இந்தியக் கிரிக்கெட் - கடந்த 10 வருடங்களில்
சூதாட்டத்தில் தனது பெயரையும் பொலிவையும் இழந்த கிரிக்கெட், தனது சந்தைப்படுத்தலின் மூலம் வேகம் விறுவிறுப்பின் வழியாக அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது இந்த 2001 - 2010 தசாப்தத்தில்தான். கண்ணியமிக்க கதாநாயகர்களின் ஆட்டம் என்ற தேன்கூடு கல்லெறிந்து கலைக்கப்பட்டபின்னர் குறிப்பாக இந்தியக் கிரிக்கெட்டை மீள் உருவாக்கம் செய்தவர்கள் தங்களை நிலைப்படுத்திக் கொண்டதும் இந்த பத்தாண்டுகளில் தான். உலகம் என்றால் அமெரிக்கா என இருப்பதைப்போல ஒரு காலத்தில் கிரிக்கெட் என்றால் இங்கிலாந்து என்ற மாயையை இந்தியா உடைத்ததும் இந்த பத்தாண்டுகளில் தான்.
கிரிக்கெட் பார்க்கும் நேரத்தில் உலகத்தை ஐந்து முறையாவது வலம் வந்துவிடலாம் என்ற சோம்பேறி பிம்பத்தை உடைத்து கால்பந்தைவிட சுவாரசியத்தைத் தந்த இருபதுக்கு இருபது ஆட்டத்தை தன்னுள் வரித்துக் கொண்டு கிரிக்கெட்டை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்ல தயாராக இருக்கும் இந்தத் தருணத்தில் கிரிக்கெட் வரலாற்றில் மைல்கற்களாக இருக்கும் இந்த பத்தாண்டுகளில் நடந்த இந்தியக் கிரிக்கெட் நிகழ்வுகளை மறுபார்வை செய்வோம்.
கனவில் மட்டும் நடக்க சாத்தியம் என நினைத்திருந்த வெற்றிகளை சமீபகாலங்களில் இந்திய கிரிக்கெட் அணி அடிக்கடி கைக்கொண்டாலும் இதற்கு முதன்முதலில் அடித்தளம் இடப்பட்டது 2001 ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான். தொடர்ந்து 16 டெஸ்ட் வெற்றிகளைப் பெற்று பெயரில் மட்டும் கங்காருவைக் கொண்ட வேங்கையாக ஸ்டீவ் வாவ் தலைமையில் இந்தியா வருகிறது. இன்று வரும் தொடரும் பழக்கமான முதல் ஆட்டத்தில் மரண அடி. இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் கோல்கத்தா, எத்தனை முறை எழுதினாலும் வாசித்தாலும் பார்த்தாலும் அலுக்காத , திராவிட் - லக்ஷ்மண் இணையாட்டம் இந்தியவிற்கு பெருமையான வெற்றியைத் தருகிறது.
1983 உலகக்கோப்பை வெற்றிக்கு இணையான வெற்றி எனப்பார்க்கப்படும் கோல்கத்தா டெஸ்ட் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு புது முகத்தை அளித்தது. கங்குலி அந்த முகத்தின் கிரீடம் ஆனார். கிரீடத்தின் முத்துக்களாக விவிஎஸ் லக்ஷ்மன், திராவிட், ஜாகிர்கான், ஹர்பஜன் சிங், சேவக்,யுவராஜ்,முகமது கையிப் ஆனார்கள். டெண்டுல்கரும் கும்ப்ளேவும் முகத்தின் பிரதிபலிப்பு ஆனார்கள்.
2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை முன்னேறியது, பாகிஸ்தானில் முதன்முறையாக டெஸ்ட் தொடர் மற்றும் ஒரு நாள் தொடர்களைக் கைப்பற்றியது, ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை சமன் செய்தது, ஏனைய அணிகளுடன் குறிப்பிடத்தகுந்த ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெற்றது என கங்குலி தலைமையில் ஏறுமுகம் ஆன இந்திய கிரிக்கெட் பத்தாண்டுகளின் மத்தியில் மீண்டும் மண்ணைக்கவ்வ ஆரம்பித்தது. கழுத்தில் வெள்ளை கைக்குட்டையைக் கட்டிக்கொண்டு மட்டையடிக்கும் லக்ஷ்மனின் புகைப்படம் தரும் உற்சாகத்தைவிட அதிகம் தருவது, தாடையில் அடிபட்டு , கட்டுப்போட்டுக்கொண்டு 14 ஓவர்களை வீசியதுடன் லாராவை ஆட்டமிழக்கவும் செய்தார், இந்திய அணிக்கு போர்க்குணத்தை விதைத்தவர் அணில் கும்ப்ளே என்பதற்கு மறு பேச்சில்லை. அனில் கும்ப்ளேவின் இந்த போர்க்குணமே இந்திய அணியின் கௌரவத்தை இந்த தசாப்தத்தின் பிற்பகுதிகளில் மீட்டெடுக்க உதவியது.
90களை நினைவூட்டிய தொடர் தோல்விகள் , சொந்த ஆட்டத்திறனின் வீழ்ச்சி, இந்திய அணிக்கு கிட்டத்தட்ட தரித்திரமாக வந்து சேர்ந்த கிரெக் சாப்பலுடனான பிரச்சினை ஆகியன கங்குலியின் தலைமைக்கு சிவப்பட்டை காட்டப்பட்டதுடன், அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நிரந்தர ஏவி.எம்.ராஜன் ராகுல் திராவிட் அணித்தலைவர் ஆனார். நீண்ட காலத்திற்குப்பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராகவும், இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் டெஸ்ட் தொடரை வென்ற பெருமையுடன் இவரும் ராஜினாமா செய்தார். 2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிகளில் முதல் சுற்றுடன் வெளியேறியது பெற்ற வெற்றிகளை மறக்கடிக்கச் செய்தது.
அணித்தலைமையை ஏற்க டெண்டுல்கர் மறுக்க, நான் இதற்காகத்தானே 118 டெஸ்ட் ஆட்டங்களாகக் காத்திருக்கின்றேன் என்று ஒருவர் எழுந்து கை உயர்த்தினார். ”கிரிக்கெட் நெறிமுறைகளின் படி கண்ணியமாக ஆடியது ஒரு அணி மட்டுமே” என்று ஆஸ்திரேலியாவை அதிரச்செய்த அனில் கும்ப்ளே. பாகிஸ்தானுடன் ஆன டெஸ்ட் தொடரை வென்றாலும், போதிய பயிற்சியின்றி 2007-08 ஆஸ்திரேலியா தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா சரண் அடைந்தது. சிட்னியில் நடுவர்களின் தடுமாற்றத்தினாலும் ஆஸ்திரேலியா அவ்வப்பொழுது ஆடும் ”நெறிமுறைகளுக்குட்பட்ட” ஆட்டத்தாலும் சமனாகும் ஆட்டும் தோல்வியில் முடிந்தது. இதனிடையில் ஹர்பஜன் - சைமண்ட்ஸ் பிரச்சினை மேலும் தூபம் போட்டது. அடுத்து ஆடப்போகும் மைதானம் பெர்த். பெர்த்தில் சாதரணமாக பந்து வீசினாலே முகத்திற்கு எகிறும் ஆடுகளத்தில், இந்தியா வழக்கம்போல சுருண்டு விடும் என்ற எதிர்பார்ப்பில் கிரிக்கெட் உலகம் காத்திருக்க, இஷாந்த் சர்மா, ஆர்.பி.சிங், பதான் ஆஸ்திரேலியாவை சுருட்டி ஓட ஓட விரட்டினர். பிரச்சினைக்குரிய சிட்னி ஆட்டத்திற்குப்பின்னர் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளில் வெல்லவே இல்லை. நன்றாகக் கவனித்துப்பார்த்தால் ஆஸ்திரேலியாவின் தொடர் வீழ்ச்சி பெர்த் தோல்வியில் இருந்து துவங்குகிறது.
இதனிடையில் விளம்பர வருவாய் குறைபடும் என இந்தியா நீண்ட காலம் ஒதுக்கி வைத்து இருந்த இருபதுக்கு இருபது போட்டிகளின் முதல் உலகக்கோப்பை தென்னாப்பிரிக்காவில் துவங்கியது. பொன் முட்டையிடும் வாத்து என அப்பொழுது அறியாத இந்திய மூத்த ஆட்டக்காரர்கள் விலகிக்கொள்ள தோனி தலைமையில் இந்திய அணி கோப்பையை வென்றுத் திரும்பியது. அதிகாரப்பூர்வமற்ற ஐசிஎல், அச்செடுத்தாலும் அசலை விட நன்றாக எடுத்த ஐபிஎல் என இருபதுக்கு இருபது போட்டிகள் மற்றும் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தின. கங்குலி, கும்ப்ளே ஓய்வு பெற , அவர்களின் வெற்றிடம் இன்னும் நிரப்பப் படாமலே இருக்கின்றது. டெண்டுல்கர் , திராவிட் , லக்ஷ்மன் இன்னும் சில வருடங்களில் ஓய்வுப் பெறக்கூடிய சூழலில் அவர்களின் இடத்தை நிரப்ப யாரேனும் தயாராக இருக்கின்றார்களா என்றால் இல்லை என்பதுதான் பதில். நல்லதொரு டெஸ்ட் ஆட்டக்காரராக வந்திருக்க கூடிய முகமத் கயிப் தேர்வாளர்களின் தொலை நோக்குப் பார்வை இன்மையினால் தொலைந்துப் போனார். யுவராஜ் சிங் இந்திய அணியின் இளவரசராக வந்திருக்க கூடியவர் கடைசியில் தண்ணீர் தூக்கும் பனிரண்டாவது ஆட்டக்காரர் ஆனார்.
பந்து வீச்சைப் பொருத்தமட்டில் ஜாகிர் , ஸ்ரீசாந்த் , இஷாந்த் ஷர்மா , நெஹ்ரா , ஆர், பி, சிங் , முனாப் படேல் , இர்பான் பதான் என அடுத்த ஐந்து வருடங்களுக்காவது பிரச்சினை இல்லை. இந்திய ஆட்டக்காரர்கள் முகத்துக்கு நேர் வரும் பந்தை குனிந்து அரள்வதைப் பார்த்தே பழக்கப் பட்ட இந்திய ரசிகர்களுக்கு கீழ்காணும் படம் கண்டிப்பாக மகிழ்ச்சியைத் தரும்
இந்த பத்து வருடங்களில் இந்தியத் துணைக் கண்டத்தின் குணாதிசயங்களான வேகப்பந்து வீச்சைக் கண்டாலே உதறல் எடுத்தல் ,மந்தமான ஆட்ட வேகம் , டிரா செய்தால் போதும் என்ற மனப்பான்மை ஒழிந்து கடைசி நேரம் வரும் வெற்றியை வேட்டையாடும் எண்ண விதைகள் விதைக்கப்பட்டதே மிகப்பெரிய முன்னேற்றம் ஆகும்.
இந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சிறந்த டெஸ்ட் வெற்றிகள்
1. கொல்கத்தா - எதிரணி - ஆஸ்திரேலியா
2. பெர்த் - எதிரணி - ஆஸ்திரேலியா
3. டர்பன் - எதிரணி - தென்னாப்பரிக்கா
சிறந்த ஒரு நாள் போட்டி ஆட்டங்கள்
டெண்டுல்கரின் இரட்டை சதம் நிறைவேறிய தென்னாப்பிரிக்கவிற்கு எதிரான ஒரு நாள் ஆட்டம்

லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா இலங்கை இங்கிலாந்து முத்தரப்பு இறுதிப்போட்டி , 325 ஓட்டங்கள் என்ற கடும் இலக்கை எட்டி அடைந்து பிளின்டாப் செய்ததை கங்குலி செய்து காட்டிய ஆட்டம்
மறக்க முடியாத இருபதுக்கு இருபது ஆட்டம்
2007 இருபதுக்கு இருபது உலகக் கோப்பை இறுதி ஆட்டம்
எரிச்சல் ஊட்டிய விஷயம்
நிறவெறி தென்னாப்பிரிக்காவை ஒதுக்கி வைத்திருந்ததைப்போல செய்யாமல் அரசியலைப்போல விளையாட்டிலும் முதுகு சொறிந்து பழைய கோபாலன் டிராபி புகழ் இன வெறி இலங்கையுடன் உடன் கசக்க கசக்க கிரிக்கெட் ஆடியது.
கிரிக்கெட் எத்தனை வண்ண மயம் ஆனாலும் வெள்ளை உடைகளில் வாழ்க்கைப்போல ஆடப்படும் டெஸ்ட் ஆட்டங்களில் இந்திய சாதித்ததே கடந்த பத்து வருடங்களில் மிகப்பெரும் சாதனையாகும் அடுத்து வரும் வருடங்களில் சிறிய மீன் (இருபதுக்கு இருபது ) பெரிய மீனை(டெஸ்ட் போட்டிகள்) விழுங்கா விடாமல் இருந்தாலே இந்திய கிரிக்கெட்டும் அதன் வழியாக சர்வ தேச கிரிக்கெட்டும் காப்பாற்றப்படும்
------
தமிழோவியம் இணைய இதழுக்காக எழுதியது
4 பின்னூட்டங்கள்/Comments:
நல்ல நினைவலைகள். கொல்கத்தா /பெர்த் மறக்கமுடியாத வெற்றிகள்
வாக்களிச்சாச்சு...
//நன்றாகக் கவனித்துப்பார்த்தால் ஆஸ்திரேலியாவின் தொடர் வீழ்ச்சி பெர்த் தோல்வியில் இருந்து துவங்குகிறது.//
அதற்கடுத்த ஒரு நாள் தொடரின் இரு இறுதி ஆட்டங்களிலும் சச்சின் பெற்று தந்த வெற்றியையும் மறக்க முடியாது
Good Selva.
Post a Comment