Sunday, February 27, 2011

ஃபீனிக்ஸ் தேசத்திலே - குறுந்தொடர் (பாகம் 1)


மலிவு விலை விமான சேவைகளை இனி ஒரு போதும் பயன்படுத்திக்கூடாது என்ற உறுதிமொழியை முப்பது நிமிடங்களுக்குள் முன்னூறாவது
தடவையாக என்னுள் ஏற்றுக்கொண்டிருக்கையில் பாரிஸ் புவாய்ஸ் வரை பறக்கும் விமான சேவை ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வந்தது.

மாஸ்கோவில் குண்டு வெடித்ததற்கு வார்சாவாவில் ஏன் நெடி ஏறுகிறது என்பது புரியவில்லை. போலாந்து ரஷியாவின் முன்னாள் காதலி என்பதனால் கூட இருக்கலாம். அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தபடியே , விமான சேவையின் மையத்தின் முன் நீண்டிருந்த வரிசையில் விமானக் கட்டணத்துடன், இழப்பீடுத் தொகையையும் பெற்றுக்கொள்ளக் காத்திருக்கையில் என் பின்னால் நின்று கொண்டிருந்த பொன்னிறக் கூந்தல் அழகி புன்னகைத்தாள்.

புன்னகையில் சினேகத்துடன் ஈர்ப்பும் இருந்தது. தூரத்தில் மூன்று காவல்துறை அதிகாரிகள் என்னை கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்த பொழுதுதான் கவனித்தேன், அந்த ஒட்டு மொத்த வரிசையில் நான் ஒருவன் தான் மாநிறத்தோலுடன் இருந்தவன்.”ஆர் யூ ஃபிரம் இந்தியா? பொன்னிறக் கூந்தலழகியின் குரலும் முகப்பொலிவைப்போல கவர்ச்சியாகவே இருந்தது.

”யெஸ், பட், ஐ யம் தமிழ்” என்னுடைய பதில் அவளின் புருவத்தை உயர்த்த வைத்தது. வரிசை மெல்ல நகர்ந்து கொண்டிருக்கையில் அவளின் பெயர் கோஸியா பெட்ரோவ்ஸ்கா என அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

இந்த குஸ்கா, டிஸ்கி எனப்பெயர் எல்லாம் முடிந்தால் போலிஷ் தேசத்துக்காரியாகத்தான் இருக்கவேண்டும்.

”என் பெயர் கார்த்தி, நாளை மாலை பாரிஸில் வேலைக்கான நேர்முகத்தேர்விற்கு போக வேண்டும், எனது நேரம் சரியில்லை போல இந்தத் தடங்கல் இப்படி எதிர்பாராமல் ஏற்படுகிறது” என்றேன் ஆங்கிலத்தில்.

“அந்த நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு , சூழ்நிலையை சொல்லிவிட்டாயா”

“இன்னும் இல்லை, எனது கைபேசி சேவை இங்கு இயலவில்லை, இந்த விமான நிறுவனம் தரும் இரு இலவச அழைப்புகளில் ஒன்றை

நிறுவனத்திற்கு அழைக்கப்போகின்றேன்”

“மற்றொன்று, உனது காதலிக்கா?”

இறுக்கமான மனநிலையை அவளின் கேள்வி மேலும் இறுக்கமாக்கியது. சொந்தக் கதையை எல்லாம் சொல்லும் நேரம் இது இல்லை என்பதால்

”காதலித்து சில வருடங்கள் ஆகின்றன,
வேலைக் கிடைத்தப்பின்னர்தான் அதைப்பற்றி எல்லாம்யோசிக்க வேண்டும்”
எனக்கான பணத்தையும், அவர்கள்அளித்த இலவச
தொலைபேசிஅழைப்பில்
, எனது நேர்முகத் தேர்விற்கான பொறுப்பாளரைக் கூப்பிட்டு ,நிலைமையை விளக்கி ஸ்கைப்பில் நேர்முகத் தேர்வை அளிப்பதாகச் சொல்லிவிட்டு கோஸியாவிற்காக காத்திருந்தேன்.

“அடுத்து என்ன செய்யப்போகிறாய், கார்த்தி”

“ஏதேனும் ஒரு தங்குமிடத்தைப் பார்க்க வேண்டும், உங்களுக்கு ஏதேனும் இடம் தெரிந்தால் சொல்லுங்களேன், நான் போலாந்திற்கு வருவது இதுதான் முதன்முறை”

“உனக்கு ஆட்சேபனை இல்லை எனில், என்னுடைய இல்லத்தில் தங்கிக்கொள், உனது நேர்முகத் தேர்வையும் நன்றாக செய்

வியப்பாகவும் அதே சமயத்தில் கொஞ்சம் பயமாகவும் இருந்தது, மொழி தெரியாத தேசத்தில் வலிய வந்து, உதவி செய்வதாக சொல்லுகிறாளே!!

”பயப்படாதே, உன்னை ஒன்றும் செய்து விட மாட்டேன், உள்ளுணர்வு உனக்கு உதவச் சொல்லியதால் அப்படிக் கேட்டேன்”

சில நிமிடங்கள் இடைவெளிக்குப் பின்னர்

“என்னுடைய முன்னாள் காதலன் ஒரு இந்தியன், இன்னும் சொல்லப்போனால் , அவனும் தமிழ்” கோஸியா சொல்லிக்கொண்டிருக்கையிலேயே காவல் அதிகாரிகள் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

தொடரும்

6 பின்னூட்டங்கள்/Comments:

said...

நல்லா இருக்கு. ஃபீனிக்ஸ் தேசத்திலே உயரப் பறக்க அட்வான்ஸ் வாழ்த்துகள்.

said...

ஒரு தொடருக்கு உரிய எல்லாவித அம்சங்களுடனும் - வார்த்தை ஜால ஜல்லியடி இல்லாமல் அருமையாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..

said...

நல்ல ஆரம்பம்...

said...

Valtukkal nallagaullatu ellutu todarungal.

said...

ஆரம்பம் நல்லா இருக்கு...

said...

அட!அப்புறம்?