Sunday, January 11, 2009

கிடைத்திராத முத்தமும் கிடைக்கப்பெற்ற பரிவும் - சிறுகதை

நான் கீர்த்தனாவை காதலிக்க ஆரம்பித்து ஆறு மாதங்கள் ஆகப்போகிறது. இந்த ஆறு மாதத்தில் ஒரு முறைக்கூட அவளை முத்தமிடவில்லை. முத்தமிட எனக்கு பலமுறை தோன்றியபோதும் சரியான சந்தர்ப்பம் அமையாததால் முத்த முயற்சிகளில் அவ்வளவாக ஈடுபடவில்லை. இதில் இன்னும் பத்து நாட்களில் சுவீடன் வேறு கிளம்பவேண்டும்.

ஒரு முத்தம் அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்கு மட்டும் அல்ல, வாழ்நாள் முழுவதும் அவளின் வாசனையை மனதில் இருக்கச் செய்யும் என நினைத்துக் கொண்டேன். மனம் இதுமாதிரி வேலைகளில் பல குறுக்கு வழிகளில் யோசிக்கும்.

எங்கே வைத்துக் கொடுக்கலாம், கடற்கரை, திரையரங்கம், வேண்டாம். இரண்டிலும் ஒரு அசூயை உணர்வு இருக்கும். என் வீட்டில், வாய்ப்பு இல்லை. எப்போதும் என் வீட்டில் ஒரு பெரியக்கூட்டமே இருக்கும். அலுவலகம், வேண்டாம் பாதுகாப்பு என்ற பெயரில் எந்த இடத்தில் படக்கருவி வைத்து அத்தனை விசயங்களையும் ஒளிப்பதிவு செய்து விடுகிறார்கள்.

சட்டென மனதில் ஒரு பொறி தட்டியது. பேருந்து.. ஒவ்வொரு வாரமும் கீர்த்தனா மதுரைக்கு தன் வீட்டிற்கு செல்வாள். அவளுடன் மதுரைக்கு சென்றுவிட்டு அப்படியே திருப்பரங்குன்றம் முருகனுக்கு ஒரு அரோகரா போட்டுவிட்டு வந்துவிடலாம் என திட்டம் போட்டேன்.

“அம்மு, நானும் இந்த வாரம் மதுரை வரேன். எனக்கும் சேர்த்து கே.பி.என் ல புக் பண்ணிடு”

பிகு எதுவும் செய்யாமல் ஒப்புக்கொண்டது எனக்கு வியப்பாக இருந்தது.

பிரயாண நாளும் வந்தது. இடது புற வரிசையில் மத்தியில் அவளை சன்னலோரம் அமரவைத்து விட்டு, பின் , வலது புற இருக்கைகளை பார்த்துக்கொண்டேன். இரண்டு பக்கங்களிலும் வயதானவர்கள். கமல் பாணியில் கொடுப்போமா,ஒரு பிரஞ்சுப்படத்தில் கொடுத்தது மாதிரிக் கொடுப்போமா என மனதில் ஒரு முன்னோட்டம் ஓட்டிக்கொண்டிருந்தேன்.

”கார்த்தி என்னடா, படபடப்பா இருக்கே... ரிடர்ன் டிக்கெட் உனக்கு டிரெயின்ல கன்பார்ம் பண்ணிட்டியா?”

“பண்ணிட்டேன் , அம்மு”

பேருந்து கிளம்பியது, சென்னை நெரிசலில் தாம்பரத்தைக் கடக்கவே ஒரு மணி நேரத்திற்கும் மேலே எடுத்தது. திண்டிவனம் தாண்டட்டும் என நினைத்தேன். பேருந்தின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டதும் மனதளவில் தயாரானேன். திண்டிவனம் தாண்டியதும் வேகமாக செல்லும் குலுங்கலில் எனக்கு வாந்தி எடுக்கும் உணர்வு மெல்ல எட்டிப்பார்க்கத்தொடங்கியது. கடவுளே!! எனக்கு பேருந்தில் அரை மணி நேரம் பயணித்தாலே வாந்தி வருமே!! எப்படித் தாக்குப்பிடிக்கப்போறேனோ!!

நினைத்துக்கொண்டிருந்தபொழுதே தொண்டை வரை வாந்தி வந்துவிட்டது.

“அம்மு...” என நான் அவளைக் கூப்பிட , நான் வாந்தி எடுக்கப்போகிறேன் என்பதை புரிந்த கொண்ட அவள் முன்பே தயாராக கைப்பையில் எடுத்து வைத்திருந்த பிளாஸ்டிக் பையில் என்னை வாந்தி எடுக்க வைத்தாள். அருவருப்பின்றி தன் சுடிதாரின் தலைப்பில் என் முகவாயில் பரவி இருந்ததை துடைத்துவிட்டு, கையோடு கொண்டு வந்திருந்த தண்ணீரைக் குடிக்க கொடுத்து , வாஞ்சையாக என் தலையைப்பிடித்துக் கொண்டாள்.விழுப்புரம் நெருங்கும் முன் மீண்டும் ஒரு முறை வாந்தி எடுத்தேன். அதன் பின் எத்தனை தடவை எடுத்தேன் எனத் தெரியவில்லை.

“என்னடா, நாம டிரெயின்ல புக் பண்ணி இருந்து இருக்கலாம்ல, நல்ல வேளை கடைசி சமயத்தில், உன்னோட வாமிட்டிங் பிராப்லம் ஞாபகம் வந்துச்சு, ப்ளாஸ்டிக் பேக்ஸ் எடுத்து வச்சிருந்தேன், இந்தா எலுமிச்சைப் பழம் , ஸ்மெல் பண்ணிக்கிட்டே வா, சரிஆயிடும்டா” என என் தலையைக் கோதிவிட்டாள்.

அந்த அரவணைப்பில், அப்படியே அவளின் தோளில் சாய்ந்து உறங்கலானேன், மனதார அவளிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டே!!.

6 பின்னூட்டங்கள்/Comments:

said...

உங்க முத்தம் கொடுக்கனும்ங்கர ஆசை நிறைவேறி இருந்தா, அதுல கிடைத்திருக்க கூடிய ஆனந்தத்தை விட உங்களுக்கு இப்ப பேரானந்தம் கிடைத்திருக்கும் என்பதை வேண்டுமானால் ஏற்றுக் கொள்கிறேன் ஆனால் நீங்கள் இதற்காக வருத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

said...

செல்வா... முடில.. நிஜமா சூப்பர்.. ஃபீலிங்க்ஸ்.. ;((

said...

உண்மையான ஆனந்தம் எது என்னும் புரிதலுக்கு இதுமாதிரியான நிகழ்வுகள் கைகொடுக்கும் வினையூக்கி....
அன்புடன்

said...

மிகவும் அழகான கதை...

அன்பின் ஆழத்தையும் ஆனந்தத்தையும் இவ்வாறான சம்பவங்கள் தான் தெளிவுபடுத்தும்...

said...

நீங்கள் எழுதுவது கதைகளா அனுபவங்களா என பிரித்தறிய முடியாதுள்ளது...!

said...

மன்னிப்பு கேட்கும் அளவுக்கு ஹீரோ என்னங்க தப்பு செஞ்சாரு...
காதல இதலாம் சகஜம்ப்பா...:)