Saturday, November 20, 2010

கல்கத்தா விஸ்வநாதன் - மும்மொழிகள் , பலப்பரிமாணங்கள்




தமிழ் திரைப்படங்களில் நாடகத்தனமாக மேல்தட்டு மக்களின் உடல் மொழிகளை திரையில் நடித்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில், ஆங்கில உச்சரிப்புகளாகட்டும் , மேனாட்டு பாவனைகளை வெளிப்படுத்துவதாகட்டும் இருவர் தனித்து நினைவுக்கு வருவார்கள் ஒருவர் வீணை எஸ்.பாலசந்தர். மற்றொருவர் கல்கத்தா விஸ்வநாதன் என தமிழ்ப்பட உலகில் அறியப்படும் பேராசிரியர் என்.விஸ்வநாதன். திரையுலகில் இருந்தாலும் திரையுலகிற்கு அப்பாற்பட்டு வேறு துறைகளில் பிரகாசித்தவர்கள், அதுவும் தமிழ்த்திரை வரலாற்றில் மிகவும் குறைவு. சமீபத்தில் 90 களில் கனவு நாயகனாக இருந்த அரவிந்த்சுவாமி பின்னாளில் தகவல் தொழில்நுட்ப துறையில் பிரகாசித்தார். பணக்காரத் தோரணை நடிப்பில் கல்கத்தா விஸ்வநாதனுக்கு முன்னோடியான எஸ்.பாலசந்தர் வீணை மீட்டுவதில் சக்கரவர்த்தியாய் ஆகி, வீணை எஸ்.பாலசந்தர் என்ற அடையாளத்துடனேயே இன்று நினைவு கூறப்படுகிறார். கல்கத்தா விஸ்வநாதன் பிரகாசித்ததோ கல்வித்துறையில், ஆம் கல்கத்தாவின் நூற்றாண்டு பழமைவாய்ந்த புனித சேவியர் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவர் என்.விஸ்வநாதன். லக்‌ஷ்மி மித்தல் புனித சேவியர் கல்லூரியில் படித்தபொழுது அவரின் ஆங்கில ஆசிரியர் என்.விஸ்வநாதன் தானாம்.



திராவிடமொழி திரைப்படங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட மொழிகளில் பிரபலமாய் இருப்பதில் பெரிய வியப்பில்லை. உதாரணமாக எஸ்.வி.ரங்காராவ் தெலுங்கிலும் மதிக்கப்படும் அளவிற்கு தமிழிலும் அறியப்படுகிறார். மலையாளத்தைபொருத்தவரை பிரேம் நசீர், பின்னர் மம்மூட்டி, இன்று பிரித்விராஜ். கன்னட மொழி திரைப்படங்களை எடுத்துக் கொண்டோமானால் ரமேஷ் அரவிந்த் , மோகன் (கன்னடத்தில் கோகிலா மோகன் என அறியப்படுகிறார்) ஆகிய ஒரு சிலர்தான். ஆனால் கிட்டத்தட்ட இரு வேறு துருவங்களாக இருக்கும் வங்காள மொழி திரைத்துறை, தமிழ் திரையுலகம் ஆகியன இரண்டிலும் பிரபலமாக இருந்தவர் என்.விஸ்வநாதன்.

”அந்தநாளில்” இவர் நடித்து இருந்தால் கல்கத்தா விஸ்வநாதனாக இல்லாமல் வேலூர் விஸ்வநாதனாகவே தமிழில் நிரந்தர இடம் பிடித்து இருப்பார். முதலில் தவறிய திரை அறிமுகம் மும்மொழிப்படமான “ரத்ன தீபம்” படத்தில் தேவகி குமார் போஸ் என்பவரால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டார்.



வேலூரில் பிறந்த இவர், கல்கத்தாவிற்கு இடம்பெயர்ந்ததனால் புனித சேவியர் கல்லூரியில் ஆங்கிலம் பயின்று கல்வியாளராய் ஆகி கல்கத்தா விஸ்வநாதனாய் தமிழ் உலகிற்கு வந்தார். இவரின் பெயர் தெரியாதவர்கள் கூட மூன்று முடிச்சில் கிட்டத்தட்ட மூன்றாவது கதாநாயகனாக , ரஜினிகாந்தின் அப்பாவாக ஸ்ரீதேவியின் கணவனாக நடித்திருப்பது நினைவிருக்கும். மூன்று முடிச்சு படத்தில் நடித்திருப்பவர்களின் பெயர்கள் போடப்படும்பொழுது பேராசிரியர்.N.விஸ்வநாத் எனக்குறிப்பிடப்படுகிறது.




ரஜினிகாந்தின் சிகரெட் பிடிக்கும் முறை எத்தனை ஸ்டைலாக இருக்கிறதோ , அத்தனை ஸ்டைலாக இவரது பைப் சிகரெட் பிடிக்கும் விதமும் இருக்கும். தமிழில் இவர் கடைசியாக பாபா திரைப்படத்திலும் ரஜினிகாந்தின் தந்தையாக நடித்தார்.



நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பரான விஸ்வநாதன், சிவாஜி கணேசனுடன் வெள்ளைரோஜா, கவரிமான் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.பாலுமகேந்திராவின் மூடுபனியிலும் விஸ்வநாதன் நடித்துள்ளார். அரபிந்த் கோஷு வங்காளத்திற்கும் தமிழகத்திற்கும் இணைப்புப் பாலம் ஆனதைப்போல, தமிழ் கலையுலகிற்கும் வங்காள கலையுலகிற்குமான சந்திப்புப் புள்ளி ஆனார். வங்காள நாடக, திரையுலகில் பெரிதும் மதிக்கப்படும் நடிகராக மட்டும் அல்லாமல் , நாடக , திரைப்பட கதாசிரியராகவும் விளங்கிய விஸ்வநாதனின் மகன் அசோக் விஸ்வநாதன் வங்காள மொழியில் குறிப்பிடத்தகுந்த முன்னணி இயக்குனர்களில் ஒருவர்.





சத்யஜித்ரே, மிருனாள் சென், பஹாரி சன்யால், உத்பல் தத், சோபி பிஸ்வாஸ் ஆகியோரின் விருப்பத் தேர்வு நடிகராக விளங்கிய விஸ்வநாதன் , சத்யஜித் ரேயின் முதல் வண்ணப்படமும் ,சத்யஜித் ரேயின் முதல் சொந்த கதை, திரைக்கதை முயற்சியுமான “கஞ்சன்ஜங்கா” திரைப்படத்தில் மேனாட்டில் கல்வி கற்ற கனவானாக நடித்த பானர்ஜி கதாபத்திரம் இன்றளவும் பேசப்படுகிறது. அவரின் அளவான நடிப்பைக் கீழ்காணும் காணொளியில் காணலாம்.



பல்கலை கழக வளாகத்தில், பிரிட்டிஷ் உச்சரிப்பு, நடை உடை பாவனைகளுக்காகவே வெகுவாக மாணவர்களால் விரும்பப்பட்டதுடன் மட்டுமல்லாமல், கல்வித்துறை, நாடகம், இரு வேறு திரையுலகங்கள் என தனது தடத்தை திடமாகப் பதித்த பேராசிரியர் என்.விஸ்வநாதன் 17, நவம்பர் 2010 அன்று மாரடைப்பால் காலமானர். அன்னாருக்கு வயது 81. கல்கத்தா விஸ்வநாதன் கடைசியாக நடித்தப்படம் கும்ஸுதா , மகன் அசோக் விஸ்வநாதனின் இயக்கத்தில் இந்தி மொழியில் வெளிவந்த இப்படத்திற்கு கதை, திரைக்கதை திரு.விஸ்வநாதன். கும்ஸுதா என்பதன் தமிழாக்கம் இழப்பு. பேராசிரியர் விஸ்வநாதனின் மறைவு நிச்சயம் வங்காள நாடக, திரையுலகிற்கு மட்டும் அல்ல, தமிழ் திரைப்பட உலகிற்கும் ஒரு இழப்புதான். அவரின் ஆன்மா நிம்மதி அடையட்டும்.

1 பின்னூட்டங்கள்/Comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இந்த அலட்டல் இல்லா நடிப்பின் சொந்தக்காரரின் மரணம் கூடப் பெரிய அலட்டல் இல்லாமல்...பதிவுலகில் ஓய்ந்து விட்டது.
உங்கள் பதிவு மூலம் இச்செய்தி அறிந்தேன். இயல்பு நடிப்புக்கு உதாரணமானவர்.
விளக்கமான விபரமடங்கிய பதிவு.