Thursday, February 06, 2014

மேரி - சிறுகதை

சந்தர்லேந்தில் இருந்து 20 மைல்கள் தொலைவில் இருக்கும் இந்த பள்ளிக்கு, அம்மு, நிரந்தர தலைமை சமையல்காரராக வந்ததும் வராததுமாய்   தனது உதவியாளர்கள் லின், ஜாக்குலின் , ஜின், கரோலின் ஆகியோர்களிடம் கேட்ட கேள்வி " மேரி எப்படி இருக்கின்றாள் " என்பதுதான்.

ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்த  அவர்களை அம்மு அப்படி கேட்க ஒரு பெரிய கதை இருக்கின்றது. அந்தக் கதையை நான் உங்களுக்கு சொல்கின்றேன்.  ஆறு மாதங்களுக்கு முன்னர் , இதே பள்ளிக்கு தற்காலிக தலைமை சமையல் ஆளாக அம்மு வந்திருந்த பொழுது நடந்த கதை.   
---
அம்மு, இந்தியத் தமிழ்ப்பெண்,  வடக்கு இங்கிலாந்தில் , அதுவும் வயதில் 50 களைக் கடந்த  உதவி சமையல் ஆட்களுக்கு  வெள்ளையரல்லாத ஒருத்தி அதிகாரம் செலுத்தும் இடத்திற்கு வருவது அறவே பிடிக்கவில்லை.  ஆங்கிலேயர்களுக்கு அன்றும் இன்றும் மற்றவர்கள் ஏவலாட்களாக இருந்தால் பிடிக்கும்.  மேலாளர்களாக , மற்றவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது.   இருந்தாலும் , இரண்டு வாரங்கள் தானே என வெறுப்பைக் காட்டிக்கொள்ளாமல் அம்முவுடன் நட்பு பாராட்டினர். 

" இனிமேல் நாங்கள் நான்கு பேரும் உன் தோழிகள், இன்னொரு தோழியும்  கூட இருக்கின்றாள் "  

" யார் அந்த தோழி , வேலைக்கு விடுப்பா ?"  என்ற அம்முவின் கேள்விக்கு   நான்கு ஆங்கிலேய உதவியாளர்களும் சிரித்தனர். 

" மேரி ,  இந்தப்பள்ளியில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வேலை பார்த்தவள் , ஒரு நாள் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுதே மாரடைப்பினால் இறந்து போனாள்"  

"பயப்படாதே , புதிதாய் வந்து இருப்பவர்களை மட்டும் மிரட்டும், பழைய ஆட்களை ஒன்றும் செய்யாது " என லின் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க 

அம்முவின் கண்களில் கலவரம் தெரிந்தது . இருந்தாலும் காட்டிக்கொள்ளாமல்  

"இந்தியாவில் இருந்த பொழுது , உங்களின் ஆங்கிலேயப் பேய்களை விட பயங்கரமான பேய்களைப் பார்த்து இருக்கின்றேன் , சரி வேலையை ஆரம்பிப்போம் "   என பயத்தையும் வேலையாட்களையும் விரட்டினாள். 

ஒரு நாள் கழிப்பறை உட்பக்கமாக தாழிடப்பட்டு இருக்கிறது. மற்றொரு நாள் யாரோ ஓடுவதைப்போல இருக்கின்றது என லின் , ஜாக்குலின் அம்முவிடம் வந்து சொன்னார்கள். 
  
அடுத்த வாரம் ,

 "லின் ... மேசையில் இருந்த இனிப்புகளைக் காணவில்லை  இனிப்பின் காகிதங்கள், குப்பைத் தொட்டியில் கிடக்கின்றன , வெள்ளியன்று நான் தான் சமையல் அறையைப் பூட்டினேன் , இன்று திங்கள் , நான் தான் முதல் ஆளாய் திறந்தேன் .. வார இறுதியில் வேறு யாரவது இங்கு வருவார்களா  "  

"அனேகமாக , மேரி எடுத்து சாப்பிட்டு இருக்கலாம் "  

" நகைச்சுவைக்கான நேரம் இதுவல்ல, லின்,  பொருட்கள் ஏதேனும் காணமல் போய் இருக்கின்றதா எனப்பாருங்கள் " 

கெகெபிக்கெவென நான்கு உதவியாளர்களும் சிரித்ததைப் பார்த்த அம்மு அவர்களைப் பார்த்து முறைத்தபடி 

" தங்களை வைத்து கிண்டல் செய்யப்பட்டால், இந்தியப் பேய்களுக்கு கோவம் வரும், தொடர்ந்து வந்து துரத்தும்...  ஆங்கிலப் பேய்களுக்கு எப்படி எனத் தெரியவில்லை "  

வெட்டியாய் இருத்தல்தான் கிலியைத்தரும். சமையல் கால் பங்கு என்றால், அது சார்ந்த சுகாதாரம்,  சரிவிகித உணவு கண்காணிப்பு , பரிமாறுதல்  வேலைகள்  ஆகியன முக்கால் பங்கு. ஆரம்ப பள்ளி குழந்தைகளுக்கான உணவு என்பதால் இந்தக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை சரியாக கடைப்பிடிக்க வேண்டும். இந்தக்கவனக்குவிப்பான வேலை மும்முரத்தில் பேயாவது பிசாசாவது என அடிக்கடி சொல்லிக்கொண்டு அம்மு பணிகளில் மூழ்கி போய்விட்டாள். தற்காலிகப் பொறுப்பின் கடைசி நாளன்று ஒரு புகார் ஒன்று வந்தது.  தலைமை ஆசிரியர் , அம்முவை அழைத்து , ஒரு குழந்தை , உணவு சூடாகப் பரிமாறப்படுவதில்லை என , தனது பெற்றோரை இன்று கூட்டி வருகின்றது என சொன்னார். 

உதவியாளர்கள் இந்த பிரச்சினையைப்பற்றி கவலையேப்படாமல்  அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். அம்மு, தான் இந்தப்பள்ளிக்கு வந்த நாள் முதல் , உணவு விகிதங்கள் , வெப்ப அளவீடுகள் என அனைத்தையும் அலுவலக  குறிப்பு ஏடுகளில் ஆவணப்படுத்தி வைத்து இருந்தமையால் உதவியாளர்களின் அக்கறை இன்மையை பற்றிக் கவலைப்பட்டதாக தெரியவில்லை.  குழந்தைகளுக்கு உணவுப் பரிமாறப்படும் முன் , சூட்டை அளவு எடுத்துவிடலாம் என்றால் , வெப்ப மணியைக் காணவில்லை.  அதைத் தேடி எடுத்து சூட்டை சோதித்தால் கருவி வேலை செய்யவில்லை. நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. அம்மு படபடப்பானாள்.  புதிதாக வாங்கிய கருவி. பழுதாக வாய்ப்பில்லை என ஆராய்ந்ததில்  பேட்டரியைக் காணவில்லை.  பேட்டரி கழண்டு கீழே விழும் அளவிற்கு இலகுவான மூடி அல்ல.  

" இறுக்கமாக மூடி இருக்கின்ற வெப்ப மானியில் எப்படி பேட்டரி காணாமல் போகும்  "  

'ஒரு வேளை மேரி எடுத்து இருப்பாளோ "  என்று சொன்ன லின்னைப் பார்த்து ஒரு பேயைப்போல முறைத்தாள் அம்மு. 

அனைவரும் தேடினர். பாத்திரங்கள் வைக்கும் மரப்பலகைக்கு அடியில் சுவற்றை ஒட்டியபடி கிடந்த அந்த சிறிய  பேட்டரியை அம்மு எடுத்தாள், வெப்பமானியை சரி செய்தாள், சூட்டை குறித்துக் கொண்டாள். புகார் செய்த குழந்தையின் பெற்றோர் உணவை சரிப்பார்த்தனர். அவர்களுக்கு திருப்தி.  தலைமை ஆசிரியருக்கும் திருப்தி.  கடைசி நாள் அதுவுமாக பிரச்சினை ஏற்பட்டு நல்லவிதத்தில் சரியானது அம்முவிற்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.  எல்லோரிடமும் இருந்து விடைபெற்றுக் கொள்கையில் , அவளின் உதவியாளர்கள் பேயறைந்ததைப் போல இருந்தனர். 

நான்கு உதவியாளர்களும் , கறி பெண்   என அம்முவை திட்டிக்கொண்டே கூடினர் . கறி என்பது  இந்தியர்களுக்கான பட்டப்பெயர்.  

" ஜாக்குலின்  தானே பேட்டரியைக் கழட்டினாள்" 

" ஆமாம் லின் , இதோ பார், என்னிடம் தான் இருக்கின்றது, அப்புறம் எப்படி அந்த கறி பெண்ணிற்கு பேட்டரி கிடைத்தது " 

'ஒரு வேளை மேரி "  என்றாள் லின் . 

---

இதுதான் ஆறு மாதங்களுக்கு முன்னர் நடந்த கதை. இருங்கள் ... இருங்கள் , கதை முடியவில்லை.  உண்மையில் வெப்பமானியை வாங்கும் பொழுது ஒன்றிற்கு இரண்டாய் பேட்டரிகளை அம்மு வாங்கி வைத்து இருந்தாள்.  பேட்டரியைக் காணவில்லை என்றவுடன்,  இவர்கள் தான் எடுத்து இருப்பார்கள் என அவளுக்குப் புரிந்தது.  படபடப்பானதைப் போல காட்டிக்கொண்டு , பேட்டரியை அடியில் உருட்டி விட்டு பயம் காட்டியவர்களுக்கே பயம் காட்டிப் போனவள் தான் திரும்ப நிரந்தர தலைமையாக வந்து இருக்கின்றாள்.   சரி இந்தக் கதை எனக்கு எப்படித் தெரியும்  ....தெரியும்   தெரியும்   ....இதை எல்லாம் பார்த்தவள் நான்...நான் தான் மேரி.