Monday, November 25, 2013

இரண்டாம் உலகம் - திரைப்படம் - சிலக்குறிப்புகள் - எழுதியவர் மண்டப எழுத்தாளர் கிளிமூக்கு அரக்கன்

இரண்டாம் உலகம் திரைப்படம் பற்றிய பின்வரும் சிலக் குறிப்புகளை எழுதியவர் கிளிமூக்கு அரக்கன் (https://www.facebook.com/kilimookku)
---

சிலப்பள்ளிகளில் நூற்றுக்கு எழுபது மதிப்பெண்கள் எடுப்பவன் தான் முதல் மாணவனாக இருப்பான். அவனுக்கு அடுத்தபடியாக எடுத்தவன் மதிப்பெண்களைப் பார்த்தால் வெறும் 25 அல்லது முப்பது இருக்கும். பள்ளியின் நிலைமை , மாணவனின் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் , முதல் மாணவனை , வேறு பள்ளியில் 95 சதவீதம் எடுக்கும் மாணவனுடன் ஒப்பிட்டு , அடி அடி என அடித்தால் என்ன செய்வது... செல்வராகவனும் அந்த எழுபது சதவீத முதல் மதிப்பெண் மாணவனைப் போன்றவர்தான். தமிழ்த் திரைப்பட சூழல், அதன் வர்த்தகம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு , இரண்டாம் உலகம் படத்தை மதிப்பீடு செய்ய வேண்டும். நம்மவர்களுக்கு பிரச்சினையே, மனைவியிடம் முன்னாள் காதலியைத் தேடுவது, ரோகித் சர்மாவிடம் டெண்டுல்கரைப் பார்ப்பது, ஆங்கிலப் படத்தை தமிழில் தேடுவது என்பதுதான். முதல் உலகின் வணிகப்படங்களின் தரத்தை, மூன்றாம் உலகத்தின் திரைப்படத்தில் தேட வேண்டிய அவசியம் இல்லை. 

சிலப் படங்களை ஆற அமர உட்கார்ந்து ரசித்துப் பார்க்க வேண்டும். இரண்டு மணி நேரப் படம் , இருபது நிமிடம் போல் கடக்க வேண்டும் என நினைப்பவர்களால் , இரண்டாம் உலகத்தை ரசிக்க முடியாது என்பதல்ல, அவர்களுக்கு அத்தனை நேரம் மற்றும் பொறுமை இருக்காது. இழுவை, புரியவில்லை என கமர்சியல் விமர்சகர்களால் கிழிக்கப்பட்ட அன்பே சிவம் , மும்பை எக்ஸ்பிரஸ் போன்று காலம் கடந்து நிற்கும் சிலப் படங்களின் வரிசையில் இரண்டாம் உலகம் சேரும். 

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியான பொழுது , சோழர்களைக் காட்டுமிராண்டிகளாக காட்டுவதா என கொதித்து எழுந்த தமிழ்த் தேசியவாதிகள் , இரண்டாம் உலகத்தில் எங்கும் தமிழ் இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடையலாம். நமக்கு வீரர்களாக தெரிந்த , சோழர்கள் காட்டுமிராண்டிகளா என்பதை அக்கால மலேசியத் தீபகற்ப மக்களைக் கேட்டால் தான் தெரியும். சோழர்களை மிகைப்படுத்தல் இன்றி , புனைவில் காட்டியமைக்காகவே ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை எனக்குப் பிடிக்கும். ஆயிரத்தில் ஒருவனைப் பிடித்தவர்களுக்கு கண்டிப்பாக இரண்டாம் உலகம் பிடிக்கும். 

இரண்டாம் உலகத்தில் எங்கும் தமிழ் என்பதை வழமைப்போல மென்-இந்துத்வா 'பதிப்பக இணையதளம்' ஒன்று ஆரிய கிண்டல் அடித்து இருந்ததைப் படித்தது தான் இந்தத் திரைப்படத்தைப் பார்க்க தூண்டு கோலாக இருந்தது. சிலப் படங்களை யார் எதிர்க்கின்றார்கள் என்பதை வைத்துதான் பார்க்க வேண்டும். 

பின்னிப்பிணைந்து இருக்கும் இரண்டு உலகங்கள். இரண்டிலும் ஆரியா அனுஷ்கா . ஓர் உலகின் காதல் தோல்வி எப்படி மற்றொரு உலகத்தில் மாற்றம் கொண்டு வருகின்றது என்பதுதான் கதையின் அடி நாதம். செல்வராகவனின் முந்தையப் படங்களை விட , இந்தப்படத்தில் மென்மை அதிகம். 

படம் நெடுக விரவிக் கிடக்கும் நகைமுரண்கள் இரண்டாம் உலகத்தை சுவாரசியம் ஆக்குகின்றது. பெண் தெய்வத்தை வழிபடும் சமூகத்தில், பெண் அடிமைத்தனம். 

இவ்வுலகில் மட்டுமல்ல, இரண்டாம் உலகிலும் கடவுளைக் காப்பாற்றுபவன் மனிதன், அவனுக்கு வீரமும் ஈரமும் ஊட்டுவது காதல் மட்டுமே .. அதுவே மனித நாகரிகத்தின் மையப்புள்ளி

"அந்தக் கடவுளைத் தவிர அத்தனைபேரையும் கொல்லுங்கடா" - நாத்திகம் ஆத்திகம் என எப்படி பார்த்தாலும் இந்த வசனம் ஆழ்ந்த பொருள் தரும் வசனம். 

இரு வேறு துருவ ஆளுமைகளாக ஆரியா அனுஷ்கா கதாபாத்திரங்கள். 

இரண்டாம் உலகம் எனக் காட்டப்படும் ஜார்ஜியா , உண்மையில் சமகால வரலாற்றில் இரண்டாம் உலக நாடுகளில் ஒன்று. ( மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் முதல் உலகம், பழைய சோவியத் தலைமையிலான பொதுவுடைமை நாடுகள் இரண்டாம் உலகம், இந்தியா போன்ற வளரும் நாடுகள் மூன்றாம் உலகம் ) 

ஆடல் பாடல் கவர்ச்சிக்கு வில்லத்தனத்திற்கு மட்டும் வெளிநாட்டு நடிகர்களைப் பயன்படுத்தும் இந்தியத் திரைப்படங்களில் , விதிவிலக்காக பெரும்பகுதியான படத்தில் , வெளிநாட்டு நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் அனேகமாக இரண்டாம் உலகமாகத்தான் இருக்கும். 

ஒரு சிலத் தமிழ்த் தேசிய இயக்குநர்கள் போல தனித் தமிழ் வசனங்கள் ஆன திரைப்படம் எனத் தம்பட்டம் அடிக்காமல், இயல்பான தமிழ் வசனங்களால் பெரும்பாலும் இரண்டாம் உலகம் நிரம்பி இருப்பது பாராட்டப்பட வேண்டியது. கலகமான விசயங்களை கூட்டம் கூட்டி விளம்பரப்படுத்தாமல் , நாத்திகமோ , உறவுச் சிக்கல்களோ போறப் போக்கில் சொல்லிவிட்டுப் போவதனால் தான் செல்வராகவன் தொடர்ந்து கவனிக்கப்படுகின்றார். 

ஓர் ஊரில் மிகப்பெரிய ஓவியன் இருந்தான். அவனது ஓவியங்கள் அகில உலகப் பிரபலம். மில்லியன் பவுண்ட் கணக்கில் அவனது ஓவியங்கள் விலை போகும். ஆளுமைகளின் வீட்டில் எல்லாம் அவனது ஓவியம் தான் வரவேற்கும். ஆனால் அவனது அம்மாவின் வீட்டில், ஓவியன் பதின்மங்களில் வரைந்த ஓவியம் ஒன்று மாட்டப்பட்டு இருக்கும். அவனது அம்மா வீட்டில் , ஏன் ஒவியனது சமகால ஓவியம் மாட்டப்படமால் , ஒப்பீட்டளவில் சுமாராக உள்ள ஓவியனது ஆரம்ப கால ஓவியம் இருக்கின்றது என அனைவருக்கும் வியப்பு. அவனது அம்மாவின் பதில், " இன்றைய மதிப்பில்லா ஓவியங்களின் ஆரம்ப விதை , அந்த ஓவியமே .. அது பாராட்டப்பட்டதனாலேயே இன்றைக்கு இவ்வளவு ஓவியங்கள் கிடைத்துள்ளன. என்னளவில் எனது மகனது சிறந்த ஓவியம் அவனது இந்த பழைய ஓவியமே "

செல்வராகவனும் ஓர் ஓவியனே ... ஓவியனின் அம்மாவைப்போல இன்று தோள் தட்டிப் பாராட்டுவோம். ஆளுமையும் வயதும் திமிரும் இந்த ஓவியனுக்கு இருக்கின்றன, இவை அனைத்தும் தொடக்கமே !! 

குழந்தைகளை மட்டுமல்ல, திரைப்படங்களையும் 'சமமற்ற' வைகளுடன் ஒப்பிடக் கூடாது. தமிழ் டப்பிங்கில் ஆங்கிலப் படங்களைப் பார்த்துவிட்டு, ஐ எம் டி பி யில் குறிப்புகள் படித்து விட்டு, விக்கிப்பிடியாவில் இருந்து மொழிப் பெயர்த்து விட்டு உலக சினிமா பேசுபவர்களைப் புறந்தள்ளி விட்டு , இரண்டாம் உலகத்தைப் பாருங்கள். எனக்குப் பிடித்து இருந்ததைப் போல உங்களுக்கும் பிடித்து இருக்கும். ஒரு வேளை பிடிக்காவிடினும் கவலைப் படாதீர்கள். சில ஆண்டுகள் கழித்துப் பிடிக்கும். வாழ்க்கையில் நிறைய விசயங்கள் ஒத்திப் போடப்பட்டே ரசிக்கப்படுகின்றன.