I am Single, தனித்து இருக்கின்றேன் அவளின்
நினைவுகளோடு.

'It is easy to understand why a person is bad – the reasons are obvious. But it is very difficult to understand why a person is good. There seems to be no reason at all for being good. Good simply is' --- She was Good to me


Tuesday, July 07, 2009

Floorball - Floor Hockey - Innebandy - சுவீடன் அனுபவங்கள்

ஸ்காண்டிநேவியா நாடுகளில் பிரபலமான இந்த ஃப்ளோர்ஹாக்கி ஆட்டம் அணிக்கு 6 பேர் வீதம் மொத்தம் 60 நிமிடங்களில் மூன்று இடைவெளிகளுடன் ஆடப்படுகிறது. குளிர்காலங்களில் ஐஸ் ஹாக்கிக்கு இணையாக உள்ளரங்குகளில் பெரிய ரசிகர் வட்டாரத்துடன் ரசிக்கப்படும் இந்த ஆட்டம் 70 களுக்குப்பின் புகழ் பெற ஆரம்பித்தது. இலகுவான மட்டைகளுடனும் துளைகள் நிறைந்த பந்துடன் ஆடப்படும் இந்த ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் கிடையாது.

சிறு வயது முதல் நான் ஏதேனும் பெரிய அரங்கங்களில் விளையாட்டுப்போட்டிகளில் பங்கு பெற வேண்டும் அதில் வெற்றிக்கு நான் காரணமாக இருக்கவேண்டும் என யோசித்துப்பார்ப்பது உண்டு. சிறுவயதில் தெருக்களில் கிரிக்கெட் விளையாடியதுண்டு. எனது சகோதரர்களின் தயவால் ஒரு 10 பந்துகள் மட்டையடிக்க வாய்ப்புக்கிடைக்கும். உட்கார்ந்து கொண்டு ”லாலிபாப்” போல் அடிக்க ஏதுவாக சுழற்பந்து என்று சொல்லிக்கொண்டு பந்து வீசுவேன். அதன் பின் தியாகராசர் பொறியியற் கல்லூரிக்காலங்களில் வெள்ளொளிப்போட்டியில் ஆடியதுண்டு. அதன் பின் ஏழெட்டு வருடம் எந்த விளையாட்டிலும் கவனம் செலுத்த நேரமில்லாமல் போனது. சுவீடனுக்கு மேற்படிப்பு படிக்க வந்த பின் எனது சமூக வாழ்க்கையை அதிகரிக்க ஏதாவது விளையாடலாம் என எனதுக் கல்லூரியின் மாணவர்களுக்கான கலந்தாய்வாளரை அணுகிய போது அவர் ஃப்ளோர்பால் ஆட்டத்தில் நான் கோல்கீப்பராக இருக்க வாய்ப்பு உண்டு என எனது ஊரில் இருக்கும் ஃப்ளோர்பால் குழுமத்திற்கு அனுப்பினார். ஃப்ளோர்பால் ஆட்டத்தில் கோல்கீப்பராக இருப்பவர் நிற்க வேண்டியது இல்லை என்பதால் எனக்கும் அது வசதியாகப்போயிற்று.




இலகுவான பிளாஸ்டிக் பந்து என்றாலும் கோல் கம்பங்களுக்குள் வேகமாக அடிக்கப்படும்போது காயங்களில் இருந்து தப்பிக்க கவசங்களும் வலிதாங்கும் உடைகளும் உண்டு.. மாற்றுத்திறன் உடையவர்களுக்காக மால்மோ என்ற நகரத்தில் நடைபெற்ற மால்மோ-ஓபன் என்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ஃப்ளோர்பால் ஆட்டங்களில் எங்களது அணியும் பங்கு பெற்றது. தொடர்ந்து புதன்கிழமைகள் தோறும் நாங்கள் கடும்பயிற்சி எடுத்துக்கொண்டாலும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியைப்போல போகும் இடங்களிலெல்லாம் உள்ளூர் போட்டிகளிலும் நாங்கள் தர்மசாத்து வாங்குவோம். கடைசிவரை போராடுங்கள் தோல்விப்பற்றி கவலை வேண்டாம் என ஓவ்வொரு முறையும் எங்களது பயிற்சியாளர் சொல்லி அனுப்புவார். எதையெல்லாம் தவிர்த்தால் தோல்வி வித்தியாசம் குறையும் என்று சொல்லி அனுப்புவாரோ அந்த அடிப்படைத் தவறுகளைச் சரியாகச் செய்து 15-0, 19-1, 21-1 5-2 10-1 என சுற்று ஆட்டங்களில் படுதோல்வியைத் தழுவி எங்களது பயிற்சியாளர்கள் முன் அசடு வழிந்தோம்.





கோல்கீப்பர் சேம்-சைட் கோல் போட்ட பெருமையை லுண்ட் என்ற நகர அணியுடன் விளையாடும்போது நான் பெற்றேன். கோல்கீப்பர் பந்தை தடுத்தவுடன் இரு முனைகளிலும் இருக்கும் தனது அணி ஆட்டக்காரரிடம் 5 வினாடிகளுக்குள் எறிய வேண்டும். அவசரத்தில் கைத்தவறி கோல் கம்பங்களுக்குள் எறிந்து எதிர் அணியின் எண்ணிக்கையை 20 ல் இருந்து 21 ஆக்கினேன்.தொலைக்காட்சிப்பெட்டியின் முன்னால் அமர்ந்து கொண்டு கிரிக்கெட் போட்டிகளின் போது “டேய் அல்வா மாதிரி வந்த கேட்சை வுட்டாண்டா, இவனெல்லாம் டீம்ல வச்சுக்கிட்டு இருக்கிறதவிட தூக்கிடலாம்” என்று வர்ணனைக் கொடுத்தது எல்லாம் எளிதான தடுப்புகளை எல்லாம் கோட்டை விட்டபோது நினைவுக்கு வந்து சென்றது.



மற்ற அணிகளுக்கு இடையிலானப்போட்டிகளை வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தபோது மிகப்பெரும் வித்தியாசத்தில் வெற்றிப்பெற போகின்ற அணியின் கோல் கீப்பர் ஒரு கோலை தடுக்க முடியாமல் போனதால் மிகவருத்தம் அடைந்து தனது தலைக்கவசத்தை விட்டெறிந்தார். ஒரு கோலுக்கே அவர் தலைக்கவசத்தை வீசி எறியும்போது 50 கோலுக்கு மேல் விட்டு அரைசதம் அடித்த நான் எனது சக்கர நாற்காலியை அல்லவா விட்டெறிந்து இருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.




கடைசி இரண்டு இடங்களுக்கானப் போட்டியில் வெற்றி பெற்றால் 11 வது இடத்தையாவது பெறலாம் என கடைசி ஆட்டத்தில் வெல்ல கடும் பயிற்சி எடுத்துக்கொண்டு 6- 1 என்றக் கணக்கில் வெற்றி பெற்றோம். கிட்டத்தட்ட 10 க்கு மேற்பட்ட கோல்களைத் தடுத்து பயிற்சியாளரின் பாராட்டைப்பெற்ற போது கொஞ்சம் மனநிறைவாக இருந்தது.





ஊருக்குத் திரும்பும்பொழுது பயிற்சியாளரிடம் நான் செய்த அடிப்படைத்தவறுகளினால் சில பல வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளாமல் படுதோல்வி அடைய நேரிட்டது என வருத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்த பொழுது “விளையாட்டுப்போட்டிகளின் முக்கிய நோக்கமே பங்கேற்பதில் தான் இருக்கின்றது, உன்னுடையப் பங்கேற்பு மற்றவர்களை உற்சாகப்படுத்தியது, அதுதான் நம் அணியின் வெற்றி” என்ற போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

8 பின்னூட்டங்கள்/Comments:

said...

Great Show!! Congratulations!! I admire your efforts.

said...

Thank You So much Sir.

said...

தம்பீ..

உனது உள்ளத்தை இந்த உற்சாகமே மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும்..

இந்தச் சூழலிலும் நீ செய்திருக்கும் இந்தச் செயல் மிகப் பெரியது..

என்னைப் போன்ற சோம்பேறிகளுக்கு நாக்அவுட் கொடுத்திருக்கிறாய்..!

வாழ்க வளமுடன்..!

said...

ம்ம்ம்ம்ம்...கலக்குங்க!!!!பூங்கொத்து!!!

said...

keep it man!! great going! all the best! rock it on!

said...

கலக்குங்க தலைவா... :))))))))))

முடிந்தால், வரும் செப்டம்பரில் அங்கு வருகிறேன்... எனக்கு இந்த விளையாட்டினை சொல்லிக் கொடுங்கள் !!!!

said...

இந்த புகைப்படங்கள எல்லாம் ஒங்க ஃபேஸ் புக்ல பாத்துட்டேன். படிக்கப் போன நீங்க படிப்புல மட்டுமில்லாம இந்த மாதிரி விளையாட்டுகள்லயும் கலந்துக்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. வாழ்த்துக்கள்.

said...

ஹைய்.. தல,

கலக்குறீங்க போங்க.. போட்டோல அம்சமா இருக்கீங்க..

வெற்றி தோல்வியெல்லாம் வீரனுக்கு ஜகசமுன்னு நம்ம தோளை நாம தானே தலைவா தட்டிக்கணும் :)))

என்ன சொல்றீங்க..