Showing posts with label தமிழோவியம். Show all posts
Showing posts with label தமிழோவியம். Show all posts

Wednesday, January 05, 2011

இந்தியக் கிரிக்கெட் - கடந்த 10 வருடங்களில்

சூதாட்டத்தில் தனது பெயரையும் பொலிவையும் இழந்த கிரிக்கெட், தனது சந்தைப்படுத்தலின் மூலம் வேகம் விறுவிறுப்பின் வழியாக அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது இந்த 2001 - 2010 தசாப்தத்தில்தான். கண்ணியமிக்க கதாநாயகர்களின் ஆட்டம் என்ற தேன்கூடு கல்லெறிந்து கலைக்கப்பட்டபின்னர் குறிப்பாக இந்தியக் கிரிக்கெட்டை மீள் உருவாக்கம் செய்தவர்கள் தங்களை நிலைப்படுத்திக் கொண்டதும் இந்த பத்தாண்டுகளில் தான். உலகம் என்றால் அமெரிக்கா என இருப்பதைப்போல ஒரு காலத்தில் கிரிக்கெட் என்றால் இங்கிலாந்து என்ற மாயையை இந்தியா உடைத்ததும் இந்த பத்தாண்டுகளில் தான்.

கிரிக்கெட் பார்க்கும் நேரத்தில் உலகத்தை ஐந்து முறையாவது வலம் வந்துவிடலாம் என்ற சோம்பேறி பிம்பத்தை உடைத்து கால்பந்தைவிட சுவாரசியத்தைத் தந்த இருபதுக்கு இருபது ஆட்டத்தை தன்னுள் வரித்துக் கொண்டு கிரிக்கெட்டை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்ல தயாராக இருக்கும் இந்தத் தருணத்தில் கிரிக்கெட் வரலாற்றில் மைல்கற்களாக இருக்கும் இந்த பத்தாண்டுகளில் நடந்த இந்தியக் கிரிக்கெட் நிகழ்வுகளை மறுபார்வை செய்வோம்.

கனவில் மட்டும் நடக்க சாத்தியம் என நினைத்திருந்த வெற்றிகளை சமீபகாலங்களில் இந்திய கிரிக்கெட் அணி அடிக்கடி கைக்கொண்டாலும் இதற்கு முதன்முதலில் அடித்தளம் இடப்பட்டது 2001 ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான். தொடர்ந்து 16 டெஸ்ட் வெற்றிகளைப் பெற்று பெயரில் மட்டும் கங்காருவைக் கொண்ட வேங்கையாக ஸ்டீவ் வாவ் தலைமையில் இந்தியா வருகிறது. இன்று வரும் தொடரும் பழக்கமான முதல் ஆட்டத்தில் மரண அடி. இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் கோல்கத்தா, எத்தனை முறை எழுதினாலும் வாசித்தாலும் பார்த்தாலும் அலுக்காத , திராவிட் - லக்‌ஷ்மண் இணையாட்டம் இந்தியவிற்கு பெருமையான வெற்றியைத் தருகிறது.


1983 உலகக்கோப்பை வெற்றிக்கு இணையான வெற்றி எனப்பார்க்கப்படும் கோல்கத்தா டெஸ்ட் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு புது முகத்தை அளித்தது. கங்குலி அந்த முகத்தின் கிரீடம் ஆனார். கிரீடத்தின் முத்துக்களாக விவிஎஸ் லக்‌ஷ்மன், திராவிட், ஜாகிர்கான், ஹர்பஜன் சிங், சேவக்,யுவராஜ்,முகமது கையிப் ஆனார்கள். டெண்டுல்கரும் கும்ப்ளேவும் முகத்தின் பிரதிபலிப்பு ஆனார்கள்.




2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை முன்னேறியது, பாகிஸ்தானில் முதன்முறையாக டெஸ்ட் தொடர் மற்றும் ஒரு நாள் தொடர்களைக் கைப்பற்றியது, ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை சமன் செய்தது, ஏனைய அணிகளுடன் குறிப்பிடத்தகுந்த ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெற்றது என கங்குலி தலைமையில் ஏறுமுகம் ஆன இந்திய கிரிக்கெட் பத்தாண்டுகளின் மத்தியில் மீண்டும் மண்ணைக்கவ்வ ஆரம்பித்தது. கழுத்தில் வெள்ளை கைக்குட்டையைக் கட்டிக்கொண்டு மட்டையடிக்கும் லக்‌ஷ்மனின் புகைப்படம் தரும் உற்சாகத்தைவிட அதிகம் தருவது, தாடையில் அடிபட்டு , கட்டுப்போட்டுக்கொண்டு 14 ஓவர்களை வீசியதுடன் லாராவை ஆட்டமிழக்கவும் செய்தார், இந்திய அணிக்கு போர்க்குணத்தை விதைத்தவர் அணில் கும்ப்ளே என்பதற்கு மறு பேச்சில்லை. அனில் கும்ப்ளேவின் இந்த போர்க்குணமே இந்திய அணியின் கௌரவத்தை இந்த தசாப்தத்தின் பிற்பகுதிகளில் மீட்டெடுக்க உதவியது.




90களை நினைவூட்டிய தொடர் தோல்விகள் , சொந்த ஆட்டத்திறனின் வீழ்ச்சி, இந்திய அணிக்கு கிட்டத்தட்ட தரித்திரமாக வந்து சேர்ந்த கிரெக் சாப்பலுடனான பிரச்சினை ஆகியன கங்குலியின் தலைமைக்கு சிவப்பட்டை காட்டப்பட்டதுடன், அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நிரந்தர ஏவி.எம்.ராஜன் ராகுல் திராவிட் அணித்தலைவர் ஆனார். நீண்ட காலத்திற்குப்பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராகவும், இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் டெஸ்ட் தொடரை வென்ற பெருமையுடன் இவரும் ராஜினாமா செய்தார். 2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிகளில் முதல் சுற்றுடன் வெளியேறியது பெற்ற வெற்றிகளை மறக்கடிக்கச் செய்தது.

அணித்தலைமையை ஏற்க டெண்டுல்கர் மறுக்க, நான் இதற்காகத்தானே 118 டெஸ்ட் ஆட்டங்களாகக் காத்திருக்கின்றேன் என்று ஒருவர் எழுந்து கை உயர்த்தினார். ”கிரிக்கெட் நெறிமுறைகளின் படி கண்ணியமாக ஆடியது ஒரு அணி மட்டுமே” என்று ஆஸ்திரேலியாவை அதிரச்செய்த அனில் கும்ப்ளே. பாகிஸ்தானுடன் ஆன டெஸ்ட் தொடரை வென்றாலும், போதிய பயிற்சியின்றி 2007-08 ஆஸ்திரேலியா தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா சரண் அடைந்தது. சிட்னியில் நடுவர்களின் தடுமாற்றத்தினாலும் ஆஸ்திரேலியா அவ்வப்பொழுது ஆடும் ”நெறிமுறைகளுக்குட்பட்ட” ஆட்டத்தாலும் சமனாகும் ஆட்டும் தோல்வியில் முடிந்தது. இதனிடையில் ஹர்பஜன் - சைமண்ட்ஸ் பிரச்சினை மேலும் தூபம் போட்டது. அடுத்து ஆடப்போகும் மைதானம் பெர்த். பெர்த்தில் சாதரணமாக பந்து வீசினாலே முகத்திற்கு எகிறும் ஆடுகளத்தில், இந்தியா வழக்கம்போல சுருண்டு விடும் என்ற எதிர்பார்ப்பில் கிரிக்கெட் உலகம் காத்திருக்க, இஷாந்த் சர்மா, ஆர்.பி.சிங், பதான் ஆஸ்திரேலியாவை சுருட்டி ஓட ஓட விரட்டினர். பிரச்சினைக்குரிய சிட்னி ஆட்டத்திற்குப்பின்னர் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளில் வெல்லவே இல்லை. நன்றாகக் கவனித்துப்பார்த்தால் ஆஸ்திரேலியாவின் தொடர் வீழ்ச்சி பெர்த் தோல்வியில் இருந்து துவங்குகிறது.

இதனிடையில் விளம்பர வருவாய் குறைபடும் என இந்தியா நீண்ட காலம் ஒதுக்கி வைத்து இருந்த இருபதுக்கு இருபது போட்டிகளின் முதல் உலகக்கோப்பை தென்னாப்பிரிக்காவில் துவங்கியது. பொன் முட்டையிடும் வாத்து என அப்பொழுது அறியாத இந்திய மூத்த ஆட்டக்காரர்கள் விலகிக்கொள்ள தோனி தலைமையில் இந்திய அணி கோப்பையை வென்றுத் திரும்பியது. அதிகாரப்பூர்வமற்ற ஐசிஎல், அச்செடுத்தாலும் அசலை விட நன்றாக எடுத்த ஐபிஎல் என இருபதுக்கு இருபது போட்டிகள் மற்றும் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தின. கங்குலி, கும்ப்ளே ஓய்வு பெற , அவர்களின் வெற்றிடம் இன்னும் நிரப்பப் படாமலே இருக்கின்றது. டெண்டுல்கர் , திராவிட் , லக்ஷ்மன் இன்னும் சில வருடங்களில் ஓய்வுப் பெறக்கூடிய சூழலில் அவர்களின் இடத்தை நிரப்ப யாரேனும் தயாராக இருக்கின்றார்களா என்றால் இல்லை என்பதுதான் பதில். நல்லதொரு டெஸ்ட் ஆட்டக்காரராக வந்திருக்க கூடிய முகமத் கயிப் தேர்வாளர்களின் தொலை நோக்குப் பார்வை இன்மையினால் தொலைந்துப் போனார். யுவராஜ் சிங் இந்திய அணியின் இளவரசராக வந்திருக்க கூடியவர் கடைசியில் தண்ணீர் தூக்கும் பனிரண்டாவது ஆட்டக்காரர் ஆனார்.

பந்து வீச்சைப் பொருத்தமட்டில் ஜாகிர் , ஸ்ரீசாந்த் , இஷாந்த் ஷர்மா , நெஹ்ரா , ஆர், பி, சிங் , முனாப் படேல் , இர்பான் பதான் என அடுத்த ஐந்து வருடங்களுக்காவது பிரச்சினை இல்லை. இந்திய ஆட்டக்காரர்கள் முகத்துக்கு நேர் வரும் பந்தை குனிந்து அரள்வதைப் பார்த்தே பழக்கப் பட்ட இந்திய ரசிகர்களுக்கு கீழ்காணும் படம் கண்டிப்பாக மகிழ்ச்சியைத் தரும்


இந்த பத்து வருடங்களில் இந்தியத் துணைக் கண்டத்தின் குணாதிசயங்களான வேகப்பந்து வீச்சைக் கண்டாலே உதறல் எடுத்தல் ,மந்தமான ஆட்ட வேகம் , டிரா செய்தால் போதும் என்ற மனப்பான்மை ஒழிந்து கடைசி நேரம் வரும் வெற்றியை வேட்டையாடும் எண்ண விதைகள் விதைக்கப்பட்டதே மிகப்பெரிய முன்னேற்றம் ஆகும்.

இந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் வெற்றிகள்

1. கொல்கத்தா - எதிரணி - ஆஸ்திரேலியா



2. பெர்த் - எதிரணி - ஆஸ்திரேலியா


3. டர்பன் - எதிரணி - தென்னாப்பரிக்கா


சிறந்த ஒரு நாள் போட்டி ஆட்டங்கள்




டெண்டுல்கரின் இரட்டை சதம் நிறைவேறிய தென்னாப்பிரிக்கவிற்கு எதிரான ஒரு நாள் ஆட்டம்



லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா இலங்கை இங்கிலாந்து முத்தரப்பு இறுதிப்போட்டி , 325 ஓட்டங்கள் என்ற கடும் இலக்கை எட்டி அடைந்து பிளின்டாப் செய்ததை கங்குலி செய்து காட்டிய ஆட்டம்

மறக்க முடியாத இருபதுக்கு இருபது ஆட்டம்



2007 இருபதுக்கு இருபது உலகக் கோப்பை இறுதி ஆட்டம்

எரிச்சல் ஊட்டிய விஷயம்
நிறவெறி தென்னாப்பிரிக்காவை ஒதுக்கி வைத்திருந்ததைப்போல செய்யாமல் அரசியலைப்போல விளையாட்டிலும் முதுகு சொறிந்து பழைய கோபாலன் டிராபி புகழ் இன வெறி இலங்கையுடன் உடன் கசக்க கசக்க கிரிக்கெட் ஆடியது.

கிரிக்கெட் எத்தனை வண்ண மயம் ஆனாலும் வெள்ளை உடைகளில் வாழ்க்கைப்போல ஆடப்படும் டெஸ்ட் ஆட்டங்களில் இந்திய சாதித்ததே கடந்த பத்து வருடங்களில் மிகப்பெரும் சாதனையாகும் அடுத்து வரும் வருடங்களில் சிறிய மீன் (இருபதுக்கு இருபது ) பெரிய மீனை(டெஸ்ட் போட்டிகள்) விழுங்கா விடாமல் இருந்தாலே இந்திய கிரிக்கெட்டும் அதன் வழியாக சர்வ தேச கிரிக்கெட்டும் காப்பாற்றப்படும்
------

தமிழோவியம் இணைய இதழுக்காக எழுதியது

Saturday, January 01, 2011

2011 - திகில் சிறுகதை

இலைகளைத் துறந்து நிர்வாணத்திற்கு வெட்கப்பட்டு பனியைப்போர்வையாக போர்த்திக் கொண்டிருந்த மரங்களையும் செடிகளையும் ரசித்தபடியே புது வருடக் கொண்டாட்டங்களுக்கு தயராகிக் கொண்டிருக்கும் சுவீடனின் தென்பகுதி நகரான கார்ல்ஸ்ஹாம்ன் நகர சாலை ஒன்றில் மோகனுடன் நடந்து கொண்டிருந்த பொழுது

“கார்த்தி, இன்னக்கி நைட் நியுஇயர் கல்லறையில கொண்டாடுவோமா!!”

நான் எதுவும் பதில் பேசவில்லை. எங்கள் வீட்டில் இருந்து சில நூறு மீட்டர்கள் தூரம் இருக்கும் கல்லறைத்தோட்டத்தை நாங்கள் கடந்து கொண்டிருக்கும்பொழுதுதான் அந்தக் கேள்வி வந்து விழுந்ததும் குறிப்பிட்டக் கல்லறைத்தோட்டம் கடக்கும்பொழுது மட்டும் மனதில் வழக்கமாக பரவும் சிலிர்ப்பு மீண்டும் எட்டிப்பார்த்தது.

போன வருடம் நடன கேளிக்கை விடுதிக்குச் சென்று ஏகத்துக்கும் ஆட்டம் ஆடியது போல இந்த 2011 யையும் கொண்டாடலாம் என்பதுதான் எனது எண்ணமாக இருந்தது.

”ஏதாவது பப்க்கு போகலாமே”

“ வித்தியாசமா டிரை பண்ணுவோம், உருளைக்கிழங்கு மாதிரி இருக்கிற இவளுகளைத் தடவி தடவி போரடிச்சுடுச்சு”

கடந்த வருடம் அம்முவிடம் நடன விடுதிக்குப் போக அனுமதி வேண்டி கெஞ்சிய கெஞ்சல்கள் கொஞ்சல்கள் நினைவுக்கு வந்து தொலைந்தது. யாரையும் தொடாமல் ஆடுவேன் என சத்தியம் செய்த பிறகே அலைபேசியில் முத்தத்துடன் அனுமதியும் வந்தது. வாழ்க்கையில் சிலபகுதியை மீண்டும் வாழவேண்டும் என ஆசிர்வதிக்கப்பட்டால் 2010 ஜனவரி 1 இல் இருந்து மீண்டும் அம்முவுடன் ஏற்பட்ட கடைசி சண்டைக்கு முதல் நாள் வரை மீள் அனுபவம் செய்யவேண்டும். அம்மு பிரிந்து போன இந்த ஆறு மாதங்களில் குடியைக் கற்றுக்கொண்டதைத் தவிர வேறு எதையும் இன்னும் பழகவில்லை. இந்தப் புது 2011 ஆம் வருடத்தில் இருந்து தடவலுடன் காமத்தையும் பழகவேண்டும் யோசித்திருந்தேன்.

”பயம் நு எதுவும் இல்லை, எதுக்கு அனாவசிய ரிஸ்க், சின்ன தடுமாற்றம் கூட பெரிய டேஞ்சர்ல கொண்டு வந்துவிட்டுடும், எனக்கு இந்த ஐடியா தோதுப்படல”

”கம் ஆன் கார்த்தி, இத்தனை வருஷம் மனுஷாளுங்களோட கொண்டாடுனோம், ஒரு வேளை பேய் பிசாசு இருந்தா அவங்களோடயும் சேர்த்துக் கொண்டாடுவோம்”

பக்கத்து அறை நண்பர்களில் சிலரும் மோகனின் கல்லறைத் தோட்டக் கொண்டாட்டத் திட்டத்தை அங்கீகரிக்க எனக்கும் வேறுவழியில்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிருந்தது. கோழிக்கறி வருவல்கள், மீன் குழம்பு, இரண்டு வோட்கா போத்தல்கள், பெரிய கேன் வைன், இருபது முப்பது பீர் டின்கள், வீடியோ கேமிரா , மடிக்கணினிகள் சகிதம் என ஆறு பேர் குளிருக்கு ஏற்புடைய ஆடைகளுடன் கல்லறைத் தோட்டத்திற்கு ஏற்கனவே இருந்த அரை போதையுடன் கிளம்பினோம்.

எனக்கு மட்டும் மனதில் ஏதோ தவறு நடக்கப்போகின்றது உறுத்திக் கொண்டே இருந்தது. போகும் வழியில் ஒவ்வொருவரும் அவரவருக்குப் பிடித்த 2010 யின் குறிப்பிட்ட நாட்களைப் பற்றி பகிர்ந்து கொண்டார்கள்.

மோகனுக்கு டெண்டுல்கர் 200 அடித்த நாள் பிடித்த நாள் என்றும் அந்த ஆட்டத்தை நேரிடையாகப் பார்த்திருக்கவேண்டும் என விருப்பப்படுவதாக சொன்னார். பேசிக்கொண்டே கல்லறைத் தோட்டத்திற்குள் எந்த அசம்பாவிதங்களும் இன்றி வந்து சேர்ந்தோம். மையமாக ஓரிடத்தில் பனிப்படலத்தைத் துப்புரப்படுத்திவிட்டு மதுபானக் கொண்டாட்டங்கள் ஆரம்பிக்க, எனக்கு பேய் பயத்தை விடவும் மரித்தோர் துயில் உறங்கும் இடங்களை அவமதிப்பதாக எங்களைப் போலிஸ்பிடித்துபோய் விடுவார்களோ
என்ற பயம்தான் மனதைக் கவ்வ ஆரம்பித்தது.

குடிபோதையில் நண்பர்கள் ஒவ்வொருவராக ஒரு கல்லறையின் மேல் படுத்துக் கொண்டு வீடியோவும் புகைப்படமும் எடுத்துக் கொள்ளும்பொழுதெல்லாம் அவமரியாதை செய்கின்றோமே என்ற குற்ற உணர்ச்சியை ஆல்ஹகால் சமன் செய்தது.

தேவாவின் கானாப்பாடல்களுக்கும் இளையராஜவின் குத்துப்பாடல்களுக்கும் ஒழுங்கற்ற ஆட்டம் பாட்டம் அரங்கேறிக்கொண்டிருந்தபொழுதுதான் மோகன் ஆடிக்கொண்டிருந்த கல்லறையின் பின்னாள் இருந்த மரத்தில் இருந்து ஒரு சுவிடீஷ் ஆள் வர, எனக்கு தூக்கி வாரிப்போட்டது. இரண்டு நண்பர்கள் மயங்கியே விழுந்தனர்.

”ரிலாக்ஸ் கய்ஸ், ஐயம் ராபர்ட் நீல்ஸ்ஸான்” என அந்த உருவம் அறிமுகப்படுத்திக்கொண்டது. வழக்கமான பேய்களுக்கான அடையாளங்கள் எதுவும் இல்லை. கால்கள் இருந்தன. கண்களில் அன்பான பொலிவு இருந்தது.

“பயப்படாதீர்கள், நான் பேயோ பிசாசோ இல்லை” என்ற ராபர்ட் நாங்கள் வைத்திருந்த விஸ்கி பாட்டிலை எடுத்து ஒரு மடக்கு குடித்து விட்டு எங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் கூறினான். சரியாக நள்ளிரவு 12.00 ஆகி இருந்தது.

மயங்கி விழுந்த நண்பர்களை தெளிய வைத்து எழுப்பி ராபர்ட்டையும் எங்களுடன் கொண்டாட்டத்தில் இணைத்துக்கொண்டோம்.

“இவன் மஃப்டியில் வந்த போலிஸா இருக்குமோ” என மோகனின் காதில் கிசுகிசுத்தேன்.

“நீங்க எப்படி இந்த நேரத்தில” என ராபர்ட்டிடம் கேட்டதற்கு, தான் ஒரு விஞ்ஞானி எனவும் கல்லறையின் அமைதி அவனுக்குப்பிடித்து இருப்பதாகவும் , வாய்ப்பு கிடைத்தால் இங்கேயே ஒரு வீடு கட்டி இருக்க விரும்புவதாகவும் சொன்னான். காலத்தைக் கட்டி நிறுத்துவது மரணம் மட்டுமே மரணத்தையும் காலத்தையும் ஆராய்ச்சி செய்பவன் ஆதலால் அடிக்கடி இங்கு வருவதாக சொன்னான்.


“நீங்க பார்க்கிறதுக்கு விக்கிலீக்ஸ் அசாஞ்சே மாதிரி இருக்கீங்க”

“யாரு அசாஞ்சே?”

ஸ்விடிஷ் ஆட்களுக்கு அசாஞ்சேன்னா கொஞ்சம் கிலிதான் , காட்டிக்க மாட்டானுங்க என்று மோகன் தமிழில் சொல்லியபடியே ராபர்ட்டின் பக்கம் திரும்பி

“உங்களுக்கு கேர்ள்பிரண்ட்ஸ் இருந்தா அவங்களையும் கூட்டிட்டு வந்து இருக்கலாமே” ஆங்கிலத்தில்

அடுத்த வருடம் அவர்களையும் இங்கே எதிர்பார்க்கின்றேன் என்று சொல்லியபொழுது எனக்குத் தோன்றிய அமானுஷ்ய உணர்வு அவன் தனது காரில் எங்களை வீட்டில் விடுவதாக சொல்லியபொழுது விலகியது.

இடையில் நான் ராபர்ட்டுடன் எடுத்தப் புகைப்படங்களைச் சரிப்பார்த்துக்கொண்டேன், அனைத்திலும் அவன் உருவம் பதிவாகி இருந்தது. பிரச்சினை யில்ல. இவன் பேயாக இருக்க முடியாது. வேண்டுமானால் போலிஸாகாவோ அல்லது எங்களைப்போல வெற்று சுவாரசியத்திற்காக இங்கு வந்திருப்பவனாக இருக்கக்கூடும் என முடிவு செய்தேன்.

அனைவரும் அவன் காரில் ஏறிக்கொண்டோம். சில நிமிடங்களில் வீடு வந்து சேர்ந்திடும் பயணம் எனோ அதிக நேரம் பிடிப்பதைப்போல எனக்குத் தோன்றியது. ஒரு வேளை ராபர்ட் சுற்றுப்பாதையில் போய் கொண்டிருக்கலாம் அல்லது அதிக குடிபோதை நேரத்தை மெதுவாகசெலுத்திக் கொண்டிருக்கலாம். கண்கள் மெல்ல செருக தொடர்பற்ற கடந்த வருட நிகழ்வுகள் ஒன்றின் பின் ஒன்றாக பின்னோக்கி கனவுகளாக வந்து கொண்டிருந்தது. போன வருடம் இதே அதிகாலைப்பொழுதில் தான் அம்முவுக்கு சத்தியம் செய்தபடியே நாகரிகமாக ஆடி நண்பர்கள் எல்லோரும் போதையில் இருக்க , அவர்களுடன் நான் தெளிவாக வந்து சேர்ந்தேன்.

எல்லோரும் இறங்கிக்கொண்டு அவனுக்குப் புத்தாண்டு வாழ்த்து சொல்ல அவனும் “ஹேப்பி நியு இயர் 2010” என சொல்லிவிட்டுப்போனான்.

“மச்சி , நம்மளை விட அவனுக்கு போதை ஜாஸ்தியாயிடுச்சு, ஸ்டுப்பிட் சுவிடிஷ் பெல்லோ, ஸ்டில் இன்னும் 2010”

கனவுகளின்றி நன்றாகத் தூங்கிப்போக அலைபேசி அடிக்க எடுத்துப் பேசினால்

”டேய் கார்த்தி” அம்முவோட குரல்...

”என்னடா சத்தத்தைக் காணோம், எவ்வளையாவது தொட்டு ஆடினியா... ஹேப்பி நியு இயர்டா “

“ஹேப்பி நியு இயர் அம்மு , ஹேப்பி நியு இயர் 2011”

“லூஸாப்பா நீ, அடுத்த வருஷம் 2010, குடிச்சியா”

“இல்லைடா புஜ்ஜிம்மா, ஜஸ்ட் டயர்ட்”

“சரி சரி நீ தூங்கு , இரண்டு மணி நேரம் கழிச்சு கூப்பிடுறேன்”

தலை சுத்தியது. மின்னஞ்சல்களைப் பார்த்தேன். அனைவரும் 2010 க்கான வாழ்த்துகளைச் சொல்லி இருந்தார்கள். செய்தி இணையதளங்களைப் பார்த்தேன் , 2009 வருடத்தின் முக்கிய சம்பவங்களைப் பட்டியலிட்டு இருந்தார்கள். உள்ளூர் செய்தித் தளத்தை வாசித்தேன், அதில்

பிரபல இயற்பியல் இளம் விஞ்ஞானி ராபர்ட் நீல்ஸ்ஸான் புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு திரும்புகையில் கார் விபத்து ஒன்றில் பலியானார் எனவும் அவர் கடைசியாக காலப்பரிமாணத்தில் முன்பின் நகர்தல் பற்றிய ஆராய்ச்சிகளை செய்து கொண்டிருந்தார்
எனக்குறிப்பிடப்பட்டிருந்தது. இணைய தளத்தின் முகப்பைப் பார்த்தேன், ஜனவரி 1, 2010தான்.

இந்த வருடமாவது ஒரு நாள் போட்டிகளில் இரட்டைச்சதம் அடிக்கப்படுமா , 2010ற்கான கிரிக்கெட் எதிர்பார்ப்பு செய்திகள் இணையப்பக்கம் மடிக்கணினியில் திறந்து இருக்க, அம்மு மீண்டும் அலைபேசியில் அழைத்தாள்.


“ அம்மு, ஹேப்பி நியு இயர் 2010 ”

-----