Showing posts with label பாகிஸ்தான். Show all posts
Showing posts with label பாகிஸ்தான். Show all posts

Wednesday, December 04, 2013

பேஸ்புக், ஒரு மாணவன் , ஒரு பெண் மற்றும் ஒரு பொய்

முதலில் இதை சிறுகதையாகத் தான் எழுதலாம் என இருந்தேன். ஆனால் அனுபவங்களை அனுபவப்பதிவாக எழுதினால் அதன் தாக்கத்தின் வீச்சு அதிகம் என்பதால் உண்மையில் பொய்யைக் கலந்து புனைவாக்கும் எண்ணத்தை ஒதுக்கி விட்டு இதை அப்படியே உள்ளது உள்ளபடியே எழுதுகின்றேன். நாம் ஒவ்வொருவரும் தெரிந்தோ தெரியாமலோ சிலரின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் விளையாடிவிடுவோம். அந்த விளையாட்டுக்கள் சில சமயங்களில் நன்மையிலும் பல சமயங்களில் பகையிலும் முடியலாம். அடுத்தவரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைத் தரக் கூடிய விதியின் விளையாட்டுகளின் ஆட்டக்காரனாக அடிக்கடி நான் இடம் பெறுவதுண்டு. கல்லூரிக் காலங்களில் அவ்வகையான ஆட்டங்களை சாதுர்யமாக தெரிந்தே விளையாடி இருக்கின்றேன். கால ஓட்டத்தில் அறிவும் பக்குவமும் அதிகமாக அதிகமாக மற்றவர்களின் உணர்வுகளைப் பணயம் வைத்து ஆடும் ஆட்டம் அறவே மறந்துப் போய் விட்டது. கடைசியாக பங்கேற்ற ஆட்டம், ஒரு பிரபல வலைப்பதிவரினால் தொடர்கதையாக எழுதப்பட்டு பரவலான வரவேற்பையும் பெற்றது. அத்தொடரில் நானும் ஒரு முக்கிய கதை மாந்தர். 

தமிழ் , தெலுங்கு, இந்தி என இந்திய அளவிலேயே இருந்த அடுத்தவரின் வாழ்க்கையை திசைத் திருப்பும் ஆட்டங்கள் இன்று பன்னாட்டு அந்தஸ்தையும் அடைந்தது 

ஒரு மாணவன் , பேஸ்புக் , ஒரு பெண் மற்றும் ஒரு பொய் ஆகியனவும் இவ்வாட்டத்தில் முக்கியமானவை. எனது துறையில் ஆராய்ச்சி மாணவனாக , பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவன், சென்ற ஆண்டு சேர்ந்தான். கடந்த ஜூன் மாதம் , பாகிஸ்தானிற்கு சென்றவன் , அங்கிருந்து துறைப் பேராசிரியருக்கு , தனது தந்தை உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாகவும் , அதனால் ஆறு மாதங்கள் படிப்பில் விலக்கு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு மின்னஞ்சல் செய்து இருந்தான். 

மாணவர் நலனில் மிகுந்த அக்கறைக் கொண்ட எனது பேராசிரியரும் , அதற்கான சாத்தியக் கூறுகளை பரிசீலித்து அதற்கான முன்னெடுப்புகளை எடுத்து இருந்தார். பல்கலை கழக விதிமுறைகளின் படி , மாணவர்களுக்கு உடல் நோவு வந்தால் மட்டுமே ஆறு மாதங்களோ ஒரு வருடமோ விலக்கு அளிக்கப்படும், ஆனாலும் பேராசிரியர் மிகவும் நல்லவர் என்பதால், இண்டு இடுக்கு விதி முறைகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு நல்லது செய்வார் அடிக்கடி என்னிடமும் எனது சக மாணவனான  மற்றொரு பாகிஸ்தானியனிடமும், விலக்கு கோரிய மாணவனைப் பற்றியும் அவனது தந்தையின் உடல் நலம் பற்றியும் விசாரிப்பார். 

இன்று மாலை, ஒரு சந்தர்ப்பத்தில் பாகிஸ்தானிய மாணவனைப் பற்றி பேச்சு வருகையில் , அந்த மாணவனது பேஸ்புக்கில் ஏதேனும் தகவல் இருக்கின்றதா என எங்களிடம் கேட்டார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நேரம் இருந்ததால் இன்று தான் சிலப் பலப் புகைப்படங்கள் போட்டு சுயத்தம்பட்டம் அடித்துக் கொண்டு இருந்தேன். வாத்தியார்கள் எள் என்றால் எண்ணெய் ஆக மாறும் தமிழ் வழிப் படிப்புச் சூழலில் வளர்ந்ததால் உடனே , அவனது பேஸ்புக்கைப் பார்த்து , மாணவன் எதுவும் தகவல் பகிரவில்லை ஆனால், அவனது தோழி ஒருத்தி புகைப்படங்களில் அவனை இணைத்துள்ளதைக் காட்டுகின்றது என மட்டும் சொன்னேன். பேராசிரியர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, உடனே என் இருக்கைக்கு வந்து படங்களைப் பார்த்தார். மாணவனும் அவனது ஐரோப்பியத் தோழியும் , ஜெர்மணியின் மியுனிக் நகரில் நடந்த ஒரு திருவிழாக் கொண்டாட்டத்தில் தங்களது நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட படங்கள் கடந்த செப்டம்பர் மாதம் தரவு ஏற்றப்பட்டிருந்தன. பேராசிரியரின் முகம் மாறியது. 

பயபுள்ள, அப்பாவிற்கு உடல் நலம் சரியில்லை என கூறிவிட்டு , ஜெர்மனியில் ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கின்றது என எனக்கு விளங்கியது. 

அந்த மாணவனுக்கு ஆரம்பத்தில் இருந்தே இத்தாலியும் எங்களது துறையையும் பிடிக்கவில்லை. ஆராய்ச்சிப் படிப்பிற்கான ஊக்கத் தொகையும் மிகவும் குறைவு என்ற மனக்குறையும் அவனுக்குண்டு. நான் சேர்ந்த ஆண்டில், நிதி நிலைமை காரணமாக ஊக்கத் தொகை எனக்கு கிடையாது. பல்கலை கழகத்தில் அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் நான் வேலைப் பார்ப்பதால் தான் அப்படி இப்படி என ஓர் ஆயிரம் ஈரோக்கள் எனக்கு கிடைக்கும். அதை வைத்துக் கொண்டு தான் அரசனைப் போல வாழ்வதாக இங்கு கொஞ்சம் பந்தா காட்டுவதுண்டு. எனது பந்தாக்களைப் பற்றி எழுதினால் அது பத்து பக்கங்கள் போகும், அதைப் பின்னர் பார்க்கலாம். 

"சார் ஒருவேளை , இந்தப் பெண் சென்ற வருடம் எடுத்த புகைப்படங்களை இப்பொழுது தரவேற்றி இருக்கலாம் " பொய்மையும் வாய்மை இடத்து என சமாளிக்க முயலுகையில் ...... 

சமீபத்தில் , அதே தோழி , மாணவனது சுவற்றில் 'இன்றிரவு சாக்லெட் காப்பி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வருகின்றாயா ' என எழுதி இருந்ததையும் பேராசிரியர் கவனித்து விட்டார். 

 நான் படு சுமாராக ஆண்டிராய்டு நிரலி எழுதும் பொழுது கூட கோபப் படமாட்டார். தந்தைக்கு உடல் நலம் சரி இல்லை என சொல்லிவிட்டு , அதன் பொருட்டு சொந்த நாட்டில் இருப்பதாக விலக்கு கேட்டு , இங்கு குடியும் கும்மாளமுமாக இருப்பதைப் பார்த்த பேராசிரியரின் முகத்தில் அவ்வளவு கோபம் வெடித்தது.

உடனடியாக அந்த மாணவனுக்கு மின்னஞ்சல் செய்து விட்டு , அவனுக்காக எடுத்திருந்த முயற்சிகளை கைவிடுமாறு துறைத் தலைவருக்கும் தெரிவித்து விட்டார். 
மார்ச்சில் அவன் திரும்ப வந்தால், முதலில் பாஸ்போர்ட் இம்மிக்ரேஷன் முத்திரையை பார்க்க வேண்டும் என கோபமாக சொல்லிக்கொண்டு இருந்தார். 

ஐரோப்பா வரும் இந்தியத் துணைக்கண்ட மாணவர்களில் சிலர், , ஒரு நாட்டில் படிப்பிற்கான அனுமதியை வாங்கிக் கொண்டு , அனுமதி பெற்ற படிப்பிற்கு போக்குக் காட்டிவிட்டு , மற்றொரு நாட்டிற்கு சென்று அங்கு படிப்பிற்கோ வேலைக்கோ பெண்களுக்கோ தூண்டில் போட்டுக் கொண்டு இருப்பார்கள். அந்த வகையில் இந்த பாகிஸ்தான் மாணவன் செயல்பட நினைத்து இருந்து இருக்கலாம். அதற்காக அப்பா உடல்நிலை என்ற திரைக்கதையை எழுதி இருக்கலாம்.ஆறு மாதங்கள் வேறு நல்ல வாய்ப்பிற்காக காத்திருந்து ஒரு வேளை கிடைக்காவிட்டால் , மீண்டும் இத்தாலிக்கே வந்துவிடலாம் என்பது மாணவனின் திட்டமாக இருந்து இருக்கும். திட்டமிட்டு எழுதப்பட்ட திரைக்கதையில் எழுதியவருக்கே ட்விஸ்ட் கொடுக்கும் விதமாக பேஸ்புக் அமைந்துவிட்டது. அவனது பெண் தோழி மட்டும் அந்தப் படங்களைப் பகிராமல் இருந்திருந்தாலோ  அல்லது Tag செய்வதை இந்த மாணவன் எடுத்துவிட்டு இருந்தாலோ ஆப்பசைத்த  குரங்காய் மாட்டாமல் இருந்து இருக்கலாம். அந்த மாணவன் நேர்மையாக இல்லை, பொய் சொன்னான் என்பதெல்லாம்  ஒரு புறம் இருந்தாலும், நாளை என் பேஸ்புக் வழியாகத் தான் அவனது தகவல்களைப் பேராசிரியர் பார்த்தார் என அவனுக்கு தெரிய வரும் பொழுது, நான் அவனுக்கு வில்லன் ஆவேன். ஒரு நாயகனுக்குத்தான் எத்தனை வில்லன்கள்.... 

சமூக டக உலகமானது , தகவல் பரிமாற்ற யுகம் மட்டுமல்ல, தகவல் கசிவு உலகமும் கூட... எத்தனை எச்சரிக்கையாக இருந்தாலும், மறைக்க வேண்டும் என நினைக்கும் விசயங்கள் சமூக ஊடகத் தொடர்பு சங்கிலியில் எங்கேயாவது ஓர் இணைப்பில் தெறித்து விழும். அதே போல , சொல்லப்பட்ட பொய், நீருக்குள் அமுக்கப்பட்ட காற்றடைத்தப் பந்து மேல் எழும்பி வருவதைப் போல என்றாவது ஒரு நாள் மேலே வரும்.

Friday, November 12, 2010

புகலிடம் - சிறுகதை

என்னுடைய பாகிஸ்தானிய கல்லூரித் தோழன் ஷாகித் அலி எதிரே வருவதைப் பார்த்த பின்னர், அதுவரை, டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் செல்லும் கடைசி ரயிலுக்காகக் காத்திருக்கும் அடுத்த சில நிமிடங்களைத் தொலைக்க, நோக்கிக்கொண்டிருந்த சுவிடீஷ் மங்கையின் மேல் இருந்த பார்வையை எடுத்துவிட்டு,ஷாகித்திற்குப் புன்னகையைத் தந்தேன்.

மதம் அபின் மட்டும் அல்ல, அது ஒரு வைரஸ், மனித குலத்தைப் பீடித்திருக்கும் ஒரு நோய், நோயின் பக்கவிளைவுகள் கடவுள்கள் என்று எழுதி இருந்த பேஸ்புக் முகப்பு செய்திக்கு, கோப வார்த்தைகளில் ஆனாலும் ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளும்படியான எதிர் வாதங்களைப்புரிந்தவன் என்பதனால் ஷாகித்தின் மேல் எனக்கு மரியாதை உண்டு.

அவனைச் சந்திக்கும்பொழுதெல்லாம் ஏதாவது சீண்டும் விதமாக கேள்வி கேட்டு என் குசும்புத்தனங்களை வெளிப்படுத்தினாலும், நான் எப்படி வெள்ளைக்கார ஐரோப்பியர்களின், இந்தியாவைப் பற்றிய சில்லறைத் தனமான கேள்விகளுக்கு தெளிவாகப் பதிலளிக்க முயற்சிப்பேனோ, அதேபோல் அவனும் தன்னாட்டு பெருமையை நிலைநிறுத்தும் விதத்தில் சில புள்ளிவிபரங்களுடன் பதில் தருவான். அவன் இந்தியாவைப் பற்றி கோபமாக பதிலளித்தது ஒரே ஒரு முறைதான்.

”ஷாகித், பாகிஸ்தானே தண்ணீரில் மிதக்கிறது போல, அறுபது வருடங்களில் உள்கட்டமைப்பை சரியா கொண்டு வந்திருக்கலாமே” என்றேன் ஆங்கிலத்தில்.

”நீங்கள் நதி நீர் பயங்கரவாதத்தை நிறுத்தினாலே நாங்கள் பிழைத்துக்கொள்வோம், நீங்கள் பஹ்லிஹர் அணையைத் திறந்து விட்டு விட்டீர்கள், நாங்கள் மிதக்கிறோம், கேட்கும்பொழுது கொடுக்காதீர்கள். எங்கள் வெள்ளத்திற்கு காரணம் நீங்கள் தான் ”

அதன் பின்னர் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளான அரசியலையும் கடவுளையும் பற்றி பேசுவதில்லை. கிரிக்கெட் மதம் ஆனால் நானும் ஆன்மீகவாதியாக மாறுவதில் பிரச்சினை இல்லை என்பதால் கிரிக்கெட்டைப் பற்றி மட்டும் அவ்வப்பொழுது பேசுவேன்.



”பாவம், ஜூல்கர்னைன் ஹைதர், நல்ல கிரிக்கெட் ஆட்டக்காரன், பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என நினைத்தேன். அவன் இப்படி ஓய்வுபெற்றது துரதிர்ஷ்டம்”

“அவன் ஒரு துரோகி, தேசத்துரோகி. பிரச்சினை என்றால் சொந்த நாட்டிற்கு வரவேண்டியதுதானே” சில உருது கெட்ட வார்த்தைகளை இடையில் சேர்த்து ஆங்கிலத்தில் பதில் சொன்னான்.

“சிறிய வயது, கொல்லப்படுவோம் எனப் பயப்படுமொழுது பாதுகாப்பான நாட்டிற்குப் போவதுதானே சரி. பிரிட்டிஷ் அரசாங்கம் எப்பொழுதுமே மனித உரிமைகளின் பாதுகாவலர்கள், குடியுரிமை கிடைத்துவிடும். எதிர்காலத்தில் ஹைதர் இங்கிலாந்து அணிக்காக விளையாடும் வாய்ப்பு இருக்கிறது ”

“உங்களின் ஜம்மு காஷ்மீரை விட, இந்தியாவின் கிழக்கு, வட கிழக்கு மாநிலங்களை விட எங்கள் நாட்டு மக்களுக்குப் பாகிஸ்தானில் பாதுகாப்பு அதிகம்” உணர்ச்சிவசப்பட்டு பேசினான்.

ஜனகண மன என ரட்சகன் நாகார்ஜுன் போல நரம்புகள் புடைத்தாலும், ரயில் சரியான நேரத்தில் வந்துவிட்டபடியால் ஷாகித் சென்ற நேர் எதிர் திசை பெட்டியில் ஏறி அமர்ந்து கொண்டேன். ஷாகித்தையும் ஜனகன மன வையும் மறந்துவிட்டு நாளை சமர்ப்பிக்கவிருக்கும், டென்மார்க் நாட்டிற்கான வேலை வாய்ப்புக்கான அனுமதி விண்ணப்பத்தையும் அதற்கான சான்றிதழ் நகல்களையும் சரிப்பார்க்கத் தொடங்கினேன். கிட்டத்தட்ட அமெரிக்காவில் வழங்கப்படும் கிரீன்கார்டு மாதிரியானது.தொடர்ந்து வேலை கிடைத்து நிரந்தரக் குடியுரிமைக் கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கின்றது. உலகத்திலேயே அதிகத் தரத்தில் சம்பளம், பாதுகாப்பான வாழ்வு என எனது அடுத்தத் தலைமுறையை நிம்மதியாக வாழ வைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் தூங்கிப்போனேன்.

மறுநாள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் பொழுது, பரிச்சயமான குரல் கேட்பதை உணர்ந்து திரும்பிப்பார்த்தேன், தூரத்தில் ஷாகித் அலி கிரீன்கார்டு விண்ணப்பப் படிவத்தின் சில சந்தேகங்களை அங்கு இருக்கும் அலுவலர் ஒருவரிடம் கேட்டுக்கொண்டிருந்தான். அந்த வெள்ளைக்கார அலுவலர், விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வதில் அவனுக்கு உதவிக்கொண்டிருந்தார்.