Languages often teach more history than the documented history
சென்னைத்தமிழ், நெல்லைத்தமிழ், தஞ்சைத்தமிழ் போல , சேரளத் தமிழான மலையாளமும் தமிழின் ஒரு பேச்சு வழக்கு என அறிந்திராத காலம் அது. எகத்தாளம் , கேலி , நக்கல் எல்லாம் நிரம்பிய இருபதுகளின் ஆரம்ப நாட்கள். ஆங்கிலத்தில் மட்டும் பேசிக்கொண்டிருந்த மலையாளி ஒருவர் முன்னிலையில் அவரைப்பற்றி தமிழில் இன்னொரு நண்பரிடம் ஏதோ மென்மையான நக்கல் ஒன்றை அடித்துவிட மலையாள நண்பர் சில நாட்கள் என்னிடம் பேசவில்லை. பின்பு ஒரு நாள் அவர் தான் சொன்னார் , மலையாளிக்கு தமிழ் நன்றாக விளங்கும் , விளையாட்டுக்குக் கூட மலையாளிகளைக் கிண்டல் செய்ய அவர்களின் முன்னால் , அவர்களுக்குப் புரியாது என நினைத்துக் கொண்டு, பிறரிடம் தமிழில் கிண்டல் செய்து விடாதே என்று அறிவுறுத்தினார். அந்த மலையாள நண்பருக்கு பெயரில் எந்தவிதமான சாதிப் பின்னொட்டு இல்லை என்பது ஓர் உபரித் தகவல்.
மேற்சொன்ன அனுபவம் மலையாளத்திற்கு என்றால், பின்வரும் சம்பவம் தெலுங்கு சம்பந்தப்பட்டது. சுவீடனில் படிக்கையில் , ஆரம்ப காலத்தில் தெலுங்கானா பகுதியைச் சார்ந்த தெலுங்கு மாணவர்கள் என் வீட்டில் சில காலம் இருந்தார்கள் அவர்களுடன் பேசிப் பேசி தெலுங்கானா தெலுங்கு கொஞ்சம் புரிபட ஆரம்பித்தது. ஒரு நாள் இரவில் நான் அரைத்தூக்கத்திற்கு சென்ற பின்னர் , அவர்களின் உரையாடல் ஆரம்பித்தது. அதில் ஒரு நண்பன் சுத்த தெலுங்கில் பேசு, இவனுக்கு தெலுங்கானா பேச்சு வழக்குப் புரியும் என குறிப்பு கொடுக்க சுத்தத் தெலுங்கில் பேச ஆரம்பித்தார்கள் . அவர்கள் பரிசுத்த தெலுங்கில் , அவர்கள் உடனடியாக வீட்டைக் காலி செய்ய விரும்புகின்றார்கள், புது வீடு அவர்களுக்கு குறைந்த வாடகையில் வேறு பகுதியில் கிடைத்து இருக்கின்றது. உடனடியாக வீட்டைக் காலி செய்தால் , தனி ஒருவனாக முழு வாடகை கொடுக்க எனக்கு சிரமம் இருக்குமே எனக் கவலை இல்லாமல், அவர்களின் வசதியைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டு இருந்தார்கள். இரண்டு நாட்கள் கழித்து சொன்னார்கள். இந்த விஷயம் 'ஏற்கனவே தெரியுமே' என்றேன். எப்படி என்றக் கேள்விக்கு,
சுத்தத் தெலுங்கு , தெலுங்கானத் தெலுங்கை விட தமிழுக்கு மிக நெருக்கமாக இருக்கும், மேலும் தெலுங்கில் இருக்கும் பண்டைய சொற்கள் தமிழின் இலக்கியச் சொற்கள். , தமிழின் குழந்தை தெலுங்கு என என் தமிழரசியலையும் அவர்களிடம் விதைத்து விட்டு அவர்களை சுமுகமாக வழியனுப்பி வைத்தேன்.
சுவீடனில் மற்றும் ஒரு முறை , சிங்கப்பூர் சீனாக் காரன் , பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூரியா வரிசையாக பூக்களின் பெயர்களைச் சொல்லுவதைப் போல, பல தமிழ்க்கெட்ட வார்த்தைகளை சொன்னான். எப்படி சீனாக்காரர்கள் தமிழில் கிண்டலடிக்கப்டுவார்கள் என்பதையும் சொன்னான். இவை அனைத்தும் அவனது சிங்கப்பூர் தமிழ் நண்பர்களிடம் சிறு வயதில் இருந்து கற்று கொண்டதாம். அன்றில் இருந்து சீன ஆட்களை மறந்தும் கூட கிண்டலடிப்பதில்லை.
இப்படி திராவிட மொழி அனுபவங்கள் ஒரு வகை என்றால் , இத்தாலியில் வேறு ஒருவகையில் இருந்தது. ரோமை சுற்றிப்பார்க்க வந்திருந்த எனது எகிப்திய நண்பர்களை , என் இத்தாலிய - சிசிலி நண்பனிடம் அறிமுகப் படுத்தினேன். எகிப்திய நண்பர்கள் அவர்களுக்குள் அவ்வப்பொழுது அரபியில் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தனர். இது சகஜமான ஒன்று என்பதால் நான் கண்டு கொள்ளவில்லை. கொண்டாட்ட ஒன்று கூடல்களில் இந்தி'யர்கள் அவர்கள் மொழியில் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது , நானும் என் தமிழ் நண்பர்களும் தமிழில் பேசிக் கொண்டு இருப்போம். ஆனால் என் இத்தாலிய நண்பனின் முகம் அடிக்கடி கடுமையாக மாறிக்கொண்டு இருந்தது. பின்னர் , இத்தாலிய நண்பனிடம் 'அவர்கள் அரபியில் பேசிக் கொண்டு இருந்ததால் நீ கோபம் ஆகிவிட்டாயா? ' எனக் கேட்டதற்கு
"கோபம் அவர்கள் அரபியில் பேசியதற்காக இல்லை, அரபியில் அவர்கள் இத்தாலியைப் பற்றியும் என்னையும் கேலி செய்து கொண்டு இருந்தார்கள். எனக்கு அரபி தெரியாது என்றபோதிலும் , அவர்கள் கேலி செய்யப் பயன்படுத்திய அரபி வார்த்தைகள் அப்படியே இன்றும் சிசிலியில் புழக்கத்தில் உண்டு, சிசிலித் தீவு , வரலாற்று ரீதியாக ரோமப் பேரரசு / இத்தாலிக்கு எந்த அளவிற்கு நெருக்கமோ அதே அளவிற்கு எகிப்திற்கும் நெருக்கம். அரபிக் கலப்பு என்பது சிசிலியின் இத்தாலிய பேச்சு வழக்கில் சாதாரணமான ஒன்று " என்றான்.