Showing posts with label திரைப்பார்வை. Show all posts
Showing posts with label திரைப்பார்வை. Show all posts

Sunday, May 11, 2014

யாமிருக்க பயமே - திரைப்பார்வை

பேயால் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் என்ன ஆவார்கள்? என்ற கேள்வி பேய்ப்படங்களை, முகத்தை மறைத்துக் கொண்டு விரலிடுக்கில் பார்க்கும்பொழுது எல்லாம் தோன்றும். கொல்லப்பட்டவர்கள் பேயாக வந்து , கெட்டப் பேயை அழித்தால் என்ன என்று கூட நினைப்பேன்? ராம்கோபால் வர்மாவின் ஒரு பேய்ப்படத்தில், தன் பிணத்தைப் பார்த்து அழுதுக்கொண்டிருக்கும் ஒரு பேயை , கொன்ற பேய் ஆறுதல் சொல்லி அழைத்துச் செல்லும்.
மங்காத்தா படத்தில் 'திருஷ்டிக்கு" வரும் திரிஷாவைத் தவிர எல்லோரும் ஒன்று கெட்டவர்கள் அல்லது ரொம்பக் கெட்டவர்கள். வில்ல நாயகனாக வரும் அஜீத்திற்கு எந்தவிதமான சென்டிமென்ட் பிளாஷ்பேக்கும் வைக்காமல், கெட்டவன்னா கெட்டவன்தான் என்றிருக்கும்.
"யாமிருக்க பயமே"  திரைப்படத்திலும் பேய் என்றால் பேய். கொடூரமான பேய்.  முனி, காஞ்சனா போன்ற நகைச்சுவைப் பேய்ப்படங்களில் வரும் பேய்களைப் போல இதில் வரும் பேய்க்கு சென்டிமென்ட் பின்கதை எல்லாம் கிடையாது. நல்ல நோக்கத்திற்கான பழிவாங்கல் எல்லாம் கிடையாது. பயங்கரமான பேயினால் கொல்லப்பட்டவர்கள் பேயானாலும், இந்த பவர்புல் பேயை ஒன்றும் செய்யமுடியாது என்பதை எவ்வளவு நகைச்சுவையுடன் சொல்லமுடியுமோ அவ்வளவு சொல்லியிருக்கின்றார்கள். 

ஒரு திகில் முடிச்சை அவிழ்க்கையில் ஒன்று அதிர்ச்சி இருக்கும் அல்லது உப்புசப்பில்லாத ஆன்டி -கிளைமேக்ஸாக இருக்கும். ஆனால், இதில் இணை-கதாநாயகன் கருணாகரனின் மறுப்பக்கம் தெரியவரும்பொழுது பயத்தை மறந்து வெடித்துச் சிரிப்பீர்கள்.
எவ்வளவு சுமாராக காட்சியமைக்கப்பட்டிருந்தாலும் , கொலைக்காட்சிகள் அனுதாபத்தைத் தரும். ஆனால் இதில் வரும் கொலைக்காட்சிகள் குரூரத்தை மீறி உங்களை சிரிக்க வைக்கும்.
படத்தில் , "பேய் இருக்கு ஆனால் இல்லை" என்று ஏமாற்றவெல்லாம் இல்லை. பேய் பங்களாதான். ஒன்றிற்குப் பல பேய்கள் இருக்கின்றன. மங்காத்தா படத்தில் வலியவன் வெல்வான் என்பதைப்போல், இதிலும் பேய்தான் ஜெயிக்கின்றது. 'தர்மம் தானே' வெல்லவேண்டும் என்றெல்லாம் உங்களை யோசிக்க வைக்காமல் சிரித்துக் கொண்டே , வெளியே அனுப்பியதில்தான் இயக்குநரின் வெற்றி இருக்கின்றது.
அளவான கவர்ச்சி, அடபோடவைக்கும் அடல்ட் காமெடி, உண்மையிலேயேத் திகிலூட்டும் இரண்டாம் பாதி, கடைசிவரை விடாது கருப்பாய் இருக்கும் நகைச்சுவை ஆகியன உங்கள் நேரத்திற்கும் காசிற்கும் பொழுதுபோக்காய் ஈடு செய்யும்.
யாமிருக்க பயமே - பயந்து பயந்து சிரிக்க !!
திரைப்பட முன்னோட்டம் - https://www.youtube.com/watch?v=7utXPKENd-s

Sunday, March 16, 2014

First Spaceship on Venus - அணு உலை எதிர்ப்பாளர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய திரைப்படம்


First Spaceship on Venus, அணுசக்தி பேரழிவான ஒன்று என்ற கருத்தைத் தாங்கி வந்திருந்த படம் இது. 1960 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், முன்னாள் சோவியத் யூனியன் நண்பர்களான பழைய கிழக்கு ஜெர்மனி - போலாந்து கூட்டுத் தயாரிப்பாக வெளிவந்தது. சோவியத் சம்பந்தபட்ட / அமெரிக்க எதிர்ப்பு சமாச்சாரங்கள் நீக்கப்பட்டு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு அமெரிக்காவிலும் வெளியானது.

கோபி பாலைவனத்தில் கண்டெடுக்கப்படும் ஓர் அன்னியமான பொருள், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சைபீரியாவின் மேல் வெடித்த விண்கலத்தின் துண்டு என அறியப்படுகின்றது. அதில் சூசகமாகப்பொதிந்து இருக்கும் ஆனால் பாதி மட்டுமே கண்டுபிடிக்க முடிந்த எலக்ட்ரானிக் தகவலின் வழியாக வெள்ளி கோளில் உயிரினங்கள் இருப்பதாக அறிகின்றனர்.

சோவியத் யூனியன் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப தயார் செய்து வைத்திருந்த விண்கலம், வெள்ளிக்கு அனுப்ப முடிவு செய்யப்படுகின்றது. வெள்ளி கிரகத்தை அடையும் முன்னர், விண்கலத்தில் இருக்கும் இந்திய கணிதப்பேராசிரியர் , அன்னியமான அந்த காஸ்மிக் பொருளில் பொதிந்து இருக்கும் மிஞ்சிய தகவலையும் கண்டறிகின்றார். வெள்ளிகிரக வாசிகள் , பூமியை அணுஆயுதங்கள் தாங்கிய விண்கலம் கொண்டு தாக்க முடிவு செய்துள்ளனர் என்பதுதான் அது.
வெள்ளி கிரகத்தை அடையும் விண்கலம், அங்கு உயிரினங்கள் யாருமில்லாதது கண்டு வியப்படைகின்றனர். பூமியைத் தாக்க அனுப்பப்படவேண்டிய அணு ஆயுதங்கள் அடங்கிய விண்கலத்தையும் கண்டுபிடிக்கின்றனர். முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்கின்றது. வெள்ளி வாழ் மக்கள் , அக்கிரகத்தில் ஏற்பட்ட அணு ஆயுதப்போர்கள், அணு உலை விபத்துகள் ஆகியவற்றினால் ஒட்டுமொத்தமாக ஏற்கனவே அழிந்துப்போய் விட்டனர். ஆனால் அவர்கள் பூமியைத் தாக்க உருவாக்கிய அணு ஆயுத கலம் , சில பூச்சி வடிவ எந்திரங்கள் , மின்சார கட்ட்மானங்கள் மட்டும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றன. கதிரியக்க வீச்சு, எதிர்மறை ஈர்ப்பு விசை இவற்றில் இருந்து விஞ்ஞானிகள் எப்படி தப்பித்து வெள்ளிக்கிரகத்தில் இருந்து மீண்டும் பூமிக்கு திரும்புகின்றனர் என்பதுதான் கிளைமேக்ஸ்.

சோவியத் காலத்தில் இந்தியா நண்பன் என்பதால் கதையில் இந்திய விஞ்ஞானி பாத்திரம் முக்கியமானதாக இருக்கின்றது.

படத்தில் வரும் இந்திய ஆண் கதாபாத்திரங்கள் நேரு குல்லா அதாவது தற்கால ஆம் ஆத்மி குல்லா அணிந்திருக்கின்றனர். தமிழ்நாட்டில், முக்கிய அணு உலை எதிர்ப்பாளர்கள் கூட ஆம் ஆத்மி குல்லாகாரர்கள்தான் 

ஹிரோசிமா, நாகாசகி அழிவுப்பற்றிய குறிப்புகள் மொழியாக்கம் செய்யப்பட்ட ஆங்கிலப்பதிப்பில் நீக்கப்பட்டிருக்கின்றன.

அணுசக்தி/உலைகள் எதிர்ப்புக்குழுவினர் , இப்படத்தின் உரிமம் வாங்கி தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு தங்களது பரப்புரைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

படத்தின் சுவாரசியத்திற்காக , நீங்கள் அணுசக்தி ஆதரவாளராக இருந்தால் கூட இப்படத்தை நிச்சயம் பார்க்கலாம். நான் அப்படித்தான் பார்த்தேன்.

படத்திற்கான சுட்டி https://www.youtube.com/watch?v=n7V9QbF8QxI#aid=P-0hfh2pGwU

Monday, November 25, 2013

இரண்டாம் உலகம் - திரைப்படம் - சிலக்குறிப்புகள் - எழுதியவர் மண்டப எழுத்தாளர் கிளிமூக்கு அரக்கன்


சிலப்பள்ளிகளில் நூற்றுக்கு எழுபது மதிப்பெண்கள் எடுப்பவன் தான் முதல் மாணவனாக இருப்பான். அவனுக்கு அடுத்தபடியாக எடுத்தவன் மதிப்பெண்களைப் பார்த்தால் வெறும் 25 அல்லது முப்பது இருக்கும். பள்ளியின் நிலைமை , மாணவனின் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் , முதல் மாணவனை , வேறு பள்ளியில் 95 சதவீதம் எடுக்கும் மாணவனுடன் ஒப்பிட்டு , அடி அடி என அடித்தால் என்ன செய்வது... செல்வராகவனும் அந்த எழுபது சதவீத முதல் மதிப்பெண் மாணவனைப் போன்றவர்தான். தமிழ்த் திரைப்பட சூழல், அதன் வர்த்தகம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு , இரண்டாம் உலகம் படத்தை மதிப்பீடு செய்ய வேண்டும். நம்மவர்களுக்கு பிரச்சினையே, மனைவியிடம் முன்னாள் காதலியைத் தேடுவது, ரோகித் சர்மாவிடம் டெண்டுல்கரைப் பார்ப்பது, ஆங்கிலப் படத்தை தமிழில் தேடுவது என்பதுதான். முதல் உலகின் வணிகப்படங்களின் தரத்தை, மூன்றாம் உலகத்தின் திரைப்படத்தில் தேட வேண்டிய அவசியம் இல்லை. 

சிலப் படங்களை ஆற அமர உட்கார்ந்து ரசித்துப் பார்க்க வேண்டும். இரண்டு மணி நேரப் படம் , இருபது நிமிடம் போல் கடக்க வேண்டும் என நினைப்பவர்களால் , இரண்டாம் உலகத்தை ரசிக்க முடியாது என்பதல்ல, அவர்களுக்கு அத்தனை நேரம் மற்றும் பொறுமை இருக்காது. இழுவை, புரியவில்லை என கமர்சியல் விமர்சகர்களால் கிழிக்கப்பட்ட அன்பே சிவம் , மும்பை எக்ஸ்பிரஸ் போன்று காலம் கடந்து நிற்கும் சிலப் படங்களின் வரிசையில் இரண்டாம் உலகம் சேரும். 

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியான பொழுது , சோழர்களைக் காட்டுமிராண்டிகளாக காட்டுவதா என கொதித்து எழுந்த தமிழ்த் தேசியவாதிகள் , இரண்டாம் உலகத்தில் எங்கும் தமிழ் இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடையலாம். நமக்கு வீரர்களாக தெரிந்த , சோழர்கள் காட்டுமிராண்டிகளா என்பதை அக்கால மலேசியத் தீபகற்ப மக்களைக் கேட்டால் தான் தெரியும். சோழர்களை மிகைப்படுத்தல் இன்றி , புனைவில் காட்டியமைக்காகவே ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை எனக்குப் பிடிக்கும். ஆயிரத்தில் ஒருவனைப் பிடித்தவர்களுக்கு கண்டிப்பாக இரண்டாம் உலகம் பிடிக்கும். 

இரண்டாம் உலகத்தில் எங்கும் தமிழ் என்பதை வழமைப்போல மென்-இந்துத்வா 'பதிப்பக இணையதளம்' ஒன்று ஆரிய கிண்டல் அடித்து இருந்ததைப் படித்தது தான் இந்தத் திரைப்படத்தைப் பார்க்க தூண்டு கோலாக இருந்தது. சிலப் படங்களை யார் எதிர்க்கின்றார்கள் என்பதை வைத்துதான் பார்க்க வேண்டும். 

பின்னிப்பிணைந்து இருக்கும் இரண்டு உலகங்கள். இரண்டிலும் ஆரியா அனுஷ்கா . ஓர் உலகின் காதல் தோல்வி எப்படி மற்றொரு உலகத்தில் மாற்றம் கொண்டு வருகின்றது என்பதுதான் கதையின் அடி நாதம். செல்வராகவனின் முந்தையப் படங்களை விட , இந்தப்படத்தில் மென்மை அதிகம். 

படம் நெடுக விரவிக் கிடக்கும் நகைமுரண்கள் இரண்டாம் உலகத்தை சுவாரசியம் ஆக்குகின்றது. பெண் தெய்வத்தை வழிபடும் சமூகத்தில், பெண் அடிமைத்தனம். 

இவ்வுலகில் மட்டுமல்ல, இரண்டாம் உலகிலும் கடவுளைக் காப்பாற்றுபவன் மனிதன், அவனுக்கு வீரமும் ஈரமும் ஊட்டுவது காதல் மட்டுமே .. அதுவே மனித நாகரிகத்தின் மையப்புள்ளி

"அந்தக் கடவுளைத் தவிர அத்தனைபேரையும் கொல்லுங்கடா" - நாத்திகம் ஆத்திகம் என எப்படி பார்த்தாலும் இந்த வசனம் ஆழ்ந்த பொருள் தரும் வசனம். 

இரு வேறு துருவ ஆளுமைகளாக ஆரியா அனுஷ்கா கதாபாத்திரங்கள். 

இரண்டாம் உலகம் எனக் காட்டப்படும் ஜார்ஜியா , உண்மையில் சமகால வரலாற்றில் இரண்டாம் உலக நாடுகளில் ஒன்று. ( மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் முதல் உலகம், பழைய சோவியத் தலைமையிலான பொதுவுடைமை நாடுகள் இரண்டாம் உலகம், இந்தியா போன்ற வளரும் நாடுகள் மூன்றாம் உலகம் ) 

ஆடல் பாடல் கவர்ச்சிக்கு வில்லத்தனத்திற்கு மட்டும் வெளிநாட்டு நடிகர்களைப் பயன்படுத்தும் இந்தியத் திரைப்படங்களில் , விதிவிலக்காக பெரும்பகுதியான படத்தில் , வெளிநாட்டு நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் அனேகமாக இரண்டாம் உலகமாகத்தான் இருக்கும். 

ஒரு சிலத் தமிழ்த் தேசிய இயக்குநர்கள் போல தனித் தமிழ் வசனங்கள் ஆன திரைப்படம் எனத் தம்பட்டம் அடிக்காமல், இயல்பான தமிழ் வசனங்களால் பெரும்பாலும் இரண்டாம் உலகம் நிரம்பி இருப்பது பாராட்டப்பட வேண்டியது. கலகமான விசயங்களை கூட்டம் கூட்டி விளம்பரப்படுத்தாமல் , நாத்திகமோ , உறவுச் சிக்கல்களோ போறப் போக்கில் சொல்லிவிட்டுப் போவதனால் தான் செல்வராகவன் தொடர்ந்து கவனிக்கப்படுகின்றார். 

ஓர் ஊரில் மிகப்பெரிய ஓவியன் இருந்தான். அவனது ஓவியங்கள் அகில உலகப் பிரபலம். மில்லியன் பவுண்ட் கணக்கில் அவனது ஓவியங்கள் விலை போகும். ஆளுமைகளின் வீட்டில் எல்லாம் அவனது ஓவியம் தான் வரவேற்கும். ஆனால் அவனது அம்மாவின் வீட்டில், ஓவியன் பதின்மங்களில் வரைந்த ஓவியம் ஒன்று மாட்டப்பட்டு இருக்கும். அவனது அம்மா வீட்டில் , ஏன் ஒவியனது சமகால ஓவியம் மாட்டப்படமால் , ஒப்பீட்டளவில் சுமாராக உள்ள ஓவியனது ஆரம்ப கால ஓவியம் இருக்கின்றது என அனைவருக்கும் வியப்பு. அவனது அம்மாவின் பதில், " இன்றைய மதிப்பில்லா ஓவியங்களின் ஆரம்ப விதை , அந்த ஓவியமே .. அது பாராட்டப்பட்டதனாலேயே இன்றைக்கு இவ்வளவு ஓவியங்கள் கிடைத்துள்ளன. என்னளவில் எனது மகனது சிறந்த ஓவியம் அவனது இந்த பழைய ஓவியமே "

செல்வராகவனும் ஓர் ஓவியனே ... ஓவியனின் அம்மாவைப்போல இன்று தோள் தட்டிப் பாராட்டுவோம். ஆளுமையும் வயதும் திமிரும் இந்த ஓவியனுக்கு இருக்கின்றன, இவை அனைத்தும் தொடக்கமே !! 

குழந்தைகளை மட்டுமல்ல, திரைப்படங்களையும் 'சமமற்ற' வைகளுடன் ஒப்பிடக் கூடாது. தமிழ் டப்பிங்கில் ஆங்கிலப் படங்களைப் பார்த்துவிட்டு, ஐ எம் டி பி யில் குறிப்புகள் படித்து விட்டு, விக்கிப்பிடியாவில் இருந்து மொழிப் பெயர்த்து விட்டு உலக சினிமா பேசுபவர்களைப் புறந்தள்ளி விட்டு , இரண்டாம் உலகத்தைப் பாருங்கள். எனக்குப் பிடித்து இருந்ததைப் போல உங்களுக்கும் பிடித்து இருக்கும். ஒரு வேளை பிடிக்காவிடினும் கவலைப் படாதீர்கள். சில ஆண்டுகள் கழித்துப் பிடிக்கும். வாழ்க்கையில் நிறைய விசயங்கள் ஒத்திப் போடப்பட்டே ரசிக்கப்படுகின்றன.

Friday, November 15, 2013

ஒளி - மலேசிய தமிழ்த் திரைப்படம் - திரைப்பார்வை

நேற்று மாலை முழுவதும் ஏலியன்கள் அமெரிக்காவிற்கு மட்டும் வருகின்றன. தமிழ்ப் பேசும் பகுதிகளுக்கு எல்லாம் வாராதா என்பதை ஒரு சிறுகதை கருவிற்காக யோசித்துக் கொண்டு சோம்பேறியாக இருந்த பொழுது படம் பார்க்க நினைத்தேன்.  சோம்பித் திளைக்கும் பொழுதுகளை சுவாரசியப்படுத்த பிரபலம் ஆகாத , இதுவரை பெயர் அறியாத திரைப்படங்களைப் பார்ப்பதுண்டு. சில சமயங்களில் அப்படிப் பார்க்கப்படும் , அறியப்படாத படங்கள் எதிர்பார்ப்புகளையும் விஞ்சி நன்றாக இருந்துவிடுவதும் உண்டு.  'ஒளி' மலேசியத் தமிழ்த் திரைப்படம் என்ற அடைமொழியுடன் ஓர் இணையத் தளத்தில் புதுவரவுகளில் ஒன்றாக இருந்தது.  மலேசியா தயாரிப்பு  என்பதும் முகப்புப் படமும் ஈர்த்ததால் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன்.



தமிழ்நாட்டு சினிமா, தொலைக்காட்சி மட்டும் பார்ப்பவன் என்பதால்  படத்தில் நடித்து இருந்தவர்கள் அனைவரும் எனக்கு புதிய முகங்களாகவே இருந்தனர்.  மலேசியத் தமிழர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள் ஆக இருக்கலாம்.  திருமணம் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லா தம்பதியினர் , குழந்தை இன்மைக்காக வருத்தப்படும் நாயகியின் பெற்றோர் என படம் ஆரம்பிக்கின்றது.   புவியியல் பொறியியலாளர் ஆன நாயகன் (சசீதரன் ) பணியின் பொழுது  சுரங்கத்தில் தவறி விழுகின்றார். மயக்கமடையும் அவர், கனவுகளில் வருவதைப் போல ஓர் அமானுஷ்ய உலகத்திற்கு கூட்டி செல்லப்படுவதைப் போன்ற ஓர் அனுபவம் கிட்டுகின்றது.  மயக்கம் ஒரு நிமிடத்தில் தெளிந்தாலும் , நாயகனுக்கு ஏதோ நீண்ட நேரம் வேறு ஓர் உலகில் சஞ்ச்சரித்ததைப் போன்ற உணர்வு.  நாயகி அவதாரம் என்ற தலைப்பில் ஆன புத்தகத்தை தேடிக்கொண்டு இருக்கையில் , நூல் நிலையத்தில் முன்னறிமுகம் இல்லா ஒருவர் அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்து நாயகி இடம்   கொடுக்கின்றார்.

அன்றிரவு படுக்கையில் நாயகியுடன் காதல் கொள்ளும் நாயகனுக்கு நீண்ட நேரம் இன்பத்தில் இருந்ததைப் போன்ற உணர்வு.  நாயகி வழமையான நேரம் தான் எடுத்துக் கொண்டான் எனச் சொல்லுகின்றாள். தொடர்ந்து வீட்டில் அமானுஷ்ய பிரசன்னம் இருப்பதைப் போல நாயகன் உணர்கின்றான்.  அடுத்த சில நாட்களில் , நாயகிக்கு புத்தகம் கொடுத்தவர் கொல்லப்பட , அவரின் கையில் இருந்து நாயகியின் படத்தை போலிஸ் கைப்பற்றுகின்றது.  கொல்லப்பட்டவர் , வேற்றுக்கிரக விண்வெளி கலத்தை ஒளிப்படம் எடுத்து வைத்து இருந்தவர் என்பதை போலிஸ் அறிகின்றது.

பின்னர் ஒரு நாள்,  நாயகனுக்கு ஆரம்பத்தில் ஏற்பட்ட கனவு அனுபவத்தைப் போல நாயகிக்கும் ஏற்படுகின்றது. ஒளிக் கலத்தில் , ஒளி மனிதர்களைப் பார்க்கின்றாள். பின்னர் அவள் நாயகன் காரில் வீடு திரும்பும் பொழுது, காரின் மேல் கிடக்கின்றாள். பயந்துப் போன நாயகன் ஒரு சந்தர்ப்பத்தில் , ஏலியன் மிருகத்தை சந்திக்க , நாயகனும் நாயகியும் முன்பு உணர்ந்த ஒளி மனிதர்கள் தோன்றி மிருகத்தை அழித்து , அவர்களால் , நாயகன் ஒளி உலகம் அழைத்து செல்லப்படுகின்றான். அங்கு  நாயகன் நடந்தவைகளுக்கு  விளக்கம் பெறுகின்றான்.  உலகத்தின் பிரச்சினைகள், சண்டைகள், அவலங்கள், வன்முறைகள் பிணிகளைக் காட்டி இதை எல்லாம் சரி செய்ய ஓர் அவதாரம் தோன்றாத என நாயகியின் அம்மா அங்கலாய்க்க , நாயகி தன் வயிற்றைத் தடவுகின்றார்.  நமக்கும் முடிவு புரிகின்றது. படமும் நிறைவு பெறுகின்றது.

மொத்தம் பத்துக்கும் குறைவான கதாபாத்திரங்கள் வைத்துக் கொண்டு முடிந்தவரை சுவாரசியமாகவே எடுத்து இருக்கின்றார்கள்.   அனைத்து கதாபாத்திரங்களும் நன்றாகவே நடித்து இருந்தனர்.  நாயகன் - நாயகி நெருக்கம் ரசிக்கும்படி அழகாக இருந்தது.  மணிரத்னம் படத்தில் எது நன்றாக இருக்கின்றதோ இல்லையோ , நாயகன் நாயகி நெருக்கம் கியுட்டாக எடுக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்தில் மணிரத்னம் டச் இருந்தது.

திகில் படம் என்ற வகையில் சேர்த்தாலும்  ஒரு வகையான ஆன்மிகப் படமாகத் தான் எனக்குப் பட்டது. மனிதனால் வழிபடும் கடவுள்கள் எல்லாம் நிஜம் , அவர்கள் வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்து மனிதனுக்கு அறிவாற்றலைக் கொடுத்து சென்றவர்கள் என்ற கருதுகோள் ஒன்று உண்டு. ஆதி மனிதன் பயத்தில் பிரமிப்பில் அவர்களை கடவுள்களாக வழிபட ஆரம்பித்தான் என்பது அதன் நீட்சி.

படத்தில் அடுத்த அவதாரம் தோன்ற , நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என ஒளி மனிதர் கூறுகையில் , கிறித்தவர்களுக்கு மரியாள், யோசப் நினைவுக்கு வரலாம். படத்தில் நல்லவை அதீதம் ஆகும்பொழுது கெட்ட அவதாரமும் , கெட்டவை அதீதம் ஆகும் பொழுது நல்ல அவதாரமும் தோன்றும் இது நியதி என முடித்து இருந்தது இயற்கையின் சமனை விளக்கும் விதமாக இருந்தது.



செல்சி , மான்செஸ்டர் யுனைடட் , விடுதலைப்புலிகள் என இயக்குநருக்கு பிடித்தமான விசயங்களும் ஆங்காங்கே தூவப்பட்டுள்ளன.  படத்திற்கு ஒட்டாத ஐட்டம் கிளப் பாடல் ஒன்றும் உண்டு. இது ஒருவேளை தமிழ்ச்சினிமாவின் பாதிப்பாக இருக்கலாம்.

தமிழ்ச்சினிமா தமிழகம் சார்ந்தே காலம் காலமாய் இருந்து வருகின்றது.  இந்த நிலை மாற , மலேசியத் தயாரிப்புகள் போன்று புலம் பெயர்ந்த சினிமாக்கள் வெளிவர வேண்டும். ஆரம்பத்தில் அமெச்சூர்த் தனமாக இருந்தாலும் நிச்சயம் புலம் பெயர் தமிழ்த் திரைப்படங்கள் தமிழ்நாட்டுத் தமிழ்த்திரப்படங்களுடன் போட்டி போடும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு இந்த 'ஒளி' திரைப்படம்.