Sunday, February 20, 2011

இலையுதிர்காலம் - குறும்படம் - ஒரு பார்வை

எத்தனை குறைகள் நிறைகள் இருந்தாலும் புது முயற்சிகளை ஆதரித்து எழுதும் அனுபவம் அலாதியானது. என்னுடன் இங்கு படிக்கும் கல்லூரி நண்பர்களான ராஜேஷும் பிரபுவும் இணைந்து "இலையுதிர் காலம்" எனும் குறும்படத்தை ஸ்வீடனை மையமாகக் கொண்டு பரிட்சார்த்த முயற்சியாக எடுத்துள்ளனர்.

காது கேட்க, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிக்கு ஏற்படும் காதல் அனுபவமும், அதன் முடிவு என்ன என்பதை கிட்டத்தட்ட அரைமணி நேரத்தில் சொல்ல முயற்சித்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளின் காதல் அனுபவங்கள் , ஏனையவர்களைக் காட்டிலும் என்றுமே சுவாரசியமானது. சராசரி மனிதர்களின் காதல் கட்டுமானங்களில் அவை அடங்காது என்பதாலும், தனிப்பட்ட அனுபவத்தில் மாற்றுத்திறனாளிகளின் காதல் அனுபவங்களை கண்கூடாக பார்த்தவன் என்பதால் இந்தக் குறும்படத்தை ஆர்வமாகவே பார்க்க ஆரம்பித்தேன். எனது எதிர்பார்ப்பு பூர்த்தியாகவிட்டாலும் கூட, முதற்கட்ட முயற்சிகள் என்பதால் பாராட்டுகளைப் பதிவு செய்ய வேண்டியது கடமையாகும். நாயகனுக்கு நாயகியின் மேல் ஏற்படும் ஈர்ப்பிற்கான காரணங்களை மேலும் அழுத்தமாக கூறியிருந்தால், முதல் காட்சியில் கதையின் நாயகனைப்பற்றி சொல்லிவிடும் பொழுது ஏற்படுத்திய சுவாரசியம் குறும்படம் முழுவதும் நீண்டிருக்கும்.

நாயகனாக நடித்த ராஜ்குமார் சோக முகபாவங்களில் நன்றாக நடித்து இருந்தாலும், சிரிப்பிலும் தலையை ஆட்டுவதிலும் ஆரம்பகால விஜயை நினைவூட்டுகிறார். மலேசிய இசைக்கலைஞர் திலிப் வர்மனின் பாடலை பயன்படுத்திக் கொண்ட விதம் பாராட்டத்தக்கது என்றபோதிலும் தொடர்ந்து அதே பாடல் திரும்ப திரும்ப வருவது சலிப்பூட்டுகிறது.

காதுகேளா, வாய்பேச இயலாதவர்களின் மொழியான சைகை மொழியை திறம்பட பயன்படுத்தி இருக்கலாம். சைகை மொழியைப்பற்றி கொஞ்சம் ஆராய்ந்து படத்தில் இணைத்து, படத்தின் நீளத்தை குறைத்து இருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். நாயகனும் நாயகியும் ஏதோ ஒப்புக்காக சைகைமொழி பேசுவது போல இருக்கின்றது. மாற்றுத்திறனாளிகளின் காதல் திரையிலாவது கைகூடுமா என்று பார்க்கையில் ஏமாற்றமே மிஞ்சியது. கடைசி விபத்துக் காட்சி நன்றாக படமாக்கி இருந்தாலும் எதிர்மறை முடிவு தனிப்பட்ட அளவில் எனக்குப்பிடிக்க வில்லை.





சோர்வைத்தரும் நீளத்தைக் குறைத்து, காட்சிகளுக்கான காரணங்களை மேலும் அழுத்தமாக கூறியிருந்தால் இலையுதிர்காலம் மேலும் மனதைக் கவர்ந்திருக்கக் கூடும்.

அடிப்படை தொழிற்நுட்ப விசயங்களைக் கொண்டு இத்தனைதூரம் முயற்சி செய்த நண்பர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், திரும்ப திரும்ப காதல் பற்றி எடுக்கமால், தான் சார்ந்திருக்கும் நிலப்பிரதேசங்கள் பற்றியும், அதனூடான அனுப்வங்களையும் கதையோடு பதிவு செய்யக் கேட்டுக்கொள்கின்றேன்.

1 பின்னூட்டங்கள்/Comments:

Prabhu -This is how others call me said...

thanks a lot for your efforts to write a review on our film . it will be a great step for us to gain some more experience on viewers perception.thanks once again for your time and effort selva