ஒரு வாளி ஆக்சிஜன் - மொழிப்பெயர்ப்பு நெடுங்கதை (பகுதி 6 )
Fritz Leiber எழுதிய A Pail of Air என்ற அறிவியல் புனைவு சிறுகதையின் தமிழாக்க முயற்சி
முந்தையப் பகுதிகள் - http://vinaiooki.blogspot.it/2013/04/1.html
---
அந்த கரிய விண்மீன் , யாருக்கும் எந்த நேரமும் கொடுக்காமல் சடுதியில் நுழைந்தது. முதலில், அதைப் பற்றி மறைக்க முயன்றார்கள், பின் உண்மை வெளிவந்தது, வெள்ளப்பெருக்குகளுடனும், பெரிய நில அதிர்வுகளுடனும்.
உறையாத சமுத்திரங்களின் வெள்ளப்பெருக்கைக் கற்பனை செய்து பாருங்கள். தெளிவான இரவில், ஏனைய நட்சத்திரங்கள் காணாமல் போகின. முதலில் அந்த கரிய விண்மீன் சூரியனைத் தாக்கும் என்று சொன்னார்கள். பின்பு பூமியைத் தாக்கும் என்றார்கள். சைனா என்ற ஒரு இடத்திற்குப் போக மக்கள் போட்டி போட்டனராம். சைனா இருந்த இடத்திற்கு நேர் எதிர்புறத்தைத் தாக்கும் என்று எதிர்பார்த்ததனால் இந்தப் போட்டி. கடைசியில் எந்தப் பக்கத்தையும் தாக்காமல்,பூமிக்கு மிக நெருக்கமாக வரும் என்றனர்.
அந்தப் பெரிய கரிய விண்மீன் வந்த சமயத்தில், சூரியனின் ஏனைய கோள்கள், சூரியனுக்கு அந்தப்பக்கம் இருந்ததனால், அவை இதற்கு ஆட்படவில்லை. சூரியனும் புதிய வரவான இந்த கரிய நட்சத்திரமும் பூமிக்காக சண்டை போட்டுக்கொண்டன. பூமி இவற்றிற்கு இடையில் கயிறு இழுக்கும் போட்டியாக மாட்டிக்கொண்டது. ஓர் எலும்புத்துண்டிற்காக நாய்கள் போடும் சண்டை மாதிரி இருந்தது என அப்பா புது உவமையுடன் சொன்றார். புது வரவு கடைசியில் வென்று பூமியைத் தன்னுடன் இழுத்துச் சென்றது. சூரியன் ஆறுதல் பரிசாக, கடைசி நிமிடத்தில் சந்திரனைத் தக்க வைத்துக் கொண்டது.
அதன் பின்னர் அரக்கத்தனமான நிலநடுக்கங்களும் வெள்ளங்களும் , முன்பை விட 20 மடங்குகள் பாதிக்கும் அளவில் ஏற்பட்டன. பூமி சடாரென பிடித்து இழுத்துக் கொள்ளப்பட்டதனால் பூமி மிகப்பெரிய ஆட்டம் கண்டது. அப்பா சிலமுறை நான் நெருப்பை விட்டு தள்ளி இருக்கும்பொழுது என் சட்டையின் கழுத்துப் பகுதியைப் பிடித்து இழுத்து, நெருப்பைக் கவனித்துக் கொள்ள சொல்லி இருக்கின்றார். பூமி இழுக்கப்பட்டது கூட அப்படித்தான் இருந்திருக்கும்.
அந்தக் கரிய நட்சத்திரம் , பரந்த அண்டவெளியில் சூரியனை விட படு வேகமாக எதிர்திசையில் பயணம் செய்து கொண்டிருந்தது. அந்த புதிய வேகத்திற்கு ஈடு கொடுக்க, பூமியில் இருந்து நிறைய பிடுங்கி எறியப்பட்டன.
இழுக்கப்பட்டதினால் ஏற்பட்ட மிகப்பெரும் ஆட்டம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. பூமி கருப்பு நட்சத்திரத்தின் சுற்றுப்பாதையில் நிலைபெற்றது. ஆனால் அந்த ஆட்டம் மிக கோரமானதாக இருந்தது. எல்லாவகையான வானுயர் கட்டிடங்களும் இடிந்துப்போயின. பெருங்கடல்கள் நிலப்பகுதிக்குள் புகுந்தது. பாலைவன மணல், பசுமையான நாட்டிற்குள் தூக்கி வீசப்பட்டன. வளிமண்டல அடர்த்தி குறைந்துப் போய் மக்கள் மயங்கி விழுந்தனர். அதே சமயத்தில் பூகம்பங்களும் ஆட்டங்களும் மக்கள் கபாலமும் எலும்புகளும் உடைந்து கொத்துக் கொத்தாய் விழ வைத்தது.
”அப்பா, அந்த சூழலில் மக்களில் மனநிலை எப்படி இருந்தது, பயந்தார்களா, அதிர்ச்சியடைந்தார்களா, கிறுக்குப்பிடித்தவர்கள் போல் ஆகினரா, துணிவாக இருந்தனரா .. அல்லது எல்லாமுமா”
அதை எல்லாம் கவனிக்க நேரமில்லாது அப்பா இருந்ததாக முன்பு சொன்னதைப்போலவே சொன்னார். அப்பாவும், அவரின் விஞ்ஞானி நண்பர்களும் அடுத்து என்ன நடக்கப்போகும் என்பதைப் பற்றி தீவிர ஆராய்ச்சிகளில் இருந்தனர். காற்று மண்டலம் வெகுவிரைவில் உறைந்துவிடும் என்பது அவர்களுக்குத் தெரிந்து இருந்தது. மணிக்கணக்கில், காற்று வெளியேறா , குளிரில் இருந்து பாதுகாக்கும் சுவர்களுடன் கூடிய, உணவு, நீர், காற்று பாதுகாக்கும் இடங்களை நிர்மாணித்துக் கொண்டிருந்தனர். அவையும் நிலநடுக்கத்தில் இடிந்துப்போயின. அவரின் நண்பர்களும் பூகம்பத்தில் சிக்கி இறந்துப் போயினர். கடைசியில் எஞ்சியதை வைத்து , நாங்கள் இருக்கும் தற்பொழுதையைக் கூட்டை அப்பா நிர்மாணித்தார்.
அப்பா , நிலநடுக்கக் காலத்திலும், உறைந்த காலங்களிலும், புதிய வரவால் இழுக்கப்பட்டுக்கொண்டிருந்த காலங்களில்,மற்றவர்களை கவனிக்க நேரமில்லை எனச்சொன்னது உண்மைதான்,. அக்காலங்களில் பூமியின் தற்சுழற்சி வேகம் குறைவாக ஆகிப்போய் இரவுகள் நீண்டன, சில சமயங்களில் பத்து இரவுகள் தொடர்ந்தார் போல வந்து கொண்டிருந்தன.
என்னால் அந்தக் காலங்கள் எப்படி இருந்திருக்கும் என யோசிக்க முடியும். நாங்கள் அடுப்பெரியும் கரிக்காக கட்டிடங்களுக்குள் செல்லும்பொழுது அப்படியே உறைந்துப்போய் இறந்து கிடக்கும் மனிதர்களைப் பார்த்து இருக்கின்றேன்.
ஓர் அறையில் ஒரு வயதான மனிதர், அப்படியே நாற்காலியுடன் உறைந்துப் போய் இருந்தார். கை கால்கள் எலும்புகள் முறிந்து இணைக்கப்பட்டவை போல இருந்தன. வேறு ஒரு வீட்டில் ஆணும் பெண்ணும் கனத்தப் போர்வைகளுக்கும் இறுகிப் பற்றியபடி இருந்தனர். வெறும் தலைகள் மட்டும் போர்வைக்கு வெளியே இருந்தன. இன்னொரு வீட்டில் ஓர் அழகான இளம்பெண், போர்வைகளைச் சுற்றியபடி வீட்டின் வாசல்கதவைப் பார்த்தபடி இறந்து உறைந்து இருந்தாள். யாராவது வந்து உணவும் கதகதப்பும் கொடுக்க மாட்டார்களா என்பதைப்போல் அவளின் பார்வை இருந்தது. சிலைகளாக ஆகிப்போனாலும், அவர்களைப் பார்க்கையில் உயிருடன் இருப்பவர்களைப்போலவே இருந்தது.
நிறைய மின்சார பேட்டரிகள் இருந்த சமயங்களில், ஒருநாள் அப்பா, டார்ச் லைட் வெளிச்சத்தில், அப்படி உறைந்துப் போனவர்களைக் காட்டி இருக்கின்றார். அவர்களைப் பார்க்கையில் பயம் நெஞ்சடைக்கும், குறிப்பாக அந்த அழகிய இளம்பெண்.
தொடரும் ---> http://vinaiooki.blogspot.it/2013/04/7.html