Friday, November 12, 2010

புகலிடம் - சிறுகதை

என்னுடைய பாகிஸ்தானிய கல்லூரித் தோழன் ஷாகித் அலி எதிரே வருவதைப் பார்த்த பின்னர், அதுவரை, டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் செல்லும் கடைசி ரயிலுக்காகக் காத்திருக்கும் அடுத்த சில நிமிடங்களைத் தொலைக்க, நோக்கிக்கொண்டிருந்த சுவிடீஷ் மங்கையின் மேல் இருந்த பார்வையை எடுத்துவிட்டு,ஷாகித்திற்குப் புன்னகையைத் தந்தேன்.

மதம் அபின் மட்டும் அல்ல, அது ஒரு வைரஸ், மனித குலத்தைப் பீடித்திருக்கும் ஒரு நோய், நோயின் பக்கவிளைவுகள் கடவுள்கள் என்று எழுதி இருந்த பேஸ்புக் முகப்பு செய்திக்கு, கோப வார்த்தைகளில் ஆனாலும் ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளும்படியான எதிர் வாதங்களைப்புரிந்தவன் என்பதனால் ஷாகித்தின் மேல் எனக்கு மரியாதை உண்டு.

அவனைச் சந்திக்கும்பொழுதெல்லாம் ஏதாவது சீண்டும் விதமாக கேள்வி கேட்டு என் குசும்புத்தனங்களை வெளிப்படுத்தினாலும், நான் எப்படி வெள்ளைக்கார ஐரோப்பியர்களின், இந்தியாவைப் பற்றிய சில்லறைத் தனமான கேள்விகளுக்கு தெளிவாகப் பதிலளிக்க முயற்சிப்பேனோ, அதேபோல் அவனும் தன்னாட்டு பெருமையை நிலைநிறுத்தும் விதத்தில் சில புள்ளிவிபரங்களுடன் பதில் தருவான். அவன் இந்தியாவைப் பற்றி கோபமாக பதிலளித்தது ஒரே ஒரு முறைதான்.

”ஷாகித், பாகிஸ்தானே தண்ணீரில் மிதக்கிறது போல, அறுபது வருடங்களில் உள்கட்டமைப்பை சரியா கொண்டு வந்திருக்கலாமே” என்றேன் ஆங்கிலத்தில்.

”நீங்கள் நதி நீர் பயங்கரவாதத்தை நிறுத்தினாலே நாங்கள் பிழைத்துக்கொள்வோம், நீங்கள் பஹ்லிஹர் அணையைத் திறந்து விட்டு விட்டீர்கள், நாங்கள் மிதக்கிறோம், கேட்கும்பொழுது கொடுக்காதீர்கள். எங்கள் வெள்ளத்திற்கு காரணம் நீங்கள் தான் ”

அதன் பின்னர் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளான அரசியலையும் கடவுளையும் பற்றி பேசுவதில்லை. கிரிக்கெட் மதம் ஆனால் நானும் ஆன்மீகவாதியாக மாறுவதில் பிரச்சினை இல்லை என்பதால் கிரிக்கெட்டைப் பற்றி மட்டும் அவ்வப்பொழுது பேசுவேன்.”பாவம், ஜூல்கர்னைன் ஹைதர், நல்ல கிரிக்கெட் ஆட்டக்காரன், பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என நினைத்தேன். அவன் இப்படி ஓய்வுபெற்றது துரதிர்ஷ்டம்”

“அவன் ஒரு துரோகி, தேசத்துரோகி. பிரச்சினை என்றால் சொந்த நாட்டிற்கு வரவேண்டியதுதானே” சில உருது கெட்ட வார்த்தைகளை இடையில் சேர்த்து ஆங்கிலத்தில் பதில் சொன்னான்.

“சிறிய வயது, கொல்லப்படுவோம் எனப் பயப்படுமொழுது பாதுகாப்பான நாட்டிற்குப் போவதுதானே சரி. பிரிட்டிஷ் அரசாங்கம் எப்பொழுதுமே மனித உரிமைகளின் பாதுகாவலர்கள், குடியுரிமை கிடைத்துவிடும். எதிர்காலத்தில் ஹைதர் இங்கிலாந்து அணிக்காக விளையாடும் வாய்ப்பு இருக்கிறது ”

“உங்களின் ஜம்மு காஷ்மீரை விட, இந்தியாவின் கிழக்கு, வட கிழக்கு மாநிலங்களை விட எங்கள் நாட்டு மக்களுக்குப் பாகிஸ்தானில் பாதுகாப்பு அதிகம்” உணர்ச்சிவசப்பட்டு பேசினான்.

ஜனகண மன என ரட்சகன் நாகார்ஜுன் போல நரம்புகள் புடைத்தாலும், ரயில் சரியான நேரத்தில் வந்துவிட்டபடியால் ஷாகித் சென்ற நேர் எதிர் திசை பெட்டியில் ஏறி அமர்ந்து கொண்டேன். ஷாகித்தையும் ஜனகன மன வையும் மறந்துவிட்டு நாளை சமர்ப்பிக்கவிருக்கும், டென்மார்க் நாட்டிற்கான வேலை வாய்ப்புக்கான அனுமதி விண்ணப்பத்தையும் அதற்கான சான்றிதழ் நகல்களையும் சரிப்பார்க்கத் தொடங்கினேன். கிட்டத்தட்ட அமெரிக்காவில் வழங்கப்படும் கிரீன்கார்டு மாதிரியானது.தொடர்ந்து வேலை கிடைத்து நிரந்தரக் குடியுரிமைக் கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கின்றது. உலகத்திலேயே அதிகத் தரத்தில் சம்பளம், பாதுகாப்பான வாழ்வு என எனது அடுத்தத் தலைமுறையை நிம்மதியாக வாழ வைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் தூங்கிப்போனேன்.

மறுநாள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் பொழுது, பரிச்சயமான குரல் கேட்பதை உணர்ந்து திரும்பிப்பார்த்தேன், தூரத்தில் ஷாகித் அலி கிரீன்கார்டு விண்ணப்பப் படிவத்தின் சில சந்தேகங்களை அங்கு இருக்கும் அலுவலர் ஒருவரிடம் கேட்டுக்கொண்டிருந்தான். அந்த வெள்ளைக்கார அலுவலர், விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வதில் அவனுக்கு உதவிக்கொண்டிருந்தார்.

0 பின்னூட்டங்கள்/Comments: