Sunday, February 22, 2009

ச்சும்மா - ஒரு நிமிடக்கதை

எங்கேப்பார்த்தாலும் வெண்மை, நீருக்கு நிறமில்லை என்று சொன்னது யாரு? எனக்கு வெண்ணிறம் பிடிக்கும் என்றாலும் தொடர்ந்து ஒரு வாரமாக பனிபடர்ந்து இருக்கும் இந்த ஊரைப் பார்க்க சற்றே திகட்டியது. முகத்தைத் தவிர அனைத்து பகுதிகளுக்கும் கவசம் போட்டிருந்தாலும் உடல் முழுவதும் இருந்த குளிரின் நடுக்கம் அப்படியே வீட்டிற்கு திரும்பிப் போய் விடலாமா என்றிருந்தது.. கைத்தொலைபேசியை எடுத்துப்பார்த்தேன், சரியாக 7.55 க்குவரும் பேருந்து 7.58யைக் கடந்தும் வரவில்லை.

பேருந்து நிலையத்தில் நானும் அந்த சுவிடீஷ் பெண்ணும் மட்டுமே இருந்தோம். இவள் லிண்ட்ப்லோம்ஸ்வேகனில் தான் ஏறுவாள். ஏறிய உடன் ஓட்டுனருக்குப்பின் இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொள்வாள்..இரண்டு நிறுத்தங்கள் கழித்து வரும் விலாடிபிக் நிறுத்தம் வந்ததும் ஏற்கனவே மலர்ச்சியாக இருக்கும் அவளின் முகம் மேலும் மலரும். அந்த நிறுத்தத்தில் ஒரு பையன் ஏறுவான். நேராக இவளின் அருகே வந்து அமர்ந்து கொள்வான். ரோன்னிபே ரயில்நிலையம் செல்லும் அந்த அடுத்த 5 நிமிடங்களுக்கு முத்த மழைதான். காதலில் காமம் இல்லாத முத்தங்கள் அவர்களுடையது. கீர்த்தனா எனக்கு கொடுத்த மென்மையான முத்தங்களில் இருந்த காதல் நினைவுக்கு வரும்.

ஒரு வாரத்திற்குப்பின் இன்றுதான் காலை வகுப்பு இருந்ததால் இவள் பயணம் செய்யும் இந்த நேரத்தில் வர நேர்ந்தது. தாமதமாக வந்த பேருந்து ஓட்டுனரை அந்தப் பெண் சுவீடிஷ் மொழியில் கடிந்து கொண்டாள். ஓட்டுனருக்கு நான் சின்னப்புன்னகையைக் கொடுத்துவிட்டு அவளுக்குப்பின் இருக்கையில் அமர்ந்து கொண்டேன். விலாடிபிக் நிறுத்தம் வந்தது, அந்தப் பையன் ஏறினான். ஆனால் அவளின் அருகில் அமரவில்லை. அவளின் இருக்கைக்கு இணையாக வலதுபுறம் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான். அவன் அவளைப் பார்க்க அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் ஏக்கம், அவமானம், பயம் , தவிப்பு என ஒரு சேர இருந்தது.

அவளோ அவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஒரு வாரத்தில் இத்தனை மாற்றமா!!!! நிறம்,அழகு,கல்வி என எத்தனை மாறுபாடுகள் இருந்தாலும் பெண்கள் , ஆண்களை அலட்சியப்படுத்துவதில் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். அலட்சியப்படுத்தபடுவதற்கென்றே பிறந்தவர்கள்தான் ஆண்கள் போலும்!!! “நேஸ்ட்டா ர்ரோன்னிபே ரெஸசெண்ட்ரம்” என அறிவிப்பு வர நாங்கள் மூவரும் பேருந்தை விட்டு இறங்கினோம்.

நான் கல்லூரியை நோக்கி நடக்க, அவர்கள் இருவரும் நான் நடந்த திசைக்கு எதிர் திசையில் நடந்தார்கள். காலையில் இருந்து 100 வது தடவையாக ,என்னுடைய கைத்தொலைபேசியை எடுத்து கீர்த்தனாவிடம் இருந்து ஏதேனும் அம்மு என்று சேமித்து வைத்திருந்த பெயரில் குறுந்தகவல் வந்திருக்கின்றதா எனப்பார்த்தேன். ம்ஹூம் எதுவும் வரவில்லை.... கீர்த்தனாவிடம் இருந்து எந்த அழைப்போ குறுந்தகவலோ வரமால் இருப்பது இன்றுடன் நான்காவது நாள்.

9 பின்னூட்டங்கள்/Comments:

said...

ச்சும்மா பின்னிட்டீங்க

said...

அச்சசோ பொண்ணுங்களை இப்படிச் சொல்லிட்டியேப்பா????
அன்புடன் அருணா

said...

அண்ணா நாளு நாளுக்குள்ளேயே..

/*நிறம்,அழகு,கல்வி என எத்தனை மாறுபாடுகள் இருந்தாலும் பெண்கள் , ஆண்களை அலட்சியப்படுத்துவதில் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். அலட்சியப்படுத்தபடுவதற்கென்றே பிறந்தவர்கள்தான் ஆண்கள் போலும்!! */
பெண்களை பத்தி இப்படி நினைக்கிற அளவுக்கு உங்க நிலைமை ஆயிடுச்சா?

ஒரு வாரத்துக்கு இன்னும் மூனு நாளு அதிகம்... அதுதான் அந்த பையனுக்கும் பொண்ணுக்குமிடையை அத்தனை மாற்றங்கள்... விட்டுடுங்க பாவம்... இன்னும் ஒருவாரத்தில மாறிடுவாங்க...

said...

நிறம்,அழகு,கல்வி என எதுவும் இல்லா
விட்டாலும் ஆண்கள் பெண்கள் பின் போவது ஏன்.

said...

:)

புனைவில்லா(த) (சிறு)கதை போல் இருக்கிறது !

said...

ஐ மீன் உண்மை சிறுகதை ?
:)

said...

செல்வா சார்,
கவலைபடாதீங்க இன்னும் 3 நாள்(ஒரு வார கணக்கு) முடிஞ்சதும் எல்லாம் சரியாகிடும். அம்மு கிட்ட இருந்து மெசஜ் என்ன ஐ.எஸ்.டி காலே வரும்

said...

நல்ல குறுங்கதை! அலட்சியப் போக்கை போகிற போக்கில் சொன்னது போல அழகான முடிவு முடிச்சுடன் அம்சமாக இருக்கிறது!!

வாழ்த்துக்கள் வினையூக்கி!!!

said...

நல்லா இருக்கு