Friday, March 20, 2015

கிரிக்கெட்டின் கண்ணீர்த்துளி - கட்டுரை

உலகின் மகாமோசமானவர்கள் இறந்தாலும் கண்ணீர் அஞ்சலிகள் கண்ணியமாகவே எழுதப்படும். இறந்தவர்களின் நற்செயல்கள் மட்டுமே நினைவுகூரப்படவேண்டும் என்பது  வறட்டு சம்பிராதயமாக திணிக்கப்பட்டுவிட்டதோ என்று சமயங்களில் தோன்றும். எச்சில் கையால் காகம் ஓட்டியது எல்லாம் கொண்டாடப்படும் இறுதிச்சடங்குகளில் மறைந்தவர்  செய்த அட்டகாசங்களையும் பதிவு செய்யத்தவறுவது கால எந்திரத்திற்கு நாம் செய்யும் துரோகம். வாழ்க்கைத் தத்துவத்திற்கு  மிகநெருங்கிய உறவான கிரிக்கெட் ஆட்டத்தின் ஆட்டக்காரர்கள் ஓய்வுப்பெறுகையிலும், கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்படும். சமீபத்திய வரவு, சிலோன் ஆட்டக்காரர்களான சங்கக்கரா ,ஜெயவர்த்தனே. 

புள்ளி விபரங்கள் பொய்யல்ல. ஆனால் சமயங்களில் அதைப்பகுத்துப் பார்க்கையில் புள்ளிவிபரங்கள் பொய்யும் சொல்லும் என்று அறியலாம். வேறு யாருமில்லாதபொழுது , தங்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டு , "ஆல் தோட்ட பூபதி" விவேக்கைப்போல யூத்தாக தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்தால் ஆயிரம் இரண்டாயிரம் என ஓட்டங்களை அடித்துக் கொண்டேயிருக்கலாம்.  சங்கக்கரா , ஜெயவர்த்தனே ஆகியோர் ஆல் தோட்ட பூபதி வகையில் சேர்வார்கள். சினிமா காமெடி பார்க்காதவர்களுக்கு உலகின் சிறந்த ஆல்ரவுண்டர் சாகித் அப்ரிடியைக் கைக்காட்டினால் எளிதில் விளங்கும். பாகிஸ்தான் அளவிற்கு ஏன் போகவேண்டும் , நம்மூர் ரோகித்தை எடுத்துக்கொள்ளுங்கள், 4000 ஓட்டங்கள் அடித்துவிட்டார். ஒரே காரணம் வழங்கப்பட்ட தொடர் வாய்ப்புகள். எண்ணிலா வாய்ப்புகள் கொடுக்கப்படுகையில் ஏழெட்டாவது தேறிவிடும். 

கிரிக்கெட்டின் மகத்தான பெருமை சங்கக்கரா என்று ராஜபக்சேவை விஞ்சும் அளவிற்கு வெள்ள்வத்த முதல் டொரான்டொ வரை ஒரே புகழாரம். சஙகக்கரா ஆடுகளத்தை விட்டு வெளியேறுகையில் வானமே கண்ணீர் வடிக்கின்றது என்று தெலுங்கு சினிமா பாணியில் லா லா லா பாடியிருப்பதோடு நிறுத்தியிருந்தால் மட்டும் "every dog has its day"  என்று நாம் விலகிப்போயிருக்கலாம். 

விடுவார்களா, சிலோன் கிரிக்கெட் ரசிகர்கள், குறிப்பாக கொழும்புத் தமிழர்களும், கொழுப்பு எடுத்த ஒரு சில புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும். சச்சின் டெண்டுல்கருக்காக உலகக்கோப்பையை வாங்கித்தந்த பிசிசிஐ போல, இலங்கை கிரிக்கெட் வாரியம் லாபி செய்யும் அமைப்பல்ல என்று சமூக ஊடங்களில் எழுதப்போக வாதம் எதிர்வாதம் என்று கசப்பான வாக்குவாதங்களில்தான் பெரும்பாலான இழைகள் முடிந்தன.  

வெள்ளவத்தை தமிழர்களை விடுங்கள், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் இலங்கை அணியை ஆதரிக்கலாமா என்ற விவாதத்திற்குப் போகவிரும்பவில்லை. பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கைத்தட்டி பாராட்டிய ரசிகர்கள் தமிழ்நாட்டு ரசிகர்கள். சையத் அன்வரின் 194, சமீபகால இரட்டை சதங்களைக் காட்டிலும் அதிகமாக தமிழ்நாட்டு ரசிகர்களின் நினைவில் இருக்கும்.  கிரிக்கெட்டின் ரசிகர்களில் அறிவுப்பூர்வமான நேர்மையான விமர்சனங்கள் கொடுக்கும் ரசிகர் கூட்டம் என்றால் தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் என்பது  மிகையாகாது. இப்படிப்பட்ட தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகப்பாரம்பரியத்தில் வளர்ந்த நான், எந்தவொரு கிரிக்கெட் அணியையும் நாடு கடந்து மொழி கடந்து  அரசியல் கடந்து  தங்களுக்குப் பிடித்தவர்களை ஆதரிக்கலாம், அது பாகிஸ்தானாக இருந்தால் கூட சரியே, என்று நம்புபவன்.  

அதனால், மொழி, அரசியல், நாடு எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்து விட்டு சங்கக்கரா, ஜெயவர்த்தனேவை முன் வைத்து, இந்திய கிரிக்கெட் வாரியத்தை, இந்திய ஆட்டக்காரர்களை  தரக்குறைவாக பேசுவது தர்க்கரீதியில் சரியா என்று மட்டும் பார்ப்போம். எங்கோ ஒரு மூலையில் , தனிநபர்களின் கருத்துக்களை வைத்து  பொதுப்படுத்தவேண்டுமா என்ற கேள்வியும் எழாமலில்லை. இந்த டிஜிட்டல் உலகில், குறிப்பாக சமூக ஊடகங்களில் தனிப்பட்ட கருத்து எதுவும் தனிப்பட்ட கருத்தாக நின்றுவிடுவதில்லை. அவரவருக்கு இருக்கும் பிரபல்யம் பொருத்து பிராப்ளமாகவோ பலமாகவோ வலுப்பெறுகின்றது.  பின்னர் அதுவே, சமூகக் கருத்தாக கட்டமைக்கப்படும் வாய்ப்பிருப்பதால் நேரமிருக்கையில் அவரவர் அவரவரளவில் எதிர்வினை கொடுப்பது முக்கியம். 

புனையப்படும் கருத்து  - சங்கக்கரா ஒரு ஜென்டில்மேன் கிரிக்கெட் வீரர். 

பெருந்தன்மையாளர்களின் விளையாட்டு கிரிக்கெட். சங்கக்கரா பெருந்தன்மையாளராக இருந்தாரா என்று பார்த்தால், ஒன்றல்ல இரண்டல்ல மூன்று முறை, பெருந்தன்மைக்கு எதிர்ப்பதமாக இருந்திருக்கிறார். 

1. 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டி நாணயச்சுண்டலில்  நாணயமற்று நடந்து கொண்டதை உலகமே கைக்கொட்டிச் சிரித்தது. 

2. ஒரு முறை வீரேந்திர சேவக், 99 ஓட்டங்கள் எடுத்திருந்தபொழுது, வெற்றிக்கு ஓர் ஓட்டமே பாக்கியிருந்தது. சிங்கள வீரர் சங்கக்கரா என்ன செய்தார் தெரியுமா, பந்து வீச்சாளர் சூரஜ் ரந்தீவை நோபால் வீசச்செய்யச் சொல்லி சேவக் சதமடிப்பதைத் தடுத்தார்.

3. அதற்கு முன்பு டெண்டுல்கர் 96 ஓட்டங்கள் எடுத்திருந்த பொழுது, பந்துவீச்சாளர் மலிங்காவை வைடு பந்தை வீச்சச்சொல்லி அதைப்பிடிக்காமல் பவுன்டரிக்கு தள்ளி 5 உபரி ஓட்டங்கள் கொடுத்து ஆட்டத்தை முடிக்கவைத்தார். 

(குறிப்பு 2, 3 கிட்டத்தட்ட சல்மான் பட், முகமது அமீரை நோபால் வீசச்சொன்னதற்கு சமம். ஒருவேளை விசாரணை நடத்தப்பட்டிருந்தால் நமக்குத் தெரியாத உண்மைகள் வெளிவந்திருக்கலாம்.  ) இப்படி, பெருந்தன்மைக்குப் பொருள் தெரியாத சங்கக்கராவை எல்லாம் "ஜென்டில்மேன்" கிரிக்கெட் வீரர் என்றால் அது கிரிக்கெட்டிற்கே அவமானம். 

சங்கக்கரா "ராஜபக்சே" என்றால், அவரின் அடிப்பொடி ஜெயவர்த்தனே "பொன்சேகா". அசுவின் ஒரு முறை, மன்காடட் முறையில் சிலோன் ஆட்டக்காரரை ஆட்டமிழக்கசெய்தார். பின்னர், பெருந்தன்மையின் நாயகன் தோனி, ஆட்டமிழப்புக் கோரிக்கையைத் திரும்பப்பெற்றுக்கொண்டு, சிலோன் ஆட்டக்காரரை தொடர்ந்தாட அனுமதித்தார். அன்றைய ஆட்டம் முடிந்ததும்,  ஜெயவர்த்தனே , மன்காடட் முறையில் ஆட்டமிழக்கசெய்வது ஏதோ இனப்படுகொலைக் குற்றம் போல பேசினார்.  கிரிக்கெட் மிகப்பெரிய சமனி என்று சொல்வார்கள்..  சமீபத்தில் , இலங்கையின் ஸ்பெஷலான "எறிபந்து"  வீச்சாளர் சேனநாயகா மேன்கேடட் முறையில் இங்கிலாந்து ஆட்டக்காரரை ஆட்டமிழக்க, நடுவர் கேட்டுக்கொண்டபின்னரும் சிலோன் அணித்தலைவர்  மாத்யூஸ் திரும்பப்பெற்றுக்கொள்ளவில்லை. ஆட்டம் முடிந்த பின்னர் பேசிய ஜெயவர்த்தனே, "மன்காடட், கிரிக்கெட் விதிமுறைகளுக்கு உட்பட்டது, அப்படி ஆட்டமிழக்கச்செய்வது சரியே" என்று வாதிட்டார். 

இலங்கைக்காக ஆடும்பொழுது மட்டுமல்ல, சிலோன் ஆட்டக்காரர்கள் எங்கு ஆடினாலும் ஆட்டநெறிகளுக்கு புறம்பாகத்தான் ஆடுவார்கள். ஐபிஎல் ஆட்டங்களில் ஆடும் சிலோன் ஆட்டக்காரர்களைக் கவனித்தால் இது மேலும் தெளிவாக விளங்கும்.

இன்று மட்டுமல்ல, அன்றே இலங்கை ஆட்டக்காரர்கள் நேர்மைக்கு பரமவைரிகள்தாம். உலகமே இனவெறி தென்னாப்பிரிக்காவை ஒதுக்கிவைத்திருக்கையில்,  இலங்கை ஆட்டக்காரர் வர்ணபுரா தலைமையில் , இலங்கை அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்தது. இனமட்டுமல்ல, இனவெறியும் இனவெறியுடன் சேரும் என்பதற்கான முன்னோட்டம் அது. 

புனையப்படும் கருத்து - இலங்கையால் லாபி செய்ய முடியாது . 

இலங்கை கிரிக்கெட்டைப் பார்க்கும்பொழுது  நம்மையறியாமலும் ஓர் அசூயை ஏற்படுவது  இலங்கையின் இனவெறியினால் மட்டுமல்ல. இலங்கையின் கிரிக்கெட் வரலாறே அசூயை உணர்வை ஏற்படுத்தும் அளவிற்குத்தான் இருக்கும். தமிழ்நாடு அணியின் இரண்டாம் நிலை ஆட்டக்காரர்களுடன் கோபாலன் டிராபி ஆடிக்கொண்டிருந்ததுதான் சிலோன் அணி. ஶ்ரீலங்காவில் இனப்படுகொலை ஆரம்பமான நேரத்தில்  1981 ஆம் ஆண்டு இலங்கையின் இமேஜைத் தூக்கி நிறுத்த எடுக்கப்பட்டது அஸ்திரமே  இலங்கைக்கான டெஸ்ட் ஸ்டேடஸ் லாபி. 

திசநாயகவின் தலைமையில் லார்ட்ஸ் பிரபுக்களை குஷிப்படுத்த மது, மாதுக்கள் கொண்டாட்ட இரவுகளுக்கு பணம் நீராய் செலவளிக்கப்பட்டது.  இலங்கை கார்ப்பரேட் நிறுவனமான  மகராஜா மற்றும் அதனுடன்  இருந்த பிரிட்டீஷ் நிறுவனமான Belfour Beatty க்கும் ஒரு விளையாட்டு விளம்பர அடையாளம் தேவைப்பட்டது. இப்படி கார்ப்பரேட் கிளாமர் டெக்னிக்குகளால் பெறப்பட்டதுதான் இலங்கைக்கான டெஸ்ட் அந்தஸ்து. இப்படி எல்லாம் கூட லாபி செய்யலாம் என்று முதன் முறையாக கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தியது  இலங்கைதான். 

அடுத்து சிலோன் ரசிகர்கள் அடிக்கடிப்பேசுவது, 96 உலகக்கோப்பை வெற்றி. ஆஸ்திரேலியாவும் மேற்கிந்தியத் தீவுகளும் இலங்கைக்கு சென்று ஆட விரும்பாததால் தட்டில் விழுந்த புள்ளிகள் இலங்கையை முதலிடத்திற்கு தள்ள, cant'bowl , can't bat, can't field அணியான இங்கிலாந்தை வீழ்த்த முடிந்தது. 2003 உலகக்கோப்பையில் ஓசியில் கிடைத்த புள்ளிகளினால் கென்யா அரையிறுதி வரை வந்ததல்லவா அது மாதிரிதான். ஒரு துரதிர்ஷ்டமான நாள் இந்திய அணியை வெளியேற்ற , இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு கிடைத்தது. இன்று இந்தியாவின் வெற்றிகளுக்கு லாபி காரணம் என்று சொல்பவர்கள், ஆஸ்திரேலியா கூட, இலங்கைக் கடற்கரை வீடு, சிங்கள மசாஜிற்காக வீழ்ந்தது என்று சொல்லமாட்டார்கள்.  

திசநாயகே, டோனி கிரெய்க், இலங்கை பிரிட்டீஷ் கூட்டு ஸ்தாபனங்கள், கடற்கரையோர மசாஜ் பார்லர்கள் இவைகள் இல்லை என்றால் இலங்கை கிரிக்கெட் இன்னும் தமிழ்நாடு பி டீமுடன் கோபாலன் டிராபிதான் ஆடிக்கொண்டிருக்கவேண்டும். 

ரஞ்சி டிராபி ஆடும் அணிகளில் மிகவும் மோசமான அணியைத் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு அணியை மாற்றாமல், பன்னாட்டுப்போட்டிகளில் விளையாட வைத்தால், இலங்கையை விட சிறப்பாக ஆடுவார்கள். அப்படி ஆடி ரவுடியாக பார்ம் ஆனவர்கள்தாம் சிலோன் ஆட்டக்காரர்கள்.  இலங்கை,  கிரிக்கெட்டில் செய்த அதிகப்பட்ச சாதனை  முரளிதரனின் 800 ரன் அவுட்டுகள் மற்றும் சில "எறிபந்து" வீச்சாளர்களை அறிமுகப்படுத்தியது மட்டுமே.  நாளையே  தமிழ்நாடு, குயின்ஸ்லாந்து, விக்டோரியா, கர்நாடகா போன்ற அணிகள் டெஸ்ட் ஆடலாம் என்று 
ஐசிசி  முடிவு செய்தால் , இலங்கை தரப்பட்டியலில் கடைசிக்கான இடத்திற்குப் போட்டியிடும். 

திறமை, நேர்மை, பெருந்தன்மை  என்று எதுவுமே போதுமான அளவிற்கு இல்லாத லாபி புகழ் ஶ்ரீலங்கா கிரிக்கெட் வாரியத்தின் ஆட்டக்காரர்களான சங்கக்கரா, ஜெயவர்த்தனேவை கிரிக்கெட்டின் பெருமை என்று பேசுவது கிரிக்கெட்டின் பெருமைமிகு ஆளுமைகளை சிறுமை செய்வதற்கு சமம். டபிள்யூவி.ராமன், வினோத் காம்ப்ளி போன்றவர்களுக்கு  சங்கக்கரா ஜெயவர்த்தனே போன்று திகட்டத்திகட்ட வாய்ப்புக்கிடைத்திருந்தால், இவர்களைவிட அதிக சாதனைகள் செய்திருப்பார்கள். 

ஶ்ரீலங்கா , இந்தியத் துணைக்கண்டத்தின்  அரசியல் மானுடவியல் நிலப்பகுதி கண்ணீர்த்துளி மட்டுமல்ல , பெருந்தன்மை ஆட்டமான கிரிக்கெட்டின் கண்ணீர்த்துளியும் கூட. சுருக்கமாகச்சொன்னால் ஜென்டில்மேன் கிரிக்கெட்டின் அபஸ்வரம் ஶ்ரீலங்கா. 
-------

பிற்சேர்க்கை - நீரடித்து நீர் விலகுமா - http://vinaiooki.blogspot.it/2015/03/blog-post_24.html