Showing posts with label பேய்கள். Show all posts
Showing posts with label பேய்கள். Show all posts

Thursday, February 06, 2014

மேரி - சிறுகதை

சந்தர்லேந்தில் இருந்து 20 மைல்கள் தொலைவில் இருக்கும் இந்த பள்ளிக்கு, அம்மு, நிரந்தர தலைமை சமையல்காரராக வந்ததும் வராததுமாய்   தனது உதவியாளர்கள் லின், ஜாக்குலின் , ஜின், கரோலின் ஆகியோர்களிடம் கேட்ட கேள்வி " மேரி எப்படி இருக்கின்றாள் " என்பதுதான்.

ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்த  அவர்களை அம்மு அப்படி கேட்க ஒரு பெரிய கதை இருக்கின்றது. அந்தக் கதையை நான் உங்களுக்கு சொல்கின்றேன்.  ஆறு மாதங்களுக்கு முன்னர் , இதே பள்ளிக்கு தற்காலிக தலைமை சமையல் ஆளாக அம்மு வந்திருந்த பொழுது நடந்த கதை.   
---
அம்மு, இந்தியத் தமிழ்ப்பெண்,  வடக்கு இங்கிலாந்தில் , அதுவும் வயதில் 50 களைக் கடந்த  உதவி சமையல் ஆட்களுக்கு  வெள்ளையரல்லாத ஒருத்தி அதிகாரம் செலுத்தும் இடத்திற்கு வருவது அறவே பிடிக்கவில்லை.  ஆங்கிலேயர்களுக்கு அன்றும் இன்றும் மற்றவர்கள் ஏவலாட்களாக இருந்தால் பிடிக்கும்.  மேலாளர்களாக , மற்றவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது.   இருந்தாலும் , இரண்டு வாரங்கள் தானே என வெறுப்பைக் காட்டிக்கொள்ளாமல் அம்முவுடன் நட்பு பாராட்டினர். 

" இனிமேல் நாங்கள் நான்கு பேரும் உன் தோழிகள், இன்னொரு தோழியும்  கூட இருக்கின்றாள் "  

" யார் அந்த தோழி , வேலைக்கு விடுப்பா ?"  என்ற அம்முவின் கேள்விக்கு   நான்கு ஆங்கிலேய உதவியாளர்களும் சிரித்தனர். 

" மேரி ,  இந்தப்பள்ளியில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வேலை பார்த்தவள் , ஒரு நாள் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுதே மாரடைப்பினால் இறந்து போனாள்"  

"பயப்படாதே , புதிதாய் வந்து இருப்பவர்களை மட்டும் மிரட்டும், பழைய ஆட்களை ஒன்றும் செய்யாது " என லின் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க 

அம்முவின் கண்களில் கலவரம் தெரிந்தது . இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல்  

"இந்தியாவில் இருந்த பொழுது , உங்களின் ஆங்கிலேயப் பேய்களை விட பயங்கரமான பேய்களைப் பார்த்து இருக்கின்றேன் , சரி வேலையை ஆரம்பிப்போம் "   என பயத்தையும் வேலையாட்களையும் விரட்டினாள். 

ஒரு நாள் கழிப்பறை உட்பக்கமாக தாழிடப்பட்டு இருக்கிறது. மற்றொரு நாள் யாரோ ஓடுவதைப்போல இருக்கின்றது என லின் , ஜாக்குலின் அம்முவிடம் வந்து சொன்னார்கள். 
  
அடுத்த வாரம் ,

 "லின் ... மேசையில் இருந்த இனிப்புகளைக் காணவில்லை  இனிப்பின் காகிதங்கள், குப்பைத் தொட்டியில் கிடக்கின்றன , வெள்ளியன்று நான் தான் சமையல் அறையைப் பூட்டினேன் , இன்று திங்கள் , நான் தான் முதல் ஆளாய் திறந்தேன் .. வார இறுதியில் வேறு யாரவது இங்கு வருவார்களா  "  

"அனேகமாக , மேரி எடுத்து சாப்பிட்டு இருக்கலாம் "  

" நகைச்சுவைக்கான நேரம் இதுவல்ல, லின்,  பொருட்கள் ஏதேனும் காணமல் போய் இருக்கின்றதா எனப்பாருங்கள் " 

கெகெபிக்கெவென நான்கு உதவியாளர்களும் சிரித்ததைப் பார்த்த அம்மு அவர்களைப் பார்த்து முறைத்தபடி 

" தங்களை வைத்து கிண்டல் செய்யப்பட்டால், இந்தியப் பேய்களுக்கு கோவம் வரும், தொடர்ந்து வந்து துரத்தும்...  ஆங்கிலப் பேய்களுக்கு எப்படி எனத் தெரியவில்லை "  

வெட்டியாய் இருத்தல்தான் கிலியைத்தரும். சமையல் கால் பங்கு என்றால், அது சார்ந்த சுகாதாரம்,  சரிவிகித உணவு கண்காணிப்பு , பரிமாறுதல்  வேலைகள்  ஆகியன முக்கால் பங்கு. ஆரம்ப பள்ளி குழந்தைகளுக்கான உணவு என்பதால் இந்தக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்க வேண்டும். இந்தக்கவனக்குவிப்பான வேலை மும்முரத்தில் பேயாவது பிசாசாவது என அடிக்கடி சொல்லிக்கொண்டு அம்மு பணிகளில் மூழ்கி போய்விட்டாள். தற்காலிகப் பொறுப்பின் கடைசி நாளன்று ஒரு புகார் ஒன்று வந்தது.  தலைமை ஆசிரியர் , அம்முவை அழைத்து , ஒரு குழந்தை , உணவு சூடாகப் பரிமாறப்படுவதில்லை என , தனது பெற்றோரை இன்று கூட்டி வருகின்றது என சொன்னார். 

உதவியாளர்கள் இந்த பிரச்சினையைப்பற்றி கவலையேப்படாமல்  அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். அம்மு, தான் இந்தப்பள்ளிக்கு வந்த நாள் முதல் , உணவு விகிதங்கள் , வெப்ப அளவீடுகள் என அனைத்தையும் அலுவலக  குறிப்பு ஏடுகளில் ஆவணப்படுத்தி வைத்து இருந்தமையால் உதவியாளர்களின் அக்கறை இன்மையை பற்றிக் கவலைப்பட்டதாக தெரியவில்லை.  குழந்தைகளுக்கு உணவுப் பரிமாறப்படும் முன் , சூட்டை அளவு எடுத்துவிடலாம் என்றால் , வெப்ப மணியைக் காணவில்லை.  அதைத் தேடி எடுத்து சூட்டை சோதித்தால் கருவி வேலை செய்யவில்லை. நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. அம்மு படபடப்பானாள்.  புதிதாக வாங்கிய கருவி. பழுதாக வாய்ப்பில்லை என ஆராய்ந்ததில்  பேட்டரியைக் காணவில்லை.  பேட்டரி கழண்டு கீழே விழும் அளவிற்கு இலகுவான மூடி அல்ல.  

" இறுக்கமாக மூடி இருக்கின்ற வெப்ப மானியில் எப்படி பேட்டரி காணாமல் போகும்  "  

'ஒரு வேளை மேரி எடுத்து இருப்பாளோ "  என்று சொன்ன லின்னைப் பார்த்து ஒரு பேயைப்போல முறைத்தாள் அம்மு. 

அனைவரும் தேடினர். பாத்திரங்கள் வைக்கும் மரப்பலகைக்கு அடியில் சுவற்றை ஒட்டியபடி கிடந்த அந்த சிறிய  பேட்டரியை அம்மு எடுத்தாள், வெப்பமானியை சரி செய்தாள், சூட்டை குறித்துக் கொண்டாள். புகார் செய்த குழந்தையின் பெற்றோர் உணவை சரிப்பார்த்தனர். அவர்களுக்கு திருப்தி.  தலைமை ஆசிரியருக்கும் திருப்தி.  கடைசி நாள் அதுவுமாக பிரச்சினை ஏற்பட்டு நல்லவிதத்தில் சரியானது அம்முவிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.  எல்லோரிடமும் இருந்து விடைபெற்றுக் கொள்கையில் , அவளின் உதவியாளர்கள் பேயறைந்ததைப் போல இருந்தனர். 

நான்கு உதவியாளர்களும் , கறி பெண்   என அம்முவை திட்டிக்கொண்டே கூடினர் . கறி என்பது  இந்தியர்களுக்கான பட்டப்பெயர்.  

" ஜாக்குலின்  தானே பேட்டரியைக் கழட்டினாள்" 

" ஆமாம் லின் , இதோ பார், என்னிடம் தான் இருக்கின்றது, அப்புறம் எப்படி அந்த கறி பெண்ணிற்கு பேட்டரி கிடைத்தது " 

'ஒரு வேளை மேரி "  என்றாள் லின் . 

---

இதுதான் ஆறு மாதங்களுக்கு முன்னர் நடந்த கதை. இருங்கள் ... இருங்கள் , கதை முடியவில்லை.  உண்மையில் வெப்பமானியை வாங்கும் பொழுது ஒன்றிற்கு இரண்டாய் பேட்டரிகளை அம்மு வாங்கி வைத்து இருந்தாள்.  பேட்டரியைக் காணவில்லை என்றவுடன்,  இவர்கள் தான் எடுத்து இருப்பார்கள் என அவளுக்குப் புரிந்தது.  படபடப்பானதைப் போல காட்டிக்கொண்டு , பேட்டரியை அடியில் உருட்டி விட்டு பயம் காட்டியவர்களுக்கே பயம் காட்டிப் போனவள் தான் திரும்ப நிரந்தர தலைமையாக வந்து இருக்கின்றாள்.   சரி இந்தக் கதை எனக்கு எப்படித் தெரியும்  ....தெரியும்   தெரியும்   ....இதை எல்லாம் பார்த்தவள் நான்...நான் தான் மேரி. 

Saturday, September 21, 2013

பேயோட்டி - சிறுகதை

முதலில் சாமியார் ஆகவேண்டும் என்றுதான் நினைத்தேன்.  இத்தாலியில் சாமியார் வேடங்களுக்கு  வங்காள தேசத்தவர்களும் ஹரே கிருஷ்ணா  குழுமமும் பிரபலம் ஆகிவிட்டதால் , சொகுசா இருக்கிற ஒரு வேலை என்ன என தேடிய பொழுது சிக்கிய தொழில் தான் 'பேயோட்டி' ... ஆங்கிலத்தில் Ghost Buster , Exorcist எனச் சொல்லுவார்கள். ஸ்டைலாக பில்டிங் காண்டிராக்டர் என்பது போல  நான் எனக்கு வைத்துக் கொண்ட தொழில் பெயர்  Para Normal Scientist.  பேய் வீடுகளில் இருக்கும் பேய்களை ஒட்டுவதற்குத்தான் என் முதல் முன்னுரிமை. மனிதர்களுக்குப் பேய் பிடித்ததாக சொன்னால் நான் எதுவும் செய்ய மாட்டேன், நல்ல மன நல மருத்துவரைப் பரிந்துரைப்பேன்.

என்னுடைய பாட்டி ஒரு முறை தனக்கு யாரோ செய்வினை வைத்து விட்டதாகவும் அந்த செய்வினை பேயாக தனது  அறையில் சுத்திக் கொண்டு இருப்பதாகவும் தினமும் பகலில் புலம்புவார். இரவில் அலறுவார்.  நீடாமங்கலம் அருகில் இருக்கும் கோட்டையூர் கிராம மந்திரவாதி வந்தால்  தான் இந்தப் பேய்  வீட்டை விட்டுப் போகும்  என தினம் தினம் கதறல்.  என் அப்பா அவரின் அலுவலகத்தில் இருக்கும் பிள்ளையார் கோவில் ஐயர் ஒருவரை கோட்டையூர் மந்திரவாதியின் அசிஸ்டெண்ட் என பாட்டியிடம் சொல்லி,  நடிக்கக் கூட்டிக் கொண்டு வந்தார்

"உன் அப்பாவிற்கு அறிவே இல்லை, மனுஷனை ஒட்டுறவங்களுக்கு, பேயை எப்படி ஓட்டத் தெரியும்  ... பூணுல் போட்ட ஐயர் கோட்டையூர்  மந்திரவாதியாம்"   என என் அம்மாவிற்கு ஒரே சிரிப்பு.

"ஆம் இந்த அறையில் பேய் இருக்கின்றது"  என சொல்லியபடி பாட்டி காட்டிய திசையில் கங்கை நீர் என அவர் கொண்டு வந்து இருந்த காஸ்ட்லி மினரல் வாட்டரைத் தெளித்தார்.  பாட்டியும் தெளிந்தார்

"அவநம்பிக்கைகளை நிராகரிக்காமல் , அவர்கள் போக்கிலேயேப் போய் அதை தெளிய வைக்க வேண்டும், அதற்கு நாமும் அந்த அவ நம்பிக்கையை நம்புவதாக சொல்ல வேண்டும். "  என ஐயர் அப்பாவிடம் சில நூறு ரூபாய்த் தாள்களை வாங்கிக் கொண்டே சொன்னதைக் கேட்டேன்.இன்றைய பேயோட்டும் தொழிலில் ஐயர் சொன்னதே எனது  தாரக மந்திரம்.

கடவுளைக் காண்பிப்பதை விட பேயோட்டுவது மிகவும் எளிது என நினைத்ததற்கு மாறாக .  பேய் வீட்டில் வசிப்பவர்கள்  , வெறும் மதப் புத்தகங்களையோ மதச் சடங்குகளையோ நம்புவதில்லை.  ஹைடெக் கருவிகள் , புதுயுக மடிக் கணினி , காமா பீட்டா தீட்டா கதிர்களைப் பற்றிய புத்தகங்கள் இப்படி உடன் இருந்தால் தான் மரியாதையே கொடுக்கின்றனர். அதனால் வியாபர நுணுக்கமாக பேய்களைக் கண்டுபிடிக்க உதவும் ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன்கள் கூட ஆண்டிராய்ட்  ஆப்பிள் கைபேசிகளுக்கும்  தயாரித்து வெளியிட்டு இருக்கின்றேன்.

பெரும்பாலான பயந்தாங்குளிகள் , இந்த அப்ளிகேஷன்களின் டெமோ வேர்சனைப் பார்த்துவிட்டுத்தான் வருகின்றார்கள்.   சாமியார்களுக்கு எப்படி கடவுள் இல்லை என்பது தெரியுமோ அது போல பேயோட்டிகளுக்கும் பேய் இல்லை என்பது தெரியும்.  சாமியார்கள் காணும் கடவுளை சமயங்களில் பக்தர்களும் தங்களுக்குத்  தெரிகின்றது  என சொல்கிறார்களோ அது போல , பேய் வீட்டில் இருப்பவர்கள்  பார்க்கும் பேய்களை நானும் பார்த்ததாக சொல்ல வேண்டும்.  அப்படி சொல்லும் பொழுதே பாதிப் பேய் ஓடிவிடும்.

 செய்வது ஏமாற்று வேலை என்றாலும் கடவுளையா ஏமாற்றுகின்றோம் , இல்லாத பேயைத் தானே என்று, குற்ற உணர்ச்சி  எதுவும் இல்லை.  இப்படியாக நாளொரு பேயும் பொழுதொரு வீடும் என நன்றாக கல்லா கட்டிக் கொண்டு இருக்கையில் , சில நாட்களாக பக்கத்து வீட்டில் இருந்து அடிக்கடி அலறல் கேட்கின்றது . நீண்ட நாட்களாகப் பூட்டிக் கடந்த வீடு, சென்ற வாரம் தான் ஒரு குடும்பம் குடி வந்து இருக்கின்றது.

மறு நாள் அந்த வீட்டின் குடும்பத் தலைவன் என் வீட்டுக் கதவைத் தட்டினான்.

"நீங்கள் வீடுகளில் இருந்து பேய்களை விரட்டுபவர் எனத் தெரிந்து கொண்டேன். என்  மகளுக்கு ஒரு பிரச்சினை இருக்கின்றது.  இந்த வீட்டில் பேய் இருக்கின்றது என அடிக்கடி கத்திக் கொண்டு இருக்கின்றாள். இந்த வீட்டில் மட்டுமல்ல , இதற்கு முன்னர் குடி இருந்த வீடுகளிலும் அப்படித் தான் சொல்லி சொல்லி பயந்துப் போய்க் கிடக்கின்றாள், நீங்கள் வந்து கொஞ்சம் உதவ வேண்டும்"

"தொடர்ந்து வரும் பேய் " சொல்லிப் பார்க்கையிலேயே எனக்கு திக் என்று இருந்தது. ஒருவேளை உண்மையாக இருக்குமோ... சேச்சே இருக்காது. நானே அந்த வீட்டில் ஒரு வருடம் குடி இருந்து இருக்கின்றேன்.  வழமையைப் போல   என்னுடைய உபகரணங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு அவர் வீட்டிற்கு மறு நாள் சென்றேன். அவர்,  அவரின் மனைவி ,  பதின்ம வயது பெண். .

வழக்கமான என்னுடைய டெக்னாலஜி போங்காட்டத்திற்கு பின்னர், அந்தப் பெண்ணுடன் தனியேப் பேச வேண்டும் எனச் சொன்னேன்.  அதற்கு காரணம் கழிவறையில் கிடந்த போதை ஊசி சிரிஞ்சைகளைப் பார்த்தது தான்


"இந்த வீட்டில் மட்டுமல்ல  இதற்கு முன்னர் நீங்கள் இருந்த  எந்த வீட்டிலும் நீ பேயைப் பார்த்ததாக சொன்னது எல்லாம் பொய். ஏன் இப்படி செய்கிறாய்

"அப்படி சொன்னால் தான்,  உன்னிடம் நல்லவன் போல பேசும் , என் அம்மாவின் கணவன் என்னைத் தொந்தரவு செய்ய என் அறைக்குள் வரமாட்டான் "  என அழுதாள்.

எனக்குப் புரிந்து போனது.  ஒளிக்கற்றைகளால் உருவங்களைக் கொண்டு வரும் ஒரு சிறிய கருவியை அவளிடம் கொடுத்து , "இனிமேல் நீ பேயைப் பார்க்க வேண்டியதில்லை, உன் அம்மாவின் கணவனைப் பார்க்க வை, இந்த பிடிப்பை அமுக்கினால், ஓர் உருவம் வரும், நீ தூங்கும் முன்னர் இயக்கிவிட்டுத் தூங்கி விடு , எவனுமே தவறான நோக்கத்தில் உன்னை நெருங்க முடியாது"

மகளிடம் பேசி முடித்தவுடன் குடும்பத் தலைவனிடம் வந்து "பேய் உங்கள் மகளைத் துரத்தவில்லை , நீங்கள் ஏதோ தவறு செய்து இருக்கின்றீர்கள் உங்களைத் தான் வீடு வீடாக துரத்துகின்றது , ஜாக்கிரதையாக இருங்கள்"  அந்த ஆளுக்குப் புரிந்ததா எனத் தெரியவில்லை.

இரண்டு வாரங்களுக்குப் பின்னர், அந்த பதின்ம பெண்ணையும் அவளின் அம்மாவையும் கடைத் தெருவில் பார்த்தேன். குடும்பத் தலைவனைப் பற்றி விசாரித்தேன். அவன் அவர்களை விட்டுப் பிரிந்து சென்று விட்டதாக அந்த அம்மா கவலையுடன் சொல்ல, அந்த பதின்மப் பெண் உதட்டின் ஓரமாகப் புன்னகைத்தாள்.

வாழ்க்கையில் முதன் முறையாக ஒரு பேயை விரட்டியடித்த மன மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினேன்.

Thursday, July 25, 2013

பேய் பயம் - சிறுகதை

பேய்கள் பயமுறுத்தாது. பேய்கள் யாரையும் கொல்லாது. நூற்றுக்கு நூறு பயம் தான் நம்மைக் கொல்லும், பேய்கள் அல்ல. இந்த உண்மையைப் புரிந்து கொண்டதால்தான்  பேய்களுக்கு நான் பயப்படுவதில்லை. மாக்கியவல்லி சொல்லியபடி எது நம்மைக் கொல்லாதோ அது நம்மை பலப் படுத்தும்.   கடமையின் காரணமாக காட்டு வழிப் போகும் பொழுது எல்லாம் என்னுடைய பெரிய பலம், மிகப் பெரிய துணை பேய்களே .  பல நேரங்களில் அவைகளே வழிகாட்டிகள். 

எதன் மேல் பயம் அதிகமாக இருக்கின்றதோ, அதை சந்தித்து விட்டால் பயம் அகன்று அபிமானம் வந்துவிடும். எனது சிறுவயது பேய் பயம் அப்படித்தான் போனது.  எனக்கு பத்து  வயது இருக்கும், நள்ளிரவில் அப்பா அம்மாவுடன் ,  பைவ் ஸ்டார் சாக்லெட் வாங்கித் தராத  கோபத்தில் கொட்ட கொட்ட விழித்தபடி ஓட்டுனர் இருக்கைக்கு பின் இருக்கையில் அமர்ந்து ஒரு நள்ளிரவில்  மன்னார்குடியில் இருந்து திருச்சி பயணப்பட்டுக் கொண்டு இருக்கையில்  , ஓட்டுநரிடம் இன்றைக்கு 15 பேர்  என்ற  நடத்துனர் உறங்கிப் போனார் திருச்சி போகும் வரை எங்கும் நிற்க வில்லை. திருச்சி நெருங்குகையில் தலைகளை எண்ணினேன். மொத்தம் 35. எங்களுக்குப் பின்னர் அவைகளை கண்டக்டர்  சீக்கிரம் இறங்கும் படி அதட்டினார் .  போகும் பொழுது அவைகளில் ஒன்று என் கையில் ஃபைவ் ஸ்டார் சாக்லெட் ஒன்றைத் திணித்து விட்டுப் போனது. 

பேய்கள் என் கண்களுக்கு மட்டும் தெரியும் படி பெரிய சக்தி எல்லாம் எனக்கு கிடையாது. எல்லோருக்குமே தெரியும்.  அந்தக் கண்டக்டருக்கு மனிதர்களாகவே தெரிந்தது போல ,உங்களுக்கும் கூட தெரியும்.  கூட்டத்தோடு கூட்டமாய் ஜனங்களுக்கு இடையிலேதான் இருக்கின்றன. என்ன அவை பேய்கள் எனப் புரிந்து கொள்ள கொஞ்சம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். பேய்களின் மீதான எனது பழைய பயமும் இன்றைய அபிமானமும் அவற்றை மனிதர்களிடம் இருந்து பிரித்து இனங்கண்டு கொள்ள உதவுகின்றன. 

மலை மேல் ஒரு பெட்டி கடை கூட இல்லாத ஓர் ஊரில் எனக்கு வேலை கொடுத்து இருக்கின்றார்கள். ஊர் என்றாலும் இப்பொழுது இது ஊர் கிடையாது. எப்பொழுதோ நடந்த ஒரு போரின் இறுதியில் இந்த காட்டுப் பகுதி கிராமம் சூறையாடப்பட்டு ஒட்டு மொத்த மக்களும் கொல்லப்பட்டுவிட்டதால், இங்கு அதன் பின்னர் யாரும் வசிக்கவில்லை. இறந்தவர்கள் பேய்களாக உலவுவதாக ஒரு வதந்தி. மற்றவர்களுக்கு வதந்தி என்றாலும் எனக்கு அது  உண்மை எனப் புரியும். 

என்னுடைய பணி சுலபமானது தான், , அந்த கிராமத்து  பாழடைந்த மலை வீட்டில் இருந்து கொண்டபடி  ஒரு கிலோ மீட்டர் தொலைவில்  இருக்கும் மலையடிவார  வேலியிட்ட மிகப்பெரும் மைதானத்தை கண்கானிக்க வேண்டும். மைதானத்தின் கீழ் ரகசிய அறைகளில் ஏதோ ஆராய்ச்சி நடைபெறுவதாக எனக்கு சம்பளம் கொடுக்கும் ஏஜென்சிகளுக்கு ஓர் ஐயம் , அதனால் தான் இங்கு நான் அனுப்பப்பட்டேன்.  

மலை வீட்டை நானே சீர்ப் படுத்தி எனக்கான ஓர் அறையை கதவுகளுடன்  அமைத்துக் கொண்டேன். கொடுக்கப்படும் மில்லியன் கணக்கான சம்பளத்திற்கு இவையும் செய்ய வேண்டும். வந்து ஒரு வாரம் ஆகின்றது. ஒரு நாள் , மைதானத்தில் மனிதர்கள் போல நடமாடுவதைப் போல தோன்றியதால் என அதிநவீன கேமராவினால் படம் எடுத்துப் பார்த்தால், எதுவுமே பதிவாகவில்லை. ஆம், பேய்கள் கண்களுக்கு மட்டும் தான் தெரியும் கருவிகளில் பதிவாகாது.  காட்டுப் பாதையில் சந்தித்த ஒருவனை இல்லை ஒன்றை படம் எடுக்க முயற்சித்தேன். முறைத்தது.  எடுக்காமல் விட்டுவிட்டேன், எடுத்து இருந்தாலும் தெரியப் போவதில்லை,. அதன் பின்னர் சிலப் பல பேய்களைப் பார்த்தேன். படம் எடுக்கவில்லை. அவைகளும் சிரித்தபடியே நகன்று போய்விட்டன.  சிலவை வீட்டிற்குள்ளும் அதுவாக வந்து அதுவாகப் போயின. 

மனித நடமாட்டம் இல்லை என மட்டும் தலைமைக்கு செய்தி அனுப்பினேன். பேய்களைப் பார்த்தேன் என சொல்ல முடியாது அல்லவா. இன்னும் ஒரு வாரம் இருந்துப் பார்க்க சொன்னார்கள். 

மறுநாள் காலையில்  ஏதோ ஒன்று கழுத்தை நெறிப்பதைப் போல உணர்வு. பேயாக இருக்க முடியாதே ... பேய்கள் கொல்லாதே !!  இடுங்கிய கண்களில் வழியேப் பார்த்தேன். என் கழுத்தை நெறிப்பதன்   கண்களில் குரூரம் தெறித்தது. என் நம்பிக்கை வீண் கிடையாது. அது பேய்  அல்ல .. அந்த முகத்தைப் பார்த்து இருக்கின்றேனே ... புகைப்படம் எடுக்க முயற்சிக்கையில் முறைத்ததே ... இல்லை இல்லை முறைத்தானே  .... நிஜமான மனிதன் !! 
"உளவாளி நாயே ".... எனத் திட்டியபடி அவனது பிடி இறுகியது . 

Wednesday, April 17, 2013

ஆன்மா - சிறுகதை

அணுஅணுவாய்த் துடித்துக் கொண்டிருக்கும் உயிரைப் பார்த்துக் கொண்டிருப்பதைவிட கருணையுடன் கொலை செய்துவிடுவதே சரி என்ற நல்ல எண்ணத்துடன், டாக்டர் ரிக்கார்டோ கொடுத்த விஷ ஊசியைப் போட்டு எனது நாய் சீசரைக் கொன்று , தோட்டத்தில் புதைத்தேன்.

கிட்டத்தட்ட பத்து வருடங்கள் என்னுடன் வளர்ந்த நாய். சீசர் என்னிடம் இருந்து அன்பையும் , சீசரிடமிருந்து நான் துணிவையும் ஒருவருக்கொருவர் பெற்றுக்கொண்டோம்.  ஒரு ரோஜாப்பூச்செடியை புதைத்த இடத்தில் நட்டுவிட்டு , டாக்டர் ரிக்கார்டோவைப் பார்க்க கிளம்பினேன். தூரத்தில் தெரியும் அந்த மலைப்பிரதேசத்தில்தான் வசிக்கின்றார். ஸ்விட்சர்லாந்தில் டாக்டராக இருந்தவர், அங்கு சந்தித்த இத்தாலியப் பெண்ணைக் காதலித்ததால் அவளைப் பின் தொடர்ந்து, ரோமிற்கு வந்து அவளையேத் திருமணம் செய்து கொண்டு இங்கு நிரந்தரமாகத் தங்கிவிட்டவர்.

ஆனால் அந்த மனைவியை அவரின் வீட்டில் பார்த்ததே இல்லை. நான் போகும் சிலசமயங்களில் முப்பது வயது மதிக்கத் தக்கப்பெண் அடுப்படியிலோ தாழ்வாரத்திலோ வேலைசெய்து கொண்டிருப்பதைப் பார்த்து இருக்கின்றேன். அறுபது வயது ரிக்கார்டோவிற்கு  முப்பது வயது பெண் தோழி என நானே நினைத்துக் கொண்டேன்.

 வேறு சில சமயங்களில் ஸ்விஸ் ஜெர்மன் பேசும் சில நடுத்தர வயதினர் எண்பதுகளில் இருக்கும் நடை உடை பாவனையுடன் ரிக்கார்டோவுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். நான் வந்தவுடன் ரிக்கார்டோ அவர்களை தோட்டத்திற்கோ அல்லது வெளியேவோ அனுப்பிவிடுவார்.  சில நாட்களில் யாருமே வீட்டில் இருக்க மாட்டார்கள்.

ரிக்கார்டோவின் வீட்டிற்கு போகும்பொழுதெல்லாம், அக்கம்பக்கத்தினர் , ஏதோ பஞ்சாயத்தில் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த வீட்டிற்கு செல்லுபவரைப் பார்ப்பதைப்போல விசித்திரமாகப் பார்ப்பார்கள்.   ஒருவேளை டாக்டர் சமூகவிரோத செயல்கள்  ஏதேனும் செய்கின்றாரா என ஒரு சந்தேகம் கூட எனக்குண்டு.

“டாக்டர், இவ்வளவு நட்பான நீங்கள், ஏன் அண்டை அயலார்களுடன் பழகுவதில்லை?”

“மனிதர்களைக் காட்டிலும் ஆன்மாக்கள், உனக்குப் புரியும்படி சொல்லவேண்டுமானால் பேய்களையே எனக்குப் பிடித்திருக்கின்றது” அவருடன் ஆன முன்றாவதோ நான்காவதோ சந்திப்பில் இதைச் சொன்னார்.

”என்னைக் கவனித்துக் கொள்வதில் இருந்து, இந்த வீடு, தோட்டம் என அனைத்தையும் பரிமாரிப்பவர்கள் அனைவரும் பேய்களே... இதோ நீ குடித்துக் கொண்டிருக்கும் சிவப்பு வைனைக் கூட தயார் செய்ததும் ஓர் ஆன்மாவே”

அதன் பின்னர் அவரின் வீட்டில் எதுவும் சாப்பிடுவதோ குடிப்பதோ கூட கிடையாது. மருத்துவம்,  தத்துவம், அரசியல், ஆன்மிகம் என அனைத்தையும் கரைத்துக் குடித்த மக்களின் தத்துவார்த்தப் பேச்சு, சில சமயங்களில் திகிலூட்டுவதாகக் கூட இருக்கும். விளங்கமுடியாத தத்துவங்களே திகிலைக் கொடுக்கின்றன.

மெத்தப் படித்ததால், மூளைக் குழம்பிப் போய் இல்லாத விசயங்களை தன்னுடன் இருப்பதாக நினைத்துக் கொண்டு இருக்கலாம்.  ஒரு வேளை என்னைப் பயமுறுத்துவதற்காக கதை கட்டுகின்றார் அல்லது நிஜமாகவே அவர் பேய்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கலாம்.  எதுவாக இருந்தாலும், அவர் அவர் வீட்டின் வெளிச்சம் , ஒழுங்கமைப்பு, வாசனை எதுவுமே பேய்வீட்டிற்கான அடையாளங்களையோ அல்லது பைத்தியக்கார பிரசன்னத்தையோ தராது.

ரோமில் இருந்து அறுபது கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் இந்த ரிக்கார்டோவின் மலைக்குக்கிராமத்திற்கு வந்து சேர்ந்தேன்.

 அன்றைய ஸ்விட்சர்லாந்து ஜெர்மனிய தினசரிகள் அவரின் மேசையின் மேல் தென்பட்டன.  என் பார்வையின் கேள்வியைப் புரிந்து கொண்டவற்போல

“இவை எல்லாம் என்னால் விடுதலை செய்யப்பட்டவர்கள் கொண்டு வந்து தருவது... ”  என்றார்.

”ஸ்விட்சர்லாந்தில் எல்லாம் சட்டப்பிரச்சினைகள் கிடையாது, விடுதலை வேண்டும் என விரும்பியவர்களை எல்லாம் எளிதாக விடுவித்து விடுவேன், அவர்கள் காலம் கடந்தும் விசுவாசமாக இருப்பார்கள்”

ஏற்கனவே குடித்து இருப்பார் போல, தொடர்ந்து  போதையில் பேசினார்.

”உனக்குத் தெரியுமா, ஒரு நாள், என் மனைவிக்கு விடுதலை கொடுத்தபொழுது, இந்தத் தெரு மக்கள் என் மனைவியை நான் கொலை செய்துவிட்டதாக காவல்துறையில் புகார் அளித்துவிட்டனர்”

நான் முகத்தில் காட்டிய அதிர்ச்சியைப் பார்த்தபடி,

“கொஞ்ச நாள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தேன், பின்னர் என் மனைவியே நீதிமன்றம் முன் வந்து , தனது விருப்பத்தின் பேரில்தான் விலகிப்போனேன் என சொன்ன பிறகுதான் விடுதலை செய்யப்பட்டேன்”

“இது எப்பொழுது நடந்தது டாக்டர், உங்கள் மனைவி இப்பொழுது எங்கிருக்கிறார்”

“என்னுடன் தான் இருக்கிறாள், நீ கூட பார்த்திருப்பாய்.... அவள் திரும்ப வந்த பிறகே விடுதலைப் பெற்றவர்களின் விசுவாசத்தை உணர ஆரம்பித்தேன்...  இன்றுடன் முப்பதுவருடங்கள் ஆகின்றன , அது சரி சீசருக்கு விடுதலைக் கொடுத்துவிட்டாயா ”

விடுதலை என்ற வார்த்தையின் நெருடலை உணர்ந்தபடி “ம்ம்ம்” என்றேன்.

“சரி, எனக்கும் விடுதலைக் கொடுத்துவிடு” என ஊசியுடன் கூடிய மருந்தை என்னிடம் நீட்டினார்.

மாடிப்படியில் இருந்து இறங்கி வந்த, அந்த முப்பது வயது பெண்மணியும் ரிக்கார்டோவிற்கு விடுதலைத் தரச்சொன்னார். தோட்டத்தின் பக்கம் இருந்து வந்த ஸ்விஸ் நபர்களும் அதையேச் சொன்னார்கள். வாசலில் வந்து நின்ற  காலையில் மண்ணோடு மண்ணாகப் புதைத்த சீசர் நாயும் ஆமோதிப்பதைப்போல குரைத்துக் காட்டியது.

“விடுதலைப் பெற்றுத்தருபவர்களிடம் காலம் கடந்தும் விசுவாசம் காட்டப்படும்” என ரிக்கார்டோ திரும்பத் திரும்பச் சொல்ல, எல்லாம் புரிந்தபடி விச ஊசியை அவரின் மேல் செலுத்தினேன்.

 ஸ்விட்சர்லாந்தில் பிரபலமான கருணைக் கொலை டாக்டர் ரிக்கார்டோ , ரோமில் அவரது பண்ணை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என்பதுதான் மறுநாளைய தலைப்புச் செய்திகள்.

எனது வீட்டுத்தோட்டத்தில் சீசருடன் ரிக்கார்டோவும் அவரின் மனைவியும் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். ரிக்கார்டோவின் ஸ்விஸ் நண்பர்கள் வரவேற்பறையில் அவருக்காகக் காத்திருக்கின்றனர்.

நான் கருணைக்கொலைகள் ஏற்புடையதா என்பதைப் பற்றியக் கட்டுரையை எழுத ஆரம்பித்தேன்.

-----