1. இந்திய மத்தியவரிசை மட்டையாளர் சுரேஷ் ரைனா வேறு எந்த இந்திய கிரிக்கெட் வீரரும் வைத்திராத ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த சாதனையை தன் கைவசம் வைத்துள்ளார். கிறிஸ் கெயில், மெக்கல்லம், ஜெயவர்த்தனே ஆகியோரும் உலகளவில் இந்த சாதனையை செய்துள்ளனர். அப்படி சுரேஷ் ரைனா செய்த சாதனைதான் என்ன?
2. ரன் அவுட் வகையில் ஆட்டமிழக்கப்படும் விக்கெட்டுகள் பந்து வீச்சாளர்கள் கணக்கில் சேராது. அது போல வேறு எந்த ஆட்டமிழக்கப்படும் முறைகள் பந்து வீச்சாளர்கள் கணக்கில் சேராது?
3. ஜாகிர்கான் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் என்பது அனைவருக்கும் தெரியும். அவ்வப்பொழுது நேர்த்தியாக பேட்டிங் ஆடுவதிலும் வல்லவர். எடுத்தோம் கவிழ்த்தோம் என ஆடாமல், நிலைமையை உணர்ந்து ஆடும் டெயிலெண்டர் ஆட்டக்காரர்களில் குறிப்பிடத்தக்கவர். பங்களாதேஷ் அணிக்கு எதிராக டெஸ்ட் ஆட்டம் ஒன்றில் இவரும் டெண்டுல்கரும் இணைந்து கடைசி விக்கெட்டிற்கு 133 ஓட்டங்கள் சேர்த்தது இந்திய சாதனையாக உள்ளது. டெண்டுல்கரிடமோ , கங்குலியிடமோ, சேவக்கிடமோ இல்லாத ஒரு அதிரடி பேட்டிங் சாதனையை, (In One Day Internationals) ஜாகிர்கான் தன் கைவசம் வைத்துள்ளார். அந்த சாதனை என்ன?
4. இங்கிலாந்து வீரர் பென் ஹோலியாக், ஜிம்பாப்வேயின் டிரெவர் மடாண்டோ, பங்களாதேஷின் மஞ்சுரல் இஸலாம் ரானா இவர்களுக்கு இடையிலான துயரமான ஒற்றுமை என்ன?
5. காயங்கள் காரணமாக , ஆட்டக்காரர்கள், “ரிடையர்ட் - நாட் அவுட்” வகையில் பெவிலியன் திரும்பி, பின்னர் ஆட வருவது வழக்கம். ஆனால் ரிடையர்ட்-அவுட் என தன்னைத் தானே ஆட்டமிழக்க செய்து கொண்ட முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டக்காரர் யார்? அதே டெஸ்ட் ஆட்டத்தில் இன்னொருவரும் தன்னைத் தானே ஆட்டமிழக்கசெய்து கொண்டார். அதற்கு பின்னர் யாரும் தங்களை இதுவரை ஆட்டமிழக்க செய்து கொள்ளவில்லை.
6. ஒருநாள் ஆட்டங்களில் களத்தடுப்பை இடையூறு செய்தல் (Obstructing the field), பந்தை கையால் தடுத்தல் (handled the ball) என இருவகையிலும் வெவ்வேறு ஆட்டங்களில் ஆட்டமிழந்த ஒரே ஆட்டக்காரர் யார்? இவர் ஒரு இந்திய ஆட்டக்காரர்.
விடைகள்
1. சுரேஷ் ரைனா டெஸ்ட், ஒருநாள், இருபதுக்கு இருபது என அனைத்து வகை பன்னாட்டு கிரிக்கெட் ஆட்டங்களிலும் சதம் அடித்துள்ள ஒரே இந்திய வீரர்.
2. Hit the ball twice - பந்தை இருமுறை அடித்தல், Obstructing the field - களத்தடுப்பை இடையூறு செய்தல், handled the ball - பந்தை கையால் தடுத்தல், Timed Out - நேரத்திற்கு வராமை
3. ஜாகிர்கான் , ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டம் ஒன்றில் , ஒலாங்கா வீசிய ஓவரில் 4 சிக்ஸர்கள் உட்பட 25 ஓட்டங்கள் எடுத்தது இந்திய அளவில் ஒரு சாதனையாகும். அதில் கடைசி 4 பந்துகளையும் சிக்ஸருக்கு (இடையில் ஒரு Wide பந்து) தொடர்ந்து சிக்ஸருக்கு அனுப்பினார். முரண் நகையாக, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஒரு பந்து, ஒரு விக்கெட் மீதமிருக்கும் நிலையில், 50 வது ஓவரில் ஓட்டங்களை வாரி வழங்கிய ஒலாங்கா வெற்றி ஓட்டத்தை எடுத்து ஜிம்பாப்வே அணிக்கு வெற்றித் தேடித்தந்தார்.
வட இந்திய இந்தித் தொலைக்காட்சிகளில் ‘உண்மை நிகழ்ச்சிகளில்' அடிக்கடித் தலைக்காட்டிக்கொண்டிருக்கும் வினோத்காம்ப்ளிக்கு மற்றும் ஒரு சிக்கல். தான் சொல்லாதக் கருத்தை சொன்னதாக ஊடகங்கள் வெளியிட பல இடங்களில் மண்டகப்படிதான். அவர் அப்படி என்னதான் சொன்னார்? “சச்சின் எனக்கு இன்னும் கொஞ்சம் உதவி இருக்கலாம்” மேலும் கிரிக்கெட் வாரியம் என்னை சாதியாலும் நிறத்தாலும் ஒதுக்க ஆரம்பித்தது' எனக்கூறியதைக் கண்டு கொதிப்படைந்த வெள்ளை வட இந்திய ஊடகங்கள் வரிந்து கொண்டு ‘வில்லனாக' சித்தரிக்க 'நான் அப்படி எதுவும் சொல்லவில்லை' என புலம்பிக்கொண்டிருக்கின்றார். நல்லதொரு வீணை இப்படி தன்னாலும் பிறராலும் நலங்கெடப்போனதை வினோத் காம்ப்ளியின் ரசிகன் என்ற முறையில் மனம் வருத்தப்படுகிறது.
சென்ற வருடம் தமிழ்மணம் நட்சத்திரமாக இருந்த பொழுது வினோத் காம்ப்ளியைப் பற்றி இக்கட்டுரையை இங்கு நினைவுகூர்கின்றேன். கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும்.
ஸ்காண்டிநேவியா நாடுகளில் பிரபலமான இந்த ஃப்ளோர்ஹாக்கி ஆட்டம் அணிக்கு 6 பேர் வீதம் மொத்தம் 60 நிமிடங்களில் மூன்று இடைவெளிகளுடன் ஆடப்படுகிறது. குளிர்காலங்களில் ஐஸ் ஹாக்கிக்கு இணையாக உள்ளரங்குகளில் பெரிய ரசிகர் வட்டாரத்துடன் ரசிக்கப்படும் இந்த ஆட்டம் 70 களுக்குப்பின் புகழ் பெற ஆரம்பித்தது. இலகுவான மட்டைகளுடனும் துளைகள் நிறைந்த பந்துடன் ஆடப்படும் இந்த ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் கிடையாது.
சிறு வயது முதல் நான் ஏதேனும் பெரிய அரங்கங்களில் விளையாட்டுப்போட்டிகளில் பங்கு பெற வேண்டும் அதில் வெற்றிக்கு நான் காரணமாக இருக்கவேண்டும் என யோசித்துப்பார்ப்பது உண்டு. சிறுவயதில் தெருக்களில் கிரிக்கெட் விளையாடியதுண்டு. எனது சகோதரர்களின் தயவால் ஒரு 10 பந்துகள் மட்டையடிக்க வாய்ப்புக்கிடைக்கும். உட்கார்ந்து கொண்டு ”லாலிபாப்” போல் அடிக்க ஏதுவாக சுழற்பந்து என்று சொல்லிக்கொண்டு பந்து வீசுவேன். அதன் பின் தியாகராசர் பொறியியற் கல்லூரிக்காலங்களில் வெள்ளொளிப்போட்டியில் ஆடியதுண்டு. அதன் பின் ஏழெட்டு வருடம் எந்த விளையாட்டிலும் கவனம் செலுத்த நேரமில்லாமல் போனது. சுவீடனுக்கு மேற்படிப்பு படிக்க வந்த பின் எனது சமூக வாழ்க்கையை அதிகரிக்க ஏதாவது விளையாடலாம் என எனதுக் கல்லூரியின் மாணவர்களுக்கான கலந்தாய்வாளரை அணுகிய போது அவர் ஃப்ளோர்பால் ஆட்டத்தில் நான் கோல்கீப்பராக இருக்க வாய்ப்பு உண்டு என எனது ஊரில் இருக்கும் ஃப்ளோர்பால் குழுமத்திற்கு அனுப்பினார். ஃப்ளோர்பால் ஆட்டத்தில் கோல்கீப்பராக இருப்பவர் நிற்க வேண்டியது இல்லை என்பதால் எனக்கும் அது வசதியாகப்போயிற்று.
இலகுவான பிளாஸ்டிக் பந்து என்றாலும் கோல் கம்பங்களுக்குள் வேகமாக அடிக்கப்படும்போது காயங்களில் இருந்து தப்பிக்க கவசங்களும் வலிதாங்கும் உடைகளும் உண்டு.. மாற்றுத்திறன் உடையவர்களுக்காக மால்மோ என்ற நகரத்தில் நடைபெற்ற மால்மோ-ஓபன் என்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ஃப்ளோர்பால் ஆட்டங்களில் எங்களது அணியும் பங்கு பெற்றது. தொடர்ந்து புதன்கிழமைகள் தோறும் நாங்கள் கடும்பயிற்சி எடுத்துக்கொண்டாலும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியைப்போல போகும் இடங்களிலெல்லாம் உள்ளூர் போட்டிகளிலும் நாங்கள் தர்மசாத்து வாங்குவோம். கடைசிவரை போராடுங்கள் தோல்விப்பற்றி கவலை வேண்டாம் என ஓவ்வொரு முறையும் எங்களது பயிற்சியாளர் சொல்லி அனுப்புவார். எதையெல்லாம் தவிர்த்தால் தோல்வி வித்தியாசம் குறையும் என்று சொல்லி அனுப்புவாரோ அந்த அடிப்படைத் தவறுகளைச் சரியாகச் செய்து 15-0, 19-1, 21-1 5-2 10-1 என சுற்று ஆட்டங்களில் படுதோல்வியைத் தழுவி எங்களது பயிற்சியாளர்கள் முன் அசடு வழிந்தோம்.
கோல்கீப்பர் சேம்-சைட் கோல் போட்ட பெருமையை லுண்ட் என்ற நகர அணியுடன் விளையாடும்போது நான் பெற்றேன். கோல்கீப்பர் பந்தை தடுத்தவுடன் இரு முனைகளிலும் இருக்கும் தனது அணி ஆட்டக்காரரிடம் 5 வினாடிகளுக்குள் எறிய வேண்டும். அவசரத்தில் கைத்தவறி கோல் கம்பங்களுக்குள் எறிந்து எதிர் அணியின் எண்ணிக்கையை 20 ல் இருந்து 21 ஆக்கினேன்.தொலைக்காட்சிப்பெட்டியின் முன்னால் அமர்ந்து கொண்டு கிரிக்கெட் போட்டிகளின் போது “டேய் அல்வா மாதிரி வந்த கேட்சை வுட்டாண்டா, இவனெல்லாம் டீம்ல வச்சுக்கிட்டு இருக்கிறதவிட தூக்கிடலாம்” என்று வர்ணனைக் கொடுத்தது எல்லாம் எளிதான தடுப்புகளை எல்லாம் கோட்டை விட்டபோது நினைவுக்கு வந்து சென்றது.
மற்ற அணிகளுக்கு இடையிலானப்போட்டிகளை வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தபோது மிகப்பெரும் வித்தியாசத்தில் வெற்றிப்பெற போகின்ற அணியின் கோல் கீப்பர் ஒரு கோலை தடுக்க முடியாமல் போனதால் மிகவருத்தம் அடைந்து தனது தலைக்கவசத்தை விட்டெறிந்தார். ஒரு கோலுக்கே அவர் தலைக்கவசத்தை வீசி எறியும்போது 50 கோலுக்கு மேல் விட்டு அரைசதம் அடித்த நான் எனது சக்கர நாற்காலியை அல்லவா விட்டெறிந்து இருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.
கடைசி இரண்டு இடங்களுக்கானப் போட்டியில் வெற்றி பெற்றால் 11 வது இடத்தையாவது பெறலாம் என கடைசி ஆட்டத்தில் வெல்ல கடும் பயிற்சி எடுத்துக்கொண்டு 6- 1 என்றக் கணக்கில் வெற்றி பெற்றோம். கிட்டத்தட்ட 10 க்கு மேற்பட்ட கோல்களைத் தடுத்து பயிற்சியாளரின் பாராட்டைப்பெற்ற போது கொஞ்சம் மனநிறைவாக இருந்தது.
ஊருக்குத் திரும்பும்பொழுது பயிற்சியாளரிடம் நான் செய்த அடிப்படைத்தவறுகளினால் சில பல வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளாமல் படுதோல்வி அடைய நேரிட்டது என வருத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்த பொழுது “விளையாட்டுப்போட்டிகளின் முக்கிய நோக்கமே பங்கேற்பதில் தான் இருக்கின்றது, உன்னுடையப் பங்கேற்பு மற்றவர்களை உற்சாகப்படுத்தியது, அதுதான் நம் அணியின் வெற்றி” என்ற போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.