Saturday, January 26, 2008

ஆடம் "கில்லி” கில்கிறிஸ்ட் - சகாப்தம்


அடிலெய்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்தியவுடன் ஆன நான்காவது டெஸ்ட்டுடன் டெஸ்ட் ஆட்டங்களில் இருந்து ஓய்வுபெறப்போவதாக ஆஸ்திரேலிய அணியின் துணைத் தலைவரும் விக்கெட் கீப்பருமான ஆடம் கில்கிறிஸ்ட் அறிவித்துள்ளார். 36 வயது கில்கிறிஸ்ட் 1996 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கெதிராக, பரிதாபாத்தில் டைட்டன் கோப்பைக்கான ஒரு நாள் போட்டி ஆட்டங்களில் ஒன்றில் அறிமுகமானார். இவர் 76 ஒருநாள் ஆட்டங்கள், 2376 ரன்கள், ஐந்து சதங்களுக்குப் பின் 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக கப்பா மைதானத்தில் தான் ஆடிய முதல் டெஸ்ட் ஆட்டத்தில் தன்னுடைய ஒருநாள் அனுபவத்தை அதிரடியான 88 பந்துகளில் 81 ரன்கள் மூலம் வெளிப்படுத்திய இவரின் சராசரி சில வருடங்கள் முன்புவரை 50 ரன்களாக இருந்தது 96 ஆட்டங்களுக்குப்பிறகு 47 யை சுற்றி இருக்கிறது. முரட்டுத்தனமாக ஆடும் ஆஸ்திரேலிய வீரர்கள் மத்தியில் கொஞ்சம் “ஜெண்டில்மேன்” ஆட்டத்தை கடந்த 10 வருடங்களாக வெளிப்படுத்தி வருபவர் என்ற முறையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இவரது ஆட்டமும், இவரையும் பிடிக்கும்.2003 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பை அரைஇறுதியில் நடுவர் அவுட் கொடுக்கும் முன்னரே இவராகவே வெளியேறியது பலரை ஆச்சரியப்படுத்தியது.

ஷேன் வார்னே வுடன் பெரிய நட்பு ஏதும் இல்லாத போதும், அதை ஒரு போதும் ஆடுகளத்திலோ , பேட்டிகளிலோ காட்டிக்கொள்ளதவர். ஷேர்வார்னே விக்கெட் எடுக்கும்பொழுதெல்லாம் கில்கிறிஸ்ட் காட்டும் உற்சாகம் ஏதோ அவர்கள் இருவரும் பால்ய சினேகிதர்கள் என்று நினைக்கவைக்கும்.

மார்க் டெய்லரால் இந்தியாவில் செய்ய இயலாததை , ஸ்டீவன் வாக் கினால் செய்ய முடியாததை கில்கிறிஸ்ட் செய்து காட்டினார். போண்டிங் காயமடைய 2004 ஆம் ஆண்டு இந்திய சுற்றுப்பயணத்தில் அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்று 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் மூன்றாவது ஆட்டத்திலேயே 2-0 என்ற நிலையில் தொடர் வெற்றியை உறுதிசெய்தார்,


2006 ஆஷஸ் தொடரில் இரண்டு வாத்து முட்டைகளுக்குப் பிறகு பெர்த் ஆடுகளத்தில் இவர் ஆடிய காட்டடியில் இங்கிலாந்து குறிப்பாக மோண்டி பனேசர் மிரண்டு போனது உண்மைதான்.சில பந்துகளில் விவியன் ரிசர்ட்ஸின் அதிகவேக சதத்தை முறியடிக்கும் வாய்ப்பை இழந்த கில்லி , சொன்னது

"I would have guessed Viv Richards was somewhere in the mix, but I've never known exactly how many balls," he said. "It's a shame I didn't tickle that wide one from Hoggard.

"I probably wouldn't have wanted a message from the dressing room. Viv deserves that mantle as the fastest hundred."


கடந்த வருடம் நடந்த உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தில் கில்கிறிஸ்ட் ஆடிய அற்புதமான ஆட்டத்தில் இரண்டாவது முறை உலகக் கோப்பையை வெல்லப் போகிறோம் என்ற இலங்கையின் கனவு தகர்ந்து போனது. ஆடுகள சுவாரசியங்கள் குறைந்த அந்த உலகக் கோப்பை போட்டியின் முடிவில் கில்லியின் ஆட்டத்தை பார்க்க முடிந்தது ஒரு குறைந்த பட்ச ஆறுதல்.இந்த சதத்தின் மூலம் மூன்றாவது முறையாக உலகக்கோப்பை இறுதிபோட்டிகளில் 50+ ரன்களை அடித்தவர் என்ற சாதனையையும் சத்தமில்லாமல் செய்து முடித்தவர்.

அட, சில சமயங்களில் கில்லி தான் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதை மறக்கடித்துவிடுவார். எந்த ஒரு அணிக்கும் விக்கெட் கீப்பிங் பணி இல்லாமலே ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் என்ற அளவில் கூட சேர்க்க பரிந்துரைக்கபடக்கூடிய அளவில் பேட்டிங் திறமையில் ஜொலிக்கும் டெஸ்ட் ஆட்டங்களில் அதிக பேரை ஆட்டமிழக்க செய்தவர் என்ற சாதனையை அடைந்து இருக்கிறார்.ஆடம் கில்கிறிஸ்ட் பிடித்த அற்புதமான கேட்சுகளில் சாம்பிளுக்கு இரண்டு

டெஸ்ட் ஆட்டங்களில் 100 சிக்ஸர்களை அடித்தப் பெருமையையும் வைத்துள்ள கில்கிறிஸ்ட்,
தனது அறிமுக டெஸ்ட்டில் இருந்து இந்த 96 வது ஆட்டம் வரை ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் ஆடி இருக்கும் அவர் 100 டெஸ்ட்டுகளை நிறைவு செய்யாமல் ஓய்வு பெறுவது சிறிது வருத்தம் அளிக்கத்தான் செய்கிறது.

30 ரன்கள் அடித்து , கைக்கு வரும் கேட்ச்சுகளைப் பிடித்தால் போதும் என்ற நிலையை மாற்றி . விக்கெட் கீப்பரின் பேட்டிங் பணி எவ்வளவு முக்கியத்துவமானது என்று உலகுக்கு இந்த பத்தாண்டுகளில் உணர்த்தியவர் கில்கிறிஸ்ட் என்றால் மிகையாகாது.அவரின் தாக்கம் கிரிக்கெட் ஆடும் தேசங்களில் விக்கெட்கீப்பர்கள் ஆடும் பரிமாணத்தை நிச்சயமாக மாற்றியது.

சமுதாயத்தின்பால் அக்கறைக் காட்டும் சந்தர்ப்பங்களை எப்போதும் தவறவிடாத கில்கிறிஸ்ட் ,வேர்ல்ட்விசன் அமைப்பின் குழந்தைகள் மறுவாழ்வு விசயங்களுக்காக அந்த அமைப்பின் தூதராக மூன்றாண்டுகளாக இருந்து வருகிறார்.

ஆட்டத்திறன்,பெருந்தன்மை,போராடும் குணம், தன்னடக்கம் இவையனைத்தும் ஒரு சேர மனிதர்களிடம் அமைவது மிக அரிது. அரிய மனிதரான கில்கிறிஸ்ட்டின் கிரிக்கெட் வாழ்க்கை நிச்சயம் கிரிக்கெட் சகாபதங்களுள் ஒன்று.
கில்கிறிஸ்ட்டின் சாதனை விபரங்களை ஆங்கிலத்தில் படிக்க இங்கே சொடுக்கவும்

தனது பள்ளித்தோழி மெலிண்டாவை மணமுடித்து மூன்று குழந்தைகளுடன் பொறுப்பான குடும்பஸ்தராகவும் இருக்கும் கில்கிறிஸ்ட் கிரிக்கெட்டுக்கு வழங்கிய மகத்தான சேவையைப் பாராட்டி, எதிர்காலம் மேலும் சீரும் சிறப்புமாக இருக்க வாழ்த்துவோம்.

5 பின்னூட்டங்கள்/Comments:

said...

நீங்கள் சொன்னபடி ஒரு சிறந்த ஜென்டில்மேன்தான் அவர். ஒரு சிறந்த ஆல்ரவுண்டர். உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது.

//எதிர்காலம் மேலும் சீறும் சிறப்புமாக இருக்க வாழ்த்துவோம்.
//

எதற்கு சீற்றமும் கோபமும்? அவரைப் போன்ற அமைதியான மனிதர்கள் சீரும் சிறப்புமாக இருந்தால் போதாதா? :-))

said...

நன்றி ஸ்ரீதர் நாரயணன். ::) மாற்றியாகிவிட்டது.

said...

உண்மையில் கில்லியின் ஓய்வு கொஞ்சம் முன் கூட்டிய ஒன்றே, அதற்கு காரணம் ஆஸி தேர்வாளர்கள் என்றும் சொல்லலாம், அவர்களே மறைமுகமாக நிர்பந்தப்படுத்தி இருக்க வேண்டும்.

முன்னர் மார்ட்டின் ஓய்வுக்கும் அவர்கள் மறைமுக நிர்பந்தமே , காரணம் அங்கெல்லாம் கண்டிப்பாக காண்டிராக்ட் முறை இருப்பது, அடுத்த சீசனுக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது என்பதை தயவு தாட்சண்யம் இன்றி முன்கூட்டியே சொல்லி விடுவார்கள். மேலும் அடுத்தது யார் என்பதையும் முன்னரே பேசுவார்கள்.

அதனாலேயே நாகரீகமாக கில்லி தானே முன் வந்து ஓய்வை சொல்லிவிட்டார் என நினைக்கிறேன்(அவுட் கொடுக்கும் முன்னர் நடக்கும் பண்புள்ளவர்).
எனக்கும் அவர் 100 டெஸ்ட் நிறைவு செய்யாமல் போவது ஒரு குறையாகவேப்படுகிறது.

ஆஸ்திரேலியர்கள் கிரிக்கெட்டை ஆடும் முறை இது, என்ன செய்வது.

ஒரு நாள் போட்டிகளில் 9000 க்கு மேல் ரன்கள் அடித்தவர் கண்டிப்பாக 10000 கடக்க வாய்ப்புள்ளவரை அவசரப்பட்டு துறத்தும் ஆசி கிரிக்கெட் போர்டின் முடிவை என்னவென்பது.ஆஸி கிரிக்கெட் போர்டின் பங்கும் உள்ளது என்று நினைப்பதால் சொல்கிறேன்.

ஒரு சில கிரிக்கெட்டர்களே எதிரணியினரின் பாராட்டையும் பெரும் வாய்ப்புள்ளவர்கள்(சச்சின்,கில்லி, லாரா..etc) அப்படிப்பட்டவர் கில் கிரைஸ்ட்! அவருக்கு எனது வந்தனங்கள்!

said...

மிகச்சிறந்த கீப்பர், பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமே இல்லை. ஒட்டு மொத்த ஆஸ்திரேலியா அணியையே நமக்கு பிடிக்காமல் போனாலும் இவரை மட்டும் பிடிக்காமல் போகாது.

ஐய்ய்ய்ய்யா ஆஸ்திரேலியால இருந்து செமை அக்ரச்சிவான ஒரு பேட்ஸ்மேன் போறாருன்னு வேணா கொஞ்சம் சந்தோஷப் பட்டுக்கலாம். ஆனாலும், ஒரு சிறந்த ப்ளேயரை மிஸ் பண்ணப் போறோம் என்பது வெகு நிச்சயமான உண்மை.

said...

மிக நல்ல பதிவு. கில்லி ஒரு திறமையான ஆட்டகாரர்.
He is a perfect gentlemen in the ground, unlike other australian crickets. This is surely very early retirement.