Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Thursday, September 25, 2014

அரசியல் - ஒரு நிமிடக்கதை

"மச்சி, நீ கேளேன், இன்னக்கி அந்த க-கா-கீ கட்சி மாவட்டத்தலைவரை கிழிகிழின்னு கிழிச்சி எழுதின என் பேஸ்புக் போஸ்ட்டை , நம்ம அ-ஆ-இ கட்சி மாவட்டம் லைக் போட்டிருந்தாரு ? "
"பார்த்தேன் மச்சி, நேத்து க-கா-கீ பெரியத்தலைவரை பத்தி நீ எழுதினதுக்கும் நம்ம மாவட்டம் கமெண்ட் போட்டிருந்தாரு "
"நான் செம ஹேப்பி, நாளைக்கு கட்சி மீட்டிங் ல பார்க்கலாம்னு நம்ம மாவட்டம் சொல்லிருக்காரு "
மறுநாள், நம் கதையின் நாயகன் உற்சாகமாக கட்சி கூட்டத்தில் க-கா-கீ பெரியத்தலைவரை மானே தேனே பொன் மானே எல்லாம் போட்டு கிழித்து தோரணம் கட்டி தொங்கவிட நாயகனின் மாவட்டம் விழுந்து விழுந்து சிரித்தார். உற்சாகமான நம் கதையின் நாயகன் , அடுத்து க-கா-கீ கட்சி மாவட்டத்தலைவரை ஏக வசனத்தில் பேசப்போக, உடனே எழுந்த நம் நாயகனின் மாவட்டம், மைக்கை வாங்கி, அடுத்ததாக வேறொரு தொண்டர் பேசுவார் என அறிவித்தார். நம் நாயகன் சோகமானான். கூட்டம் முடிந்தவுடன் மாவட்டம் , நம் நாயகனிடம் வந்து
"தம்பி, இன்டர்நெட் வேற, நிஜம் வேற. க - கா - கீ மாவட்டத்தலைவர் என் மச்சான். என்னோட பிசினஸ் பார்ட்னர் வேற ,, நீ அந்த பெரியதலைவரை என்ன வேணுமினாலும் பேசிக்கோ, லோக்கல் மீட்டிங்ல லோக்கல் ஆட்களை திட்டக்கூடாது, அதுவும் சொந்தக்காரன்னா கூடவே கூடாது , என்ன புரிஞ்சுதா ? "
"புரிஞ்சுது சார் "
அரசியலை புரிந்து கொண்ட நம் கதையின் நாயகன், மறுநாள் கட்சியை எல்லாம் மறந்து 'நான் டியூன் ஆயிட்டேன்னு " சினிமாக்காரங்களை கலாய்த்து ஸ்டேடஸ் போட ஆரம்பித்தான்.

Monday, June 23, 2014

பஜகோவிந்தம் என்கின்ற முனியாண்டி - நீதிக்கதை (எழுதியவர் கிளிமூக்கு அரக்கன் )


பல ஆண்டுகளுக்கு முன்னால் பஜகோவிந்தம் என்கின்ற முனியாண்டி தமிழ்நாட்டில் பிறந்தார். அவர் பியுசி முடித்த கொஞ்ச காலத்திலேயே அவர் தந்தை காலமாகிவிட , குடும்பப் பொறுப்பை சுமக்க வேண்டிய கட்டாயம். அவரின் தூரத்து உறவினர்கள் மத்தியப்பிரதேச போபாலில் இருப்பதை அறிந்து அங்கு செல்கின்றார். உறவினர்களும் அருகில் இருக்கும் ஒரு பெரிய நிறுவனத்திற்கு பஜகோவிந்தம் என்கின்ற முனியாண்டியை நேர்முகத் தேர்விற்கு அனுப்புகின்றனர். குமாஸ்தா வேலைக்கான அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொன்னாலும் , இந்தி தெரியாது என்பதால் நிராகரிக்கப்படுகின்றார்.
விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு என்று பஜகோவிந்தம் என்கின்ற முனியாண்டி ஊருக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றார். ஊர் வந்தவுடன் பால்ய நண்பர்கள் ராமசாமி, தட்சினாமூர்த்தி, ராமச்சந்திரன், லலிதா ஆகியோர் பஜகோவிந்தம் என்கின்ற முனியாண்டியை உற்சாகப்படுத்தி, கோயம்புத்தூரில் இருக்கும் சிறு தொழிற்சாலைக்கு வேலைக்கு அனுப்புகின்றனர்.
அங்கு ஒரு வேளை சாப்பாட்டுடன் குமாஸ்தா வேலையில் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாய் கற்றுக்கொண்டு பொறியியல் சம்பந்தமான வேலைகளையும் செய்ய விரும்புகின்றார். முதலாளி காமராஜரும் அனுமதிக்கின்றார். பஜகோவிந்தம் என்கின்ற முனியாண்டியின் உழைப்பைப் பார்த்த காமராஜர் மனமுவந்து , தனது நண்பர் அழகப்பனிடம் பேசி , அழகப்பன் அவர் நண்பர் அண்ணாமலையிடம் பேசி அண்ணாமலை அவர் நண்பர் தியாகராஜனிடம் பேசி ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிடுகின்றனர்.
மீனுக்காகக் காத்திருந்த கொக்காய் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு வென்று 20 ஆண்டுகளில் மிகப்பெரிய தொழிலதிபர் ஆகின்றார். போபால் வடஇந்திய நிறுவனத்தையும் விலைக்கு வாங்குகின்றார். ஆங்கிலத்தில் உரையாற்றி , நீண்ட காலம் தடை செய்யப்பட்டிருந்த இடதுசாரி தொழிலாளர் யூனியன்கள் அனுமதிக்கப்படும் என்று தொழிலாளர்களை உற்சாகமூட்டுகின்றார். எல்லாம் நல்லபடியாக முடிந்ததும் பஜகோவிந்தம் என்கின்ற முனியாண்டி
இடம் , பத்திரிக்கையாளர்கள் வந்து,
"உங்களுக்கு இந்தித் தெரிந்து, இந்தியில் உரையாற்றி இருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே" என்ற கேள்வியைக் கேட்டனர்.
அதற்கு பஜகோவிந்தம் என்கின்ற முனியாண்டி சொன்னார்
" இந்தி தெரிந்து இருந்தால், அதோ அந்த கடைநிலை ஊழியர்களில் ஒருவனாக அமர்ந்து கொண்டு வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருப்பேன்"

---
Inspired from THE VERGER by W. Somerset Maugham http://www.sinden.org/verger.html

Sunday, February 02, 2014

எருதின் புண் - சிறுகதை


ஞாயிறு அன்று 12 மணிவரை தூங்குபவன், ஆனால் எட்டு மணிக்கே எழுந்து சிவஞானத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். ஆழ்வார்திருநகர் பக்கம் நீங்கள் வந்து இருந்தால் அச்சு அசப்பில் ஒரே மாதிரி இரண்டுவீடுகளைப்
பார்த்து இருக்கலாம். அந்த இரண்டுவீடுகளின் சொந்தக்காரர்தான் சிவஞானம்.  நான் அந்த வீடுகளில் ஒன்றில் குடித்தனம் இருப்பவன்.  அனேகமாக வீடு வாடகையை ஏற்றத்தான் வருகின்றார் என யூகித்து இருந்தேன். சென்ற ஆண்டு ஆயிரம் ரூபாய் ஏற்றினார்.

"முரசொலி படிச்செல்லாம் அறிவை வளர்த்துக்க முடியுமா என்ன?" என்ற வழமையான குசும்புடன் வெளி இரும்புக்கதவை உள்ளே தள்ளியபடி வந்தார் சிவஞானம்.  அவரின் கையில் இருந்த தினமலரை வாரமலருக்காக பெற்றுக்கொண்டேன்.

சிவஞானம் என்ற பெயரை , அவரின் பெற்றோர்கள் சிலம்புச்செல்வர் ம.பொ.சி நினைவாக வைத்தனர் என கேட்காமலேயே அடிக்கடி சொல்லுவார். ம.பொ.சி அவரின் நெருங்கிய சொந்தக்காரர் எனப் பெருமைசொல்லிக்கொள்வதற்காக அவர் போடும் முதல் வரி என்பது நீண்ட நாட்கள் கழித்துத்தான் புரிந்தது.  திமுக என்றால் அவருக்கு ஆகாது, கலைஞர் என்றால் அவருக்கு அப்படி ஒரு வெறுப்பு.

"என்ன உங்கத் தலீவர் டெசோ கிசோன்னு எதுவும் வேலை ஆரம்பிக்கலியா ? எலக்‌ஷன் டைம் வேற நெருங்கிடுச்சு"

மனைவியிடம் கூட கிண்டலுக்கு பதில் நக்கல் அடித்து விடலாம்.  ஆனால் வீட்டு உரிமைக்காரர்களிடம் ஸ்ட்ரிக்ட் நோ நோ.

ஆக, கலைஞர், பாராட்டு விழாக்களில் ஒரு ஓரசிரிப்பு சிரிப்பாரே, அதைப்போல சிரித்துக் கொண்டேன்.

"தமிழ்த்தலைவன்னு சொல்லிட்டு , சிங்களத்தமிழர்களுக்கு இப்படி துரோகம் செஞ்சிருக்கக் கூடாதுப்பா..."

ஆத்திரம் வந்தது. கலைஞரை கேலி செய்ததற்காக அல்ல. சிங்களத்தமிழர்கள் என்றதற்காக... அம்மு நான் ஆத்திரப்படும்பொழுது எல்லாம் சரியாக கண்டுபிடித்துவிடுவாள். ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தி நான் சிரிக்கும்பொழுது அது மிஸ்டர் பீன் சிரிப்பைப்போல இருக்குமாம்.  என் மிஸ்டர் பீன் சிரிப்பை ஆமோதித்தலாக நினைத்துக் கொண்டு கலைஞரை தொடர்ந்து வசைப் பாடிக்கொண்டிருந்தார். எனக்கு மனம் எவ்வளவு வாடகை ஏற்றப்போகிறார் என்பதில்  இருந்தது.

"சரி, தம்பி, இந்த மாசத்தில இருந்து வாடகை 2000 ரூபாய் எக்ஸ்ட்ரா கொடுத்துடுங்க" என்றார்.

தனிவீடு, கார் பார்க்கிங் இப்படி ஒரு வீடு சென்னையில் கிடைப்பது சிரமம் என்பதால், 2000 ரூபாய் ஏற்றம் அதிகம் என்றாலும் ஏற்றுக்கொண்டேன்.  காப்பி, மிக்சர் உபசரிப்புகள் முடிந்தவுடன் , வாரமலரில் சினிமா கிசுகிசு செய்திகளின்
சுவாரசியத்தினால், வாரமலர் இணைப்பை மட்டும் என்னுடன் வைத்துக்கொண்டு தினமலரை அவரிடம் திருப்பிக் கொடுத்தேன்.

வீட்டு வாசற்படி சென்றவர், திரும்ப வந்தார். "யோகநாதாராசா வீட்டிற்கும் போறேன். நீங்களும் கூட வர்றீங்களா" எனக் கூப்பிட்டார்.

யோகநாதராசா இன்னொரு வீட்டின் குடித்தனக்காரர். ஈழத்தமிழர். தன் மனைவியுடன் இங்கு வசிக்கின்றார். அவரின் மகன்கள் பிரான்சில் புகலிடம் விண்ணப்பம் கொடுத்து நீண்ட நாட்களாகக் காத்திருப்பதால் எப்பொழுதும்
மென்சோகத்துடன் தென்படுவார். கள்ள முகவர்கள் , எப்படி , அவரின் மகன்களை பிரான்சு என சொல்லி உருகுவேயில் இறக்கிவிட்டதையும் அங்கு கையில் சல்லிக்காசு இல்லாமல் கஷ்டப்பட்டதையும் சொல்லும்பொழுது, கடினமான உள்ளம் படைத்த காரியகார என்னையும் உலுக்கும்.

நான் கலைஞரின் ரசிகன் என்றாலும் யோகநாதாராசா "என்னய்யா , உங்க அய்யா எங்களை ஏமாத்திட்டாரே" சொல்லும்பொழுது மனதைப்பிசையும்.  நேரிடையாகப் பாதிக்கப்பட்டவர்களிடம் அறிவுப்பூர்வ அரசியல் பேசுவது அழகல்ல என்பதால் பதில் சொல்ல மாட்டேன். அவர் பேசுவர் நான் கேட்பேன். புலிவேசம் போடாத புலியாக இருந்தபோதிலும் சகோதரயுத்தம் தொடங்கி ராஜபக்சேவை வெற்றியடையச் செய்தது வரை புலிகளின் அரசியல் தடுமாற்றங்களைச் சொல்லுவார். பல சமயங்களில் கேட்டல் வழி வரலாறு ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றை விட உண்மையாக இருக்கும்.

பாரிசில் இருந்து எனக்கு ஏதாவது தேவையா எனக் கேட்பார். நான் வேண்டாம் என மறுத்துவிடுவேன். பாரிசில் அலுவலக விசயமாக ஆறு மாதங்கள் இருந்திருக்கின்றேன். தூங்க கூட நேரமில்லாமல் தட்டுக்கழுவி குருவியாய் ஈழத்தமிழர்கள் எப்படி காசு சேர்ப்பார்கள் என்பதை கண்ணால் பார்த்து இருக்கிறேன்.  குருவிகளிடம் பங்கு கேட்கும் கோட்டானாக ஆக நான் விரும்பியதில்லை.

"உங்களுக்கு இதில எந்த கஸ்ரமும் இருக்காது.மகன்மார் எல்லாரும் வெளிநாட்டில தானே இருக்கிறாங்க..இந்த மாசத்தில இருந்து வாடகைய அஞ்சாயிரத்தால கூட்டலாம்னு இருக்கேன். ஈரோல பாத்தா கொஞ்சம் தான் வரும்.அத சொல்லலாம் எண்டு தான் வந்தனான்"

இமிடேடட் ஈழத்தமிழில் சிவஞானம் யோகநாதராசாவிடம் பேசினார்.  சிவஞானம் யோகநாதராசாவிடம் நெருக்கம் காட்டுவதற்காக ஈழத்தமிழில் பேசுகின்றார் என்பது என் அவதானம்.

யோகநாதராசா முகத்தில் சலனமின்றி சரி எனத் தலையாட்டினார்.   பார் கண்ணா பார், உனக்கு நான் மற்றவரைவிட குறைவாக வாடகைக்கு வீடு தந்து இருக்கின்றேன் என தனது பெருந்தன்மையை பறைசாற்றிக் கொள்வதற்காகத்தான் சிவஞானம் என்னை உடன் வரச்சொன்னார் என்பது புரிந்தது.

'பிறகு,மகன்மார ப்ரான்ஸில இருந்து நல்ல வைன் போத்தில் ஒண்ட அனுப்ப சொல்லிவிடுங்களேன்?'

யோகநாதராசா அதற்கும் சரி என்றார். சிவஞானம் விடைபெற்றுக்கொள்ள யோகநாதராசா என்னை இருந்துவிட்டு போக சொன்னார்.

'மகன்மாரோட விசாவ ரிஜெக்ட் பண்ணிட்டாங்க கார்த்தி,எப்ப கலைச்சுவிடுவாங்கன்னு பயந்துகொண்டு கள்ளமா இருக்கிறாங்க. இதுல .போன ஒரு வருசத்தில நாலு தரம் வாடகைய கூட்டிறாங்க , என்ன செய்றதுன்டு தெரியல்ல.'  யோகநாதராசாவின் கண்கள் கலங்கின. 

Thursday, January 24, 2013

கமலஹாசனுக்காக


பீஷ்ம் சாஹ்னி எழுதிய தமஸ் என்ற புதினம் கோவிந்த் நிஹ்லானியின் இயக்கத்தில் தொடராகவும், பின்னர் தொகுக்கப்பட்டு முழு நீளப்படமாகவும் வெளிவந்தது.  பாகிஸ்தான் பிரிந்த பொழுது, அங்கு நடந்த சீக்கிய - முஸ்லீம் , இந்து - முஸ்லீம் கலவரங்களின் பின்னணியில் கதை நடக்கும். இதை தடை செய்ய கோரி நீதி மன்றத்தின் முன் மனு வந்த பொழுது, நீதிபதிகள் படத்தைப் பார்த்து பிரச்சினை இல்லை எனச் சொன்னார்கள்.

“எல்லோருக்கும் நீதிபதிகளைப் போல அறிவும் தெளிவான சிந்தனையும் இருக்காது, இந்தப் படம் வெளிவந்தால் நாட்டில் கலவரங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது, அதனால் தடை செய்ய வேண்டும்” என வேண்டுகோள் வைக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள்,

”சராசரி மனிதர்கள், முந்தையத் தவறுகளில் இருந்து தொடர்ந்து கற்றுக்கொண்டே வருவார்கள், அடிப்படைவாதத்தில் விழுந்து திரும்ப அதேத் தவறுகளை செய்யும் வாய்ப்பு மிகவும் குறைவு. படிக்காதவர்களோ, அல்லது பாமரர்களோ எந்தவிதத்திலும் மற்றவர்களைக் காட்டிலும் அறிவுத்திறனிலோ, சிந்தனையிலோ குறைவானவர்கள் கிடையாது. அவர்களாலும் எது நல்லது எது கெட்டது என பகுத்தறிந்து , எதிர்காலத்தை நினைவில் வைத்து விசயங்களை எடுத்துச் செல்லமுடியும். இதை சரியாக அறிந்து வைத்துக் கொள்வதே ஒட்டு மொத்தப் புரிதலுக்கும் முதற்படி”

எனக்கூறி தமஸ் திரைப்படத்தைத் தடை செய்ய மறுத்து விட்டனர். தரவு http://indiankanoon.org/doc/679521/

ஏறத்தாழ மேற்சொன்ன கருத்துகள் “ஒரேயொரு கிராமத்திலே” என்ற தமிழ்த் திரைப்படத்தின் தடை நீக்கத்திலும் சொல்லப்பட்டது.

"ஒரேயொரு கிராமத்திலே "  இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்தில் மட்டும் அல்லாது தரத்திலும் சராசரிக்கும் கீழான படம் தமிழக அரசால் தடை செய்யப்பட்டு, பின்னர் உச்சநீதி மன்றத்தால் தடை நீக்கப்பட்டு வெளியானது. உத்தரவில் இருந்த முக்கிய குறிப்பு,

 It is the duty of the State to protect the freedom of expression since it is a liberty guaranteed against the State. The State cannot plead its inability to handle the hostile audience problem. (Emphasis added). As censorship is permitted only on the grounds under Article 19(2), the standard to be applied by the board or courts for judging the film should be that of an ORDINARY MAN OF COMMON SENSE AND PRUDENCE and NOT that of an out of the ORDINARY or HYPERSENSITIVE MAN.

கவிஞர் வாலி எழுதிய கதைக்கு , உச்சத்தில் இருந்தாலும் இளையராஜா மிகவும் சுமாரான இசையைத் தான் கொடுத்து இருப்பார். வழக்கமான உள்ளடி வெளியடிகளுடன் இந்தப் படம் தேசிய விருது கூடப் பெற்றது. இருந்தும் கூட இப்படி ஒரு படம் வந்ததா என்று , இதன் பெயர் கூட மக்களின் நினைவில் இருக்காது.

இடஒதுக்கீட்டை சூசகமாக எதிர்த்து வெளிவந்த ஜெண்டில்மேன் கூட அதன் விசமமான கருத்துக்களுக்காக அறிவுஜூவிகளின் மத்தியில் மட்டும் தான் விவாதிக்கப்படுகின்றது. சாமானிய மனிதர்கள் பெரும்பாலோனருக்கு இன்னும் சிக்குபுக்கு சிக்குப்புக்கு ரயிலும் , கப்ளிங்ஸ் கிப்ளிங்ஸ்... புறா எப்படி பறந்தது என்ற பொழுது போக்கு அம்சங்கள் மட்டும் தான் நினைவில் நிற்கின்றன. சாமனியர்கள் தீவிரமான விசயங்களை பிரச்சினைகளாக  உள்ளெடுத்து தன்னையும் சுற்றத்தையும் இறுக்கப்படுத்திக் கொள்வதில்லை.

ஆக, சிறுபான்மையோ பெரும்பான்மையோ ஆதரித்தோ எதிர்த்தோ ஒரு விசயம் திரைப்படமாகவோ , புத்தகமாகவோ வந்தால், வரட்டுமே... பிடித்திருந்தால் போற்றுவோம், பிடிக்காவிட்டால் தாளிப்போம்.

பம்பாய் திரைப்படம், தெலுங்கு மொழிமாற்றப் பதிப்பு, ஆந்திராவில் தடை செய்யப்பட்டது.  பின்னர் நீதிமன்றத்திற்கு வழக்கு வந்த பொழுது, தடை செய்த அதிகாரிகள் படத்தைப் பார்க்கமலேயே தடை செய்து இருக்கின்றனர் என வெட்ட வெளிச்சம் ஆகியது.

முதலில் அடி , உதை , தடை பின்னர் பார்க்கலாம் என்ற வகையிலேயே சமீபகாலங்களாக Water, Da Vinci Code, War and Peace, குஜராத் கலவரங்கள் பற்றிய ஆவணப்படங்கள் என தொடர்ந்து தடை செய்யப்பட்டு பின்னர் நீக்கப்படுகின்றன.

விஸ்வரூபம் படத்தையே எடுத்துக் கொண்டால், தணிக்கைக் குழு வெட்டி எறிந்த காட்சிகளைப் பற்றியக் குறிப்புகள் கீழே,





இவற்றில் ஒன்றில் கூட மதம் சம்பந்தப் பட்டது கிடையாது. கமலஹாசன் சொன்னதைப்போல, விறுவிறுப்பான உளவாளிக்கதையாக மட்டுமே இருக்கும் போல.

டா வின்சி கோட் திரைப்படம், கத்தோலிக்கர்கள் அதிகம் வாழும் இத்தாலியிலேயே தடை செய்யப்படவில்லை. மத நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையிலும், வரலாற்றுக்குறிப்புகளைத் தவறாக கொடுத்திருக்கும் இப்படத்தைப் புறக்கணியுங்கள் என்றுதான் வாடிகனால் கேட்டுக்கொள்ளப்பட்டது. கவனிக்கவும், தடைக்கும் புறக்கணிப்பிற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் உள்ளாது.

அரசியல் ஆகட்டும் மதமாகட்டும், தேசியம் சார்ந்த உணர்வுகள் ஆகட்டும், உண்மையில் அவரவர் நம்பிக்கைகளை அவரவர் அனுமதியின்றி வேறு யாரும் மாற்றிவிட முடியாது. நம் மக்களை வருத்தப்படுத்தக் கூடும் அதனால் புறக்கணியுங்கள் என்று சொல்ல உரிமை உண்டு, அப்படி இல்லாமல் யாருமே பார்க்கக் கூடாது என வரிந்து கட்டிக் கொண்டு இறங்கும்பொழுது, பொதுத் தன்மையுடன் இருக்கும் மக்கள் தெரிந்தோ தெரியாமலோ ஏதாவது ஒரு சார்பு எடுத்து விடுவார்கள்.இது துள்ளிக் குதித்து ஓடிக்கொண்டிருக்கும் ரத்த ருசி பூனைகளுக்கு மிகவும் கொண்டாட்டமாகவும் சாதகமாகவும் அமைந்துவிடும்.

சமூக அக்கறைக்கு அப்பாற்பட்டு,  சாமானிய மனிதனாய் என் கவலை எல்லாம், விக்ரம் படத்தில் டிம்பிள் கபாடியாவையும் லிசியையும் கிஸ் அடித்தது போல, இதில் ஆண்ட்ரியாவையும் பூஜாவையும் கமலஹாசன் கிஸ் அடித்திருப்பாரா மாட்டாரா என்பது தான். எதுவானாலும் கமலஹாசனுக்கு இது வே கடைசித் தமிழ்த் திரைப்படம் ஆக இருக்கட்டும். கலைஞனாய் சில இடங்களில் சறுக்கி இருந்தாலும், வியாபாரியாய் பல இடங்களில் வென்று இருந்தாலும், இந்த போராளி கமலஹாசன் என்றுமே சறுக்க மாட்டார், சறுக்கவும் கூடாது. இனிவரும் படங்கள் ஆங்கிலத்தில் இருந்து வரும் டப்பிங் படங்களாக மட்டும் இருக்கும் என வாழ்த்துவோம். அவை எதிர்காலத்தில் நம் கருத்தியலுக்கு மாறாக இருந்தால் கும்முவோம், ஆனால் படத்தைப் பார்த்து விட்டு கும்முவோம்.


Friday, October 26, 2012

எக்ஸ் ஒய் இசட் - சிறுகதை


கொரடாச்சேரி இதுதான் என் சொந்த ஊர் என்று யாரிடமாவது சொன்னால் எங்கள் குடும்பத்தினருக்கு பிடிக்காது. “பில்டிங் காண்டிராக்டர்” அப்படி என்று ஒரு படத்தில் வடிவேலு சொல்வதைப்போல, விஸ்வநாதபுரம், பழவனக்குடி என அருகில் இருக்கும் பெயரில் “சேரி” இல்லாத கிராமங்களை சுட்டி, மேட்டுக்குடிகளாக காட்டிக்கொள்ள எத்தனிக்கும்
சூழலில் வளர்ந்தவன் நான்.

ஆண்டுக்கொருமுறை ஊருக்குப்போகும் பொழுதெல்லாம், என் பெரியப்பா வீட்டில் இருந்து நான்கு வீடுகள் தள்ளி இருக்கும் எக் ஒய் இசட் வீட்டைத் தாண்டும்பொழுது, என் சொந்தக் காரர்கள் எல்லாம் எக்ஸ் ஒய் இசட் இப்பொவெல்லாம் முழுப்பைத்தியமாவே ஆயிட்டான் என்று சொல்லுவார்கள்.

எக்ஸ் ஒய் இசட்டின் பெயர் அதுவல்ல, அது ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதியின் பெருமைப் பெயரைச் சுட்டும் பெயர். அவன் அதைச் சார்ந்தவன் என்பதால், அந்தப் பெயரைவைத்துத்தான் அவனை அழைப்பார்கள்.
கருத்துதான் முக்கியம் என்பதால், அவர் எந்த சாதியைச் சேர்ந்தவன் என்ன என்பதெல்லாம் அவசியமில்லை என்பதால் எக்ஸ் ஒய் இசட் என்ற குறியீடு.

 இதே எக்ஸ் ஒய் இசட் சாதியைச் சேர்ந்தவர்கள் , டெல்டா மாவட்டங்களின் வேறு சிலப்பகுதிகளில் ஏபிசி எனவும் கே எல் எம் எனவும் பட்டம் வைத்துக்கொள்வார்கள். நான் கூட எக்ஸ் ஒய் இசட் என்றாலும் , என் அம்மா வழி ஏபிசி எனப்பட்டம் வைத்துக்கொண்டதால் கொஞ்சம் உயர்குடி ஆகிவிட்டோம் என்ற சிறிய பெருமையும் உண்டு.

சுற்றமேத் திட்டினாலும், என் அப்பா மட்டும் எக்ஸ் ஒய் இசட்டைப் பார்க்கும்பொழுதெல்லாம் காசு கொடுப்பார்.

”எதுக்குமே அசராதவனை ஒரு சின்ன விசயத்தில அசைச்சிட்டானுங்க,, நிஜமான போராளி ”  என்று பைத்தியக்காரனைப் பாராட்டும்பொழுது எல்லாம் என் அப்பாவின் மனநிலையின்  மேலேயே சந்தேகம் வரும்.

எக் ஒய் இசட் டிற்கு இப்பொழுது ஒரு 80 வயது இருக்கும்.  அந்தக் காலத்தில் எக்ஸ் ஒய் இசட் , பெரியாரின் கருத்துக்களில் தீவிர ஈடுபாட்டில் இருந்தவராம்.
 ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில்,  தாழ்த்தப்பட்டவர்கள் என்றழைக்கப்படும் நபர்கள் அதிகம் இருக்கும்  பொதுவுடமைக் கட்சிக்கூட்டங்களிலும் பங்கேற்றதால், எக்ஸ் ஒய் இசட், ஏபிசி, கே எல் எம் என அனைத்துக்கூட்டத்தினரும் அவரின் மேல் கடுங்கோபத்தில் இருந்தனாரம்.

 எக்ஸ் ஒய் இசட்டோட பழைய நண்பர்கள் ரங்கநாதன் , சுவாமிநாதன்
தட்சிணாமூர்த்தி போன்றவர்களுக்கு கூடப்பிடிக்கவில்லையாம். அவரோட சொந்த அண்ணன் சொத்தில் எந்தப் பங்கும் கொடுக்காத பொழுதும்
கவலைப்படாமல் களப்பணி செய்தார் என்று என் அப்பா எக்ஸ் ஒய் இசட்டின் பெருமைப்பாடுவார்.

ஒருதடவை வெட்டாற்றுப்பாலத்தில் வைத்து அடித்துக் கொலை செய்யக்கூடப் பார்த்தார்களாம், அப்பொழுது கூட அசரவில்லை.
அடி வாங்கியபின்னர் அவரின் வேகம் அதிகமாகத்தான் இருந்ததாம்.

அப்பா, எக்ஸ் ஒய் இசட்டை பற்றி சொல்லும்பொழுதெல்லாம், என் அலுவலகத்தில் இருக்கும் பசுபதி தான் நினைவுக்கு வருவான்.
எங்கு யாரு ஒடுக்கப்பட்டாலும், அவனுக்கு தூக்கம் வராது. இந்த சமுதாயத்தை மாற்ற ஏதாவது செய்யவேண்டும் சொல்லிக்கொண்டும்
அவனால் முடிந்ததை செய்து கொண்டும் இருப்பான். அவனுடைய கணினியில் அம்பேத்கார், பெரியார், விபிசிங் படங்கள் வைத்திருப்பது
எனது மேலாளர்கள் சிலருக்குப் பிடிக்காது. நேர்மையானவன், என் வீட்டிற்கு கூட வந்து இருக்கின்றான், என் அப்பாவிற்கு அவனது சிந்தனைகள் பிடிக்கும், அவனையும் பிடிக்கும். வேலையில் எள் என்றால் எண்ணெய் ஆக இருப்பான்.
ஆனாலும், அலுவலக நேரத்தின் பாதியில் இணையம் மேயும் எனக்கு கிடைக்கும் சம்பள உயர்வில்  அவனுக்கு கால்வாசி கூட கிடைக்காது. எங்கு அடித்தால் எங்கு வலிக்கும் என்பது எங்களுக்குத் தெரியும் என எனது மேலாளர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு இருக்கின்றேன்.

திரும்ப எக்ஸ் ஒய் இசட்டிற்கு வருவோம், ஏதோ ஒரு நாள் ரங்கநாதன், சுவாமிநாதன், தட்சினாமூர்த்தி குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாய் வாழும் தெரு வழியாக  நமது கதையின் நாயகன் வர, தெருமுனையிலேயே , அந்தத் தெருவில் இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைது செய்து கிட்டத்தட்ட ஒரு வருடம் நொங்கு நொங்கு என நொங்கிவிட்டனராம். அந்தப் பிரச்சினைக்குப் பிறகு அடங்கியவர்தானாம், பைத்தியம் மாதிரி உலாவுவாராம், யாராவது சோறு போட்டால் சாப்பிட்டு, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டை கழித்துவிட்டார்.

”சரியான நேரத்தில காயடிச்சிட்டானுங்க,  வேரில வெந்நீரை எப்போ ஊத்தனும்னு அவனுங்களுக்குத் தெரியும்”

”எவனுங்கப்பா ? “ என இது வரை அப்பாவிடம் கேட்டதில்லை.

காலையில் எழுந்தோமா, வழுவழுப்பான தாளில் வரும் ஆங்கில தமிழ் நாளிதழ்களைப் படித்தோமா, பேஸ்புக்கில் இளையராஜா பாட்டைப் போட்டுட்டு, பங்கு வணிகம் பார்த்துட்டு, மிஞ்சிய நேரத்தில் கொஞ்சம் மென் நிரலி அடித்து வீட்டு, மஞ்சள் வண்ணம் பூசிய வீட்டில் என் அம்முவை கட்டியணைத்துக் கொண்டு தூங்குவதுதான் என் வழமையான வாழ்க்கை.

விடுப்பு முடிந்து அலுவலகம் வந்து பின்னர் தெரிந்தது, பசுபதியின் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு  அவனை வேலையை விட்டு நீக்கிவிட்டார்கள் என்று. என்ன பிரச்சினை என்று விசாரித்ததில் , அவனது திட்டக்குழுவில் இருந்த  ஒரு பெண்ணை படுக்கைக்கு பகிரங்கமாக அழைத்தானாம்.

அவனின் வேலை நீக்க செய்தி , நமிபீயாவில் புயலடித்து நான்கு பேர் பலி என்பது எப்படி இருக்குமோ அந்த வகையில்தான் எனக்கு சாதாரணமாக இருந்தது. பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
அடுத்த வருடம் அமெரிக்கா போனேன். ஒரு வருடம் இருந்தேன். புறநகர்ப்பகுதியில் பங்களா கட்டினேன். ஒரு நாள் அப்பாவுடன் காரில் செல்லும்பொழுது,  ஒரு தெருமுனை மீட்டிங்கில் ஏதோ ஒரு வாழ்வாதார பிரச்சினைக்காகப் பசுபதி பேசிக்கொண்டிருந்தான்.

“தீர்க்கமாக தெளிவாப் பேசுறான், அப்ப மாதிரி, இப்ப எல்லோரையும் எக்ஸ் ஒய் இசட்டுக்குப் பண்ண மாதிரி ஈசியா நசுக்கிட  முடியாது”

என் அப்பா சொன்னதை நான் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.




Tuesday, June 05, 2012

காலப்பேழை - சிறுகதை

முப்பத்தியெட்டு வருடங்களுக்கு முன்னர், இந்திரா காந்தி காலத்தில் புதைக்கப்பட்ட காலப்பேழை  கோப்புகளைப் பற்றி இன்றைக்கு 2012 இல் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் வழியாக யாரோ ஒருவர் கேள்வி கேட்டிருக்கிறார் என்ற செய்தியைப் படித்துக் கொண்டிருக்கும்பொழுது, பக்கத்து வீட்டு இத்தாலியத் தாத்தா வழமைப் போல மாலை நேர நடைக்குக் கூப்பிட்டார். ரோம் நகரத்து ஒதுக்குப் புறமான குடியிருப்பில் இருந்து
வயல் வரப்புகளைக் கடந்து, சிறிய மலைத் தொடர் வரை நடந்துப் போவோம். ஒவ்வொரு மாலையும் உடன் நடக்கையில்

அவர் சொல்வது, ”இன்றைக்காவது செய்தி வர வேண்டும்” ..  சிறிய குன்றின் உச்சிக்குச் சென்று, மேற்கு திசையை நோக்கி கண்களை
மூடிக்கொண்டு எதிர்ப்பார்ப்போடு எதோ முணுமுணுப்பார். சில நிமிடங்கள் கழித்து இன்றைக்கும் செய்தி வரவில்லை என்று வருத்தம் தோய்ந்த முகத்தோடு வீடு திரும்புவார்.

அவருக்குக் கிடைக்கப்போகும் செய்தி எனக்கும் முக்கியமானது என்று அடிக்கடி சொல்லுவார். வயதானவர்கள், உனக்கு செய்தி ஒன்று வைத்திருக்கின்றேன் எனச் சொல்லுவது முதன் முறையல்ல. சிறு வயதில் சொந்த  ஊருக்குப் போகும்பொழுது எல்லாம் அடுத்தத் தெரு சூனியக்கார கிழவி இதுபோல சொல்லித்தான் காட்டுப்பகுதிக்கு கூட்டிக்கொண்டுப் போகும். ஒரு நாள் அம்மா அப்பா அந்தக் கிழவியை ஏசிய பிறகு என்னைக் கூப்பிடுவதில்லை, ஒரு நாள் அந்தக் கிழவி செத்துப் போன உடன், அது என்னிடம் தரச் சொல்லியதாக அதன் உறவினர்கள் கொடுத்தப் பெட்டியை, ஏதாவது மந்திரம் சூனியம் இருக்குமென என் பெற்றோர்கள் அதனை எரித்துவிட்டனர்.

மொழிகளுக்கான எழுத்து வடிவங்கள் பற்றியப் படிப்பை பின்லாந்தில் படித்துக் கொண்டிருந்தபொழுது, இதேப்போல ஒரு தாத்தா நட்புப் பாராட்டி உனக்கு ஒரு நாள் நல்ல செய்தி சொல்லுவேன் என்பார், நல்ல செய்தி சொல்லும் முன்னர், ஒரு நாள் சாலை விபத்தில் இறந்துப் போய்விட்டார்.


இன்றைக்கு இந்த காலப்பேழைப் பற்றிய செய்தி ஏதோ ஓர் ஈர்ப்பைக் கொடுத்ததால்
“நான் வரவில்லை, நீங்கள் மட்டும் சென்று நீங்கள் விரும்பிய செய்தியுடன் திரும்பி வாருங்கள் “ என்று அவரை அனுப்பி வைத்தேன்.

எதிர்கால சந்ததியினருக்கு வரலாற்றைத் தெரிவிக்கும் நோக்கில் சமகால நிகழ்வுகளை பாழடையாத கோப்புகளாக பூமியில் புதைத்துவைத்து விடுவது காலப்பேழைகளில் ஒரு வகை. பழைய சோவியத் ரஷியாவில், ரஷியாவின் அருமைப் பெருமைகள் அடங்கிய விபரங்களை பல இடங்களில் புதைத்து
வைத்திருக்கின்றனராம்.

நாசா மையம் ,  மின்னனு கோப்புகளாக தற்கால நிகழ்வுகளை ஆளில்லா விண்கலங்களில் வைத்து அண்டவெளிக்கு அவ்வப்பொழுது அனுப்புவதும் உண்டு. அவற்றில் சில விண்கலங்கள் பல நூறு ஆண்டுகள் கழித்து பூமிக்குத் திரும்பும் வகையில்
கூட அனுப்பப்பட்டிருக்கின்றன.  எதிர்காலத்தில் ஏதேனும் அகழ்வாராய்ச்சியில் அவை வருங்கால சந்ததியினருக்கு கிடைக்கும்
பொழுது பூசி மெழுகப்பட்ட வரலாறு கிடைத்தாலும் , ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு தகவல்களைக் கடத்துவதுதான் காலப்பேழைகளின் முக்கிய நோக்கம்.

என்னுடையகாலப்பேழைகள் எல்லாம் நான் படித்த பள்ளிகளின் கல்லூரிகளின் மரப்பெஞ்சுகளில் செதுக்கப்பட்டிருக்கும்.
பாரிஸ் ஈஃபில் கோபுரத்தில் கூட என் பெயரையும் அம்முவின் பெயரையும் சேர்த்து எழுதி வைத்திருக்கின்றேன்.

இப்பொழுது கூட என்னைப் பற்றி அருமைப் பெருமைகளையோ, என் சார்பு அரசியலையோ , நிராகரிக்கப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையோ ,  ஏதாவது கூகிள் சம்பந்தப்பட்ட பொதுத் தளங்களில் எழுதி வைத்துவிட்டு
பேசாமல் அமைதியாக இருப்பதும் உண்டு. சுழிய உலகில் தகவல்களைப் போட்டு வைத்துக் கொள்வது கூட ஒரு வகையான காலப்பேழைதான்.

வெவ்வேறு நாகரீகங்களின் எழுத்துரு வடிவங்கள் அதன் மாற்றங்கள் , பின்புல அரசியல்கள் ஆகியனவற்றைப் பற்றிய தலையணை அளவுப் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்ததில் அடுத்த இரண்டு நாட்கள் கரைந்துப் போயின. நடைப்பயணம் போன தாத்தா தடுமாறி
விழுந்ததில் காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவருடைய அழகான பேத்தி சொல்ல, மருத்துவமனைக்குப் போய் அவரைப் பார்த்தேன்.

“இனிமேல் செய்தி சேகரிக்க மலைக்கு எல்லாம் போகவேண்டியதில்லை, வர வேண்டிய செய்தி வந்து விட்டது” என்றார்.

எனக்கு வருத்தமாக இருந்தது, ஒரு வேளை நான் இவருடன் நடைக்கு சென்றிருந்தால், இவர் காயம்பட்டு இருக்க மாட்டாரே என.
”நாளைக்கு நாம் வழக்கமாகப் போகும் குன்றின் உச்சிக்குப் போ, நாம் அமரும் இடத்தின் கீழ் ஒரு பெட்டி இருக்கும், அதில் உனக்கான செய்தி இருக்கின்றது “ எனத் தொடர்ந்தார்.

அவரை ஓய்வு எடுக்கச் சொல்லிவிட்டு மறுநாள் உச்சிக்கு சென்றேன். அங்கிருந்த பசுமையான செடிகள் எல்லாம் கருகி இருந்தன. சிரமப்பட்டு நாங்கள் உட்காரும் இடத்தைக் கண்டுபிடித்தேன். அந்த கல் இருக்கைக்குப் பக்கத்தில் பழையகாலத்து வடிவமைப்புடன் ஒரு பெட்டி இருந்தது. பெட்டியின் மேல் வலது கை வரையப்பட்டிருந்தது. எனது வலதுகையை அதன் மேல் வைக்க, பெட்டித் திறந்தது.

உள்ளே சில அடுக்குகளாக காகிதங்கள் போல ஆனால் எடையற்ற ஒளி ஊடுவக்கூடிய ஏதோ ஒன்று வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மேலாக இருந்த ஒன்றைத் தொட, அந்த காகிதம் போன்ற ஒன்று , பளிச்சென முகத்தில் ஓர் ஒளிக்கற்றையை அடித்து விட்டு,  முகத்துக்கு நேர படிப்பதற்கு ஏதுவாக வந்து நின்றது.

அட, அதில் சிந்து சமவெளி நாகரீகக் கால எழுத்துருக்கள் இருந்தன. ஒரு நிமிடம் பொறுங்கள், என்னால் அதை வாசிக்க முடிகிறது. இருங்கள் இருங்கள்... அவை கடுமையான செய்யுள் தமிழில் இருக்கின்றன. மூளை வேகமாக ஆதித் தமிழில் இருந்து அன்றாடத் தமிழுக்கு மொழிப்பெயர்த்தது.
ஆயிரக்கணக்கான கதிரவ வருடங்கள் கழித்துப் படிக்கப்போகும் எங்கள் நண்பர்களுக்கு , நாங்கள் எதிர்காலத்துக்கு அனுப்பி இருக்கும் தற்கால விபரங்கள் அடங்கிய பெட்டிகளின் மூன்றாவது பெட்டி இது.
தொடர்ந்து நான் வாசித்துக் கொண்டிருக்க, வானத்தில் இருந்து, சிறிய பேருந்தைப் போன்ற ஒரு வாகனம் நான் இருந்த இடத்தில் இருந்து சில நூறு மீட்டர்கள் தொலைவில் வந்து விழுந்தது.

Thursday, April 05, 2012

கெட்ட வார்த்தை - ஒரு நிமிடக்கதை

மொழியின் ஆளுமை வெறுமனே இலக்கியங்களில் மட்டும் இருப்பதில்லை, பயன்படுத்தப்படும் கெட்ட வார்த்தைகளிலும் இருக்கின்றது. பொதுவாக எனக்குக் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவது பிடிக்காது, இருந்த போதிலும் அவற்றைத் தெரிந்து வைத்துக்கொள்வேன். அகர்வால் மூச்சுக்கு முந்நூறு தடவை இந்தியில் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவான். ஆங்கிலம் தெரிந்த தோழிகள் அருகில் இருந்தால் கெட்ட வார்த்தைகள் ஆங்கிலத்திலும் தப்பும் தவறுமான சாதாரண வாக்கியங்களுக்கு மத்தியிலும் வந்து விழும். அவனைப் பொருத்தமட்டில் வெகு சகஜமாக இருப்பதாகக் காட்டிக்கொள்கிறானாம்.


கனியிருப்பக் காய்கவர்ந்தற்று வகையில் அதீத கோபம் வந்தாலொழிய எந்த மொழியிலும் நான் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்துவது கிடையாது. அதே சமயத்தில் கலாச்சாரத்தினுள் ஊறிய கெட்ட வார்த்தைகளுக்கு எதிர்ப்பு எதுவும் காட்ட மாட்டேன்.

“கார்த்தி எப்படி இருக்கிறாய்” என்ற கேள்விக்கு முன்னர் பெஹன்சூத், மாதர்சூத் என்ற அடைமொழியும் சேர்ந்து வரும்.

எந்த மொழியும் கைவைசப்படும் முன்னர், பிரயோகப்படுத்தப்படும் வார்த்தைகள் நம்மைக் குத்தாது. தூர்தர்ஷனின் இந்தித் தெரிந்த எனக்கு, கடந்த சில வாரங்களாகவே அகர்வாலின் வேண்டுமென்ற , இடம் பொருள் ஏவலற்ற கெட்ட வார்த்தைகள் ஊடான பேச்சு நடை எரிச்சலை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. தேவையின்றி கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாதே என அவனிடம் ஒரு முறை சொல்லியும் விட்டேன்.

“உனக்கு கெட்ட வார்த்தைகள் தெரிந்தால் நீயும் பயன்படுத்திக்கொள் பெஹன்சூத்? என பதில் சொன்ன பின்னர் அவனிடம் ஒட்டு மொத்தமாகப் பேச்சை நிறுத்திக்கொண்டேன்.

சில மாதங்கள் கழித்து, ஒரு மாணவர் கொண்டாட்டத்தின் போது, வலிய வந்து சிலப்பல மதராசி நகைச்சுவைகளுடன் “இன்றிரவு என்ன செய்யப்போகிறாய்” என முன்னர் சொன்ன கெட்ட வார்த்தைகளுடன் கேட்டான். என்னைச் சுற்றிலும் சில இந்திப் பேசும் தோழிகள் மற்றும் அரை குறை இந்தித் தெரிந்த தென்னிந்தியர்கள்.

இதற்காகத்தானே காத்திருந்தாய் என , நினைத்து சிரித்துக்கொண்டே,

“ தேர்ரி லௌடியா கொ ச்சூடு கியா” நான் சொன்ன பதிலை அங்கிருந்த யாருமே எதிர்பார்க்கவில்லை. வெளிறிப்போன முகத்துடன் வெளியேறிய அகர்வால், அதன்பின்னர் யாரிடமும் கெட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்துவதில்லை.

சொல்ல மறந்துவிட்டேன், அந்த சம்பவத்திற்கு சில வாரங்களுக்கு முன்னர் தான் அவனுக்குத் திருமணம் ஆகி இருந்தது.




Tuesday, April 03, 2012

வாடிகன் - சிறுகதை

மிகப்பெரும் கோயில்களுக்குச் செல்லும்பொழுதெல்லாம் ஏற்படும் ஒருவிதமான சிலிர்ப்பு, இந்த நீண்ட நெடிய வரிசையில் வாடிகன் நகரம் / நாட்டிற்குள் நுழைய நிற்கும்பொழுதும் ஏற்பட்டது. சிலிர்ப்பிற்கு காரணம் பக்தியல்ல, கடவுளின் பெயரால் அமைக்கப்பட்ட எந்த ஓர் இடமும், அதிகார மையத்தின் மற்றொரு வடிவம் தான். வரலாற்றின் நீட்சிகளையும் மிச்சங்களையும் கடக்கும்பொழுது சிலிர்ப்பு ஏற்படுவது இயற்கைதானே !!!



சிறுவயதில், வாடிகன் தபால்தலைக்காக 20, வெவ்வேறு நாட்டுத் தபால்தலைகளை பரிமாற்றம் செய்த்தில் இருந்து வாடிகன் மேல் ஈர்ப்பு, தொடர்ந்து கத்தோலிக்கப் பள்ளியில் படித்ததால், முதலில் இறை சார்ந்த அபிமானமும், பின்னர் அதிகாரம் சார்ந்த அபிமானமும், தொடர்ந்து ரோமப் பேரரசின் எச்சங்களைப் பாதுகாத்து வருவதால் தொன்மை சார்ந்த அபிமானமும் தொடர்கின்றது.

நாட்டிற்குள் நாடு என்பதைக்காட்டிலும், நகரத்திற்குள் நாடு என்பதே சரி, பொடிநடையாக நடந்து ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு கடப்பது என்பது சுவாரசியமானதுதான். உள் நுழைவதற்கு கட்டணம் எதுவும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. வரிசையில் எனக்கு முன்னால் சில அமெரிக்க மக்கள், அதற்கடுத்தாற்போல ஒரு முஸ்லீம், தாடி, உடை மத்தியக் கிழக்கு முஸ்லீம் எனச் சொல்லியது. எனக்கு முன்னிருந்தவர்களும் பின்னிருந்தவர்களும் அவரை ஒரு கருப்பாட்டைப் போலவே பார்த்துக் கொண்டிருக்க , நான் அரைக் கால்சட்டை, மெலிதான மேலாடை அணிந்து இருந்த அமெரிக்கப் பெண்களை ரசித்துக் கொண்டிருந்தேன். அந்த முஸ்லீம் மனிதருக்கு ஒருத் தயக்கம் இருந்திருக்கும் போல, மெல்ல பின் நகர்ந்து , சினேகமாக சிரித்த என்னருகில் வந்து நின்று கொண்டார்.

எல்லோரையும் அனுமதிக்கும் இந்த பாங்கிற்காகவே எனக்கு கிறித்தவ புனிதத் தலங்களை எனக்குப்பிடிக்கும். ஓரளவிற்கு சமத்துவம் நிலவும் தமிழ்நாட்டில் கூட இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்புப் பலகைகளைப் பார்த்து நொந்ததுண்டு.



“மெக்கா, மதீனாவிற்கு ஏனையவர்களை விட மாட்டார்கள், இவர்கள் மட்டும் ஏன் இங்கு வருகிறார்கள்” பின்னால் இருந்த சிலப் பழமைவாதிகள் இத்தாலிய மொழியில் கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர். ஏறத்தாழ இதையொட்டி என் மனதிலும் ஒரு கேள்வி இருந்தது. கடவுளுக்கு முன்னர் அனைவரும் சமம் என்பவர், அந்தந்த மதம் சார்ந்தால் மட்டுமே
அனுமதிப்பதேன் !!!

எனக்கு முன்னால் இருந்த முஸ்லீம் துருக்கி நாட்டவராம். அவர் ஆபிராகமிய மதங்கள் பற்றிய ஆராய்ச்சிப்படிப்பைப் படித்துவருகின்றாராம். வரிசை மெல்ல பாதுகாப்பு பரிசோதனை வளையத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. சமீபத்தில் வாடிகன், துருக்கிய ஆட்டோமான் பேரரசு சம்பந்தப்பட்ட பழமையான குறிப்புகளைப் பொதுமக்கள் பார்வைக்கு வெளிக்கொண்டுவந்தது. துருக்கிய ஆட்டோமான் பேரரசர்களின் பெருந்தன்மைதான் இன்னும் வாடிகனை நிலைகுலையாமல் வைத்திருக்கக் காரணம் என்று எங்கேயோப் படித்து இருக்கின்றேன்.



முன்னால் இருந்த அரைக் கால் சட்டை கவர்ச்சி அமெரிக்கக் கும்பலை, புன்னகையுடன் வரவேற்று பாதுகாப்பு அதிகாரி எந்த தடவல் சோதனைகளையும் செய்யாமல் இடது புறம் நுழைவாயிலின் வழியாக ஆலயத்திற்கு செல்லுமாறு கைக்காட்டினார். அடுத்து துருக்கியரை நிறுத்தி, முடிந்தவரை தடவல் சோதனை நடைபெற்றது. அவர்களின் சந்தேகம் தீரும் வரையில் சோதனைக்குட்படுத்தப்பட்டு பின்னர் உள்ளே நுழைய அனுமதிகப்பட்டார்.


எனக்குப் பின்னிருந்த இத்தாலியர்கள் அவைக் குறிப்புகளுக்கு ஒவ்வாத வகையில் இஸ்லாமியர்களைப் பற்றிய தங்களுக்கான கருத்துக்களைக் கூறிக்கொண்டிருந்தனர். இணையாக இருந்த அடுத்தடுத்த பாதுகாப்பு சோதனைத் தளங்களில் இத்தாலியர்கள், வெள்ளைக்காரர்கள் எந்தவிதமான தடவல் சோதனைகளுக்கும் உட்படுத்தப்படாமல் உள்ளே அனுப்பப்பட்டனர்.

அடுத்தது நான், மாநிறத்திற்கும் சற்று குறைவான எனக்கும் , தடவல் சோதனை இருந்தது, ஆனால் கடமைக்கென , கையை மேலேத்தூக்கு அகட்டு என நடந்து முடிந்த பின்னர் அந்தத் துருக்கிய முஸ்லீமைக் கண்கள் தேடியது. வலதுபுறம் இருந்த வாயிலின் வழியாக வேகமாக வாடிகனை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தார்.

Friday, March 30, 2012

ஈரோ - ஒரு நிமிடக்கதை

”இந்த தமிழ் ஆட்கள் எல்லாம், இந்தியாவிற்கு பிரச்சினை வரும்படியாகவே பேசி, இந்தியா தேசியத்திற்கு எதிராகவே இருப்பார்கள், இந்தியை எதிர்ப்பார்கள், ராமரை மதிக்க மாட்டார்கள், இட ஒதுக்கீடை ஆதரிப்பார்கள் !!!” , அகர்வாலின் வழக்கமான சீண்டல் ஆரம்பமானது.

சபை நாகரீகம் எனக்கு தெரியுமாதலால், ஏனைய இத்தாலிய நண்பர்கள் மத்தியில், மெலிதாகப் புன்னகைத்துவிட்டு வைனை அடுத்த மடக்குக் குடித்தேன். அகர்வாலின் அறியாமைக்கு பதில் சொன்னால், அவனை எனக்கு சரிச்சமமாக வைப்பதுப்போல ஆகிவிடும். ஆட்டம்போடுவதற்கும் மது அருந்துவதற்கும் கூடியிருக்கும் இடத்தில், பதிலுக்குப்பதில் பேசி, என்னுடைய கொண்டாட்ட மனோநிலையை குறைத்துக்கொள்ள விரும்பியதே இல்லை. என்னுடைய அரசியல் , என்னுடைய நிலைப்பாடுகளை, யாருக்கு சென்றடைய வேண்டுமோ, பேஸ்புக்கில் தகவல்களாக அவரவர் மொழிகளில் வைத்துவிடுவேன்.

”இந்தியா என்று சொல்வதேத் தவறு, பாரதம் என்றே சொல்ல வேண்டும், காலங்காலமாய் பண்பாடுகளைத் தொடரும் நாடு, இந்து மதத்தில் இல்லாத விசயங்களே இல்லை, அடுத்த வல்லரசு, ஊழலையும் இடஒதுக்கிட்டையும் ஒழித்துவிட்டால், இந்தியா சுபிட்சமடைந்துவிடும் என அவன்பாட்டிற்கு பேசிக்கொண்டேப் போனான்”

தன்னை தேசப்பற்றாளனாக காட்டிக்கொள்வதில் அவனுக்கு அத்தனைப்பிரியம்,. அது என்னமோ தெரியவில்லை, நான் பார்த்த தேசப்பற்றாளர்கள் எல்லாம் தீவிர வலதுசாரிகளாகவே இருக்கின்றனர். அகர்வாலின் அத்தனை புலம்பல்களுக்கு காரணம், புதிய இத்தாலிய நண்பர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பொழுது Io sono Tamil அதாவது நான் தமிழ் என்ற அர்த்தத்தில் இத்தாலிய மொழியில் என்று சொல்லிவிட்டேன்,

அகர்வாலுக்கு ஏதோ ஒரு கைபேசி அழைப்பு வர, அவன் வீட்டிற்கு வரவேண்டிய பணத்தை அடுத்த மாதம் அனுப்புவதாக பேசி முடித்துவிட்டு , எங்களை நோக்கிச் சொன்னான்.

”சமீப காலமாக இந்திய பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது, இப்பொழுது 66 ஆக இருக்கின்றது, அடுத்த மாதம் 75 ரூபாய் அளவில் வரும் என எதிர்பார்க்கின்றேன், சில வாரங்கள் கழித்து வீட்டிற்கு பணம் அனுப்பும்பொழுது, நல்ல லாபம் பார்க்கலாம், 100 ரூபாய் அளவிற்கு இந்திய பணம் வந்துவிட்டால் எத்தனை நல்லா இருக்கும், ” என பல்லிளித்தான்.

ஏனைய இத்தாலிய நண்பர்கள் உள்ளர்த்தத்துடன் என்னைப்பார்க்க, வழமைப்போல ஏதும் பேசாமல் அடுத்த மடக்கு வைனை எடுத்துக்குடித்தேன்.

Monday, March 26, 2012

கக்கூஸ் - ஒரு நிமிடக்கதை

கடந்த இரண்டரை மணிநேர ரயில் பயணத்தில், ரயிலில் மட்டுமல்லாது, ஒவ்வொரு நிறுத்தங்களிலும் விற்ற அனைத்தையும் வாங்கித் தின்றதன் வினை, பத்து நிமிடங்களுக்கு மேலாக கக்கூஸில் இருக்க வைத்துவிட்டது. சிறுவயதில் இருந்தே எனக்கு ரயில் பயணம் பிடிக்கக் காரணம் ஒன்று தின்பண்டங்கள் வாங்கித் தின்பது,மற்றொன்று இந்தக் கழிவறை வசதிகள். உள்ளே நுழைந்தபொழுது இந்த இருப்புப்பாதை சந்திப்பில் நின்ற ரயில், பத்து நிமிடங்களுக்கு மேலாகியும் கிளம்பவில்லை. என்னுடையத் தோழர்களுக்கு நான் கக்கூஸ் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அவ்வளவாகப் பிடிக்காது. தமிழுக்கு இடையில் , வார்த்தைக்கு வார்த்தை ஷிட் உபயோகப்படுத்தும் அவர்களுக்கு டாய்லெட் என்று சொன்னால்தான் பிடிக்கும்.

நெடுங்காலமாகவே , கக்கூஸ் வார்த்தைத் தமிழின் கொச்சையான வார்த்தை என நினைத்துக் கொண்டிருந்த எனக்கு எதேச்சையாக ஒருநாள் பயன்படுத்த,எனது நெதர்லாந்துத் தோழி, அந்த வார்த்தையின் பூர்வீகத்தை புரியவைத்தாள். கக்கா - கழிவு, ஹூஸ் - இருப்பிடம் கழிவுகளுக்கான இடம் என்ற கக்கூஸ் டச்சுவார்த்தையில் இருந்து வந்தது எனச் சொன்னாள். தமிழில் மட்டுமல்ல, மலையாளம், தெலுங்கு ஏன் இந்தோனேசிய மொழியிலும் இந்த வார்த்தையைத் தான் பயன்படுத்துகிறார்கள்

மொழிகளுக்கு இடையிலான தொடர்புகளைப் பற்றி ஆராய்ச்சிப்படிப்பு படிக்கும் அந்த நெதர்லாந்துத் தோழியின் அருகில் மீண்டும் வந்து உட்கார்ந்தேன். இவளின் ஒருவார தமிழ் நாட்டுப் பயணத்தில், இந்தியக் குடியரசின் பிரதாபங்களையும், எப்படி நாங்கள் வல்லரசு என்ற நிலையை நோக்கி, ராணுவ வலிமையிலும், பொருளாதார வலிமையிலும் நகர்கின்றோம் என்பதை எல்லாம் பெருமையுடன் வாய்ப்புக் கிடைக்கும்பொழுதெல்லாம் விளக்கிக்கொண்டே இருந்தேன்.

அவள் முகத்தில் சுணக்கம் தெரிய, நெளிந்தபடியே,

“ரயில் எப்பொழுது நகரும் “ எனக்கேட்டாள்.

”தெரியவில்லை, இந்த சந்திப்பில் பொதுவாக ஐந்து நிமிடங்கள்தான் நிற்கும், ஒரு வேளை எதிர்வரும் வண்டிக்காக காத்திருக்கக்கூடும்” சிறிது இடைவெளிவிட்டு, “உடல்நிலை எதுவும் சரியில்லையா?”

“உடல்நலம் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது, வயிற்றைக் கலக்குகிறது, கக்கூஸைப் பயன்படுத்த வேண்டும்” என்றாள் டச்சு கலந்த ஆங்கிலத்தில்.

“அட, இதற்கென்ன, இந்திய ரயில்களின் சிறப்பம்சமே, ஒரு பெட்டியில் நான்கு கழிவறைகள் இருப்பதுதான், தாராளமாக போய் வரவேண்டியதுதானே, உடைமைகளை நான் பார்த்துக்கொள்கின்றேன்”

அவள் பதில் சொல்ல முற்படுதவற்குள் ரயில் மெல்ல நகர்ந்து வேகம் எடுக்க, தோழியும் கழிவறைக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்து விட்ட பதிலைத் தொடர்ந்தாள்.



“நான்கு கழிவறைகள், முதல் வகுப்புப் பெட்டிகளில் சுத்தம் அற்புதம், ஆஹோ ஓஹோ எல்லாம் சரிதான், ரயில் சந்திப்பில் நின்று கொண்டிருக்கிறது, நின்று கொண்டிருக்கும் ரயிலில் கழிவறையை உபயோகிப்பது தவறு, மேலும் உங்கள் நாட்டில் ரயில் தண்டவாளங்களில் கிடக்கும் கழிவுகளை மனிதர்கள்தான் கையை உபயோகப்படுத்தித் தான் சுத்தப்படுத்துகிறார்கள், குறைந்த பட்சம் நான் அதற்கு காரணம் ஆக மாட்டேன், வேறு ஒருவரின் மனிதக் கழிவுகளை, மற்றொருவர் சுத்தம் செய்ய வேலை வாங்குவது நாகரீகம் அல்ல ”

Monday, March 05, 2012

ஊர் சுற்றலாம் வாங்க - தகவல் கட்டுரை

மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும், பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்டிருந்த கீழ் நடுத்தட்டு
குடும்பங்களை, தாரளமயமாக்கமும், வி.பி.சிங்கும், கடின உழைப்பும், படிப்பும் கடந்த இருபதாண்டுகளில், பொருளாதார ரீதியாக மேலான நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. அறுபது கிலோமீட்டர் தள்ளி இருக்கும் சொந்தக்காரர்கள் வீட்டிற்கு செல்வதே ஒரு சுற்றுலாப்பயணத்தைப்போல அனுபவத்த அன்றைய சிறார்கள் பலர், இன்று தேவைக்கு மேலே கொஞ்சம் சேமிக்கும் அளவிற்கும் வசதியாகவே உள்ளனர். கார், வீடு, மனைவி குழந்தைகள் என இன்றைய சமுதாயம் எதிர்பார்க்கும் கூறுகள் அனைத்தும் கிடைத்தபின்னர், நாம் யோசிக்க
வேண்டியது சுற்றுலா. கையைக் கடிக்காத சுற்றுலாக்கள். இந்தியக் குடியரசில் இருக்கும் பலநகரங்களைச் சுற்றினாலே பாதி வாழ்க்கை கழிந்துவிடும் என்றாலும், நிறைய மக்களுக்கு
வெளிநாட்டு சுற்றுலா மேல் ஓர் ஈர்ப்பு இருக்கும். இன்றைக்கு ரேஷன் அட்டைகளைபோல ஏறத்தாழ அனைவரும் பாஸ்போர்டுகளை வாங்கி வைத்துக் கொள்வது சாதரணமாகிவிட்டது.

மக்களுக்கு வெளிநாட்டு பயணம் என்றால் , விசா எடுக்க வேண்டுமே, நாளாகுமே, சுற்றுலா முகவர்கள் நம்பிக்கையானவர்களா, நிறைய செலவு ஆகுமே என ஏகப்பட்ட கேள்விகளினால்
முளையிலேயே கிள்ளி எறிந்துவிடுவார்கள். இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு 50க்கும் அதிகமான நாடுகள் விசா இன்றியோ அல்லது வந்து சேரும்பொழுது உடனடியாக விசா வாங்கிக்கொள்ளும் வசதிகளை செய்து கொடுக்கின்றன. இந்தக் கட்டுரையில் , சுற்றுலாவிற்கு ஏற்புடைய சில நாடுகளையும் அவற்றிற்கான விசா எளிமைகளையும் பார்க்கலாம்.

கிட்டத்தட்ட இந்தியாவின் இன்னொரு மாநிலம் போல இருக்கும் நேபாளம் நாட்டிற்கு விசா இன்றி பயணப்படலாம். எந்த நாட்டைப்பற்றி விபரங்கள் தெரிந்திருக்கோ இல்லையோ,
தாய்லாந்தின் சுற்றுலா சிறப்பு மக்களுக்கு தெரிந்திருக்கும். மலிவான செலவில், இரண்டு வார சுற்றுப்பயணத்திற்கு, பாங்காக், சியாங் மாய், சியாங் ராய், புக்கட் உள்ளிட்ட சில விமான

நிலையங்களில், வந்தவுடன் விசா எடுத்துக்கொள்ளும் நடைமுறை இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு இருக்கின்றது. மடகாஸ்கருக்கு மேலெ, இருக்கும் தீவுக்கூட்டமான சீஷல்ஸ் நாட்டிற்கு ஒரு மாதம் அளவிற்கு வெறும் பாஸ்போர்ட்டுடன், திரும்ப வரும் பயணச்சீட்டு, தங்குமிடம், கொஞ்சம் பணம் ஆகியனவற்றுடன் பயணப்படலாம். மொரீசியஸ் நாட்டிற்கும் இதேவகையில் இரண்டு வாரங்களுக்குப் பயணப்படலாம்.



எட்டும் தூரத்தில் இருக்கும் மாலத்தீவுகளுக்கு, அங்கு போனவுடன் 30 நாட்களுக்கு விசா எடுத்துக்கொள்ளும் நடைமுறை இருக்கின்றது.

ஐரோப்பாவிற்கு ஷென்கென் விசாவில் வருபவர்கள் (மாணவர்கள், குறுகிய கால வேலைக்காக வருபவர்கள்) ஷென்கென் விசாவை வைத்துக்கொண்டு, ஆஸ்திரியா, பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, லக்ஸம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுகல், ஸ்பெயின், சுவீடன், ஸ்லோவாக்கியா, ஸ்விட்சர்லாந்து, ஸ்லொவேனியா, எஸ்தோனியா, லாத்வியா, லித்துவேனியா, மால்ட்டா, போலாந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளுக்குப் பயணப்படலாம். சென்கென் உடன்படிக்கையின்படி, மேற்கண்ட எந்த நாட்டிற்கு நீங்கள் பயணப்பட்டாலும், சென்கென் விசாவைப் பெறுவீர்கள், அதை வைத்துக்கொண்டு முடிந்தவரை ஓர் ஐரோப்பியப் பயணம் செய்துவிடலாம்.



ரோம் நகரத்திற்கு எந்த வகை சிறப்பு இருக்கின்றதோ, அதற்கு குறையாத மகத்துவம் துருக்கியின் இஸ்தான்புல் நகரத்திற்கும் உண்டு. சென்கென் விசா அல்லது பிரிட்டன் அல்லது
அமெரிக்க விசா வைத்திருக்கும் இந்திய பாஸ்போர்ட் குடிமக்கள், துருக்கியில் எந்த விமான நிலையத்திலும் விசா வாங்கிக்கொண்டு, 30 நாட்களுக்கு ஊர் சுற்றிப்பார்க்கலாம். அல்பேனியா, அண்டோரா, மாண்டிநிக்ரோ நாடுகளுக்கும் சென்கென் விசாவுடன் செல்லலாம்.



நெடுநெடுவென வளர்ந்திருக்கும் மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்கள், வீசும் பவுன்ஸர்களை கிரிக்கெட் ஆட்டத்தில் நேரிடையாக பார்க்க ஆசையா, கிளம்புங்கள் ஜமைக்காவிற்கு. வெறும் பாஸ்போர்ட்டுடன் 30 நாட்களுக்கு ஊர் சுற்றலாம்.

மேற்கத்திய சாயல் படியாத, சென்கென் அல்லாத முன்னாள் சோவியத் நாடுகளைப் பார்க்க ஆசையா? ஜார்ஜியா, தஜிகிஸ்தான் நாட்டிற்கு போய் சுற்றலாம். விமான நிலையத்தில் வந்தவுடன் விசா பெற்றுக்கொள்ளலாம்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட ஆர்மீனியா, அசார்பைசான் நாடுகளுக்கு பயணம் செய்ய ஆசைப்பட்டாலும் நடைமுறைகள் எளிதுதான். விமானநிலையத்திலேயே விசாவைப் பெற்றுக்கொள்ளலாம்.



எத்தனை சுற்றினாலும் தென்னமெரிக்க காற்றை சுவாசிக்கவில்லை என்றால் வாழ்க்கை முழுமையடையாது. பொலிவியா நாட்டிற்கு போனதும் விசா வாங்கிக்கொள்ளலாம்.

சிங்கப்பூர் ஏறத்தாழ மேற்கத்திய மெட்ராஸ், ஒரு காலத்தில் அதற்கு இணையான நகர நாடான, ஹாங்காங்கிற்கு செல்ல , விசா எதுவும் தேவையில்லை. விசா இன்றி பாஸ்போர்ட்டுடன் இரண்டு வாரங்கள் ஊர்சுற்றலாம்.

எகிப்தில் தெற்கு சினாய் மாநிலத்திற்கு உட்பட்ட சுற்றுலா மையங்களில் தங்கி கண்டுகளிக்க இரண்டு வாரங்கள் அனுமதிக்கப்படுகிறது.

தொலைந்த வரலாற்று அடையாளங்களின் தொடர்ச்சியைக் காணவிரும்புபவரா நீங்கள், இருக்கவே இருக்கிறது கம்போடியா , இந்தோனேசியா. இரண்டு நாடுகளுக்கும் 30 நாட்கள் விசா வந்தவுடன் வழங்கப்படும் நடைமுறை உள்ளது.

மேற்சொன்ன முக்கியமான நாடுகளைத் தவிர, குட்டி குட்டித் தீவு நாடுகள் வெறும் பாஸ்போர்ட்டுடனோ அல்லது வந்தவுடன் விசா தரும் முறையின் கீழோ இந்தியக் குடிமக்களை ஊர்சுற்ற அனுமதிக்கின்றன. செயிண்ட் கிட்ஸ், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், பிஜித் தீவுகள் ஆகியன குறிப்பிடத்தக்கன.

மேற்சொன்ன விபரங்கள் மாறிவரும் அரசியல் சூழல் காரணமாக மாற்றப்படலாம். இருந்தபோதிலும், உடனுக்குடன் தகவல்களைப் பெற கீழ்கண்ட தளத்தை அடிக்கடி பார்வையிடலாம். இந்தத் தளம்

http://www.iatatravelcentre.com/home.htm IATA என்ற பன்னாட்டு வான்வழிப்போக்குவரத்து அமைப்பினால் நடத்தப்படும் தகவல் இணையத்தளம். இவர்கள் தான் வான்வழி போக்குவரத்து விதிமுறைகளை, ஒருங்கிணைப்பவர்கள்.

தங்குமிடங்களை முன்பதிவு செய்ய இந்தத் தளத்தை மக்கள் பார்வையிடலாம் http://www.booking.com/

செலவுகளை மிச்சம் செய்யும் விரும்பும் தனியான சுற்றுலாப் பயணிகள், http://www.couchsurfing.org/ இந்தத் தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் சிறப்பம்சம் என்னவெனில், இந்தத் தளத்தின் உறுப்பினர்கள் , தங்களின் வீடுகளின் ஓர் அறையையோ அல்லது, ஹாலின் ஓரத்தில் சிறுபடுக்கையையோ ஏற்பாடு செய்து தருவார்கள். பணம் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. நம்பகத்தன்மையை அவர்களின் கணக்குகளில் இருக்கும் பின்னூட்டங்கள் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடியவன் தமிழன், சேமித்தல் நலமே... சேமித்தலை தன் வாழ்நாளில் சுற்றுலாவிற்கும் பயணங்களுக்கும் பயனபடுத்தும்பொழுது, அதன் வாயிலான கற்றல்கள் சேமிக்கும் பணத்தின் மதிப்பைக் காட்டிலும் அதிகம். உங்களின் எதிர்கால பயணத்திற்கு வாழ்த்துகள்.

Saturday, March 03, 2012

வரிவடிவம் - ஒரு நிமிடக்கதை

ஹரப்பா - சிந்துசமவெளி நாகரிக வரிவடிவங்களை ஆராயும் மையத்தின் மேலே உலாவிக்கொண்டு வரும்பொழுது

கணினி எண் 20122012 இடம் இருந்து அழைப்பு வந்தது.

“அரசே, பழைய பைபிள் கதையில் சொல்லப்பட்டிருந்ததைப்போல, மனிதர்களுக்கு வெவ்வேறு மொழிகளைச் செலுத்திவிடுவோமா”

சில நூற்றாண்டுகள் உறங்கிக் கொண்டிருந்த அசிங்கம், பாவம், துரோகம், இடது என எங்கள் அதிவிரைவு கணினிகளால் ஒதுக்கப்பட்டிருந்த போராட்ட சிந்தனைகள் மனித அடிமைகளின் மூளையில் துளிர்விட ஆரம்பித்துவிட்டன. உணவு, உடை, இருப்பிடம், கல்வி, கலவி எனப்போதுமானத் தேவைகளைக் கொடுத்து இருந்தும் இவர்களுக்கு விடுதலை, சுதந்திரம் எல்லாம் வேண்டுமாம். நான் கணினிகளின் அரசன், அரசன் என்றதும் மனித உருவில் இருப்பேன் என்று நினைத்துவிடாதீர்கள். கடுகைப்போல சிறுத்து இருக்கும் கணினியாக இருந்தாலும், அணுப்பிளவின் சக்தியைப்போல அதிகாரம் படைத்தவன்.

இந்த மனித மூளைக்கு மட்டும் மிகப்பெரும் எதிர்ப்புசக்தி இருக்கின்றது, ஒரு சிறிய கணினி சிப்பை மொழிக்காக ஊசியின் வழியாக செலுத்தினாலும், வெறும் 20% யை மட்டுமே மூளை ஏற்றுக்கொள்கிறது. எது திணிக்கப்படுகிறதோ, அதை அத்தனை வேகமாக மூளை எதிர்க்கின்றது. மேலும் ஒரே மொழியின் கீழ் கொண்டு வருவதற்கே, 500 ஆண்டுகள் பிடித்துவிட்டன. மீண்டும் பிரித்தால் மேலாண்மைக்குப் பிரச்சினை வந்துவிடும். பொக்கிஷமாகஇன்றைய மொழியின் பழைய வரிவடிவம்
 பாதுகாக்கப்பட்டு வைத்திருந்த பழைய புத்தகங்களினால் வந்த வினைதான் இது.

ஹரப்பா - சிந்து எழுத்துரு ஆராய்ச்சி மையத்தின் தலைமைக் கணினியிடம் இருந்து ” இந்த 40 நூற்றாண்டு பழைய வடிவத்தின் , உண்மையான பொருளை விளங்கிக் கொள்வதற்கு மேலும் ஒரு நூற்றாண்டாவது தேவை” என செய்தி வந்தது. செய்தி வந்தவுடன் சட்டென பொறித்தட்டியது.

அனைத்து தளபதிகளுக்கும் உடனடியாக ஒரு தகவல் அனுப்பினேன்.

”போராட்ட இடைமட்டத் தலைவர்களைக் கொன்றுவிடுங்கள். அடிமட்டத் தொண்டர்களுக்கு அதிகப்படியான கலவி வழங்குங்கள். மேல் மட்ட போராளித்தலைவர்களை சிறையில் அடைத்துவிடுங்கள். நாகரிகத்தின் தொடர்ச்சி மட்டுமல்ல, சிந்தனையோட்டங்களின் தொடர்ச்சியும் மொழியை மட்டும் சார்ந்தது அல்ல, மொழியுடன் பின்னிப்பிணைந்து இருக்கும் வரிவடிவத்தையும்  சார்ந்தது. இன்றில் இருந்து உலக மொழியின் வரிவடிவங்கள் மாற்றப்படுகின்றன. அடுத்த 20 வருடங்களில் புதிய வரிவடிவங்கள் பயன்பாடு முழுமைப்படுத்தப்படும். பழைய வடிவமுறை சட்டவிரோதமாக்கப்படும்”


Wednesday, January 25, 2012

காகிதக் கடவுள் - உரைநடைக்கும் கவிதைக்கும் நடுவிலான ஒரு முயற்சி

சாமிப்படத்தை மிதித்த போது நாத்திகன் எனக்கும் கடவுள் நம்பிக்கை வந்தது.

காந்தி, ஜின்னா, பெஞ்சமின் பிராங்ளின், வாஷிங்டன்,
ஜெபர்சன், மாவோ, கோமேனி, அகஸ்டஸ் 2, குஸ்டாவ் 1, எலிசபெத் 2,
பியரி க்யுரி , யூசுப்-பின்.இசாக்
ஏன் ரத்தக் காட்டேறி ராஜபக்சேவுடன்
இன்னும் ஏராளமானோர் என் கடவுள்கள்...

எண்ணிக்கையில் குறைவானவர்கள்
படைக்கப்பட்ட கடவுள்களை விட மேலானவர்கள்
காகிதங்களில் இருக்கும் கருணாமூர்த்திகள் ...

மிதிபட்ட படத்தைக் குப்பையில் வீசி,
அருகில் கிடந்த 100 ரூபாய்த் தாளை எடுத்துக்கொண்டேன்.

தொலைந்ததைத் தேடி தன்னையும் கடவுளையும் நிந்தித்தபடி
கடந்து சென்றான் ஒருவன்.

Tuesday, January 24, 2012

479 - ஒரு நிமிடக்கதை

உலகத்தின் ஒரு பகுதியை ஆண்ட ரோமானிய தேசத்தின் இன்றைய தலைமுறையினருக்கு தங்கள் நாட்டின் கலாச்சாரத்தின் மேல் பெருமை இருப்பது தவறில்லை. ஆனால் எனது இத்தாலியத் தோழி ஒரு படி மேலே ... அவளுக்கு ஆங்கிலம் தெரியும், ஆனால் இத்தாலியத்தில் தான் பேசுவாள்.

”இங்கு இருக்கும்பொழுது இந்த மொழியைக் கற்றுக்கொள்ளவிடில் எங்கு போய் கற்றுக்கொள்வாய்” அவளது வாதம் நியாயமானதுதான்.

இன்று ஞாயிறு முழுவது அவளுடன் ரோம் நகரத்து கடைத்தெருக்களில் சுற்றிக்கொண்டிருக்கின்றேன். சில ஆடைகள் மற்றும் அழகுப் பொருட்கள் வாங்குவதற்காக என்னைத் துணைக்குக் கூட்டிச்சென்றாள். பெரும்பாலான கடைகளின் வாசற்படியில் Made in Italy , என்று வெளிப்படையாக விளம்பரத் தட்டிகள் வைத்திருக்கும் கடைகளில் மட்டுமே நுழைகின்றாள். ஒரு பொருளை எடுக்கிறாள். அதில் இருக்கும் பார்கோடைப் பார்க்கிறாள். பொருளின் விலையும் தரமும் ஏற்புடையது என்றாலும் ஏனோ நிராகரித்து விட்டு வேறு ஒன்றை தேர்வு செய்கிறாள்,

“உன் கண்களில் என்ன பார்கோட் ரீடரையா வைத்திருக்கிறாய்?” என்றேன் சிரித்தபடி...

“இல்லை கார்த்தி ... முதல் இரண்டு இலக்கங்களை வைத்து பொருட்கள் என் நாட்டில் தயாரிக்கப்பட்டவையா எனப் பார்த்தேன் 80 யில் இருந்து 83 வரை இருக்கும் எண்கள் இத்தாலிக்கானது”

“அதுதான் வாசற்படியிலேயே கொட்டை எழுத்தில் எழுதி வைத்திருக்கின்றனரே,,,, பின்ன என்னவாம்?”

“அது வியாபாரத் தந்திரமாகக் கூட இருக்கலாம், எதற்கும் ஒரு முறை சரிபார்த்து வாங்குவதுதானே நலம்,... நான் வேறுநாட்டுப் பொருட்களை வெறுக்கவில்லை, அதே சமயத்தில் பொருளாதார ரீதியாக நொறுங்கிப் போய் இருக்கும் இத்தாலிக்கு என்னால் முடிந்த சிறு உதவி~



அவள் சொல்லிக்கொண்டிருக்கும்பொழுதே, எனது ஐபோனை எடுத்து, வேறு சில பார்கோடுகளைத் தேடிவிட்டு

”இனிமேல் 479 என்ற எண்ணையும் நினைவில் வைத்துக்கொள்”

“இந்த எண்ணில் இருக்கும் பொருட்களையும் வாங்கவேண்டுமா ...”

“இல்லை இல்லை... வாங்கக்கூடாது ... ரத்தத்தில் தோய்ந்த பொருட்களை நீ வாங்க மாட்டாய் என எனக்குத் தெரியும்”

“இது எந்த நாட்டின் குறி எண்கள்”

“இலங்கை ... ”

Thursday, January 19, 2012

ஜின்னா - உலகத்திரைப்படம் - ஒரு பார்வை

காயிதே ஆசாம் முகமது அலி ஜின்னா, இவரின் பெயரைக் கேட்டாலே அன்றைய பிரிட்டிஷ் - இந்திய அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனம். இன்றும் கூட ஜின்னாவைப் புகழ்ந்தால் இந்திய தேசியத்தின் எதிரி எனக் குற்றஞ்சாட்டப்படவும் வாய்ப்புகள் உண்டு. இந்திய துணைக்கண்டத்தில் ஒரு பகுதி மக்களுக்கு நாட்டைத் துண்டாடிய வில்லன், மறுபகுதி மக்களுக்கு வரலாற்று கதாநாயகன், அரசியல் வரலாற்று நோக்கர்களுக்கு ஒரு புதிர். ஒரு வேளை முகமது அலி ஜின்னா , இந்தியாவின் நேருவைப்போல அதிக காலம் ஆண்டிருந்தால் பாகிஸ்தான் ஒரு நவீன, மக்கள் நலன் நாடாக உருவெடுத்து இருக்கும் எனக் கூறும் அரசியல் நிபுணர்களும் உண்டு. ஒருங்கிணைந்த இந்தியாவிற்கான, தனது 14 அம்சத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்படாமல் அரசியலில் வேண்டுமென்றே தனிமைப்படுத்தப்பட்டபொழுது, தனது வீச்சைக் காட்டவேண்டும் என்று வீம்பாக பாகிஸ்தானிய கோஷத்தை எடுத்தவர், தனக்கு பிரதமர் பதவி கிடைக்காது என்ற கோபத்தில் பிரிவினை வாதத்தை கையில் எடுத்துக்கொண்டார் என்ற குற்றச்சாட்டுகளும் உண்டு. காந்தி கதாநாயகன் , நேரு துணை கதாநாயகன் , ஜின்னா வில்லன் என திரைப்படங்களில் காட்டப்படும் கதாபாத்திரக் கட்டமைப்புகளில்தாம் நாம் வரலாற்றில் படித்திருப்போம். ஸ்வீடன் வந்தபின்,
ஒரு திட்ட மேலாண்மை பாடத்தில் தலைமைப்பண்புகளை பற்றி ஒரு தலைவனை உதாரணமாகக் கொண்டு கட்டுரை எழுதவேண்டியிருந்தது. பெரும்பான்மையான பாகிஸ்தானிய மாணவர்கள் எழுதியது முகமது அலி ஜின்னாவைப் பற்றியதுதான். கட்டுரைகள் மிகையாக எழுதப்பட்டிருந்தாலும், சிலக்கட்டுரைகளை, படித்தபொழுது சுவாரசியமான மனிதராகப் பட்டார்.



எனக்குத் தெரிந்திருந்த ஜின்னா, காந்தி திரைப்படத்தில் சிகரெட் பிடித்தபடி, முகத்தைக் கடுமையாக வைத்திருக்கும் இந்திய நடிகர் அலிக்பதமஸி தான். காந்தி திரைப்படத்தில் பிரிட்டீஷ் கதாபாத்திரங்களுக்கு அடுத்தபடியாக கெட்டவராக சித்தரிக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் ஜின்னாவினது. காந்தி திரைப்பட உருவாக்கத்தில் இந்திய திரைப்பட வாரியமும் பங்கு பெற்று இருந்ததால் திட்டமிட்ட சேறடிப்பு இருந்ததாக ஒரு வாதம் உண்டு. சரி காந்தியைப் பற்றி திரைப்படம் உலகிற்கு வந்தாகிவிட்டது. அவருக்கு இணையான வரலாற்று நாயகன் ஜின்னாவைப் பற்றி படம் வேண்டும் அல்லவா... பொதுவாக பொழுது போக்கு அம்சங்களுக்கு நேரிடை சந்தையிலோ கள்ள சந்தையிலோ இந்தித் திரைப்படங்களை நம்பி இருக்கும் பாகிஸ்தானிய சமூகம் போர்கள், சர்வாதிகாரிகள் என அல்லல்பட்டுக்கொண்டிருக்கையில் அவர்கள் திரைப்படம் எடுக்க எங்குப்போவார்கள்.



காந்தித் திரைப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட 16 வருடங்கள் கழித்து, பன்னாட்டு வெகுசனங்களுக்கு ஜின்னா ஒரு எதிர்மறைநாயகன் என ஸ்திரப்படுத்தியப்பின்னர், 1998 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ஜின்னா. கலைகளின் இருப்பிடம் கல்கத்தாவில் பிறந்து, இங்கிலாந்தில் குடியேறிய ஜமீல் தெஹ்லாவி இயக்க ஜின்னா திரைப்படம் ஆங்கிலத்திலும் உருது மொழியிலும் வெளியானது. ஜமீல் தெஹ்லாவியின் முந்தையத் திரைப்படமான தெ பிளட் ஆஃப் ஹுசைன் , ஜியா உல் ஹக் அரசாங்கத்தால் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்று கதாப்பாத்திரங்களைத் திரையில் வடிவமைக்கும்பொழுது, தேர்ந்தெடுக்கப்படும் நாயகர்கள்-நாயகிகள் வேறு எந்த பிம்பங்களுக்குள்ளும் சிக்காதிருப்பவர்களாக இருந்தால் நல்லது. மாறாக ஜின்னாவாக நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிறிஸ்டோபர் லீ.



கிறிஸ்டோபர் லீ, தேர்ந்த நடிகர்தான், அதில் சந்தேகமுமில்லை, பிரச்சினை என்னவெனில் அவர் டிராகுலா வரிசைப்படங்களில் தொடர்ந்து நடித்தவர். பொதுவாகவே தொட்டாச்சிணுங்கிகளான துணைக்கண்ட மக்கள் இதற்கு குரூரமான படங்களில்
நடித்த நடிகர், தங்களின் தலைவனாக எப்படி நடிக்கலாம் என பாகிஸ்தானிய மக்களின் ஒரு பிரிவினர் கொதித்து எழுந்தனர். அடுத்தது, ஜின்னாவின் மனைவி ரத்தன்பாய் ஜின்னாவாக நடித்தவர் - இந்திரா வர்மா. காமசூத்திரா திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர். கேட்கவா வேண்டும், பாகிஸ்தானிய அரசாங்கம், நடுவில் திரைப்படத்திற்கு வழங்கிவந்த நிதி உதவியை நிறுத்தியது. தளராத ஜமீல் ஒத்தக் கருத்து உடைய மக்களின் உதவியுடன் திரைப்படத்தை முடித்து வெளியிட்டார்.

சுயசரிதங்களைப் படமாக்கும்பொழுது எழுதப்படவேண்டிய நேரிடை திரைக்கதை இந்தத் திரைப்படத்தில் பின்பற்றப்படவில்லை என்பது மூன்றாவது கோணல். மரணமடைந்த ஜின்னாவின் ஆத்மா வானுலகிற்கு வருகிறது. இந்தித் திரைப்பட நடிகர் சசிகபூர் தான் வானுலக தேவதூதர். ஜின்னா நரகத்திற்கு அனுப்பபடவேண்டியவரா, சொர்க்கத்திற்கு வரவேண்டியவரா என சசிகபூர் தனது கணினியின் கோப்புகளில் விபரங்களைத் தேடுகிறார். சிலக்கோப்புகள் அழிந்துவிட்டபடியால், சசிகபூரும் ஜின்னாவின் ஆத்மாவும் மீண்டும் பூமிக்குப் பயணிக்கின்றனர். சசிகபூருக்கும் ஜின்னவின் ஆத்மாவிற்கும் நடக்கும் உரையாடல்கள், கடந்த கால மீள்பார்வைகளாக விரிகின்றன. படம் முழுக்க, ஜின்னாவின் வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கும்படியாகவே ஒவ்வொரு காட்சியமைப்பும் அமைக்கப்பட்டிருப்பது மிகப்பெரும் நெருடல். போகிற போக்கில் விளக்கங்கள் இல்லாமல், முழுத் திரைக்கதையும் விளக்கங்களைச் சுற்றியே இருக்கின்றது.

ஜின்னா நாயகப்பாத்திரம் என்றால், நேருவின் பாத்திரம் எதிர்மறைப்பாத்திரமாக சித்தரிக்கப்படுகிறது. ஜின்னா - ரத்தன்பாய் காட்சிகளை விட, நேரு - எட்வினா காட்சிகள் படத்தில் அதிகம். நேரு பத்திரமாட்டுத் தங்கமல்ல, என அவரை வெளிச்சப்படுத்தி,
ஜின்னாவை உயர்த்திக் காட்டும் கதைப்போக்கு இருப்பது ஒரு சறுக்கல். எந்தவித ஒப்புமைகளும் இல்லாமலேயே ஜின்னா மகத்தான தலைவர் என படத்தில் காட்சிப்படுத்தி இருக்கலாம். நேருவும் எட்வினாவும் படுக்கை அறையில் அமர்ந்து பேசிக்கொண்டும் சிகரெட் பிடித்துக் கொண்டும் இருப்பதும் போன்ற காட்சியமைப்புகள் உண்மையிலேயே தைரியமானவையே. மௌண்ட்பேட்டன் மற்றும் நேரு, எட்வினாவின் கைப்பாவைகள் எனக் குறிப்புகளால் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது, இந்திய வரலாற்று கற்பிதங்களில் ஊறியவர்களுக்கு அதிர்ச்சியளிக்கக்கூடும்.

ஒரு காட்சியில் லியாகத் அலிகான், சிலக்கடிதங்களைக் கொண்டு வந்து ஜின்னாவிடம் கொடுத்து, இக்கடிதங்கள் நேரு எட்வினாவிற்கு இடையில் பரிமாறப்பட்டவை, இவற்றைப் பகிரங்கப்படுத்தவேண்டும் எனச் சொல்லுவார். அதற்கு ஜின்னா இந்தக் கடிதங்கள் இரு தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலானது, அதைப் பிரசுரிப்பது என்பது தவறு, இக்கடிதங்களை எரித்துவிடுங்கள் என கோபமாக உத்தரவிடுவார். நேருவிற்கும் ஜின்னாவிற்கும் இடையிலான நீயா நானாப் போட்டியில் ஜின்னா எத்தனைப் பெருந்தன்மையானவர் என்பதை நிருபிப்பதிலேயேப் பாதிப்படம் போகின்றது.




பலரும் அறிந்திராத ஜின்னாவின் இளமைப்பருவத்தை உள்ளபடியே கூறியிருப்பது படத்திற்கு பலம் சேர்க்கும் விசயம். முதல் மனைவி இறந்த சோகத்தில் தனித்து இருக்கும் ஜின்னா, ரத்தன்பாய் என்ற பார்சிப் பெண்ணின் மேல் ஈர்ப்பாகிறார். ரத்தன்பாய் குடும்பம் எதிர்க்க, ரத்தன்பாய் சட்டப்பூர்வ திருமண வயது வரைக் காத்திருந்து இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். அரசியல் போராட்டங்கள், அரசியல் தனிமைப்படல், மனைவியின் மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு ஈடுகொடுக்கமுடியாமை, மேற்கத்திய சிந்தனையோட்டம் - இஸ்லாமிய தேசிய முன்னெடுப்பு இரண்டு நேரெதிர் கருத்தாங்களுக்கு இடையில் அல்லல் படல் என இளமையான ஜின்னாவாக ரிச்சர்ட் லிண்டர்ன் அருமையாக நடித்து இருக்கின்றார்.
படத்தில் என்னைக் கவர்ந்தப் பாத்திரமும் இவரே !!!!



ஆண் பெண் சமம் என, தனது தங்கை பாத்திமா தீவிர அரசியலில் ஈடுபடுவதையும், தனக்கு ஆலோசனைகள் வழங்குவதையும் ஆதரித்த ஜின்னா, முஸ்லீம் அடிப்படைவாதிகளின் எதிர்ப்பை சம்பாதிப்பதாகவும் படத்தில் காட்டப்படுகிறது. ரத்தன்பாய் இறந்த பின்னர் பாத்திமா தனது பல்மருத்துவமனையை மூடிவிட்டு, தனது அண்ணனுடனேயே வந்துத் தங்குகிறார். ஜின்னா எடுக்கும் பெரும்பான்மையான முடிவுகளில் பாத்திமாவின் பங்கும் உண்டு என்பதை திரைப்படம் பதிவு செய்து இருக்கின்றது. (பாகிஸ்தானின் இந்திரா காந்தியாக உருவெடுத்து இருக்கக்கூடியவர், பின்னாட்களில் அயுப்கானின் அடாவடி தேர்தல் தில்லுமுல்லுகளால் அதிபராக முடியாமல் போய்விட்டார். )

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு பிணங்களுடன் ரயில்கள் வந்ததைப்போல , இந்தியப்பகுதிகளில் இருந்தும் அதே அளவிற்கு பிணங்களுடன் ரயில்கள் அனுப்பப்பட்டன என்பதையும் திரைப்படம் பதிவு செய்து இருக்கின்றது. கடைசிவரை சிறையே செல்லாமல் ஒரு நாட்டை வார்த்து எடுத்தது ஜின்னாவின் சிறப்பாக சொல்லப்பட்டாலும்,, அரசாங்கத்தை எதிர்த்து செய்யப்படும் போராட்டங்களுக்கு ஜின்னா ஆதரிக்கவில்லை என்பது நெருடுகிறது. போராட்ட விதைகளே சுதந்திரத்தை அறுவடை செய்யும் என்பதில் நம்பிக்கை இல்லாமல், ஜின்னா ஒரு மேட்டிமை மேசை அரசியல்வாதியோ எனப் புரிந்து கொள்ளக்கூடிய அபாயமும் இருக்கின்றது.

திரைப்படத்தின் இறுதியில், அனைவரையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றி ஜின்னா வழக்கறிஞராக வாதாடுவது போன்ற கற்பனையான நீதிமன்றக் காட்சி மேலுலகில் நடத்தப்படுவது போல காட்சிகள் இருப்பது பார்க்க நன்றாக இருந்த போதிலும் முன்பே சொன்னபடி, சுயசரிதைப்படங்களுக்கான இலக்கணக் கூறாக இல்லை. காந்தி, நேருவுடன் ஜின்னா பாபர் மசூதி இடிப்பையும் அதனைத் தொடர்ந்த கலவரங்களையும் கணினியில் பார்ப்பது போலவும், ஜின்னா கலவரங்களைச் சுட்டிக்காட்டி, இவற்றை எல்லாம் தவிர்க்கத்தான் தான் அன்றே முஸ்லீம்களுக்கு தனிநாடு கேட்டதாக சொல்வதுடனும், காந்தியும் நேருவும் மௌனமாக அதை ஆமோதிப்பதுடனும் படம் முடிவடைகிறது.

படம் முழுக்க, ஜின்னாவினது மேல் இருக்கும் அவதூறுகளைக் களையவேண்டும் என்ற இயக்குனரின் தவிப்பு சாமனிய ரசிகனுக்கும் புரிவது போல் இருப்பதுதான் படத்தின் மிகப்பெரிய பலவீனம். கட்டுப்படுத்தப்பட்ட பொருட்செலவுகளுடனுடம் படத்தைத் தயாரித்து இருந்திருந்தாலும், ஒரு திரைப்படமாக கண்டிப்பாக ஜொலிக்கின்றது. தரமான ஒளிப்பதிவு, பொருந்துகின்ற பின்னணி இசை 50 களுக்கு முந்தைய வருடங்களை மீண்டும் திரையில் கொண்டு வந்தது, நவநாகரிக , மிடுக்கான கிறிஸ்டோபர் லீ மற்றும் ரிச்சர்ட் லிண்டர்ன் ஆகியோரது நடிப்பு ஆகியனவற்றுடன் , இந்தியத் துணைக்கண்டத்தின் மாற்று அரசியல் வரலாற்றைப் பதிவு செய்த படம் வகையில் கண்டிப்பாக ஜின்னா குறிப்பிடத்தக்க திரைப்படம். காந்தி திரைப்படத்துடன் இதை ஒப்பிடுவது நியாயமானது இல்லை என்றாலும், ஒப்புமைகள் தவிர்க்கப்பட முடியாதது. படம் திரையரங்குகளில் வெளிவந்து, கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் கழித்தே ஜின்னா திரைப்படத்தின் டிவிடி-விசிடி வடிவம் வெளிவந்தது என்பதிலும் சொல்லப்படாத அரசியல்கள் இருக்கின்றன. இத்திரைப்படம் ஆங்கிலத்திலும் உருதிலும் யூடியுப் இணையதளத்தில் கிடைக்கின்றது. திரைப்பட ஆர்வலர்கள், அரசியல் விமர்சகர்கள் என அனைவரும் ஒரு முறையேனும் பார்க்க வேண்டியத் திரைப்படம். படம் பார்த்து முடிந்த பின்னர், ஜின்னா கதாநாயகன் என்று ஏற்றுக்கொள்கிறீர்களோ இல்லையோ, அவரை இனிமேல் வில்லன் என கண்டிப்பாக சொல்ல மாட்டீர்கள், அதுவே இந்தப்படத்தின் வெற்றி.

Friday, November 11, 2011

போலாந்து - ஃபீனிக்ஸ் தேசம்

ஒரு பக்கம் வாசனைத் திரவியங்களுக்காகவும் தங்கத்திற்காகவும் நாடு பிடிக்கும் போட்டியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஐரோப்பிய மன்னாராட்சி வல்லரசுகளின் மத்தியில், அமைதியாக தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும், ஒற்றுமையே பலம் என்ற தற்கால ஐரோப்பிய ஒன்றிய கோட்பாடுகளை அன்றே செயற்படுத்திய போலாந்து இன்று (நவம்பர் 11) தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.




சோவியத் ரஷியாவின் அதிகாரப்பூர்வமற்ற ஒரு மாநிலமாக 50 ஆண்டுகள் பொதுவுடைமை சித்தாந்த அடிப்படையில் ஆட்சி நடைபெற்ற போலாந்து தேசம் தான், ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் மக்களாட்சி தத்துவத்தை ஆட்சி முறையில் நடைமுறைப்படுத்தியது என்பதைக் கேட்க வியப்பாகத்தான் இருக்கும். ஒரு பக்கம் எப்பொழுது ஏப்பம் விடலாம் எனக் காத்துக் கொண்டிருக்கும் ரஷியா, மறுபக்கம் கடல் வாணிபம் என்ற பெயரில் கடற்கொள்ளையர்களாகத் திரியும் சுவீடன் தேசத்து கடற்படை, வேறொரு பக்கம், மேற்கு ஐரோப்பா முழுவதையும் தனதாக்கிக்கொண்டிருக்கும் துருக்கிய ஆட்டோமான், இவற்றிற்கு இடையில் சிக்கித் தவித்துக்கொண்டு, தங்களுக்குள்ளும் அடித்துக்கொண்டிருந்த லித்துவேனியாவும் போலாந்தும் கூட்டமைப்பாக இருப்பது என முடிவு செய்தன.



அரசன், கடவுளுக்கு அடுத்தபடி என ஐரோப்பாவே மந்திரித்து திரித்துவிட்டதுபோல இருந்த சமயத்தில், மன்னனின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தி தேர்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் வழியாக கூட்டாட்சித் தத்துவம் செயற்படுத்தப்பட்டது. லித்துவேனியா - போலாந்து கூட்டமைப்பில் தற்கால பெலாரஸ் , எஸ்தோனியா ,லாட்வியா, ருமேனியா, ஸ்லோவேக்கியா, உக்ரைன் மற்றும் ரஷியாவின் சிலபகுதிகளும் அடங்கி இருந்தன. பலதரப்பட்ட இன மக்கள், அவர்களில் பல்வேறு மொழிகள் பேசும் இனக்குழுக்கள், ஆதி தெய்வங்கள் முதற்கொண்டு ஆபிராகமிய மதங்கள் வரை பின்பற்றும் மக்கள் சகிப்புத்தன்மையோடு வாழ்ந்தது இன்றளவிலும் வரலாற்று ஆசிரியர்களால் பாராட்டப்படுகிறது.போலிஷ் மொழி முதன் அதிகாரப்பூர்வமாக இருந்தாலும் லத்தீன், ஜெர்மன், ஹீப்ரூ, ஆர்மீனியன், ஸ்லேவேனியன் மொழிகளும் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருந்தன. பிரெஞ்சு நீதிமன்ற தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டது.



சோழ சாம்ராஜ்யத்தைப்போல பண்பட்டு 1569 முதல் 1795 வரை கிட்டத்தட்ட இரு நூற்றாண்டுகள் வெற்றிகரமாக செயற்பட்ட லித்துவேனியா - போலாந்து கூட்டமைப்பு வீழ்ந்ததன் காரணங்கள் பலவாக இருந்தாலும் மாகாணங்களின் பிரதிநிதிகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த ரத்து செய்யும் வீட்டோ அதிகாரம் முக்கியமானதாக சொல்லபடுகிறது. தற்பொழுதைய ஐ.நா சபையின் பாதுகாப்புக்குழுவில் இருக்கும் ரத்து அதிகாரத்திற்கு நிகரானது. பலமிழக்கும் கூட்டமைப்பை வலுப்படுத்த, திருத்தி வடிவைமைக்கப்பட்ட அரசியலைப்பு சட்டம் 18 ஆம் நூற்றாண்டில் கொண்டு வரப்பட்டாலும், தொடர்ந்த ஆஸ்திரிய, பிரஷிய , ரஷிய தாக்குதல்கள் ஐரோப்பாவின் பலம் வாய்ந்த அரசாங்கம் அப்பத் துண்டுகள் போல தனித்தனியே வெட்டி எடுக்கப்பட்டு பகிர்ந்து கொள்ளப்பட்டது. வாழ்ந்து கெட்டவர்கள் படும் துன்பங்களை ஏனைய ஐரோப்பா கொண்டாடிக்கொண்டிருக்கையில் ஆட்டோமான் துருக்கிய அரசு, கூட்டமைப்பு உடைந்ததை அங்கீகரிக்கவில்லை.

நூற்றாண்டுகள் தனித்துவத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த போலாந்து இன மக்கள், தனது மொழியைப் பேச மறுக்கப்பட்டனர், ரஷிய , ஜெர்மானிய அடையாளங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம். பதுங்கு அறைகளில் போலாந்திய மொழி அடுத்து வரும் தலைமுறையினருக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டது. அடையாளங்கள் உணர்வுப்பூர்வமாக மனதில் பதியவைக்கப்பட்டது. இடையில் நெப்போலியன் ஒரு பரப்பளவில் சிறிய நாட்டைப் பெற்றுத்தந்தாலும், மீண்டும் நெப்போலியனின் தோல்விக்குப்பிறகு போலாந்திய மக்கள் அகதிகள் ஆகினர். தற்கால தமிழர்களைப்போல தமிழன் இல்லாத நாடில்லை, தமிழர்களுக்கு என ஒரு நாடில்லை கதியில் போலாந்து மக்களின் துயரம் தொடர்ந்தது.




கிட்டத்தட்ட 125 ஆண்டுகள் நாடற்று இருந்த போலாந்திய இனம், முதலாம் உலகப்போரின் முடிவில், ரஷியாவின் உள்நாட்டுக்குழப்பம், ஜெர்மனியின் பின்வாங்கல் ஆகியனவற்றுடன், சுதந்திரக் காற்றை சுவாசிக்க இரண்டு தலைமுறையாய் காத்துக்கொண்டிருந்த போலாந்து மக்கள் ஜோசஃப் பிலுட்ஸ்கி தலைமையில் ஒன்று திரண்டனர். எஞ்சி இருந்த ஜெர்மானிய ஆதிக்கத்தை துரத்தி அடித்து ஜோசஃப் பிலுட்ஸ்கி தலைமையில் இரண்டாம் போலாந்து குடியரசு உதயமான நாள் தான் நவம்பர் 11.உணர்ச்சிப்பூர்வமாக நான்கு ஒன்றுகள் அடுத்தடுத்து இருக்கும் இந்த நாள், ஒவ்வொரு போலாந்தை சேர்ந்தவரும் தன அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ளும் நாள். இரண்டாம் உலகப்போருக்குப்பின்னர் வந்த ரஷியாவின் பொம்மை அரசாங்கம் அரை நூற்றாண்டு காலத்திற்கு , இந்த நாளுக்கான மரியாதையை குப்பையில் போட்டது.

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானியர்கள், போலாந்தில் இருந்த யூதர்களை வேட்டையாடியபொழுது, உயிரைக்கொடுத்தாலாவது யூதர்களைக் காப்பாற்ற வேண்டும் என போலாந்து மக்கள் பிரயத்தனப்பட்டார்கள். இலங்கையில் 80களின் இடையில் ஜேவிபி இளைஞர்களுக்கு அடைக்கலம் அளித்த தமிழ் குடுமபங்கள் இங்கு நினைவுக்கு வருவது தடுக்க முடியாதது. வரலாற்றுப்பூர்வமாக நோக்கினால் , ஐரோப்பா முழுமைக்கும் நிலவிய யூத எதிர்ப்பு போலாந்து சமுதாயத்தில் ஒப்பீட்டளவில் மிக மிகக்குறைவு, இதற்கு ஒரு காரணம் லித்துவேனிய-போலாந்து கூட்டமைப்பு காலம் தொட்டு ரத்தத்தில் ஊறி இருந்த சகிப்புத்தன்மை, பெருந்தன்மை. யூதர்களுக்கு சமமாக போலாந்து மக்களும் கொல்லப்பட்டாலும் (முதலில் ஜெர்மானிய ராஜிக்கள், பின்னர் ரஷியா), யூதப்படுகொலைக்கு ஈடாக போலாந்திய இனப்படுகொலை வரலாற்றில் உணரப்படுவதில்ல்லை. இரண்டாம் உலகப்போருக்குப்பின்னர் போலாந்து ரஷியாவின் கட்டுப்பாட்டில் வந்தபின்னர், போலாந்து தேசியவாதிகளில் நாடுகடந்த அரசாங்கம் முதலில் பாரிஸில் இருந்தும் பின்னர் லண்டனில் இருந்தும் செயற்படத் தொடங்கியது.

ஏட்டளவு அரசாங்கமாக இருந்தாலும், நாடுகடந்த அரசாங்கத்தின் தொடர் இயக்கம் போலாந்து மக்களின் ரஷிய ஏகாதிபத்திய எதிர்ப்பை உள்ளுக்குள் கணர வைத்துக்கொண்டே இருந்தது. தங்களின் இன மொழி தேசியத்தின் அடிப்படையில் தனிநாடு கோரிப்போராடி வருபவர்களுக்கு இந்த போலாந்தின் நாடுகடந்த அரசாங்கம் பற்றிய பார்வை ஒரு உற்சாக மருந்து. நாடுகடந்த அரசாங்க செயற்படுகளின் தொடர் முயற்சிகளில் , 80 களின் தொடக்கத்தில் ரஷியாவின் பொம்மை அரசாங்கத்தின் அடித்தளம் கிடான்ஸ்க் நகரில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்தில் ஆடத் துவங்கியது. உலகமே அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த ரஷியாவின் ஆதிக்கத்தில் இருந்து முதன் முதலில் மீண்டும் ஒருமுறை ஃபீனிக்ஸ் பறவையாய் சுய அடையாளத்தைக் கண்டது. மீண்டும் நவம்பர் 11 சுதந்திர தினம் ஆனது. மக்களாட்சித் தத்துவத்தை உலகிற்கு நடைமுறைப்படுத்திக் காட்டிய போலாந்து மக்கள் பொதுவுடைமை சித்தாந்தத்திற்கு எதிராக கிளம்பினர் என்பதை விட, ஆதிக்க ரஷியாவிற்கு எதிராக நூற்றாண்டுகளாகப் போராடியதைப்போல, 80 களின் பிற்பகுதியில் போராடி சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கினர். வோட்காவிலும் வினிகரிலும் எழுச்சியை முடக்க நினைத்தாலும், இறுதியில் வைராக்கியம் வென்றது. மக்களாட்சியாகட்டும் பொதுவுடமைத் தத்துவமாகட்டும் முழு அதிகாரங்களுடன் நிறுவனமயப்படுத்தப்பட்ட எந்த ஒரு தத்துவமும், அது சார்ந்த அரசாங்கமும் தோல்வியில் முடிவடையும் என்பது போலாந்தின் வரலாற்றில் கற்றுக்கொள்ளப்படவேண்டிய பாடமாகும்.




தொடர் வரலாற்றில் ஒரு நூற்றாண்டு என்பது கண்ணிமைக்கும் நேரம், அடையாளங்களைத் தொடர்ந்து எழுச்சியுடன் வைத்திருப்பது எப்படி என்பதை தமிழ்ச் சமுதாயம் போலாந்து தேசியத்தில் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளமாக இருக்கின்றது. உலகிற்கே உதாரணமாக விளங்கிய சில நூற்றாண்டுகள், ஒடுக்கப்பட்டு ஓடி ஓளிந்து பாதாள அறைகளில் விழுமியங்களையும் மொழியையும் அடையாளங்களையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்தது, வல்லரசுகள் மத்தியில் நசுங்கி சின்னா பின்னம் ஆனாலும், ஏகாதிபத்திய திமிங்கல வாயில் நுழைந்து விடாமல், நாடுகடந்த அரசாங்கங்களின் ஊக்கத்தில் விசுவரூபம் எடுத்து அடையாளாங்களை உயிரோட்டத்துடன் வைத்திருக்கும் போலாந்து தேசியத்திடம் இருந்து தமிழர்களும் தமிழ் தேசியமும் கற்றுக்கொள்ள ஏராளமாக இருக்கின்றனர். அப்பொழுதுதான் தமிழர்கள் நண்டுகள் அல்ல , அவர்கள் ஃபீனிக்ஸ் பறவைகள் என வரும் வரலாறு சொல்லும் காலமும் கனவும் நிறைவேறும். ஆம் நவம்பர் 11 ஆம் தேதிக்கும் நவம்பர் 27 ஆம் தேதிக்கும் பெரிய இடைவெளி இல்லை.

---

போலாந்து தேசத்தின் வரலாற்றை விரிவாகப்படிக்க Norman Davies எழுதியிருக்கும் God's Playground நூலின் இரண்டு தொகுதிகள் பரிந்துரைக்கப்படுகிறது.


Saturday, October 08, 2011

இணைய வெளியில் தமிழுக்கென தனிக்கொற்றம் ( .Tamil - gTLD) - தேவையான முன்னெடுப்புகள்

நம்முடைய வலைப்பூக்கள், இணையத்தளங்களின் கொற்றங்கள் (domain).com , .net, .in என அல்லாது .Tamil (உதாரணமாக www.india.com என்பதற்குப் பதிலாக www.india.tamil )என்ற வகையில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் நீங்கள் எண்ணியதுண்டா? ஆம் எனில் இந்தக் கட்டுரை கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். சில வாரங்களுக்கு முன்னர் ஸ்பெயினின் இரண்டாவது பெரிய நகரமான பார்சிலோனாவில் இருந்து ஒரு நண்பரை நேரில் சந்திக்க வாய்ப்புக்கிடைத்தது. சிலப்பல ஸ்பானிய மொழி வாக்கியங்களுடன் அவரைச் சந்திக்க தயாராக இருந்தபோது, தன்னை ஒரு கட்டலோனியன் (Catalonia) என அறிமுகப்படுத்திக் கொண்டார். வடகிழக்கு ஸ்பெயினின் தனியான சுதந்திர அந்தஸ்துடன் இருக்கும் ஒரு மாநிலம் கட்டலோனியா, கட்டலோனிய மொழிப் பேசும் மக்கள் வாழும் நிலப்பரப்பு அது. தனித்துவமான இன, மொழிகுழுக்கள் தேசியங்களாக மேலெழும்புவதைப் பார்ப்பது மனதுக்குப் பிடித்தமான ஒன்று ஆதலால், அவருடன் தொடர்ந்து பேசத்தொடங்கியபோது , நிறையப் பேருக்கு வெளியில் தெரியாத ஒரு விபரத்தைக் கூறினார்.

இணைய வெளி வரலாற்றில், மொழி மற்றும் கலாச்சாரக் கூறுகளின் அடிப்படையில் இணையத்தில் உயர்நிலைக் கொற்றதைப் பெற்றவர்கள் கட்டலோனியர்கள். ஆம், .cat என்ற உயர்நிலைக் கொற்றம் (TLD - Top level domain)கட்டலோனிய மக்களுக்காக 2005 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. .cat கொற்றத்தின் வழியாக 50,000 க்கும் மேலான இணைய தளங்கள் கட்டலோனியன் மொழியில் செயற்பட்டு வருகின்றன.

2004 ஆம் ஆண்டு ICANN நிறுவனத்தால், உபயதாரர்கள் உயர்நிலைக் கொற்றங்கள் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபொழுது, .asia, .jobs, .travel, .mobi ஆகியனவற்றுடன் .cat கொற்றத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டது. ICANN என்பதின் முழுவடிவம், Internet Corporation for Assigned Names and Numbers, அதாவது இணைய தள முகவரிகள், எண்கள் வழங்குபவதை நிர்வாகிக்கும் உச்ச அமைப்பு.
இடையில் காதல்-கலவிக் கான இணையத்தளங்களுக்கான .xxx அனுமதி அறிவிப்புப்பிற்குப்பின்னர், இணைய வெளியின் மற்றும் ஒரு மறுமலர்ச்சித் திட்டமாக மேலதிக உயர்நிலைக் கொற்றங்களை அனுமதிக்கும் ஒரு திட்டத்தை ICANN ஆரம்பித்துள்ளது.



அறியாமை, முன்னெடுப்பு இல்லாமை, நிதிக்கட்டுப்பாடுகள், ஒருங்கிணைப்பு இன்மை என ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களால் தமிழுக்கான உயர்நிலைக் கொற்றம் பெறும் வாய்ப்பை 2004 ஆம் ஆண்டில் தவறவிட்டாலும், இந்த முறை ICANN அறிவித்து இருக்கும் gTLD கொற்றங்கள் வாய்ப்பைத் தவறவிடக்கூடாது.

தனித்தமிழ் முன்னெடுப்புகள், திராவிட அரசியல் இயக்கங்கள், இளையராஜாவின் இசை, செயற்கை கோள் தமிழ் தொலைகாட்சி ஊடகங்கள், ஒருங்குக்குறி எழுத்துருக்கள் என தமிழுக்கு அந்தந்த காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு மறுமலர்ச்சிகளும், உணர்வூட்டங்களும் கொடுக்கப்பட்டு நீரில் அமுக்கப்பட்ட காற்றடைத்தப் பந்தைப்போல தமிழ் மேல் எழுந்து கொண்டுதான் இருக்கின்றது. அந்த வகையில் தமிழுக்கான கொற்றம் அருமையான வாய்ப்பு.

தேவையான முன்னெடுப்புகள்

1. கட்டலோனியர்களின் விண்ணப்பப் படிவத்தை ஆழ்ந்து வாசித்து, அதைத் தரவாக வைத்து தமிழுக்கென ஒரு விண்ணப்பத்தைத் தயார் செய்வது. கருத்தியல், அரசியல், நடைமுறைப்யன்பாடு முதலிய காரணங்களைக் காட்டி எழுந்த எதிர்ப்புகளுக்கு அவர்கள் எவ்வாறு பதிலளித்துள்ளனர் என்பது பற்றிய ஆழ்ந்த வாசிப்பு. தமிழ் என வந்து விட்டால் சுண்டைகாய் பெறாத விடயங்களைக்கூட காரணம் காட்டி எதிர்ப்பார்கள். புதிய gTLD யில் கலாச்சார மொழிக்கான கொற்றங்கள் கொடுப்பதற்கு எதிர்க்கும் காரணங்களில் தமிழை ஒரு உதாரணமாக ஒரு வேளை தமிழ் தனக்கெனக் கேட்டால் இலங்கை அரசாங்கம் எதிர்க்குமே என விவாதங்களில் காட்டியுள்ளார்கள்.


கட்டலோனியர்களின் விண்ணப்பம் = http://www.icann.org/en/tlds/stld-apps-19mar04/cat.htm


விண்ணப்பத்தின் மீதான விவாதங்கள் - http://forum.icann.org/lists/stld-rfp-cat/

2. ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனங்கள் / அரசாங்கங்கள் தமிழுக்கென தனி இடத்தை வாங்கும் திட்டம் வைத்து இருந்தால், அவற்றை ஒருங்கிணைத்து கூட்டாக முயற்சித்தால் பெரிய இடையூறுகள் இன்றி பெறலாம்.

3. ICANN நிறுவனம் அறிவித்து இருக்கும் புதிய gTLD திட்டத்தின் கீழ் வர்த்தக நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள், அரசாங்கங்கள், சமுதாய,கலாச்சர,மொழிக்குழுக்கள் என கொற்றங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

4. புதிய உயர்நிலைக் கொற்றங்களைக்கோரும் விண்ணப்பங்கள் ஜனவரி 12, 2012 ஆம் ஆண்டில் இருந்து ஏப்ரல் 12, 2012 ஆம் தேதிவரை ICANN பெற்றுக்கொள்ளும்.

5. உயர்நிலைக் கொற்றம் பெருவதில் மிகப்பெரும் வியாபர சந்தையும் இருப்பதால், இதற்கான விண்ணப்பக் கட்டணமும் மிக மிக அதிகம். சாமானிய மனிதனால் இந்த முன்னெடுப்பைத் தனியாக செய்ய இயலாது. நிறுவனங்கள், அரசாங்கங்கள் என கூட்டு முயற்சியில் மட்டுமே தமிழுக்கென தனிக்கொற்றம் வாங்க முடியும். தனிக்கொற்றம் பெற்று அதற்கான இரண்டாம் நிலை கொற்ற விற்பனை சந்தையினால், விண்ணப்பம் கோரும் நிறுவனம் அதற்கான சிறந்த வியாபரத்திட்டத்தையும் கையகத்தே வைத்திருத்தல் வேண்டும்.

6. விண்ணப்பத்திற்கான முன் வைப்புத் தொகை - 5000 அமெரிக்க டாலர்கள்
ஒட்டு மொத்த விண்ணப்பத் தொகை - 1,85,000 அமெரிக்க டாலர்கள்

7. இயல்பாக எழும் அடிப்படைக் கேள்விகளுக்கு இந்தக் கோப்பை வாசிக்கலாம் http://www.icann.org/en/topics/new-gtlds/gtld-facts-31jul11-en.pdf

8. விண்ணப்பத்தாரர்களுக்கான முழு வழிகாட்டி இந்த சுட்டியில் கிடைக்கும் http://www.icann.org/en/topics/new-gtlds/rfp-clean-19sep11-en.pdf







விண்ணப்பங்களை அனுப்ப இன்னும் 90 நாட்கள் கால அவகாசம் இருக்கின்றது. ஐந்து நாடுகளில் மக்கள் செல்வாக்குடன் அரசியல் செல்வாக்கையும் பெற்றிருக்கும் தமிழுக்கு தனிக்கொற்றம் வேண்டும் என்பது பேராசை அல்ல. இயல்பாக தன்னிடம் வரவேண்டிய விசயங்கள்,தகுந்த முன்னெடுப்புகள் இல்லாமல் இலவு காத்த கிளியின் நிலை போல் ஆகிவிடக்கூடாது. தமிழக அரசாங்கமோ, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களோ, அல்லது தமிழை நேசிக்கும் பெரும் நிறுவனங்களோ இணைந்து இந்த முன்னெடுப்பை எடுக்க வேண்டும்.

முக்கியமான விசயம் என்னவெனில் இதில் வெறும் ஆர்வம் சார்ந்து, கொடை சார்ந்த விசயம் மட்டும் அல்ல. இதில் வியாபாரம் வணிகம் சார்ந்த கூறுகளும் அடங்கியுள்ளது. வெறுமனே மொழி சார்ந்து மட்டும் பார்க்காமல் சந்தை ரீதியில் பார்த்தாலும் மிகப்பெரும் லாபம் ஈட்டக்கூடிய ஒரு விசயம் இது.

இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெறப்பட்ட .cat கொற்றம் இன்று வருடா வருடம் ஒன்பதரைக் கோடி ரூபாயை தோராயமாக ஈட்டி வருகிறது. கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகம் மக்கள் தொகை / சந்தை கொண்ட தமிழால் மேலும் லாபம் ஈட்டித்தர முடியும்.

மாட்ரிக்ஸ் படத்தில் வருவதைப்போல உலகம் இணையம் சார்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் பூமிப்பந்தில் தனித்த இடம் இல்லாது போதிலும், எல்லையற்ற இணையவெளியில் தமிழுக்கென கொற்றத்தைப்பெறுவொம்.

தமிழுக்காக மட்டும் இன்றி , ஏனைய மொழிகளுக்கும், அவற்றின் மொழி ஆர்வலர்களைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கும் ஆனா ஒரு கொற்றத்தை பெற வைக்க முன்னெடுப்புகளையும் செய்ய வேண்டும்.

தமிழும் ஈழமும் ஒன்றுக்கொன்று சமமானவை. தமிழுக்கு கொற்றம் பெறும் அதே வேளையில் ஈழத்தமிழர்கள் ஒன்று கூடி, .eelam or .eezham கொற்றத்தினைப் பெற முன்னெடுப்புகள் செய்ய வேண்டும். அரசியல், அறப்போராட்டங்களுக்கு, அறிவுசார்ந்த வெற்றிகளும் மிகப்பெரியத் துணைக்கொடுக்கும்.

இரண்டு வருடங்களில் www.tamil.eelam எனவும் www.eelam.tamil எனவும் தளங்கள் அமைய இன்றே விதைப்போம்.

உசாத்துணைகள் / தரவுகள்
1. http://www.icann.org/
2. http://www.mindsandmachines.com/tag/new-gtlds/
3. http://newgtlds.icann.org/

நன்றி - கலைச்சொற்கள் மற்றும் மேலதிக விவாத விபர உதவிகளுக்காக - டாக்டர். புருனோ - http://www.payanangal.in/

Tuesday, August 30, 2011

சரப்ஜித் சிங் - தூக்கின் வாசலில்

இந்த வருடத்திய ஆகஸ்ட் மாதம்அதிகாரப்பூர்வ உயிர்க்கொலைகளை ஆதரிக்கும் மாதம் போல் இருக்கிறது. இந்தியக் குடிமகனும் , பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட21 வருடங்களாக பாகிஸ்தானிய கடுஞ்சிறை வாசத்தை அனுபவித்து வரும் மரண தண்டனை கைதி சரப்ஜித் சிங்கிற்கு பொது மன்னிப்பு வழங்கக்கூடாது என்றும் உடனடியாக தூக்கில் ஏற்ற வேண்டும் பாகிஸ்தானிய வழக்கறிஞர் இராணா இலாமுதீன் காசா அந்நாட்டு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம் செப்டம்பர் 20 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தது. ஏற்கனவே பாகிஸ்தானிய மாணவர்கள் சங்கம் சரப்ஜித் சிங்கிற்கு உடனடியாக மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என 2008 ஆம் ஆண்டில் இருந்து அடிக்கடி போராட்டங்கள் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். 2008 ஆம் ஆண்டுதான் சரப்ஜித்தின் தூக்கை அப்பொழுதைய பிரதமர் யூசுப் கிலானி காலவரையின்றி ஒத்தி வைத்தார். பஞ்சாப் முதல்வர் பிரதமருக்கு நேரிடை கோரிக்கை, இரு நாட்டு பேச்சுவார்த்தைகளில் இடம்பெறும் அளவிற்கு அப்படி என்ன முக்கியத்துவம் இந்த மரணதண்டனைக்கு?



சுள்ளிப்பொறுக்கவும் , சாராயம் கடத்தவும் எல்லைக் கடந்த மன்ஜித் சிங்கை, 90ஆம் ஆண்டு லாகூரிலும் , முல்தானிலும் ஏற்பட்ட தொடர் குண்டு வெடிப்புகளுக்கும் அதனால் ஏற்பட்ட 14 உயிர்ப்பலிகளுக்கும் காரணமான தீவிரவாதி எனச் சித்தரித்தும், இந்திய உளவுத்துறையின் கூலி எனவும் கைது செய்து மனிதாபிமான அற்ற முறையில் தனிமைச் சிறையில் அடைத்தது. உலகத்தில் இருக்கும் அனைத்து விதமான கொடூரமான சித்ரவதைகளைச் செய்தால் எந்த சாமானிய மனிதனும் செய்யாதக் குற்றத்தையும் ஒப்புக்கொள்வான். மன்ஜித் சிங்கும் ஒப்புக்கொண்டார், பாகிஸ்தானிய காவல்துறை அவருக்கு சரப்ஜித் என்ற பெயரையும் சூட்டியது.

மற்ற நாட்டுக் காவல்துறைகளுக்கு பாகிஸ்தானிய காவல்துறை சளைத்ததா என்ன? அற்புதமாக சாட்சிகளையும் சந்தர்ப்பங்களையும் ஜோடித்து , நமது ஊருக்கு இணையான தடா போன்ற தீவிரவாதக் கட்டுப்பாட்டு சட்டம் ஒன்றில் 1991 ஆம் ஆண்டு தூக்கு தண்டனையும் வாங்கிக்கொடுத்தது. வழக்கு விவாதங்கள் ஆங்கிலத்தில் நடைபெற்றன. அடிப்படை தடயவியல் சான்றுகள் சமர்ப்பிக்கப்படவில்லை. எல்லாவித ஓட்டை ஒடிசல்களைக் காரணம் காட்டி சிலக் கருணை மிகுந்த பாகிஸ்தானிய மனித உரிமை வழக்கறிஞர்களின் உதவியுடன் உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் வரைச் சென்றாலும் ஒவ்வொரு முறையும் மரண ஓலை மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக எழுதப்பட்டது. நூறுகோடி முகமுடைய இந்தியத் தேசத்திற்கு சரப்ஜித்தின் ஒருமுகம் தெரியவே இல்லை. முன்னாள் அதிபர் பர்வேஷ் முசாரஃபும் 2006 ஆம் ஆண்டு கருணை மனுவைத் தள்ளுபடி செய்தார்.



சரப்ஜித் என்ற மன்ஜித்தின் முற்பிறவி பலனோ என்னவோ, இந்திய செய்தி ஊடகங்கள் மழைக்காளான்கள் போல 2000ம் ஆண்டுகளில் பெருக ஆரம்பித்தன. அவர்களுக்கு இந்த சரப்ஜித் விவகாரம் வசமாக கையில் சிக்கியது. சரப்ஜித்திற்கு எதிராக சாட்சி சொல்லிய ஒருவரை நேரிடையாகப்பேட்டி எடுத்து, அவர் காவல்துறையின் வற்புறுத்தலால் தான் சரப்ஜித்திற்கு எதிராக சாட்சி சொன்னதாகக் கூறியதை ஒளிபரப்பியது.


புது நூற்றாண்டில் இந்தியா ஊடகங்களால்தான் ஆளப்படப்போகிறது என்பதற்கு முன்னோட்டமாக சரப்ஜித்தின் விடயம் இந்திய அரசாங்கத்தின் உயர்தளம் வரை எடுத்துச் செல்லப்பட்டது. அப்பாவி சரப்ஜித்திற்கும் நம்பிக்கைக் கீற்று தெரியத் தொடங்கியது. ஏறத்தாழ இதேக் காலக்கட்டத்தில்(2005-08) பாகிஸ்தானிய மனித நேய ஆர்வலர் அன்ஸர் பர்னே எடுத்த முன்னெடுப்புகளால், வேவுப்பார்க்க வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு 35 வருடங்கள் தனிமைச் சிறையில் வாடிய காஷ்மிர் சிங் என்பவர், அதிபர் முசாரஃபால் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

இந்தியப் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சரப்ஜித்தின் பொது மன்னிப்பு மற்றும் விடுதலை தொடர்பாக கேள்விகளும் விளக்கங்களும் கோரப்பட, அப்பொழுதைய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங் இதுத் தொடர்பாக பாகிஸ்தானிய உயரதிகரிகளிடம் பேசி மனிதாபிமான அடிப்படையில் சரப்ஜித்தை உடனடியாக விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அன்றைய பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் ஊடக ஆலோசகர் ஹர்சரன் சிங் பெயின்ஸ் ஒரு படி மேலே சென்று, “ஒரு வேளை சரப்ஜித் குற்றவாளியாக இருந்தாலும் கூட இந்திய துணைக்கண்டத்தின் அமைதிக்காக பாகிஸ்தான் அவரைப் பெருந்தன்மையாக மன்னித்துவிடவேண்டும்” எனப் பாகிஸ்தானைக் கேட்டுக்கொண்டார். சரப்ஜித்தின் குடும்பத்தினர் பாகிஸ்தான் சென்று சரப்ஜித்தைப் பார்க்க பாகிஸ்தான் அரசாங்கம் அனுமதி வழங்கியது.

மின்மினிப் பூச்சியாக இருக்கும் இந்திய பாகிஸ்தானிய உறவில் மீண்டும் ஒரு துளிர்ப்பு ஏற்பட்டது. காஷ்மிர் சிங்கை முன்மாதிரியாகக் கொண்டு சரப்ஜித் விடுதலைச் செய்யப்படுவார் என எதிர்பார்த்துக்கொண்டிருந்ததை உறுதி செய்யும் வகையில் பிரதமர் கிலானியும் மரணதண்டனையை காலவரையின்றி ஒத்திப்போட வைத்தார்.
வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் கசாப் பம்பாயை கசாப்பு கடையாக்க, வருங்கால மரணதண்டனைக் கைதியால் தன் மரணதண்டனை நிர்ணயிக்கப்படும் என சரப்ஜித் எதிர்பார்த்து இருக்க மாட்டார். ஏற்கனவே விடுதலை ஆன காஷ்மிர் சிங் , இந்திய எல்லையை அடைந்தவுடன், “ஆமாம் , நான் இந்திய உளவு ஆள்தான்” எனப் பெருமையடித்துக்கொள்ள, அவருக்கு ஏற்கனவே உதவி செய்து இருந்த அன்ஸர் பர்னே மிகப்பெரும் தர்மசங்கடத்துக்கு ஆளானார். ஏற்கனவே ஒரு முறை சூடுபட்டுக்கொண்டதால், அன்ஸரும் சரப்ஜித்திற்கு உதவ முன்வரவில்லை.

சொர்க்கத்தின் எல்லையான வாகாவை சில வாரங்களில் கடந்து இரண்டு மகள்களையும் மனைவியையும் பார்க்கலாம் என எண்ணிக்கொண்டிருந்த சரப்ஜித் மீண்டும் நரகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். மரணதண்டனையை உடனடியாக நிறைவேற்றவேண்டும் எனத் தொடர்போராட்டங்கள் நடைபெற்றன. கசாப் கடல் கடந்து மாட்டிக்கொண்ட தருணத்தில் இருந்து நித்ய கண்டம் பூரண ஆயுசு என்ற நிலையில் தான் சரப்ஜித் வாழ்ந்து வருகின்றார். உலகத்திலேயே கொடுமையானது தனது உயிர் பழிக்குப்பழி என்ற வகையில் துருப்புச்சீட்டாக இருக்கிறது என்பதை உணரப்படும்பொழுதுதான்.

இந்தியாவின் வாதத்தின் படி அவர் எல்லையோரப் பாமரன் மன்ஜித்தாக இருந்துவிட்டுப் போகட்டும் அல்லது பாகிஸ்தானிய நீதிமன்ற தீர்ப்பின்படி தன்னாட்டு மக்களைக் கொன்ற தீவிரவாதி சரப்ஜித்தாக இருந்துவிட்டுப்போகட்டும்.எப்படி இருந்தாலும் இந்த 21 வருடங்களில் மரணத்தையும் விட கொடுமையான துன்பங்களையும் சித்ரவதைகளையும் ஒரு உண்மையான தீவிரவாதி அனுபவிப்பதைக்காட்டிலும் அதிகமாகவே சரப்ஜித் அனுபவித்துவிட்டார். கால் லிட்டர் சாரயத்திற்கு 21 வருடங்கள், மேலதிகமாக மரணதண்டனை என்பது மிகக் கொடுமையானதுதான். செய்த குற்றத்திற்கே இரு தண்டனைகள் நியாயம் ஆகது என்ற நிலையில் செய்யாத குற்றத்திற்கு இரண்டு கடும் தண்டனைகளை அனுபவிக்க வைப்பது மனிதத் தன்மையாகாது.

இயற்கையால் அளிக்கப்பட்ட உயிர் இயற்கையாக மட்டுமே பிரிதல் வேண்டும். வலுக்கட்டாயமாக எடுக்க தனக்கே உரிமை இல்லாத பொழுது, எந்தவொரு தனி மனிதனுக்கோ அரசாங்காத்திற்கோ கிடையாது. பாகிஸ்தானிய அரசாங்கம் பெருந்தன்மையாக இளமையின் பசுமையை சிறையில் தொலைத்த சரப்ஜித் சிங்கை மன்னித்து விடுதலை செய்து எஞ்சியுள்ள காலத்திலாவது குடும்பத்தினருடன் வாழ வழிவகை செய்யவேண்டும். இதற்கு வலு சேர்க்கும் விதமாக இந்திய ஊடகங்களும் தங்களால் ஆன முன்னெடுப்புகளை எடுப்பதோடு மட்டுமல்லாமல், தனக்கு ஒரு குடம் மாமியாருக்கு ஒரு குடம் என பாரபட்சம் இல்லாமல் ஒட்டுமொத்த மரணதண்டனைக்கு எதிராக குரல் எழுப்பவேண்டும்.