Sunday, February 02, 2014

எருதின் புண் - சிறுகதை


ஞாயிறு அன்று 12 மணிவரை தூங்குபவன், ஆனால் எட்டு மணிக்கே எழுந்து சிவஞானத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். ஆழ்வார்திருநகர் பக்கம் நீங்கள் வந்து இருந்தால் அச்சு அசப்பில் ஒரே மாதிரி இரண்டுவீடுகளைப்
பார்த்து இருக்கலாம். அந்த இரண்டுவீடுகளின் சொந்தக்காரர்தான் சிவஞானம்.  நான் அந்த வீடுகளில் ஒன்றில் குடித்தனம் இருப்பவன்.  அனேகமாக வீடு வாடகையை ஏற்றத்தான் வருகின்றார் என யூகித்து இருந்தேன். சென்ற ஆண்டு ஆயிரம் ரூபாய் ஏற்றினார்.

"முரசொலி படிச்செல்லாம் அறிவை வளர்த்துக்க முடியுமா என்ன?" என்ற வழமையான குசும்புடன் வெளி இரும்புக்கதவை உள்ளே தள்ளியபடி வந்தார் சிவஞானம்.  அவரின் கையில் இருந்த தினமலரை வாரமலருக்காக பெற்றுக்கொண்டேன்.

சிவஞானம் என்ற பெயரை , அவரின் பெற்றோர்கள் சிலம்புச்செல்வர் ம.பொ.சி நினைவாக வைத்தனர் என கேட்காமலேயே அடிக்கடி சொல்லுவார். ம.பொ.சி அவரின் நெருங்கிய சொந்தக்காரர் எனப் பெருமைசொல்லிக்கொள்வதற்காக அவர் போடும் முதல் வரி என்பது நீண்ட நாட்கள் கழித்துத்தான் புரிந்தது.  திமுக என்றால் அவருக்கு ஆகாது, கலைஞர் என்றால் அவருக்கு அப்படி ஒரு வெறுப்பு.

"என்ன உங்கத் தலீவர் டெசோ கிசோன்னு எதுவும் வேலை ஆரம்பிக்கலியா ? எலக்‌ஷன் டைம் வேற நெருங்கிடுச்சு"

மனைவியிடம் கூட கிண்டலுக்கு பதில் நக்கல் அடித்து விடலாம்.  ஆனால் வீட்டு உரிமைக்காரர்களிடம் ஸ்ட்ரிக்ட் நோ நோ.

ஆக, கலைஞர், பாராட்டு விழாக்களில் ஒரு ஓரசிரிப்பு சிரிப்பாரே, அதைப்போல சிரித்துக் கொண்டேன்.

"தமிழ்த்தலைவன்னு சொல்லிட்டு , சிங்களத்தமிழர்களுக்கு இப்படி துரோகம் செஞ்சிருக்கக் கூடாதுப்பா..."

ஆத்திரம் வந்தது. கலைஞரை கேலி செய்ததற்காக அல்ல. சிங்களத்தமிழர்கள் என்றதற்காக... அம்மு நான் ஆத்திரப்படும்பொழுது எல்லாம் சரியாக கண்டுபிடித்துவிடுவாள். ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தி நான் சிரிக்கும்பொழுது அது மிஸ்டர் பீன் சிரிப்பைப்போல இருக்குமாம்.  என் மிஸ்டர் பீன் சிரிப்பை ஆமோதித்தலாக நினைத்துக் கொண்டு கலைஞரை தொடர்ந்து வசைப் பாடிக்கொண்டிருந்தார். எனக்கு மனம் எவ்வளவு வாடகை ஏற்றப்போகிறார் என்பதில்  இருந்தது.

"சரி, தம்பி, இந்த மாசத்தில இருந்து வாடகை 2000 ரூபாய் எக்ஸ்ட்ரா கொடுத்துடுங்க" என்றார்.

தனிவீடு, கார் பார்க்கிங் இப்படி ஒரு வீடு சென்னையில் கிடைப்பது சிரமம் என்பதால், 2000 ரூபாய் ஏற்றம் அதிகம் என்றாலும் ஏற்றுக்கொண்டேன்.  காப்பி, மிக்சர் உபசரிப்புகள் முடிந்தவுடன் , வாரமலரில் சினிமா கிசுகிசு செய்திகளின்
சுவாரசியத்தினால், வாரமலர் இணைப்பை மட்டும் என்னுடன் வைத்துக்கொண்டு தினமலரை அவரிடம் திருப்பிக் கொடுத்தேன்.

வீட்டு வாசற்படி சென்றவர், திரும்ப வந்தார். "யோகநாதாராசா வீட்டிற்கும் போறேன். நீங்களும் கூட வர்றீங்களா" எனக் கூப்பிட்டார்.

யோகநாதராசா இன்னொரு வீட்டின் குடித்தனக்காரர். ஈழத்தமிழர். தன் மனைவியுடன் இங்கு வசிக்கின்றார். அவரின் மகன்கள் பிரான்சில் புகலிடம் விண்ணப்பம் கொடுத்து நீண்ட நாட்களாகக் காத்திருப்பதால் எப்பொழுதும்
மென்சோகத்துடன் தென்படுவார். கள்ள முகவர்கள் , எப்படி , அவரின் மகன்களை பிரான்சு என சொல்லி உருகுவேயில் இறக்கிவிட்டதையும் அங்கு கையில் சல்லிக்காசு இல்லாமல் கஷ்டப்பட்டதையும் சொல்லும்பொழுது, கடினமான உள்ளம் படைத்த காரியகார என்னையும் உலுக்கும்.

நான் கலைஞரின் ரசிகன் என்றாலும் யோகநாதாராசா "என்னய்யா , உங்க அய்யா எங்களை ஏமாத்திட்டாரே" சொல்லும்பொழுது மனதைப்பிசையும்.  நேரிடையாகப் பாதிக்கப்பட்டவர்களிடம் அறிவுப்பூர்வ அரசியல் பேசுவது அழகல்ல என்பதால் பதில் சொல்ல மாட்டேன். அவர் பேசுவர் நான் கேட்பேன். புலிவேசம் போடாத புலியாக இருந்தபோதிலும் சகோதரயுத்தம் தொடங்கி ராஜபக்சேவை வெற்றியடையச் செய்தது வரை புலிகளின் அரசியல் தடுமாற்றங்களைச் சொல்லுவார். பல சமயங்களில் கேட்டல் வழி வரலாறு ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றை விட உண்மையாக இருக்கும்.

பாரிசில் இருந்து எனக்கு ஏதாவது தேவையா எனக் கேட்பார். நான் வேண்டாம் என மறுத்துவிடுவேன். பாரிசில் அலுவலக விசயமாக ஆறு மாதங்கள் இருந்திருக்கின்றேன். தூங்க கூட நேரமில்லாமல் தட்டுக்கழுவி குருவியாய் ஈழத்தமிழர்கள் எப்படி காசு சேர்ப்பார்கள் என்பதை கண்ணால் பார்த்து இருக்கிறேன்.  குருவிகளிடம் பங்கு கேட்கும் கோட்டானாக ஆக நான் விரும்பியதில்லை.

"உங்களுக்கு இதில எந்த கஸ்ரமும் இருக்காது.மகன்மார் எல்லாரும் வெளிநாட்டில தானே இருக்கிறாங்க..இந்த மாசத்தில இருந்து வாடகைய அஞ்சாயிரத்தால கூட்டலாம்னு இருக்கேன். ஈரோல பாத்தா கொஞ்சம் தான் வரும்.அத சொல்லலாம் எண்டு தான் வந்தனான்"

இமிடேடட் ஈழத்தமிழில் சிவஞானம் யோகநாதராசாவிடம் பேசினார்.  சிவஞானம் யோகநாதராசாவிடம் நெருக்கம் காட்டுவதற்காக ஈழத்தமிழில் பேசுகின்றார் என்பது என் அவதானம்.

யோகநாதராசா முகத்தில் சலனமின்றி சரி எனத் தலையாட்டினார்.   பார் கண்ணா பார், உனக்கு நான் மற்றவரைவிட குறைவாக வாடகைக்கு வீடு தந்து இருக்கின்றேன் என தனது பெருந்தன்மையை பறைசாற்றிக் கொள்வதற்காகத்தான் சிவஞானம் என்னை உடன் வரச்சொன்னார் என்பது புரிந்தது.

'பிறகு,மகன்மார ப்ரான்ஸில இருந்து நல்ல வைன் போத்தில் ஒண்ட அனுப்ப சொல்லிவிடுங்களேன்?'

யோகநாதராசா அதற்கும் சரி என்றார். சிவஞானம் விடைபெற்றுக்கொள்ள யோகநாதராசா என்னை இருந்துவிட்டு போக சொன்னார்.

'மகன்மாரோட விசாவ ரிஜெக்ட் பண்ணிட்டாங்க கார்த்தி,எப்ப கலைச்சுவிடுவாங்கன்னு பயந்துகொண்டு கள்ளமா இருக்கிறாங்க. இதுல .போன ஒரு வருசத்தில நாலு தரம் வாடகைய கூட்டிறாங்க , என்ன செய்றதுன்டு தெரியல்ல.'  யோகநாதராசாவின் கண்கள் கலங்கின.