Monday, March 24, 2014
Thursday, September 19, 2013
வயோஜர் - ஒரு நிமிடக்கதை
" நீங்கள் தமிழராக இருந்தாலும் அண்டவெளியில் பயணம் செய்யப்போகும் வயோஜரின் காலப்பேழையில் , தமிழில் பேசிப்பதிய , ஏன் முன்னெடுக்கவில்லை ?"
என்ற நீல்சனின் கேள்விக்கு நாமம் போட்டு இருந்த ராகவன் .
"நெப்டியுனைத் தாண்டுமா என சொல்ல முடியாது ... தாண்டினாலும் , இந்த வயோஜரை கண்டுபிடிக்கப் போகின்ற வேற்றுகிரகவாசிகள் அப்படியே தமிழ் தான் பேசப் போகிறார்களாக்கும். , ஏற்கனவே தமிழர்கள் , ஹரப்பா தம்முடையது , குமரிக் கண்டம் தம்முடையது மாயன் தம்முடையது எனச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் ... வயோஜரில் இல்லை என்றால் தமிழுக்கு ஒன்றும் இழுக்கு வராது " சொல்லியபடி சிரித்தார்
ஆண்டு 2126
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் அப்படி ஓர் எரிகல் வந்து விழுந்த பின்னர் பயந்து சனம் அழிந்து விடுமோ என , தொலை தூர கோள்களுக்கு சென்று தங்களது குடியேற்றங்களை ஏற்படுத்திவிட்டு வந்து இருக்கின்றனர்.
'நமது கோளை நோக்கி வருவது எரிகல் அல்ல, ஒரு விண்கலம் போல இருக்கின்றது - பயப்பட வேண்டியதில்லை " என அனைவரின் மூளைக்குள்ளும் உடனடி செய்தி அனுப்பப் பட்டது .
வானில் நகர்ந்து கொண்டிருந்த கருவி ஃ கிரகத்தில் தரையிறக்கப்பட்டது. அதில் இருந்த தங்கத் தகட்டை வியப்புடன் அறிவியல் மக்கள் பார்த்தனர். அவர்களின் அருங்காட்சியகம் ஒன்றில் இருந்த பழமையான பேழையில் தகடு ஓடவிடப்பட்டது. தகட்டில் இருந்த ஒலிகள் ( http://www.youtube.com/watch?v=QTDK2jCVPN0 )அங்கிருந்த யாருக்கும் விளங்கவில்லை.
கடைசியில் குப்பை என நிராகரிக்கப்பட்டு நிலத்தில் புதைக்கப்பட்டது.
அதே சமயம் பூமியில் , 150 வருடங்களாக அண்டவெளியில் பிராயணம் செய்து கொண்டிருந்த வயோஜர் விண்கலம் செய்திகளை அனுப்புவதை நிறுத்தியது என்ற செய்தியும் கடைசி தமிழ் பேசும் மனிதர் மரணமடைந்தார் என்ற செய்தியும் அடுத்தடுத்து ஓடிக்கொண்டு இருந்தன. பூமிக்கும் "ஃ" கிரகத்திற்கும் இருந்த ஒரே தொடர்ச்சியும் அறுந்து போனது .
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
3:00 AM
வகைகள்: ஒரு நிமிடக்கதைகள், சிறுகதை, தமிழ்
Sunday, February 22, 2009
ச்சும்மா - ஒரு நிமிடக்கதை
எங்கேப்பார்த்தாலும் வெண்மை, நீருக்கு நிறமில்லை என்று சொன்னது யாரு? எனக்கு வெண்ணிறம் பிடிக்கும் என்றாலும் தொடர்ந்து ஒரு வாரமாக பனிபடர்ந்து இருக்கும் இந்த ஊரைப் பார்க்க சற்றே திகட்டியது. முகத்தைத் தவிர அனைத்து பகுதிகளுக்கும் கவசம் போட்டிருந்தாலும் உடல் முழுவதும் இருந்த குளிரின் நடுக்கம் அப்படியே வீட்டிற்கு திரும்பிப் போய் விடலாமா என்றிருந்தது.. கைத்தொலைபேசியை எடுத்துப்பார்த்தேன், சரியாக 7.55 க்குவரும் பேருந்து 7.58யைக் கடந்தும் வரவில்லை.
பேருந்து நிலையத்தில் நானும் அந்த சுவிடீஷ் பெண்ணும் மட்டுமே இருந்தோம். இவள் லிண்ட்ப்லோம்ஸ்வேகனில் தான் ஏறுவாள். ஏறிய உடன் ஓட்டுனருக்குப்பின் இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொள்வாள்..இரண்டு நிறுத்தங்கள் கழித்து வரும் விலாடிபிக் நிறுத்தம் வந்ததும் ஏற்கனவே மலர்ச்சியாக இருக்கும் அவளின் முகம் மேலும் மலரும். அந்த நிறுத்தத்தில் ஒரு பையன் ஏறுவான். நேராக இவளின் அருகே வந்து அமர்ந்து கொள்வான். ரோன்னிபே ரயில்நிலையம் செல்லும் அந்த அடுத்த 5 நிமிடங்களுக்கு முத்த மழைதான். காதலில் காமம் இல்லாத முத்தங்கள் அவர்களுடையது. கீர்த்தனா எனக்கு கொடுத்த மென்மையான முத்தங்களில் இருந்த காதல் நினைவுக்கு வரும்.
ஒரு வாரத்திற்குப்பின் இன்றுதான் காலை வகுப்பு இருந்ததால் இவள் பயணம் செய்யும் இந்த நேரத்தில் வர நேர்ந்தது. தாமதமாக வந்த பேருந்து ஓட்டுனரை அந்தப் பெண் சுவீடிஷ் மொழியில் கடிந்து கொண்டாள். ஓட்டுனருக்கு நான் சின்னப்புன்னகையைக் கொடுத்துவிட்டு அவளுக்குப்பின் இருக்கையில் அமர்ந்து கொண்டேன். விலாடிபிக் நிறுத்தம் வந்தது, அந்தப் பையன் ஏறினான். ஆனால் அவளின் அருகில் அமரவில்லை. அவளின் இருக்கைக்கு இணையாக வலதுபுறம் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான். அவன் அவளைப் பார்க்க அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் ஏக்கம், அவமானம், பயம் , தவிப்பு என ஒரு சேர இருந்தது.
அவளோ அவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஒரு வாரத்தில் இத்தனை மாற்றமா!!!! நிறம்,அழகு,கல்வி என எத்தனை மாறுபாடுகள் இருந்தாலும் பெண்கள் , ஆண்களை அலட்சியப்படுத்துவதில் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். அலட்சியப்படுத்தபடுவதற்கென்றே பிறந்தவர்கள்தான் ஆண்கள் போலும்!!! “நேஸ்ட்டா ர்ரோன்னிபே ரெஸசெண்ட்ரம்” என அறிவிப்பு வர நாங்கள் மூவரும் பேருந்தை விட்டு இறங்கினோம்.
நான் கல்லூரியை நோக்கி நடக்க, அவர்கள் இருவரும் நான் நடந்த திசைக்கு எதிர் திசையில் நடந்தார்கள். காலையில் இருந்து 100 வது தடவையாக ,என்னுடைய கைத்தொலைபேசியை எடுத்து கீர்த்தனாவிடம் இருந்து ஏதேனும் அம்மு என்று சேமித்து வைத்திருந்த பெயரில் குறுந்தகவல் வந்திருக்கின்றதா எனப்பார்த்தேன். ம்ஹூம் எதுவும் வரவில்லை.... கீர்த்தனாவிடம் இருந்து எந்த அழைப்போ குறுந்தகவலோ வரமால் இருப்பது இன்றுடன் நான்காவது நாள்.
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
7:03 AM
9
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: ஒரு நிமிடக்கதைகள், சிறுகதைகள்
Saturday, January 10, 2009
முத்தம் - ஒரு நிமிடக்கதை
"கைபேசி மீது எனக்குக் கோபம்
நீ கொடுக்கும் முத்தத்தை எடுத்துக்கொண்டு
சத்தத்தை மட்டும் எனக்கு அனுப்புவதால்"
என் நண்பன் எனக்கு அனுப்பி இருந்த கவிதையை வாசித்துக்கொண்டிருந்த பொழுது,
"டேய் கார்த்தி, கார்ல்ஸ்க்ரோனாவுக்கு நீ கிளம்பலியா!!! மச்சா கிளம்புடா, நியு இயர் அன்னக்கிதான்டா சுவீடன்ல கொண்டாட்டமா இருக்கும், செம பிகர்ஸுங்க ,ஓவ்வொருத்தியும் சும்மா பத்து நமீதாவுக்கு ஈகுவலா இருப்பாளுங்க.. சும்மா தகதகன்னு " கிருஷ்ணமூர்த்தி குளிரைத்தாங்கும் ஆடைகளை அணிந்து கொண்டு என்னையும் கிளம்ப சொன்னான்.
மடிக்கணினியில் நேரத்தைப் பார்த்தேன். சுவீடன் நேரம் 8, இந்திய நேரம் 12.30 யைக் காட்டியது. கீர்த்தனாவைக் கூப்பிட்டு வாழ்த்து சொல்லவேண்டும், ஆனால் கூப்பிட முடியாது, அவள் வீட்டில் பெற்றோருடன் இருக்கும்பொழுது நான் அவளைத் தொடர்பு கொள்ளக்கூடாது, குறுந்தகவல் கூட அனுப்பக்கூடாது என்பது அவளின் உத்தரவு. புதுவருட ஆரம்பம் என்பதால் வீட்டில் இருந்தாலும் எப்படியாவது கூப்பிடுகிறேன் என ஊருக்குப்போகும் முன் உறுதி அளித்திருந்ததால் எங்கேயும் வெளியேப் போகவேண்டாம் வீட்டிலெயே இருக்கலாம் என்ற முடிவை சுவிடீஷ் பெண்களைப் பற்றிய விவரணையினால் மாற்ற முயற்சித்துக்கொண்டிருந்தான் கிருஷ்ணமூர்த்தி.
"போன வருஷம் , நான் நாலு சுவீடிஷ் பிகர்களை கிஸ் அடிச்சேன்... " அதற்குப்பின் அவன் சொன்னவற்றை நான் காதில் வாங்கிக் கொள்ள விருப்பம் இல்லை.
"டேய் போறதுன்னா போய் தொலைடா!!! உயிரை வாங்காதே" எனக்கு ஒரு பயம், எங்கே அவன் விவரணையினால் மனம் மாறிப்போய்விடுமோ என.
"மச்சான், வருஷத்துக்கு ஒரு முறைதான் இந்த மாதிரி சான்ஸ் கிடைக்கும், மேக்ஸிமம் எஞ்சாய் பண்ணனும்"
போகலாமா!! போகலாம் என எனக்குள் இருந்த என்னுடைய எதிர்மறை பாத்திரம் என்னை உசுப்பியது. ஆனால் ஒருவேளை கீர்த்தனா அழைத்தால், திரும்ப அழைக்க கைபேசியில் போதிய அளவு இருப்பு இல்லையே.,, குழப்பமாக இருந்தது. கீர்த்தனாவின் பாந்தமான முகம் நினைவுக்கு வர, கிருஷணமூர்த்தி வர்ணித்து இருந்த சுவிடீஷ் பெண்களின் உருவம் காணாமல் போனது.
கிருஷணமூர்த்தி போனது, அறைக்கதவைத் தாளிட்டு தூங்கிப்போனேன். "மழைக்கால மேகமொன்று" எனப்பாடல் காதில் இரண்டாவது முறை ஒலிப்பது போல இருந்ததும் எழுந்து கைபேசியைப் பார்த்தேன். கீர்த்தனா 5 முறை அழைத்திருக்கிறாள். திரும்ப அழைத்தபோது, எனக்கான வாழ்த்துகளைக் கொடுத்துவிட்டு கைபேசியை வைக்கும் முன் "கார்த்தி ஒரு நிமிஷம்" என சொல்லி கைபெசியில் முத்தம் கொடுத்தாள். சத்தம் மட்டும் தான் எனக்கு வந்தது. ஆனால் அந்த சத்தத்தின் ஆனந்தம் முத்தத்தை விட பேரானந்தமாகத் தோன்றியது.
மறுநாள் கிருஷ்ணமூர்த்தி தான் எத்தனை சுவிடீஷ் பெண்களை முத்தமிட்டான் விவரித்துக் கொண்டிருந்தது எனக்குப் பெரிய விசயமாகப் படவில்லை.
"வெறும் சத்தமாக வந்தால் கூட
உன் முத்தத்தை ஏந்தி வருவதால்
கைபேசியையும் பிடிக்கும்"
நண்பனின் கவிதைக்குப் பதில் கவிதையை அனுப்பி வைத்தேன்.
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
5:52 PM
16
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: ஒரு நிமிடக்கதைகள், சிறுகதைகள்
Monday, September 22, 2008
சில சிணுங்கல்கள், ஒரு ஈரானியப்பெண் மற்றும் நான் - ஒரு நிமிடக்கதை
பனிக்காலம் ஆரம்பித்துவிட்டது என்பதை காது மடல்களில் உரசிய வாடைக்காற்று உணர்த்தியது. நேற்றைப்போலவே இன்றும் லின்ட்புலோம்ஸ்வேகன் போக பேருந்திற்காக 8.45 மணி வரை காத்திருக்க வேண்டும், ரயிலை விட்டு இறங்கி நேராக பயணியர் காத்திருப்பு அறைக்குப் போனபோது அங்கு ஏற்கனவே போன வாரம் எனக்கு அறிமுகமான ஈரானியப் பெண் உட்கார்ந்திருந்தாள்.கையில் புத்தகத்தை வைத்து வாசித்துக்கொண்டிருந்தவள் என்னைப்பார்த்து சினேகமாகப் புன்னகைத்தாள். அவள் கையில் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்ததால், பேச்சை ஆரம்பிக்க எனக்குத் தயக்கமாக இருந்தது.
அவளிடம் இருந்து சில அடி இடைவெளிகள் விட்டு அமர்ந்துகொண்டு “அரைமணி நேரம் போகவேண்டுமே!!! இந்த பெண் புத்தகத்தை கீழே வைத்துவிட்டு என்னுடன் பேசக்கூடாதா என யோசித்துக்கொண்டே, கைபேசியில் இருந்த கீர்த்தனாவின் பழைய குறுஞ்செய்திகளை வாசித்துக்கொண்டிருந்தேன்.
எங்களுக்குப்பின்னால் இருந்த பெஞ்சில் இருந்து அழுகை கலந்த சிணுங்கல்கள் வர,திரும்பிப்பார்க்கலாம் என நினைத்து வேண்டாம் என விட்டுவிட்டேன். ஒரு ஆணின் குரல் மட்டும் ஸ்விடீஷில் சமாதானம் சொல்லிக்கொண்டிருக்க,மற்றொரு குரல் அழுகை விசும்பலுடன் இருந்தது. முன்னொருமுறை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில், கீர்த்தனாவின் அழுகையைக் கட்டுப்படுத்த சமாதானம் செய்த முயற்சிகள் ஏனோ நினைவுக்கு வந்தன. கீர்த்தனாவிற்கு முக்கின் நுனிமேல் கோபம் வரும். மன்னிப்புப் படலத்தை ஆரம்பித்தால், பனி போல உருகி ஒரு குழந்தையைப்போல மாறிவிடுவாள்.
பின்னால் இருந்து வரும் சிணுங்கல்களை அந்த ஈரானியப் பெண் கவனிக்கிறாளா எனப்பார்த்தேன்.ம்ஹூம் அவள் காதில் பாட்டுக்கேட்டுக்கொண்டிருந்தாள். நேரம் 8.45 யை நெருங்க வேறுசிலரும் வெளியே அடிக்கும் குளிரின் தாக்கத்தை தவிர்க்க காத்திருப்பு அறையினுள் வந்து உட்கார்ந்தார்கள். சிணுங்கல் சத்தம் போய் முத்தங்கள் பரிமாறிக்கொண்டன போல, யாரும் அவர்களை ஒரு பொருட்டாய் பார்க்கவே இல்லை.
கண்ணாடி சன்னல் வழியாக, பேருந்து வருவது தெரிய, ஈரானியப் பெண் எழுந்தாள். அவளுடன் நானும் எழுந்தேன். இந்த நாட்டில் இப்படி பொது இடத்தில் காதல் இயல்பானதென்றாலும், எனக்கு முதன்முறை என்பதாலும் ,ஒரு ஆர்வத்தில் அந்த அறையை விட்டு வெளியே வரும்முன் அவர்களைத் திரும்பிப் பார்த்தேன், அட அவர்கள் இருவரும் ஆண்கள்.
---
பின்குறிப்பு : பேருந்தில் அந்த ஈரானியப் பெண் என்னருகில் வந்தமர்ந்தாள்.
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
12:36 PM
13
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: ஒரு நிமிடக்கதைகள்
Wednesday, April 09, 2008
தொலைபேசி எண் - ஒரு நிமிடக்கதை
குழந்தை அஞ்சலியுடன் விளையாடிக்கொண்டே இருந்த கார்த்தி, வீட்டு வேலைகளை முடித்து அருகில் வந்து உட்கார்ந்த ரம்யாவிடம்
"ரம்யா, என்னோட புது மொபைல் நம்பரை குறிச்சுக்கோ!”
“கார்த்தி, என் மொபைலுக்கு ஒரு மிஸ்ட் கால் கொடுங்க, ஸ்டோர் பண்ணிடுறேன்”
ரம்யா சொன்னவாறே செய்துவிட்டு குழந்தை அஞ்சலிக்கு தனது உலாபேசியின் எண்ணை மனனம் செய்யவைத்த கார்த்தி அஞ்சலிபாப்பாவிடம்.
“கார்த்திபா வோட போன் நம்பர் சொல்லுடாக்குட்டி”
“98407...”
”ம்ம் அடுத்த அஞ்சு நெம்பர் சொல்லுடா செல்லம்”
அதையும் அஞ்சலிபாப்பா சரியாகச் சொல்ல வாரி அணைத்துக் கொண்டான்.
“கார்த்தி, யூகேஜி படிக்கிற குழந்தைக்கு போன் நெம்பர் எல்லாம் ஞாபகம் வச்சுக்கனும்னு என்ன அவசியம்?”
“ நினைவு சக்தியை அதிகமாக்கிக்கொள்ள இது கூட ஒரு பிராக்டிஸ் ரம்யா.. அது இருக்கட்டும் நாளைக்கு ஈவ்னிங் மோகன் சார் வீட்டுல சின்ன கெட்டுகெதர்... அஞ்சலியைக் கூட்டிட்டு நேரா அங்க வந்துடு”
மறுநாள் புறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த மோகனின் வீட்டிற்கு ரம்யா அஞ்சலிப்பாப்பாவுடன் வண்டியில் போகும்பொழுது அவளது ஸ்கூட்டி பாதி வழியில் நின்று தகராறு செய்தது. சரி கார்த்தியை உலாபேசியில்கூப்பிடலாம் என்றால் அதை வீட்டிலேயே மறதியாக வைத்துவிட்டு வந்திருந்தாள். வண்டியை மெதுவாக உருட்டிக்கொண்டு அருகில் இருந்த ஒரு கடைக்கு வந்து கார்த்திக்கு தொலைபேச நினைத்தபொழுதுதான் கார்த்தியின் புது எண் அவளுக்குத் தெரியவில்லை. அஞ்சலிப்பாப்பாவிடம்
“குட்டிமா, கார்த்திபாவோட போன் நம்பர் சொல்லு”
“9..8.. ..4... 0 7” என தனது மழலை மொழியில் கார்த்தியின் உலாபேசி எண்ணை அஞ்சலிப்பாப்பா சொல்லி முடித்தவுடன் அதை இறுக்க அணைத்த படி, இரவு போனதும் தனது எண்ணையும் அஞ்சலிப்பாப்பாவிற்கு மனப்பாடம் செய்ய வைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் கார்த்தியை, தொலைபேசியில் அழைத்தாள்.
-----
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
10:49 PM
11
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: ஒரு நிமிடக்கதைகள்
Tuesday, April 08, 2008
நடைபாதை இட்லிக்கடையும் நானும் - ஒரு நிமிடக்கதை
நள்ளிரவைக்கடந்தும் விழித்து இருந்து, டான் பிரவுனின் ஏஞ்சல் அண்ட் டெமொன்ஸ் புத்தகத்தை வாசித்து விட்டு அப்படியேத் தூங்கிப்போன நான், எழுந்தபோது மணி எட்டரை. கூன்பாட்டியின் நினைவு வந்தது. அவசர அவசரமாகக் குளித்துவிட்டு நான் வழக்கமாக காலை உணவு சாப்பிடும் உணவகத்தை நோக்கி வண்டியை விரட்டினேன். என்னை என் அலுவலக மக்கள் கஞ்சன் என அழைப்பதற்கு இந்த உணவகத்தில் சாப்பிடுவதும் ஒரு காரணம்.
நடைபாதையின் மேல் ஏற்றி நிறுத்தப்பட்டிருக்கும் தள்ளுவண்டி. அதில் ஒரு பக்கம் மண்ணென்னெய் அடுப்பு, இட்லிப்பானை , வண்டியை சுற்றி, மரப்பெஞ்சுகள் காலை ஏழரை மணியில் இருந்து 10 வரை படு சுறுசுறுப்பாக வியாபாரம் நடக்கும். சாம்பார், காரச்சட்னி. தேங்காய் சட்னி உடன் தோசை நாலு ரூபாய் ,4 இட்லி ஆறே ரூபாய்தான்.
ஒரு வாரத்திற்கு முன்னால் இப்படி 10 ரூபாயில என் காலை சாப்பாடை முடித்துக்கொண்டிருக்கும் பொழுது தான் அந்த கூன் பாட்டியை முதன் தடவையாக பார்த்தேன். கையில் மூங்கில் கம்பை வைத்துக்கொண்டு என் பக்கத்தில் வந்து நின்றார். எதுவும் பேசவில்லை ஆனால் கண்களில் பசி தெரிந்தது,
“அண்ணே, அந்தப் பாட்டிக்கு நாலு இட்லி கொடுங்க, அதுக்கும் சேர்த்து இந்தாங்க காசு”
மறுநாள் சாப்பிடப்போகும்போது அந்த தள்ளுவண்டி இருக்கும் இடத்தில் இருந்து பத்தடி தள்ளி இருந்த மரத்தினடியில் உட்கார்ந்திருந்த. அந்தப் பாட்டி நான் கடையில் வண்டியை நிறுத்தியவுடன் மெதுவாக எழுந்து என்னருகே வந்து நின்றார். அன்றில் இருந்து கடைசி ஒரு வாரமாக தினமும் நான் சாப்பிடப்போகும்பொழுது அந்த பாட்டிக்கும் சாப்பாடு வாங்கித் தருவது வழக்கமாகிவிட்டது.
இப்பொழுது ”அந்த பாட்டி. நான் வருவேன் இட்லி வாங்கித்தருவேன்னு காத்திருக்குமே!!.. அந்தக் கடைக்காரர் பாட்டியை விரட்டி இருப்பாரோ,” என நினைத்துக் கொண்டே அரை மணிநேரம் தாமதமாக அந்தக் கடைக்கு வந்துசேர்ந்த பொழுது ,
பாட்டியை ஓரமாக உட்கார வைத்து, இட்லி வைத்து பரிமாறிக்கொண்டிருந்த அந்த நடைபாதை
இட்லிக்கடைக்காரர் என்னைப்பார்த்ததும்.
“வாங்க தம்பி, என்ன லேட், கிழவி நீங்க வருவீங்களான்னு எல்லா பைக்கையும் பார்த்துக்கிட்டே இருந்துச்சு, பார்க்கவே மனசு கஷ்டமாஇருந்துச்சு, அதான் நானே சாப்பிடக்கூப்பிட்டுட்டேன்”
----------
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
2:52 AM
19
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: ஒரு நிமிடக்கதைகள்
Sunday, March 23, 2008
ஜெனி கண்டிப்பா வருவாள் - ஒரு நிமிடக்கதை
”புதன்கிழமை என் பேத்தி ஜெனி வரா, திரும்பபோறப்ப என்னை பாம்பே கூட்டிட்டுபோறேன்னு சொல்லி இருக்கா” என கடைசி நான்கு நாட்களாக எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந்த பெரியவர் வேதநாயகத்திடம் விபத்தொன்றில் ஜெனி இறந்து போன விசயத்தை அவரிடம் சொல்லலாமா வேண்டாமா என அவரது கிராமத்து வீட்டில் உறவினர்களிடையே ஒரு பெரும் போராட்டமே நடந்து கொண்டிருந்தது.
கடைசி சில மாதமாகத்தான் எழுந்து நடமாடும் அளவுக்கு உடல்நிலை தேறி இருக்கும்பொழுது இது போன்ற அதிர்ச்சி செய்தியை சொல்ல என்னை வேத நாயகத்திடம் அனுப்பினார்கள்.
“தாத்தா, நம்ம ஜெனி ஒரு ஆக்ஸிடெண்ட்ல கர்த்தர் கிட்ட போயிட்டாங்க”
எந்த சலனமும் இல்லாமல் ஒரு கணம் பார்த்துட்டு “போடா, போய் வேலை இருந்தா பாரு”
சிறிது நேர மௌனத்திற்குப் பின், அறையை விட்டு வெளியே வந்த வேதநாயகம், உறவினர்களிடம்
“என்ன இங்க கூட்டம், ஜெனி வரேன்னு சொல்லி இருக்கா, கண்டிப்பா வருவா, யாரும் தேவையில்லாம எதுவும் பேசவேண்டாம்” சொல்லிவிட்டு உள்ளே போய் போனமுறை ஜெனி அவருக்கு கொடுத்திருந்த பைபிளை எடுத்து வாசிக்கத் தொடங்கினார்.
அடுத்த இரண்டு நாட்களும்,வழக்கம்போலவே அதிகாலையில் எழுந்து குளித்து , சர்ச்சுக்குப் போய் விட்டு வரும்வழியில் கோமதிவிலாஸில் காபி, இட்லி சாப்பிட்டுவிட்டு என மிகச்சாதரணமாகவே வேதநாயகம் நடந்து கொண்ட விதம் எனக்கு புதிராய் இருந்தது.
இத்தனைப் பெரிய துக்கத்தை இவரால் எப்படி
தாங்கிக் கொள்ள முடிகிறது. தாங்கிக் கொள்கிறாரா இல்லை அதிர்ச்சியில் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டாரா என்றக்குழப்பத்தில்,
“தாத்தா,உன்னால எப்படி இப்படி இருகக முடியுது, நிஜமாவே ஜெனி செத்துப் போயிட்டாங்க,”
“போடா பைத்தியக்காரா, ஜெனி நாளைக்கு கண்டிப்பா வருவா, நீ பார்த்துக்கிட்டே இரு” கையில் பைபிளுடன் உள்ளே உறங்கப் போன வேதநாயகம் மறுநாள் காலை எழுந்திருக்கவேவில்லை.
-----------
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
11:13 PM
8
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: ஒரு நிமிடக்கதைகள்
Thursday, March 20, 2008
வேறொரு பெயர் வேண்டும் - ஒரு நிமிடக்கதை
குறுந்தகவலுக்கான சத்தம் அடிக்க, கைத்தொலைபேசியை எடுத்துப் பார்த்தேன். ஜெனியிடம் இருந்து ஆங்கிலத்தில் ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.
“எனக்கு வேறு ஒரு பெயர் வைக்க உனக்கு வாய்ப்பு கிடைத்தால் நீ எந்த பெயரை எனக்கு சூட்டுவாய்...” என அச்செய்தியில் கேட்கப்பட்டிருந்தது.. பதில் கட்டாயம் எனவும்
குறிப்பிடப்பட்டிருந்ததால் கல்லூரிக்காலங்களில் நான் காதலித்த ரம்யா வின் பெயரைப் பதிலாக அனுப்பி வைத்தேன்.
அடுத்த சில நிமிடங்களில் சின்ன குறுகுறுப்பில் அதே குறுந்தகவலை அவளுக்கு அனுப்பி வைத்தேன். எனக்கு என்ன பெயர் கிடைக்கப்போகிறது என்ற ஆவலுடன் கைத்தொலைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்த 30வது வினாடியில் . “பெர்ணாண்டஸ்” என்று பதில் வந்தது.
விளையாட்டுத்தனமாய் அதுவரை இருந்த மனது, சற்று உணர்ச்சிவசப்பட்டது. உடனே ஜெனியை அழைத்தேன்.
“ஹலோ ஜெனி தாங்க் யூ ஸோ மச்”
“யெஸ் கார்த்தி, தட்ஸ் ட்ரூ, என் அப்பா பெயர் தான் உனக்குக் கொடுப்பேன்,நட்பு மட்டுமில்ல, என் அப்பா என்னிடம் காட்டின வாஞ்சையான பாசமும் வேண்டும்டா, பிளீஸ் தருவியா”
ரம்யாவை விட ஜெனியை அதிகமாக நேசிக்கப்போகிறேன் என்ற உறுதியுடன் “ஸ்யூர் ஜெனி” என்றேன்.
------ *** -------
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
7:57 AM
16
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: ஒரு நிமிடக்கதைகள்
Friday, January 25, 2008
காதலால் - ஒரு நிமிடக்கதை
வளரும் சாதனையாளர்கள் நிகழ்ச்சியில் இன்று நாம் சந்திக்கப் போகும் விருந்தினர் திரு.கார்த்திக், இவர் குறுகிய காலத்திலேயே தனது உழைப்பாலும், விடாமுயற்சியாலும் தனது நிறுவனத்தை உலகளவில் கொண்டு சென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்றால் மிகையாகாது என்ற தொலைக்காட்சி அறிவிப்பாளரின் கார்த்தி பற்றிய அறிமுகத்தை தொடர்ந்து கார்த்தியின் பேட்டி ஒளிபரப்பானது.
பேட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த மோகனுக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி ஒரு அசூர வளர்ச்சி. மோகனுக்கு கார்த்தியுடன் ஜெனியும் ஞாபகத்திற்கு வந்தாள். கார்த்தி ஒரு சமயம் மோகனிடம் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறான்.
”சார், இது ஜெனி, நாங்க கல்யாணம் பண்ணிக்கப்போறோம்”
திடீர்னு ஒரு நாள் ஜெனியும் அவனும் சேர்ந்து எடுத்துக்கொண்ட எல்லா புகைப்படங்களையும் போட்டு எரித்துக்கொண்டிருந்தான். என்ன நடந்திருக்கும் என்பதை மோகனால் புரிந்துகொள்ள முடிந்தது.. ஒரு வாரம் அறையை விட்டு வெளியே எங்கும் செல்லாமல் இருந்த கார்த்தி,
“மோகன் சார், நான் வேலையை ரிசைன் பண்னிட்டேன், மதுரை போறேன்” சொல்லிட்டு அறையைக் காலி செய்து கொண்டு கிளம்பிப் போனவன் சில காலம் மின்னஞ்சலில் தொடர்பில் மோகனுடன் இருந்தான். தொடர்பு நாளாவட்டத்தில் சுத்தமாக நின்று போன பிறகு இப்பொழுதுதான் மோகன் கார்த்தியைப் பற்றிக் கேள்விப்படுகிறார். அதுவும் ஒரு நல்ல நிலையில் கார்த்தியைப் பார்ப்பது அவருக்கு சந்தோசமாக இருந்தது.
பேட்டியின் முடிவில் தரப்பட்ட கார்த்தியின் மின்னஞ்சல் முகவரிக்கு , அவனின் வளர்ச்சியைப் பாராட்டி , காதலில் தோற்றவர்கள் சோகக்கடலில் மூழ்காமல் எப்படி வெற்றி தேவதையின் கழுத்தில் மணமாலை சூட முடியும் என்பதற்கு கார்த்தி உன் வாழ்க்கை ஒரு உதாரணம் என அழகான ஆங்கிலத்தில் மோகன் அனுப்பிய மின்னஞ்சலை அன்று மாலை படித்தக் கார்த்திக்கு மனதில் வெறுமையான சிரிப்புத்தான் வந்தது.
எத்தனை வெற்றிகள் வந்தாலும், காதலின் வெற்றிக்கு ஈடாகுமா!!! இந்த வெற்றிகள் எதுவுமே இல்லாமலும் கூட ஜெனியுடன் வாழ்ந்திருந்தால் கிடைத்திருக்கக்கூடிய மகிழ்ச்சி, இனி எவ்வளவு பெரிய புகழ் வந்தாலும் கிடைக்கவே கிடைக்காது என்ற ஆழ் மன வலியை தன்னுடனே வைத்துக் கொண்டு ,
ஜெனியுடன் எடுத்துக் கொண்ட எல்லாப் புகைப்படங்களையும் எரித்தாலும், அதன் நெகட்டிவ் மட்டும் பத்திரமாக இன்னும் கார்த்தியின் பழைய பெட்டியில், ஜெனி அவன் மனதில் இருப்பது போலவே இருக்கிறது என்பதை மோகனிடம் சொல்ல விருப்பம் இருந்தும் சொல்லாமல் மோகனின் மின்னஞ்சலுக்கு நலம் விசாரிப்பு பதிலுடன் கார்த்தி தனது மனைவி ரம்யா மற்றும் குட்டி அஞ்சலிபாப்பா ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அனுப்பிவைத்தான்.
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
11:44 AM
5
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: ஒரு நிமிடக்கதைகள்
Wednesday, January 23, 2008
திருநெல்வேலி பாசஞ்சர் - ஒரு நிமிடக்கதை
நகரத்திற்கு வெளியே அமைந்திருந்த அந்தக் கல்லூரியில் இருந்து பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த ஜெனி , கார்த்தி எதிர்புறம் உள்ள கடையில் இருக்கிறானா என்று பார்த்தாள். கடையில் இருந்து சற்றித் தள்ளி இருந்த தந்திக் கம்பத்தில் தன் காயம்பட்ட முகத்துடன் ஜெனியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். கார்த்தி ஏன் இப்படி இருக்கிறான்? இவ்வளவு அடிவாங்கியும் இவன் திருந்தவில்லையே என்ற நினைப்புடன் , தன்னை பின் தொடர்ந்து வந்தவனை அசட்டை செய்து பேருந்தில் ஏறினாள்.
கார்த்தி, சில மாதங்களுக்கு வலிய வந்து நட்பு வேண்டுமென்று என்று அறிமுகப் படுத்திக் கொண்டவனுடன் பேசாமல் விலகிச்சென்ற ஜெனிக்காக தினமும் காத்திருப்பவன். சில நாட்களில் கைலியில், சில நாட்களில் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையுடன் இருப்பான்..எப்போதாவது ஜீன்ஸ், டீசர்ட்டில் இருப்பான். அடுத்த பேருந்து நிறுத்தத்திற்குப் போனால் தொடர்ந்து வருவான்.. தொந்தரவு ஏதும் செய்ய மாட்டான். ஆனால் போன வாரம் வீடு வரை பின் தொடர்ந்து வந்ததால், வகுப்பு நண்பர்களிடம் வேறு வழி இல்லாமல் சொல்லி வைக்க, நண்பர்கள் அவனை பின்னி எடுத்து விட்டார்கள். கார்த்தி தான் அடி வாங்கிய பின்னரும் அவளைப் பார்ப்பதற்காக காத்திருப்பதை நிறுத்தவில்லை.
மறுநாள், மாலை சிறப்பு வகுப்புகள் இருந்ததால், மோகனுடன் நடந்து வந்தாள். மோகன் அவன் அங்கு நிற்பதைப் பார்த்தவுடன்
”ஜெனி போய் இன்னும் நாலு சாத்து சாத்திட்டு வரவா?”
“வேண்டாண்ட, விட்டுடு வா போகலாம்”
மினிபஸ்ஸில் ஏறிய பின்பு தான் கவனித்தாள். கார்த்தி தனது வண்டியில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். ஜெனிக்கு கார்த்தி மேல இருந்த கோபம் எரிச்சல் எல்லாம் போய் பரிதாபமாக இருந்தது. அவனின் மெல்லிய புன்னகையை ஏற்றுக்கொள்ள நாட்டமில்லாமல் வலதுபுறத்தில் இருந்து இடப்புறம் மாறி அமர்ந்தாள். தூரத்தில் வழக்கமான நேரத்தை விட ஒரு மணிநேரம் தாமதமாக வந்து கொண்டிருந்த திருநெல்வேலி பாசஞ்சர் ரயிலின் சத்தம் கேட்க,, வண்டி வருவதற்கு முன் அந்த ஆளில்லா லெவல் கிராசிங்கை கடந்து விட வேண்டும் என்று வண்டி வேகமெடுத்தது. சில நூறு மீட்டர்கள் தள்ளி ரயில் வரும்பொழுதே பாதுகாப்பாக மினிபஸ் கிராசிங்கை பாதுகாப்பாகக் கடந்தது..
வார இறுதியில் தீர யோசித்து , கார்த்திக்கு என்னதான் வேண்டும் என்று நேரடியாகக் கேட்டுவிட வேண்டும் என்ற முடிவை ஜெனி எடுத்தாள். ,திங்களன்று மாலை கார்த்தியை ஜெனியின் கண்கள் தேடியது. ம்ஹூம் ம்ஹூம் அவன் கடையில் நிற்கவில்லை. அடுத்த நிறுத்தத்தில் நிற்கிறானா எனப் பார்த்தாள் அங்கும் இல்லை. மறுநாளும் தேடினாள். அந்தக் கடையில் கேட்கலாம என நினைத்தாள், வேண்டாம், வலிய போய் ஏதும் பிரச்சினை ஆகிவிடக்கூடாது என நினைத்து, வேண்டாம் என்று விட்டு விட்டாள்.
இரவு, கர்த்தருக்கு தோத்திரம் சொல்லிவிட்டு தேர்வுக்குப் படிக்கும் ஜெனியை மிக அருகில் கார்த்தியின் உருவம் மனதில் அந்த திருநெல்வேலி பாசஞ்சர் ரயிலுக்கு நன்றி சொல்லிவிட்டு ரசித்துக் கொண்டிருந்தது.
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
8:47 AM
3
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: ஒரு நிமிடக்கதைகள்
Tuesday, January 08, 2008
பின்னால் நிற்கும் பிலிப்பைன்ஸ் பெண் - ஒரு நிமிடக்கதை
”இன்னக்கி பிலிப்பைன்ஸ் போகலாமா!! நார்வே இல்லாட்டி ஸ்வீடன் போகலாமா!! சே எங்க போனாலும் இந்த இந்தியப் பசங்க இருக்கானுங்க... இந்திய பொண்ணுங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு... என்னதான் இருந்தாலும் பிலிப்பைன்ஸ் பொண்ணுங்க மாதிரி பெருந்தன்மை வராது...” என்ற மனவோட்டத்துடன் கார்த்தி யாஹூ அரட்டையினுள் நுழைந்தான். அதிக இணையக் காணொளி(WebCam) இணைப்புகள் இருக்கும் “மணிலா அரட்டை” அறையினுள் நுழைய முற்பட்ட போது நிறைய ஆட்கள் இருக்கின்றனர் வேறு அறை பார்க்கவும் என யாஹு சொல்ல, குறைந்த நபர்கள் இருக்கும் ஒரு பிலிப்பைன்ஸ் அறைக்கு கார்த்தி நுழைந்து , வயது, ஆணா பெண்ணா என ஒவ்வொருவரின் தனிப்பட்ட தகவல்களை சோதித்துக் கொண்டே வரும்போது ஒரு பெயரில் Jeni, 24, Female எனக்காட்ட அதை தனி அழைப்புக்கு அழைத்தான்.
உடனே பதில்வந்தது. ஆங்கிலத்தில் “ஹலோ ” என
”வயது, ஆணா/பெண்ணா வாழுமிடம்“ எனக் கேட்டபோது
“ஜெனி, 24 , பெண், இந்தியா” என வந்ததும் கார்த்திக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
உண்மையாக இருக்குமா என்ற சந்தேகம் வருவதை கார்த்தியால் தவிர்க்க இயலவில்லை.
”கார்த்தி, 27 , அழகான ஆண், இந்தியா , சென்னை”
“நானும் சென்னை தான்” என்று ஆங்கிலத்தில் பதில் வர இது ஏதாவது ஒரு ஆண் பெண் பெயரில் இருக்கிறானா என்ற சந்தேகம் மேலும் வலுத்தது.
“வெப் கேமரா” என கார்த்தி கேட்டு முடிக்குமுன் அழைப்பு இல்லாமாலே திரையில் ஜெனி முகம் வந்து தெரிய ஆரம்பித்தது. கார்த்திக்கு ஆச்சரியத்தை நம்பவே முடியவில்லை. ஆமாம் அழகான பெண் , அதுவும் இந்தியப் பெண் திரையில் வந்து கையசைத்தாள். வழக்கத்தை விட திரை தெளிவாகத் தெரிந்தது. முழுக்கை சுடிதார், பார்க்க குடும்ப பாங்காய் இருந்தாள்.
சென்னை, தமிழ் என சொன்னவுடன் ஆங்கிலமும் தமிங்கிலமும் கலந்து அரட்டை தொடர ஆரம்பித்தது. உரையாடல் போய் கொண்டே இருக்க, கார்த்திக்கு ஜெனியின் பின்புறம் ஒரு பிலிப்பைன்ஸ் பெண் கையில் புத்தகத்துடன் நடந்து செல்வதும், சில சமயங்களில் கணினி அருகில் வந்து போவதுமாய் தெரிந்தது.
“ஜெனி, உன் பின்னாடி யார் ?” எனக் கேட்டான்
“இல்லையே யாரும் இல்லையே, நான் மட்டும்தான் வீட்டில் இருக்கேன்”
கார்த்திக்கு லேசாக வியர்க்க ஆரம்பித்தது.
“நீ நிறைய பிலிப்பைன்ஸ் பொண்ணுங்களோட சாட் பண்ணுவியா?..இப்போக்கூட அடுத்த விண்டோல ஒரு பிலிப்பைன்ஸ் காரியைத் தானே பார்த்துட்டு இருக்க, அதனால உன் பிரமையா இருக்கும்”
கார்த்திக்கு ஒருவேளை ஜெனி சொல்லுவது சரியாக இருக்கும் என்றுதான் தோன்றியது. மணி ஏற்கனவே இரவு இரண்டைக் கடந்து இருந்தது. கண்கள் தூக்கக் கலக்கத்தில் சொக்க ஆரம்பித்தன. அனைத்து பிலிப்பைன்ஸ் பெண்களின் அரட்டையையும் மூடிவிட்டு ஜெனியுடம் மட்டும் அரட்டையைத் தொடர்ந்தான்.
மீண்டும் அதே பிலிப்பைன்ஸ் பெண், ஜெனியின் பின், அவளின் தோள் மேல் கைவைத்தாற் போல கணினியை அசைத்தாள். கார்த்திக்கு நிச்சயமாய் இது பிரமை இல்லை எனத் தெரிந்து
“ஜெனி,, மீண்டும் அதே உருவம் உன் பின்னே” என்று சொல்லுவதற்குள் ஜெனியினது அரட்டை இணைப்பு துண்டிக்கப்பட்டது. திரையும் மறைந்தது. மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது தற்சமயம் இணைப்பில் இல்லை எனக்கூறியது.
அய்யோ, ஜெனியின் பின்னால் ஒரு உருவம் ஜெனிக்கு தெரியாமல் நிற்கிறதே.கார்த்திக்கு நெஞ்சம் படபடக்க ஆரம்பிக்க அதே சமயம் பல மைல்களுக்கு அப்பால் பிலிப்பைன்ஸில்,
"காலையில் சீக்கிரம் எழவேன்டும்" என நினைத்துக் கொண்டே கணினி முன் கிடந்த வெற்று நாற்காலியை நகர்த்தி விட்டு அந்த பிலிப்பைன்ஸ் பெண் கணினியை அணைத்தாள்.
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
7:37 AM
10
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: ஒரு நிமிடக்கதைகள்
Wednesday, December 26, 2007
இவன் அவனில்லை - ஒரு நிமிடக்கதை
ஜெனிக்கு இரண்டு நாட்களாக குழப்பமாய் இருந்தது. அலுவலகத்தில் தன்னிடம் சகஜமாகப் பேசும் கார்த்தி, காலையில் கடற்கரையில் தூரத்தில் இருந்து வைத்தக் கண் வாங்காமல் பார்த்துவிட்டு ஒரு சின்னப் புன்னகைக் கூட செய்யாமல் போய்விட்டான்.இன்று மட்டுமல்ல அதற்கு முந்தைய நாள் கூட ராகத் பிளஸாவில் பார்த்தும் இதேபோல் போய்விட்டான்.
கார்த்தி அந்த அலுவலகத்திற்குப் புதிதாய் வந்து சேர்ந்திருந்தாலும், வந்த சில நாட்களிலேயே தனது கலகலப்பான குணாதியசத்தால் அனைவரையும் வெகுவாக கவர்ந்து விட்டான். போன வாரம் மோகன் சாரின் வழியனுப்பு விழாவை அருமையாக ஒருங்கிணைத்து அலுவலக மேலிடத்திலும் நல்ல பெயர் வாங்கிக் கொண்டான்.
எப்படி இவனால் இரண்டு விதமாக நடந்து கொள்ள முடிகிறது ,ஒரு வேளை பொதுவிடம் என்பதால் தெரிந்தவள் என்றுக் காட்டிக்கொள்ளாமல் போய்விட்டானோ!!! என்ற நினைப்பைக் கலைக்கும் வகையில் அங்கே கார்த்தி வர,
“ஹல்லோ கார்த்தி,”
“ஜெனி, உங்க கிட்ட ஒரு விசயம் பேசனும் ..” என அவளைக்கூட்டிக் கொண்டு அலுவலகத் தோட்டத்திற்கு வந்து அவனே பேச ஆரம்பித்தான்.
“ஜெனி, எனக்கு ரொம்ப தெரிஞ்ச பையன் உங்களை நேசிக்கிறானாம்... கிட்டத்தட்ட அவனை 27 வருஷமா தெரியும், “
“.....”
“இன்னும் சொல்லப்போனால் நாங்க பிறக்கிறதுக்கு முன்னமே எங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் தெரியும்...”
ஜெனி மேலும் குழப்பமானாள்.
“நேத்து மோகன் சார் பங்சன் போட்டொக்களை அவன்கிட்ட காட்டினப்போ , அதுல உங்களைப் பார்த்துட்டு தன் விருப்பத்தை சொன்னான், அவன் என்னை மாதிரி இல்லை, நேர் ஆப்போசிட் ..ரொம்ப ரிசர்வ்ட், இங்க கூட்டிட்டு வந்து இருக்கேன் அங்கே பாருங்க, உட்கார்ந்திருக்கான் ”
அங்கே அலுவலக வரவேற்பறையில் அச்சு அசலாய் கார்த்தியை உரித்து வைத்தது போல அவனோட இரட்டை சகோதரன் உட்கார்ந்திருந்தான்.
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
8:42 AM
8
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: ஒரு நிமிடக்கதைகள்
Monday, December 17, 2007
மூன்றே காட்சிகளில் ஒரு காதல் கதை - Surveyசன் போட்டிக்கான "நச்" கதை
காட்சி 1 :
"ஏன் தங்கினால் என்ன?" இது தான் இன்றைக்கு காலை ஜெனி என்னிடம் பேசிய கடைசி வார்த்தை.
<< எவ்வளவு திமிர் இருந்தால், ஜெனி வெளியூர் போறப்ப மோகன் கூட ஒரே ரூமில் தங்கி இருப்பாள், அதை வெட்கமே இல்லாமல் என்னிடமே சொல்றாள், சே, எவ்வளவு கேவலமானவளா இருப்பாள் >> என் மனதுக்குள் ஜெனியின் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவள் மேல் இது நாள் வைத்திருந்த அன்பெல்லாம் வெறுப்பின் வடிவில் எரிமலையாய் சீறியது. மதியம் ஒரு லோக்கல் ரவுடியிடம் சொல்லி கள்ளத்துப்பாக்கி வாங்கினேன். நேராக ஜெனி ரம்யாவுடன் தங்கி இருந்த அபார்ட்மெண்ட்ஸை நோக்கி என் காரை ஓட்டினேன்.
காட்சி 2 :
"சாரி, ஜெனி, நான் தான் அவசரப்பட்டுட்டேன், மன்னிச்சுக்கோ"
"இல்லை கார்த்தி, ஐ சுட் நாட் ஹாவ் டன் தட், நான் அப்படி தங்கி இருக்கக்கூடாது, பட் மோகன் பர்பெக்ட் ஜெண்டில்மேன் தெரியுமா?"
"சாரி, நான் மோகனையும் தப்பா நினைச்சுட்டேன், எனி வே இப்போவாது நாம புரிஞ்சுக்கிட்டோமே!!"
"ஆமாண்டா கார்த்தி, நீ இப்படி பண்ணலேன்னா, நாம எப்போவுமே சேர்ந்து இருக்க முடியாது, மார்னிங் நீ பேசுன பேச்சுக்கு உன் முகத்திலேயே முழிக்கக் கூடாதுன்னு இருந்தேன்"
இருவரும் கைக்கோர்த்துக் கொண்டு நடந்தோம். மோகன் பரபரப்போடு படிகளில் ஏறி வந்து கொண்டிருந்தார்.
காட்சி 3:
படிகளில் மோகனைப் பார்த்த ரம்யா அழுதபடியே அவனிடம் ஓடி வந்தாள்.
"எல்லாம் கண்ணிமைக்கிற நேரத்துக்குள் நடந்துடுச்சு மோகன், கார்த்தி வந்தான், ரிவால்வரை எடுத்து ஜெனியை சுட்டுட்டு , தன்னையும் சுட்டுக்கிட்டான்"
ரத்த வெள்ளத்தில் எங்களது உருவங்களை பத்திரிக்கைகாரர்கள் போட்டோ பிளாஷ் தெரிக்க எடுத்துக் கொண்டிருக்க மெதுவாக வான் மேகங்களைத் தாண்டி வானில் நானும் ஜெனியும் பறக்கலானோம்.
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
8:34 AM
12
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: ஒரு நிமிடக்கதைகள்
Monday, December 10, 2007
பேய் வீடு - Surveyசன் போட்டிக்காக "நச்சுன்னு" மேலும் ஒரு கதை
" இந்த பேய் வீட்டை வாங்குற நீங்க பெரிய தைரியசாலிதான் சார், இருந்தும் உங்களுக்கு லாபம் தான், இந்த ஏரியாவில 50 லட்சம் விலை போற கிரவுண்ட் உங்களுக்கு வீட்டோட 15க்கு வந்துடுச்சு, " என தன் கமிஷன் தொகை குறைந்துவிட்டதை தலையை சொறிந்தபடி சுட்டிக்காட்டிய வீட்டு புரோக்கருக்கு 5000 ரூபாய் எக்ஸ்ட்ராவாகக் கொடுத்துவிட்டு , நான் வாங்கிய வீட்டிற்கு அடுத்த வீட்டைத் தட்டினேன். கதவைத் திறந்த நடுத்தர வயது ஆசாமியிடம் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன்.
“கேள்விப்பட்டேன் சார், நீங்க அந்த வீட்டை வாங்கிட்டிங்கன்னு, கிட்டத்தட்ட 4 வருஷமா பூட்டிக்கிடக்கு, அந்த பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்ட பின்ன குடி வந்தவங்களும் தினமும் நைட் 11 மணிக்கு மேல புல்லாங்குழல் சத்தம் வீட்டில கேக்குதுன்னு பயந்து காலி பண்ணிட்டு போயிட்டாங்க, “
“ம்ம்ம்" அவர் சொன்னதற்கு தலையாட்டினேன்.
“உங்களுக்கு பேய் பிசாசு மேல எல்லாம் நம்பிக்கை உண்டா?”
“இல்லை சார்
“ மனசு தான் பேய், எதுக்கும் நீங்க ஃபேமிலியோட குடிவர முன்னாடி ஒரு பூஜை பண்ணிடுங்க, பேய் வீடுங்கிற நெருடல் உள்ளுக்குள் இருந்தாலும் உங்களுக்கு போயிடும்... நீங்க குடும்பஸ்தரா?, ”
“இல்லை சார், எனக்கு இன்னும் கல்யாணமாகல" அவர் வீட்டில் கொடுத்த காபியை நாசுக்காக மறுத்துவிட்டு நான் புதிதாய் வாங்கிய வீட்டிற்கு ஒரு சில தட்டுமுட்டு சாமான்களுடன் வேலையாட்கள் சுத்தம் செய்து முடித்தவுடன் உள்ளே நுழைந்தேன்.
“சார், இந்த புல்லாங்குழல் கொல்லப் பக்கம் கிடந்தது" என்று சுத்தம் செய்ய வந்திருந்த ஆட்களில் ஒருவன் என்னிடம் கொண்டு வந்து கொடுத்தான்.
அதை சிரித்துக் கொண்டே வாங்கி அலமாரியில் வைத்து, வேலையாட்களை அனுப்பிவிட்டு கட்டிலில் கண்ணயர்ந்தேன். மனது நிறைந்திருந்தது . ஆம் இது என் கல்லூரிக் காதலி ஜெனி வாழ்ந்த வீடு இது... ம்ஹூம் ... இன்னும் வாழ்கிறாள் இங்குதான்.. எனக்காக... மற்றவர்களுக்கு அவள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். எனக்கு அவள் இன்னும் ஜீவனுள்ள அதே பழைய ஜெனிதான்... கல்லூரியில் அவள் வழக்கமாக வாசிக்கும் புல்லாங்குழல் இசை மெலிதாக என் காதுகளில் ஒலிக்க ஆரம்பித்தது.
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
9:59 PM
19
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: ஒரு நிமிடக்கதைகள்
Wednesday, December 05, 2007
ஜெனியும் நானும் லேப்டாப்பில் பார்த்த பேய்ப்படம் - "நச்சுன்னு ஒரு கதை" (Surveyசன் போட்டிக்காக)
ஞாயிற்றுக்கிழமை காலையில கொஞ்ச நேரம் எக்ஸ்ட்ரா தூங்கலாம்னா நினைச்சா, ஜெனி ஒரு கையில லேப்டாப், இன்னொரு கையில ஒரு டிவிடி சகிதமா என்னை எழுப்பி விட்டு லேப்டாப்பில் அந்தப் படத்தை போட்டாள். ஜெனி ஒரு சரியான பயந்தாங்கொள்ளி. இருந்தாலும் அவளுக்குப் பேய்ப்படம் பார்க்கறதுன்னா கொள்ளை விருப்பம்.. ஆனால் ஒன்னு அவள் பேய்ப்படங்களை தைரியமா பகல்ல மட்டும் தான் பார்ப்பாள்.
ஒரு படம் பார்த்தான்னா ஒரு வாரத்துக்கு அவ ரூம்ல தூங்க மாட்டாள்... அவள் பயப்படுவது மட்டுமில்லாம என்னையும் சேர்த்து பயமுறுத்தி என் ரூம்ல வந்து தூங்குவாள். என்ன படம்னு டிவிடிக் கவரை எடுத்துப் பார்த்தேன்... அட இது நான் ஸ்கூல் படிக்கிறப்பவேயே பார்த்தது...
"ஜெனி, இந்தப் படத்தில ஒரே ஒரு பயங்காட்டுற சீன் தான்... இப்பொ வர பேய்ப்படங்களைக் கம்பேர் பண்றப்ப , இந்த காலத்து சின்னக் குழந்தைக் கூட இதைப் பார்த்துப் பயப்படாது... "
ஒவ்வொரு பயங்காட்டும் சீன் வரும்பொழுதும் அதை முன்கூட்டியே ஜெனியிடம் நான் சொல்ல சொல்ல அவள் வழக்கத்தை விட கொஞ்சம் தைரியமாகவே படத்தைப் பார்த்தாள்.
"ஜெனி, இப்போ பாரு, அந்த ஹீரோவோட கம்ப்யூட்டர்லேந்து ஒரு கை வரும் பாரேன்!!!
இந்த கம்ப்யூட்டர்லேந்து கைவரும் சீன் தான் அப்போ என் கனவில எல்லாம் அடிக்கடி வரும்.. பாரேன்.. பாரேன்.... "
ஜெனியும் கைவரும் என்று அந்த சீனை உன்னிப்பாக கவனித்தாள்... கம்ப்யூட்டரிலிருந்து கை
வராமலேயே அந்த சீன் முடிந்துப் போனது. எனக்கு குழப்பமாய் போனது.. திரும்பவும் டிவிடிக் கவரை எடுத்து சரிபார்த்தேன்... அதே படம்தான்... ஹீரோவின் கம்ப்யூட்டரில் இருந்து கைவரும் சீன் தான் இந்தப் படத்திலேயே கொஞ்சம் பயமான சீன்.. அது வரவில்லையே!!! டிவிடி வெர்ஷன்ல கட் பண்ணிட்டாங்களா!!! இல்லை நான் தான் படத்தை மறந்துட்டேனா!! ஒன்றும் புரியவில்லை... அந்த ஒரு சீனைத்தவிர நான் சொன்ன எல்லா சீனும் சரியா படத்தில் இருந்தது.
படம் முடிந்ததற்கும் ஜெனிக்கு கார்த்தியிடம் இருந்து போன் வருவதற்கும் சரியாக இருந்தது,
"ரம்யா, லேப்பியும், டிவிடியும் இங்கேயே இருக்கட்டும்,, நைட்டு வந்து எடுத்துக்கிறேன்.."
ஜெனி போனதும் திரும்பவும் தூங்கப்போன நான் மதியம் எழுந்தவுடன் ஒரு கியுரியாசிட்டியில் திரும்பவும் அதேப் படத்தை போட்டுப் பார்க்க ஆரம்பித்தேன்,,, எல்லா சீனும் வந்தது... அந்த கம்ப்யூட்டர் கை சீன்.. மனது என்னையும் அறியாமல் திக் திக் என அடிக்க ஆரம்பித்தது... ஹீரோ கம்ப்யூட்டரில் எதோ செய்து கொண்டிருக்கிறான்.. கை நீளூமா.. இல்லை இல்லை.. .. அந்த சீன் வரவில்லை... என் பதைபதைப்பு சிறிது நேரம் நின்றது..
ஆனால் ... ஆனால்... ஆனால்... ஆனால்... நான் படம் பார்த்துக் கொண்டிருந்த லேப்டாப்பிலிருந்து ஒரு கை என் கழுத்து வரை நீளஅ..ஆஆஆஆஆஆஆஆஆரம்பித்தது....
----------------------------
Surveyசன் நடத்தும் "நச்சுன்னு ஒரு கதை" போட்டிக்காக எழுதப்பட்டது
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
8:39 AM
8
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: ஒரு நிமிடக்கதைகள்
Tuesday, November 06, 2007
கலாபக் கனவுகள் - ஒரு நிமிடக்கதை
தீபாவளி சமயம் ஆதலால் எங்க மொத்த லேடிஸ் ஹாஸ்டலும் காலியாகி இருந்தது. என்னோட ரூம்மேட் ரம்யாவும் ஊருக்குப் போய்விட்டாள். ஆன்லைனிலும் யாரையும் காணவில்லை. ரொம்ப போரடித்ததால் நீண்ட நாட்களுக்குப் பிறகு மொபைல் எஃப்.எம்மை ஆன் செய்தேன். ஏதோ ஒரு அலைவரிசையில் கலாபக்கனவுகள் என ஒரு தொலைபேசியில் தன் காதல் வேண்டுகோள்களை/அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் தனது காதலன்/காதலியை எப்படி நேசிக்கிறார்கள் என்று உணர்வுப்பூர்வமாக அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளரிடம் பகிர்ந்து கொண்டிருந்தனர்.
தொகுப்பாளர் அடுத்து நம்மிடையே கார்த்தி பேசப்போகிறார் என சொல்வதைக் கேட்டு அரைத்தூக்கத்திலிருந்து நிமிர்ந்து உட்கார்ந்தேன்.இந்த கார்த்தி பெயர் என் வாழ்க்கையில மறக்க முடியாத ஒரு பெயர். அப்படியே அந்த வானொலி உரையாடலைக் கேட்கலானேன்.
"ஹல்லோ கார்த்தி சொல்லுங்க, உங்க காதலி பெயர் என்ன?"
"அவ பேரு ஜெனி, ஒரு சாஃப்ட்வேர் கம்பெனில வொர்க் பண்றாங்க"
அய்யோ என்னோட பேரைச் சொல்றான்.. இந்தக்குரல் அவனோட குரல்தானே!! எனக்கு முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது.
"நீங்க ஜெனிக்கு எதாவது சொல்ல விரும்பிறீங்களா?"
"யெஸ், நான் எங்க இருந்தாலும் அவளோட நினைவுகளில் தான் இருக்கேன். நாளைக்கு எனக்கு ஒரு முக்கியமான நாள், அதை அவளுக்கு ஞாபகப் படுத்தத் தான் இப்போ உங்களுக்கு போன் பண்ணேன்"
கடவுளே, என்னக் கொடுமை இது, நாளைக்கு நவம்பர் 7, கார்த்தி போன வருஷம் இந்த தேதியில தான் தற்கொலை பண்ணிக்கிட்டான்.என் இதயத்துடிப்பு அதிகரித்தது.
"கார்த்திக்காகவும் அவரோட காதலி ஜெனிக்காகவும் இந்த அருமையான பாடல் ஒலிபரப்பப்படுகிறது" என்று வானொலித் தொகுப்பாளர் சொல்லியவுடன் "தேவதை இளம் தேவி உன்னைச்சுற்றும் ஆவி" பாடல் ஒலிக்கத் தொடங்கியது. பாடல் ஒலித்துக் கொண்டிருக்க எனது அறை முழுவதும் கார்த்தி வழக்கமாக உபயோகப்படுத்தும் "ஃபர்ஃபியூமின்" வாசம் விரவத்தொடங்கியது.
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
1:17 AM
10
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: ஒரு நிமிடக்கதைகள்
Thursday, November 01, 2007
தற்கொலை - ஒரு நிமிடக்கதை
கார்த்தி தற்கொலை பண்ணிக்கிட்டான் என்பதை கேட்ட பொழுது ஜெனிக்கு அதிர்ச்சியாக இருந்தது. சொன்னதை செய்துவிட்டான். கடைசி ஒரு வாரமாக அலுவலகத்திற்கு வராதவன் நேற்று அவள் கடற்கரையில் தனியாக நடந்து கொண்டிருந்தபோது எதிர்பாராமல் அங்கு வந்த கார்த்தி தன் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை எனில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டி இருந்தான்.ஏற்கனவே அவளை இது போல அவன் பலமுறை மிரட்டி இருப்பதால் அவள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.ஆனால் இன்று அலுவலகம் அவள் கிளம்பும் முன் மோகனின் தொலைபேசி அழைப்பில் இந்த அதிர்ச்சி செய்தி வந்திருந்தது.
“ஜெனி, கார்த்தி தங்கி இருந்த பிளாட் நாலு நாளா உட்பக்கமா பூட்டி இருந்துச்சாம், நேத்து புல்லா செம பேட் ஸ்மெல் அடிச்சதனால் பிளாட் செக்ரட்டரி கதவை உடைச்சி உள்ளே போய் இருக்காங்க... கார்த்தியோட பாடி டிகம்போஸ் ஆகி இருக்கு.. செத்து போய் மூணு நாள் ஆயிருக்கும்னு சொல்றாங்க" என மோகன் சொல்ல சொல்ல ஜெனிக்கு கைகள் நடுங்க ஆரம்பித்தன.
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
9:53 PM
5
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: ஒரு நிமிடக்கதைகள்
Saturday, July 21, 2007
அம்மா
முன்பொரு சமயம் கௌதமின் தடலாடிப் போட்டிக்காக "அம்மா" என்ற தலைப்பில் எழுதியவை.
மொழி தெரியாத ஊர், உடல் நடுக்கும் குளிர், மடிக்கணினியை அருகில் வைத்துவிட்டு வேடிக்கை பார்க்கையில், அதை ஒருவன் எடுத்துக்கொண்டு ஓட, அவனை நான் துரத்தி முகத்தில் ஒரு குத்து விட்டவுடன் "அம்மா" என்ற அவனின் கத்தல், முதன் முறையாக ஒரு திருடனிடம் உட்கார்ந்து பேச வைத்தது,
------------------------------------------------
1. இ-கலப்பையை தரவிறக்கம் செய்க.
2. இ-கலப்பையை கணினியில் நிறுவவும்.
3. Alt + 2 தட்டச்சு செய்யவும்
4. ammaa - அம்மா
------------------------------------------------
நாளை முடிக்க வேண்டிய வேலைகள் இருப்பினும், அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை என்ற எனது சக ஊழியனுக்கு விடுப்பு வழங்கினேன், கடைசி காலத்தில் அம்மாவை சரியாக பராமரிக்காத நான்.
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
8:51 AM
0
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: ஒரு நிமிடக்கதைகள்
Sunday, July 15, 2007
நாங்க பேய் - ஒரு நிமிடக்கதை
சுடுகாட்டை அடுத்துள்ள ஒரு பாலத்தைக் கடக்கையில் இரண்டு இளைஞர்கள் எதிரே வர அவர்களில் ஒருவன் என்னைப் பார்த்ததும்,
"அண்ணே, உங்களை இந்த ஊரில பார்த்ததில்லையே, நீங்க ஊருக்குப் புதுசா?"
"ஆமாம் தம்பி, நமக்கு வெளியூரு, இந்த ஊரில சொந்தக்காரர் ஒருத்தரை கூட்டிட்டுப் போகலாம்னு வந்தேன்"
"சரிண்ணே!!, இந்த நேரத்தில எதுக்கு இந்த சுடுகாட்டுப் பாதையில வர்றீங்க, பேய் பிசாசுங்க எல்லாம் உலவுற நேரம்"
"என்ன தம்பி, நீங்க இரண்டு பேரும் இந்த நேரத்தில அதுவும் சுடுகாட்டுப் பக்கமா தைரியமா வர்றீங்க அப்படி இருக்க எனக்கு எதுக்குப் பயம்"
"அய்யோ அண்ணே!!! எங்களுக்குப் பயமெல்லாம் கிடையாது, நாங்க செத்துப் போய் ரெண்டு வருஷம் ஆச்சு, அந்த ரயில்வே டிராக்ல, பைக்ல கிராஸ் பண்றப்ப அடிபட்டு செத்துப் போயிட்டோம், அடிக்கடி இங்க வந்து நாங்க பழைய கதைகள் எல்லாம் பேசிக்குவோம் " என்றான் மற்றொருவன்.
அவர்கள் இருவரும் ஒரு முறை என்னை ஏளனமாகப் பார்த்துவிட்டு நமுட்டு சிரிப்புடன் கடந்து சென்றார்கள்.
அவர்கள் தூரத்து இருட்டில் காணாமல் போக, சின்னப் பசங்க, பயமுறுத்த வேண்டாம், என்று நினைத்துக் கொண்டு அவ்விடத்திலிருந்து காற்றோடு காற்றாக மறைந்தேன்.
எழுத்தாக்கம்
வினையூக்கி
at
8:17 AM
4
பின்னூட்டங்கள்/Comments
வகைகள்: ஒரு நிமிடக்கதைகள்