அவுட்சோர்ஸ்ட் - Outsourced - திரைப்பார்வை
இந்தியாவின் அடையாளங்கள் என மேற்கத்திய உலகினரால் அறியப்படும் நெரிசாலான ரயில்கள், சண்டை போட்டுக்கொள்ளும் டாக்ஸி டிரைவர்கள் , எருமை மாடுகள், ஹோலிப்பண்டிகை என வழக்கமான அம்சங்களுடன், ஒரு அமெரிக்க ஆள் இந்தியாவில் படும் பாட்டைச் சொல்லப்போகும் படமாக இருக்கும் என 'அவுட்சோர்ஸ்ட்' படத்தை ஆர்வமின்றி பார்க்க ஆரம்பித்தால் என்ன ஆச்சரியம், எதிர்பார்த்ததை விட சுவாரசியமாகவே இருந்தது. டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார் என்ற அளவில் மட்டுமே இன்னும் ஆங்கிலம் இருப்பதால், புரிந்து கொண்ட அளவிற்கு இந்த திரைப்பார்வையைப் பதிகின்றேன்.
இந்தியாவின் ஏழ்மைக்கு ஆஸ்கார் வாங்கித் தந்த ஸ்லாம்டாக் மில்லியனர் வெளியாவதற்கு மூன்று வருடங்களுக்கு முன் வெளியான அவுட்சோர்ஸ்ட் ஆங்கில ஹாலிவுட் திரைப்படத்தின் கதை, மும்பையில் காராபுரி என்னும் புறநகர்ப்பகுதியில் அமைந்திருக்கும் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசியில் சேவை அளிக்கும் மையத்தின் பணித்திறனை அதிகப்படுத்த வரும் அமெரிக்க கதாநாயகனின் பார்வையில் விரிகின்றது.
சாராசரியாக,ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் எடுக்கும் சேவை அழைப்பின் நேரத்தை(MPI - Minutes per Incident) ஆறு நிமிடங்களுக்கு கீழ் குறைக்க வேண்டும் என்ற பணியுடன்வரும் டாட் ஆண்டர்சன் (ஜோஸ் ஹாமில்டன்) எப்படி சக ஊழியர்களை அரவணைத்து (ஊழியர்களில் ஒருவரான கதாநாயகி ஆயிஷா தார்கரையும் தான்)தன்னுடைய நோக்கத்தை செயலாக்குகிறார் என்பதை நகைச்சுவை இழையோடச் சொல்லி இருக்கிறார்கள்.
”என் வேலையை எடுத்துக்கொள்ளப்போறவனுக்கு நானே பயிற்சி அளிக்க வேண்டுமா” என வேண்டாவெறுப்பாக இந்தியா வரும் நாயகனுக்கும் ஹாலிவுட் ரசிகர்களுக்கும் இந்திய ரயில், டாக்ஸி, எருமை மாடு, தெருவோர ஐஸ் என அறிமுகப்படுத்திய பின்னர் Future Call Center Manager என அறிமுகமாகும் புரோகித் நரசிம்மாசார்யா விஜயநாரயணன் (ஆசிப் பஸ்ரா) வருகைக்குப்பின்னர் படம் சூடு பிடிக்கிறது.
யாரையும் குறைவாக எடைபோடாமலும் மட்டம் தட்டாமலும் இந்திய விழுமியங்களும் அமெரிக்க விழுமியங்களும் இணையும் புள்ளிகளில் மெல்லியக் காதலுடன் கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குனர் ஜான் ஜெஃப்கோட்.
நாயகனின் கைபேசியைத் திருடிச்செல்லும் சிறுவன் ஒவ்வொரு கட்டத்திலும் அதைத் திருப்பிக் கொடுக்கும் வகையில் காட்சி அமைத்திருப்பதும் சிறுவனின் ஓவியத்திறமையை நாயகன் ஊக்குவிக்கும் சில நொடிக்காட்சிகளும் பிரமாதம்.
முட்டைக் கண்களுடன் கொஞ்சம் முதிர்ச்சியாகத் தெரிந்தாலும் ஆயிஷா தார்க்கர் 'என் அம்மா என் அப்பாவை நேசிக்க கற்றுக்கொண்டாள், நானும் என் கணவனை நேசிக்கக் கற்றுக்கொள்வேன்' எனும்பொழுதும் ‘ஹாலிடே இன் கோவா' விளக்க காட்சிகளிலும் பின்னுகிறார். சிவலிங்கத்தின் காரணத்தை விளக்கிக் கூறும் இடமும் குறிப்பிடத்தக்க்கது.
ஒரு அமெரிக்கனுக்கான சம்பளத்தில் பத்து பேர் வேலைப்பார்த்ததால் இந்தியாவுக்கு வேலைகளை மாற்றிய அமெரிக்க நிறுவனங்கள் அதே சம்பளத்தில் 15 அடிமைகள் சிக்கினால் இங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றவும் தயங்க மாட்டார்கள் என்ற அரசியலையும் சொல்லத் தயங்கவில்லை. இந்தியாவில் சீனாவிற்கு இடம்பெயரும் கால் செண்டருக்கு நிர்வாகியாக புரொகித்தை நாயகன் பரிந்துரைத்து அனுப்புவது புன்னகையை வரவழைக்கும் நெகிழ்ச்சியான காட்சி.
மூன்றாவது கண்ணாக ஜார்ஜ் வாஷிங்டனில் நெற்றியில் வைக்கப்படும் கதாநாயகியின் பொட்டு, மறுபக்கம் இருக்கும் சேரிக்கும் இந்தப்பக்கம் இருக்கும் மாளிகை வீட்டையும் பிரிக்கும் சுவர், காளியின் படம், இடது கையின் பயன்பாடு, அலுவலகத்து தொலைபேசியை சொந்த அழைப்புக்கு பயன்படுத்தாத வெள்ளைக்காரர்களின் மனோபாவம், காதலி நாயகனின் கைபேசியில் அழைப்பு மணி வைப்பது, தன் உள்ளாடைகள் கூட அயர்ன் செய்யப்பட்டிருக்கிறதே என கேட்கும் நாயகனிடம் உன் அம்மாவாக இருந்தால் செய்ய மாட்டாளா என்பது, அமெரிக்கா திரும்பியவுடன் நாயகி தன் தாயாரிடம் பேசுவது எனப்பல விடயங்கள் ரசிக்கும் படியான விதத்தில் படத்தில் கையாளப்பட்டிருக்கின்றன. டைட்டிலில் கால் தாளம்போடும்படியான மெட்டில் அமைந்த ஹிந்திப்பாடலும் படம் நெடுக வரும் வீணை பின்னணி இசையும் இனிமையாகவே இருக்கின்றன.
மனதை லேசாக்கிக் கொள்ள ஒரு நூறு நிமிடங்கள் உங்கள் மனதை இந்தப் படத்திற்கு வார இறுதிகளில் கண்டிப்பாக ஒரு முறை அவுட்சோர்ஸ் செய்யலாம். படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு கீழே