Thursday, February 05, 2009

தெருநாயும் தற்கொலை நினைவுகளும் - சிறுகதை

வலிக்காமல் சாகும் உபயம் ஏதாவது இருக்குமா என கூகிளில் sucide tips எனத் தேடிப்பார்த்தேன். எல்லாம் அரதப் பழசான யோசனைகள்.மணிக்கட்டை அறுத்து கொண்டால் என்ன? ஐய்யோ.. நிறைய ரத்தம் வரும், வலிக்கும். தூக்குப் போட்டுக்கொண்டால் என்ன? நாக்கு வெளியேதள்ளி கோரமாகப் போய்விடுமே!! பவுலோ யோயல்ஹோ எழுதிய வெரோனிக டிசைட்ஸ் டு டை ஆங்கிலப்புதினத்தின் வரிகள் எல்லாம் நினைவுக்கு வந்தன. ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து விடலாமா!! விஷம் குடித்து விடலாமா!! சயனைட் எங்கேயாவது கிடைக்குமா எனதேடிப் பார்த்தேன். சயனைட் வாயில் வைத்ததும் உயிர் போய்விடுமாமே!!

இனிமேல் இசையாலும் இளையராஜாவினாலும் கூட என்னைக் காப்பாற்ற முடியாது. எந்த பாட்டுக் கேட்டாலும் குற்ற உணர்ச்சி மட்டுமே முன் வந்து நிற்கிறது. தனிமையின் இனிமை இசையால் நிரம்பும் என்ற நிலை எல்லாம் இப்போது இல்லை. ஒவ்வொரு பாட்டும் என்னுள் இருக்கும் துக்க உணர்வை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது. உலகத்தில் பெரிய அவமானம் நம்முள் இருக்கும் மனசாட்சியிடம் அவமானப்பட்டு நிற்பதுதான். என்னுள் இருக்கும் எதிரியிடம் எதிர்மறை ஆளுமையிடம் நான் தோற்றுப்போய்விட்டேன். யாரிடம் தோற்றாலும் நம்மைத் தேற்றிக்கொள்ளலாம். என்னிடம் நானே தோற்றுப்போனபின் நான் ஏன் உயிர்வாழ வேண்டும். கிட்டத்தட்ட ஒரு வாரமாக எப்படி தற்கொலை செய்து கொள்ளலாம் என திட்டமிட்டே எனது சாவைத் தள்ளிப்போட்டுக்கொண்டு வருகிறேன். பிரச்சினை என்னவெனில் எல்லா வகையான தற்கொலை முடிவுகளிலும் வலி இருக்கிறது.

தூக்க மாத்திரைகள் சாப்பிடுவது எளிய வழிமுறையாக தோன்றினாலும், அதில் தான் அதிக வலி இருக்குமாம். உடல் வலியைக் காட்டிலும் ஒரு வேளை என் தற்கொலை முயற்சி தோல்வி அடைந்து விட்டாலும் கூட என் உடலுக்கு எந்த சேதாரமோ விகாராமோ வந்துவிடக்கூடாது என்பதிலும் கவனம் இருந்தது. தூக்க மாத்திரை மெதுவான இறப்பைக் கொடுத்தாலும், உடலுக்கு அதிக சேதாரம் இல்லை என்பதால் தூக்க மாத்திரைகள் வாங்கி செத்துப் போய்விடலாம் என இறுதி முடிவு எடுத்தேன்.

சாகும்பொழுது கூட அழகாகச் சாகவேண்டும், என முகச்சவரம் செய்து கொண்டு, கீர்த்தனா வாங்கிக் கொடுத்த உடைகளை அணிந்து கொண்டு, தூக்க மாத்திரை வாங்க வெளியே கிளம்பினேன். கீர்த்தனா போன மாதம் சுவீடன் போகும் முன் எனக்காக அவள் வாங்கிக் கொடுத்து போன உடைகள் இது. அவள் மேல் இருந்த கோபத்தில் இதை அணிய வெறுப்பாக இருந்தது. இன்று தான் எனக்கு கடைசி நாளாயிற்றே, அவள் பிரியாமாய் வாங்கிக் கொடுத்ததை அணிந்து கொள்ளலாம் என எடுத்து உடுத்திக்கொண்டேன்.

வெளியே எனது குடியிருப்பு காவலாளி நாரய்யா குடியிருப்புக்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்த நாயை விரட்டிக்கொண்டிருந்தார். அவர் என்னைப் பார்த்ததும்,

"வணக்கம் கார்த்தி சார், இழுத்துக்கோ பறிச்சுக்கோன்னு இந்த நாய் கிடக்குது,,, பாவமாத்தான் இருக்கு, ஆனால் இங்கே செத்துபோச்சுன்னா நான் தான் கிளீன் பண்ணனும், பக்கத்துல சீப்ரோஸ் வாசல்ல போய் செத்துச்சுன்னா அவனுங்க பார்த்துக்குவானுங்க"

நான் இந்தக் குடியிருப்புக்கு வந்த நாள் முதலே இதைப்பார்த்துக் கொண்டிருக்கிறேன். கீர்த்தனா இங்கு வரும்பொழுதெல்லாம் இதற்கு ரொட்டித்துண்டுகள் போடுவாள். ஒரு முறை டாம்மி, மறுமொரு ஜிம்மி என நிதத்துக்கொருப் பெயர் வைத்துக்கூப்பிட்டது நினைவுக்கு வந்தது.

அனேகமாக இந்த நாய் என் சொர்க்கத்திற்கான பயணத்திற்கு வழித்துணையாக இருக்கலாம். என நினைத்துக்கொண்டே
"ம்ம்ம்ம்.. நாரய்யா இந்தாங்க" என நூறு ரூபாய் தாளை அவரிடம் நீட்டினேன்.

"சார், இன்னக்கி 10 ஆம் தேதி தானே ஆகுது, இப்போவே"

"அட பரவாயில்லை வச்சுக்கோங்க" பாவம் அடுத்த மாதத்தில் இருந்து அவர் இருப்பில் நூறு ரூபாய் குறைந்துவிடும்.

இன்று திங்கட் கிழமை, சில வாரங்களுக்கு முன் வரை இருந்த திங்கட்கிழமை என்றால் அலுவலகம் அரக்கப் பரக்கபோகும் நிலைமை , இப்பொழுது இல்லை. நான்கு வருடங்கள் விசுவாசமாக வேலைப் பார்த்தும், திடீரென வேலையை விட்டு போகச் சொல்லிவிட்டார்கள். இந்த நிறுவனத்துக்காக வடதுருவத்திற்கு அருகே இருந்த மொழி தெரியாத நாட்டில் எல்லாம் நான் குப்பைக் கொட்டி இருக்கிறேன். அடுத்த ஐந்து வருடங்களுக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு சேமிப்பு இருக்கிறது. ஆனால் பிரச்சினை அதுவல்ல, நான் நேசித்த விசயங்கள் எலலாம் எனக்கு ஒரே சமயத்தில் வந்து ஒரே சமயத்தில் விலகுவதுதான். எனக்குப் பிடித்த பெண் என்னை விட்டு போவது இது முதல் முறை அல்ல. பெங்களூரில் படித்து முடித்து 2 வருடம்
வேலையில்லாமல் சுற்றிகொண்டிருந்தேன். அப்பொழுது இருந்த நம்பிக்கை மேலே வந்துவிடலாம் என்ற உத்வேகம் இப்பொழுது இல்லை. மனதில் ஓரத்தில் ஒடுங்கி இருந்த எதிர்மறை எண்ணங்கள் உருவங்களாக மாறி மனதில் ஆடிக்கொண்டிருக்கின்றன.

எங்கோ எப்போதோ நான் பட்ட அவமானங்கள் எல்லாம் நினைவுக்கு வந்து அன்று உனக்கு நீயே பொய்யான சமாதனம் சொல்லிக்கொண்டு உன்னை ஏமாற்றிக்கொண்டாய் இது நாள் வரை மவுனமாய் இருந்த மனசாட்சி என்னை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறது. முன்பு போல ஏதாவது கதை , கவிதை எழுதி என்னுடைய வெறுப்புகளுக்கு ஒரு வடிகால் தேடிக்கொள்ளலாம் என்று நினைத்தால், மனதில் வந்து விழும் வார்த்தைகள் வடிகாலாய் இருப்பதை விட வெறுப்பை ஊதிவிடும் ஊதுகுழல்களாகவே அமைகின்றன. இதோ நான் சராசரி மனிதன் இல்லை, எண்ணத்தால் உயர்வானவன் என்று எனக்குள்ளே நான் போட்டுக்கொண்டிருந்த மேல் பூச்சுகள் கலைந்து நிர்வாணமாய் நிற்கிறேன். மனதில் தூங்கிக் கொண்டிருந்த பழிவாங்கும் எண்ணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக எட்டிப்பார்க்கின்றன. இந்த பழிவாங்கும் எண்ணத்தில் நானும் அழிந்து பிறரையும் அழிப்பதை விட , நானே அழிந்து போவது தான் நல்லது என இந்த தற்கொலை முடிவை எடுத்து இருக்கிறேன்.

" வைத்தி, 15 ஸ்லீப்பிங் டேப்லட்ஸ் கொடுங்க" கடைக்காரர் எனக்கு ஏற்கனவே பரிச்சயமானவர் என்றாலும், என்னை ஏற இறங்கப் பார்த்தபடி.

"என்ன எழுத்தாளரை எதும் சூசைட் அட்டெம்ப்ட் பண்ண போறிங்களா?"

"அட நீங்க வேற,, ஆபிஸ் வொர்க் செம டென்ஷன்,.. தூக்கமே வர மாட்டேங்குது, அதுதான் வாங்க வந்தேன், சரி அப்போ இரண்டு மட்டும் கொடுங்க" என சில்லறையை நீட்டினேன்.

"அதில்லை சூசைட் அட்டெம்ப்ட் பண்ணி அந்த அனுபவத்தை கதையா எழுதப்போறிங்களோன்னு நினைச்சேன்"

"போன வாரமே கம்ப்லைண்ட் செஞ்சாச்சு, இப்போதான் வரானுங்க, " சாலையின் அடுத்த முனையில் ஒரு நாயின் கழுத்தில் கொக்கியை மாட்டி நாய் பிடிப்பவர் பிடித்து நாய் வண்டியினுள் கொண்டு போட்டார்.

"வைத்தி, பிடிக்கிற நாயெல்லாம் கொன்னுடுவாங்களா"

"விலங்குகள் அமைப்பு எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறதுனால , கொல்றாங்களான்னு தெரியாது, எளவுகள் தொலைஞ்சா சரி"

எனக்கும் இந்த நாய்கள் என்றால் பிடிக்காது. ஆனால் அவைகளின் கழுத்தில் கொக்கிப்போட்டு இழுத்து செல்வது பாவமாக இருந்தது. என்னையும் இன்றிரவு எமதர்மன் இப்படித்தான் இழுத்துச் செல்வானோ!! மீதி மாத்திரைகளையும் வாங்க இடதுபுறமாக அடுத்த தெருவினுள் நுழைந்து , ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி இரண்டு இரண்டாக தேவையான அளவு மாத்திரைகள் வாங்கி ஆயிற்று.

எனதுக் குடியிருப்புச் சாலையின் திருப்பத்தில்
"கார்த்தி சார், கார்த்தி சார்" என நாரய்யாவின் குரல் கேட்க திரும்பிப்பார்த்தேன்.

"சார், கொஞ்ச நேரம் அப்படியே வெயிட் பண்ணுங்க, அந்த சனியனை சாவுறதுக்கு முன்ன நாய் வண்டியில போட்டுரலாம்"
நாரய்யா முன்செல்ல , நாய் பிடிப்பவர் சத்தமில்லாமல் கையில் கொக்கி வளையத்துடன் , தூங்கிக்கொண்டிருக்கும் நாயை நெருங்க சில அடிகள் இருக்கும்பொழுதே, சாவுக்காக தூங்கிக் கொண்டிருந்த நாய், தனக்கு ஏதோ நேரப்போகிறது என உணர்ந்ததோ என்னவோ, எழுந்து , ஒரு ஓட்டம் பிடித்தது பாருங்கள், அப்படியே அருகில் இருந்த சுவரை ஒரே தாவில் தாவி இரண்டு தெரு தாண்டி ஓடிப் போனது.

"சாவப்போற நாய் , எப்படி தப்பிச்சுப்போகுது பார்த்தீங்களா? சார்"

நாரய்யா சொன்னதை நான் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. மனமெல்லாம் , சில நொடிகளில் வாழ்வின் அர்த்தத்தை ஒரு தெரு நாய் எனக்கு உணர வைத்ததுப் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தது. உற்சாகம் மெல்ல எட்டிப்பார்க்க, அதன் உடன் பிறப்புகளான நம்பிக்கையும் உத்வேகமும் , என் எதிர்மறை எண்ணங்களை எட்டி உதைத்து மீண்டும் மன சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்தன.

"எப்படியோ சனியன் ஒழிஞ்சது, இங்கே செத்துக்கிடந்து நாறாமாப்போச்சே!!"

தூக்க மாத்திரைகளை சாக்கடையில் கொட்டிவிட்டு புது மனிதனாக வீட்டினுள் நுழைந்தேன்..
*********************************

25 பின்னூட்டங்கள்/Comments:

said...

பின்னிட்டீங்க பாஸ்,
அழகான நடை.
இனிமேல் தான் உங்களின் ஒவ்வொரு போஸ்டயும் படிக்கனும்.

said...

//உற்சாகம் மெல்ல எட்டிப்பார்க்க, அதன் உடன் பிறப்புகளான நம்பிக்கையும் உத்வேகமும் , என் எதிர்மறை எண்ணங்களை எட்டி உதைத்து மீண்டும் மன சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்தன.//

நல்லா எழுதிருக்கீங்க வினையூக்கி....இந்த வரிகள் எனக்கு ரொம்பப் பிடித்திருத்தது..
அன்புடன் அருணா

said...

வித்தியாசமான நடை...
நம்பிக்கை தரும் வரிகள்...!

said...

அருமையான நடை... அழகான கருத்துள்ள முடிவு...

தேர்ந்த எழுத்தாளர்கள் கையாளும் கதை வடிவம் இது. தொடர்ந்து எழுதுங்கள்....

said...

என்றாலும், தற்கொலைக்கான காரணம் அழுத்தமாக சொல்லப்படவில்லை

said...

நன்றி தேனியார்,அன்புடன் அருணா,நிமல்.

said...

ஆதவா,!
எந்த ஒரு தற்கொலை முடிவுமே அழுத்தமான காரணங்களைக் கொண்டிருப்பதில்லை. அத்துடன் வேலை நீக்கம், பிடித்தமான பெண்ணின் பிரிவு என மேலோட்டமாக காரணங்களைக் கொடுத்து இருக்கிறேன்.

said...

!!!! etho short film paatha effect..semma vivid description...piniteenga

said...

வாழ்வின் அனைத்து நிகழ்வுகளுக்கும் தீர்வுகள் அதற்களுக்குள்ளேயே ஒழிந்து கிடக்கின்றன... உண்மைதானே அண்ணா...

said...

அருமையான நடை செல்வா... தனிமையிலும், வலியிலும் இருக்கும் வரிகள் மிகவும் ஆழமானவை... கலக்கிட்டீங்க...

said...

என்னதை சொல்லப்போறேன் வினையூக்கி, வழக்கம் போல தானே.. அருமையாக கதை, கலக்குங்க..

நம்ம கதாநாயகன் வலியில்லா தற்கொல்லைக்கு ஏன் அவ்ளோ மெனக்கெடனும்.. பேசாம
ஏடிஎம், குருவி, வில்லு பட திருட்டு விசிடி வாங்கி ரெண்டு தடவ பார்த்திருக்கலாமே...

said...

nallarukku. :) lEsa ubadhEsa kathai mathiri irukku.

said...

சிறுகதை ஓட்டம் நல்லா இருக்கிறது, தற்கொலை தவறு என்பதை உணருவதாக முடித்து இருக்கிறீர்கள். தற்கொலைக்கான திடமான காரணம் கதையில் தேடிப்பார்த்தேன்...

'நான் நேசித்த விசயங்கள் எலலாம் எனக்கு ஒரே சமயத்தில் வந்து ஒரே சமயத்தில் விலகுவதுதான். '

- இதைத்தவீர பெரிய காரணங்கள் இல்லாதது சற்று ஏமாற்றம் தான்.

said...

உற்சாகம் மெல்ல எட்டிப்பார்க்க, அதன் உடன் பிறப்புகளான நம்பிக்கையும் உத்வேகமும் , என் எதிர்மறை எண்ணங்களை எட்டி உதைத்து மீண்டும் மன சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்தன
nandri thozha

said...

நல்ல நரேஷன்!

said...

சூப்பர் பாஸ்..

சும்மா பின்னிட்டீங்க...

கதைனா இப்படிதான் இருக்கணும்...

said...

கதை மிக மிக சுவாரஸ்யம்

பிரதான பாத்திரத்துடன் நானும் நடந்து செல்வதாய் உணர்ந்தேன்..

இதுதான் எழுத்த நடையா?

said...

Sorry Pa.. எனக்கு என்னமோ பிடிக்கல

said...

கதையின் ஆரம்பத்தில் இருந்த விறுவிறுப்பு முடிவில் இல்லை....

said...

உங்க பதிவு விகடனில் பிரசுரமாகியுள்ளது

http://youthful.vikatan.com/youth/bcorner.asp

வாழ்த்துக்கள்

said...

கிட்டத்தட்ட அத்தனை தற்கொலை முயற்சிகளும் சொல்லிவைத்தாற் போல் தான் இருக்க வேண்டும். இந்த வேலையில்லா நாட்களில் நான் அநுபவித்த அத்தனையும் உங்கள் எழுத்துக்களில் பார்த்ததில் அதைப்பற்றி
நான் எழுதுவதாய் நினைத்திருந்த பதிவை கைவிட்டேன்.

www.perinba.wordpress.com

said...

"வாழ்கையில நாம எல்லாமே இழந்துடாலும் நம்பிகைய மட்டும் இழக்க கூடாதுன்னு" ஒரு மெசேஜ் சொல்லி இருக்கீங்க ...அருமையான ...

said...

super selva ,
unga valkaamana touch oda !!!

said...

நல்ல தன்னம்பிக்கை கதைங்க செல்வா.. கலக்குங்க:)

said...

ஒரு நல்ல தன்னம்பிக்கை கதை,இந்த உணர்வுகளோடு நானும் போராடி இன்று எனக்கே எனக்கா என்று எப்படியோ வாழ்கிறேன்.கலக்குங்க.