெண்டுல்கர் என்றக் கடவுளின் ஆசியே. கங்குலி காலங்களைத் தவிர கடைசி 15-16 வருடங்களாக இந்தியாவின் நிஜமானக் கேப்டன் டெண்டுல்கர்தான்.

said...

காம்ளியை திருப்பிப்பார்த்தேன்.
நன்றி.

said...

@ சிறில் அலெக்ஸ்
ம்ம்ம் ஆமாம் சார், சின்ன வயசில வினோத் காம்ப்ளிக்கு நான் மிகப்பெரும் ரசிகன். நீங்க சொன்ன தகவல் சுவாரசியமாக இருக்கு

said...

கப்பிப்பய,
என் தம்பியும் அவரைப்பார்த்துதான் லெஃப்ட் ஹாண்ட்ல ஆடுற பழக்க வளர்த்துக்கொண்டான்.

said...

@ பேரரசன்
ஆமாம் அந்த மைதானம் கல்கத்தா ஏடன் கார்டன் தான்.

@வடுவூர் குமார்
ம்ம் வினோத் காம்ப்ளியை திரும்பிப்பார்க்கும்பொழுதெல்லாம் ஒரு வகையான ஆதங்கம் இருக்கும்.

said...

//தோல்வி தரும் வலியைவிட வெற்றித்தரும் போதை அபயகரமானது என்பது வினோத்காம்ப்ளிக்குத் தெரியவில்லை. //

ஆமாம். இந்த போதையைக் கையாள்வது ரொம்பவே கடினம். என்ன செய்ய ஒரு நல்ல திறமை வீணாகப் போய்விட்டது. :(((

said...

அவரது இரண்டு இரட்டைச் சதங்களும், அந்த SS பேட்டும் இன்னும் கண்ணில் நிற்கிறது. தலைப்பே பொறுந்தும் :(

said...

//தோல்விதரும் வலியைவிட வெற்றி
தரும் போதை அபாயகரமானது//

பொன்னான அறிவுரை

said...

கிரிக்கின்போ தளத்தில் இருந்து...

//Although Rahul Dravid and Tendulkar top the list for most century partnerships, it's another Indian player of their generation who astonishingly pips Bradman among players with highest percentage of 100-plus stands. Vinod Kambli's Test career ran only from 1993 to 1995, lasting 17 Tests. It wasn't uneventful, though, and he scored 1084 runs at 54.20, with two double-hundreds and two hundreds in his first seven matches. Of 37 partnerships in his career, nine were century stands, while Bradman had 35 from 180. However, the only partnership Kambli was involved in that is widely remembered perhaps is his then record 664-run stand with Tendulkar in school-level cricket.//

said...

//தோல்வி தரும் வலியைவிட வெற்றித்தரும் போதை அபயகரமானது என்பது வினோத்காம்ப்ளிக்குத் தெரியவில்லை. //
எல். சிவராமகிருஷ்ணனை நினைவுபடுத்துகிறது இந்த வரிகள்.

said...

\\தோல்வி தரும் வலியைவிட வெற்றித்தரும் போதை அபயகரமானது \\

மிக சரியாக கூறியிருக்கிறீர்கள் வினையூக்கி.

said...

//அந்த உலகக்கோப்பைப் போட்டிகளில் டெண்டுல்கரைத் தவிர சதமடித்த இந்திய வீரர் வினோத் காம்ப்ளி மட்டுமே!! //

இந்த ஆதங்கம் எனக்கும் நிறைய உண்டு.

நவ்ஜோத் சித்து, காம்ப்ளி என்று திறமையாக விளையாடிகொண்டிருந்த போதும் பிற (உள்குத்து) அரசியல் காரணமாக (அணித்தலைவருக்கு பிடிக்காததால் அல்லது அணித்தலைவரை காக்கா பிடிக்காததால்) அணியை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள் அசாரூதீன் காலத்தில் நிறைய பேர்.

அதே போல் தான் ஒரு நாள் போட்டியில் இருந்த்து டோனி கங்குலிக்கு ”டேக்கா” கொடுத்ததும்.
--
தொரந்து இரு இரட்டை சதங்களை அடித்த பின் காம்ப்ளி (சச்சினைப்பற்றி) கூறியது “He took the elevator, I took the stairs, now both are on the top” துரதிருஷ்டம், படிக்கட்டில் ஏறிய காம்ப்ளி கீழே இறங்கியது elevatorல் :( :(
--
2003 உலக கோப்பையில் சச்சினின் (அதிகார பூர்வமற்ற) பயிற்சியாளர் இவர் என்பதும் அப்பொழுது சச்சின் மிரட்டியதில் இவரின் பங்கு அதிகம் என்பதும் பலர் அறியாதது. (அப்பொழுது அவர் அங்கு ஏதோ மகாண அணியுடன் இருந்தார்)

said...

//தோல்விதரும் வலியைவிட வெற்றி
தரும் போதை அபாயகரமானது//

அருமை அருமை.

said...

காம்பளியின் அழுகை மறக்க முடியாதது..

இந்திய அணியின் மீது இருந்த அவநம்பிக்கையயை, கல்கத்தா ரசிகர்கள் கேவலாமாக வெளிப்படுத்தினார்கள்.

காம்பளி அழுதது, எதனால், ஆட முடியவில்லை என்றா, இல்லை வெற்றி வாய்ப்பை பெற்றுத் தருவேன் என்று மக்கள் நினைக்கவில்லையே என்றா..என்ற குழப்பம் எனக்குண்டு.

அதற்குப் பின், மட்டையாளர் அழுது நினைவில் நிற்பது, இரண்டாவது கடைசி ஆட்டத்தில் இந்தியா வெற்றிப் பெற்றவுடன், ஜேம்ஸ் ஹோப்ஸ் அழுதது...

said...

காம்ப்ளி பற்றி மேலும் ஒரு செய்தி.


http://www.smh.com.au/news/cricket/a-class-act-opinions-differ/2008/01/04/1198950076545.html?page=fullpage#contentSwap2

Despite his talents, Kambli was always booed and mocked at his home ground, Wankhede Stadium in Mumbai. Observers believed it was because of the dark colour of his skin. Not so, says Kambli. "I think it's because of my caste."

said...

தம்பீபீபீபீபீபீபீ

ஆஜரானேன்..
படித்தேன்..
தெரிந்து கொண்டேன்..

நன்றி..

said...

@புருனோ,
காம்ப்ளி பற்றி செய்திக்கு நன்றி. கிட்டத்தட்ட அதே மாதிரி இன்னொரு செய்தி டெலிகிராப் பத்திரிக்கையில்
Within a month, Tendulkar was making his Test debut against Pakistan, a rough baptism that saw him struck on the head. Kambli had to wait another three years to join him in the Test team, a gap that caused him to later quip that "while Sachin had taken the elevator, he'd taken the stairs." It seemed a neat soundbite, though some saw it as a coded barb over the way caste dictates opportunity in India - Tendulkar coming from lofty stock, Kambli from lower-middle.

said...

@ஸ்ரீதர் நாரயணன்
எல்.சிவராமகிருஷ்ணன் தனது அருமையான கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பைத் தொலைத்தாலும், மீண்டு வர்ணனையாளராகக் கலக்குவதைப்போல வினோத் காம்ப்ளியும் வரவேண்டும்.

said...

@இலவசக்கொத்தனார்
மிக்க நன்றி அந்த தகவலுக்கு
@மங்களூர் சிவா,திவ்யா , உண்மைத்தமிழன்
மிக்க மிக்க நன்றி

said...

@டிபிசிடி
ஆமாம்.. காம்ப்ளி அழுத பின்னர் நான் ஆடுகளத்தில் அழுத வீரர் ஹோப்ஸ்தான்
ஆடுகளத்திற்கு வெளியே அழுத வீரர் ஹான்சி க்ரோன்யே

said...

@சிவஞானம்ஜி
நன்றி ஜி
@தமிழ் பிரியன்
எஸ் எஸ் பேட், எஸ் சார்
ஞாபகம் இருக்கு.. மலரும் நினைவுகளுக்கு போயாச்சு :))))

said...

ஓ.. வினோத் காம்ப்ளி. ஒரு காலத்தில் இவருடைய ஆட்டத்தையும் ஆட்டத்தைப்பற்றிய எழுத்துகளையும் தேடித்தேடு வாசித்திருந்தேன்.

இத்தனைபேர் நினைவுவைத்திருக்கிறார்கள்(பின்னூட்டங்கள்) என்ற விதயமே கொஞ்சம் ஆறுதலாகவும் இருக்கிறது. :)

-மதி

said...

ரைட்//////////