Tuesday, March 24, 2015

நீர் அடித்து நீர் விலகுமா !!

"சிங்களத்தமிழர்" என்றுதான் இந்தப்பதிவுக்கு தலைப்பு வைக்கலாமென்றிருந்தேன். ஆனால் விஷமுறிவு மருந்தை தொடர்ந்து கொடுத்துக்கொண்டேயிருந்தால் விடாதுகருப்பாகிவிடும். எனவே விவேகமாக நீர் அடித்து நீர் விலகுமா என்ற இந்தத்தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிற்கேற்ற தலைப்புதான் தலைப்புக்கேற்ற பதிவுதான். தொடர்ந்து வாசிக்கலாம்.

2015 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையில்  XXXXXXXX அணி, காலிறுதியில் படுதோல்வியடைந்து வெளியேறியதைத் தொடர்ந்து துவிட்டரில் ஒரு மடந்தை, தனது கோபத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மேல் காட்ட ,அது விதையாகி வெடித்து முளைத்து தழைத்து கிளைத்து வெளிப்பட்ட விழுதுகளில் ஒன்றுதான் என் கட்டுரை என்று ஒருசிலர் நினைப்பதைப்போல  நான் அக்கட்டுரையை எழுதவில்லை. இந்திரன் கெட்டதும் பெண்ணாலே அந்த சந்திரன் கெட்டதும் பெண்ணாலே என்று பார்த்தும் கேட்டும் பட்டும் அறிந்திருப்பதால் பெண்களுடன் எவ்விடத்திலும் விவாதங்களுக்குள் சென்றதேயில்லை. அதுவும் சமூக ஊடகங்களில் பெண்களுடன் விவாதத்தில் இறங்கி மல்லுக்கட்டினால் ஒரு கட்டத்தில் நாமே விவாதப்பொருளாகிவிடுவோம்.  ஆக எனது கட்டுரையை பெண்ணுக்காக எழுதப்பட்டது என்று சொல்வதைத் தவிர்த்து மண்ணுக்காக எழுதப்பட்டது என்று படிப்பதே சிறப்பு. 

படித்தால் படி, படிக்கலாட்டி போ, படிச்சுட்டு பிடிக்கலாட்டியும் போ என்று எழுதுவதால் நான் பிரபலங்களுக்கு மத்தியில் மட்டுமே பிரபலம். சீடகோடிகள் அனைவரையும் முடுக்கிவிட்டு என்பதிவுகளை முன்னுக்கு கொண்டு வந்தாலும் முன்னூறு வரவுகளைத் தாண்டாதப்பதிவுகள் எனது பதிவுகள். இந்நிலையில்  XXXXXXXX அணியைப்பற்றி நான் எழுதிய "கிரிக்கெட்டின் கண்ணீர்த்துளி " கட்டுரையை  ( http://vinaiooki.blogspot.it/2015/03/blog-post.html ) ஆயிரக்கணக்கான சாமனியர்களிடம் கொண்டுபோய்ச்சேர்த்தது  XXXXXXXX  அணியை நேசிக்கும் தமிழும் பேசும் அந்நாட்டு வாழ் இளைஞர்கள். 

தமிழும் பேசும் அவ்விளைஞர்களுக்கு கட்டுரையின் மேலும் கட்டுரையை எழுதியவன் மேலும் நியாயமற்ற கோபத்தைக்காட்ட ஒரு பின்னணி  உண்டு.  2010 ஆம் ஆண்டு வாக்கில், XXXXXXXX  அணியைச் சேர்ந்த ஓர் ஆட்டக்காரர் எதிரணிகளின் 800 ஆட்டக்காரர்களை வீழ்த்திய சமயத்தில், அந்த ஆட்டக்காரர்,  விளையாட்டுலகின்  மனித நேயமிக்க, மகத்தான ஆளுமைகளான முகமது அலி, ஆண்டிபிளவர், ஒலாங்கா போல இருந்திருக்கலாமே என்று நான் ஆதங்கப்பட்டு எழுதியக்கட்டுரைக்கு ( http://www.tamiloviam.com/site/?p=739)இவ்விளைஞர்கள் கடும் வார்த்தைகளினால்  "தமிழோவியம்" இணைய இதழில் இன்று போல அன்றும் தங்களது நியாயமற்ற கோபத்தைக் காட்டினர். அன்று அதன் நீட்சி துவிட்டரிலும் நீர்க்குமிழியாக வெளிப்பட்டது.  

இரண்டாண்டுகளுக்கு முன்னர்,  நான் மாற்றிவடிவமைத்த   XXXXXXXX  அணியின் ஆட்டக்காரர் ஒருவர்  கைகளில் ரத்தக்கறை கார்ட்டூன் ஈழத்தமிழர்கள், தமிழ்த்தேசியர்கள், ஈழமாயையில் இருந்தவர்கள் என்று பலரால் கொண்டாடப்பட்டது.   (விராத் கோஹ்லி விரட்டி விரட்டியடித்த வேகப்பந்துவீச்சாளர்தான் அந்த ஆட்டக்காரர். )  ஈபே இணையத்தளத்தில்  XXXXXXXX  அணியை ஒருநாள் ஏலத்தில் விட்டேன். அன்றைய இனவெறி தென்னாப்பிரிக்காவிற்கு கொடுக்கப்பட்ட தண்டனை XXXXXXXX  நாட்டிற்குக் கொடுக்கப்படவில்லை என்பதால், என் கோபத்தைத் தணித்துக்கொள்ள எழுத்தில் தண்டனை கொடுப்பதுண்டு.   நீறுபூத்த நெருப்பாக ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இன்னும் தொடரும். 

அடிப்படையில் பார்த்தால், என் கட்டுரைக்கு ஈழத்தமிழர்களும் தமிழ்த்தேசியர்களும் பெரும் ஆதரவைக் கொடுத்திருக்கவேண்டுமே. மாறாக, அவர்களும் போர்வையை தலையில் போத்திக்கொண்டு கமுக்கமாக ,  என் கட்டுரையையும் என்னையும் வசை பாடிய இழைகளில் இசைபாடினார்கள். கலிலியோ காலத்தில் வாழ்ந்த மக்கள் உலகம் தட்டையானது என்று நம்பினார்கள் அல்லவா, அவர்களைப்போல இவர்களும் அரசியலும் அதனைச் சார்ந்த செயற்பாடுகளும் தட்டையானது என்று நம்புபவர்கள். ஈழப்பாசமிருந்தால் கலைஞரை வெறுக்கவேண்டும், திமுக வேரறுக்க ப்படவேண்டும் என்று நம்பும் ஆட்கள்.  திமுக நேசமிருந்தால் தமிழ்ப்பாசம் செல்லாது என்று சொல்லும் நாட்டாமைகள் சிலரும் இவர்களில் உண்டு.  தமிழ்நாட்டில் திமுக இல்லாமல் போயிருந்தால் தமிழே இருந்திருக்குமா என்பதை அறியாதவர்கள். ஆதலால், திராவிட கருத்தியலாளரும் "மாப்ள சிங்கம்" திரைப்படத்தின் வசனகர்த்தாவுமான டான் அசோக் ஈராண்டுகளுக்கு முன் எடுத்து செய்த, கலைஞர் அஞ்சல் தலை வெளியிட்டிற்கு நான் வினையூக்கியாக இருந்து உதவி செய்தது ஈழத்துரோகப்பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டது. 

எனக்கு ஒரு தீவிர ரசிகர் பேஸ்புக்கில் இருக்கிறார். கலைஞருக்காக வாடிகன் போப்பிடமிருந்து வாழ்த்துக்கடிதம் பெற்றுத்தந்தது, சேனல்4 தொலைக்காட்சி - ஸ்டாலின் இணைப்பை ஏற்படுத்தியது , திமுகவின் வெளிநாட்டு முகவராக இருப்பது போன்ற "ஈழத்துரோக" செயல்களை செய்தது-செய்வது வினையூக்கி என்று அவருக்குத் தோன்றுவதையெல்லாம் என்னைப்பற்றி பேசும் இடங்களில் சுவரொட்டி ஒட்டுவார். 

இப்படிஒட்டுவாரொட்டிகள் மணிப்பிரவாளத்தமிழில் எனக்கு தொடர்ந்து அர்ச்சனைகள் நடத்த , எங்கு அடித்தால் எங்கு வலிக்கும் என்று தெரிந்தே எடுத்த விஷமுறிவு கலைச்சொல்லாக்கம்தான் "சிங்களத்தமிழர்",  XXXXXXXX  அணியையும் XXXXXXXX  நாட்டின் ஆளுமையையும் ஏற்றுக்கொண்டு இந்தியத்தமிழர்களை, நாய்கள் இன்னபிற அச்சில் ஏற்றமுடியாத சொற்களில் திட்டுபவர்கள் என்ற பொருளில் இந்தக்கலைச்சொல் உருவாக்கப்பட்டது.  இந்தக் கலைச்சொல் உருவாக்கத்திற்குப்பின்னர்தான், நோர்வேயிலிருந்தும் டொரண்டோவிலிருந்தும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் " வினையூக்கி, நீங்கள் பெரிய மனுஷந்தானே , நீங்கள் நிறுத்தக்கூடாதா" என மெயில் விடு தூது ஆரம்பித்தன. எனக்குத்தான் அறிவுரைகள் பறந்து வந்தனவே ஒழிய, தமிழும் பேசும் XXXXXXXX  நாட்டு ஆட்களிடம் ஒன்றும் சொல்லப்படவில்லை. 

தமிழ்ச்சூழலில் புத்திசாலிகளும் உண்டு. துணிச்சல்காரர்களும் உண்டு. ஆனால் துணிச்சல் மிகுந்த புத்திசாலிகள் அரிது. காணும்பொழுது அவர்களைப் பொது நன்மைக்காகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். துணிச்சலான புத்திசாலிகள் விலகும் புள்ளிகளை மட்டும் பெரிதாக்கினால் நட்டம் துணிச்சலான புத்திசாலிகளுக்கல்ல. அவர்களுக்கு எல்லாப்பக்கமும் மவுசு உண்டு. எங்கு அரியணை காலியாக இருக்கிறதோ அங்கேப்போய் உட்கார்ந்துவிடுவார்கள். 


செல்வாக்குள்ள அல்லது செல்வாக்கை மேலும் வளர்த்துக்கொள்ளக்கூடிய என்னை கலைஞர் அபிமானி  என்பதற்காக எனக்குக் கட்டம் கட்டினால் எல்லோருக்கும் ஒரு பிரேக் பாயிண்ட் ரீச் ஆகும், ஏதாவது ஒருகட்டத்தில் சலிப்பாகித்தான் போகும். என்னைத்திட்டிய ஒருவரை  வெள்ளைவேன் கடத்திச்சென்றபொழுது பதறிய தமிழ்நாட்டு டிவிட்டர்களில் நானும் ஒருவன். அடுத்த முறை வெள்ளைவேன் வந்தாலென்ன மஞ்சள் வேன் வந்தாலென்ன என்றுதானே இருக்கத்தோன்றும்.  என்னை குட்ட வேண்டிய நேரத்தில் குட்டும், தமிழார்வலர்  மணி. மணிவண்ணன் , ஒரு விவாத இழையில் முன்பொருமுறை எனக்குச்சொன்னது, "விவாதத்தில் வெற்றிபெறுவது முக்கியமில்லை,  வெற்றிபெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் சாம, பேத , தான தண்ட முறைகளைப் பயன்படுத்தினால் விவாத நோக்கத்திற்கு துணைச்சேர்க்கும் ஆட்களின் ஆதரவை இழந்துவிடுவோம்., பொது நன்மைகளுக்காக சிறுவிசயங்களைக் கடந்து செல்லலாம்" . இந்தக்குட்டு நினைவுக்கு வந்ததும் யோசிக்க ஆரம்பித்தேன். 

என்னை வசைபாடிய  400 சொச்சத்து XXXXXXX  நாட்டு தமிழும் பேசும் ஆட்களைக் குறிக்க மட்டும்  உருவாக்கிய சொல் என்றாலும்,  "சிங்களத்தமிழர்" என்ற பதம் ,  பலரை அதிர்ச்சியடைய வைத்திருக்கும். கவலையடையகூட செய்திருக்கலாம்.  அதனால் தார்மிகபொறுப்பேர்று வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்கலாமா என்று யோசித்தேன்.  ஆனால் அந்த சொல்லிற்காக பதட்டமடைபவர்கள், நான் வசைபாடப்படும்பொழுது அமைதியாகத்தானே இருந்தார்கள். நான் எதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்பதையும் யோசித்தேன். யோசித்துக்கொண்டேயிருந்தபின்னர் பின்வரும் எண்ணம் மேலோடியது. 

துயரமான கட்டத்தில்  எனக்கு அனைத்து வகையான ஆதரவளித்து  என் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்ட என் நலன் விரும்பி , ஈழத்தமிழர் யோகன் பாரிஸ் ஒருவேளை அந்தச்சொல்லைக் கண்டிருந்தால் , அவர் மனதில்  சுருக்கென முள் தைத்திருக்குமல்லவா.  அவர் ஒருவேளை வருந்தியிருந்தால், அவரிடம் மட்டும்  வருத்தம் தெரிவித்துக்கொள்கின்றேன்.   ஏனையவர்களுக்கு நீர் அடித்து நீர் விலகாது. சேரும்புள்ளிகளில் சேரவேண்டிய புள்ளிகளில் உங்களுடன் சேராமல் இருக்கமாட்டேன்.  என்னுடைய துணிச்சலுடன் கூடிய புத்திசாலித்தனத்தை உங்களுக்குத் தேவைப்படும்பொழுதெல்லாம் பெற்றுக்கொள்ளலாம்.