Sunday, July 15, 2007

நாங்க பேய் - ஒரு நிமிடக்கதை

சுடுகாட்டை அடுத்துள்ள ஒரு பாலத்தைக் கடக்கையில் இரண்டு இளைஞர்கள் எதிரே வர அவர்களில் ஒருவன் என்னைப் பார்த்ததும்,

"அண்ணே, உங்களை இந்த ஊரில பார்த்ததில்லையே, நீங்க ஊருக்குப் புதுசா?"

"ஆமாம் தம்பி, நமக்கு வெளியூரு, இந்த ஊரில சொந்தக்காரர் ஒருத்தரை கூட்டிட்டுப் போகலாம்னு வந்தேன்"

"சரிண்ணே!!, இந்த நேரத்தில எதுக்கு இந்த சுடுகாட்டுப் பாதையில வர்றீங்க, பேய் பிசாசுங்க எல்லாம் உலவுற நேரம்"

"என்ன தம்பி, நீங்க இரண்டு பேரும் இந்த நேரத்தில அதுவும் சுடுகாட்டுப் பக்கமா தைரியமா வர்றீங்க அப்படி இருக்க எனக்கு எதுக்குப் பயம்"

"அய்யோ அண்ணே!!! எங்களுக்குப் பயமெல்லாம் கிடையாது, நாங்க செத்துப் போய் ரெண்டு வருஷம் ஆச்சு, அந்த ரயில்வே டிராக்ல, பைக்ல கிராஸ் பண்றப்ப அடிபட்டு செத்துப் போயிட்டோம், அடிக்கடி இங்க வந்து நாங்க பழைய கதைகள் எல்லாம் பேசிக்குவோம் " என்றான் மற்றொருவன்.

அவர்கள் இருவரும் ஒரு முறை என்னை ஏளனமாகப் பார்த்துவிட்டு நமுட்டு சிரிப்புடன் கடந்து சென்றார்கள்.

அவர்கள் தூரத்து இருட்டில் காணாமல் போக, சின்னப் பசங்க, பயமுறுத்த வேண்டாம், என்று நினைத்துக் கொண்டு அவ்விடத்திலிருந்து காற்றோடு காற்றாக மறைந்தேன்.

4 பின்னூட்டங்கள்/Comments:

siva gnanamji(#18100882083107547329) said...

//சின்னப் பசங்க அவங்களைப்
பயமுறுத்த வேண்டாமென்று...//

அதுக்காக இப்படி எங்களைப் பயமுறுத்தனுமா?

ஆவி அம்மணி said...

அருமையான சிறுகதை தலைவா!

வினையூக்கி அண்ணனுக்கு ஒரு பெரிய ஓ!

யோசிப்பவர் said...

விடவே மாட்டீங்களா?

Vidya Natarajan said...

haha
so even u were a ghost
i thot alari adichu odaporeenga kadaseelanu
good twist