Wednesday, February 01, 2012

இளையராஜா

தமிழ் சுணங்கிப் படுக்கும்பொழுதெல்லாம், மீட்டெடுக்க ஒவ்வொரு தலைமுறையிலும் ஏதேனும் ஒன்று தமிழைத் தட்டி எழுப்பி ஃபீனிக்ஸாக மாற்றும். இந்தத் தலைமுறையில் யுனிகோடும், சென்ற தலைமுறையில் செயற்கைக் கோள் தொலைக்காட்சிகளும் அதைச் செய்ய, கிட்டத்தட்ட 36 ஆண்டுகளுக்கு முன்னர் அன்னக்கிளி உன்னைத் தேடுதே என மண்ணின் இசையுடன், தமிழை மட்டுமல்ல,ஒட்டு மொத்த தென்னகத்தின் அடையாளங்களையே மீட்டவர் இளையராஜா.

அது ஒரு சிறிய வார இறுதி விருந்துக் கொண்டாட்டம், அமெரிக்க, ஸ்விடீஷ் பாடல்கள் இசைக்கப்படுகின்றன. ஒருப் பாடல் ஒலிக்கிறது, திடீரென ஒருவர் ஆனந்தத்தில் கத்துகிறார், இது ஐஸ்லாந்து இசை, என் ஊர் இசை ... அப்பொழுதுதான் இத்தனை நாள் வரை ஸ்விடீஷ் ஆள் என நினைத்துக் கொண்டிருந்தவர் ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. மொழிக்கு அடுத்தபடியாக இசையே தான் இன்னார் எனக் பெருமையுடன் காட்டிக்கொள்ள ஏதுவாக இருக்கிறது என்பதை வேறு ஒருவர் மூலம் நான் உணர்ந்த தருணம் அது.

மேட்டிமைக் கனவான்களின் இசையையும் ரசிக்க முடியாமல், எங்கே தன் நிலம் சார்ந்த இசையை ரசித்தோமானால் தாழ்ச்சியாகிவிடுமோ என்று அல்லாடிக்கொண்டிருந்த சாமானிய தமிழ் இசை விரும்பிகளை, இதோப்பார் எனக்கான இசை, என் மக்களில் மத்தியில் இருந்து ஒருவனால் இசைக்கப்படுகிறது என இசையின் எந்த இலக்கணங்களும் தெரியாத என்னைப்போன்ற சராசரிகளைப் பெருமை கொள்ள செய்தவர். நல்ல ஆசிரியருக்கான அளவுகோல் , எத்தனைப் பெரிய சூத்திரமாக இருந்தாலும் அதை எத்தனை எளிமையாக சொல்லுகிறார் என்பதில்தான் இருக்கின்றது. இளையராஜா, இசைக்கு அரசனோ, சக்கரவர்த்தியோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். என்னைப்போன்றவர்களுக்கு இசை ஆசிரியன். மன்றம் வந்தத் தென்றலுக்கு பாடல் ஒலிக்கும்பொழுதெல்லாம் உடன் பாடும் லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். இசைக்கும் எனக்குமான தூரத்தைக் குறைத்தவர் இளையராஜா என்ற ஆசிரியர் தான்.

நண்பர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருக்கும் பொழுது அவர் சொன்னது “இளையரஜா இல்லை எனில் 80 களில் ஒரு இளையத் தலைமுறையே பைத்தியமாகி இருக்கும் அல்லது தீவிரவாதியாகி இருக்கும்”. 80 களின் தலைமுறையென்ன, இன்றும் கூட, பலரின் சோகங்களுக்கு ஆறுதல் சொல்லப்படுவது இளையராஜாவின் இசையினால் தான். கொண்டாட்ட மனோபாவத்தில் இருக்கும்பொழுது நவீன புதுமையான இசை வடிவங்கள் வேண்டுமானால் ரசிக்கப்படலாம். ஆனால் ஆறுதலாக உடைந்திருக்கும் மனதை வருடிக் கொடுக்க பெரும்பான்மையான தமிழ் பேசும் மக்கள் நாடுவது இளையராஜாவின் இசையைத்தான். மகிழ்ச்சியை யாருடன் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம், வருத்தங்கள் மனதுக்கு நெருக்கமானவர்களுடன் மட்டுமே பகிரப்படும், இளையராஜாவின் இசை அத்தகையது. இரவு பத்து மணிக்கு மேல் இளையராஜாவுடன் தூங்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

அம்மா பிடிக்குமா அல்லது அப்பா பிடிக்குமா என இது அல்லது அது என அரசியலைக் குழந்தைப் பருவத்தில் இருந்தேத் தொடங்கிவிடும் நாம், இளையராஜாவையும் விட்டு வைக்கவில்லை. இளையராஜாவைப் பிடித்தால் ஏ.ஆர்.ரகுமானையோ அல்லது வேறு யாரையுமேப் பிடிக்கக் கூடாது என்பதில்லை. மேலே சொன்னபடி ஏ.ஆர்.ரகுமானையும் ரசிக்க தேவையான அடிப்படைப் பாடங்களைச் சொல்லிக்கொடுத்தவர் பேராசிரியர் கிராமத்து ராசா. ஒரு வேளை இசை கடவுள் என்றால், இளையராஜா கடவுளின் அவதாரம் அல்லது கடவுளின் தூதர். ஒன்றிற்கு மேற்பட்ட அவதாரங்களையோ கடவுளின் தூதர்களையோ மனிதன் வேண்டாம் என்று சொல்லுவதில்லை. இவர் ராமன் என்றால் அவர் கிருஷ்ணன், இவர் நபி என்றால் அவர் யேசு...

தமிழ் அல்லாத சூழல், இந்தியா என்றாலே பாலிவுட் என்று மட்டுமே அறிந்திருக்கும் சராசரியான ஐரோப்பியச் சூழல், எனது கைபேசி ஒலிக்கிறது. குறைந்தது 5 பேராவது, திரும்பிப்பார்க்கிறார்கள், மூன்று பேராவது இது என்ன இசை, யார் இசைத்தது, எனக் கேட்கின்றார்கள்... ஒருவராவது இதனின் எம்பி3 வடிவத்தை எனக்கு அனுப்புகின்றாய எனக் கேட்பதுண்டு.... ஸ்வீடன், போலாந்து, பின்லாந்து தற்பொழுது இத்தாலி எனத் தொடருகின்றது... அது, பல்லவி அனுப்ல்லவி என்ற கன்னடப் படத்தில் இளையராஜாவால் போடப்பட்ட சின்ன இசைத்துணுக்கு...

சிலமாதங்களுக்கு முன்னர் ஓர் இந்திப் பேசும் மாணவன்,”வடக்குத் தெற்கு இடைவெளியால் நாங்கள் இழந்தது இளையராஜாவின் இசையை” சீனிகம் , பா படப்பாடல்களைக் கேட்டப்பின்னர் சொன்னான்.

“அடேய் நண்பா, இந்தப் பாடல்களை எல்லாம் நாங்கள் 25 வருடங்களுக்கு முன்னரேக் கேட்டுவிட்டோம்” என்றபடி எனது மடிக்கணினியில் வைத்திருந்த அத்தனை இளையராஜாவின் குழந்தைகளையும் கொடுத்தேன்.

சில வகை இசை, வோட்கா என்றால், இளையராஜாவின் இசை வைன், வைனைப்போல எத்தனைக் காலம் கடக்கிறதோ, அத்தனை மகத்துவமும் இனிமையும் ராஜாவின் இசைக்கு. நீருற்றுகள் கோடையில் வறண்டதுப்போலக் காணப்படலாம், அதற்காக அவை கானல் நீராகிவிடாது. இன்று ஆடு தாண்டும் அளவில் ஓடினாலும், இளையராஜாவின் இசையாறு , இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது, இன்னமும் ஓடும். எனது உற்சாகத்தை மீட்டு எடுக்க ஒவ்வொரு படித்துறையிலும் தினமும் கொஞ்சம் நீரை எடுத்துப் பருகுகின்றேன்.

கடவுள் என்று ஒன்று இருந்தால் நான் கேட்கும் ஒரே வரம், அனுதினமும் குறையா உற்சாகம். அந்த உற்சாகத்தை தவமின்றிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது இளையராஜாவின் இசை. இந்த நூற்றாண்டில் சிலரைக் கடவுளாக்க எனக்கு அதிகாரம் கிடைத்தால், காந்தி, பெரியார், பிரபாகரனுடன் இளையராஜாவின் இசையையும் வைப்பேன். நிச்சயம் தமிழும் தமிழ்ச் சமுதாயமும் இளையராஜாவின் இசைக்குக் கடமைப்பட்டிருக்கின்றது. எனது ஒவ்வொரு வெற்றியிலும் இளையராஜாவின் இசையின் பங்கும் இருக்கின்றது என்ற வகையில் இந்தப் பதிவு இளையராஜாவின் இசைப் பயணத்திற்கு சமர்ப்பிக்கபடுகிறது.