Tuesday, September 10, 2013

நீச்சல் மிதவையும் பிள்ளையார் நம்பிக்கையும் - குட்டிக் கட்டுரை



மண்டப எழுத்தாளர்களிடம் இருந்து தொடர்ந்து கட்டுரைகள் பெற்றுவருவதால், சுயமான எழுத்து எழுதி நீண்ட காலம் ஆகிவிட்டது. ஆக, ஈயம் பூசினாற் போலவும் இருக்க வேண்டும், பூசாத மாதிரியும் இருக்க வேண்டும் என்ற வகையிலான குட்டிக் கட்டுரை இது.

முன்பொரு காலத்தில் , சுவீடனில் இருந்த பொழுது சில வாரங்கள் நீச்சல் கற்றுக் கொண்டேன். அக்குளத்தில் என்னுடன் பயிற்சி பெற வந்தவர்களில் பெரும்பாலோனோர் முன்னரே நீச்சல் தெரிந்தவர்கள், ஆக அவர்கள் குளத்தில் குதித்தவுடன் பயமின்றி நீரோடு நீராய் மாறிப்போனார்கள். தொட்டதற்கெல்லாம் பயப்படும் நான், இடுப்பில் மிதவை ஒன்றைக் கட்டிக் கொண்டு நீச்சல் பழக ஆரம்பித்தேன். இடுப்பில் இருந்த மிதவை பயத்தைப் போக்கும் மிகப் பெரிய பிடிப்பாக இருந்தது. என்னுடைய பயிற்சியாளர் இரண்டாம் நாளன்று, மிதவை இல்லாமலேயே நீ நன்றாக நீந்துவாய் , அதை நீக்கி விடு என அறிவுறுத்தினார், நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த நீச்சல் எடுத்துக்காட்டைப் போல , ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மிதவையைப் போன்ற ஒரு பிடிப்புத் தேவைப்படுகின்றது. அந்த நம்பிக்கை நல்லதைத் தரும் முருகனாக இருக்கலாம். ஏசுவாக இருக்கலாம், புத்தனாக இருக்கலாம், ஏக இறைவன் அல்லாவாக இருக்கலாம், ஏன் அம்மா கொடுத்த அழுக்கான ஐந்து ரூபாய்த் தாளாக கூட இருக்கலாம். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என எல்லாவற்றையும் தின்று செரிக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கு இந்த நம்பிக்கை இன்னும் அதிகமாகவே தேவைப்படுகின்றது அல்லது திணிக்கப்படுகின்றது.

நீரில் மிதவை/பிடிப்பு இல்லாமலும் நீந்த முடியும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. பிரச்சினை எங்கு வருகிறது என்றால், மிதவை திணிக்கப்படும் பொழுதுதான்... மிதவை இல்லை என்றால் நீரில் மூழ்கி மூச்சடைத்து இறந்துப் போவாய் எனப் பயம் காட்டி வைத்து இருக்கின்றது குமுகம். மறுப்பக்கத்தில் மிதவை வேண்டியதில்லை எனப் பரப்புரை செய்யும்பொழுது , மிதவைகளை அறுத்து எறிவதைக் காட்டிலும் மிதவை இன்றி நீந்தி மக்களுக்கான பயத்தைப் போக்குவதன் மூலம் 'தன்' நம்பிக்கை ஒன்றே சிறந்தப் பிடிப்பு என தொடர்ந்து வரும் சந்ததியினரை உணர வைக்க முடியும் .

டா வின் சி கோட் என்றத் திரைப்படத்தில் ஒரு காட்சியில் அழகாக விவரிக்கப்பட்டு இருக்கும். ஏசு ஒரு மனிதர் , திருமணமானவர் என்று நம்பும் நாயகன் Robert Langdon , தனது சிறு வயது அனுபவம் ஒன்றைப் பகிர்ந்து கொள்வார்.

"Okay, maybe there is no proof. Maybe the Grail is lost forever. But, Sophie, the only thing that matters is what you believe. History shows us Jesus was an extraordinary man, a human inspiration. That's it. That's all the evidence has ever proved. But... when I was a boy... when I was down in that well Teabing told you about, I thought I was going to die, Sophie. What I did, I prayed. I prayed to Jesus to keep me alive so I could see my parents again, so I could go to school again, so I could play with my dog. Sometimes I wonder if I wasn't alone down there. Why does it have to be human or divine? Maybe human is divine. Why couldn't Jesus have been a father and still be capable of all those miracles? "
காட்சித் துணுக்கு - http://www.youtube.com/watch?v=B7zXxCAZjK4

நாயகனைப் போல , ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவருக்கும் முருகனோ ஏசுவோ அல்லாவோ தேவைப்பட்டு இருப்பார்கள். என் அம்மா அப்பா சிறு வயதில் சண்டை போட்டுக் கொள்ளும்பொழுது எல்லாம் முருகனிடம் தான் சண்டை சீக்கிரம் சமரசம் ஆக வேண்டும் என வேண்டிக் கொள்வேன். ( இன்றும் 'முருகனின்' மேல் தமிழரசியல் சார்ந்த விசயங்களுக்காக நம்பிக்கை உண்டு )

ஒரு கட்டத்திற்கு மேல் தேவை இல்லை என ஆகும் நம்பிக்கைகள் தொடர்ந்து 'பின்பற்றப்படுவதன்' காரணம் , 'தெளியும்' முன்னர் தன்னுடைய தனது குடும்ப அடையாளங்களாக மாறிப் போய் விடுவதுதான். பிள்ளையார் வழிபாட்டைத் திட்டினால், கடவுளைத் திட்டுகிறார்கள் என்றக் கோபத்தைக் காட்டிலும் என் 'அம்மா , அப்பா' ' தாத்தா பாட்டி' தனக்கு சொல்லிக் கொடுத்த நம்பிக்கைகளை புனிதங்களை மறுதலிக்கின்றார் களே என்ற கோபமே மேலோங்கி இருக்கும் . இந்த உள்ளூர கோபம் , கணன்று தீர்க்கமான மாற்ற முடியாத 'புனிதமாக' மாறி விடும்.

உயிரைக் கொன்று உணவாய் உண்ண , ஆடு கோழிகளைப் போல மாடும் பன்றியும் ஒன்றே என புனிதத்தை உடைக்க எனக்கு சில ஆண்டுகள் ஆனது. தமிழ்ச் சமூகம் பாவத்தைக் கூட எளிதில் கடந்து விடும். போலியான புனிதங்களை கடக்க விரும்பவே விரும்பாது.

வர்த்தக முன்னேற்றங்களை அளவுகோலிட குறைந்தது மூன்று வருடங்கள் ஆவது தேவை. சமூக வாழ்வியலில் சமத்துவ மாற்றம் ஏற்பட மூன்று தலைமுறைகளாவது கொடுக்கப்படவேண்டும் . மருந்தை சாக்லெட் சாப்பிடுவர்களுக்கு சாக்லெட்டின் மூலமாகவும், கார பஜ்ஜி போண்டா சாப்பிடுபவர்களுக்கு அதன் மூலமாகவும் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும், மருந்து இருக்கின்றது என்பதை மறைத்தோ மறைக்காலோ .. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த சமூகமான தமிழ்ச் சமூகம் இன்றும் ஒரு குழந்தையைப் போலத் தான் இருக்கின்றது. மானே தேனே பொன் மானே எல்லாம் போட்டுத் தான் மாற்ற வேண்டும்.

ஆக மருத்துவர் புருனோ ( Mariano Anto Bruno Mascarenhas -https://www.facebook.com/spine.brain.surgeon/posts/10151856337539828) பகிர்ந்ததைப் போல, கலைஞரோ, சீமானோ, பிள்ளையாரோ, ஏசுவோ, நபிகளாரோ , அவரவர்களுக்கான நாட்களில் அமைதி காத்து விடலாம். ( பிள்ளையார் ஊர்வலங்கள் மசூதிகளின் மேல் பன்றிக் கறி எறியப்படாமல் நடக்க வேண்டும் என வைக்கப் படும் சமுதாய அக்கறை வேண்டு கோள்கள் சீண்டல்களில் வராது ).

எத்தனைக் கொடுங்கோலர்கள் தோன்றினாலும் , கடும்போக்காளர்கள் தோன்றினாலும் உலகம் அழிந்து விடாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருப்பதற்கான காரணம் நற்குணம் கொண்ட மிதவாதமானப் போக்கு உடையவர்களால் தான் என்பதை ஓர் உடையாடலின் பொழுது திரு ஞாநி ( Gnani Sankaran) சொன்னார். அது உண்மையே , நிதானமான மிதவாதப் போக்கு பக்குவமானது.

இறுதியாக மிதவையுடன் நீந்துகின்றார்களா... இல்லையா என்பதைக் காட்டிலும் எல்லோரும் குளத்தில் நீந்த அனுமதிக்கப் படுகின்றனரா என்பதையும் பார்க்க வேண்டும்.

சொந்தக் கதையில் ஆரம்பித்து சொந்தக் கதையிலேயே முடித்து விடுகின்றேன். நீச்சல் பயிற்சியின் கடைசி நாளன்று , கிட்டத்தட்ட அரை மணி நேரம் தனியாக நீந்தினேன். விஷயம் என்னவெனில் , எனது பயிற்சியாளர், எனக்குத் தெரியாமல் எனது மிதவையை அவிழ்த்து விட்டு இருக்கின்றார். மிதவை என்ற பிடிப்பு இன்றிதான் , அந்த அரை மணி நேரமும் நீந்தி இருக்கின்றேன் . கரை ஏறிய பின்னர்தான் அந்த விஷயத்தை என்னிடம் சொன்னார்