Monday, April 08, 2013

ஒரு வாளி ஆக்சிஜன் - மொழிப்பெயர்ப்பு நெடுங்கதை (பகுதி 7)Fritz Leiber எழுதிய A Pail of Air என்ற அறிவியல் புனைவு சிறுகதையின் தமிழாக்க முயற்சி

முந்தையப் பகுதிகள்  - http://vinaiooki.blogspot.it/2013/04/1.html

---எங்களை பயத்தில் இருந்து வெளியே எடுக்க ஆயிரத்தி எட்டாவது தடவையாக நடந்தவகைகளைச் சொல்லிக் கொண்டிருக்கையில், அந்த உறைந்த மனிதர்களைப் பற்றி நினைக்க ஆரம்பித்தேன். திடிரென நான் யோசித்த ஒன்று எல்லாவற்றைக் காட்டிலும் என்னைப் பயமுறுத்தியது.. ஆரம்பத்தில் நான் சன்னலில் பார்த்த முகம் நினைவுக்கு வந்தது. நான் முகத்தைப் பார்த்ததைத்  தான் குடும்பத்தினரிடம் சொல்லவே இல்லை என்பதை மறந்துப் போய் இருந்தேன்.

உறைந்த மனிதர்கள் மீண்டும் உயிருடன் வந்தால், என்னையே நான் கேள்விக் கேட்டுக்கொண்டேன். உறைந்துப் போய் விட்டது என நினைக்கையில், வெப்பத்தை நோக்கி வரும் மிதக்கும் திரவ ஹீலியத்தைப் போல அவர்கள் வந்தால்.. உறையும் குளிரில் முடிவிலாது கடத்தப்படும் மின்சாரத்தைப்போல வந்தால்? ... தொடர்ந்து அதிகரிக்கும் குளிரில், தனிச்சுழி வெப்பநிலைக்கு நெருங்கும் குளிரில் , அமானுஷ்யமாக உறைந்த மனிதர்கள் எழுந்து வந்தால்.. வெப்பரத்த பிராணிகளாக இல்லாது, பனிக்கட்டி ரத்தத்துடன்,,,, கோரமாக உயிரோடு வந்தால் ...

நான் யோசித்தது, கருப்பு நட்சத்திரத்தில் ஏதேனும் ஒன்று கீழிறங்கி பூமிக்கு வந்தால் என யோசிப்பதைவிட படுபயங்கரமானதுதான். இரண்டுமே நடக்க சாத்தியமானதுதான். மேலிருந்து வந்த ஒன்று, உறைந்த மனிதர்களை நடக்க வைத்து, அவர்களுக்கு தேவையான ஒன்றை செய்ய வைக்கலாம். அந்த அழகிய இளம்பெண் கையில் வெளிச்சத்துடன் நகர்ந்ததைப்போல.

அறிவாற்றலுடன் கூடிய உறைமனிதர்கள், கண்சிமிட்டாது, முகர்ந்து கொண்டு , தவழ்ந்து கூட்டில் இருக்கும் நெருப்பிற்கு வரலாம்.  இப்படியான திகில் கற்பனைகள், அதிகப்பயத்தைத் தந்து, குடும்பத்தினரிடம் என் பயத்தை சொல்ல தள்ளியது. ஆனால் அப்பா சொல்லிய அறிவுரை நினைவுக்கு வந்து, பற்களைக் கிட்டி வாயை மூடி பேசாது இருந்தேன்.

நெருப்பு நிதானமாக எரிந்து கொண்டிருந்தது. நாங்கள் எல்லோரும் அமைதியாக இருந்தோம். அப்பாவின் குரலும் , கடிகார முட்கள் நகரும் சத்தமும் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தன. அது மட்டும் இல்லாது, போர்வைக்கு அப்பால், ஏதோ சன்னமான சத்தம் கேட்பதாக உணர்ந்தேன். மயிர்கூச்செறிந்தது.

ஆரம்பக்கால கதைகளைச் சொல்லி முடித்தபின்னர், வழக்கமான தத்துவார்த்த நிலைக்கு வந்தார்.


“என்னையே நான் கேட்டுக்கொண்டேன், எதற்காக இப்படி தொடர வேண்டும்... எதற்கு நம் வாழ்வை மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். எதற்காக இந்த இருப்பை, கடின உழைப்பை, கடுங்குளிரை, தனிமையை நீட்டிக்க வேண்டும்... மனித இனம் அழிந்து விட்டது... பூமியின் உயிரோட்டம் முடிந்துவிட்டது, ஏன் நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்” அப்பா தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கும்பொழுது,

மீண்டும் அந்த இரைச்சலான சத்தத்தைக் கேட்டேன். மேலும் சத்தமாக இருந்தது. சலசலப்பு மேலும் அதிகமானது. சத்தம் அருகாமையில் கேட்டது. பயத்தில் எனக்கு மூச்சு முட்டியது.

“வாழ்க்கை என்பது கடுங்குளிருடன் போராடும் ஒரு போராட்டம் தான், பூமி எப்பொழுதும் தனியாகத்தான் இருந்திருக்கின்றது. மிக நெருங்கிய கோளே பல லட்சம் கிலோமீட்டர்கள் தூரத்தில் உள்ளது. தனிமை என்பது பெரிய விசயம் அல்ல. மனித இனம் எவ்வளவு காலம் வாழ்ந்து இருந்தாலும், என்றாவது ஓர் இரவு முடிவு வந்துதான் ஆகவேண்டும். ஆனால் அவை எல்லாம் ஒரு பொருட்டே அல்ல,  முக்கியம் எதுவெனில் வாழ்க்கை அற்புதமான ஒன்று... அழகான வாக்கியம் போன்றது... விலையுயர்ந்த ஆடைகள் ஆகட்டும், சாதரண கம்பளி ஆகட்டும், மலரின் இதழ்கள் ஆகட்டும்... நீ அவற்றின் படங்கள் எல்லாம் பார்த்து இருக்கின்றாய்..... அவை கொடுத்த உணர்வை , சுவாலையை என்னால் விவரிக்க இய்லாது... வாழவேண்டும் என்பதே பிரச்சினைகளை எதிர்த்து போராட வைக்கின்றது.. அது முதல் மனிதனாக இருக்கட்டும் கடைசி மனிதனாக இருக்கட்டும்”

சத்தம் மேலும் நெருங்கியது. போர்வைகள் முட்டப்படுவதும் அசைவதும், நான் கற்பனை செய்ததைப்போலவே நடந்தன. அந்த உறைந்த கண்களே நினைவுக்கு வந்து கொண்டிருந்தது.

”அந்த சமயங்களில்... ” அப்பா பேச்சைத் தொடர்ந்தார். அப்பாவும் நான் கேட்ட சத்ததை கேட்கின்றார் என்பதை என்னால் சொல்ல முடியும். நாங்கள் கேட்க கூடாது என்பதற்காகவே இன்னும் சத்தமாகப் பேசினார்.

“அந்த சமயங்களில், நான் செய்ய நினைத்தது, நம் வாழ்க்கைக்கு பின் எல்லாம் அறிந்த துறக்கம் இருக்கின்றது. பிள்ளைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்.. நான் அறிந்தவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும்... புத்தகங்கள் வாசிக்க வைக்க வேண்டும். இந்தக் கூட்டை பெரிதாக்க வேண்டும். என்னால் முடிந்தவரை அழகாக விரிவாக்கம் செய்ய வேண்டும்.  என் ஆச்சரியங்களின் தொகுப்பின் நீட்சி குளிர் இருட்டு இவற்றிற்கு மத்தியிலும் எப்பொழுதும் இருக்க வேண்டும்”

எங்கள் கூட்டின் உள் போர்வை விலக்கப்பட்டு தூக்கப்பட்டது. அதன் பின்னால் இருந்து மிகப்பெரும் வெளிச்சம் வர. அப்பா பேச்சை நிறுத்தினார். அவரின் கண்கள் மெல்லத் திரும்பியது, கைகள், மெல்ல எடுத்து வைத்திருந்த நீண்ட சுத்தியலை நோக்கி நகர்ந்தது.

தொடரும் ---> http://vinaiooki.blogspot.it/2013/04/8.html