Saturday, March 12, 2011

ஃபீனிக்ஸ் தேசத்திலே - குறுந்தொடர் (பாகம் 3)

ஃபீனிக்ஸ் தேசத்திலே, இரண்டாம் பாகத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்
---------

கோஸியாவுடன் புகைப்படத்தில் இருந்த திராவிட, தமிழ் முகத்தை உற்றுக்கவனித்தேன், தமிழ் நடிகர் விஷாலைப்போல முகச்சாயலில், ஆரம்பகால தோனியைப்போல நீண்ட தலைமுடியுடன் கருப்புக் கன்னத்தை கோஸியாவுடன் ஒட்டியபடி புகைப்படத்திற்கு காட்சியளித்து இருந்தான்.
இவனைப்போல இருப்பவர்களைப்பார்த்திருக்கின்றேன், ஆனால் இவன் எனக்கு அறிமுகமானவன் இல்லை.

நான் சுவீடன் வருவதற்கு முன்னர், வெளிநாட்டில் இருப்பவர்கள், குறிப்பாக இந்தியர்கள் நீண்ட தலைமுடியை வைத்திருப்பது நவநாகரிகத்தின் மற்றொரு அடையாளம் எனத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். இங்கு வந்த பிறகுதான் தெரிகிறது, தலைமுடியை வெட்ட தலையைக்கொடுக்க குறைந்தது இந்திய ரூபாயில் 1000 ஆவதால், எல்லோரும் கொண்டைபோட்டு அலைகின்றனர் என, நானே ஆறு மாதங்களுக்கு முன்னர் பெண்களே ஆசைப்படும் அளவிற்கு கூந்தல் வைத்திருந்தவன்தான். தற்பொழுது காக்ககாக்க சூரியாவைப்போல கச்சிதமாக இருக்கும் எனது தலைவெட்டை தடவிக்கொண்டிருக்கையில், கோஸியா காப்பி கோப்பைகளுடன் வந்தாள்.

”இந்தக் கருப்பனை ஆரத்தழுவி ஆறு மாதங்கள் ஆகின்றன, சென்ற கோடை இறுதியில் சென்றவன், சில மாதங்கள் தொடர்பில் இருந்தான், பின்னர் தொடர்பை முழுவதுமாகத் துண்டித்துக்கொண்டு விட்டான்”

”ஸ்கைப், ஃபேஸ்புக், ஆர்குட் இதில் ஏதாவது ஒன்றிலாவது அவனைக் கண்டுபிடிக்க முடிந்ததா?”

”எல்லாவற்றையும் அழித்துவிட்டான் , மின்னஞ்சல்கள் கூட திரும்பிவந்துவிட்டன” அவள் கண்களில் ஏக்கம் பரிதவிப்பு எல்லாம் அவள்

கண்களில் ஒரு சேரத் தெரிந்தது, என் கண்களோ அவள் கண்களில் இருந்து அவளின் கழுத்தின் கீழ் வரை ஊசலாடிக்கொண்டிருந்தது. காமத்தைத் தொலைத்து, கனிவான பேச்சைக் கொடுக்க மனம் எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியையைத் தழுவிக் கொண்டிருக்கையில், அவளே உள்ளே
எழுந்துப்போய் குளிருக்கான , கழுத்துவரை நீளும் முழுக்கை ஸ்வெட்டரைபோட்டுக்கொண்டு வந்துவிட்டாள். அந்த அறையில் உண்மையிலேயே குளிர் அதிகமாகத்தான் இருந்தது. ஆனால் எனக்கு என்னமோ என் பார்வையின் வீச்சைத் தவிர்க்கத்தான் என்பதாகப் பட்டது.

”கார்த்தி, உன்னைப்பற்றி சொல், என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”

“கணினித் துறையில் முதுகலைப்பட்டத்தை, சென்ற மாதம்தான் முடித்தேன், ஸ்வீடனில் கார்ல்ஸ்க்ரோனா நகரம் உனக்குத் தெரியுமா?

அங்குதான் படித்தேன்”

“தெரியும், ஸ்வீடனின் முக்கியக் கடற்படைத்தளம், சோவியத் காலங்களில், போலாந்தைத் தாக்க அவர்கள் எப்பொழுதும் அங்கிருந்துதான்

விழிவைத்துக் காத்துக்கொண்டிருப்பார்கள்”


“ம்ம்ம்ம்”

“அப்படியும் ஒருதடவை ரஷியாவின் நீர்மூழ்கிக் கப்பல் அங்குபோய் கதிகலங்க வைத்துவிட்டு வந்தது, வரலாற்றை விடு, உன்னைப்பற்றி மேலும்

சொல்” அவளின் பேச்சிற்கு தலையாட்டிக்கொண்டே அவளின் காப்பிக்குடிக்கும் அழகை காமத்தைக்கடந்தும் ரசித்துக்க முடிந்தது.

”இப்பொழுது வேலைத் தேடிக்கொண்டிருக்கின்றேன், சுவீடனில் ஸ்வென்ஸன், நீல்ஸ்ஸான் போன்ற துணைப்பெயர்கள் இல்லாதிருப்பவர்களுக்கு

வேலைக்கிடைப்பதில்லை” என்னுடைய ஆதங்கத்தைக் காட்டினேன்.

“ஸ்விடிய மொழி கற்றுக்கொண்டாயா?, இங்கிலாந்து நீங்கலான ஐரோப்பியர்களுக்கு ஆங்கிலம் இரண்டாம்பட்சம்தான் ... டிராட்ஸ்கியிடம்

எவ்வளவோ கேட்டும் அவன் போலாந்திய மொழிப் படிக்கவே இல்லை”

”டிராட்ஸ்கி யார்? உன் காதலனா?”

”ஆமாம், டிராட்ஸ்கி பாண்டியன் , இங்கு வார்சாவா பல்கலைகழகத்தில்தான் படித்தான், 18 மாதங்களுக்கு முன்னர், ஒர் இரவு நடனவிடுதியில்

சந்தித்துக்கொண்டோம், அந்த சமயத்தில் காதல் தோல்வியில் இருந்தேன், டிராட்ஸ்கியின் ஆறுதல் வார்த்தைகள் பெரிய பலமாக இருந்தது,

சிலமாதங்களில் என்னுடனேயே வந்துத் தங்கிக்கொண்டான், பிரியமாகத்தான் இருந்தான், என்ன காரணம் எனத் தெரியவில்லை, தொடர்பில்

இல்லை” கண்கள் கலங்கிவிடுமோ எனப் பயமாக இருந்தது, கோஸியாவின் கண்கள் அல்ல, எனது கண்கள். கோஸியாவின் பேச்சில்

உன்னதமான நேர்மை இருந்தது. வெள்ளைக்காரப் பெண்ணின் அன்பை சுயலாபத்திற்கு டிராட்ஸ்கி பயன்படுத்திக்கொண்டானோ என எனக்கு ஒரு

சந்தேகம் வந்தது.

“சரி கார்த்தி, நீ குளியலறையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமானால், இப்பொழுதே பயன்படுத்திக்கொள், நான் அடுத்துக்

குளிக்கப்போகின்றேன், வெளியே வருவதற்கு எப்படியும் ஒரு மணி நேரமாவது ஆகும்”

அவள் குளிக்கப்போவதற்கு முன்னால் எனக்கு இணைய இணைப்பிற்கான விபரங்களைக்கொடுத்தாள். தொலைக்காட்சியில் பிபிசியை ஓடவிட்டு
அவள் குளியலறைக்குச் சென்ற பின் தாழிடும் சத்தம் தெளிவாகக் கேட்டது. ஐந்தாறு வருடங்களுக்கு முன்பாக இது போல சூழல் இருந்திருந்தால்
தமிழ்த் திரைப்படங்களில் வருவதைப்போல அசட்டுத்தனமாக ஏதேனும் யோசித்து இருப்பேன். உண்ட வீட்டிற்கு இரண்டகம் எல்லாம் தற்பொழுது
யோசிக்காமல் எனக்கான மின்னஞ்சல்களைப் படித்தபின்னர் பேஸ்புக் தளத்தை திறந்து அடுத்தவர்களின் அன்றாட வாழ்க்கைகளை சுவாரசியமாகப் பார்த்துக்கொண்டிருந்தபொழுது ஒரு பொறித்தட்டியது. டிராட்ஸ்கி பாண்டியன் என்பதைத் தமிழில் தேடினால் என்ன என்று,

முதல் முயற்சியிலேயே, திருத்தம் செய்யப்பட்டு நேர்த்தியாக தலைவாரிய முகத்துடன் டிராட்ஸ்கி பாண்டியனின் முகப்பு வந்து விழுந்தது. நண்பர்களைத் தவிர வேறு யாருக்கும் விபரங்கள் தெரிய அனுமதி கொடுக்கப்படவில்லை. எனக்கு டிராட்ஸ்கிக்கும் பொதுவான நண்பர்களும் இல்லை. எதேச்சையாக முகப்பில் இருக்கும் படத்தை அமுக்கி உள் நுழைய, அதில் முந்தைய முகப்புப்படங்கள் வரிசையாக இருந்தன.

கடவுளே!!!....
கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும், அதிர்ச்சியான விசயங்களைப் பார்க்கையில் கடவுளைத் தவிர வேறு யாரையும் அழைக்கத் தோன்றுவதில்லை.

டிராட்ஸ்கி பாண்டியனின் திருமணப்படம், தமிழகத்திற்குச் சென்றபின்னர் திருமணம் செய்து கொண்டுவிட்டானா, ??? இல்லை, இல்லை.
திருமணக் கோலத்திற்கு பின்னால் இருந்த பெயர் , நாள் குறிப்பில் ஜூன் 2, 2006 என்று இருந்தது, அதாவது நான்கரை வருடங்களுக்கு முன்னர், கோஸியாவை சந்திக்கும் முன்னரே டிராட்ஸ்கி பாண்டியன் திருமணம் ஆனவனா? கோஸியா தனது பரிதாப நிலைமையை அறியாமல் உள்ளே எனதுயிரே எனதுயிரே பாடலை மழலையாக பாடிக்கொண்டே குளித்துக்கொண்டிருந்தாள்.

தொடரும்

5 பின்னூட்டங்கள்/Comments:

said...

நல்லா இருக்கு...

said...

மச்சி இது புனைவுதானா???
:) :)

said...

சார், கதை இப்பத்தான் சூடு பிடிக்குது..சொல்லுங்க..சொல்லுங்க!

said...

தொடர்கதைன்னா அடிக்கடி எழுதணும்பா!இல்லைன்னா கதை மறந்துடும்.!

Anonymous said...

அடுத்த திருப்பம் எப்பொழுது ?