Wednesday, January 23, 2008

திருநெல்வேலி பாசஞ்சர் - ஒரு நிமிடக்கதை

நகரத்திற்கு வெளியே அமைந்திருந்த அந்தக் கல்லூரியில் இருந்து பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த ஜெனி , கார்த்தி எதிர்புறம் உள்ள கடையில் இருக்கிறானா என்று பார்த்தாள். கடையில் இருந்து சற்றித் தள்ளி இருந்த தந்திக் கம்பத்தில் தன் காயம்பட்ட முகத்துடன் ஜெனியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். கார்த்தி ஏன் இப்படி இருக்கிறான்? இவ்வளவு அடிவாங்கியும் இவன் திருந்தவில்லையே என்ற நினைப்புடன் , தன்னை பின் தொடர்ந்து வந்தவனை அசட்டை செய்து பேருந்தில் ஏறினாள்.

கார்த்தி, சில மாதங்களுக்கு வலிய வந்து நட்பு வேண்டுமென்று என்று அறிமுகப் படுத்திக் கொண்டவனுடன் பேசாமல் விலகிச்சென்ற ஜெனிக்காக தினமும் காத்திருப்பவன். சில நாட்களில் கைலியில், சில நாட்களில் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையுடன் இருப்பான்..எப்போதாவது ஜீன்ஸ், டீசர்ட்டில் இருப்பான். அடுத்த பேருந்து நிறுத்தத்திற்குப் போனால் தொடர்ந்து வருவான்.. தொந்தரவு ஏதும் செய்ய மாட்டான். ஆனால் போன வாரம் வீடு வரை பின் தொடர்ந்து வந்ததால், வகுப்பு நண்பர்களிடம் வேறு வழி இல்லாமல் சொல்லி வைக்க, நண்பர்கள் அவனை பின்னி எடுத்து விட்டார்கள். கார்த்தி தான் அடி வாங்கிய பின்னரும் அவளைப் பார்ப்பதற்காக காத்திருப்பதை நிறுத்தவில்லை.

மறுநாள், மாலை சிறப்பு வகுப்புகள் இருந்ததால், மோகனுடன் நடந்து வந்தாள். மோகன் அவன் அங்கு நிற்பதைப் பார்த்தவுடன்

”ஜெனி போய் இன்னும் நாலு சாத்து சாத்திட்டு வரவா?”

“வேண்டாண்ட, விட்டுடு வா போகலாம்”

மினிபஸ்ஸில் ஏறிய பின்பு தான் கவனித்தாள். கார்த்தி தனது வண்டியில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். ஜெனிக்கு கார்த்தி மேல இருந்த கோபம் எரிச்சல் எல்லாம் போய் பரிதாபமாக இருந்தது. அவனின் மெல்லிய புன்னகையை ஏற்றுக்கொள்ள நாட்டமில்லாமல் வலதுபுறத்தில் இருந்து இடப்புறம் மாறி அமர்ந்தாள். தூரத்தில் வழக்கமான நேரத்தை விட ஒரு மணிநேரம் தாமதமாக வந்து கொண்டிருந்த திருநெல்வேலி பாசஞ்சர் ரயிலின் சத்தம் கேட்க,, வண்டி வருவதற்கு முன் அந்த ஆளில்லா லெவல் கிராசிங்கை கடந்து விட வேண்டும் என்று வண்டி வேகமெடுத்தது. சில நூறு மீட்டர்கள் தள்ளி ரயில் வரும்பொழுதே பாதுகாப்பாக மினிபஸ் கிராசிங்கை பாதுகாப்பாகக் கடந்தது..


வார இறுதியில் தீர யோசித்து , கார்த்திக்கு என்னதான் வேண்டும் என்று நேரடியாகக் கேட்டுவிட வேண்டும் என்ற முடிவை ஜெனி எடுத்தாள். ,திங்களன்று மாலை கார்த்தியை ஜெனியின் கண்கள் தேடியது. ம்ஹூம் ம்ஹூம் அவன் கடையில் நிற்கவில்லை. அடுத்த நிறுத்தத்தில் நிற்கிறானா எனப் பார்த்தாள் அங்கும் இல்லை. மறுநாளும் தேடினாள். அந்தக் கடையில் கேட்கலாம என நினைத்தாள், வேண்டாம், வலிய போய் ஏதும் பிரச்சினை ஆகிவிடக்கூடாது என நினைத்து, வேண்டாம் என்று விட்டு விட்டாள்.

இரவு, கர்த்தருக்கு தோத்திரம் சொல்லிவிட்டு தேர்வுக்குப் படிக்கும் ஜெனியை மிக அருகில் கார்த்தியின் உருவம் மனதில் அந்த திருநெல்வேலி பாசஞ்சர் ரயிலுக்கு நன்றி சொல்லிவிட்டு ரசித்துக் கொண்டிருந்தது.

3 பின்னூட்டங்கள்/Comments:

said...

சொல்லாமல் சொல்வது ஒர் கலை. அது உங்களுக்கு நன்றாகவே வருகின்றது!
ஆமா! அப்படிப்பட்ட நிகழ்ச்சி எப்படி ஜெனிக்கு தெரியாமல் போயிற்று?

said...

over her dead body என ஒரு படம் வருகிறது. இறந்து போன காதலி வந்து இந்நாள் காதலியை வாட்டி எடுக்கும் கதை.

பாவம் ஜெனியின் வருங்கால பாய்ஃப்ரெண்ட்...

said...

சிவஞானம்ஜி,
நன்றி. ஜெனிக்கு வருங்காலங்களில் தெரிய வரும்.
சிறில் சார்,
இனிமேல் ஜெனியோட பாய் பிரெண்ட் “ஆவி” கார்த்தி தான்