Showing posts with label புனைவுகள்/ Fiction. Show all posts
Showing posts with label புனைவுகள்/ Fiction. Show all posts

Sunday, February 01, 2015

முடிக்கப்படாத கதை - சிறுகதை

"ஆர் யூ எ கோஸ்ட் ரைட்டர்" வீட்டின் கதவைத் தட்டியவர், நான் கதவைத் திறந்தவுடன் ஒரு வணக்கம் கூட வைக்காமல் பேச்சைத் தொடர்ந்தார்.

"மை நேம் ஈஸ் கார்த்தி, உங்களின் பழையவீட்டில் தேடினேன், இந்த வீட்டிற்கு ஷிப்ட் ஆயிட்டதா சொன்னாங்க"

"ஆமாம், வீடுமாறிட்டேன், சொல்லுங்க என்ன விசயம்"

"எனக்கொரு அட்டகாசமான அமானுஷ்யக் கதை வேண்டும், எழுதித் தரமுடியுமா "

எனது பெயரும் கார்த்தி என்றாலும் மண்டப எழுத்தாளனாக, அடுத்தவர்களுக்கு காசுக்கு , அவர்களின் பெயரில் எழுதிக்கொடுப்பதனால் Ghost Writer என்றே என் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பேன்.  ஒருவேளை அதை பேய்க்கதை எழுத்தாளன் என்று தவறாகப் புரிந்து கொண்டு பேய்க்கதை எழுதச் சொல்கின்றாரா என்ற ஐயம்

"ரெடி கேஷ்,  இரண்டு பக்கங்கள் வேண்டும் 10,000 தருகின்றேன்" என்றதும் உடனடியாக நீங்கியது.

"எந்த மாதிரியான அமானுஷ்யக்கதை  வேண்டும், சினிமாவுக்கா, ஷார்ட் பிலிமிற்கா"

"முடிவில்லாமல் பாதி மட்டுமே எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதையின் மறுபாதியை நீங்கள் எழுதிக்கொடுங்கள். உங்களைத் தவிர வேறுயாராலும் இதன் மறுபாதியை எழுத முடியாது. இதை சினிமாவா, ஷார்ட் பிலிமா , பத்திரிக்கையில் பப்ளிஷ் பண்ணுவதா , நாங்க பாத்துக்குவோம், யூ டோண்ட் வொர்ரி "

அவர் கொடுத்த தாளை இரண்டாக மடித்து எனது சட்டைப்பையில் வைத்துக்கொண்டேன். யாரோ ஒருவர் எழுதியக் கதைக்கு இரண்டாம் பகுதி எல்லாம் எழுத எனக்கு விருப்பமில்லை. நானே ஒருகதையை எழுதப்போகின்றேன். கதைக்குள் கதையாக கார்த்தி கொடுத்த கதையை சொருகிவிடலாம் என்று முடிவு செய்தேன்.

அரசியல் கட்டுரைகள்,  திரைக்கதை வசனங்களில் உதவி, மேடைப்பேச்சுகள் , சாமியார்களுக்கு வார இதழ் கட்டுரைகள் தயாரித்துக்கொடுப்பது என்று எழுத்தின் பயணத்தை மாற்றிவிட்டதால் சிறுகதைகள் எழுதி தசாப்தங்கள் ஆகிவிட்டன.  சிறுகதைகளிலேயே பேய்க்கதை எழுதுவதுதான் சிரமம்.  குறுகிய வட்டத்திற்குள் எழுதியாக வேண்டும். ஒரு நல்ல பேய்க்கதை ரசிகனால் , இரண்டாவது வரியிலேயே யார் பேய் , என்ன முடிவு என்பதைக் கண்டுபிடித்துவிடமுடியும். ஆனால் அவனை கடைசி வரி வரைப் படிக்க வைத்து முடிவை சொல்வதில்தான் பேய்க்கதை எழுத்தாளனின் கைவண்ணம் இருக்கின்றது.  இழந்த அந்த கைவண்ணத்தைப் பெற , நான் எழுதியிருந்த முப்பத்து சொச்ச பழையப் பேய்க்கதைகளை கணினியில் மீண்டும் வாசித்தேன்.  தாளில் எழுதியிருந்த சிறுகதைகள் எல்லாம் பழைய வீட்டின் பரணில் கிடக்கின்றது.  அடுத்த வாரம் போய் எடுக்க வேண்டும்.

எனது அமானுஷ்யக்கதைகளில், வருபவை யாரையும் கொல்லாது. வரும் பேய்களோ பிசாசுகளோ அமானுஷ்யங்களோ எல்லாம் வாழும் காலத்தில் நல்லவர்களாக இருந்தவை. கதைகளில் ரத்தமோ குரூரமோ செக்ஸோ இருக்காது.  மனிதன் - அமானுஷ்யம் சந்திப்பு , அல்லது அதற்கு முந்தைய வினாடிக்குண்டான திகில் இதுதான் என் அமானுஷ்யக்கதைகளின் மையப்பொருள்.

1. கதையைச் சொல்லிக்கொண்டிருப்பவன் ஒரு பேய். அவன் மனிதர்களை சந்திக்கின்றான்.
2. கதையைசொல்லிக்கொண்டிருப்பவன் ஒரு மனிதன், ஆனால் அவன் ஒரு பேயை சந்திக்கின்றான்.
3. கதையைச் சொல்லிக்கொண்டிருப்பவன் ஒரு பேய், அவன் பேயை சந்திக்கின்றான்.
4. கதையை சொல்லிக்கொண்டிருப்பவன் ஒரு மனிதன், அவன் சந்திக்கும் மனிதனை பேய் என்று தவறாக நினைத்துக் கொள்கின்றான்.

இந்த நான்கு வடிவங்களையே சுற்றி சுற்றி வெவ்வேறு கதைகளாக எழுதியிருக்கின்றேன்.  இந்த நான்கு வடிவத்திற்கும் அப்பாற்பட்டு ஒரு பேய்க்கதை எழுதவேண்டும்.  பேய்கள் இறந்து மனிதர்களாகப் பிறக்கினறன அல்லது பிறக்காத மனிதர்களே பேய்கள் ஹைக்கூ வரியை நீட்டி முழக்கி சிறுகதையாக  எழுதலாமா ? வேண்டாம் யாராவது ஒரு  மேற்கத்திய எழுத்தாளர் இதைப்போல எழுதியிருக்கக் கூடிய சாத்தியங்கள் உண்டு .  நான் நகல் எடுத்துவிட்டேன் என்று புரளி கிளம்பலாம். இணையம் இல்லாத 1980 கள் என்றால் பிரச்சினையில்லை.  மொழிப்பெயர்த்தோ நகல் எடுத்தோ பெரிய எழுத்தாளராகிவிடலாம்.  2015 யில் சொடுக்குப்போடும் நேரத்தில் ஆதி அந்தம் தோண்டி எடுத்துவிடுவார்கள்.  எனக்கு நேரடிப்பிரச்சினை எதுவுமில்லை என்றாலும் கூட,  யார் பெயரில் வெளிவருதோ அவர்களுக்கு தர்மசங்கடங்களை உருவாக்கிவிடக்கூடாது என்ற நல்லெண்ணம் உண்டு. சமயங்களில் நான் எழுதியதே எனக்கு மறந்துப் போய்விடுகின்றது. இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஒரு சாமியாருக்கு எழுதிக் கொடுத்தது, மீண்டும் வரிக்குவரி மாறாமல் மனதில் தோன்ற , இன்னொரு சாமியாருக்கு எழுதிவிட்டேன். நல்லவேளை மின்னஞ்சல் செய்யும் முன்னர் மூளையில் பொறித்தட்டியதால் தப்பித்தேன்.

நல்லெண்ணத்தை விட்டுவிட்டு பய எண்ணத்தைக் கொண்டால்தான் பேய்க்கதை எழுதமுடியும்.
பயங்கொண்டு யோசித்தும் பேய்க்கதைக்கு கரு கிட்டாதபொழுது இயல்பாக நடந்த சம்பவத்தில் பேயேற்றி பேய்க்கதையாக மாற்றுவது எளிது.   இதுவரை நீங்கள் வாசித்ததை அப்படியே தட்டச்சினேன். அச்செடுத்து தாளில் ஒரு முறை வாசித்தேன். பாதிக்கதை தயாராகிவிட்டது. 5000 ரூபாய் அளவிற்கு நன்றாகவே வந்திருக்கின்றது. அச்செடுத்தத் தாள்களை மேசையின் மேல் வைத்துவிட்டு  பாதி உண்மையும் பாதி கற்பனையும் கலந்த கதைகளே சிறந்த கதைகளுக்கு எடுத்துக்காட்டு என்ற என் சிறுகதை இலக்கணப்படி மறுபாதிக்கு கற்பனை செய்ய ஆரம்பித்தேன்.  இனி வருவது என் கற்பனை.

கதவைத் தட்டி மீதிக் கதையை பேய்க்கதையாக  எழுத கேட்டவனுக்கு ஓர் அமானுஷ்ய அடையாளம் கொடுத்துதான் கதையை முடிக்கவேண்டும். அவன் பேய் என்று முடித்தால் படித்துபடித்து சலித்துப்போன முடிவாக இருக்கும். வேற்றுக்கிரகவாசி, ஏலியன் என்று முடிக்கலாம். ஆனால் அதற்கு ஏன், எதற்கு , எப்படி என்றெல்லாம் விளக்கவேண்டும்.

ஆரம்பம் சுமாராக இருந்தாலும் முடிவு சிறப்பாக இருக்கவேண்டும் என்று யோசித்ததில் நான் எழுதி முடிக்காமல் வைத்திருந்த கதையின் கதாப்பாத்திரம், அந்தப் பாதிக்கதையை எடுத்துக்கொண்டு என்னை சந்திக்க வருகின்றது என்ற இழைத் தட்டியது. நீ தான் என்னை உருவாக்கினாய்,  எத்தனை முறைக் கேட்பது.  இன்றாவது எனக்கொரு முடிவைச் சொல் என்று வீட்டின் கதவை வந்து தட்டியது. கதைகளை பாதியில் விடாதீர்கள். கதாப்பத்திரங்கள் துரத்தி வந்து முடிவைக் கேட்கும்.

கற்பனை முடிவு கிடைத்ததும் கதையின் கடைசிப்பகுதியை எழுதி முடித்தேன்.  மறுநாள்  , கதை முடிக்கச் சொல்லிக் கேட்ட கார்த்தி வந்தார். அச்செடுத்தத் தாள்களை அவரிடம் கொடுத்துவிட்டு,

"கார்த்தி, உங்க பர்ஸ்ட் ஆப் கதையை நான் படிக்கல, ஆனால் படிக்க வேண்டிய அவசியமுமில்லை  எங்க வேண்டுமானாலும் ஜாயின் பண்ணிக்கோங்க, கரெக்ட்டா பிட் ஆகும், அருமையான அமானுஷ்யக் கதையா பினிஷ் ஆகும் " என்றேன்.

"தாங்க்யூ, நாளைக்கு காசு கொண்டுவரேன்" என்றபடி பிரித்துப் பார்க்காமலேயே அச்சுத்தாள்களுடன் கார்த்தி  சென்றார்.

எனது மேசைக்கு வந்தேன். கதையின் முடிவுப்பகுதியின் தாள் மேசையின் மேலேயே இருந்தது. கார்த்தியிடம் முடிவில்லாமல் முதற்பாதியை மட்டும் தான் கொடுத்திருக்கின்றேன். சரி நாளை பணம் கொண்டு வரும்பொழுது  முடிவுப்பகுதியைக் கொடுத்துவிடலாம் .

கார்த்தி கொடுத்த அந்த முதற்பாதி கதை என்னவாக இருக்கும் என்று ஒரு சின்ன ஆர்வம் ஏற்பட்டது. நேற்றுப்போட்டிருந்த சட்டைப்பையில் இருந்தத் தாளை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்.  அப்படியே வரிக்கு வரி நான் இப்பொழுது எழுதிக் கொடுத்தக் கதை.  முடிவுப் பகுதி மட்டுமில்லை. கதவு தட்டப்பட்டது.  கதவு உடைபடுவதைப்போல தட்டும் வேகம் அதிகப்பட்டது... முடிவுப்பகுதியை எடுத்துக் கொண்டு கதவை நோக்கி நடந்தேன்.



Thursday, July 17, 2014

பிரதிகள் - சிறுகதை

தொலைபுலன் தொடர்பு மூலம்  என்னை நெருங்கமுடிந்தவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம்.  எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் நட்பு தேவையில்லை என்பது என் கருத்து. அப்படி இருக்கையில் இந்த நட்பு அழைப்பை எப்பொழுது ஏற்றுக் கொண்டேன் எனத் தெரியவில்லை. தானாகவே இணைத்துக் கொள்ளும் இயந்திர முகப்புப் பக்கமாக இருக்கக் கூடும் அல்லது அரசாங்கம் என்னை வேவு பார்க்க அனுப்பப் பட்ட பக்கமாக இருக்கும் என்று நீக்கிவிடலாம் என்று நினைக்கையில்  தொலைபுலன் தொடர்பில்  பேச அழைப்பு வந்தது.

"சமீபத்தில் தாங்கள் எடுத்த  முடிவைப் பற்றி , நாளை எங்கள்  பத்திரிக்கைக்கு ஒரு சிறிய பேட்டி ஒன்றைக் கொடுக்க இயலுமா ? "

அன்று காகிதம், கணினி ; இப்பொழுது தொலைபுலன் தொடர்பு பத்திரிக்கைகள். நினைத்த மாத்திரத்தில் காற்றில் தொடுதிரை உருவாக்கி வாசித்துக் கொள்ளலாம்.

எழுத்தாளர்களிடம் சொற்களை வலியப் பிடுங்கி அரசாங்கப் பிரச்சினைகளுக்குள் சிக்கவைப்பதே இப்பத்திரிக்கைகளின் இயல்பு என்றாலும், கடைசி 10 ஆண்டுகளாக அறிவியல் புனைவுகள், பேய்க் கதைகள், துப்பறியும் கதைகள் என்று இருந்ததால் பேட்டிகளில் எனக்கு பெரிய சிக்கல் இதுவரை இருந்ததில்லை.  சர்ச்சைகளுக்குள் சிக்காத சமகால எழுத்தாளன் நான் ஒருவன்தான். சர்ச்சை இல்லை என்றாலும் என் மேல் இருந்த ஒரே விமர்சனம்  குருதியும் குரூரமும் கதைகளில் மிகுதியாக இருக்கின்றன என்பது . கதைகளைப் படித்த பின்னர் அதைப் பரிட்சித்துப் பார்க்கவேண்டும் என்று தோன்ற வைக்கின்றது என்று சிலர் நினைப்பதாக அரசாங்கம் எனக்கு தகவல் அனுப்பி இருந்தது  . இப்படி எனக்கு  பெரும் புகழைக் கொடுத்த குரூரக்கதைகளை இனி எழுதப் போவதில்லை என முடிவெடுத்து இருக்கின்றேன்.  அந்த முடிவைப் பற்றிதான் பேட்டிக்கு கேட்டிருக்கின்றனர்.

பேட்டிக்கு ஒப்புக்கொண்டுவிட்டு  மீண்டும்என் தொலைபுலன் தொடர்பு பக்கத்திற்கு வந்தேன். 'குரூரமான கதைகளை இனிமேல் எழுதப்போவதில்லை என்ற தங்களின் முடிவிற்கு மிக்க நன்றி ' என்று பல வாசகர்களிடம் இருந்துபாராட்டும் தொனியில் வாசகர் மன்றத்திற்கு தகவல்கள்  வந்து இருந்தன.

எதிர் மறையான பேய்க் கதைகள் எழுதுவதினால், எனக்கே ஒரு திகில் சூழ்ந்த உலகில் நான் மட்டும் தனியாக இருக்கின்றேன் என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது. தனிமை அதிகமானால் குரூர கற்பனைகள் இயல்பாகிவிடும்.  அக்கற்பனைகளை அப்படியே எழுத்தாக்கிவிடுவதால் பணமும் செல்வாக்கும்  சிறப்புத் தொழில் நுட்ப வசதிகள்  கிடைத்தாலும் ஒரு வித விட்டேத்தியான விரக்தி மனப்பான்மை இருந்து கொண்டே இருந்தது. கழிவறைக்கு இரவில் செல்ல பயம். கத்தியை எடுத்து தக்காளியை வெட்டக் கூட பயம். நெருப்பைக் கண்டால் பயம். யாராவது தொட்டால்கூட கழுத்தை நெறிக்க வருகின்றார்களோ என்ற பயம். நான் வர்ணிக்கும் குரூரங்கள் எனக்கு நடந்துவிடுமோ என்ற பயம்.

ஒரு நாள் அறிவியல் புனைவு ஒன்றை எழுதிக் கொண்டிருக்கையில் ஒரு வாக்கியம் என்னை அறியாமல் மனதில் தோன்றியது.

 'நீ எழுதுவது எல்லாம் வேறு ஓர் இணை உலகில் யாருக்கோ  நடக்கின்றது, உனக்கு நடப்பது எல்லாம் வேறோர் உலகில் யாராலோ  எழுதப்படுகின்றது, எழுதப்படுபவை எல்லாம் யாருக்காவது நடக்கும்,  நடப்பவை எல்லாம்  நிச்சயமாக எழுதப்பட்டிருக்கும், அதுதான் இயற்கையின் நியதி'

கடவுளே, என் குரூர விவரணைகள் நிஜத்தில் நடந்தால்? . அந்த நொடியில்தான்  முடிவு செய்தேன். இனிமேல் நேர்மறைக் கதைகள் மட்டுமே எழுதவேண்டும் என.  உங்களிடம் சொன்ன இந்த உண்மையை  அப்படியே நாளை,  பேட்டியில் சொன்னால் சிரிப்பார்கள்.

' எழுத்தாளன் என்பவன் பலவகைகளில் எழுதி நிருபிக்கவேண்டும். நேர்மறை சமுதாயக் கதைகள் இப்பொழுது எல்லாம் அரிதாகி வருவதால் , நானே களத்தில் குதிக்க முடிவு செய்தேன் '  என்று பொய்யை சொல்லி அரசாங்கத்திடம் பாராட்டுகளைப் பெற்றேன்.

அடுத்து வந்த நாட்கள் முழுவதும் எனது யோசனை,

என் வாழ்க்கைக் கதையை யார் எழுதிக் கொண்டிருப்பர் . ஒவ்வொரு அத்தியாயத்தையும் தனித்தனி ஆள் எழுதுவாரா? இல்லை ஒரே ஆளா ? அப்படி எழுதுபவர்தான் கடவுளா ?  அப்படி என்றால் வேறோர் உலகத்தில் இருக்கும் சிலருக்கு நான் தான் விதியை நிர்ணயிக்கின்றேனா ? நான் படைத்த மனிதர்களை நிஜத்தில் பார்த்தால் எப்படி இருக்கும்? அந்த இணை உலகத்திற்கு போக முடியுமா ? போக முடிந்தால் எப்படி போவது ? . பைத்தியக்காரத்தனமாக யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த யோசித்தலைக் கூட எவனோ ஒருவன் எழுதுகின்றானோ ?

parallel universe என்று தேடி 300 ஆண்டுகள் கோப்புகளில் இருந்து கண்டதையும் படித்தேன். இறந்த ஆத்மா எங்கு வேண்டுமானால் செல்லும் சக்தியைப் பெறும் என்று ஒருவன் எழுதியிருந்தான். இறந்த பின் அறிந்து என்ன பயன், இருக்கும்பொழுதே எனக்கான கடவுளை , கடவுள்களை அறிய வேண்டும்.

 'இப்பேரண்டம் முழுமையும் , இப்பேரண்டத்தில் இருக்கும்ஒவ்வொரு சிறிய துகளிலும்   அடங்கி இருக்கின்றது. '

அச்சிறியத் துகள் அளவுக்கு மாறினால் இணை உலகங்களை அடைய முடியுமோ?

'ஒரு மனிதனால் தன்னை கண்ணுக்குப் புலப்படாத துகள் அளவுக்கு சுருக்கிக் கொள்ள முடியுமா? " என்று தனிஅரட்டையில் நண்பனிடம் கேட்டேன்.  படித்துவிட்டான் என்று காட்டியது , ஆனால் பதில் சொல்லவில்லை. பைத்தியக்காரன் என்று நினைத்திருப்பான்.

அந்த சமயத்தில் ஒரு குழந்தை  பொம்மை விமானத்தை உருட்டி விளையாடுவதைப் போல ஒரு புகைப்படம் எனக்கான திரையில்  மேல் எழும்பியது.  நான் இயந்திர முகப்புப் பக்கம் என்று நீக்க நினைத்திருந்த பக்கம் தான் அது.  ஒரு பொதுவான நண்பர்கள் கூட இல்லை. குழந்தை - பொம்மை விமானப் படத்தைத் தவிர இருந்த ஏனைய படங்கள் எல்லாம்  வரைகலை வடிவப்படங்களாக இருந்தன. எத்தனை முயற்சி செய்தும் நீக்க முடியவில்லை. யோசித்து யோசித்து களைத்து அப்படியே தூங்கிவிட்டேன். மறுநாள் அனைத்து வகையான தியானம் சம்பந்தப்பட்டவைகளை அரசாங்கத்தின் சிறப்பு அனுமதி பெற்று  தொலை புலன் தொடர்பில்  ஏற்றி வாசித்து தியானங்களின் வழியாக இணை உலகத்திற்குப் போக முயற்சி செய்தால் பசி மயக்கம்தான் வந்தது.

இணை உலகத்திற்கு செல்ல  நான் எடுத்த ஒரு முயற்சியும் வெற்றி அடையாததால்  வெறுத்துப் போய் இருந்த சூழலில்  ,  அந்த இயந்திர முகப்பு என்று கருதிய பக்கத்தில் இருந்து ஒரு செய்தி வந்திருந்தது .

"என்னைப் பார், எல்லாம் புரியும்"

குழந்தை - பொம்மை விமானம் அதே முகப்புப் படம், பெரிதாக்கி பார்த்தேன், விமானத்தின் எண் MH370. இது சில நூறாண்டுகளுக்கு  முன்னர் காணாமல் போன விமானம் அல்லவா ?  கடைசி வரை அதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லையே அதைப் பற்றி ஒரு வரிக்கதைக் கூட எழுதி இருக்கின்றேனே.. ஒவ்வொருப் புகைப்படமாகப் பார்த்தேன். நூற்றாண்டு பழமை வாய்ந்த படங்களில் வரும் வேற்றுக் கிரக காட்சிகளைப் போல இருந்ததன. கடைசியாக ஒரு வீடியோ. அதை ஓடவிட்டேன். அதில் என்னைப் போல் ஒருவன்... அச்சு அசலாக..  இல்லை அது நானேதான்.

"என்ன கார்த்தி , நலமா ... என்னைத் தானே தேடிக்கொண்டிருக்கின்றாய். உனக்கான அத்தியாயங்களை எழுதுபவன் நான்தான். அதேப் போல் எனக்கான அத்தியாயங்களை எழுதுபவன் நீ .
நீ என்னைத் தேட தொடங்கிய அன்றே உன்னிடம் நான் வந்துவிட்டேன்...  "

பதிவ செய்யப்பட்டது என்று பார்த்தால், அது நேரலை வீடியோ.

"நீங்கள், நீ எந்த உலகத்தில் இருந்து பேசுகின்றாய் , யார் அந்த குழந்தை? எப்படி நான் உன் உலகிற்கு வருவது ? "

"யாரும் யார் உலகத்திற்குள்ளும்  நுழைய முடியாது, வேண்டுமானால் தன்னைத் தேட விரும்பும் எவரும்  தன் பிரதியைப்  பார்க்கலாம், எப்படி நான் உன்னைத் தேடி இப்படி வந்தேனோ அதைப் போல ஒவ்வொருவருக்கு ஒரு தளம் கிடைக்கும் "

"நீ ஏன் என்னைப் போல் இருக்கின்றாய் , உனக்கு பின்னால் வரும் அந்த பெண் யார் ? "

"கார்த்தி, நான் உன்னுடைய மூத்த பிரதி அதாவது , இவ்வுலகத்தில் நீ நானாக முன் கூட்டியே வாழ்கின்றாய்.  இவளை அடுத்த ஆண்டு நீ அறிந்து கொள்வாய், கடைசியாக சொல்கின்றேன்,  நாம் தான் நம் வாழ்க்கை அத்தியாயங்களை எழுதுகின்றோம். வேறு யாரும் எழுதுவதில்லை, எதைப்பற்றியும் குழப்பிக் கொள்ளாமல் நன்றாக தூங்கு, நாளை எல்லாம் சரியாகும்."  வீடியோ நின்றது, அந்த முகப்பும் காற்றுவெளியில் இருந்து சுவடின்றி மறைந்தது.

தன்னையறிந்த இந்த அனுபவத்தையே  பேட்டி கொடுத்தபத்திரிக்கைக்கு என் முதல் நேர்மறைக் கதையாய் அனுப்பி வைத்தேன்.  அதைப் படித்த வாசகிகளில் ஒருத்தியான  அம்மு  தொலை மனத்தொடர்பில் பாராட்டினாள்  .  நட்பு ஆனது. நட்பு காதல் ஆனது. காதல் வந்தால் தனிமை கிடையாது. தனிமையின் வெறுமை மறைந்தால்  இனிமை,  நேர்மறை எண்ணங்கள். முன்பை விட அதிக புகழ் பெற்றேன். ஆண்டுகள் ஓடின. ஒரு   நாள்  எங்கள் அஞ்சலிப் பாப்பாவிற்கு சிறிய விமான பொம்மையை வாங்கிக் கொடுத்தாள் அம்மு. சில நூற்றாண்டுகளுக்கு  முன்னர் காணாமல் போன ஒரு  விமானத்தின் சிறிய வடிவம் அது. குழந்தை குட்டி விமானத்துடன் விளையாட அம்மு அதைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க ,

ஆவணப் பெட்டகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பல நூற்றாண்டுபழமை வாய்ந்த சமூகவலைத்தளம் ஒன்று என் தொலைபுலன் தொடர்புத் திரையில் காரணமில்லாமல் வந்தது. அந்தகாலத்து வடிவமைப்பு, புரியாத வரிவடிவ எழுத்துக்களுடன் இருந்தது. எனது மென்பொருளினால் எனக்குப் புரியும் வரிவடிவத்திற்கு மாற்றினேன். பேஸ்புக், கார்த்தி அட, என் பெயரில் எவனோ ஒருவன் அந்த காலத்தில் இருந்திருக்கின்றான். ஏதோ ஒரு தகவல் பதிந்து இருக்கின்றான்.

"என் வாழ்க்கைக் கதையை யார் எழுதிக் கொண்டிருப்பர் . ஒவ்வொரு அத்தியாயத்தையும் தனித்தனி ஆள் எழுதுவாரா? இல்லை ஒரே ஆளா ? அப்படி எழுதுபவர்தான் கடவுளா ?  அப்படி என்றால் வேறோர் உலகத்தில் இருக்கும் சிலருக்கு நான் தான் விதியை நிர்ணயிக்கின்றேனா ? நான் படைத்த மனிதர்களை நிஜத்தில் பார்த்தால் எப்படி இருக்கும்? அந்த இணை உலகத்திற்கு போக முடியுமா ? போக முடிந்தால் எப்படி போவது ? . பைத்தியக்காரத்தனமாக யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த யோசித்தலைக் கூட எவனோ ஒருவன் எழுதுகின்றானோ ? "

------------- 





Monday, March 31, 2014

காணாமல் போகின்ற விமானங்கள் - சிறுகதை

சில நாட்கள் முன்பு வரை இந்த செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகள் தரும் நிறுவனத்தில்  கடைநிலை பொறியாளன் நான். ஆயிரம் பேர் வேலைப்பார்க்கும் நிறுவனத்தில் நேற்று நான் தான் நாயகன். எனது மேசை முழுவதும் பூங்கொத்துகள். நிறுவனத்தின் தலைமை அதிகாரியுடன் மதிய உணவு. ஊடகவெளிச்சம் என நாள் அமர்க்களப்பட்டது.

காணாமல் போன விமானத்தின் இருப்பிடத்தை, 19 ஆம் நூற்றாண்டு இயற்பியல் விதிக்கணக்கீடுகளின் படி கண்டுபிடித்தவர் என என் பெயருடன் ஒருப்பக்கக் கட்டுரை எல்லா நாளிதழ்களிலும் வந்திருந்தன. டாப்ளர் விளைவைப்பற்றி நீட்டி முழக்கி எழுதியிருந்தனர். நானிருக்கும் சமூகஊடகத்தளத்தில், என்னை அவர்கள் வட்டாரத்தில் சேர்த்துக்கொள்ள ஏகப்பட்ட கோரிக்கைகள். ஆண்களை ஒதுக்கிவிட்டு பெண்களை மட்டும் தேர்ந்தெடுத்தேன்.

டாப்ளர் விளைவு கணக்குகளின் வழியே , விமானத்தின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்ததற்காக மட்டும், தலைமையதிகாரியிடம் இருந்து பாராட்டல்ல.

தலைமை ஆட்களின் மிகப்பெரிய பலம், சாமனியனுடன் சரிக்குசமமாக அமர்ந்து பேசுவது. ஒருநாள் எனது கணினியில் பலூன் சுடும் விளையாட்டை ஆடிக்கொண்டிருக்கையில் எதிரே வந்தமர்ந்தார்.  திடிரென , யாரிடமாவது வந்தமர்ந்து கதை பேசுவது தலைமை அதிகாரியின் வழக்கம். ஊழியர்களிடம் ஆலோசனைக் கேட்பார். சாத்தியமிருந்தால் தொழில்நுட்பரீதியாக நடைமுறைக்குக் கொண்டுவருவார். அப்படியான ஓர் ஆலோசனைதான் விமானங்களில் இணைய வசதி செய்துக்கொடுத்தல்.

"நிறைய விமான சேவைகள் நமது செயற்கைக்கோள் வழி இணையப் பயன்பாட்டு சேவையைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன, நமக்கு நல்ல வருவாயும் கூட, அடுத்த நிலைக்குக் கொண்டுவர உன்னிடம் ஏதேனும் குறிப்பு உள்ளதா?"

"விமானத்தை, நேரலையாக செயற்கைக்கோளின் மூலம் கண்காணிக்க, நாம் ஒரு சேவையை வழங்கலாம்"  ஒரு கையால் கணினியில் பலூன்களை சுட்டுக்கொண்டே இருந்தேன்.

"நம்மிடம் தயாராக இருக்கின்றது, ஆனால் பொருட்செலவுக்காகவும் அரசியல் காரணங்களுக்காகவும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்"

"சரி, அப்போ நான்கைந்து விமானங்களை சுட்டு வீழ்த்தி காணடித்துவிடலாம்"  எல்லா பலூன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன.

அதிர்ச்சியில் தலைமை அதிகாரி இருக்கையை விட்டு எழுந்தார். என்னை அவரது கண்ணாடி அறைக்கு அழைத்துச் சென்ற பின்னர்.

" கடைசியாக என்ன சொன்னாய்"

" நான்கைந்து விமானங்களை காணாமல் போகச்செய்துவிட்டு , தேடிக்கொடுப்போம் , நமது செயற்கைக்கோள் நேரலை விமான கண்காணிப்பு சேவையைப் பற்றி பேச வைப்போம். துயரங்களின் வலியின் மூலம் தேவையை உணர்த்துவோம், வியாபாரத்தைப் பெருக்குவோம்"

"அருமை, ஆனால் எப்படி செய்வது. நமது அரசாங்கம் ஒப்புக்கொள்ளதே?, விசயம் தெரிந்தால் ஒட்டு மொத்த நிறுவனமும் நொடியில் காணாமல் போய்விடும்"

"விமானத்தை திருப்ப ஓருவர், அதை இறக்க ஓரிடம் இவ்வளவுதான் தேவை"

"சரி, விமானிகளில் ஒருவரை சரி செய்துவிடலாம். விமானத்தை எப்படி காணடிப்பது"

"சுனாமிக்குப் பிறகு இந்தியப்பெருங்கடலின் தெற்கில் ஏகப்பட்ட தீவுகள் புதிதாய் உருவாகி இருக்கின்றன. உங்களுக்கேத் தெரியும் அவற்றை எல்லாம் நமது செயற்கைக்கோள் படங்களில் மறைத்துவிடுகின்றோம்  சிலவற்றில் இலங்கையில் போரில் தோற்ற தமிழ்ப்போராளிகள் கூட இருக்கின்றனர் எனச்சொல்லுகின்றனர். ஏதேனும் ஒரு தீவில் அரைகுறையாய் விமான ஓடுதளம் அமைக்க வைப்போம். அதில் ஏதேனும் ஒன்றில் கொண்டுபோய் சொருகவைத்துவிடலாம். பழியை அவர்கள் மேல் போட்டுவிடலாம்"

"உலகம் நம்புமா"

"நம்ப வைக்க செலவு ஆகும் அவ்வளவுதான்"

உலகத்தை நம்பவைக்க கொஞ்சம் செலவு செய்யப்பட்டது. சரிகட்டப்பட்ட விமானி , விமானத்தை இந்தியப்பெருங்கடல் நாங்கள் சொல்லியிருந்த அட்சரேகை தீர்க்கரேகை தீவின் பாதி கட்டமைக்கப்பட்ட ஓடுதளம் ஒன்றில் சொருகினார். தப்பித்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  டாப்ளர் விளைவு கணக்கில் கண்டுபிடித்தோம் என சப்பைக்கட்டு கட்டினோம்.

மூன்றாவது நாளே அரசாங்கம் எங்களது சதியைக் கண்டுபிடித்துவிட்டது, அமெரிக்காவே ஒரு நிறுவனம்தானே,,,, லாபங்களை சொல்லுகையில் சமாதானம் ஆனது.  எங்களது விமானங்களை செயற்கைக்கோள் வழியாக நேரலையில் கண்காணிப்பு செய்யும் சேவைப்பற்றி ஊடகங்களில் அரசாங்கமே பேசவைத்தது.  விமான நிறுவனங்கள் எங்களது சேவையைப் பெருமளவில் பெற்றுக்கொள்ளும் என உறுதியாகிவிட்ட மகிழ்ச்சியில்தான் நான் நேற்று நான் நாயகன் ஆக்கப்பட்டேன்.

அதன் கொண்டாட்டத் தொடர்ச்சியாக என்னை மகிழ்விக்கும் விதமாக இன்று இதோ நான் சுவீடனுக்கு அலுவலக செலவில் அனுப்பப்படுகின்றேன். தங்கநிறக்கூந்தல் அழகிகள்... ஸ்டாக்ஹோல்ம் தீவுக்கூட்டங்கள் , ஸ்கேன்டிநேவியா என்ற கனவில் மிதந்து கொண்டிருந்தேன்.

ஒவ்வோர் அமெரிக்கனுக்கும் ஸ்கேன்டிநேவியா போகவேண்டும் என்பது கனவு. ஒவ்வொரு ஸ்கேன்டிநேவியனுக்கும் அமெரிக்க வரவேண்டும் என்பது கனவு. விமானம் பறந்தது. அமெரிக்கனாக இன்னும் ஏழெட்டு மணி நேரங்களில் எனது ஸ்கேன்டிநேவிய கொண்டாட்டக் கனவு நிறைவேறிவிடும் என நினைக்கையில், மூச்சு முட்டியது, செங்குத்தாக பூமிக்குள் சொருகுவதைப்போன்ற உணர்வு. நாளை செய்திகளில் மற்றுமோர் விமானம் அட்லாண்டிக் கடலில் காணாமல் போனது என நீங்கள் படிக்கலாம். 

Saturday, January 11, 2014

இவருக்குப் பதில் இவர் - சிறுகதை


"இந்த வீடு நல்ல ராசியான வீடாம், நினைச்சது எல்லாம் நடக்குமாம், ஹவுஸ் ஓனர் சொன்னதைக் கேட்டியா?"   நான் சொன்னதை கவனிக்காமல்

'சூப்பர், இந்த  கேரக்டருக்கான ஆளை மாத்திட்டாங்க ... '  என அம்மு குதித்தற்கான காரணம் அவளுக்குப் பிடித்த தொலைக்காட்சித் தொடர் ஒன்றில், தொடர்கள் அடிக்கடி செய்யக் கூடிய 'இவருக்குப் பதில் இவர்' என ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவருக்குப் பதிலாக பிரபலமான நடிகர் ஒருவரை மற்றியதுதான்.

'சீரியல்ல ஆளை மாத்துற மாதிரி, இவருக்குப் பதில் இவர் என வாழ்க்கையிலும் ஆளை மாற்றும் வாய்ப்பு இருந்தால் எப்படி இருக்கும்?"

அம்மு மடிக்கணினியை மூடி வைத்துவிட்டு என்னைப் பார்த்தாள்.  அந்தப் பார்வை ஏதோ சண்டைக்கான அடித்தளம் போல இருந்தது.

"அப்படி மாத்தலாம்னு இருந்தால், யார கார்த்தி, நீ மாத்துவ'

சரியான அளவில் கால்களுக்கும் மட்டைக்கும் இடையில் எறியப்பட்ட பாதங்களைப் பதம்பார்க்கும் பந்து. இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லுவது எனத் தெரியவில்லை.

"சும்மா, ஒரு கியுரியாசிட்டி, டிஸ்கஷனுக்காக கேட்டேன் அம்மு, நெவர் மைன்ட்"

"நானும் கியுரியாசிட்டிலதான் கேக்குறேன், எனக்கான உருவத்தைத் தானே மாத்திடுவ.... " இது மூக்கை உரசிச் சொல்லும் பவுன்சர்.

பந்துவீச்சாளர்கள் கடுங்கோபத்தில் பந்து வீசும் பொழுது, ஒன்றும் செய்யாமல் எப்படியாவது ஒப்பேத்திவிடனும். அப்படி இல்லை எனில், ஒன்று பெவிலியன் அல்லது ஹாஸ்பிடல்.  நான் பதில் சொல்லவில்லை.

"உனக்கு இன்னும் அவளை மறக்க முடியல கார்த்தி, ரிப்ளேஸ்மென்ட் சான்ஸ் கிடைச்சா, நான் தான் பர்ஸ்ட் பலியா இருப்பேன், அப்படித்தானே"

"அம்மு, லிசன் ... முகமும் குரலும் மாறினாலும், இந்த சீரியல்ல கேரக்டர் , மத்த கதாபாத்திரங்களோட நட்பு உறவு எல்லாம் அதேதானே , என் அம்முன்னா வெறும் முகமும் குரலும் மட்டுமில்ல, அவளோட கேரக்டர் , அன்பு பாசம் நேசம் எல்லாம், இதை எல்லாம் ரிப்ளேஸ் செய்ய முடியாது"
என்று ஒருவழியாக பந்தைத் தடுத்தாடினேன்.

சிலவினாடிகள் மௌனத்திற்குப்பின்னர், "சரி, அம்மு உனக்கு அப்படி ஒரு சான்ஸ் கிடைச்சா யாரை மாத்துவ"  கவர் டிரைவ் என நானே நினைத்துக் கொண்டு கேள்வியைக் கேட்டேன்.

என் கேள்வியைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாதவள் போல , மடிக்கணினியை திறந்து , யுடியூபில் மீண்டும் அந்தத் தொலைக்காட்சித் தொடரைப் பார்க்க ஆரம்பித்தாள்.

 பெண்கள் தங்களுக்குப் பதில் தெரியாத, பதில் சொல்ல விரும்பாத கேள்விகளை எப்படி தவிர்ப்பது எனத்தெரியும்.  ஆண்கள்தான் வேலை மெனக்கெட்டு பொய்யாக இருந்தாலும் ஏதாவது ஒரு பதிலை சொல்லுவார்கள்.

என் எண்ணம் எல்லாம், அந்த 'இவருக்குப் பதில் இவர்' என்பதிலேயே இருந்தது.

 அம்மு சொல்லுவதைப்போல , அம்முவை மாற்றி இருப்பேனோ... மாற்றி இருந்தால் யாரை வைத்து அவளை மாற்றி இருப்பேன். என் முதல் காதலி... இருக்கலாம். முதல் காதலின் பிரெஷ்னெஸ் மழைச்சாரல்.   அம்மு கியுட் தான், ஆனால் என்னுடைய ஆரம்ப இருபதுகள் மனநிலைக்குப் போனால், முதல் காதலி செம கியுட். முதல் காதலியின் முகம் மற்றும் குரல்  ஆகியவற்றுடன் அம்முவோட அன்பு பாசம் நேர்மை அர்ப்பணிப்பு அட்டகாசமாக இருக்கும் தானே !!!

இன்றைக்கான அத்தனைத் தொலைக்காட்சித் தொடர்களையும் அம்மு பார்த்து முடித்துவிட்டாள் என்பதை அவள் என் தோளைத் தொட்டு , முகத்தைத் தோள்பட்டையில் வைத்துக் கொள்கையில் புரிந்து கொள்ள முடியும்.

"புது வீடு, புது வாசம் புதுசா ஏதாவது டிரை பண்ணுவோமா " என அவளை அணைத்துக் கொண்டேன்.  விடியல் விரைவாகவே வந்தது.

அதிகாலையில், ஒரு பெண்ணின் குரல் குளியல் அறையில் இருந்து அலறலாகக் கேட்டது. எங்கேயோ கேட்ட குரல்.

முகத்தைப் பொத்திக் கொண்டு "கார்த்தி, இங்கே பாரு என் முகம் வேற மாதிரி கண்ணாடியில் தெரியுது"

கண்ணாடியில் தெரியும் முகமும் அவளின் முகமும் ஒன்று. அவள் என் பழையக் காதலி. இவளுக்குப் பதில் அவளா...

திரும்பக் கண்ணாடியைப் பார்த்தேன். அய்யோ !!! இது நானில்லை. வேறு ஒருவன். அம்மு முகத்தில் இருந்து கைகளை விலக்கினாள்.

"ஜீவா,,,, நீயா ,,, நீ இங்க எப்படி... கார்த்தி "

 எனக்குப் பதில் அவனா.

என்னை விட ஜீவா , அழகா இருந்திருப்பான் போல.

அம்மு திகில் அடித்ததைப்போல இருந்தாள். வீட்டில் இருக்கும் அத்தனை கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினாள்.

அவள் அளவுக்கு எனக்கு திகிலும் இல்லை கோபமும் இல்லை.
வாழ்க்கையில் இனி என்ன வேண்டும், முன்னொரு காலத்தில் நான் உருகி உருகி காதலித்தப் பெண் வடிவில் , இன்று என்னை உருகி உருகி நேசிக்கும் பெண். அவளுக்கு அவள் ஒரு காலத்தில் உருகி உருகி காதலித்த ஆணின் உருவில் நான்.  எனக்கு இது வின் - வின் சூழலாகத் தெரிந்தது.

"அம்மு, ஒருவேளை நம்முடைய பிரமையாக இருக்கும். ஒரு போட்டோ எடுத்துப் பார்ப்போமா"

புகைப்படத்திலும் எனக்குப்பதில் அவன், இவளுக்குப்பதில் அவள்.  இதுக் கூட தோற்ற மயக்கமாக இருக்கலாம் என பேஸ்புக்கில் புகைப்படத்தைத் தரவேற்றினால்.


"யார் இவர்கள், உங்களது தோழர்களா " என நண்பன் ஒருவன் கேட்டு இருந்தான்.

 உண்மையிலேயே எங்களை அவர்கள் ரிப்ளேஸ் செய்துவிட்டார்கள் என்பது விளங்கியது. எனக்கு திகிலை மீறிய கிளுகிளுப்பு இருந்தது. புத்தம் புதிதாய் ஒரு புதிய பெண் என் படுக்கை அறையில், எனக்கானவளாய்.

வாழ்க்கை என்ற நுண்கணிதத்தில் ஆண்கள் தொகைநுண்கணிதம் போல. அவர்களால் வாழ்க்கையில் அனைத்தையும் அரவணைத்துச் செல்ல முடியும்.

அம்முவின் தோளைத் தொட்டேன், விலக்கினாள்.

"வேண்டாம் கார்த்தி, தொடாதே !!  "  அம்முவின் அழுகையை நிறுத்த முடியவில்லை.  அன்றைய நாள் முழுவதும் வீட்டை விட்டு வெளியேப்போகவில்லை.  யாரைப்பார்ப்பது என்ன செய்வது எதுவுமே தெரியவில்லை.  அம்முவை கார்த்தையையும் நாங்கள் கொன்றுவிட்டோம் என கைது கூட செய்யப்படலாம்.

கண்ணாடித்துகள்களை எல்லாம் கூட்டிப்பெருக்கினோம். நேற்றைய மீத சாப்பாட்டை சாப்பிட்டோம்.  அம்மு தொலைக் காட்சித் தொடர்களின் அன்றைய பகுதிகளைப் பார்க்க ஆரம்பித்தாள். தோளைத் தொட்டாள் சாய்ந்தாள். அணைத்து முத்தமிட முயற்சிக்கையில் தள்ளிவிட்டாள்.

"நீ கார்த்தி தான், ஆனால் என் கண்களுக்கு நீ அவன்... எனக்குப்பிடிக்கல கார்த்தி, உன் கூட எந்தவிதத்திலும் நெருக்கமாக இருக்க என்னால் முடியாது , செத்துடலாம் போல இருக்கு... நான் செஞ்ச ஒரே தப்பு, நேத்து நீ அந்த கேள்வியைக் கேட்டப்ப , நீ ஒருவேளை ஜீவா உருவத்தில் இருந்தால் எப்படி இருக்கும் என யோசிச்சதுதான்... ஆனால் சத்தியமா உன்னைத் தவிர உன்னிடத்தில் வேறு எந்த உருவத்தையோ குரலையோவைக்க முடியாது"

பெண்கள் வகைநுண்கணிதம் போல. பகுப்பாய்வின் அடிப்படையில் வாழ முடியும். ஒன்றை பழைய காலத்தில் பிடித்து இருந்தாலும், காலம் கடந்து பழையது மீண்டு வந்தாலும் பகுத்து அவர்களால் ஒதுக்க முடியும்.

இருவரும் விலகியேப் படுத்துக் கொண்டோம்.  இந்தப் பாழாய்ப்போன வீட்டிற்கு ஏன் குடிவந்தோம் என இருந்தது.  விடியல் நீண்டு கொண்டே இருந்தது. எப்பொழுது தூங்கினேன் எனத் தெரியவில்லை, காலையில் கார்த்தி என காது மடல்களுக்கு அருகே அம்முவின்  குரல். கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள். இமைகளை  மெதுவாகத் திறந்தேன்.
                         ---------------------





Thursday, December 19, 2013

தன்னைப் போல் ஒருத்தி - சிறுகதை

"காரோ ..." 

மூன்றாவது தடவையாக ஆஞ்சலிகா என்னைக் கூப்பிட்டாள்.  காரோ என்பது அன்பே என்பதற்கான இத்தாலியச்சொல். 

"சொல்லுடி ..."  அவளுக்குத் தமிழ் தெரியாது என்றாலும் இந்த வார்த்தைப்புரியும். 

" அந்த டோல்சே - கப்பானா (Dolce & Gabbana The One: "Street of Dreams) விளம்பரம் பார்த்தாயா? "  இத்தாலியத்தில் கேட்டாள். 

" ஆமாம் பார்த்தேன், ஸ்கேர்லத் யோகன்சன் நடித்தது ...  கறுப்பு வெள்ளையில் கவனத்தை ஈர்க்கின்றது "   ஆங்கிலத்தில் பதில் கொடுத்தேன். 

"அதில் வரும் ஸ்கேர்லத் யோகன்சனைப் போல அச்சு அசப்பில் நான் இருக்கின்றேன் அல்லவா " 

எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. இருவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. ஸ்கேர்லத் அத்தனை அழகு.  யுடியூபில் வரும் அத்தனை விளம்பரங்களையும் தவிர்க்க முடியாத அந்த ஐந்து வினாடிகள் மட்டும் காத்து இருந்து ,முழு விளம்பரத்தையும் பார்க்காமல் நேரிடையாக பாடலுக்கு தாவிவிடுவேன். ஆனால் இந்த டோல்சே கப்பானா வாசனைத் திரவிய விளம்பரம் மட்டும் விதிவிலக்கு.ஸ்கேர்லத் யோகன்சன் மட்டும் என் கண் முன் வந்து நின்றால் இந்த ஆஞ்சலிகா, இந்த இத்தாலிய வேலை , பணம், புகழ் அத்தனையையும் விட்டுவிட்டு ஸ்கேர்லத் காலடியில் கிடப்பேன். 

எனது நக்கல் சிரிப்பைக் கவனித்த ஆஞ்சலிகா , பழைய நாளிதழ்களில் சிலவற்றுடன் தனது படங்களையும்  எடுத்து வந்து அதில் இருந்த ஸ்கேர்லத் படங்களுடன் ஒப்பிட்டு பேசிக்கொண்டு இருந்தாள்.  ஆஞ்சலிகாவும் அவளது படங்களில் நன்றாகத்தான் இருந்தாள். ஆனால் ஸ்கேர்லத் யோகன்சனின் சினிமா ஸ்டில்களுக்கு முன்னால் ஆஞ்சலிகா தூசு. 

பெரும்பாலும் வெள்ளைக்காரப் பெண்கள் ஓர் அதிக ஈர்ப்புடன் இருப்பதற்கான காரணம் அவர்களின் உடலுக்கு ஏற்ற உடை தேர்வும் அவர்களின் நிறமும். ஆஞ்சலிகா உட்பட , பெரும்பாலான வெள்ளைக்காரப் பெண்களை மாநிறமாக மாற்றிவிட்டால் நம்மூரின் சுமாரானப் பெண்களைவிட சுமாராகத்தான் இருப்பார்கள்.  ஆனால் ஸ்கேர்லத் ஒரு விதிவிலக்கு. அவளை ஆப்பிரிக்க கறுமை நிறத்திற்கு மாற்றினாலும் அழகு. அனேகமாக கிளியோபட்ரா கறுப்பு ஸ்கேர்லத்தாக இருந்து இருக்கவேன்டும். 

ஐரோப்பா வந்ததும் வெள்ளைக்காரத் தோழி இருக்கின்றாள் என்பதை உலகத்திற்குக் காட்டிக்கொள்ள முதலில் சிக்கும் பெண்ணிடம் பெரும்பாலான இந்தியர்கள் அதீதநட்புடன் இருப்பார்கள். இங்கு நட்பு  படுக்கைக்கும் சில சமயங்களில் போய்விடுவதால் அது காதலாய் கசிந்துருகிவிடுகின்றது.  இந்திய் ஆண்களுக்கு வெள்ளைக்காரத் துணை இருப்பது, ஒருவிதத்தில் சமூக பாதுகாப்பு மேலும் விசா போன்ற விசயங்களுக்கும் துணைபுரியும்,  கடைசி வருடப்படிப்பின் பொழுது ஆஞ்சலிகாதான் மெக்டோனல்ட்ஸில் வேலை பார்த்து என்னைப் படிக்க வைத்தாள். ஆக வெள்ளைக்கார மோகம் காமத்தில் ஆரம்பித்து இப்பொழுது ஓர் அளவிற்கு வேறு வழி இல்லாத அன்பில் வந்து நிற்கின்றது. 

மறுநாளும் ஆஞ்சலிகா , ஸ்கேர்லத் புராணத்தை ஆரம்பித்தாள். 

"கடைசி பத்து ஆண்டுகளாகவே ஸ்கேர்லத் போல இருக்கின்றேன் என எனக்குத் தெரியும்... ஆனால் யாரிடமும் சொன்னதில்லை... உன்னைக்கூட , உனது விருப்பமான நடிகை ஸ்கேர்லத் யோகன்சன் என சொன்னபிறகுதான் மிகவும் பிடித்துப் போனது " 

நான் ஒன்றும் சொல்லவில்லை.  கல்லூரியில் படிக்கும்பொழுது நடிகர் மாதவன் அலைபாயுதே படத்தில் காட்சி தந்த  பக்காவாட்டு தோற்றம் எனக்கும் இருந்ததாக நானும் நினைத்துக் கொண்டதுண்டு.  பின்னர் நந்தா சூரியா போல அசப்பில் நான் இருப்பதாக நினைத்துக் கொண்டு சிலப்படங்கள் எடுத்து வைத்திருக்கின்றேன்.  அவர்களுக்கும் எனக்கும் ஸ்னானபிராப்தி கூட இல்லை என்பது மிகவும் தாமதமாகத்தான் புரிந்தது. 

ஒரு நாள், இரு நாள் ,, இரு மாதங்களாய் இந்த ஸ்கேர்லத் புராணம் தொடர்ந்தது. எனக்கு ஸ்கேர்லத்தின் மேல் வெறுப்பு வந்துவிடுமோ என்ற பயத்துடன்  ஒருவேளை என் ஆஞ்சலிகா பைத்தியமாகிவிட்டாளோ என்ற பயமும் சேர்ந்துவிட்டது. 

ஒருநாள் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று 

"ஆஞ்சி, நீ ஸ்கேர்லத் யோகன்சனைப் போல கொஞ்சம் கூட முக அமைப்பில் இல்லை " 

"இல்லை, அவளைப்போலத்தான் இருக்கின்றேன்.. வேண்டுமானால் என் அம்மா அப்பா என் தோழிகளைக் கேட்போம்" சாமியாடும் பெண்களைப் போலப் பேசினாள். 

அந்த வார இறுதியில் அனைவரும் வந்தார்கள். அவர்கள் எவ்வளவு எடுத்து சொல்லியும் ஆஞ்சலிகா தன் கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை.  இறுதியாக ஆஞ்சலிகாவை ஒரு மனநல மருத்துவரிடம் கூட்டிப்போவது என முடிவு எடுக்கப்பட்டது.  இந்தியத் துணைக்கண்ட ஆண்களுடன் காதல் வயப்படும் ஐரோப்பிய பெண்கள் கொஞ்சம் மறை கழன்டவர்கள் என்ற எனது கருதுகோள்களில் ஒன்று நிஜமாகிவிடுமோ எனத் தோன்றியது. 

பலத்தரப்பட்ட  பரிசோதனை, தனி ஆலோசனைகளுக்குப்பின்னர்... 

"Apophenia வில் ஒரு வகை இது ... Pareidolia , மேகங்களில் , மலைகளில் மனித உருவங்களையோ தனக்குப்பிடித்த உருவங்களையோ பார்ப்பதைப்போல...  தான் தனக்குப்பிடித்த ஓர் ஆளுமையைப்போல முகச்சாயலுடன் இருக்கின்றோம் என்பதை ஆழமாக நம்புவது.. இந்த வகையான மயக்குறு சூழலில் உங்களது ஆஞ்சலிகா இருக்கின்றார்  "  என்ற மருத்துவர்  தொடர்ந்து 

"ஆஞ்சலிகாவை வேறு ஏதாவது ஊருக்கு சுற்றுலாவாக கூட்டிக்கொண்டு போங்கள் ... ஸ்கேர்லத் யோகன்சனைப் பற்றி பேசாதீர்கள்"  என அறிவுறுத்தினார்

அதற்குப்பின்னர் ஆஞ்சலிகா , ஸ்கேர்லத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை.  உற்சாகமாகவே பாரீஸ் பயணத்திற்குத் தயாரானாள்.  ரோம் விமானநிலையத்தில் நடைமுறைகளை முடித்துவிட்டு விமானத்திற்காகக் காத்துக் கொண்டு இருக்கையில் , தூரத்தில் ஒரு பரபரப்பு. அது நடிகை ஸ்கேர்லத் யோகன்சன் என மக்கள் உற்சாகமாகினர். இந்த சூழலில் எனக்கு ஆஞ்சலிகாவே முக்கியம் எனத் தோன்றியதால் அங்கு போகவில்லை. ஆஞ்சலிகாவிற்கு அந்த பரபரப்பில் கவனம் போகவில்லை. அவள் இளையராஜா பாடல்களை கேட்டுக்கொண்டு இருந்தாள்.  ஸ்கேர்லத் பாரீஸ் தான் போகப்போகின்றார் போலும்... எங்கள் இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். பிரயாணிகள் தங்களது கைபேசிகளில் அவரைப் படமெடுத்துக் கொண்டு இருந்தனர். ஸ்கேர்லத் எங்கள் இருக்கைகளுக்கு எதிரே வந்து நின்றார். 

வியப்புடன், ஆஞ்சலிகாவைக் கண்ணுக்குக் கண் பார்த்த ஸ்கேர்லத் ஆங்கிலத்தில் சொன்னது  

"என்ன ஆச்சரியம்... நீ அச்சு அசப்பில் என்னைப்போலவே இருக்கின்றாய்?" 
                               ------------------  

Tuesday, November 12, 2013

பேஸ்புக் புகைப்படம் - குட்டிக் கதை

'கார்த்தி , ஒரு சின்னப் பிரச்சினை...'

 பொதுவாக அம்மு அவளின்  பிரச்சினைகளை என்னிடம் கொண்டு வர மாட்டாள் , அவளுடைய பிரச்சினைகளை அவளே சரி செய்து கொள்ள முடியும் என்ற திமிரான எண்ணம் அவளுக்கு உண்டு.  என்னவாக இருக்கும் என்ற யோசனையுடன்   "சொல்லு அம்மு" என்றேன்.

'இந்த ஜீவா, என்னுடைய போட்டோக்களை எல்லாம் ரிசேர் செய்றாரு, அதுக்கு தேவதை , அழகி அப்படி இப்படி , ஹார்ட் சிம்பல்களுடன் என வர்ணனைகளுடன் பண்றது எனக்குப் பிடிக்கல"

அந்த ஜீவா , அம்முவோட போட்டோக்களை எல்லாம் மறுபகிர்வு செய்து , அதில் அவரின் நண்பர்கள் ஆபாசத்திற்கு சற்று குறைந்த அளவில் வார்த்தை விளையாட்டுகளுடன் உரையாடுவதைப் பார்த்து இருக்கின்றேன். அம்முவே அதை ஒன்றும் சொல்லுவதில்லை எனும்பொழுது , நான் என்ன சொல்லுவது என அமைதியாக இருந்துவிடுவதுண்டு.  இது மாதிரியான விசயங்களில் பெண்களிடம் பிரச்சினை என்னவென்றால் ஏதாவது  கேள்வி கேட்டால் சந்தேகம் என்பதாகவும், கேட்க வில்லை என்றால் அக்கறை இல்லை என்பதாகவும் புரிந்து கொள்வார்கள்.

"பிடிக்கவில்லை என்றால்  ஜீவாவிடமே சொல்லிவிடு, இல்லை என்றால் டோட்டலா பிலாக் பண்ணிடு அம்மு "

"சொல்லிப் பார்த்துட்டேன் கார்த்தி ,  பிலாக் செய்ய மனசு வரல,  பொதுவா நல்ல மனுஷன், நீ இதை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு ஒரு ஐடியா கொடேன்"

"பொம்பளபுள்ளங்க பஞ்சாயத்துக்குப் போறது எரிச்சலான விசயம்னு சொல்லி இருக்கேன்ல,  போட்டோ போட்டு கூடி கும்மி அடிக்கிறப்ப இப்படியான விஷயம் எல்லாம் வரத்தான் செய்யும் என்னால எதுவும் செய்ய முடியாது ... நீயே பார்த்துக்கோ அம்மு   "
தொலைப்பேசி அழைப்பை உடனடியாக துண்டித்து விட்டாள்.  இரண்டு மணி நேரம் கழித்து அழைத்தாள்.

"கார்த்தி, அந்த ஜீவா என்னோட எல்லா போட்டாக்களையும் எடுத்துட்டாரு, சாரி சொல்லி மெசேஜ் கூட அனுப்பிட்டாரு,,,,, நீ ஏதாவது செஞ்சியா"

" அவரோட மனைவி புரபைலை கண்டுபிடிச்சி , எனக்கு விசிபிளாக   தெரியுற அவங்களோட போட்டோவுல , நீங்கள்  அழகு, உங்கள் கண்களில் சொக்கி விட்டேன்.  உங்கள்  கணவர் கொடுத்து வைத்தவர், அவரின் மேல் எனக்கு பொறாமையாக இருக்கின்றது என்பதுடன் ஒரு ஹார்ட் சிம்பலுடன் கமெண்ட் போட்டு இருந்தேன்"
                   --------------

Wednesday, October 16, 2013

அங்கு கண்ட மனிதர்கள் - சிறுகதை

பன்னாட்டு வான்வெளி ஆய்வு மையம் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டு இருந்தது.  ஆம் பல நூறு ஒளியாண்டுகள் தள்ளி இருக்கும் ஒரு கோளில் மனிதர்கள் இருப்பதை கண்டுபிடித்து விட்டனர். அண்ட சராசரத்தில் முடிவிலா பயணம் மேற்கொண்டு இருக்கும் புவியில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு விண்கலம்  அதை  படம் பிடித்து அனுப்பி இருக்கின்றது.  வந்து இருந்த படத்தில், மிகப்பெரிய சமவெளியில்  கூட்டம் கூட்டமாக மனிதர்கள் இருக்கின்றனர்.

"ஆடைகள் இன்றி இருப்பதால் , நாகரிக காலம் இன்னும் அங்கு தோன்றாமல்  நாம் ஆதியில் இருந்ததைப் போல இருக்கின்றனர் போலும் "  என்றார் ஓர் அறிவியல் ஆளர்

"இந்தக் கோளின் ஒரு பகுதியைத் தானே படம் பிடித்து இருக்கின்றது நமது விண்கலம்... மறு பகுதிக்கான படங்கள் என்று வரும் ?"  என்ற பத்திரிக்கையாளரின் கேள்விக்கு

"இன்னும் ஓர் ஆண்டில் எதிர்பார்க்கின்றோம் "  பதில் சொன்னார் தலைமை அறிஞர்.

உலகமே இதைப் பற்றித்தான் பேசிக்கொண்டு இருந்தது . கல் தோன்றா மண்  தோன்றா  காலம் முன்னரே அங்கு சென்ற நமது தொப்புள் கோடி உறவுகளாக இருக்கும் என தமிழ் நாட்டுத் தலைவர்கள் கட்டுரைகள் எழுதினர்.  ஏக இறைவன் மனிதனைப் படைத்தான். பல இடங்களில் அவனை அமர வைத்தான் என ஆபிரகாமிய மதங்கள் புது விளக்கங்கள் கொடுத்தன.  அவர்கள் அனேகமாக இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களாக இருக்கக் கூடும். ஆடை இல்லை என்பது ஒரு முக்கியமான விஷயம் என்பதால் , ஒளிக்கூசும் ஆடைகளை விண்கலம் படம் பிடிக்க இயலவில்லை என வேத விற்பனையாளர்கள் விளக்கம் சொன்னார்கள்.  மேற்கு உலகில் ,  எவ்வளவு விரைவில் அங்கு போக முடியும் என்பதற்கான ஆராய்ச்சிகள் தொடங்கலாயின.

அதே நேரத்தில் மனிதர்களைக் கண்டுபிடித்த கோளின் மறுபக்கத்தில், 

பிரம்மாண்டமாய் இருந்த டைனசோர்கள்,  கற்பனையின் உச்சத்தில்   ஒரு கட்டிடம் இருந்தால் எப்படி இருக்குமோ அவ்வகையான கட்டமைப்பின் மையத்தில்,  இன்னும் இருபது வருடங்களுக்குள் ஏற்படப் போகும் உணவுப் பற்றாக்குறையை விவாதிக்கக் கூடி இருந்தன.

"மனித இனப்பெருக்கம் குறைந்து கொண்டே வருகின்றது .. அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் நமக்கு சத்தான மனித மாமிசம் கிடைப்பது நின்று விடும் °

விவாதம் போய்க் கொண்டிருக்கையில்  தலைமை காவல் மையத்திடம் இருந்து தகவல் வந்தது.  ஐயத்திற்கு இடமான ஒரு பொருள் ஒன்று நமது  கோளின் மேல் சுற்றிக் கொண்டு இருக்கின்றது.

"அழித்து விட வேண்டாம்,  அதன் தொடர்புகளைக் கண்காணியுங்கள்... பின் தொடருங்கள் "

அடுத்த சில மணி நேரத்தில் அடுத்த செய்தி வந்தது

"மகிழ்ச்சியான செய்தி,   அந்த சந்தேகத்திற்கு இடமான பொருள் தொடர்பு கொள்ளும் கிரகத்தில்  , நாம் உணவிற்காக வளர்க்கும் மனித விலங்குகள் ஏராளமாக இருக்கின்றன."

"அருமை... நாளையே நமது கலங்களைத் தயார் செய்யுங்கள் .. நமது எதிர்கால உணவுப் பிரச்சினை தீர்ந்தது "

கோளின் மறுபக்கப் படங்கள் புவிக்கு வரும் முன்னரே, டைனோசர்கள் பூமியில் களம் இறங்கின



Tuesday, October 15, 2013

புக்பேஸ் - சிறுகதை

"இப்படியே போனால் இன்னும் இரு வருடங்களில் இந்தியா வல்லரசு ஆகி விடும் , ஏதாவது செய்து அவர்களை பிரச்சினைக்குட்படுத்த வேண்டும் , உங்கள் யோசனைகளை சொல்லலாம்" என அமெரிக்க - ஐரோப்பிய - சீன  கூட்டு அமைப்பின் தலைவர் கூடியிருந்த உயர்மட்ட உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்

"வழமைப்போல , சாதி கலவரம்  மத கலவரங்களைத் தூண்டி விட்டு விடுவோமா " என்றாள் சீனாக்காரி

"பல வருடங்களுக்கு முன்பு அது மிகவும் எளிது , அன்று தமிழ்நாட்டில் மட்டும் பெரியாரியத்தினால் இருந்த சகிப்புத் தன்மை , இன்று  நாடு முழுவதும் இருக்கின்றது.... நாடே பெரியார் பெயரை உச்சரிப்பதால் அதற்கான வாய்ப்பு இல்லை "  என்றான் சுவீடனின் ஆண்டர்சன்

"இந்தியாவின் மீது படை எடுக்கலாமா? "

"வேண்டாம்... அது மூன்றாம் உலகப் போரில் கொண்டு வந்து விட்டு விடும்.  நாம் விற்ற ஆயுதங்களாலேயே இன்று அவர்கள் பலமாக இருக்கின்றார்கள்  கூடங்குளம் அணு உலை கூட சிறப்பாக செயற்பட்டு கொண்டு இருக்கின்றது"

"மருத்துவ ரீதியாக, ஏதேனும் நோய்களை உருவாக்கி விடலாமா "

"மூட நம்பிக்கைகளை ஒழித்த கையோடு , போலி மருத்துவம் எல்லாம் ஒழித்து, தடுப்பூசிகள், சிறப்பான அறிவியல்  மருத்துவத்தினால் பாதுகாப்பான நம்மை விட சுகாதார  வளமான சமுதாயமாக இருக்கின்றது ..  " என்றான் ஒரு ஜெர்மானியன்.

கடைசியாக  "என்னிடம் கத்தியின்றி இரத்தமின்றி இந்தியாவில் ஒரே இரவில் பிரச்சினைகளைக் கொண்டு வர ஒரு வழி இருக்கின்றது "  என சொல்லியபடி எழுந்தான் அமெரிக்காவின் ஆரஞ்சுபிட்டர்.

ஆவல் மேலிட அவனை எல்லோரும் பார்க்க , ஆரஞ்சுபிட்டர் தொடர்ந்தான்.

"என்னுடைய புக்பேஸ் சமூக இணைய தளத்தில்  இந்தியாவிற்கு மட்டும் பயனாளர்களுக்கு தகவல் பாதுகாப்பு பாக்கியங்களை நீக்கி விடுகின்றேன் "

"புரியவில்லை " என்பது போல அனைவரும் ஒரே சேர புருவம் உயர்த்தினர்

"புக்பேஸ் இந்திய பயன்பாட்டாளர்களுக்கு மட்டும் சக இந்திய பயன்பாட்டாளர்களின் தனித் தகவல்கள் பரிமாற்றங்கள், தனி அரட்டை பரிமாற்றங்கள் , புகைப்படங்கள் இவற்றை எந்தவித கட்டுப்பாடு இன்றி   யார் வேண்டுமானாலும் யாருடையதை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ள முடியும்,   இந்தியர்கள் யாரும்  தகவல்களை அழிக்கவோ மாற்றவோ முடியாது , மேலும்  அவர்கள் கணக்கை முடக்கவோ தற்காலிகமாக நிறுத்தி வைக்கவோ முடியாது.. ஒவ்வொரு இந்தியரின்  ரகசியமும் எல்லா இந்தியர்களுக்கும் சொந்தம்"

உயர் மட்ட கூட்டம் வெற்றிச் சிரிப்புடன் கலைந்தது.  அடுத்த சில நாட்களில் இந்தியா பற்றி  எரிந்தது.

Wednesday, June 26, 2013

புலிவால் - சிறுகதை

 கழிவறை, படுக்கையின் தலையணை மாட்டு , கால் மாட்டு , சட்டை , என் உள்ளாடைகளில் கூட கேமரா வைத்து நம்மை கண்காணித்தால் எப்படி இருக்குமோ , இணையத்தில் அப்படி ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படும்சூழலில் தமிழ்நாட்டின் பெரிய கட்சித்தலைவர்களில்  ஒருவருக்கு நான் ஐரோப்பாவில் பினாமியாக இருக்கின்றேன் என ஒரு துப்பறியும் சாம்பு பேஸ்புக்கில் நிலைத்தகவல் வைத்திருந்தார்.  நமக்கு சாதகமாக இருக்கும் விசயங்களுக்காக  ,  சிலருக்குப் பதில் சொல்லுவதை விட பதில் சொல்லாமல் இருப்பதே சுவாரசியம்.  அது வதந்தியா இல்லை உண்மையா என்பதை ,என் மின்னஞ்சல்களை வாசித்து விட்டு உங்களுக்கு கண்டிப்பாக சொல்லுகின்றேன். 
வழக்கமான வாத்தியாரின் மெயில்கள், வாழ்ந்தால் உன்னோடுதான் வாழ்வேன் என்ற அம்முவின்  கடிதங்கள் என ஒவ்வொன்றாகப் படித்து முடித்த பொழுது, அந்த மின்னஞ்சல் மேல் வந்தது. 

அன்புடன் கார்த்திக்கு, 
ஒரு தகவல் பெட்டகத்தை ரஷியாவில் இருக்கும் ஒருவரிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதற்கு தங்களை தேர்வு செய்து இருக்கின்றோம். விருப்பம் இருந்தால் பதில் அனுப்பவும் 
இப்படிக்கு 
உலகமக்களின் நலம் விரும்பி 

என ஆங்கிலத்தில் வந்து இருந்தது.  வழக்கமாக ஆப்பிரிக்க அரச வழிப் பரம்பரையினரின் கடைசி வாரிசு நான், என் சொத்துகள் பிரிட்டனில் ஒரு வங்கியின் பாதுகாப்பில் இருக்கின்றது, மீட்டு எடுக்க உங்களின் உதவி தேவை என வரும் அல்லது, நான் அன்புக்காக ஏங்குகின்றேன் , என்னை நேசிப்பாயா என கறுப்பு அழகிகளின் படங்களுடன் வரும். படங்களை மட்டும் டவுன் லோட் செய்து வைத்துக் கொள்வதுண்டு.  உட்டாலக்கடி நைஜீரியா வகை மெயில்களுக்கு மத்தியில் இது வித்தியாசமாக இருந்தது.  

எனக்கும் ரஷியாவிற்குப் போக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. "என்ன விஷயம் " என பட்டும்  படாமல் ஒரு வரியில் பதில் அனுப்பினேன். 

என்னை நெடுங்காலமாக சமூக ஊடகங்களில் கவனித்து வருவதாகவும் , என்னுடைய சமூக அக்கறை, இடது சாரி சார்பு ஆகியனவையே இந்த மின்னஞ்சலை எழுத வைத்ததாக கூறி இருந்தனர். என்னுடைய சமூக அக்கறை, போராளிக் கருத்துகள் எல்லாம் ஒரு வகையில் பாசாங்கு தான் என்றாலும்  வாய்ப்புக் கிடைத்தால் ஸ்டைலான களப் போராளியாக மாற நான் தயங்க மாட்டேன். 

கைபேசி எண்ணைக் கேட்டார்கள், கொடுத்தேன். என்னிடம் பேசினார்கள். வங்கிக்  கணக்கு எண்ணைக் கேட்டார்கள். மறுநாள் கணிசமான தொகை வரவாக இருந்தது. 

விஷயம் இதுதான். ரோம் விமான நிலைய டிரான்சிட்டில்  ஒரு  மென் கோப்புகள் அடங்கிய வன் தட்டு , அதாவது ஹார்ட் டிஸ்க்கை ஒருவரிடம் இருந்து நான் பெற்றுக் கொள்ள வேண்டும். அதை வீட்டில் பாதுகாப்பாக ஒரு வாரம்  வைத்து இருக்க வேண்டும். பின்னர் , பின்லாந்தின் தலைநகர் ஹெல்சின்கி போய் , அங்கிருந்து ஒரு  பேப்பர் கவரைப் பெற்றுக் கொண்டு , ரயிலில் ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் சென்று, அங்கு நான் ஏற்கனவே ரோம்  டிரான்சிட்டில் சந்தித்த ஆளிடம் மீண்டும் சேர்க்க வேண்டும். 

கரகாட்டக்காரன் பட ரசிகனான எனக்கு, ஜேம்ஸ் பாண்ட் பட ரேஞ்சில் ஒரு  வேலை வருகின்றது , அதுவும் ஏகப்பட்ட சம்பளத்துடன் ... ஆடித்தான் பார்ப்போமே என இருந்தது. 

பாஸ்போர்ட் விபரங்களைக் கேட்டார்கள். அதுதான் ஏற்கனவே பணம் அனுப்பிவிட்டார்களே  இனி நம்பலாம் ... கேட்ட விபரங்களுக்கு மேலாகவே கொடுத்தேன். 

ரோமில் இருந்து இஸ்தான்புல் செல்லும் விமானம் ஒன்றிற்கு டிக்கெட் அனுப்பினார்கள்.  கூடவே துருக்கி மின் - விசாவும்  வந்தது.  செக் - இன் செய்ய வேண்டும்.  ஆனால் விமானத்தில் ஏறக் கூடாது, ஹாங்காங் செல்லும் விமான நிலைய கதவில் ஒருவரிடம் இருந்து ஒரு ஹார்ட் டிஸ்க்கை வாங்கிக் கொண்டு திரும்பி விட வேண்டும் என்பதுதான் உத்தரவு. 

மொழிப் பட ஹீரோ  பிரித்விராஜ், இன்னும் கொஞ்சம் வெளுப்பாய் இருந்து, பிரேம்லெஸ் கண்ணாடி போட்டு இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒருவரை ஹாங் காங்கிற்கு விமானம் புறப்பட இன்னும் ஒரு மணி நேரம் இருக்கையில் சந்தித்தேன். செயின் பீட்டர்ஸ்பர்க்கில் சந்திப்போம் என அவர் வைத்து  இருந்த மடிக்கணிகளில் ஒன்றை என்னிடம் கொடுத்தார்  

°வன் தட்டு என்றார்களே !!  " என்றேன் .. 

பதில் பேசவில்லை, சிரித்துக் கொண்டே கொடுத்தார். வாங்கிக் கொண்டேன். திரும்பும் பொழுது குடியேற்ற பாதுகாப்பு  அதிகாரிகள் மையமாகப் பார்த்தார்கள் ஜேம்ஸ் பாண்டுகள் பயப்படுவதில்லை. வீட்டிற்கு வந்ததும் மடிக் கணினியை திறந்துப் பார்க்க விருப்பமாக இருந்தது. கடவுச் சொல் தெரியாதே !! ஒருவேளை திறந்தால் வெடித்துகே கிடித்து தொலைந்து விடப்போகின்றது ... 

அடுத்த ஒரு வாரம் படபட ப்பாகத் தான் போனது.  கல்லூரிக்குப் போகவில்லை. ஒரு நாள், ரஷியன் மாதிரி தோற்றம் உடையவன்  வந்து, அவனது காரில் ரஷியத் தூதரகத்திற்கு அழைத்து  சென்று , ஏற்கனவே தயாராக இருந்த, ரஷிய  விசாவையும் கொடுத்தான். நடக்கும் சம்பவங்களுக்கு ரகுமான் பின்ணனி இசைக் கோர்த்தால் அட்டகாசமாக இருக்கும் வகையில் எல்லாமே ஸ்டைலாக இருந்தது-. 

ரோம் - ஹெல்சின்கி விமானம் , பின்பு ஹெல்சின்கி - பீட்டர்ஸ்பர்க் அலிக்ரொ சூப்பர் பாஸ்ட் டிரெயின். ஒரு வயதான தாத்தா , சிலக் கோ புகளை ஹெல்சின்கி ரயில் நிலையத்தில் என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார். 

ரயிலில் விபோர்க் - வைனிக்கலா இடையில் சகப் பிரயாணிகள் எல்லோரிடமும் கடுமை காட்டிய ரஷிய அதிகாரிகள், என்னிடம் மட்டும் கனிவாகப் பேசினார். பீட்டர்ஸ்பர்கில் இருந்து, நூறு கிலோமீட்டர்கள் தொலைவில் ஒரு மாளிகை,  அங்கு அந்த பிரித்விராஜ் மாதிரி இருந்த ஆளை சந்தித்தேன்.  

மடிக் கணினியைக் கொடுத்தேன் அதைப் பெற்றுக் கொண்டு, அவரிடம் இருந்த ஒரு மடிக்கணினியை என்னிடம் கொடுத்தார். 

பத்திரமாக வைத்துக் கொள்ளவும், சில மாதங்களுக்குப் பின் தகவல் வரும் , அப்பொழுது வரும் உத்தரவின் படி செய்ய வேண்டியதை செய்தால் போதும். "

நான் வந்த காரில் அவர் வெளியேறினார். சில மணி நேரங்கள் காத்து இருந்தேன்.

 கொஞ்சம் பயமாகவும் இருந்தது.  காரியம் முடிந்து விட்டதே, காரியம் செய்து விடுவார்களோ என... இல்லை இல்லை ... ரஷியாவில் கண்டிப்பாக சாக மாட்டேன் ... கார் வந்தது... ரயில் நிலையம்... ஹெல்சிங்கி ஹோட்டலுக்குப் போகும் தெருவில் யாரோ என்னை உற்றுப்பார்ப்பது போல ஓர் உணர்வு ... சுற்றி முற்றிலும் பார்த்தேன் தூரத்து கட்டிடத்தில் சன்னலின் வழியாக துப்பாக்கியில் குறி பார்த்துக் கொண்டிருந்தான்.  அதன் எதிர் கட்டிடத்தில் அவனை ஒருவன் குறி பார்த்துக் கொண்டிருந்தான். ஆக இரண்டு குழுக்கள் என்னைப் பின் தொடர்கின்றன.... ஒன்று என்னைப் பாதுகாக்க , இன்னொன்று என்னைத் தீர்த்துக் கட்ட ....  யார் முந்தப் போகின்றார்கள் எனத்  தெரியவில்லை ... சுடப்படலாம்... சுடப்பட்டும் தப்பிக்கலாம் ... சுடப்படாமலும் போகலாம்... 

உங்களின் அவசரம் புரிகின்றது. உங்களுக்கு அந்த தமிழ் நாட்டு அரசியல் தலைவருக்கு நான் பினாமியா இல்லையா என்பது தெரியவேண்டும் ஒருவேளை நான் காப்பற்றப்பட்டால் நாளை என் பேஸ்புக்கில்  கண்டிப்பாக சொல்கின்றேன்.  துப்பாக்கி வெடித்தது. 


Tuesday, April 09, 2013

ஒரு வாளி ஆக்சிஜன் - மொழிப்பெயர்ப்பு நெடுங்கதை - நிறைவுப் பகுதி



Fritz Leiber எழுதிய A Pail of Air என்ற அறிவியல் புனைவு சிறுகதையின் தமிழாக்க முயற்சி

முந்தையப் பகுதிகள்  - http://vinaiooki.blogspot.it/2013/04/1.html
----


அம்மா, அப்பா, அந்த மூன்று பேர் வயதான அனுபவ பெரிய மனிதர்கள்  போல பேசிக்கொண்டிருந்தனர். நெருப்பை எப்படிக் கட்டுக்குள் வைப்பது, பனித்துகள்களை புகைப்போக்கிகளில் இருந்து எப்படி நீக்குவது என்பதை அந்த ஆண்களிடம் அப்பா விளக்கினார். அம்மா உற்சாகமாக, அந்த இளம்பெண்ணிடம் சமைப்பதுப் பற்றியும், தையல் வேலைப்பாடுகளைப் பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தார். லாஸ் அலமோஸில் எப்படி பெண்கள் உடையணிந்து இருப்பதைப் பற்றி அறிய அம்மா ஆர்வம் காட்டினார். அந்தப் புதிய மனிதர்கள், எங்களின் ஒவ்வொரு விசயத்திற்கும் வியப்பைக் காட்டி வானளவுப் புகழ்ந்தனர். அவர்கள் அடிக்கடி மூக்கை உறிஞ்சியதில், எங்கள் கூடு நாற்றமடிக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். ஆனால் அதைப் பற்றிஎல்லாம் அவர்கள் கேட்கவில்லை, தொடர்ந்து ஆச்சரியத்துடன் கேள்விகளாகக் கேட்டனர்.

உற்சாகமும் பேச்சும் கரைபுரண்டு ஓட, அப்பா, சில விசயங்களை செய்ய மறந்து விட்டார்.  வாளியில் இருந்த காற்று தீர்ந்துப் போய் இருந்தது. இன்னொரு வாளியை போர்வைகளை விலக்கி எடுத்தார். சிரிப்பும் கலகலப்பும் தொடர்ந்தது. புதியவர்கள் கொஞ்சம் கிறக்கமான நிலைக்குப் போயினர். அவர்கள் இவ்வளவு அதிகமான ஆக்சிஜனை சுவாசித்ததில்லை.

நான் எதுவுமே பேசவில்லை, தங்கை அம்மாவின் பின் ஒளிந்து கொண்டாள். யாராவது அவளைப் பார்த்தால், அம்மாவிடம் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.  எ அந்த இளம்பெண்ணைப் பார்க்கையில் எல்லாம். இனம்புரியா சங்கடம் இருந்தது. அவளுக்கான மென்மையான உணர்வுகள் இருந்தாலும், கொஞ்சம் வெட்கமும் பயமும் கூடவே வந்தன. அவள் என்னிடம் கனிவாகவே இருந்தாள்.

அவர்கள் சீக்கிரம் வெளியேப்போய்விடவேண்டும்,  மீண்டும் இந்தக்கூடு எங்களுடன் மட்டும் விடப்பட்டு, சகஜநிலைக்குத் திரும்பி, நாங்கள் இயல்பாக வேண்டும் என நினைத்தேன்.

அந்தப் புதியவர்கள், நாங்கள் லாஸ் அலமோஸ் போவதைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள். அவர்களாகவே அந்த உரிமையை எடுத்துக் கொண்டார்கள். அம்மாவும் அப்பாவும் அந்த உரிமை எடுத்தலைக் கவனித்தனர். அப்பா அமைதியானார்.

“அந்தப் புது ஊரில் எப்படி பழகுவது எனத் தெரியாதே, அந்த ஊருக்கான உடைகள் கூட இல்லையே~ அந்த இளம்பெண்ணிடம் அம்மா சொன்னார்.

புதியவர்களுக்குப் புதிராக இருந்தது. இருந்தாலும் புரிந்து கொண்டார்கள்.

“இந்தத் தனலை அப்படியே விட்டுவிட்டு வருவது சரியாக இருக்காது” அப்பா சொன்னார்.

--


அந்த வேற்று மனிதர்கள் போய்விட்டனர். ஆனால் திரும்பி வருவார்கள். அடுத்தது என்ன என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அந்த மனிதர்கள், எங்கள் கூட்டினை “நிலைத்திருத்தலின் பள்ளி” எனப் பெயர்வைத்தனர். நாங்கள் காங்கோவில், யுரேனிய சுரங்கங்களின் அருகே அமைக்கப்பட இருக்கும் புது குடியிருப்பிற்கு போகலாம்.

இப்பொழுது அந்தப் புதியவர்கள் போய்விட்டபடியால், லாஸ் அலமோஸ் குடியிருப்பைப் பற்றிய நினைவுகளில் என்னை உள்வாங்கிக் கொண்டேன். அந்த ஊரைப் பார்க்க வேண்டும் எனத் துடித்தேன்.

அப்பாவும் அவற்றை எல்லாம் பார்க்க விரும்புகின்றார். அம்மாவும் தங்கையும் உற்சாகமாக இருப்பதைப் பார்த்தபடி அவர் எண்ண ஓட்டத்தில் மூழ்கிவிட்டார்.

“இனி அம்மா எந்த நம்பிக்கையற்றும் இருக்க வேண்டியதில்லை, நானும்தான்... இப்பொழுது முற்றிலும் வேறு சூழல், வேறு சிலரும் உயிரோடு இருக்கின்றனர். மனித குலத்தைப் பாதுகாக்க வேண்டியப் பொறுப்பு இனித் தேவையில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அந்த பொறுப்புணர்வு மிகுந்த பயத்தைக் கொடுத்தது”
அப்பா சொன்னார்.

உறைந்த காற்று உருகிக் கொண்டிருந்தது. தொங்கிக் கொண்டிருந்தப் போர்வைகளைப் பார்த்தேன், நெருப்பைப் பார்த்தேன். அம்மாவும் தங்கையும் கதகதப்பில் உறங்கி இருந்தனர்.

“இந்தக் கூட்டை விட்டுப்போவதை மனது அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ளது” அப்பாவிடம் சொன்னேன். அழ வேண்டும் போல இருந்தது. சிறிய கூடு, நாங்கள் நால்வர் மட்டுமே. புதிய நகரம், புதிய மனிதர்கள், பெரிய இடங்கள் எனக்குப் பயமாக இருந்தது.

சிறு கரித்துண்டுடன், மேலும் சில பெரிய கரித் துண்டுகளைச் சேர்த்து. நெருப்பில் போட்டபடி தலையசைத்தார். பிறந்தநாள் கொண்டாட்டங்களிலும் கிறிஸ்துமஸ் அன்று மட்டுமே அப்படி அவர் செய்வார்.

“அந்தப் பயத்தை எளிதில் கடந்துவிடுவாய்” அப்பா தொடர்ந்தார்.

“உலகம் சுருங்கி சுருங்கி இந்த கூட்டின் அளவிற்கு வந்தது, பின்பு மீண்டும் விரிவடையும்... மிகப்பெரிய அளவில் விரியும்... ஆரம்பத்தில் இருந்ததைப்போல”

ஆம் அவர் சொல்வதும் சரிதான்.  எல்லாம் இருக்கட்டும், அந்த இளம்பெண் , நான் பெரியவன் ஆகும் வரை காத்திருப்பாளா, எனக்கு இருபது வயது ஆக இன்னும் பத்து வருடங்கள் இருக்கின்றனவே

முற்றும் 

ஒரு வாளி ஆக்சிஜன் - மொழிப்பெயர்ப்பு நெடுங்கதை (பகுதி 8)



Fritz Leiber எழுதிய A Pail of Air என்ற அறிவியல் புனைவு சிறுகதையின் தமிழாக்க முயற்சி

முந்தையப் பகுதிகள்  - http://vinaiooki.blogspot.it/2013/04/1.html



-------
போர்வையை விலக்கிக்கொண்டு அழகான இளம்பெண் வெளியே வந்தாள்.  அங்கேயே நின்றபடி, எங்களை வித்தியாசமாகப் பார்த்தாள். அவளின் கைகளில் வெளிச்சமான , மின்னாத விளக்கைப்போன்ற ஒன்றை வைத்திருந்தாள். அவளின் தோள்களுக்குப்பின்னால் இருந்து மேலும் இரண்டு முகங்கள் வெளிவந்தன, அவை ஆண்கள், வெள்ளை நிறத்தில் முறைத்தபடி வந்தனர்.

என் இதயத்துடிப்பு நிற்பதற்கு முன்னர், அந்த இளம்பெண் அணிந்து இருந்த உடை , அப்பாவின் தயாரிப்பு உடைகளை ஒத்து இருந்தது, ஆனால் நவீனமாக இருந்தது. அந்த ஆண்களும் அதே வகையிலான உடைகள் அணிந்து இருந்தனர். கண்டிப்பாக உறைந்த இறந்த மனிதர்கள் இத்தகைய உடைகளை கண்டிப்பாக அணிந்து இருக்க முடியாது.  அவள் கையில் வைத்து இருந்தது சாதாரண வகையிலான டார்ச்லைட்.

அமைதி சில நொடிகளுக்கு நிலவியது. எச்சில் முழுங்கிக் கொண்டேன். குழப்பமான ஒரு பரபரப்பு நிலவியது. அவர்களும் சாதாரண மனிதர்கள் தான்.  நாங்கள் எண்ணி இருந்தபடி, நாங்கள் மட்டுமே உயிருடன் எஞ்சி இருக்கும் மனிதர்கள் அல்ல. இந்த மூன்று மனிதர்களும் தப்பிப்பிழைத்து இருக்கின்றார்கள். அவர்களுடன் வேறு சிலரும் பிழைத்து இருக்கின்றார்கள். அவர்கள் எப்படிப்பிழைத்தார்கள் என்பதை சொல்லியபொழுது அப்பா மகிழ்ச்சி ஆராவாரம் செய்தார்.

அவர்கள் லாஸ் அலமோஸில் இருந்து வந்து இருக்கின்றார்கள். அங்கு வெப்பமும் ஆற்றலும் அணு சக்தியினால் தொடர்ந்து கிடைத்துக் கொண்டு இருக்கின்றது.  அணு ஆயுதத்திற்குப் பயன்படுத்தும் யுரேனியத்தையும் புளுடோனியத்தையும் கொண்டு ஆற்றல் பெறப்படுகின்றது. இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்குத் தேவையான ஆற்றலைப் பெற முடியும். காற்று வெளியேறா நகரைத்தை நிர்மானித்து அதில் வாழ்கின்றார்கள். மின்சார வெளிச்சத்தில் தாவரங்களையும் விலங்குகளையும் கூட வளர்க்கின்றனராம். அப்பாவின் அடுத்த மகிழ்ச்சிக் கூச்சலில் அம்மா மயக்கத்தில் இருந்து தெளிந்தார்.

அவர்கள் சொல்லிய அனைத்தும் எங்களை வியப்பின் உச்சத்தில் ஆழ்த்தியது. அதைப்போல இரண்டு மடங்கான வியப்பை எங்களைப் பார்த்து அவர்கள் அடைந்தார்கள்.

அதில் ஒருவர் ,

“இப்படி நடக்க சாத்தியமேயில்லை,  இறுக்கமான கூரைகளும் சுவர்களும் இல்லாமல் காற்றோட்டத்தை  எப்படி வைத்திருக்க முடியும்...  சாத்தியமேயில்லை " என திரும்ப சொல்லிக்கொண்டு இருந்தார், அதுவும் தனது தலைக்கவசத்தைக் கழட்டியபின்னரும் எங்கள் அறையில் இருந்த காற்றை சுவாசித்தபடி.

இடையில் அந்த இளம்பெண், எங்களைப் ஆன்மீகப் புனிதர்களைப்போலப் பார்த்து கொண்டிருந்தாள். அவளின் பார்வையில் நாங்கள் ஏதோ ஓர் அற்புதத்தை நிகழ்த்தி இருப்பதாகக் காட்டியது. திடீரென உடைந்து அழ ஆரம்பித்தாள்.

அவர்கள் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டிருக்கையில், இத்தகைய இடத்தில் ஒரு வாழ்க்கையைப் பார்ப்பார்கள் என அவர்கள் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. லாஸ் அலமோஸில் விண்வெளி ஓடைகளும், வேதிப்பொருட்களும் நிறைய இருக்கின்றதாம்.  மேலடுக்கில் இருந்து திரவ ஆக்சிஜனை எடுத்து பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். லாஸ் அலமோஸில் எல்லாம் நிலைப்பெற்ற பின்னர், ஏனைய இடங்களில் மக்கள் பிழைத்து இருக்கின்றார்களா என தேட ஆரம்பித்து இருக்கின்றனர். அதி தூர ரேடிய சமிஞைகள் பயனற்றுப்போயின. வளிமண்டலம் இல்லாத பொழுது சமிஞைகளைப் பிரதிபலித்து திருப்பி அனுப்ப முடியாது அல்லவா.

அவர்கள் அர்கோன், புரூக் வேகன், ஹார்வெல் , தன்னா துவா இடங்களில் மக்கள் பிழைத்ததைக் கண்டுபிடுத்து இருக்கின்றனர். எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி எங்கள் நகரத்தையும் ஒரு பார்வை இடலாம் என வந்த பொழுது வெப்ப அலைகளை அவர்களின் உபகரணம் கண்டறிந்து இருக்கின்றது.  ஏதோ கதகதப்பான ஒன்று இருக்கின்றது, அது என்ன என்பதை அறிய கீழே இறங்கி இருக்கின்றனர். ஒலியைக் கடத்த, உறையாக் காற்று இல்லாததால் எங்களுக்கு அவர்களின் விண்வெளி ஓடம் இறங்கிய  சத்தம் எங்களுக்குக் கேட்கவில்லை.  அவர்களின் ரேடார் தவறான வழியைக் காட்டியதால் , எதிர்த்த கட்டிடத்திற்கு அடுத்து இருந்த தெருவில் தேடியிருக்கிறார்கள்.

தொடரும் ---> http://vinaiooki.blogspot.it/2013/04/9.html 

Monday, April 08, 2013

ஒரு வாளி ஆக்சிஜன் - மொழிப்பெயர்ப்பு நெடுங்கதை (பகுதி 7)



Fritz Leiber எழுதிய A Pail of Air என்ற அறிவியல் புனைவு சிறுகதையின் தமிழாக்க முயற்சி

முந்தையப் பகுதிகள்  - http://vinaiooki.blogspot.it/2013/04/1.html

---



எங்களை பயத்தில் இருந்து வெளியே எடுக்க ஆயிரத்தி எட்டாவது தடவையாக நடந்தவகைகளைச் சொல்லிக் கொண்டிருக்கையில், அந்த உறைந்த மனிதர்களைப் பற்றி நினைக்க ஆரம்பித்தேன். திடிரென நான் யோசித்த ஒன்று எல்லாவற்றைக் காட்டிலும் என்னைப் பயமுறுத்தியது.. ஆரம்பத்தில் நான் சன்னலில் பார்த்த முகம் நினைவுக்கு வந்தது. நான் முகத்தைப் பார்த்ததைத்  தான் குடும்பத்தினரிடம் சொல்லவே இல்லை என்பதை மறந்துப் போய் இருந்தேன்.

உறைந்த மனிதர்கள் மீண்டும் உயிருடன் வந்தால், என்னையே நான் கேள்விக் கேட்டுக்கொண்டேன். உறைந்துப் போய் விட்டது என நினைக்கையில், வெப்பத்தை நோக்கி வரும் மிதக்கும் திரவ ஹீலியத்தைப் போல அவர்கள் வந்தால்.. உறையும் குளிரில் முடிவிலாது கடத்தப்படும் மின்சாரத்தைப்போல வந்தால்? ... தொடர்ந்து அதிகரிக்கும் குளிரில், தனிச்சுழி வெப்பநிலைக்கு நெருங்கும் குளிரில் , அமானுஷ்யமாக உறைந்த மனிதர்கள் எழுந்து வந்தால்.. வெப்பரத்த பிராணிகளாக இல்லாது, பனிக்கட்டி ரத்தத்துடன்,,,, கோரமாக உயிரோடு வந்தால் ...

நான் யோசித்தது, கருப்பு நட்சத்திரத்தில் ஏதேனும் ஒன்று கீழிறங்கி பூமிக்கு வந்தால் என யோசிப்பதைவிட படுபயங்கரமானதுதான். இரண்டுமே நடக்க சாத்தியமானதுதான். மேலிருந்து வந்த ஒன்று, உறைந்த மனிதர்களை நடக்க வைத்து, அவர்களுக்கு தேவையான ஒன்றை செய்ய வைக்கலாம். அந்த அழகிய இளம்பெண் கையில் வெளிச்சத்துடன் நகர்ந்ததைப்போல.

அறிவாற்றலுடன் கூடிய உறைமனிதர்கள், கண்சிமிட்டாது, முகர்ந்து கொண்டு , தவழ்ந்து கூட்டில் இருக்கும் நெருப்பிற்கு வரலாம்.  இப்படியான திகில் கற்பனைகள், அதிகப்பயத்தைத் தந்து, குடும்பத்தினரிடம் என் பயத்தை சொல்ல தள்ளியது. ஆனால் அப்பா சொல்லிய அறிவுரை நினைவுக்கு வந்து, பற்களைக் கிட்டி வாயை மூடி பேசாது இருந்தேன்.

நெருப்பு நிதானமாக எரிந்து கொண்டிருந்தது. நாங்கள் எல்லோரும் அமைதியாக இருந்தோம். அப்பாவின் குரலும் , கடிகார முட்கள் நகரும் சத்தமும் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தன. அது மட்டும் இல்லாது, போர்வைக்கு அப்பால், ஏதோ சன்னமான சத்தம் கேட்பதாக உணர்ந்தேன். மயிர்கூச்செறிந்தது.

ஆரம்பக்கால கதைகளைச் சொல்லி முடித்தபின்னர், வழக்கமான தத்துவார்த்த நிலைக்கு வந்தார்.


“என்னையே நான் கேட்டுக்கொண்டேன், எதற்காக இப்படி தொடர வேண்டும்... எதற்கு நம் வாழ்வை மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். எதற்காக இந்த இருப்பை, கடின உழைப்பை, கடுங்குளிரை, தனிமையை நீட்டிக்க வேண்டும்... மனித இனம் அழிந்து விட்டது... பூமியின் உயிரோட்டம் முடிந்துவிட்டது, ஏன் நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்” அப்பா தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கும்பொழுது,

மீண்டும் அந்த இரைச்சலான சத்தத்தைக் கேட்டேன். மேலும் சத்தமாக இருந்தது. சலசலப்பு மேலும் அதிகமானது. சத்தம் அருகாமையில் கேட்டது. பயத்தில் எனக்கு மூச்சு முட்டியது.

“வாழ்க்கை என்பது கடுங்குளிருடன் போராடும் ஒரு போராட்டம் தான், பூமி எப்பொழுதும் தனியாகத்தான் இருந்திருக்கின்றது. மிக நெருங்கிய கோளே பல லட்சம் கிலோமீட்டர்கள் தூரத்தில் உள்ளது. தனிமை என்பது பெரிய விசயம் அல்ல. மனித இனம் எவ்வளவு காலம் வாழ்ந்து இருந்தாலும், என்றாவது ஓர் இரவு முடிவு வந்துதான் ஆகவேண்டும். ஆனால் அவை எல்லாம் ஒரு பொருட்டே அல்ல,  முக்கியம் எதுவெனில் வாழ்க்கை அற்புதமான ஒன்று... அழகான வாக்கியம் போன்றது... விலையுயர்ந்த ஆடைகள் ஆகட்டும், சாதரண கம்பளி ஆகட்டும், மலரின் இதழ்கள் ஆகட்டும்... நீ அவற்றின் படங்கள் எல்லாம் பார்த்து இருக்கின்றாய்..... அவை கொடுத்த உணர்வை , சுவாலையை என்னால் விவரிக்க இய்லாது... வாழவேண்டும் என்பதே பிரச்சினைகளை எதிர்த்து போராட வைக்கின்றது.. அது முதல் மனிதனாக இருக்கட்டும் கடைசி மனிதனாக இருக்கட்டும்”

சத்தம் மேலும் நெருங்கியது. போர்வைகள் முட்டப்படுவதும் அசைவதும், நான் கற்பனை செய்ததைப்போலவே நடந்தன. அந்த உறைந்த கண்களே நினைவுக்கு வந்து கொண்டிருந்தது.

”அந்த சமயங்களில்... ” அப்பா பேச்சைத் தொடர்ந்தார். அப்பாவும் நான் கேட்ட சத்ததை கேட்கின்றார் என்பதை என்னால் சொல்ல முடியும். நாங்கள் கேட்க கூடாது என்பதற்காகவே இன்னும் சத்தமாகப் பேசினார்.

“அந்த சமயங்களில், நான் செய்ய நினைத்தது, நம் வாழ்க்கைக்கு பின் எல்லாம் அறிந்த துறக்கம் இருக்கின்றது. பிள்ளைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்.. நான் அறிந்தவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும்... புத்தகங்கள் வாசிக்க வைக்க வேண்டும். இந்தக் கூட்டை பெரிதாக்க வேண்டும். என்னால் முடிந்தவரை அழகாக விரிவாக்கம் செய்ய வேண்டும்.  என் ஆச்சரியங்களின் தொகுப்பின் நீட்சி குளிர் இருட்டு இவற்றிற்கு மத்தியிலும் எப்பொழுதும் இருக்க வேண்டும்”

எங்கள் கூட்டின் உள் போர்வை விலக்கப்பட்டு தூக்கப்பட்டது. அதன் பின்னால் இருந்து மிகப்பெரும் வெளிச்சம் வர. அப்பா பேச்சை நிறுத்தினார். அவரின் கண்கள் மெல்லத் திரும்பியது, கைகள், மெல்ல எடுத்து வைத்திருந்த நீண்ட சுத்தியலை நோக்கி நகர்ந்தது.

தொடரும் ---> http://vinaiooki.blogspot.it/2013/04/8.html 

ஒரு வாளி ஆக்சிஜன் - மொழிப்பெயர்ப்பு நெடுங்கதை (பகுதி 6 )




Fritz Leiber எழுதிய A Pail of Air என்ற அறிவியல் புனைவு சிறுகதையின் தமிழாக்க முயற்சி

முந்தையப் பகுதிகள்  - http://vinaiooki.blogspot.it/2013/04/1.html 


---


அந்த கரிய விண்மீன் , யாருக்கும் எந்த நேரமும் கொடுக்காமல் சடுதியில் நுழைந்தது. முதலில், அதைப் பற்றி மறைக்க முயன்றார்கள், பின் உண்மை வெளிவந்தது, வெள்ளப்பெருக்குகளுடனும், பெரிய நில அதிர்வுகளுடனும்.
உறையாத சமுத்திரங்களின் வெள்ளப்பெருக்கைக் கற்பனை செய்து பாருங்கள்.  தெளிவான இரவில், ஏனைய நட்சத்திரங்கள் காணாமல் போகின. முதலில் அந்த கரிய விண்மீன் சூரியனைத் தாக்கும் என்று சொன்னார்கள். பின்பு பூமியைத் தாக்கும் என்றார்கள். சைனா என்ற ஒரு இடத்திற்குப் போக மக்கள் போட்டி போட்டனராம். சைனா இருந்த இடத்திற்கு நேர் எதிர்புறத்தைத் தாக்கும் என்று எதிர்பார்த்ததனால் இந்தப் போட்டி. கடைசியில் எந்தப் பக்கத்தையும் தாக்காமல்,பூமிக்கு மிக நெருக்கமாக வரும் என்றனர்.

அந்தப் பெரிய கரிய விண்மீன் வந்த சமயத்தில், சூரியனின் ஏனைய கோள்கள், சூரியனுக்கு அந்தப்பக்கம் இருந்ததனால், அவை இதற்கு ஆட்படவில்லை. சூரியனும் புதிய வரவான இந்த கரிய நட்சத்திரமும் பூமிக்காக சண்டை போட்டுக்கொண்டன. பூமி இவற்றிற்கு இடையில் கயிறு இழுக்கும் போட்டியாக மாட்டிக்கொண்டது. ஓர் எலும்புத்துண்டிற்காக நாய்கள் போடும் சண்டை மாதிரி இருந்தது என அப்பா புது உவமையுடன் சொன்றார். புது வரவு கடைசியில் வென்று பூமியைத் தன்னுடன் இழுத்துச் சென்றது. சூரியன் ஆறுதல் பரிசாக, கடைசி நிமிடத்தில் சந்திரனைத் தக்க வைத்துக் கொண்டது.

அதன் பின்னர் அரக்கத்தனமான நிலநடுக்கங்களும் வெள்ளங்களும் , முன்பை விட 20 மடங்குகள் பாதிக்கும் அளவில் ஏற்பட்டன.  பூமி சடாரென பிடித்து இழுத்துக் கொள்ளப்பட்டதனால் பூமி மிகப்பெரிய ஆட்டம் கண்டது. அப்பா சிலமுறை நான் நெருப்பை விட்டு தள்ளி இருக்கும்பொழுது என் சட்டையின் கழுத்துப் பகுதியைப் பிடித்து இழுத்து, நெருப்பைக் கவனித்துக் கொள்ள சொல்லி இருக்கின்றார். பூமி இழுக்கப்பட்டது கூட அப்படித்தான் இருந்திருக்கும்.

அந்தக் கரிய நட்சத்திரம் , பரந்த அண்டவெளியில் சூரியனை விட படு வேகமாக எதிர்திசையில் பயணம் செய்து கொண்டிருந்தது. அந்த புதிய வேகத்திற்கு ஈடு கொடுக்க, பூமியில் இருந்து நிறைய பிடுங்கி எறியப்பட்டன.

இழுக்கப்பட்டதினால் ஏற்பட்ட மிகப்பெரும் ஆட்டம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. பூமி கருப்பு நட்சத்திரத்தின் சுற்றுப்பாதையில் நிலைபெற்றது. ஆனால் அந்த ஆட்டம் மிக கோரமானதாக இருந்தது. எல்லாவகையான வானுயர் கட்டிடங்களும் இடிந்துப்போயின. பெருங்கடல்கள் நிலப்பகுதிக்குள் புகுந்தது. பாலைவன மணல், பசுமையான நாட்டிற்குள் தூக்கி வீசப்பட்டன. வளிமண்டல அடர்த்தி குறைந்துப் போய் மக்கள் மயங்கி விழுந்தனர். அதே சமயத்தில் பூகம்பங்களும் ஆட்டங்களும் மக்கள் கபாலமும் எலும்புகளும் உடைந்து கொத்துக் கொத்தாய் விழ வைத்தது.

”அப்பா, அந்த சூழலில் மக்களில் மனநிலை எப்படி இருந்தது, பயந்தார்களா, அதிர்ச்சியடைந்தார்களா, கிறுக்குப்பிடித்தவர்கள் போல் ஆகினரா, துணிவாக இருந்தனரா .. அல்லது எல்லாமுமா”

அதை எல்லாம் கவனிக்க நேரமில்லாது அப்பா இருந்ததாக முன்பு சொன்னதைப்போலவே சொன்னார். அப்பாவும், அவரின் விஞ்ஞானி நண்பர்களும் அடுத்து என்ன நடக்கப்போகும் என்பதைப் பற்றி தீவிர ஆராய்ச்சிகளில் இருந்தனர். காற்று மண்டலம் வெகுவிரைவில் உறைந்துவிடும் என்பது அவர்களுக்குத் தெரிந்து இருந்தது. மணிக்கணக்கில், காற்று வெளியேறா , குளிரில் இருந்து பாதுகாக்கும் சுவர்களுடன் கூடிய, உணவு, நீர், காற்று பாதுகாக்கும் இடங்களை நிர்மாணித்துக் கொண்டிருந்தனர். அவையும் நிலநடுக்கத்தில் இடிந்துப்போயின. அவரின் நண்பர்களும் பூகம்பத்தில் சிக்கி இறந்துப் போயினர். கடைசியில் எஞ்சியதை வைத்து , நாங்கள் இருக்கும் தற்பொழுதையைக் கூட்டை அப்பா நிர்மாணித்தார்.

அப்பா , நிலநடுக்கக் காலத்திலும், உறைந்த காலங்களிலும், புதிய வரவால் இழுக்கப்பட்டுக்கொண்டிருந்த காலங்களில்,மற்றவர்களை கவனிக்க நேரமில்லை எனச்சொன்னது உண்மைதான்,. அக்காலங்களில் பூமியின் தற்சுழற்சி வேகம் குறைவாக ஆகிப்போய் இரவுகள் நீண்டன, சில சமயங்களில் பத்து இரவுகள் தொடர்ந்தார் போல வந்து கொண்டிருந்தன.

என்னால் அந்தக் காலங்கள் எப்படி இருந்திருக்கும் என யோசிக்க முடியும். நாங்கள் அடுப்பெரியும் கரிக்காக கட்டிடங்களுக்குள் செல்லும்பொழுது அப்படியே உறைந்துப்போய் இறந்து கிடக்கும் மனிதர்களைப் பார்த்து இருக்கின்றேன்.

ஓர் அறையில் ஒரு வயதான மனிதர், அப்படியே நாற்காலியுடன் உறைந்துப் போய் இருந்தார். கை கால்கள் எலும்புகள் முறிந்து இணைக்கப்பட்டவை போல இருந்தன. வேறு ஒரு வீட்டில் ஆணும் பெண்ணும் கனத்தப் போர்வைகளுக்கும் இறுகிப் பற்றியபடி இருந்தனர். வெறும் தலைகள் மட்டும் போர்வைக்கு வெளியே இருந்தன. இன்னொரு வீட்டில் ஓர் அழகான இளம்பெண், போர்வைகளைச் சுற்றியபடி வீட்டின் வாசல்கதவைப் பார்த்தபடி இறந்து உறைந்து இருந்தாள். யாராவது வந்து உணவும் கதகதப்பும் கொடுக்க மாட்டார்களா என்பதைப்போல் அவளின் பார்வை இருந்தது. சிலைகளாக ஆகிப்போனாலும், அவர்களைப் பார்க்கையில் உயிருடன் இருப்பவர்களைப்போலவே இருந்தது.

நிறைய மின்சார பேட்டரிகள் இருந்த சமயங்களில், ஒருநாள் அப்பா, டார்ச் லைட் வெளிச்சத்தில், அப்படி உறைந்துப் போனவர்களைக் காட்டி இருக்கின்றார். அவர்களைப் பார்க்கையில் பயம் நெஞ்சடைக்கும், குறிப்பாக அந்த அழகிய இளம்பெண்.

தொடரும் ---> http://vinaiooki.blogspot.it/2013/04/7.html


ஒரு வாளி ஆக்சிஜன் - மொழிப்பெயர்ப்பு நெடுங்கதை (பகுதி 5 )



Fritz Leiber எழுதிய A Pail of Air என்ற அறிவியல் புனைவு சிறுகதையின் தமிழாக்க முயற்சி

முந்தையப் பகுதிகள்  - http://vinaiooki.blogspot.it/2013/04/1.html 


---


இது போன்ற உணர்வுகளை மறைப்பது மிகவும் கடினம். கூட்டிற்கு நானும் அப்பாவும் திரும்பி , வெளியில் சென்று வருவதற்கான உடைகளைக் களைந்து  கொண்டிருந்தோம். அப்பா, என் அபரிமிதமான கற்பனையை சொல்லி, சிரித்து அம்மாவிடமும் தங்கையிடமும் விளக்கிக் கொண்டிருந்தார். ஆனால் அந்த தட்டையான வார்த்தைகளில் நம்பகத் தன்மை இல்லை. அம்மாவும் தங்கையும் அவரின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றே தெரிந்தது. அந்த ஒருக் கணத்தில், யாராவது துணிவு என்ற பந்தைப் பிடித்துக் கொள்ள மாட்டார்களா என இருந்தது. அந்தத் துணிவைப் பெற ஏதாவது செய்ய வேண்டும். வழமைப்போல,

 ”அப்பா , பூமி எப்படி இப்படியானது” என்ற பழைய நாட்களைப் பற்றிய கதையைச் சொல்ல சொன்னேன்.

சில சமயங்களில் அவர் கதைகளைச் சொல்லத் தயங்குவதில்லை. தங்கையும் நானும் விரும்பிக் கேட்போம். இந்தச் சூழலில் நான் கேட்பதைப் புரிந்து கொண்டார்.  நாங்கள் நெருப்பைச் சுற்றி அமந்து கொண்டோம். அம்மா இரவு உணவைத் தயார் செய்ய ஆரம்பித்தார். அப்பா கதை சொல்ல ஆரம்பித்தார். கதை சொல்ல ஆரம்பிக்கும் முன்னர், நீண்ட சுத்தியலைத் தன்னுடன் எடுத்து வைத்துக் கொண்டார். அதை நான் கவனித்துக் கொண்டேன்.

அதே பழையக் கதைதான், தூக்கத்தில் இருந்து எழுப்பிக்கேட்டால் கூட மனப்பாடமாக ஒப்பிப்பேன்., இருந்தாலும் அப்பா ஒவ்வொருமுறையும் சில சுவராசியமான விசயங்களை நினைவுப்படுத்தி, சேர்த்துச் சொல்வார்.

பூமி எப்பொழுதும் போல, ஒரே சீரானப் பாதையில் சூரியனைச் சுற்றி வந்து கொண்டிருந்தது. மனிதர்கள், பணம் சேர்ப்பதிலும், அதிகார மையத்தை நோக்கி நகர்வதிலும் அடுத்தவர்களின் சரித் தவறுகளை எடைப்போட்டு தீர்ப்பு சொல்லுவதிலும் , போர்களை உருவாக்குவதிலும் குறியாக இருந்தனர். அந்த சமயத்தில் தான் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இந்த கரிய நட்சத்திரம், எரிந்துத் தீர்ந்துப் போன சூரியன் வந்தது. எல்லாவற்றையும் ஒரேயடியாக வருத்தமைடய செய்தது.

தேனீக்கூட்டம் போல அன்று மக்கள் எண்ணிக்கையில் இருந்தனர் என்பதை நம்புவதைக் காட்டிலும், அந்த மக்களின் எண்ண ஓட்டங்கள், லட்சியங்கள் நம்ப முடியாதவையாக இருந்தன.

ஏற்கனவே தயார்செய்து வைத்திருந்த போர் முன்னெடுப்புகளுக்காக காத்திருந்த மக்கள் ,போரை விரும்பிய மக்கள், குறைந்த பட்சம் போர்கள் முடிவுக்கு வரவேண்டும் என விரும்பிய மக்கள். எல்லோரும் ஒன்றாக இருப்பது அவசியமே இல்லை என்பதைப் போலத்தான் இருந்து இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் எப்படி தங்களது வந்த ஆபத்து நீங்கும் என எதிர்பார்க்கலாம். நாங்கள் கூட குளிரில் இருந்து மீள்வோம் எனத்தான் நம்பிக்கொண்டிருக்கோம். ஆனால் எங்களின் நம்பிக்கை மேலானாது.

சில சமயங்களில் அப்பா மிகைப்படுத்தி சொல்கிறாரோ என நான் நினைப்பேன். ஆனால் அந்தக் காலத்தில் அத்தகைய மனிதர்களுடன் அவர் வாழ்ந்து இருக்கின்றார்.  பழைய வார இதழ்களில் நான் படித்த விசயங்கள், இன்னும் பயங்கரமானவைகளாகவே இருந்து இருக்கின்றன. அப்பா சொல்வது சரியாக இருக்கலாம்.

தொடரும் ---> http://vinaiooki.blogspot.it/2013/04/6.html



Thursday, April 04, 2013

ஒரு வாளி ஆக்சிஜன் - மொழிப்பெயர்ப்பு நெடுங்கதை (பகுதி 4 )


Fritz Leiber எழுதிய A Pail of Air என்ற அறிவியல் புனைவு சிறுகதையின் தமிழாக்க முயற்சி


பகுதி 1 - http://vinaiooki.blogspot.it/2013/04/1.html 


---

அப்பா முன் செல்ல, அவரின் இடுப்புப் பெல்ட்டைப் பிடித்துக்கொண்டேன். வேடிக்கையான விசயம் என்னவெனில் , தனியாகப் போகும்பொழுது நான் பயப்படுவதில்லை, ஆனால் அப்பாவுடன் போகும்பொழுது அவரைப்பிடித்துக் கொள்வேன். பழக்கமாகக் கூட இருக்கலாம்.பழக்கமென்றாலும் இந்த முறை கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

எல்லொரும் இறந்துவிட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அப்பா கடைசியாக சில ஆண்டுகளுக்கு முன்னர் ரேடியோ குரல்களைக் கேட்டார், சிலக் கடைசி மனிதர்கள் இறப்பதையும் பார்த்து இருக்கின்றார். அவர்கள் எங்களைப்போல கொடுத்து வைத்தவர்கள் அல்ல, நாங்கள் மிகவும் பாதுகாப்பான சூழலில் இருக்கின்றோம். ஆக, ஒருவேளை ஏதேனும் ஒன்று தட்டுப்பட்டால், அது நிச்சயம் மனிதர்களாகவோ நட்பாகவோ இருக்க முடியாது.

மேலும், எப்பொழுதும் இரவு என்ற உணர்வு, அதுவும் குளிர் இரவு... இரவின் பய உணர்வு அந்தப் பழைய நாட்களில் கூட இருந்ததாக அப்பா சொல்வார். ஆனால் விடியலில் சூரியன் வருகையில், அந்த உணர்வு அடித்துச் செல்லப்படும். நான் அப்பாவின் வார்த்தைகளைக் கேட்டுத்தான் ஆக வேண்டும், எனக்குத் தெரிந்தவரை சூரியன் என்பது மிகப்பெரும் நட்சத்திரத்தை விட பிரம்மாண்டமான ஒன்று.

கவனியுங்கள், அந்த கருப்பு நட்சத்திரம், பூமியை சூரியனிடம் இருந்து பிரித்து எடுத்தபொழுது நான் பிறக்கவே இல்லை. கருப்பு நட்சத்திரம் இப்பொழுது பூமியை புளுட்டோவின் சுற்றுப்பாதையையும் தாண்டி இழுத்து சென்று கொண்டிருக்கின்றது.... ஒவ்வொரு நொடியும் விலகி தூரப்போய்க் கொண்டிருக்கின்றோம் என்பார் அப்பா.

ஒருவேளை அந்த கருப்பு விண்மீனிற்கு இங்கிருந்து ஏதோ ஒன்று தேவைப்பட்டிருக்குமோ , அப்படி இருந்தால் எதற்காக அது பூமியைப் பிடித்தது என்ற கேள்வி எனக்குள் அடிக்கடி எழும்.

தாழ்வாரத்தின் கடைசிக்கு வந்து, உப்பரிகைக்கு வந்து சேர்ந்தோம்.

பழங்காலத்தில், இந்த நகரம் எப்படி இருந்தது என எனக்குத் தெரியாது, ஆனால் இப்பொழுது அழகாக இருக்கின்றது. விண்மீன் வெளிச்சத்தினால் அந்த அழகைப் பார்க்க முடிகிறது. அந்த கரிய வானத்தில் புள்ளி புள்ளியாய் விண்மீன்கள் ஒளியைத் தந்து கொண்டிருந்தன. முன்பெல்லாம் நட்சத்திரங்கள் மின்னியதாக அப்பா சொல்லுவார், அப்பொழுதெல்லாம் வளிமண்டலம் உறையாத காற்றாக இருந்ததனால் மின்னுவது தெரியுமாம். எங்கள் இருப்பிடம் ஒரு குன்றின் மேல் இருக்கின்றது. ஜொலிக்கும் குன்றின் சாய்மானம், அப்படியே தூரம் தள்ளி தட்டையாக சமதளமாக இருந்தது. தூரத்தில் தெரியும் பள்ளங்கள் ஒரு காலத்தில் தெருக்களாக இருந்தனவாம். பிசையப்பட்ட உருளைக்கிழங்கு மாவில் இதைப்போல செய்து விளையாடுவேன்.

சில உயரமான கட்டிடங்கள், சிறகுக்கூட்டம் போல காட்சியளிக்கும் தரையில் இருந்து வட்ட வடிவ உறைந்த காற்றின் படிகங்களில் தலையில் கொண்டபடி. உயர்ந்து நிற்கின்றன, அம்மாவின் வெள்ளைக் குளிர்த் தொப்பியும் இப்படித்தான் இருக்கும்.  அந்தக் கட்டிடங்களில் கருப்பு சதுரங்கள், சன்னல்களாக , காற்றுப்படிகங்களால் அடிகோடு இடப்பட்ட்டிருக்கும். சிலக் கட்டிடங்கள் சாய்ந்தபடி இருக்கும். கருப்பு நட்சத்திரம் பூமியை ஆட்கொண்டபொழுது, ஏற்பட்ட நில அதிர்வுகளால் ஏனைய கட்டிடங்கள் திருகலாக மாறிப்போயின. அங்கொன்றும் இங்கொன்றுமாக பனிக்கூரிகள் தொங்கிக் கொண்டிருந்தன. குளிர் ஆரம்பித்த ஆரம்பக் காலங்களில் அவை உறைய ஆரம்பித்த நீர், சிலவை உறைந்த காற்றினால் ஆனவை. நட்சத்திர வெளிச்சம் இந்தப் பனிக்கூரிகளில் பட்டு பிரதிபலிப்பது, வெளிச்ச நட்சத்திரம் ஒன்று பூமிக்கு வந்து இறங்கியதைப்போல இருக்கும். இதைத்தான் நான் பார்த்திருக்கலாம் என அப்பா நினைத்து இருந்தார். நானும் பனிக்கூரி வெளிச்சம் என்றுதான் நினைத்தேன், ஆனால் இந்தப் பனிக்கூரி பிரதிபலிப்பு இல்லை என்று உறுதியாகத் தெரிந்தபின்புதான் வேறு ஏதோ ஒன்றைப் பார்த்து இருப்பதாக முடிவு செய்தேன்.

எளிதாகப் பேசுவதற்காக என் தலைக்கவசத்தைத் தொட்டபடி, எந்த சன்னல் எனக் கேட்டார்.  இப்பொழுது எந்த வெளிச்சமும் நகரவில்லை. எங்கேயும் இல்லை.
என் எதிர்பார்ப்பிற்கு மாறாக அப்பா என்னைத் திட்டவில்லை. மௌனமாக சுற்றும் புறமும் பார்த்தார். வாளியில் ஆக்சிஜனை நிரப்பிக்கொண்டார். கூட்டிற்கு திரும்பும் முன்னர், முன்பு காவலாளிகள் தங்கள் இருப்பை உணர்த்துவதற்காக சத்தம் எழுப்புவதைப்போல, சிலத்தட்டுகள் தட்டிச்சென்றார்.

என்னால் உணர முடிகின்றது. முன்பு இருந்த அமைதி இந்தப்பகுதியில் இப்பொழுது இல்லை. ஏதோ ஒன்று ஒளிந்து இருக்கின்றது, கவனிக்கிறது, காத்திருக்கிறது... தயாராகிக் கொண்டிருக்கிறது.


தலைக்கவசத்தைத் தொட்டபடி,

 “நீ பார்த்ததைத் திரும்பப் பார்த்தால் மற்றவர்களிடம் சொல்லாதே, உன் அம்மா உடல்நிலைப்பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது உனக்குத் தெரியும், அவருக்கு பாதுகாப்பு உணர்வைக் கொடுப்பது நமது கடமை... உன் தங்கை பிறந்த பொழுது, ஒரு கட்டத்தில் விரக்தியானது, எல்லாவற்றையும் விட்டுவிட்டு செத்துப் போய்விடலாம் எனபது போல இருந்தது, அந்த சமயங்களில் உன் அம்மாதான் உத்வேகமாக இந்தப் போராட்டத்தைத் தொடரவேண்டும் என சொன்னார், எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போன பொழுது, ஒரு வாரம் முழுவதும் நெருப்பைக் கவனித்துக் கொண்டார், என்னையும் உன்னையும் தங்கையையும் கவனிக்கும் பொறுப்புடன்”

 அப்பா மேலும் தொடர்ந்தார்,

“நானும் உன் அம்மாவும்  அப்பொழுது  சிறு விளையாட்டு விளையாடுவோம், பந்தை மாறி மாறித் தூக்கிப்போட்டுப்பிடித்தல். துணிவு என்பது இந்தப் பந்தைப்போலத்தான், பந்தை கையில் வைத்திருக்க முடியும் நேரம் வரை வைத்திருக்கலாம், முடியாத பட்சத்தில், அடுத்தவரிடம் தரவேண்டும், தன்னிடம் பந்து வரும்பொழுது, கச்சிதமாக இறுக்கமாகப் பற்றிக்கொள்ளவேண்டும், அடுத்தவரிடம் கொடுக்கும் நேரத்தில் யாரேனும் ஒருவர் அதை வாங்கிக் கொள்ளும் நிலையில் இருக்க வேண்டும், இல்லாவிடின் தொடர்ந்து துணிவாக இருத்தல் களைப்பைக் கொடுத்து விடும்”

அப்பா பேசியது, என்னை வளர்ந்த நல்ல பிள்ளையாக உணர வைத்தது. ஆனாலும், நான் பார்த்ததை அப்பா விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் தன் கவனத்தில் வைத்துக் கொண்டது என் மனதை விட்டு அகலவில்லை.

தொடரும் --- > http://vinaiooki.blogspot.it/2013/04/5.html

Wednesday, April 03, 2013

ஒரு வாளி ஆக்சிஜன் - மொழிப்பெயர்ப்பு நெடுங்கதை (பகுதி 3 )

Fritz Leiber எழுதிய A Pail of Air என்ற அறிவியல் புனைவு சிறுகதையின் தமிழாக்க முயற்சி

முந்தையப் பகுதிகள் - http://vinaiooki.blogspot.it/2013/04/2.html
-----


பார்த்தவற்றை சொல்லிவிட வேண்டும் எனத் துடித்துக் கொண்டிருந்தேன். கவசத்தில் இருந்து வெளியே வந்தவுடன், ஒட்டு மொத்தத்தையும் பார்த்த அனைத்தையும் வார்த்தைகளாகக் கொட்டினேன். உடனடியாக அம்மா படபடப்பாகி, கைகளைப் பிசைந்து கொண்டே, போர்வைகளின் இடுக்கினுள் வெளியேப் பார்க்க ஆரம்பித்தார். அம்மாவின் கைகளில் மூன்று விரல்கள் கிடையாது. குளிரில் அவை உறைந்துப் போய் எடுக்க வேண்டியதாகிவிட்டது. அம்மாவை பயப்பட வைத்ததனால் அப்பா கோபமாக இருந்தாலும், எல்லாவற்றையும் விளக்கமாக கேட்க விரும்பினார். அவரின் பார்வையில் நான் ஏமாற்றவில்லை என அவர் நம்புவது தெரிந்தது. 

நான் விவரணையை முடித்ததும், 

”சிறிது நாட்களாகவே இந்த வெளிச்சத்தைப் பார்க்கின்றாயா?" அப்பா கேட்டார். 

அந்த வெளிச்சத்துடன், ஓர் இளம்பெண்ணையும் பார்த்தேன் என்ற விசயத்தை சொல்லவில்லை. என்னமோ தெரியவில்லை அதைச் சொல்ல வெட்கமாக இருந்தது. 

“ஐந்து சன்னல்களைக் கடந்து, அடுத்தத் தளத்திற்குப் போகும் வரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்”

“உரசலினால் வந்த மின்சாரப்பொறியா, மிதக்கும் திரவமா,,, துகள்களில் பட்டுப் பிரதிபலிக்கும் விண்மீனின் வெளிச்சமா.. இந்த மாதிரியான வெளிச்சத்தையா பார்த்தாய்”

அப்பா கற்பனையாக இந்தக் கேள்விகளை எல்லாம் கேட்கவில்லை. 
குளிருக்கே குளிரடிக்கும் வகையில் உறைந்துப் போய் இருக்கும் பூமியில் ஒத்திசைவற்ற நிகழ்வுகள் நடப்பது ஒன்றும் புதிதல்ல. பருப்பொருள் உறைந்து இறந்துப் போய்விட்டது என நினைக்கையில்
அது வேறுவடிவம் எடுக்கும். மெலிதான ஒன்று, ஒரு நாள் எங்களது கூட்டை நோக்கி வந்தது. குளிரில் , வெப்பத்தைத் தேடும் விலங்கைப்போல.. அது வேறு ஒன்றுமல்ல, திரவ ஹீலியம். நான் சிறுபிள்ளையாக இருக்கையில், ஒரு நாள் மின்னல் அடித்தது, அப்பாவால் அது எங்கிருந்து வந்து இருக்கும் எனக் கண்டறிய முடியவில்லை.. அருகில் இருந்த கோபுரத்தை அடிப்பகுதி வரை ஒட்டு மொத்தமாக தாக்கிய மின்னலின் வெளிச்சம் அடங்க பல வாரங்கள் ஆகின. 

“இதுவரை அது மாதிரியான ஒன்றை நான் பார்த்தது இல்லை”

முகச்சுளிப்புடன் என்னைப் பார்த்தபடி நின்றார். பின்பு

“சரி நான் உன்னுடன் வருகின்றேன், நீ பார்த்ததை எனக்குக் காட்டு” என்றார். 

அம்மா தன்னை தனியாக விட்டுப்போவதற்காக  அலறினார், கூடவே தங்கையும் சேர்ந்து கொண்டாள். அப்பா அவர்களை சமாதானப்படுத்தினார். வெளியே செல்வதற்கான உடைகளை அணிந்து கொண்டோம். என்னுடைய ஆடை அதற்கு முன் நெருப்பில் கதகதப்பில் வைக்கப்பட்டிருந்தது. அவை பிளாஸ்டிக்கில் ஆன, தலைப்பகுதிகளை கொண்டது. பழையப் பெரிய உணவு டப்பாக்களால் உருவாக்கப்பட்டவை அவை. இருந்தாலும் அவை கதகதப்பையும் காற்றையும் பிடித்து வைத்துக் கொள்ளும். அவை தண்ணீர் , கரி ,உணவு ஆகியனவற்றை எடுக்க வெளியேப்போய் வருவதற்குப் போதுமானதாக இருந்தது. 

“அங்கு ஏதோ இருக்கின்றது என எனக்கு முன்பே தெரியும், நம்மை பிடித்துக் கொள்வதற்காக காத்திருக்கின்றது, பலவருடங்களாக காத்திருக்கின்றது” என அம்மா முனக ஆரம்பித்தார். 

”அந்தக் குளிர், இந்தக் கூட்டையும், கூட்டின் வெப்பத்தையும் துவம்சமாக்க விரும்புகின்றது, நம்மைப் பார்த்துக் கொண்டிருந்தது, இன்று பின் தொடர ஆரம்பித்துவிட்டது, உங்களைப் பிடித்துக் கொண்ட பின்பு, பின்பு எனக்காக இங்கு வரும், போகாதே ஹாரி” முனகலைத் தொடர்ந்தார் அம்மா. 

தலைக்கவசத்தைத் தவிர அப்பா அனைத்தையும் அணிந்து கொண்டார். நெருப்பு அடுப்பின் முன்பு முழங்காலிட்டு, நீண்ட இரும்புக் கம்பியை எடுத்து புகைப்போக்கியின் உள்ளே விட்டு, பனித்துகள்களைத் தட்டிவிட்டார். வாரம் ஒருமுறை நாங்கள் மாடிக்குச் சென்று ஒரு முறை சரிபார்ப்போம். மிக மோசமான வெளிப்பயணம் என்றால் அதுதான். அப்பா என்னைத் தனியாக செய்யவிடமாட்டார். 

“நெருப்பைக் கவனித்துக்கொள், காற்றுப்ப்போக்கையும் பார்த்துக்கொள், போதிய அளவு இல்லை என்றாலோ, சரியாக கொதிக்கவில்லை என்றாலோ, வாளியில் இருந்து எடுத்துக்கொள், வெறுங்கையினால் எடுக்காதே, துணியை வைத்து எடு~ என தங்கையிடம் அறிவுறுத்தப்பட்டது. 

தங்கை, பயந்துப்போய் இருந்த அம்மாவை விட்டு நகர்ந்து, சொன்ன வேலையை செய்ய ஆரம்பித்தாள். அம்மா அமைதியானாலும்,  அவரின் கண்கள் தீர்க்கமாக அப்பா தலைக்கவசத்தைப் பொருத்துவதையும், நாங்கள் வெளியே போவதையும் பார்த்துக்கொண்டிருந்தன. 

தொடரும் --- > http://vinaiooki.blogspot.it/2013/04/4.html 

Tuesday, April 02, 2013

ஒரு வாளி ஆக்சிஜன் - மொழிப்பெயர்ப்பு நெடுங்கதை (பகுதி 2 )

Fritz Leiber எழுதிய A Pail of Air என்ற அறிவியல் புனைவு சிறுகதையின் தமிழாக்க முயற்சி
----
பகுதி 1 - http://vinaiooki.blogspot.it/2013/04/2.html 

எங்கள் கூட்டைப் பற்றி சொல்லியாக வேண்டும். கொஞ்சம் தாழ்வான, ஆனாலும் வசதியான ஒரேயொரு அறைமட்டுமே. இதில் நாங்கள் நால்வரும், எங்களுடைய பொருட்களும் அடக்கம்.தரை தடிமனான கம்பளி தரைவிரிப்பினால் ஆனது. மூன்று பக்கவாட்டு சுவர்களும் போர்வைகளால் மூடப்பட்டிருக்கும். கூட்டின் உயரம் அப்பாவின் தலை வரை இருக்கும். உண்மையில் இந்தக் கூடு, மிகப்பெரிய அறையினுள் இருப்பதாக அப்பா சொல்வார். ஆனால் நிஜக் கூரையையோ தரையையோ  சுவரையோ நான் பார்த்ததில்லை.

ஒருப்பக்க போர்வைச் சுவற்றில் ஓர் அலமாரி இருக்கின்றது. அதில் சிலப்புத்தகங்களுடன் வேறு சிலப் பொருட்களும் அடுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. மேலடுக்கில் வரிசையாக கடிகாரங்கள். கடிகாரங்கள் சரியாக ஓடவைப்பதில் அப்பா குறிப்பாக இருப்பார். நேரத்தை மறந்துவிடக்கூடாது. அதுவும் கதிரவனும் நிலாவும் இல்லாத இந்தக் கட்டத்தில், வெகுசுலபமாக நாம் நேரத்தை மறந்துவிடக்கூடும்.

நான்காவது சுவரும் போர்வைகளால் ஆனதுதான், ஆனால் நெருப்பு மூட்டும் இடத்தைத் தவிர. இந்த நெருப்புதான் உறையும் குளிரில் இருந்து எங்களைக் காக்கின்றது, குளிரில் இருந்து மட்டும் அல்ல, அதற்கு மேலும். எங்களில் யாராவது ஒருவர் தொடர்ந்து நெருப்பு அணையாது கவனித்துக் கொண்டே இருப்போம். அலமாரியில் இருக்கும் கடிகாரங்களில் சிலவை நினைவூட்டல் மணிக் கொடுப்பவை. ஆரம்பத்தில் அம்மாவும் அப்பாவும் தான் அலாரம் வைப்பார்கள், அம்மாவிற்கு முடியாமல் போனதில் இருந்து, நான் அப்பாவிற்கு உதவியாக இருக்கின்றேன். சில சமயங்களில் தங்கையும் உதவுகின்றாள்.

அப்பாதான் நெருப்பின் தலைமைப் பாதுகாவலர், அல்லது அப்படித்தான் நான் நினைத்துக் கொள்கின்றேன். கால்களை மடக்கி, கனன்று கொண்டிருக்கும் நெருப்பு அணையாமல், ஒவ்வொரு துண்டாக கரியை எடுத்துப் போட்டு கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கையில்,  பழங்காலத்தில் புனித நெருப்பு வெளியேப்போகாமல் இருக்கு வெஸ்டல் கன்னிப் பெண்கள் இருந்தனர் என அப்பா சொல்வார். உறையா காற்று இல்லாத அந்தக் காலத்தில் நெருப்பு பரவாமல் இருக்க அப்படியான தேவதைகள் தேவையே இருந்திருக்காது.

நான் கூட்டிற்குள் நுழையும்பொழுது அப்படித்தான் அமர்ந்து இருந்தார். என் கையில் இருந்து வாளியை வாங்கிக் கொண்ட அப்பா, தாமதத்திற்கு கடிந்து கொண்டார். அவரின் கவனம் உறைந்த சுவடுகளைக் கொண்ட, என் தலைகவசத்தின் மேல் போனது. உடனடியாக அம்மாவும் கேள்விக் கேட்க ஆரம்பித்தார். குட்டி சகோதரியும் தன் பங்கிற்கு கேள்விகளை வீசினாள்.

கொண்டு வந்து இருந்த, உறைந்த காற்றை அப்பா ஒரு துணியில் பிழிந்து எடுத்தார், அது காற்றாக மாறி, அறை முழுவதும் விரவியது. ஒட்டு மொத்த அறையின் வெப்பத்தையும் எடுத்துக் கொண்டு, குளிரடித்தது. புத்தம் புது ஆக்சிஜனினால், மேல் எழும்பிய நெருப்பை , அதன் இடத்திற்கு அழுத்தினார்.

நான் கொண்டு வந்திருக்கும் வாளியில் இருந்த அந்த வெள்ளை நிற திண்மமான ஆக்சிஜன் தான் எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக காற்று உருகி, அறைக்குப் புத்துணர்ச்சியைத் தருவதோடு மட்டுமல்லாமல், நெருப்பையும் தொடர்ந்து எரிய வைக்கின்றது.
சுற்றி இருக்கும் போர்வைகள் ஆக்சிஜன் தப்பியோடமல் இருக்க உதவுகின்றன. அப்பாவிற்கு நான்காவது சுவரையும் முழுமையாக போர்வையால் மூடவேண்டும் என விருப்பம். ஏற்கனவே பூகம்பத்தால் கட்டிடம் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது, மேலும் நெருப்பின் புகை வெளியே போகவும் ஓரிடம் வேண்டும்.

கூட்டில் காற்றோட்டம் அளவாக இருப்பதில் நாங்கள் கவனமாக இருப்போம். ஒருப்பக்கம் உறைந்த பனி, வாளிகளில் வைத்திருப்போம், அதை உருக்கி குடிநீராகப் பயன்படுத்த,  மறுப்பக்கம் தேவையான உணவு, நெருப்பு எரிக்க கரி என அப்பா அனைத்தையும் ஸ்டாக் வைத்திருப்பார். குடிநீருக்காக பனியை எடுக்க, மட்டும் வெளிக்கதவைத் திறந்து, கட்டிடத்தின் அடித்தளம் வரை போய் ஆகவேண்டும்.

பூமி குளிரடைய ஆரம்பித்த பொழுது, எல்லா நீரும், காற்றும் உறைந்துப் போயின.அது பத்து அடி உயரமுள்ள அடுக்கு ஒன்றை உருவாக்கியது. உறைந்த அடுக்கில் இருந்து கொட்டிய துகள்களுடன் கூடிய காற்று மண்டலம் ஓர் எழுபது அடி அடுக்கை உருவாக்கியது.

ஆனாலும் எல்லா வகையான காற்றும் ஒட்டு மொத்தமாக உறைந்து பனியாகிவிடவில்லை. நீருக்காக பனியை கரண்டி கொண்டு அள்ளும்பொழுது கவனமாக இருக்க வேண்டும். மேலாகவும் எடுத்துவிடக்கூடாது. கார்பன் டையாக்ஸைடு இருக்கும். அடுத்தது நைட்ரஜன், இதுதான் அதிகமாக இருப்பது. அதற்கு மேலே ஆக்சிஜன், அதன் பின்பு ஹீலியம். ஒரு நல்ல விசயம் என்னவென்றால், இந்தக் காற்று வகைகள் எல்லாம் தனித்தனி  அடுக்குகளாக அருமையாக அமைந்து இருக்கின்றன, வெங்காயத்தைப்போல சிரித்தபடி சொன்னார் அப்பா... அந்த வெங்காயம் என்பது என்னவோ...எனக்குத் தெரியாது.

தொடரும் ---> பகுதி 3  http://vinaiooki.blogspot.com/2013/04/3.html