காதலால் - ஒரு நிமிடக்கதை
வளரும் சாதனையாளர்கள் நிகழ்ச்சியில் இன்று நாம் சந்திக்கப் போகும் விருந்தினர் திரு.கார்த்திக், இவர் குறுகிய காலத்திலேயே தனது உழைப்பாலும், விடாமுயற்சியாலும் தனது நிறுவனத்தை உலகளவில் கொண்டு சென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்றால் மிகையாகாது என்ற தொலைக்காட்சி அறிவிப்பாளரின் கார்த்தி பற்றிய அறிமுகத்தை தொடர்ந்து கார்த்தியின் பேட்டி ஒளிபரப்பானது.
பேட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த மோகனுக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி ஒரு அசூர வளர்ச்சி. மோகனுக்கு கார்த்தியுடன் ஜெனியும் ஞாபகத்திற்கு வந்தாள். கார்த்தி ஒரு சமயம் மோகனிடம் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறான்.
”சார், இது ஜெனி, நாங்க கல்யாணம் பண்ணிக்கப்போறோம்”
திடீர்னு ஒரு நாள் ஜெனியும் அவனும் சேர்ந்து எடுத்துக்கொண்ட எல்லா புகைப்படங்களையும் போட்டு எரித்துக்கொண்டிருந்தான். என்ன நடந்திருக்கும் என்பதை மோகனால் புரிந்துகொள்ள முடிந்தது.. ஒரு வாரம் அறையை விட்டு வெளியே எங்கும் செல்லாமல் இருந்த கார்த்தி,
“மோகன் சார், நான் வேலையை ரிசைன் பண்னிட்டேன், மதுரை போறேன்” சொல்லிட்டு அறையைக் காலி செய்து கொண்டு கிளம்பிப் போனவன் சில காலம் மின்னஞ்சலில் தொடர்பில் மோகனுடன் இருந்தான். தொடர்பு நாளாவட்டத்தில் சுத்தமாக நின்று போன பிறகு இப்பொழுதுதான் மோகன் கார்த்தியைப் பற்றிக் கேள்விப்படுகிறார். அதுவும் ஒரு நல்ல நிலையில் கார்த்தியைப் பார்ப்பது அவருக்கு சந்தோசமாக இருந்தது.
பேட்டியின் முடிவில் தரப்பட்ட கார்த்தியின் மின்னஞ்சல் முகவரிக்கு , அவனின் வளர்ச்சியைப் பாராட்டி , காதலில் தோற்றவர்கள் சோகக்கடலில் மூழ்காமல் எப்படி வெற்றி தேவதையின் கழுத்தில் மணமாலை சூட முடியும் என்பதற்கு கார்த்தி உன் வாழ்க்கை ஒரு உதாரணம் என அழகான ஆங்கிலத்தில் மோகன் அனுப்பிய மின்னஞ்சலை அன்று மாலை படித்தக் கார்த்திக்கு மனதில் வெறுமையான சிரிப்புத்தான் வந்தது.
எத்தனை வெற்றிகள் வந்தாலும், காதலின் வெற்றிக்கு ஈடாகுமா!!! இந்த வெற்றிகள் எதுவுமே இல்லாமலும் கூட ஜெனியுடன் வாழ்ந்திருந்தால் கிடைத்திருக்கக்கூடிய மகிழ்ச்சி, இனி எவ்வளவு பெரிய புகழ் வந்தாலும் கிடைக்கவே கிடைக்காது என்ற ஆழ் மன வலியை தன்னுடனே வைத்துக் கொண்டு ,
ஜெனியுடன் எடுத்துக் கொண்ட எல்லாப் புகைப்படங்களையும் எரித்தாலும், அதன் நெகட்டிவ் மட்டும் பத்திரமாக இன்னும் கார்த்தியின் பழைய பெட்டியில், ஜெனி அவன் மனதில் இருப்பது போலவே இருக்கிறது என்பதை மோகனிடம் சொல்ல விருப்பம் இருந்தும் சொல்லாமல் மோகனின் மின்னஞ்சலுக்கு நலம் விசாரிப்பு பதிலுடன் கார்த்தி தனது மனைவி ரம்யா மற்றும் குட்டி அஞ்சலிபாப்பா ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அனுப்பிவைத்தான்.
5 பின்னூட்டங்கள்/Comments:
என்ன பேய் இல்லாத ஜெனி கதையா? நினைச்சுக் கூட பார்க்க முடியலையே....
பேய் ஸ்பெஷலிட் தடம் மாறுவத்ற்கு
என் கண்டணத்தைப் பதிவு செய்கின்றேன்
azhaganathoru kutty 'kadhal kadhai'....verri peraatha kadhalin ranam maarathu -:)
நன்றி ஜீஜே, சிவஞானம்ஜி & இலவசக்கொத்தனார்
பேய் கதை படிக்கலாம்னு வேகமா வந்தா பேய் இல்லையே!! அதாவது பேய் கதை இல்லையே! நானும் வன்மையாக கண்டிக்கிறேன் :))
Post a Comment