Showing posts with label சொந்த அனுபவம். Show all posts
Showing posts with label சொந்த அனுபவம். Show all posts

Saturday, October 26, 2013

Languages often teach more history than the documented history


சென்னைத்தமிழ், நெல்லைத்தமிழ், தஞ்சைத்தமிழ் போல , சேரளத் தமிழான மலையாளமும் தமிழின் ஒரு பேச்சு வழக்கு என அறிந்திராத காலம் அது. எகத்தாளம் , கேலி , நக்கல் எல்லாம் நிரம்பிய இருபதுகளின் ஆரம்ப நாட்கள். ஆங்கிலத்தில் மட்டும் பேசிக்கொண்டிருந்த மலையாளி ஒருவர் முன்னிலையில் அவரைப்பற்றி தமிழில் இன்னொரு நண்பரிடம் ஏதோ மென்மையான நக்கல் ஒன்றை அடித்துவிட மலையாள நண்பர் சில நாட்கள் என்னிடம் பேசவில்லை. பின்பு ஒரு நாள் அவர் தான் சொன்னார் , மலையாளிக்கு தமிழ் நன்றாக விளங்கும் , விளையாட்டுக்குக் கூட மலையாளிகளைக் கிண்டல் செய்ய அவர்களின் முன்னால் , அவர்களுக்குப் புரியாது என நினைத்துக் கொண்டு, பிறரிடம் தமிழில் கிண்டல் செய்து விடாதே என்று அறிவுறுத்தினார். அந்த மலையாள நண்பருக்கு பெயரில் எந்தவிதமான சாதிப் பின்னொட்டு இல்லை என்பது ஓர் உபரித் தகவல்.

மேற்சொன்ன அனுபவம் மலையாளத்திற்கு என்றால், பின்வரும் சம்பவம் தெலுங்கு சம்பந்தப்பட்டது. சுவீடனில் படிக்கையில் , ஆரம்ப காலத்தில் தெலுங்கானா பகுதியைச் சார்ந்த தெலுங்கு மாணவர்கள் என் வீட்டில் சில காலம் இருந்தார்கள் அவர்களுடன் பேசிப் பேசி தெலுங்கானா தெலுங்கு கொஞ்சம் புரிபட ஆரம்பித்தது. ஒரு நாள் இரவில் நான் அரைத்தூக்கத்திற்கு சென்ற பின்னர் , அவர்களின் உரையாடல் ஆரம்பித்தது. அதில் ஒரு நண்பன் சுத்த தெலுங்கில் பேசு, இவனுக்கு தெலுங்கானா பேச்சு வழக்குப் புரியும் என குறிப்பு கொடுக்க சுத்தத் தெலுங்கில் பேச ஆரம்பித்தார்கள் . அவர்கள் பரிசுத்த தெலுங்கில் , அவர்கள் உடனடியாக வீட்டைக் காலி செய்ய விரும்புகின்றார்கள், புது வீடு அவர்களுக்கு குறைந்த வாடகையில் வேறு பகுதியில் கிடைத்து இருக்கின்றது. உடனடியாக வீட்டைக் காலி செய்தால் , தனி ஒருவனாக முழு வாடகை கொடுக்க எனக்கு சிரமம் இருக்குமே எனக் கவலை இல்லாமல், அவர்களின் வசதியைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டு இருந்தார்கள். இரண்டு நாட்கள் கழித்து சொன்னார்கள். இந்த விஷயம் 'ஏற்கனவே தெரியுமே' என்றேன். எப்படி என்றக் கேள்விக்கு,
சுத்தத் தெலுங்கு , தெலுங்கானத் தெலுங்கை விட தமிழுக்கு மிக நெருக்கமாக இருக்கும், மேலும் தெலுங்கில் இருக்கும் பண்டைய சொற்கள் தமிழின் இலக்கியச் சொற்கள். , தமிழின் குழந்தை தெலுங்கு என என் தமிழரசியலையும் அவர்களிடம் விதைத்து விட்டு அவர்களை சுமுகமாக வழியனுப்பி வைத்தேன்.

சுவீடனில் மற்றும் ஒரு முறை , சிங்கப்பூர் சீனாக் காரன் , பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூரியா வரிசையாக பூக்களின் பெயர்களைச் சொல்லுவதைப் போல, பல தமிழ்க்கெட்ட வார்த்தைகளை சொன்னான். எப்படி சீனாக்காரர்கள் தமிழில் கிண்டலடிக்கப்டுவார்கள் என்பதையும் சொன்னான். இவை அனைத்தும் அவனது சிங்கப்பூர் தமிழ் நண்பர்களிடம் சிறு வயதில் இருந்து கற்று கொண்டதாம். அன்றில் இருந்து சீன ஆட்களை மறந்தும் கூட கிண்டலடிப்பதில்லை.

இப்படி திராவிட மொழி அனுபவங்கள் ஒரு வகை என்றால் , இத்தாலியில் வேறு ஒருவகையில் இருந்தது. ரோமை சுற்றிப்பார்க்க வந்திருந்த எனது எகிப்திய நண்பர்களை , என் இத்தாலிய - சிசிலி நண்பனிடம் அறிமுகப் படுத்தினேன். எகிப்திய நண்பர்கள் அவர்களுக்குள் அவ்வப்பொழுது அரபியில் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தனர். இது சகஜமான ஒன்று என்பதால் நான் கண்டு கொள்ளவில்லை. கொண்டாட்ட ஒன்று கூடல்களில் இந்தி'யர்கள் அவர்கள் மொழியில் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது , நானும் என் தமிழ் நண்பர்களும் தமிழில் பேசிக் கொண்டு இருப்போம். ஆனால் என் இத்தாலிய நண்பனின் முகம் அடிக்கடி கடுமையாக மாறிக்கொண்டு இருந்தது. பின்னர் , இத்தாலிய நண்பனிடம் 'அவர்கள் அரபியில் பேசிக் கொண்டு இருந்ததால் நீ கோபம் ஆகிவிட்டாயா? ' எனக் கேட்டதற்கு
"கோபம் அவர்கள் அரபியில் பேசியதற்காக இல்லை, அரபியில் அவர்கள் இத்தாலியைப் பற்றியும் என்னையும் கேலி செய்து கொண்டு இருந்தார்கள். எனக்கு அரபி தெரியாது என்றபோதிலும் , அவர்கள் கேலி செய்யப் பயன்படுத்திய அரபி வார்த்தைகள் அப்படியே இன்றும் சிசிலியில் புழக்கத்தில் உண்டு, சிசிலித் தீவு , வரலாற்று ரீதியாக ரோமப் பேரரசு / இத்தாலிக்கு எந்த அளவிற்கு நெருக்கமோ அதே அளவிற்கு எகிப்திற்கும் நெருக்கம். அரபிக் கலப்பு என்பது  சிசிலியின் இத்தாலிய பேச்சு வழக்கில் சாதாரணமான ஒன்று " என்றான்.

Wednesday, February 22, 2012

கிரிக்கெட் வினாடி வினா - ஆறுக்கு ஆறு (Cricket Quiz)

1. ஆரம்ப காலங்களில் , சச்சின் டெண்டுல்கர் நடுவரிசை ஆட்டக்காரராக, ஒருநாள் போட்டிகளில் ஆடும்பொழுது நிறைய ஆட்டங்களில் மட்டையடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கிறது. 94 ஆம் ஆண்டிற்குப்பின்னர், துவக்க ஆட்டக்காரராக ஆட ஆரம்பித்ததில் இருந்து அவர் ஆடும் எல்லா ஆட்டங்களிலும் அவருக்கு மட்டையடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. கேள்வி இதுதான், கைவிடப்படாத ஒருநாள் ஆட்டமொன்றில்,(அதாவது ஆட்டம் முழுமையாக நடைபெற்றிருக்க வேண்டும்)கடைசியாக, டெண்டுல்கருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்புக்கிடைக்காத ஆட்டம் எது?

2. டெஸ்ட் போட்டிகளின் ஐந்து நாட்களிலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மட்டையடிப்பது என்பது கிரிக்கெட்டில் நிகழ்ந்துள்ளது. ஆனால் மட்டையடித்த ஐந்து நாட்களிலும் தலா ஒரு சிக்ஸர்கள் வீதம் ஐந்து சிக்ஸர்கள் மொத்தமாக விளாசிய கிரிக்கெட் வீரர் யார்? தனது 30 வது வயதிலேயே கேப்டன் பொறுப்பில் இருந்தும், ஆட்டத்தில் இருந்தும் அழுதுகொண்டே ஓய்வு பெற்றவர்.

3. கீழ்காணும் படத்தில் இருப்பவர் ஒரு தமிழர். கொழும்பில் பிறந்து சென்னையில் கிரிக்கெட்டைக் கற்று கொண்டு, இரண்டு பன்னாட்டு ஒருநாள் ஆட்டங்களில் ஆடியவர். ஆடிய முதல் ஆட்டத்திலேயே அரைசதம் அடித்த வெகுசில ஒருநாள் ஆட்டக்காரர்களில் இவரும் ஒருவர். இந்தக் கிரிக்கெட் ஆட்டக்காரர் யார்?



4. சமீபத்தில் மன்காடட் ரன் அவுட் ஒரு நட்சத்திர கிரிக்கெட் இறுதி போட்டியில் சலசலப்பை ஏற்படுத்தியது. மிகவும் எளிமையான கேள்வி தான், மன்காட்(Mankaded) முறையில் ரன் அவுட் செய்யும் முறை விதிமுறைகளுக்கு உட்பட்டதா இல்லையா

5. ஒரு கற்பனையான முதல் தர ஆட்டம், கடைசி விக்கெட்டிற்கு , இரண்டு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி. மட்டையாளர் துணை ஓட்டக்காரரை(By-runner) வைத்திருக்கின்றார்.
மட்டையாளர் பந்தை திருத்தமாக அடிக்க, துணை ஆட்டக்காரரும் மறுமுனை ஆட்டக்காரரும் வேகமாக ஓடி முதல் ஓட்டத்தை முடிக்கின்றனர், இரண்டாவது ஓட்டம் முடியும் தருவாயில் பந்து தடகளப்பு செய்யப்பட்டு விக்கெட் கீப்பரிடம் வருகிறது, துணைஓட்டக்காரரும் மறுமுனை ஆட்டக்காரரும் ஓட்டங்களை பிரச்சினை இன்றி முடிக்கின்றனர்.
ஆனால் மட்டையாளர் உற்சாககுதுகலிப்பில், கோட்டிற்கு வெளியே நிற்கிறார். விக்கெட் கீப்பர் மட்டையாளரை ஆட்டமிழக்க செய்கிறார். கேள்வி என்ன வெனில்
இந்த ஆட்டத்தின் முடிவு என்ன? ஏன்?

6. கிறிஸ் கெய்ல் களத்திற்கு வந்தாலே சிக்ஸர்கள் பறக்கும். இருபதுக்கு இருபது பன்னாட்டு போட்டிகளில், இவர் மொத்தம் 34 சிக்ஸர்கள் அடித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. உண்மையில் இவர் 37 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அவர் அடிக்கும் பந்தைப்போல , காணாமல் போன சிக்ஸர்களுக்கான காரணம் என்ன

---

விடைகள்

1. ஸ்டாண்டர்டு வங்கி முத்தரப்பு போட்டித்தொடரில், 2001 ஆம் ஆண்டு கென்யாவிற்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கருக்கு மட்டையடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. முதலில் ஆடிய கென்யா அணி 90 ஓட்டங்களுக்கு சுருண்டுப்போக, குறைவான ஓட்டங்கள் மற்றும் பின்வரிசை ஆட்டக்காரர்களுக்கு மட்டைப்பயிற்சி அளிக்கவும், தீப்தாஸ் குப்தாவும் சேவாக்கும் களமிறங்கி விக்கெட் இழப்பின்றி அணியை வெற்றிபெறச்செய்ததால் டெண்டுல்கருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆட்ட விபரம் இங்கே - http://www.espncricinfo.com/ci/engine/match/66101.html

2. கிம் ஹியுஜஸ் (Kim Hughes) என்ற முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் தான் அந்த வீரர். 80 ஆம் ஆண்டு, லார்ட்ஸில் நடைபெற்ற நூற்றாண்டு நினைவு டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில், ஒவ்வொரு நாளிலும் ஒரு சிக்ஸர் அடித்து கேள்வியில் சொன்ன சாதனை இன்னமும் தன்னகத்தே வைத்துள்ளார்.
ஆட்ட விபரம் இங்கே - http://www.espncricinfo.com/ci/engine/match/63271.html


சொந்த ஆட்ட சொதப்பல், அணியினரின் உள்குத்து, ஊடகங்களின் வெளிக்குத்து, மேற்கிந்தியத் தீவுகளின் கும்மாங்குத்து இவைகளை சமாளிக்க முடியாமல் , 84 ஆம் ஆண்டு பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிக்குப்பின்னர், அழுகையை அடக்க முடியாமல், மேலாளரை ராஜினாமா கடிதத்தைப் படிக்கவிட்டு, தலைமைப்பதவியில் இருந்து விலகியவர். ஒட்டுமொத்தமாக விலகாமல், தொட்டுக்கோ துடைத்துக்கோ என அடுத்த இரண்டு ஆட்டங்களில் 3 முட்டை களுடன் ஒட்டு மொத்தமாக ஆட்டத்தை விட்டு மூட்டை கட்ட வைக்கப்பட்டார். பொதுவாக ஆஸ்திரேலியா கேப்டன்கள் பதவி விலகும்பொழுது ஆட்டத்தில் இருந்து ஓய்வும் பெற்றுவிடுவார்கள். ரிக்கிபாண்டிங்கிற்கு முன்னர், கிம் ஹியுஜஸ்தான் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னரும் சில ஆட்டங்கள் ஆடியவர்.


3. கனடா அணிக்காக ஆடிய அரவிந்த் கந்தப்பா - http://www.espncricinfo.com/canada/content/player/313432.html

4. விதிமுறை 42.15 இன் கீழ் மன்காட் முறையில் ஆட்டமிழக்க செய்யலாம்.

5. துணை ஓட்டக்காரர் வைத்திருக்கும்பொழுது, மட்டையடிப்பர், கோட்டுக்குள்ளேயே இருக்கவேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், எத்தனை ஓட்டங்கள் முழுமையடைந்திருந்த பொழுதும், விக்கெட் கீப்பர் முனையில் மட்டையாளரை ஆட்டமிழக்க செய்யும் பொழுது, எடுத்த ஓட்டங்கள் எதுவுமே கணக்கில் வராது. அந்த வகையில் கேள்வியின் படி, பந்து வீசும் அணி வெற்றி பெறும்.

6. இருபதுக்கு இருபது ஆட்டங்களில், ஆட்டம் சமனில் முடியும்பொழுது , வெற்றித் தோல்வியை நிர்ணயிக்க, சூப்பர் ஓவர் நடை முறை உள்ளது சூப்பர் ஓவரில் எடுக்கப்படும் ஓட்டங்கள் , ஆட்டக்காரர்களின் புள்ளிவிபரங்களில் சேர்க்கப்படமாட்டாது. நியுசிலாந்துக்கு எதிரான ஒரு 20/20 போட்டியில், கிறிஸ் கெயில் சூப்பர் ஓவரின் போது மூன்று சிக்ஸர்களை விளாசி, வெற்றியைத் தேடித்தந்தார். அந்த மூன்று சிக்ஸர்கள் தான் கெயிலின் காணமல் போன சிக்ஸர்கள்.

ஆட்டவிபரம் இங்கே http://www.espncricinfo.com/ci/engine/match/366707.html

---விடைகளைக் கண்டுபிடிக்க முயற்சித்த அனைவருக்கும் நன்றி ---

Saturday, November 14, 2009

நன்றி மனுஷ்யபுத்திரன் மற்றும் சாரு , சக்கர நாற்காலியின் பயன்பாடுகள்

சாருநிவேதிதாவின் இணையப்பக்கத்தை சிலநாட்களாகப் படிக்கவில்லையே என இன்று திறந்தால் ஆச்சரியம் அதில் யோகன்பாரிஸ் அவர்களின் கடிதம், அதன் பின் தொடர்ச்சி மனுஷ்யபுத்திரனின் சக்கர நாற்காலி கவிதையில் வந்து நின்றது. கவிதையும் சாருவின் அந்தக் கவிதை தொடர்பான விளக்கமும் அருமை. சாரு சொன்னது போல அது சுயவிரக்க கவிதை கிடையாது. கலக அரசியல் கவிதை.

மனுஷ்யபுத்திரனின் கவிதை இங்கே

ஒரு சக்கர நாற்காலியின் பயன்பாடுகள்

ஒரு நாற்காலியின் பயன்பாட்டைவிட பலமடங்கு அதிகமானவை.

நாற்காலியை இழந்துவிடுவோம்
என்கிற பயத்திற்கு இதில்
அவசியமே இல்லை

எந்த நியாயமான, நியாயமற்ற
காரணத்திற்காகவும்
நாற்காலியை யாருக்கும்
விட்டுக்கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் இல்லை

எல்லோரும் நின்றுகொண்டிருக்கும் வரிசையில்
நாம் நிற்க வேண்டியதில்லை

நமது பின்புறத்தைக் காட்டி
யாரையும் அவமானப்படுத்த நேர்வதில்லை

புனிதர்களோ கடவுள்களோ
சட்டென மண்டியிடும்படி
நம்மைக் கட்டாயப்படுத்துவதில்லை

நாட்டின் முதல் குடிமகன்கள்
சபையில் நுழையும்போது
நம் இருக்கைகளிலிருந்து பதட்டமடையவேண்டியதில்லை

கீழ்நிலை ஊழியர்களை
ஒருபோதும் அமரச்சொல்லாத
எஜமானர்களின் தந்திரங்கள்
நம்மிடம் பலிப்பதில்லை

இரண்டு நிமிட மௌன அஞ்சலிகளில்
பங்கேற்கவேண்டியதில்லை
தேசியகீதம் பாடும்போது
எழுந்து நிற்கவேண்டியதில்லை

யாருக்கும் வழிகாட்டிச் செல்லவோ
யாரையும் பின்தொடரச் செய்யவோ
யாரோடும் இணைந்து நடக்கவோ
வேண்டியதில்லை

எந்த இடத்திலும்
முண்டிக்கொண்டு செல்லவேண்டியதில்லை

முக்கியமாக
சக்கரநாற்காலிகள்
பூமியின் எந்த மையத்தோடும்
பிணைக்கப்படுவதே இல்லை





இது தொடர்பான சாருவின் கட்டுரை இங்கே

Thursday, September 18, 2008

Eslöv to Hässleholm பெயர் குழப்பம் (சுவீடன் அனுபவங்கள் - 1 )

சுவீடன் வந்த செப்டம்பர் முதல்வாரத்தில் எனக்கான சக்கர நாற்காலியைப் பெற்றுக்கொள்வதற்காக எஸ்லோவ்என்ற ஊர் வரை செல்ல வேண்டியதாய் இருந்தது. ரோன்னிபே என்ற ஊரில் இருந்து இது கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ரயில் பிரயாணம். ஏதோ ஒரு தைரியத்தில் தனியாகவே போய் வாங்கி வந்துவிடலாம் என , ரயிலைப்பிடித்து கிளம்பியாகிவிட்டது.

இந்த ரயில் சுவீடனில் கார்ல்ஸ்க்ரோனா என்ற ஊரில் இருந்து டென்மார்க் தலைநகரம் கோபன்ஹேகன் வழியாக ஹெல்சின்ஹர் என்ற ஊர் வரை செல்வது. சுவீடனின் நாட்டுப்புற அழகை கண்ணாடி சன்னலுக்கு வெளியே ரசித்தபடியே, அடுத்த வருடம் கீர்த்தனாவுடன் இப்படி போகவேண்டும் என்ற எதிர்கால நினைவலைகளுடன் பயணம் சுவாரசியமாகவே சென்று கொண்டிருந்தது. ரயிலில் அடுத்த நிலையம் அறிவிப்பு எஸ்லோ என வந்தது. அட நாம் வரவேண்டிய ஊரு 20 நிமிடம் முன்னமே வந்துவிட்டதே என இறங்க ஆயத்தமானேன். இருந்தாலும் மனதில் சின்ன நெருடல்.பக்கத்தில் இருந்தவரிடம் , அடுத்த நிலையம் எஸ்லோவ் ஆ எனக்கேட்டபோது ஆமாம் என அவர் தலையாட்ட நானும் ரயிலை விட்டு இறங்கி ஒரு மரபெஞ்சை பிடித்து அமர்ந்து , ரயில் நகர்வதைப் பார்த்துக்கொண்டே, தலையைத் திருப்பி ரயில் நிலையத்தின் பெயரைப்பார்க்க அது Hässleholm என்று இருந்தது. அடடா, நாம் இறங்க வேண்டிய ஊர் Eslov ஆச்சே என யோசித்துக்கொண்டே, ரயில் பாதையை சரிப்பார்த்துக்கொண்டிருந்தவர்களிடம் இது எந்த ஊர் எனக்கேட்டபோது அவர்களும் Eslov க்குரிய உச்சரிப்புடனே யே ஊர் பெயரை சொன்னார்கள்.

நான் அந்த ஊரின் பெயரைப்படித்த போது ஹஸ்லஹோம் எனப்படித்தேன். ஸ்வீடிஷ் மொழி உச்சரிப்புப் படி அது எஸ்லஹோ என புரிந்தது. தவறான ரயில் நிலையத்தில் இறங்கி இருந்தாலும் பயம் ஏற்படவில்லை. சுவீடனில் கையில் காசு இல்லை என்றால் கூட ஊர் போய் சேர ரயில்நிலைய அதிகாரிகளே டிக்கெட் எடுத்துத் தருவார்களாம்.

எனக்கு அப்போது இருந்த ஒரே சந்தேகம், என் கையில் இருந்த பயணச்சீட்டு செல்லுமா என்பதுதான். ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒரு ரயில் நான் செல்லப்போகும் ஊர் வழியாக செல்லும் என்பது தெரிந்திருந்ததால் ரயில் நேரம் பற்றி கவலைப்படவில்லை.

அங்கு ரயில்பாதையில் வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் என் சந்தேகத்தை நான் ஆங்கிலத்தில் கேட்க, அவர்களுக்கு ஆங்கிலம் சரிவர பேசவராததால் , ரயில்நிலைய அதிகாரியை அழைத்தனர். வந்த ஆண் ரயில் அதிகாரி ரயில் வரும் நேரத்தை மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தார், அதுவும் சுவீடிஷ் மொழியில். எனக்கு என் பயணச்சீட்டு செல்லுமா என்பது தான் சந்தேகம். அடுத்த சில நிமிடங்களில் ஒரு பெண் அதிகாரி ஆங்கித்தில் என் பயணச்சீட்டு செல்லும் என்பதை தெளிவாக்கி, என்னை ரயிலில் பத்திரமாக ஏற்றிவைத்தார்.

அடுத்த 20 நிமிடத்தில் நான் இறங்கவேண்டிய இடத்தில் சரியாக இறங்கி, எனக்கான சக்கர நாற்காலியைப் பெற்றுக்கொண்டு, மாலை ஊர் திரும்பினேன்.

புகைப்படங்களுக்கு இங்கே சொடுக்கவும்

-----
அடுத்தப்பதிவு பேருந்துக்காகக் காத்திருக்கையில் ஒரு ஈரானியப்பெண்ணுடன் உரையாடியது.