Friday, November 15, 2013

ஒளி - மலேசிய தமிழ்த் திரைப்படம் - திரைப்பார்வை

நேற்று மாலை முழுவதும் ஏலியன்கள் அமெரிக்காவிற்கு மட்டும் வருகின்றன. தமிழ்ப் பேசும் பகுதிகளுக்கு எல்லாம் வாராதா என்பதை ஒரு சிறுகதை கருவிற்காக யோசித்துக் கொண்டு சோம்பேறியாக இருந்த பொழுது படம் பார்க்க நினைத்தேன்.  சோம்பித் திளைக்கும் பொழுதுகளை சுவாரசியப்படுத்த பிரபலம் ஆகாத , இதுவரை பெயர் அறியாத திரைப்படங்களைப் பார்ப்பதுண்டு. சில சமயங்களில் அப்படிப் பார்க்கப்படும் , அறியப்படாத படங்கள் எதிர்பார்ப்புகளையும் விஞ்சி நன்றாக இருந்துவிடுவதும் உண்டு.  'ஒளி' மலேசியத் தமிழ்த் திரைப்படம் என்ற அடைமொழியுடன் ஓர் இணையத் தளத்தில் புதுவரவுகளில் ஒன்றாக இருந்தது.  மலேசியா தயாரிப்பு  என்பதும் முகப்புப் படமும் ஈர்த்ததால் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன்.



தமிழ்நாட்டு சினிமா, தொலைக்காட்சி மட்டும் பார்ப்பவன் என்பதால்  படத்தில் நடித்து இருந்தவர்கள் அனைவரும் எனக்கு புதிய முகங்களாகவே இருந்தனர்.  மலேசியத் தமிழர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள் ஆக இருக்கலாம்.  திருமணம் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லா தம்பதியினர் , குழந்தை இன்மைக்காக வருத்தப்படும் நாயகியின் பெற்றோர் என படம் ஆரம்பிக்கின்றது.   புவியியல் பொறியியலாளர் ஆன நாயகன் (சசீதரன் ) பணியின் பொழுது  சுரங்கத்தில் தவறி விழுகின்றார். மயக்கமடையும் அவர், கனவுகளில் வருவதைப் போல ஓர் அமானுஷ்ய உலகத்திற்கு கூட்டி செல்லப்படுவதைப் போன்ற ஓர் அனுபவம் கிட்டுகின்றது.  மயக்கம் ஒரு நிமிடத்தில் தெளிந்தாலும் , நாயகனுக்கு ஏதோ நீண்ட நேரம் வேறு ஓர் உலகில் சஞ்ச்சரித்ததைப் போன்ற உணர்வு.  நாயகி அவதாரம் என்ற தலைப்பில் ஆன புத்தகத்தை தேடிக்கொண்டு இருக்கையில் , நூல் நிலையத்தில் முன்னறிமுகம் இல்லா ஒருவர் அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்து நாயகி இடம்   கொடுக்கின்றார்.

அன்றிரவு படுக்கையில் நாயகியுடன் காதல் கொள்ளும் நாயகனுக்கு நீண்ட நேரம் இன்பத்தில் இருந்ததைப் போன்ற உணர்வு.  நாயகி வழமையான நேரம் தான் எடுத்துக் கொண்டான் எனச் சொல்லுகின்றாள். தொடர்ந்து வீட்டில் அமானுஷ்ய பிரசன்னம் இருப்பதைப் போல நாயகன் உணர்கின்றான்.  அடுத்த சில நாட்களில் , நாயகிக்கு புத்தகம் கொடுத்தவர் கொல்லப்பட , அவரின் கையில் இருந்து நாயகியின் படத்தை போலிஸ் கைப்பற்றுகின்றது.  கொல்லப்பட்டவர் , வேற்றுக்கிரக விண்வெளி கலத்தை ஒளிப்படம் எடுத்து வைத்து இருந்தவர் என்பதை போலிஸ் அறிகின்றது.

பின்னர் ஒரு நாள்,  நாயகனுக்கு ஆரம்பத்தில் ஏற்பட்ட கனவு அனுபவத்தைப் போல நாயகிக்கும் ஏற்படுகின்றது. ஒளிக் கலத்தில் , ஒளி மனிதர்களைப் பார்க்கின்றாள். பின்னர் அவள் நாயகன் காரில் வீடு திரும்பும் பொழுது, காரின் மேல் கிடக்கின்றாள். பயந்துப் போன நாயகன் ஒரு சந்தர்ப்பத்தில் , ஏலியன் மிருகத்தை சந்திக்க , நாயகனும் நாயகியும் முன்பு உணர்ந்த ஒளி மனிதர்கள் தோன்றி மிருகத்தை அழித்து , அவர்களால் , நாயகன் ஒளி உலகம் அழைத்து செல்லப்படுகின்றான். அங்கு  நாயகன் நடந்தவைகளுக்கு  விளக்கம் பெறுகின்றான்.  உலகத்தின் பிரச்சினைகள், சண்டைகள், அவலங்கள், வன்முறைகள் பிணிகளைக் காட்டி இதை எல்லாம் சரி செய்ய ஓர் அவதாரம் தோன்றாத என நாயகியின் அம்மா அங்கலாய்க்க , நாயகி தன் வயிற்றைத் தடவுகின்றார்.  நமக்கும் முடிவு புரிகின்றது. படமும் நிறைவு பெறுகின்றது.

மொத்தம் பத்துக்கும் குறைவான கதாபாத்திரங்கள் வைத்துக் கொண்டு முடிந்தவரை சுவாரசியமாகவே எடுத்து இருக்கின்றார்கள்.   அனைத்து கதாபாத்திரங்களும் நன்றாகவே நடித்து இருந்தனர்.  நாயகன் - நாயகி நெருக்கம் ரசிக்கும்படி அழகாக இருந்தது.  மணிரத்னம் படத்தில் எது நன்றாக இருக்கின்றதோ இல்லையோ , நாயகன் நாயகி நெருக்கம் கியுட்டாக எடுக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்தில் மணிரத்னம் டச் இருந்தது.

திகில் படம் என்ற வகையில் சேர்த்தாலும்  ஒரு வகையான ஆன்மிகப் படமாகத் தான் எனக்குப் பட்டது. மனிதனால் வழிபடும் கடவுள்கள் எல்லாம் நிஜம் , அவர்கள் வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்து மனிதனுக்கு அறிவாற்றலைக் கொடுத்து சென்றவர்கள் என்ற கருதுகோள் ஒன்று உண்டு. ஆதி மனிதன் பயத்தில் பிரமிப்பில் அவர்களை கடவுள்களாக வழிபட ஆரம்பித்தான் என்பது அதன் நீட்சி.

படத்தில் அடுத்த அவதாரம் தோன்ற , நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என ஒளி மனிதர் கூறுகையில் , கிறித்தவர்களுக்கு மரியாள், யோசப் நினைவுக்கு வரலாம். படத்தில் நல்லவை அதீதம் ஆகும்பொழுது கெட்ட அவதாரமும் , கெட்டவை அதீதம் ஆகும் பொழுது நல்ல அவதாரமும் தோன்றும் இது நியதி என முடித்து இருந்தது இயற்கையின் சமனை விளக்கும் விதமாக இருந்தது.



செல்சி , மான்செஸ்டர் யுனைடட் , விடுதலைப்புலிகள் என இயக்குநருக்கு பிடித்தமான விசயங்களும் ஆங்காங்கே தூவப்பட்டுள்ளன.  படத்திற்கு ஒட்டாத ஐட்டம் கிளப் பாடல் ஒன்றும் உண்டு. இது ஒருவேளை தமிழ்ச்சினிமாவின் பாதிப்பாக இருக்கலாம்.

தமிழ்ச்சினிமா தமிழகம் சார்ந்தே காலம் காலமாய் இருந்து வருகின்றது.  இந்த நிலை மாற , மலேசியத் தயாரிப்புகள் போன்று புலம் பெயர்ந்த சினிமாக்கள் வெளிவர வேண்டும். ஆரம்பத்தில் அமெச்சூர்த் தனமாக இருந்தாலும் நிச்சயம் புலம் பெயர் தமிழ்த் திரைப்படங்கள் தமிழ்நாட்டுத் தமிழ்த்திரப்படங்களுடன் போட்டி போடும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு இந்த 'ஒளி' திரைப்படம்.