Tuesday, October 22, 2013

தங்கச் சாமியார்


எனது முதன்மை சீடனுக்காகக் காத்து இருக்கின்றேன். எனது ஆசிரமத்தில் இருந்து 50 கிலோ மீட்டர்கள் தொலைவில் இருக்கும் பாழடைந்த சோழர்கள் கால மண்டபத்தில் அகழ்வாராய்ச்சி நடந்து கொண்டு இருக்கின்றது. அங்கிருந்து எதிர்பார்த்து இருக்கும் நல்ல செய்தி ஒன்றிற்காகக் காத்து இருக்கின்றேன். 

முப்பது வயதில் என்னளவிற்கு யாரேனும் சாதிக்க முடியுமா எனத் தெரியவில்லை. நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து தட்டுத் தடுமாறி பொறியியல் படித்து சில நாட்கள் துறை சார்ந்து வேலைப் பார்த்து , பின்னர் பக்கத்து வீட்டு சித்த மருத்துவரிடம் கொஞ்சம் சித்த மருத்துவம் கற்றுக்கொண்டு ஊரில் ஒரு சித்த மருத்துவக்கடை ஒன்றைப் போட்டது வரை சுமாராகத்தான் போய்க் கொண்டு இருந்தது. ஒரு நல்ல நாளில், சித்தத்தில் கொஞ்சம் காவி கலந்து பகவத் கீதைல என்ன சொல்லியிருக்கிறது என்றால் என பேச ஆரம்பித்து மருந்துகள் கொடுக்க ஆரம்பித்த பின்னர் கூட்டம் கூடியது. கொஞ்சும் தமிழ், நிறைய ஆங்கிலம், கொஞ்சம் வடமொழி என பேசியதால் மக்களுக்கு அபிமானம் கூடிக் கொண்டே போனது.

மன நிம்மதியற்று வருபவர்களுக்கு மருந்து என வெல்லசூரணத்துடன் போதைப்பொருளையும் சேர்த்துக் கொடுக்க ஆரம்பித்த பின்னர் வெளிநாட்டுக் காரர்களும் என் சீடர்களில் இடம் பிடித்தனர் ஆம்ஸடர்டாம் நகருக்கு அடுத்தப்படியாக என் குட்டி ஆசிரமம் விசயத்திற்கு பிரபலம்.

மற்ற வணிகத்தில் வடநாட்டவர்கள் கலக்கினாலும் இந்த ஆன்மிகத்தில் தென்னிந்திய சாமியார்கள் தான் பேரரசர்கள் . என்னைப் போல நிறைய தமிழ்ச் சாமியார்கள் பெருகிவிட்டதால் நான் பெற்ற இடத்தை இழக்காமல் இருக்க , ஆன்மிக வியாபரத்திற்கு சம்பந்தம் இல்லாத பிரபாகரன் , பெரியார் என பேசி எல்லாம் கூட்டம் சேர்க்க வேண்டியதாக இருக்கின்றது. ஆன்மிகத்தையும் அரசியலையும் இணைக்கும் போராளிகளே எனது சீடர்கள் என நான் அடிக்கடி சொல்லுவதுண்டு.

ஒரு நாள் ஏதேச்சையாக , தொலைக்காட்சியில் குறும்படம் ஒன்றைப் பார்க்க, அதில் கதைப்படி ஒரு சாமியார் பண்டைய அரசனின் கோவிலில் தங்கம் இருப்பதாக சொல்லுவார். அதையே என் கனவாக மாற்றி , சோழர் மண்டபத்தில் தங்கப் புதையல் எனச் சொல்லிவிட்டேன். இரண்டு நாட்களாக , நான் தான் செய்திகளின் செல்லப்பிள்ளை. அகழ்வாராய்ச்சி நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் ஒருவர் என் சூரணத்திற்கு கட்டுப்பட்டவர் என்பதால் கனவை மெய்ப்பிக்கத் தோண்டிக் கொண்டு இருக்கின்றார். என் கனவு என் உரிமை என, அவருக்கு முன்னரே என் சீடனை அனுப்பி 150 கிலோ தங்கத்தை அங்கேப் புதைக்க சொல்லி இருந்தேன். தங்கம் கிடைக்கும் ... என் புகழ் மேலும் பரவும் ... என சீடனுக்காகக் காத்து இருக்கின்றேன். அவனோ கைப்பேசி அழைப்பையும் எடுக்க மாட்டேன் என்கின்றான். ஒருவேளை தங்கத்தைப் புதைக்காமல் எடுத்துக் கொண்டு ஓடி இருப்பானோ !!

ஒரு நிமிடம் இருங்கள், அகழ்வாராய்ச்சி நிபுணரிடம் இருந்து அழைப்பு !!!

"ஹல்லோ"