Sunday, May 11, 2014
Monday, November 25, 2013
இரண்டாம் உலகம் - திரைப்படம் - சிலக்குறிப்புகள் - எழுதியவர் மண்டப எழுத்தாளர் கிளிமூக்கு அரக்கன்
சிலப்பள்ளிகளில் நூற்றுக்கு எழுபது மதிப்பெண்கள் எடுப்பவன் தான் முதல் மாணவனாக இருப்பான். அவனுக்கு அடுத்தபடியாக எடுத்தவன் மதிப்பெண்களைப் பார்த்தால் வெறும் 25 அல்லது முப்பது இருக்கும். பள்ளியின் நிலைமை , மாணவனின் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் , முதல் மாணவனை , வேறு பள்ளியில் 95 சதவீதம் எடுக்கும் மாணவனுடன் ஒப்பிட்டு , அடி அடி என அடித்தால் என்ன செய்வது... செல்வராகவனும் அந்த எழுபது சதவீத முதல் மதிப்பெண் மாணவனைப் போன்றவர்தான். தமிழ்த் திரைப்பட சூழல், அதன் வர்த்தகம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு , இரண்டாம் உலகம் படத்தை மதிப்பீடு செய்ய வேண்டும். நம்மவர்களுக்கு பிரச்சினையே, மனைவியிடம் முன்னாள் காதலியைத் தேடுவது, ரோகித் சர்மாவிடம் டெண்டுல்கரைப் பார்ப்பது, ஆங்கிலப் படத்தை தமிழில் தேடுவது என்பதுதான். முதல் உலகின் வணிகப்படங்களின் தரத்தை, மூன்றாம் உலகத்தின் திரைப்படத்தில் தேட வேண்டிய அவசியம் இல்லை.
சிலப் படங்களை ஆற அமர உட்கார்ந்து ரசித்துப் பார்க்க வேண்டும். இரண்டு மணி நேரப் படம் , இருபது நிமிடம் போல் கடக்க வேண்டும் என நினைப்பவர்களால் , இரண்டாம் உலகத்தை ரசிக்க முடியாது என்பதல்ல, அவர்களுக்கு அத்தனை நேரம் மற்றும் பொறுமை இருக்காது. இழுவை, புரியவில்லை என கமர்சியல் விமர்சகர்களால் கிழிக்கப்பட்ட அன்பே சிவம் , மும்பை எக்ஸ்பிரஸ் போன்று காலம் கடந்து நிற்கும் சிலப் படங்களின் வரிசையில் இரண்டாம் உலகம் சேரும்.
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியான பொழுது , சோழர்களைக் காட்டுமிராண்டிகளாக காட்டுவதா என கொதித்து எழுந்த தமிழ்த் தேசியவாதிகள் , இரண்டாம் உலகத்தில் எங்கும் தமிழ் இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடையலாம். நமக்கு வீரர்களாக தெரிந்த , சோழர்கள் காட்டுமிராண்டிகளா என்பதை அக்கால மலேசியத் தீபகற்ப மக்களைக் கேட்டால் தான் தெரியும். சோழர்களை மிகைப்படுத்தல் இன்றி , புனைவில் காட்டியமைக்காகவே ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை எனக்குப் பிடிக்கும். ஆயிரத்தில் ஒருவனைப் பிடித்தவர்களுக்கு கண்டிப்பாக இரண்டாம் உலகம் பிடிக்கும்.
இரண்டாம் உலகத்தில் எங்கும் தமிழ் என்பதை வழமைப்போல மென்-இந்துத்வா 'பதிப்பக இணையதளம்' ஒன்று ஆரிய கிண்டல் அடித்து இருந்ததைப் படித்தது தான் இந்தத் திரைப்படத்தைப் பார்க்க தூண்டு கோலாக இருந்தது. சிலப் படங்களை யார் எதிர்க்கின்றார்கள் என்பதை வைத்துதான் பார்க்க வேண்டும்.
பின்னிப்பிணைந்து இருக்கும் இரண்டு உலகங்கள். இரண்டிலும் ஆரியா அனுஷ்கா . ஓர் உலகின் காதல் தோல்வி எப்படி மற்றொரு உலகத்தில் மாற்றம் கொண்டு வருகின்றது என்பதுதான் கதையின் அடி நாதம். செல்வராகவனின் முந்தையப் படங்களை விட , இந்தப்படத்தில் மென்மை அதிகம்.
படம் நெடுக விரவிக் கிடக்கும் நகைமுரண்கள் இரண்டாம் உலகத்தை சுவாரசியம் ஆக்குகின்றது. பெண் தெய்வத்தை வழிபடும் சமூகத்தில், பெண் அடிமைத்தனம்.
இவ்வுலகில் மட்டுமல்ல, இரண்டாம் உலகிலும் கடவுளைக் காப்பாற்றுபவன் மனிதன், அவனுக்கு வீரமும் ஈரமும் ஊட்டுவது காதல் மட்டுமே .. அதுவே மனித நாகரிகத்தின் மையப்புள்ளி
"அந்தக் கடவுளைத் தவிர அத்தனைபேரையும் கொல்லுங்கடா" - நாத்திகம் ஆத்திகம் என எப்படி பார்த்தாலும் இந்த வசனம் ஆழ்ந்த பொருள் தரும் வசனம்.
இரு வேறு துருவ ஆளுமைகளாக ஆரியா அனுஷ்கா கதாபாத்திரங்கள்.
இரண்டாம் உலகம் எனக் காட்டப்படும் ஜார்ஜியா , உண்மையில் சமகால வரலாற்றில் இரண்டாம் உலக நாடுகளில் ஒன்று. ( மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் முதல் உலகம், பழைய சோவியத் தலைமையிலான பொதுவுடைமை நாடுகள் இரண்டாம் உலகம், இந்தியா போன்ற வளரும் நாடுகள் மூன்றாம் உலகம் )
ஆடல் பாடல் கவர்ச்சிக்கு வில்லத்தனத்திற்கு மட்டும் வெளிநாட்டு நடிகர்களைப் பயன்படுத்தும் இந்தியத் திரைப்படங்களில் , விதிவிலக்காக பெரும்பகுதியான படத்தில் , வெளிநாட்டு நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் அனேகமாக இரண்டாம் உலகமாகத்தான் இருக்கும்.
ஒரு சிலத் தமிழ்த் தேசிய இயக்குநர்கள் போல தனித் தமிழ் வசனங்கள் ஆன திரைப்படம் எனத் தம்பட்டம் அடிக்காமல், இயல்பான தமிழ் வசனங்களால் பெரும்பாலும் இரண்டாம் உலகம் நிரம்பி இருப்பது பாராட்டப்பட வேண்டியது. கலகமான விசயங்களை கூட்டம் கூட்டி விளம்பரப்படுத்தாமல் , நாத்திகமோ , உறவுச் சிக்கல்களோ போறப் போக்கில் சொல்லிவிட்டுப் போவதனால் தான் செல்வராகவன் தொடர்ந்து கவனிக்கப்படுகின்றார்.
ஓர் ஊரில் மிகப்பெரிய ஓவியன் இருந்தான். அவனது ஓவியங்கள் அகில உலகப் பிரபலம். மில்லியன் பவுண்ட் கணக்கில் அவனது ஓவியங்கள் விலை போகும். ஆளுமைகளின் வீட்டில் எல்லாம் அவனது ஓவியம் தான் வரவேற்கும். ஆனால் அவனது அம்மாவின் வீட்டில், ஓவியன் பதின்மங்களில் வரைந்த ஓவியம் ஒன்று மாட்டப்பட்டு இருக்கும். அவனது அம்மா வீட்டில் , ஏன் ஒவியனது சமகால ஓவியம் மாட்டப்படமால் , ஒப்பீட்டளவில் சுமாராக உள்ள ஓவியனது ஆரம்ப கால ஓவியம் இருக்கின்றது என அனைவருக்கும் வியப்பு. அவனது அம்மாவின் பதில், " இன்றைய மதிப்பில்லா ஓவியங்களின் ஆரம்ப விதை , அந்த ஓவியமே .. அது பாராட்டப்பட்டதனாலேயே இன்றைக்கு இவ்வளவு ஓவியங்கள் கிடைத்துள்ளன. என்னளவில் எனது மகனது சிறந்த ஓவியம் அவனது இந்த பழைய ஓவியமே "
செல்வராகவனும் ஓர் ஓவியனே ... ஓவியனின் அம்மாவைப்போல இன்று தோள் தட்டிப் பாராட்டுவோம். ஆளுமையும் வயதும் திமிரும் இந்த ஓவியனுக்கு இருக்கின்றன, இவை அனைத்தும் தொடக்கமே !!
குழந்தைகளை மட்டுமல்ல, திரைப்படங்களையும் 'சமமற்ற' வைகளுடன் ஒப்பிடக் கூடாது. தமிழ் டப்பிங்கில் ஆங்கிலப் படங்களைப் பார்த்துவிட்டு, ஐ எம் டி பி யில் குறிப்புகள் படித்து விட்டு, விக்கிப்பிடியாவில் இருந்து மொழிப் பெயர்த்து விட்டு உலக சினிமா பேசுபவர்களைப் புறந்தள்ளி விட்டு , இரண்டாம் உலகத்தைப் பாருங்கள். எனக்குப் பிடித்து இருந்ததைப் போல உங்களுக்கும் பிடித்து இருக்கும். ஒரு வேளை பிடிக்காவிடினும் கவலைப் படாதீர்கள். சில ஆண்டுகள் கழித்துப் பிடிக்கும். வாழ்க்கையில் நிறைய விசயங்கள் ஒத்திப் போடப்பட்டே ரசிக்கப்படுகின்றன.
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
4:00 AM
வகைகள்: உலகத்திரைப்படம், திரைப்பட விமர்சனங்கள், திரைப்பார்வை
Sunday, July 17, 2011
லவ்வர்ஸ் - திரைப்பார்வை
படத்தில் இருந்து அழகிய கொலைகாரியே பாடல் காட்சி கீழே
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
2:42 AM
4
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: அனுபவம், திரைப்பட விமர்சனங்கள்
Sunday, February 20, 2011
இலையுதிர்காலம் - குறும்படம் - ஒரு பார்வை
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
5:18 AM
1 பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: அனுபவம், திரைப்பட விமர்சனங்கள்
Thursday, May 13, 2010
நடு இரவில் - திரைப்படக் கண்ணோட்டம்
தமிழில் சஸ்பென்ஸ்-திரில்லர் வகையில் வந்தத் திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவற்றில் சிறப்பான சிலத் திரைப்படங்கள் ஜெய்சங்கரோ ரவிச்சந்திரனோ நடித்து 60 களிலேயே வந்துவிட்டன. அதிர்ச்சியூட்டும் முடிச்சுகள் இருந்தாலும் ரசிகர்களை மறுமுறை திரையரங்கத்திற்கு வரவழைக்கவும் படத்தின் வியாபர மதிப்பைக் கூட்டவும் கவர்ச்சி நடனங்களும் வலுவில் திணிக்கப்பட்ட பாடல், சண்டைக் காட்சிகளும் இருக்கும். அப்படியானக் காலக் கட்டத்தில் கவர்ச்சி நடனமோ , சண்டைக் காட்சிகளோ இல்லாமல் கதைக்கு தேவையான வெறும் இரண்டு பாடல்களுடன் வெளிவந்த படம் தான் 'நடு இரவில்'.
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
5:27 PM
9
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: திரைப்பட விமர்சனங்கள், திரைப்படம்
Thursday, July 09, 2009
நாடோடிகள் - திரைப்பார்வை

சுப்ரமணியபுரம் டெம்ப்ளேட்டிலேயே நட்பு-காதல்-தோல்வி-துரோகம் என நகைச்சுவை இழையோட,எல்லாத் தரப்பு மக்களும் ரசிக்கும்படி சமுத்திரக்கனியின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் நாடோடிகள். நல்ல இயக்குனராகவும் நல்ல தயாரிப்பாளராகவும் தன்னை நிலை நிறுத்திக்கொண்ட சசிக்குமாருக்கு தனக்கு கதைக்கேற்ற நடிப்பையும் தரமுடியும் என்பதைக் காட்டும் படம் நாடோடிகள். கதையை நகர்த்திச் செல்லும் மையக்கதாபாத்திரமாக சசிக்குமார் பாராட்டும்படியே நடித்து இருக்கின்றார்.
பலவருடங்களுக்கு முன் சந்தர்ப்பவாத நட்பு + காதல் ஆகியவற்றை வைத்து கார்த்திக், பானுப்ப்ரியா நடிக்க, பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்த கோபுரவாசலிலே படத்தின் நேர் எதிர் துருவம் இப்படம்.
நண்பனின் நண்பன் தனக்கும் நண்பன் என்பதை வைத்து பின்னப்பட்ட இக்கதையில் சமூகத்தின் வெவ்வேறு பொருளாதார/சாதி தளங்களில் இருக்கும் நண்பர்களுக்குள் இருக்கும் அன்னியோன்யத்தையும் வாழ்வின் அடுத்தத் தளத்தை நோக்கி நடைபோட அவர்கள் எடுக்கும் முன் முயற்சிகளையும் அது ஒரு காதலால் எப்படி சின்னாபின்னமாகின்றது என்பதை அழகாக சொல்லியுள்ளார் இயக்குனர். காதலர்கள் தங்களைச் சேர்த்து வைத்த நண்பர்களின் தியாகத்தை எத்தனைத் தூரம் மதிக்கின்றனர் என்பதை சுவைபட சொல்லி இருக்கின்றனர். சசிக்குமாரின் கதாப்பாத்திரப்படைப்போன்று எல்லோர் வீட்டிலும் ஒரு உறவினர் கண்டிப்பாக இருப்பார். அலட்சியமாக இருப்பது போலத் தோன்றினாலும் உண்மையில் அக்கறையுடனும் பொறுப்பாகவும் நடந்து கொள்ளும் இயல்பான கதாபாத்திரம் சசிக்குமாருடையது. ஐந்து தந்தை கதாபாத்திரங்களை(மூன்று நண்பர்களின் தந்தைகள், முறைப்பெண்ணின் தந்தை, ஓடிவரும் காதலியின் தந்தை ) வெவ்வேறு பரிமாணங்களில் தந்தைக்குரிய குணாதிசயங்களுடன் காட்டி இருப்பது படத்தின் சிறப்பு.
உடற்பசிக்காகத்தான் அவர்கள் கல்யாணம் செய்து கொள்ள வந்தார்கள் என நண்பர்கள் சகட்டு மேனிக்குத் திட்டித் தீர்ப்பதை ஒரு சராசரி மனிதன் தன் தியாகங்கள் கேலிக்கிடமாகக்போய் விட்டதே என்று உணரும்போது வந்து விழும் வார்த்தைகளாகப் புரிந்து கொள்ள முடிகிறது. நம் சமூகம் மற்றவர்களைக் கேவலப்படுத்த பாலியல் ரீதியான வசவுகளின் மூலம் இழிவுப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது என்பதை இயக்குனர் உணர்த்துகிறாரோ!!.. உடற்பசி என்றால் பணக்கார காதலர்கள் எங்கு வேண்டுமானாலும் காதலிக்கும் காலங்களிலேயே தீர்த்துக்கொண்டிருக்க முடியும். காதலர்களை சுடுமணலில் நிராதரவாக விட்டுவிட்டு வரும்பொழுது காதலன் காதலியை நோக்கி நடந்து வரும் காட்சியை சிலவினாடிகள் நீட்டித்ததன் மூலம் அவர்களின் காதல் உண்மைதான், ஆனால் தாங்கள் வாழ்ந்த பணக்காரச் சூழல் இன்றி வாழும்போது ஏற்படும் பிரச்சினைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவமின்மை அவர்களுக்குள் வெறுப்பை ஏற்படுத்தி பிரிய வைத்தது என இயக்குனர் காட்டியிருப்பதாக தோன்றுகின்றது. 
மற்றவர்களது காதலுக்காகப் போராடும் சசிக்குமார், முறைப்பெண் தனக்காக வீட்டைவிட்டு வெளியேறி இருந்தால் போராடி இருப்பாரோ!! பெண்ணின் சம்மதம் இல்லாமல் (காதல்/விருப்பம் இருந்தாலும் கூட)அவர்களின் பெற்றோருக்கு எதிராக்கி கவர்ந்து வருதல் அவசியம் இல்லை என சொல்லப்படுவதாக இருக்கின்றது. முறைப்பெண்ணாக வரும் அனன்யா, விஜய் தொலைக்காட்சியில் சினிமா காரம் காப்பி யில் வரும் நடுத்தரவயது பெண் இளமையாக இருந்தால் எப்படி இருப்பாரோ அப்படி இருக்கின்றார். அனன்யா தனது சொந்தக்குரலையேப் படத்தில் கொடுத்து இருக்கின்றார்.
மொட்டை மாடிக் காட்சியில் ”அவனுக்கும் ரொம்ப நாளா உன்மேல ஒருக் கண்ணு” என முறைப்பெண்ணை சீண்டுவதும் “முள்ளைப்பிடிச்சாலும் முழுசாப் பிடிக்கனும்” என்ற வசனமும் , சடுதி நேரத்தில் நண்பர்கள் காதலர்களைச் சேர்த்து வைக்க கிளம்பும் முன் சென்னை 28 விஜய் க்கு சசியின் தங்கை கன்னத்தில் முத்தமிடும் காட்சியும் அழகு.
முறைப்பெண்ணின் தந்தை தனது மருமகனுடன் உற்சாகமாகப் பேசிக்கொண்டு வர, முறைப்பெண் இறுக்கமான முகத்துடன் அவர்களைப் பின் தொடர்வதைப் பார்க்கும் சசிக்குமார் அந்த இடத்தை விட்டு நகர்வது அருமை.
இணைக் கதாபாத்திரங்களாக வாழ்ந்து இருக்கும் 'கல்லூரி' பரணி , சென்னை28 விஜய் ஆகியோரின் நடிப்பு தமிழ் திரையுலகில் நல்ல நடிப்புக்கு பஞ்சமில்லை என்பதற்கு மற்றும் ஒரு உதாரணம். மன்சூர் அலிகான் போன்று தோற்றமளிக்கும் நடிகர் செய்யும் அலப்பரைகள் அட்டகாசமாக இருக்கின்றன. கஞ்சா கருப்புவின் புலம்பல்கள் சிரிப்பாக இருந்தாலும் உண்மையில் அவரைப்போன்ற அப்பாவிகள் பலிகடாக்களாக ஆக்கப்படுகின்றனர் என்பது நிதர்சனம். 
மாற்றுத்திறன் உடையவர்களை அப்படியே நடிக்க வைத்து அனுதாபத்தை மட்டுமே பெற்றுத்தரும் இயக்குனர்கள் மத்தியில் சசிக்குமாரின் தங்கையாக மாற்றுத்திறன்கள் இருக்கும் பெண்ணை(அபிநயா) பேசும் கேட்கும் கதாபாத்திரமாக வாழ வைத்த சமுத்திரக்கனிக்கு தனிப்பட்ட முறையில் நன்றி.
சுந்தர்.சி பாபு வின் இசையில் சம்போ சிவசம்போ பாடல் இணையத்தில் படம் பார்க்கும்பொழுதே மிரட்டுகின்றது. குத்துப்பாட்டு அவசியம் இல்லாதது போலத் தோன்றினாலும் வணிக ரீதியிலும் நல்ல திரைப்படத்தை வெற்றிப் பெறச்செய்ய இது போன்ற சமாதானங்கள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதே.
இப்படத்தை பார்த்தவர்கள் “நண்பா, என் லவ்வை சேர்த்து வைங்கடா” என யாராவது வந்துக் கேட்கும்பொழுது இனி ஒருக் கணமாவது தங்களது வாழ்வாதரத்தைப் பற்றியும் சிந்தித்துவிட்டுத்தான் உதவப்போவார்கள் என்பது உறுதி.
படங்கள் நன்றி : cityhitsonline.com , mirchigossips.com
பின்குறிப்பு :
திரையரங்கத்தில் குடும்பத்துடன் போய் ரசித்துப்பார்க்க வேண்டிய படம் இது.
திரையரங்கிற்குப் போய் பார்க்கும் வாய்ப்பு, நான் இருக்கும் தேசத்தில் இல்லாததால் இணையத்தில் தான் பார்க்க முடிந்தது. திரைப்படக்குழுவினர் மன்னிக்கவும்.
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
2:15 PM
12
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: திரைப்பட விமர்சனங்கள்
Tuesday, December 16, 2008
திரைப்பார்வை - பொம்மலாட்டம் , சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களுக்கான இலக்கணம்
தமிழில் சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையான படங்கள் வெளிவருவது மிகவும் அரிது. அப்படியே அத்திப்பூத்தாற்போல வந்தாலும் அது பெரும்பாலும் கவர்ச்சிப்பட வரிசையில் சேர்ந்துவிடுவது கசப்பான உண்மை. திணிக்கப்பட்ட மசாலத்தனங்கள் இல்லாமல் அழகான ,விருவிருப்பான த்ரில்லர் படத்தைக் கொடுத்து மீண்டும் ஒருமுறை தனது இருப்பைக் காட்டியிருக்கிறார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. ஆரம்பகாலங்களில் சிகப்புரோஜாக்கள் , ,டிக்டிக்டிக் போன்ற படங்களின் வாயிலாக நகர்ப்புறம் சார்ந்த கிரைம் திரில்லர் படங்களை கிராமத்தானாலும் திரையில் தரமுடியும் எனக்காட்டிய பாரதிராஜா, கடைசியாக“கண்களால் கைது செய்” படத்தை இதே வகையில் தரமுயன்று வெற்றியை பெற முடியவில்லை. 
அவரின் மூன்றாம் தலைமுறை இயக்குனர்கள் கோலேச்சிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் தயாரிப்பில் இருந்து பெரும் சோதனைகளைக் கடந்து நானாபடேகர்,அர்ஜுன்,ரஞ்சிதா,ருக்மிணி, காஜல் அகர்வால் நடிக்க தெற்கத்திக் கலைக்கூடம் தயாரிப்பில் வெளிந்திருக்கும் பொம்மலாட்டம் படத்தின் மூலமாக மீண்டும் ஒரு முறை தன்னை நிருபித்து இருக்கிறார்.
வழக்கமாக திரில்லர் படங்களில் வரும் இலக்கணமான ”நல்லவர்” என அறியப்படும் கதாபாத்திரம் இறுதியில் ”குற்றம் புரிந்தவர்” என வழக்கமாக முடிக்கப்படுவது போல அல்லாமல் படம் முழுவதும் குற்றம் புரிந்தவர் என சந்தேகிக்கப்படும்
கதையின் நாயகன் கடைசியில் அப்படி இல்லை எனக் காட்டியதோடு மட்டுமல்லாமல் எதிர்பார்க்க முடியாத முடிவுக்காட்சியை வைத்து பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறார். படம் அதிர்ச்சி மதிப்பீடுகளை கொடூரம் இல்லாமல் உணர்வுப்பூர்வமாகவும் காட்டியமைக்கு பாரதிராஜாவிற்கு நிறைய நன்றிகள். படம் பார்த்து முடித்தப்பின்னர் அட இப்படிக்கூட யோசிக்க முடியுமா என வியப்பைக் கொடுக்கும் வகையில் படத்தின் முடிவு இருப்பதுதான் இப்படத்தின் சிறப்பம்சமே. 
கதையின் நாயகன் பிரபல இயக்குனர் ராணா(நானாபடேகர்) தன் படத்தில் அறிமுகமாகி இருக்கும் கதாநாயகியை தனது காருடன் மலையுச்சியில் இருந்து தள்ளிவிட்டு, அதை விபத்தாக ஜோடிப்பதுடன் படம் சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது. அது விபத்தல்ல, திட்டமிட்ட நடத்தப்பட்டக் கொலை என சந்தேகப்படும் சிபிஐ , விவேக் வர்மாவை(அர்ஜுன்) விசாரணைக்கு அனுப்புகிறது. விவேக் வர்மா , ராணாவின் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்கனவே நடந்த கொலைகளைப்பற்றியும் விசாரிக்க ஆரம்பிக்கிறார். வலுவான சந்தேகங்களுடன் குற்றஞ்சாட்டப்படும் நானாபடேகர் நீதிமன்றத்தில் போதிய சாட்சிகள் இல்லாமையால் விடுவிக்கப்படுகிறார்.இறுதியில் விடாப்பிடியாக சிக்கலுண்ட அடிநுனியை சிபிஐ அதிகாரி விவேக் வர்மா கண்டுபிடிக்கும்பொழுது படம்பார்ப்பவர்களும் இருக்கையின் நுனிக்குவருவது படத்தின் தனிச்சிறப்பு.
சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களில் கடைசியாக அடையாளம் காட்டப்படும் குற்றவாளி , படம் ஆரம்பிக்கபடும் சில நிமிடங்களிலேயே அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பது இவ்வகையானப் படங்களுக்கு ஒரு இலக்கணம். படம் பார்க்கும்பொழுது கொலைகளுக்கு காரணம் , ராணாவிடம் உதவி இயக்குனராக இருக்கும் விவேக் வர்மாவின் காதலியாக இருப்பாரோ, ராணாவின் மனைவியாய் இருப்பாரோ, படத்தின் தயாரிப்பாளராய் வருபவரோ , விவேக் வர்மாவே கொலையாளியோ என ஊகங்கள் பார்வையாளருக்கு ஏற்படும் வகையில் அமைத்து தடாலடியாக ஒரு முடிவை வைத்து அசத்தி இருக்கிறார் பாரதிராஜா. பெரும்பாலான படங்களில் நடுவில் திடீரென ஒரு கதாபாத்திரம் நுழைந்து அல்லது நுழைக்கப்பட்டு
முடிவு அமைக்கப்படும். முடிவுகளுக்கும் பழிவாங்குதலைத் தவிர போதிய வலுவான காரணம் இருக்காது. ஆனால் வலுவான காரணத்துடன் ஆரம்ப முடிச்சிலேயே கதையை முடித்து த்ரில்ல்ர் படங்களுக்கு மேலும் ஒரு பரிமாணம் சேர்த்துள்ளார் பாரதிராஜா.
மாற்றங்கள் தேவையானதுதான், அதே மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்பொழுது ஏற்படும் விளைவுகளை நேர்த்தியாக திரையில் வடிவமைத்து, த்ரில்லர் வகையிலான படங்கள் சமீப காலமாக இல்லை என்றக்குறையைத் தீர்த்துவிட்டார் இயக்குனர் பாரதிராஜா.
த்ரில்லர் படங்களுக்கு பாடல்கள் தடையாக இருந்தாலும், பொம்மலாட்டம் படத்தில் கதையுடன் ஒன்றி வருவது ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது. நானாபடேகரின் அங்க அசைவுகள் ஒவ்வொன்றும் பாரதிராஜாவை நினைவுப்படுத்துகின்றன. உண்மையில்
பாரதிராஜா இப்படித்தான் படப்பிடிப்புத்தளத்தில் இருப்பாரோ என நினைக்கத் தோன்றுகிறது. நிழல்கள் ரவியின் குரல் நானாபடேகருக்குப் பாந்தமாக பொருந்துகிறது. அமைதிப்புயலாக அர்ஜுன் , அனேகமாக அர்ஜுன் நடித்து சண்டைக் காட்சி இல்லாத படம் இதுவொன்றாகத்தான் இருக்கும்.
கதையின் நாயகி த்ரிஷ்னா(ருக்மிணி) பாரதிராஜாவின் “ரா” வரிசை நாயகிகளில் நல்லதொரு நடிகையாக இடம்பிடிப்பார் என நம்பலாம். பயம்,தயக்கம்,ஆதரவைத் தேடும் கண்கள் என மற்றொரு நடிக்கத் தெரிந்த நடிகையாக வலம் வருவார். காஜல் அகர்வால் அழகாக இருக்கிறார். அர்ஜுனுடன் ஒரு டூயட் பாடல். இவர் கொலைகாரராக இருப்பாரோ எனக் கதையோட்டத்திற்கு பயன்படுகிறார். வணிகரீதியாக இணைக்கப்பட்டுள்ள விவேக் நகைச்சுவைப்பகுதி கதையுடன் ஒட்டிவருவது சுவாரசியமாக இருந்தது. சமூகத்தில் விவாதிக்க விரும்பப்படாத விசயங்களை மணிவண்ணன் கதாபாத்திரத்தின் மூலம் நேரிடையாகக் காட்டி இருப்பது இயக்குனரின் துணிச்சல்.
”ரசீத் உன் பேர் தாண்டா காரணம் உனக்கு லண்டனுக்கு விசாக் கிடைக்க மாட்டேங்குது”, ”பிரகாஷ்ராஜ் வேண்டாம், அவரு ஒரே பேமெண்ட் கேட்பாரு” என சுவாரசியமான சில வசனங்களையும் படத்தில் ஆங்காங்கே தூவப்பட்டுள்ளது.
இந்தி உதட்டசைவுகள் வெளிப்படையாகத் தெரிவது படத்தில் கண்ணுக்கு நேரிடையாகத் தெரியும் ஒரு குறை. உபகதாபாத்திரங்கள் நானாபடேகருடன் வரும் காட்சிகள் தனித்தனியாக எடுத்து சேர்க்கப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. படத்தில் தயாரிப்பாளராய் வரும் நபர் தயாரிப்பு நிர்வாகியாக இருந்து, தயாரிப்பாளர் ஆனவர்கள் நிஜத்தில் இப்படித்தான் இருப்பார்களோ என்பதை கண்முன் நிறுத்துகிறார்.
படத்திற்கு இசை ஹிமேஷ் ரேஷமய்யா, கலை சாபுசிரில் , ஒளிப்பதிவு - பி.கண்ணன்
“சினிமா” என்ற பெயரில் இந்தியில் வெளியாகப்போகும் இப்படம் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறப்போகிறது என ஆவலை இந்தத் தமிழ் பதிப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படம் வணிகரீதியாக தமிழிலும் இந்தியிலும் வெற்றிபெற்று, ”எங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா” மீண்டும் ஒருமுறை திரையுலகில் வலம் வரவேண்டும் என்று வாழ்த்துவோம்.
புகைப்படங்கள் நன்றி : இண்டியாகிலிட்ஸ்.கோம்
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
5:43 AM
9
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: திரைப்பட விமர்சனங்கள்
Friday, September 28, 2007
சத்தம் போடாதே - திரைப்பார்வை
இயக்குனர் வசந்தை ஒரு விசயத்துக்காக நிச்சயம் பாராட்டலாம். கதைக்களம் எப்படி பட்டதாக இருந்தாலும், அவரின் பெரும்பாலான படங்களில், சமூகத்திற்காக சமூக அக்கறையுடன் செயற்படும் அமைப்புகளை பற்றி தனது படத்தின் கதை மாந்தர்களின் வாயிலாக அழகாக உறுத்தல் இன்றி சொல்லிவிடுவார். இந்த படத்திலும் "ஆல்கஹாலிக் அனானிமஸ்" என்ற ஒரு தன்னார்வ அமைப்பை பற்றி சொல்லியுள்ளார். குடிபழக்கத்துக்கு அடிமையானவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்டெடுத்து, அவர்களுக்கு தொடர்ச்சியான கலந்தாய்வுகள் மூலமாக அவர்களின் வாழ்க்கையை செம்மையாக்கும் பணியை செய்து வரும் அமைப்புதான் "ஆல்கஹாலிக் அனானிமஸ்" . இந்த அமைப்பின் இணைய தளத்திற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.
எவ்வளவு கடினப்பட்டு எடுக்கப்படும் பிரச்சாரப் படங்களை விட, வெகுசன ஊடகமான திரைப்படங்களில் இப்படி வசனங்களின் வாயிலாகவும், காட்சி அமைப்பின் வாயிலாகவும் கதை ஓட்டத்துடன் சொல்லும்போது இந்த மாதிரியான அமைப்புகள் பற்றிய விழிப்புணர்வு மக்களை எளிதாகச் சென்றடையும். இதை தனது ஒவ்வொரு படத்திலும் செய்து வரும் வசந்த் தொடர்ந்து செய்வார் என நம்பலாம்.
படத்தில் கவர்ந்த இன்னொரு விசயம், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், மறுகல்யாணம் செய்வதை விட தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லி இருப்பது.பான்யன் அமைப்பை பற்றிக்கூட இயக்குனர் சொல்லி இருப்பார். 
சரி படத்திற்கு வருவோம். வசந்த் ஒரு நல்ல "ஒளியும் ஒலியும் டைரக்டர்" என்று கல்லூரிக் காலத்தில் என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார். அவரின் எல்லாபடங்களிலும் பாடற்காட்சிகளை பிரமாதமாக காட்சியமைப்பு செய்திருப்பார். இந்த படத்திலும் முதற்பாதியில் வரும் மூன்று பாடல் காட்சிகளும் டிபிகல் வசந்த் பாடற்காட்சிகள். அதிலும் பிருத்விராஜின் அறிமுகப் பாடல் காட்சியில் குட்டி குட்டி குழந்தைகளுடன் "அழகு குட்டி செல்லம்" என ஆடுவது ஏக அருமை.இரண்டாவது பாதியில் வரும் இரண்டு "திணிப்பு பாடற்களும்" படத்திற்கு திருஷ்டி.
இன்னொரு விசயம் ஏனைய வசந்தின் படங்களைப் போல இதிலும் படம் பார்த்த பிறகு ஏதோ மிஸ் ஆகுதே என்ற ஆதங்கம் ஏற்படுகிறது. இந்த படத்தில் அவரின் முந்தையப் படங்களைக் காட்டிலும் சற்று அதிகமாகவே!!! வசந்த் போன்ற இயக்குனர்கள் "திரில்லர்" வகைப் படங்களை எடுக்கும்போது "லாஜிக்கை" நிறைய இடங்களில் இடிக்க வைப்பது நிச்சயம் ஜீரணிக்க முடியாது.
நிதின்சத்யாவிடமிருந்து விவாகரத்து பெற்று , பிருத்விராஜை மணந்துகொள்ளும் பத்மபிரியாவை "பொசசிவ்" நிதின்சத்யா கடத்திசெல்கிறார்.பிருத்விராஜ், தன் மனைவி பத்மபிரியாவை மீட்டாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை. 
படத்தில் யாரையும் குறை சொல்லமுடியாது. எல்லோரும் நன்றாகவே நடித்து உள்ளனர். மேல்தட்டு ஜெண்டில்மேன் இளைஞர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சுவாமிக்கு பிறகு பிரித்விராஜுக்கு அழகாக பொருந்துகிறது. வசனங்களில் மலையாள உச்சரிப்பு இருந்தாலும் அதுவும் ரசிக்கும்படியாக உள்ளது. காபி ஷாப்பில் அவர் பத்மபிரியாவுக்கு கைநடுக்கத்தைப் போக்க வழிமுறைகள் சொல்லிக் கொடுக்கும் காட்சி குட்டிக்கவிதை.
படம் பார்ப்பவர்களுக்கு நிதின்சத்யா கதாபாத்திரத்தின் மேல் பரிதாபமோ, ஆத்திரமோ ஏற்பட வைக்காதது, இரண்டாம் பாதி திரைக்கதையின் பலவீனமே. நாசர், சுஹாசின், ஸ்ரீமன் ஆகியோர் சில காட்சிகளில் வருகின்றனர். யுவன்சங்கர் ராஜா திரில்லர் வகைபடம் என்று அதிகமாக உழைத்திருப்பது பிண்ணனி இசையில் தெரிகிறது. விக்ரமன் படங்களுக்கு விக்ரமனே இசை அமைக்கிறாரோ என்று நினைக்க வைக்கும். அதுபோல வசந்தின் படங்களில் வசந்த் தான் ஒளிப்பதிவோ என்று தோன்றும். தினேஷ் குமாரின் ஒளிப்பதிவு மீண்டும் வசந்தின் ஸ்டைலை திரையில் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. சதிஷ் குரேசாவாவின் எடிட்டிங்கும் குறிப்பிடத்தக்கது. 
படத்தின் முதற்பாதியை நிச்சயம் ரசிக்கலாம். கியரண்டி கலகலப்பு.
இரண்டாம் பாதி படம் பார்ப்பவர்களின் விருப்பம், நிறைய திரைக்கதை சறுக்கல்கள் வசந்த் திரில்லர் கதைக்களத்துக்கான ஹோம் வொர்க் செய்யவில்லையோ!!!.
வசந்த், இந்த படத்தில் முதற்பாதியில் வருவதைபோல ஒரு அழகான மென்மையான காதல் கதைக்களத்துடன் உங்களிடமிருந்து அடுத்த படத்தை எதிர்பார்க்கிறோம்.
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
9:31 PM
6
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: திரைப்பட விமர்சனங்கள்
Thursday, August 30, 2007
அம்முவாகிய நான் - திரைப்பட பார்வை
இதுவரை பெரும்பாலும் துணைக்கதைகளாகவே கையாளப்பட்டுள்ள, "கரணம் தப்பினால் மரணம்" வகையிலான வில்லங்கமான ஒரு கதைக்களத்தை எடுத்துக் கொண்டு "அம்முவாகிய நான்" திரைப்படத்தை இயக்கி உள்ள இயக்குனர் திரு.பத்மா மகனை நிச்சயம் பாராட்டலாம்.
"அழகி" படத்தில் நடுத்தட்டு தமிழ் குடும்பத்து ஆண்மகனை திரையில் பிரதிபலித்த பார்த்திபன் இப்படத்தில் எழுத்தாளனுக்கே உரிய மிடுக்கு, கண்ணியம் . எள்ளல், சமூக அக்கறை , உணர்ச்சி வசப்படுதல் என அனைத்து பரிமாணங்களையும் காட்டி தூள் பண்ணி
இருக்கிறார். இயற்பிலேயே பார்த்திபன் "எழுத்தாளனாக" இருப்பதால் கௌரிசங்கர் கதாபாத்திரத்திற்கு தேவையான குணாதிசயங்கள் பார்த்திபனை மனதில் வைத்துத்தான் உருவாக்கப்பட்டதோ என மனதில் எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
படத்தில் மொத்தம் இருக்கும் கதாபாத்திரங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒரு முறை "ரீவைண்ட்" பண்ணி பார்த்தால் அத்தனை கதாபாத்திரங்களுக்கும் ஒரு காட்சியாவது மனதில் நிற்கும் படி இயக்குனர் அமைத்துள்ளார். 
"தங்கச்சின்னு கூப்பிட்டா தப்பாயிடும், நீ நல்லா இரு" என சொல்லும் அபிஷேக் ஆகட்டும், டாக்டரிடம் போய்விட்டு கண்கலங்கி பேசும் "விஜியக்கா" ராஜஸ்ரீ ஆகட்டும் துணைகதாபாத்திரங்கள், சாதனா, ராகசுதா, தென்னவன், பிதாமகன் மகாதேவன்,சாந்தி வில்லியம்ஸ் உட்பட அனைவரும் பாத்திரமறிந்து அளவாக நடித்து இருக்கிறார்கள். 
பாத்திர படைப்புகளும் கதையின் போக்குடனேயே இருப்பது இயக்குனர் ஒரு நல்ல திரைக்க(வி)தை ஆசிரியர் என நிருபிப்பதாக உள்ளது.
"கடவுள் சொன்னாரா? "
"இல்லை கடவுள்கிட்ட நான் சொன்னேன்"
இதுபோல நான் ரசித்த இன்னொரு வசனம்
அம்முவாகிய நாவலை அறிமுகப்படுத்தும் காட்சியில் வரும் வசனம், "
இது ஒரு மொழிபெயர்ப்பு நூல் ஆம், வாழ்க்கை வார்த்தைகளாய்"
குழந்தையை ராணிமடத்தின் தலைவி சாதனாவிடம் கொடுக்கும் காட்சியை பின்னனியாகக் கொண்டு, முன்னே காய்கறி பேரபேசும் வியாபாரக் காட்சி, "இன்னக்கி உனக்கு ஃப்ர்ஸ்ட் நைட்" என சொல்லி கதாநாயகியை பார்த்திபன் தூங்க வைக்கும் காட்சி என நிறைய காட்சிகள் உண்மையிலேயே விஷுவல் டிரீட்.
முதல் முறையாக படம் பார்க்கும் பொழுதுதான் பாடல்களைக் கேட்டாலும், திரையரங்கத்தை விட்டு வெளியே வந்த பின்னும் "உன்னைச் சரணடைந்தேன்" "தோரணம் ஆயிரம்" பாடல்கள் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. சபேஷ்-முரளி பாடல் இசை மட்டுமின்றி, பின்னனி இசையிலும் சிறப்பாக உழைத்து இருப்பது
கண்கூடாகத் தெரிகிறது.பழனிபாரதியின் பாடல் வரிகளும் அருமை. படத்தில் இயக்குனரின் கண்களாக ஒளிப்பதிவு உள்ளது என்றால் அது மிகையாகாது. 
கதைக்கு தேவைப்படுவதினால் நெருக்கமான காட்சிகள் அதிகம், ஆனால் எதுவும் வரம்பு மீறவில்லை.
பாராட்டுக்கள் பத்மாமகன்.
படத்தைப்பற்றி கிட்டத்தட்ட அனைத்து விசயங்களையும் சொல்லியாகிவிட்டது. ஏதோ ஒன்று குறைகிறதே!! ஆமாம் ஆமாம் படத்தின் கதாநாயகி அம்முவைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என கேட்கலாம். "லைஃப் டைம் ரோல்" அப்படின்னு நடிகைகளுக்கு 30, 40 படங்களுக்கு பின்புதான் வரும், அம்முவாக வாழ்ந்து காட்டியுள்ள பாரதிக்கு முதற்படத்திலேயே அப்படிப்பட்ட கதாபாத்திரம். இந்தப்படம் திரைப்பட விழாக்களில் பங்கு
பெறும்பொழுது பாரதிக்கு "ஸ்டாண்டிங் ஒவேஷன்" நிச்சயம் கிடைக்கும்... திறமை அழகு ஒரு சேர அமைந்த பாரதிக்கு திரைஉலகில் பெரிய சகாப்தம் காத்திருக்கின்றது..
மொத்தத்தில் ஒரு "பிரீ பேய்ட் காதல் கதை" அம்முவாகிய நான்.
அம்முவிற்காக" இன்னொருமுறை கூட படம் பார்க்கலாம்.
Movie Review : Ammuvagiya Naan by www.vinaiooki.com
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
11:05 AM
9
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: திரைப்பட விமர்சனங்கள்
Thursday, May 24, 2007
சென்னை 600028 - திரைப்பட பார்வை
மேல இருக்கிற மஞ்சள் தோல் பிய்ந்து போன டென்னிஸ் பந்து, உடைந்த பெஞ்சிலிருந்து வந்த பேட், 20 ரூபாய் பெட் மேட்ச்சுக்கு 5 ரூபாய் குறையிறப்ப, அந்த 5 ரூபாய் கொடுத்தவனை ஓபனிங் இறங்க வச்சது, 10 ரன்னுக்கு ஒரு முறை 2 ரன் எக்ஸ்ட்ரா ஸ்கோர் ஏத்துறது, கவுண்டி கிளப் ல ஆடுற மாதிரி தன் டீம்முக்கு மேட்ச் இல்லாதப்ப அடுத்த டீம்முக்கு ஆடிக் கொடுப்பது, ஒத்தையா நின்ன அசோக மரத்தை ஸ்டம்பா வச்சு அதுக்கு பின்ன மட்டும் அடிக்கும் Back-Run கிரிக்கெட் ம்ம்ம் இப்படி அனேக சிறு வயது கிரிக்கெட் சம்பந்தப் பட்ட நினனவுகள் அத்தனையையும் ஒரு ஷாட்ல கிளறிவிடுற படம் தான் "சென்னை - 600028". 
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலில் ஒவ்வொரு முக்கிய கதாபாத்திரங்களின் அறிமுகத்தோடு படம் அட்டகாசமாக ஆரம்பிக்கிறது. விசாலாட்சி தோட்டம்(சுண்ணாம்பு கால்வாய்) "ஷார்க்ஸ்" அணியினர் ராயபுரம் "ராக்கர்ஸ்" அணியினருடன் வருடாவருடம் நடைபெறும் ரேடியோ மிர்ச்சி கிரிக்கெட் போட்டியில் அவர்களிடம் தோற்றுப் போகின்றனர். அதற்கடுத்த வருடமாவது நடக்கும் போட்டியிலாவது ராக்கர்ஸை தோற்கடித்து கோப்பையை வெல்ல வேண்டும் என்று நினைக்கும் "ஷாக்கர்ஸ்" அணியினருக்கு அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் நட்பு, மகிழ்ச்சி, பிரிவு,துயரம் போராட்டம், காதல், வலி ஆகியவற்றை உயிரோட்டத்துடன் சலிப்புத்தட்டாமல் சொல்லி இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.
"ராக்கர்ஸ்" அணியின் ரகு(ஜெய்) விசாலாட்சி தோட்டத்திற்கு குடிவந்த பிறகு, அவரை எதிரிபோல் பாவிக்கும் "ஷாக்கர்ஸ்" கார்த்திக்(வானொலி தொகுப்பாளர் சிவா) பின் தன் காதலை சேர்த்து வைப்பதால், ரகுவிற்கு, கார்த்திக் ஒவ்வொரு கட்டத்திலும் அநியாயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது இயல்பான உணர்வுபூர்வமான நகைச்சுவை.
படத்திற்கு கதாநாயகன் என்று யாருமில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடத்தில் கதையோட்டத்துடன் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அரவிந்தின் கதாபாத்திரம், அவருடைய காதல் , பாடல்கள் கதையுடன் ஒட்டவில்லை, ஒரு வேளை வியாபார ரீதியாக படத்தை நிலைநிறுத்திக் கொள்ள இவை அவசியப்பட்டு இருக்கலாம்.
படத்தில் இன்னொரு காதல் கிளைக்கதையும் உண்டு. பழனியின்(நிதின் சத்யா) தங்கையை கார்த்தி(சிவா) காதலிக்கிறார். அது பழனிக்கு தெரிந்து கார்த்தியை அடித்து உதைத்துவிட்டு அழுதுக் கொண்டே பேசிச் செல்லும் வசனங்கள் பல நடுத்தரக் குடும்பத்து அண்ணன்களை கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தும்.
"யாரோ யாருக்குள்ள இங்கு யாரோ" பாடல் எஸ்.பி.பி - சித்ரா குரல்கள் அப்படியே வருடிக் கொடுக்கிறது. "சரோஜா சாமானிகாலோ" பாடல் இரண்டாவது ஆட்ட காட்சியிலும் ரசிகர்களை எழுந்து நின்று ஆடவைக்கிறது.
இளவரசு, ஷார்க்ஸ் அணியினர் கிரிக்கெட் உபகரணங்களை வைத்துக் கொள்ள தோதாக இருக்கும் சலூன் கடையை நடத்துகிறார். அவரின் கிரிக்கெட் ஆடும் விருப்பமும் அதனைச் சுற்றி பின்னப்பட்டுள்ள காட்சிகளும் படத்தை சுவாரசியமாக இறுதிப் போட்டிக்கு நகர்த்துகின்றன. படத்தோட மிகப்பெரிய "பஞ்ச்" இறுதிக் காட்சியும் அது சம்பந்தபட்ட முற்பாதிக் காட்சியும்.
"அட கலக்கிட்டாங்கடா" என்று நம்மையறியாமல் சொல்ல வைக்கும் இடங்கள் படத்தில் நிறைய,
ஆம்புலன்ஸ் வண்டி வைத்திருக்கும் ஏழுமலை, தன்னோட நண்பனை உயிருக்குப் போராடும் நிலையில் ஆம்புலன்ஸில் வைத்து ஓட்டி வந்து,
"இன்னக்கித்தாண்டா இந்த வண்டில வர்றவங்களோட வலி வேதனை புரிஞ்சது" என்று சொல்லி கதறும் இடத்தில் இந்த நடிகர் புதுமுகம் தானா என யோசிக்க வைத்தது. படத்தில் பெரும்பாலன நடிகர்கள் நடிகைகள் , புதுமுகங்கள் அல்லது அதிகம் அறியப்படாதவர்கள். அவர்களை வைத்துக் கொண்டு தைரியமாக இப்படத்தை தயாரித்த சரண் குழுவினரைப் பாராட்டலாம்.
"படவா கோபி" யின் கமெண்டரி பல இடங்களில் பின்னனி இசையினால் புரியாமல் போனாலும் காதில் விழுந்தவரை எல்லாம் சிரிப்பை வரவழைப்பவை.
"இவர் பந்தைப் பிடித்தாரா? அல்லது பந்து இவரைப் பிடித்ததா?"
"கௌரி ஆண்டி வீட்டு எண்டிலிருந்து ஓடி வரும் பவுலர்"
"முல்லைப் பெரியாறை விட பெரிய ஆறு"
"பேட்ஸ்பேன் அவர்களே , திருப்பதி லட்டு போல் வரும் மஞ்சள் கலரில் வருவதைப் பார்த்து அடியுங்கள்"
"இவருக்கு கிரிக்கெட் ஆடத்தெரியுமா தெரியாத என்பது இவருக்கேத் தெரியாது"
என்பவை கல்லூரிக் கிரிக்கெட் போட்டிகளில் கேட்ட சில வர்ணனைகளை ஞாபகப் படுத்தியது.
நகைச்சுவை நடிகனால் இப்படியும் ஒரு பரிமாணம் அளிக்க முடியும் என்பதற்கு பிரேம்ஜி அமரன். இவரின் "ஒன் லைனர்ஸுக்கு" தியேட்டரே அதிர்கிறது. 
படத்திற்கு லெனின் எடிட்டிங்கும், ஷக்தி சரவணின் ஒளிப்பதிவும் பெரிய பலம். தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளைக் காட்டும்போது லெனினின் அனுபவம் தெரிகிறது.
தமிழ் திரையுலகில் படைப்புத்திறனுக்கும் பஞ்சமில்லை, ரசிப்புத்திறனும் குறையவில்லை என்பதை பறைசாற்றும் மற்றொருபடம் சென்னை - 600028.
படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, தனக்கு மீண்டும் அந்த பழைய கிரிக்கெட் காலங்கள் கிடைக்காதா என ஒருக் கணமாவது ஏங்க வைக்கும். அது தான் இந்தப் படத்தின் வெற்றி.
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
2:20 AM
3
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: திரைப்பட விமர்சனங்கள்
Sunday, March 04, 2007
மொழி - ஒரு பாராட்டுப் பதிவு
சில நல்ல விசயங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் உரக்கச் சொல்லலாம். ஏற்கனவே சகபதிவர்கள் மொழிப்படத்தை பற்றி எழுதிவிட்டாலும், ஒரு சந்தோசமான படத்தை பார்த்த திருப்தியில் நானும் ஒரு பாராட்டு பதிவை பதிவு செய்கிறேன்.

கார்த்திக், அர்ச்சனாவின் தோழி ஷீலா(சுவர்ணமால்யா) மூலம் சைகை மொழியையும் கற்றுக் கொண்டு அர்ச்சனாவிடம் இயல்பாக பழகுகிறார். ஒரு கட்டத்தில் தனது திருமண விருப்பத்தை கார்த்திக் அர்ச்சனாவிடம் தெரிவிக்க, அர்ச்சனா கார்த்திகை புறக்கணிக்க ஆரம்பிக்கிறார்.
கடைசியில் அர்ச்சனா, கார்த்திக்கை ஏற்ருக்கொண்டாரா இல்லையா என்பதுதான் பிற்பாதி கதை.
மலையாள நடிகர் பிரித்விரரஜ் "கனாகண்டேனில்" வில்லனாக அறிமுகமாகி, "பாரிஜாதத்தில் கதாநாயகனாகி, மொழியினில் பிரகாசிக்கிறார். மம்மூட்டி, ஜெயராமை தொடர்ந்து இவரும் தமிழ் ரசிகர்களால் ரசிக்கப்படுவார்.
ஜோதிகாவைப் பற்றி சொல்வதற்கில்லை, படம் பாருங்கள், பூவெல்லாம் கேட்டுப்பாரிலிருந்து மொழி வரை எத்தனை பரிமாணங்கள். ஒரு ஹை-கிளாஸ் நடிப்போடு அவர் திரையுலகிலிருந்து விடைபெறுவது ஒரு மகிழ்ச்சிகரமான விஷயம்.
வேற்று மொழி நகைச்சுவை நடிகர்கள் , தமிழில் ரசிக்கும்படி நடித்ததில்லை என்ற குறையை தெலுங்கு முன்னனி நகைச்சுவை நடிகர் பிரம்மானந்த் தீர்த்து வைத்து விட்டார். கடைசியில் இவர் பிரித்விராஜிடம் கரப்பான் பூச்சியைக் காட்டுவது இயல்பான நகைச்சுவை.
எம்.எஸ் பாஸ்கர் "ஞானப்பிரகாஷம்" புரொபெஷர் ஞானப்பிரகாஷம் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்வதிலிருந்த்து அழுது தீர்த்து தனது மன சோகத்தை விட்டு விலகும் காட்சி வரைக் கலக்கி இருக்கிறார்.
பிரகாஷ்ராஜ் சுவர்ணமால்யா வரும் காட்சிகள் கலகலப்பூட்டுகின்றன.
எல்லாக் கதாபாத்திரங்களையும் கண்ணியமானதாக திரையில் உலவ விட்டுள்ள இயக்குன்ரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
"இயற்கையின் மொழிகள் புரிந்துவிடின்
மனிதனி மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்திவ்டின்
மனிதனுக்கு மொழியே தேவையில்லை"
வைரமுத்து பாடற் வரிகள் ஒரு திரைப்படத்திற்கு எவ்வளவு அழகூட்ட முடியும் என்பதற்கு ஒரு உதாரணம்.
"குறைகளையும் மீறி தைரியத்துடன் வாழ்றவங்களை பார்க்கும்போது வாழ்க்கையிலே சுவாரசியம்,வாழனும்கிற ஆசை இன்னும் அதிகமாகுது"
விஜியின் வசனங்கள் , ஆங்கில கலப்பு அதிகம் இல்லாமல் அனைவருக்கும் எளிதில் புரியும்படியா அழகான, கருத்துள்ள வசனங்கள்.
சிறப்பு வல்லமை பெற்றவர்களை கதையின் முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டு கடந்த சில வருடங்களில் வெளிவந்த படங்களில் (என் மனவானில், காசி, பேரழகன், பட்டியல்) இந்த படம் சிறந்தது எனக் கூறலாம்.
பிரகாஷ்ராஜ் ஏன் அதிகப்படியான படங்களில் நடிக்கிறார் என்ற வருத்தமிருந்தது உண்டு. ஆனால் இது போன்ற நல்ல படங்களை எடுக்க, "பாசிட்டிவ்" எண்ணங்களை விதைக்கும் இயக்குநர்களை ஊக்குவிக்க அவருக்கு தேவையான பொருளை சம்பாதிக்க எவ்வளவு மசாலா படங்களில் வேண்டுமானாலும் நடிக்கலாம்.
இசை, இந்தப் படத்திற்கு பெரிய பலம், பின்னணி இசையும் பாடல் இசையும் அருமையாக உள்ளது.
'காற்றின் இசை" , "செவ்வானம் சேலைக் கட்டி " இரு பாடற்களும் படமாக்கப்பட்ட விதமும் கண்ணுக்கு குளிர்ச்சி, காதுக்கு இனிமை.
படம் ஒவ்வொரு பிரேமிலும் அழகாத் தெரிய வைத்த ஒளிபதிவு இயக்குனருக்கு ஒரு சிறப்பு பாராட்டு.
இது நகைச்சுவைப் படமல்ல, செண்டிமெண்டு படமும் அல்ல,
மகிழ்ச்சியான படம், சந்தோச எண்ணங்களை , சக மனிதனை கண்ணியமாக நடத்த , நினைக்கத் தூண்டும் ஒரு அற்புதமான படம்.
நிச்சயம் பாருங்கள் , ஒரு முறை அல்ல இரண்டு முறை.
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
8:58 PM
7
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: திரைப்பட விமர்சனங்கள்
Monday, February 19, 2007
பச்சைக்கிளி முத்துச்சரம் - விமர்சனம்
வேட்டையாடு விளையாடு படத்தின் மிகப்பெரும் வெற்றியினால் சற்று அதிகமான எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்துள்ளது.அழகான மனைவி(ஆண்ட்ரியா), குழந்தை(மாஸ்டர் நந்தா), நிறைவான வாழ்க்கை என இருக்கும் சரத்குமார் ஒரு பார்மசூட்டிகல் கம்பெனியில்,பெரிய லட்சியங்கள் ஏதுமின்றி மெடிக்கல் ரெபரஷெண்டேடிவ் ஆக வேலை பார்க்கிறார். வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் மகிழ்ச்சியாக போய்கொண்டிருக்கும் போது, ஒரு நாள் சரத்தின் குழந்தைக்கு டயாபடிக்ஸ் என கண்டறியப்படுகிறது. தினம் இன்சுலின், மருத்துவமனை என சரத்தின் குடும்ப வாழ்க்கை மாற, கணவன் மனைவி இடையில் இடைவெளி ஏற்படுகிறது.
இந்த இடைவெளியை நிரப்பும் விதமாக ஜோதிகாவின் அறிமுகம் எலக்ட்ரிக் ட்ரெயினில் சரத்துக்கு ஏற்படுகிறது. ஜோதிகாவும் ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிந்து கொள்ளும் சரத், ஜோதிகாவுடன் பழக ஆரம்பிக்கிறார். பரஸ்பர நேசம் , அடிக்கடி நிகழும் சந்திப்புகளினால் அதிகம் ஆக,ஜோதிகாவின் விருப்பப்படி, சரத்குமாருக்கு விருப்பம் இல்லாவிடினும் இருவரும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டுக்கு செல்கின்றனர்.
அங்கு வரும் வில்லன் மிலிண்ட் சோமன், சரத்தை அடித்துப் போட்டுவிட்டு, சரத்தின் கண்னெதிரிலேயே ஜோதிகாவை நாசம் செய்கிறார். மிலிண்ட் சோமன், சரத்தை மிரட்டி பணம் பறிக்க ஆரம்பிக்கிறார்.
குழந்தைக்காக சேர்த்து வைத்த அனைத்துப் பணத்தையும் கொடுத்து விட, குற்ற உணர்ச்சியிலும், இயலாமையிலும் ஆண்ட்ரியாவிடம் உண்மையைச் சொல்ல ஆண்ட்ரியாவும் சரத்தை விட்டு போகிறார்.
எல்லாம் கைமீறி போக, தானே மிலிண்ட் சோமனை ஒரு கை பார்ப்பது என முடிவு செய்ய, அடுத்தடுத்து ஏற்படும் திருப்பங்கள் எல்லாம் உறைய வைப்பவை.
சரத்குமாரின் திரை வாழ்க்கையில் நிச்சயம் இது ஒரு குறிப்பிடத்தக்க படம், ஒவ்வோரு பிரேமிலும் மிளிர்கிறார். புது அறிமுகம் ஆண்ட்ரியா அழகாவே இருக்கிறார், சரத் வந்து மன்னிப்பு கேட்கும் இடத்தில், குழந்தையின் எதிரில் வார்த்தையில் கோபப் படாமல் கண்களில் கோபத்தைக் காட்டும் இடம் சிறப்பு. மும்பை மாடல், மிலிண்ட் சோமன் டிபிகல் கௌதம் பட வில்லனாக வந்து போகிறார்.
ஜோதிகா, நடிப்பில் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பாடல்கள், ஏற்கனவே பெரிய அளவில் ஹிட் ஆகி இருக்கிறது. குறிப்பாக "உன் சிரிப்பினில்" பாடல் மாஸ்டர் பீஸ்,
வித்தியாசமான முயற்சி எடுத்தமைக்காக நிச்சயம் கௌதமை பாராட்டலாம். கடைசியாக கே.எஸ்.ரவிக்குமாரின் புரியாத புதிர், ஒரு நல்ல சஸ்பென்ஸ் திரில்லர் படமாகப் பார்த்த நினைவு,
இது கணவன், மனைவி குடும்ப உறவுகள், திருமண பந்த்ததிற்கு அப்பாற்பட்ட உறவுகளை மட்டும் சொல்லாமல், இரண்டாம் பாதியில் இருக்கையின் நுனிக்கு கொண்டு வரும் எதிர்பாரா திருப்பங்களுடன் நல்லாவே திரைக்கதை அமைத்து எடுத்து இருக்கிறார்.
ஒவ்வொரு படத்திலும் வில்லனுக்கு கௌதமே குரல் கொடுப்பது காக்க காக்க ஜீவனையே ஞாபகப் படுத்துகிறது. இனிவரும் படங்களில் வில்லனுக்கு நீண்ட கூந்தல் வைப்பதையும், கெட்ட வார்த்தை வசனங்களையும்(இயல்பாக இருந்தாலும் கூட) தவிர்க்கலாம்.
ரசிக்க வைத்த இடங்கள்,
1. ஆண்ட்ரியா விடம் இயல்பாக நடக்கும் விசயங்கள் கொண்டாட்டங்கள் இல்லை என சரத் கூறுபது
2. எலக்ட்ரிக் ட்ரெயின் காட்சிகள்
3. ஆண்ட்ரியா சரத்திடம் "டீ" என கேட்கும் வெவ்வேறு சந்தர்ப்பங்கள். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு எமோஷன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
4.ஒவ்வொரு முறை பணம் கொடுக்குபோது சரத்தின் முகபாவம்
5. கிளைமேக்ஸில் வில்லன் கும்பலிடம் பணத்ததக் கொடுத்து விட்டு செல்வது.
இன்னும் சில உண்டு சொன்னால் சஸ்பென்ஸ் போய்விடும் போய் படம் பாருங்க நண்பர்களே!!
பிற்சேர்க்கை : குழந்தைகளுடன் பார்ப்பதை தவிர்ப்பது நலம்
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
10:16 PM
10
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: திரைப்பட விமர்சனங்கள்
Monday, January 15, 2007
குரு - தமிழில் - விமர்சனம்
சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவன், தனது நம்பிக்கையாலும் , கடின உழைப்பினாலும், சாதுர்யத்தாலும், வாழ்க்கையில், வியாபரத்தில் எப்படி முன்னுக்கு வருகிறான் என்பது தான் குரு படத்தின் இரு வரிக்கதை.
வியாபாரத்தில் நஷ்டமேற்பட்டு , ஒரு கிராமத்தில் இடைநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருப்பவரின் மகனாக தேர்வில் தோற்று துருக்கி செல்ல இளவயது குரு அனுமதி கேட்பதுடன் படம் ஆரம்பிக்கிறது.
கடின உழைப்பால் துருக்கியில் சூப்பர்வைசர் அந்தஸ்துக்கு உயரும் குரு, சுயமாக தொழில் ஆரம்பிக்கும் எண்ணத்துடன் ஊர் திரும்புகிறார். நண்பனின் மூத்த சகோதரியை , 15000 ரூபாய் வரதட்சனைக்காக திருமணம செய்து கொள்கிறார்.
குடும்பத்துடன் பம்பாய் வரும் குரு, நானாஜி என்ற பத்திரிக்கை அதிபரால் ஆதரிக்கப் படுகிறார். சோதனைகளை தனது சாதுர்யத்தால் சாதனைகளாக மாற்றி முன்னுக்கு வருகிறார்.
பிற்பாதி, நானாஜி மற்றும் அவரது இளம் பத்திரிக்கை நிருபர் ஷியாம் ஆகியோர் குருவின் நீதிக்கு புறம்பான செயல்களை பத்திரிக்கையில் எழுத ஆரம்பிக்க , குரு நீதியின் முன்னிறுத்தப் படுகிறார்.
மீண்டு வந்து பெரிய அரங்கில் தனது சக்தி குழுமத்தின் பங்குதாரர் கூட்டதில் உரையாற்றுவதுடன் படம் நிறைவு பெறுகிறது.
படத்தில் ஷியாம் மற்றும் முதுகு தண்டுவட நோயினால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் இருக்கும் மீனாட்சி இருவருக்கும் இடையிலான காதல் கிளைக் கதையாக சொல்லப் படுகிறது. சொல்லப் போனால் இந்தக் கிளைக் கதையை தனிப் படமாகவே எடுக்கலாம்.
திருபாய் அம்பானியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமாக பத்திரிக்கைகளில் சொல்லப் படுகிறது. ஆதலால் படம் பார்க்கும் போது சம்பந்தப் பட்ட கதாபாத்திரங்கள் யார் யார் என இணைத்துப் பார்க்க தோனுகிறது,
தொழில்நுட்ப் விசயங்களை பொறுத்த மட்டில், மணிரத்னம் தான் ஒரு சிறந்த மேலாளர் என்பதை மீண்டும் நிருபித்துள்ளார். ரஹ்மானின் பாடற்கள் ஏற்கனவே பெரிய அளவில் பேசப்படுகின்றன. ராஜிவ் மேனனின் ஒளிப்பதிவு குளிர்ச்சியாக உள்ளது.
"டும்டும்டும்" அழகம்பெருமாளின் திருநெல்வேலி பாஷை வசனங்கள் அழகாகவே உள்ளது.
"நீ இன்னக்கி என்னையப் பத்தி எழுதுகிட்டு இரு, நான் நாளைய என்னோட முன்னேற்றத்தை யோசிச்சுட்டு ஜெயிச்சு போய்கிட்டே இருப்பேன்"
"ஐயா நான் வியாபாரி, சலாம் போட வேண்டிய இடத்தில சலாம் போட்டு , எட்டி மிதிக்க வேண்டிய இடத்தில் எட்டி மிதிப்பேன்"
போகிற இடங்களில் எல்லாம் "எதிர்மறையான வார்த்தைகளையே கேட்கும்போதெல்லாம், நான் ஜெயிப்பேன் என்று வார்த்தையாலும் கண்களாலும் குரு சொல்லும் இடங்கள் நிச்சயம் உற்சாகத்தையும் புத்துணர்வையும் கொடுக்கும்.
படம் ஹிந்தியில் இருந்து டப் செய்யப் பட்டு இருந்தாலும், சூர்யாவின் குரல் படத்தை தூக்கி நிறுத்துகிறது. குருவாக சிறப்பாக நடித்து இருக்கும் அபிஷேக்கின் முக பாவனைகள் அனைத்தையும் குரலில் கொண்டு வந்துள்ளார். கிட்டத்தட்ட சூர்யாவே நடித்தது போல் ஒரு உணர்வு இருந்தது. "ஈகோ" இல்லாமல் டப்பிங் கொடுததமைக்காகவே சூர்யாவைப் பாராட்டலாம்.
நானாஜியாக நடித்து இருக்கும் மிதுன் சக்கரபர்த்திக்கு நாசர் குரல் கொடுத்துள்ளார். படத்தில் மாதவனும் சொந்தக் குரலில் நடித்துள்ளதால் படம் ஆரம்பித்த சிறிது நேரத்திற்குப் பின் நாம் "டப்பிங்" படம் பார்ர்கிறோம் என்ற உணர்வு மறந்து போய் விடுகிறது.
மணிரத்னத்தின் முந்தையப் படங்களின் "ஹேங் ஓவர்" இதிலும் உள்ளது,
1. திருமணத்திற்கு முந்தையக் காதல் (தோல்வி)
2.இரட்டைக் குழந்தைகள்
3. தளபதி, ராக்கம்மா கையைத் தட்டு பாடலின் தூண்கள் கொண்ட மண்டபம்
4. காதற் காட்சிகள்
5. திருமலை நாயக்கர் மஹால்
குறை என்று சொல்லப் போனால், மணி வழக்கம் போல "மேலோட்டமான" அணுகுமுறையை யே இந்தப் படத்திலும் கையாண்டுள்ளார். எது தவறு எது சரி என்று சொல்லாமலேயே படம் முடிகிறது.
உயிரே படத்தில் பாடற்வரிகள், தமிழில் தெளிவாக இருந்தன, ஆனால் இந்தப் படத்தில், இசையில் தமிழ் வார்த்தைகளை உள்வாங்க கடினமாக இருந்தது.
குஜாராத்தி கெட்டப்புடன் "இலஞ்சி கிராமம் , திருநெல்வேலி மாவட்டம்" என்று காட்டுவதை தவிர்த்து இருக்கலாம்.
நிறைகள் நிறைய உண்டு, அபிஷேக் நடிப்பு, தெரிந்தக் கதை என்றாலும் ஓரளவுக்கு சுவாரசியமாகவே எடுத்து சென்றமை, கதை ஓட்டத்துடன் கூடிய "பெல்லி" நடனம், பழைய 50-60 களின் செட்டிங், எல்லாவற்றுக்காகவும் பார்க்கலாம்.
தடைகளை தாண்டி வெற்றி பெற்ற்வனி(ரி)ன் கதை , வெற்றிக்காக வெறியுடன் இருப்பவர்களுக்கு,
குருநாத் தேசிகன் - அபிஷேக் பச்சன் , குரல் - சூர்யா
சுஜாதா - ஐஸ்வர்யாராய் , குரல் ரோஹினி(???டைட்டிலில் பெயர் அப்படித்தான் போட்டார்கள்)
நானாஜி - மிதுன் சக்கரபர்த்தி , குரல் நாசர்
ஷ்யாம் - மாதவன்
மீனாட்சி - வித்யாபாலன் , குரல்,தீபா வெங்கட்(???)
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
10:26 PM
7
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: திரைப்பட விமர்சனங்கள்
Monday, December 11, 2006
தூம் -2 விமர்சனம்
நடைமுறை வாழ்க்கையில் நடக்க முடியாத, பார்க்க முடியாத சம்பவங்களை திரையில் பார்க்கும் போது நம்மை அறியாமல் ஒரு வித பரவசம் ஏற்படுவது இயல்புதான்(அவை நம்ப முடியாதவையாக இருப்பினும்).
தூம்-2 படத்தின் முதற்பாதி அப்படி ஒரு பரவசத்தை நிச்சயம் கொடுக்கும்.
அட்டகாசமான நமீபியா பாலைவன ரயிலில் (கிட்டத்தட்ட 15 நிமிடம். ) திருடும் காட்சியில் ஹ்ரித்திக் ரோஷன் அறிமுகமாகிறார். ஆஜானுபாகுவான தோற்றத்துடன் அவர் ஆடும் டைட்டில் பாட்டு பிரமிப்பு.
ஒப்பு நோக்கில் மிகவும் குறைவான ஆர்ப்பாட்டத்துடன் உதய் சோப்ரா, அபிசேக் பச்சன் , backwaters சண்டையில அறிமுகமாகிறார்கள்.
இண்டர்னேஷனல் திருடன்(ர்) "A" (ஹ்ரித்திக் ரோஷன்) வைப் பிடிக்க மும்பையில் பொறி வைக்கின்றனர் ACP ஜெய் (அபிஷேக்),சப்-இன்ஸ்பெக்டர் அலி (உதய் சோப்ரா) மற்றும் சோனாலி (பிபாஷா பாசு).
காதில் பூ சுற்றினாலும் , வைரத்தை ஹை-டெக் க திருடி விட்டு தப்பிக்கிறார் ஹிரித்திக்.
பிறகு ஒரு அருமையான சேசிங்.
போலி "A" வுக்காக ராஜஸ்தான் செல்லும் ஹிரித்திக், போலி "A" ஐஸ்வ்ர்யா ராயை காப்பாற்றுகிறார். (இங்க ஒரு சஸ்பென்ஸ்).
இதனிடையில் உதய் சோப்ராவுக்கு பிபாசா மேல் ஒரு கண். அதிலும் உதய் சோப்ரா பிபாசா வ்ரும் காட்சிகளில் கனவு கான்பது நிச்சயம் சிரிப்பை வரவழைக்கும்.
இரண்டாவது பாதி ஹ்ரித்திக் - ஐஸ்வர்யா காதல், இன்னொரு பிபாசா என கதை
பிரேசிலுக்கு இடம் பெயருகிறது. கிளைமேக்ஸ் சேசிங் வீடியோ கேம் சேஸ் போல இருந்தது.
பழைய அமிதாப் படங்களில் சசிகபூர் வருவதைப் போல இதில் அபிசேக் வருகிறார். உதய் சோப்ராவுக்கு காமெடி நன்றாகவே வருகிறது.
இது முழுக்க முழுக்க ஹ்ரித்திக்ரோஷன் படம். இந்தியாவின் சூப்பர் மேன் இமேஜ் இவருக்குத்தான். கிட்டத்தட்ட 8 கெட்டப்புகளில் வருகிறார்.
படத்திற்கு U/A எப்படிக்கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை.
படம் தமிழிலும் வந்துள்ளது.
ஹ்ரித்திக் ரோஷனுக்காக ம்ட்டும் படம் ஒரு முறைப்பார்க்கலாம்.
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
10:33 PM
13
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: திரைப்பட விமர்சனங்கள்
Wednesday, November 29, 2006
இரண்டு -- திரைப்பட விமர்சனம்
"ரெண்டு" என வழக்கியல் தமிழில் முதலில் பெயரிடப்பட்டு "இரண்டு" என தூய தமிழ் பெயருடன் இப்படம் வெளிவந்துள்ளது.
சுந்தர்.சி படம் என்றாலே "மினிமம் கியாரண்டி காமெடி" யுடன் மசாலாவும் தூக்கலாகவே இருக்கும். இப்படமும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
டைட்டிலுக்குப் பின் ஒரு கொலையுடன் படம் ஆரம்பிக்கிறது. அடுத்த கொலைக்கு தேதியும் குறிக்கப்படுகிறது.
"வர்றட்டா வர்றட்ட என் ஊரே வர்றட்டா" எனப் பாடிய பின் சென்னைக்கு வேலை தேடி , மேஜிக் ஷோ நடத்தும் தன் மாமா வடிவேலுவிடம் வந்து சேரும் முதல் மாதவன், "கடற்கன்னி" ஷோ நடத்தும் ரீமாசென்னிடம் காதல் வயப்படுகிறார்.
இதனிடையில் இன்னொருவர் தேதிக் குறிப்பிடப்பட்டு கொல்லப்படுகிறார். அடக் கொல்வது கருப்புக் கண்ணாடி போட்ட இரண்டாவது மாதவன்.
போலிஸ் முதல் மாதவனை கைது செய்கிறது.
இரண்டாவது பாதியில் நெம்பர் 2 , நெம்பர் ஒன்னைக் காப்பாத்தி "பிளாஷ்பேக்கில்" கதை போகிறது.
பெட்ரோல் வளம் கொழிக்கும் பூமியை நயவஞ்சகமாக கைப்பற்ற நினைக்கும் வில்லன் கும்பல் திருமணக் கூட்டத்தில் மாதவன்(2) வின் உறவினர் அனைவரையும் கொன்று குவிக்கிறது. மாதவன்(2), கண் பார்வை இழந்து தப்பிக்கிறார். வில்லன் கும்பலை நாள் குறித்து பழி வாங்குகிறார்.
"லொள்ளு சபா" சந்தானம் பிளாஷ்பேக் காமெடியனாகவே இப்போ வரும் படங்களில் எல்லாம் வருகிறார்.
ரீமாசென், அனுஷ்கா இரு கதாநநயகிகளும் படத்தில் நிறைய முறைக் குளிக்கிறார்கள்.
பிற்பாதியில் அதிக கலகலப்புடன் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் வில்லன் கும்பலால் கொல்லப்படும் காட்சிகள் கொஞ்சம் கொடூரமாகவே படமாக்கப்பட்டுள்ளது.
படத்திற்கு "A" சர்டிபிகேட். காமெடியும் "A" ரகம்தான். படத்தில் பாக்யராஜ் துப்பறியும் போலிஸ் அதிகாரியாக வருகிறார். மணிவண்ணன் லோக்கல் காமெடி வில்லனாக வந்து போகிறார்.
பாடல்கள் சுமார் ரகமே. துப்பறியும் காட்சிகளை இன்னும் சுவாரசியமாக எடுத்து இருக்கலாம். டைட்டிலில் சுபா பெயர் எல்லாம் போட்டார்கள்.
மாதவன் நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய முகம் ஹேர் ஸ்டைலுடன் நடித்துள்ளார்.
இப்படத்தைப் பற்றி மாதவன் Rediff யில்
Question : Rendu isn't exactly your type of film ?
It is a comedy, a fun film. I was quite bored after doing all this research on corporatisation of films. It was then that Sundar C told me, 'Come and do a fun film with me. Don't ask me the script or anything. Just trust me and do the film.' He said, 'give me 50 days'. And I had a ball in those 50 days.
Actually it was Abhishek Bachchan who told me to go and enjoy all films. He had learnt it from his father. I took his advice to heart and enjoyed Rendu. You can't be doing Kannathil Muthamittal or Anbe Sivam everyday.
இரட்டிப்பு மசாலா
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
5:54 AM
4
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: திரைப்பட விமர்சனங்கள்
Monday, October 02, 2006
Get well soon
உளவியல்ரீதியாக ஏற்படும் பாதிப்புகளை மையமாக வைத்து "நல்ல மனமாற்றத்தை" ஏற்படுத்தக் கூடிய தரமான படங்களை எடுக்கலாம் என்பதற்கு உதாரணம் "லகே ரகோ முன்னாபாய்"
கதை ஓட்டத்தை மட்டும் புரிந்து கொள்ளும் அளவே உள்ள என் ஹிந்தி{நன்றி அந்தக் கால தூர்தர்ஷன்} அறிவுடன் , நான் தியேட்டர் ல பார்த்த முதல் ஹிந்தி படம் "லகே ரகோ முன்னாபாய்"
ரேடியோ அறிவிப்பாளரின் மேல் பிரியம் கொள்ளும் சஞ்ஜய் தத் , அவர் நடத்தும் காந்தி பற்றிய "வினாடி-வினா" நிகழ்ச்சியில் "தில்லாலங்கடி" செய்து வெற்றி பெறுகிறார். அதன் பிறகு ஏற்படும் தொடர்ச்சியான சம்பவங்களுக்காக சஞ்ஜய் தத் காந்தி பற்றிய புத்தங்களைப் படிக்க ஆரம்பிக்கிறார். அதன் விளைவாக அவருக்கு ஏற்படும் "ஹாலுசினேஷன்" மற்றும் தொடர்ச்சியான ஹாஸ்யம் கலந்த நெகிழ்ச்சியான விசயங்கள் தான் கதை. "காந்தீயம்" இன்றும் , என்றும் ஏற்புடையது என்று படம் முடிகிறது.
மக்களே படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்
பின் குறிப்புகள்:
1. "Get well Soon " என்பது படத்தில் வரும் ஒரு சிந்திக்க வைக்கும் ஒரு ஒன் லைனர்
2. காந்தி பற்றிய எனது சில "எதிர்மறையான" எண்ணங்களை இப்படம் சற்று விலக்கியது.
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
7:02 AM
3
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: திரைப்பட விமர்சனங்கள்







