Tuesday, March 01, 2011

ஃபீனிக்ஸ் தேசத்திலே - குறுந்தொடர் (பாகம் 2)

To read - ஃபீனிக்ஸ் தேசத்திலே - குறுந்தொடர் (பாகம் 1)
-----
அருகில் வந்த காவலதிகாரிகள் ஆங்கிலத்தில்,

”உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும், பாதுகாப்பு அலுவலகம் வரை வர இயலுமா?” எனக் கேட்டனர்

இத்தனைப் பேரை விட்டுவிட்டு என்னை வந்து ஏன் கேட்கிறார்கள், எனது நிறமா அல்லது எனது பெட்டியில் இருக்கும் பிறை நட்சத்திர அடையாளமா அல்லது இவை இரண்டினாலுமா !!! தெரியவில்லை.

கோஸியா, காவலதிகாரிகளிடம் போலிஷ் மொழியில் ஏதோ கேட்டாள். முகத்தில் கடுமையுடன் பதிலளித்தது போது எனக்கும் கொஞ்சம் பயமாகவே இருந்தது.

“கார்த்தி, பயப்படாதே வழக்கமான பாதுகாப்பு பரிசோதனைதான்”

--

பாதுகாப்பு சோதனை அறையில்,

”உனது பெயர் என்ன?’

”கார்த்தி ராமச்சந்திரன்”

“நீ இஸ்லாமியனா”

“இல்லை”

“எதற்கு பெட்டியில் பிறை நட்சத்திரம் அடையாளம் வைத்திருக்கிறாய்?”

“இது எனது நண்பன் பரிசளித்தது?”

”பெட்டியைத் திற” என்று ஒருவன் சொன்னான், மற்றொருவன் எனது பாஸ்போர்ட்டைக் கேட்டான்.

பெட்டியைத் திறந்தவுடன், ஒன்று ஒன்றாக வெளியே எடுத்து வைத்தேன். நான்கு நான்கு உருப்படிகளாக சட்டைகள், கால்சட்டைகள், ராமராஜ் உள்ளாடைகள் எடுத்து வைத்தவரை பிரச்சினை இல்லை. அடுத்து எடுத்து வைத்தது, பொதுவுடமைத் தலைவர் விளாடிமிர் லெனின் எழுதிய

“வாட் ஈஸ் டு பி டன்?" புத்தகம் , அவரின் அட்டைப்படத்தைப் பார்த்ததும் ஏற்கனவே கோபமாக இருந்தவர்களின் முகம் மேலும் கடுமையானது.”இந்தியர்கள் இதில் எல்லாம் இன்னும் நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா?”

எனது பொதுவுடமை சார்பு நிலைப்பாட்டை எல்லாம் விளக்குவதற்கு எல்லாம் இதுவல்ல நேரம் அல்ல, என்று

”வாழ்க்கையில் நேர்மறைத் தத்துவங்களைப் படிப்பதைப்போல எதிர்மறைத் தத்துவங்களையும் படித்து வைத்துக் கொள்ளவேண்டும்? பொய் சொன்னாலும் தீர்க்கமாக சொன்னேன்.

எதிர்மறை என்று சொன்னவுடன், காவலதிகாரிகளின் முகத்தில் முதன்முறையாகப் புன்னகை. நான் அடுத்து எடுத்து வைத்தப் புத்தகம் தமிழீழ வரலாறு, அட்டையில் பிரபாகரன் கையில் சிறுப் புலிக்குட்டியைத் தடவிக்கொடுத்தபடி இருக்கும் ஒரு தமிழ்ப் புத்தகம்.

“இதுவும் எதிர்மறைப் புத்தகமா?” எனக்கேட்டனர்.

“இது நேர்மறை, புலிகளைப் பற்றிய புத்தகம், இந்தியாவின் தேசியவிலங்கு புலி தான்” என்றேன். முழு உண்மையைச் சொல்லவில்லை என்றாலும், நான் சொன்னது முழுப்பொயும் இல்லை.

காவலதிகாரிகளின் சந்தேகத்திற்கு இடம் கொடுக்கும்படி எதுவும் என்னிடம் இல்லாததால், அவர்களே பெட்டியை மீண்டும் அடுக்க உதவி செய்தனர். புத்தகங்களை மட்டும் கையில் எடுத்துக் கொண்டேன். அங்கிருந்தவர்களில் மூத்தவராகத் தெரிந்த ஒருவர்,

“எனக்கு பாலிவுட் படங்கள் என்றால் உயிர், அடுத்து ஷாருக்கான் படம் எப்பொழுது வெளியாகும்” என்றார்.

ஷாருக்கான் ஒரு இஸ்லாமியன் எனச் சொல்லவேண்டும் என துடுக்குத்தனம் தூண்டினாலும், இருக்கும் சூழலில் எதிலும் சிக்கிக்கொள்ளக்கூடாது என வாயை அடக்கிக்கொண்டு,

“நான் பாலிவுட் இந்திப்படங்களைப் பார்ப்பதில்லை, நான் தென்னிந்திய மொழிகள் படங்கள் மட்டுமே பார்ப்பவன்” எனச் சொல்லி அவர்களிடம் விடைபெற்றேன்.

வெளியில் காத்திருந்த கோஸியா, என் கையில் இருந்த புத்தகத்தைப் பார்த்து “வாவ், பிரபாகரன் ... பெர்பெக்ட் மேன்” என்றாள்.
கையில் இருந்த புத்தகங்களை வாங்கிக் கொண்டவள், விளாடிமிர் லெனினின் அட்டைப்பட புத்தகத்தைப் பார்த்தவுடன் “ஐ ஹேட் கம்யூனிசம், லெனின் அண்ட் கோ” என என்னிடமே திருப்பிக் கொடுத்தாள்.

பெண்கள் எரிச்சல்படும் அழகை ரசிக்கும் காலக்கட்டத்தை எல்லாம் கடந்துவிட்டேன் என்பதை சலனமில்லாத மனம் நினைவூட்டியது.

கிட்டத்தட்ட, சென்னையின் மையத்தில் இருந்து செங்கற்பட்டையும் தாண்டி இருக்கும் புறகரப்பகுதிக்கு பயணம் செல்வதைப்போல , மூன்று பேருந்துகள் மாறி நெடிய பயணத்தில் செல்லும் வழியெல்லாம், இது இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானியர்களால் நிர்மூலமாக்கப்பட்ட கட்டிடம், மீண்டும் கட்டுமானம் செய்யப்பட்டது. என்றாள்.

புதிதாகக் கட்டிக்கொண்டிருக்கும் விளையாட்டரங்கத்தைக் காட்டி, ”இங்கு தான் அடுத்த ஐரோப்பிய கோப்பை கால்பந்தாட்டப்போட்டிகள் நடைபெறவிருக்கின்றன, முன்னர் இங்கு வியட்நாமியர்களும் கொரியர்களும் பெரிய சந்தை வைத்திருந்தனர், அவர்களை விரட்டிவுட்டு இங்கு நிர்மாணிக்கிறார்கள்” என்றாள். கிட்டத்தட்ட காவிரி ஆற்றைப்போல ஒரு ஆற்றைக் கடக்கையில், இதுதான் வார்சாவ் நதி என்றாள்.
ஆற்றில் பனிப்படலத்துடன் நிறையவே தண்ணீர் இருந்தது.

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரப் பயணத்தில் ஒரு நாளுக்கான தகவல்களை அடுக்ககிக்கொண்டேபோனாள். பசி வேறு வயிற்றைப்பிடுங்கியது, எப்பொழுதடா இவளின் வீடு வரும் என்றிருந்தது. ஒரு வழியாக வந்த கடைசி பேருந்து நிறுத்தத்தில் இருந்து 10 நிமிடங்கள் நடைக்குப்பின்னர் அவளின் வீடு வந்தது. முதல் தளத்தில் அவளது வீடு, ஒன்று இரண்டு என ஆங்கிலத்தில் படிக்கட்டுகளை எண்ணியபடியே கோஸியா மாடி ஏறினாள். வீட்டுக்கதவைத் திறக்கும்பொழுது, பீமா திரைப்படத்தின் “எனதுயிரே எனதுயிரே” பாடல் ஒலித்தது, ஒருக்கணம் எனது கைபேசியோ எனப்பார்க்க, அதே சமயத்தில் கோஸியா அவளின் கைபேசியை எடுத்து யாருடனோ பேசிமுடித்துவிட்டு “இந்தத் தமிழ்ப்பாட்டு எனக்கும் அவனுக்கும் பிடித்தமானப் பாட்டு, அதனால் தான் இதை எனது பொது அலைபேசி மணியாக வைத்திருக்கின்றேன்” என்றாள்.

“எனக்கும் பிடித்தப்பாட்டுதான்” என்ற எனது கவனம் சுவற்றில் மாட்டியிருந்த படத்தில் பதிந்தது , அதில் கோஸியாவுடன் ஒரு திராவிட முகம், அனேகமாக கோஸியா சொன்ன அவளின் முன்னாள் காதலானாக இருக்கக்கூடும், ஆனால் அவனின் முகம் எனக்குப் பரிச்சயமான முகமாகப் பட்டது.

தொடரும்

6 பின்னூட்டங்கள்/Comments:

said...

எனக்கு ஒரு சந்தேகம் அது புலி குட்டியா இல்ல சிறுத்தை குட்டியா ???

said...

மனதிற்குள் சொல்ல நினைத்ததும், சொன்னதும் வெகு ஜோர்!

said...

அந்த முகம் உங்க முகமோ...

said...

உங்களது எழுத்து நடை என்னை வெகுவாக கவர்ந்தது..வாழ்த்துக்கள்!

said...

ஆஹா சஸ்பென்ஸா???

said...

என்ன சார் சஸ்பென்ஸ் வச்சுட்டீங்க..சீக்கிரம் சொல்லுங்க சார்!