Thursday, May 24, 2007

சென்னை 600028 - திரைப்பட பார்வை

மேல இருக்கிற மஞ்சள் தோல் பிய்ந்து போன டென்னிஸ் பந்து, உடைந்த பெஞ்சிலிருந்து வந்த பேட், 20 ரூபாய் பெட் மேட்ச்சுக்கு 5 ரூபாய் குறையிறப்ப, அந்த 5 ரூபாய் கொடுத்தவனை ஓபனிங் இறங்க வச்சது, 10 ரன்னுக்கு ஒரு முறை 2 ரன் எக்ஸ்ட்ரா ஸ்கோர் ஏத்துறது, கவுண்டி கிளப் ல ஆடுற மாதிரி தன் டீம்முக்கு மேட்ச் இல்லாதப்ப அடுத்த டீம்முக்கு ஆடிக் கொடுப்பது, ஒத்தையா நின்ன அசோக மரத்தை ஸ்டம்பா வச்சு அதுக்கு பின்ன மட்டும் அடிக்கும் Back-Run கிரிக்கெட் ம்ம்ம் இப்படி அனேக சிறு வயது கிரிக்கெட் சம்பந்தப் பட்ட நினனவுகள் அத்தனையையும் ஒரு ஷாட்ல கிளறிவிடுற படம் தான் "சென்னை - 600028".எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலில் ஒவ்வொரு முக்கிய கதாபாத்திரங்களின் அறிமுகத்தோடு படம் அட்டகாசமாக ஆரம்பிக்கிறது. விசாலாட்சி தோட்டம்(சுண்ணாம்பு கால்வாய்) "ஷார்க்ஸ்" அணியினர் ராயபுரம் "ராக்கர்ஸ்" அணியினருடன் வருடாவருடம் நடைபெறும் ரேடியோ மிர்ச்சி கிரிக்கெட் போட்டியில் அவர்களிடம் தோற்றுப் போகின்றனர். அதற்கடுத்த வருடமாவது நடக்கும் போட்டியிலாவது ராக்கர்ஸை தோற்கடித்து கோப்பையை வெல்ல வேண்டும் என்று நினைக்கும் "ஷாக்கர்ஸ்" அணியினருக்கு அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் நட்பு, மகிழ்ச்சி, பிரிவு,துயரம் போராட்டம், காதல், வலி ஆகியவற்றை உயிரோட்டத்துடன் சலிப்புத்தட்டாமல் சொல்லி இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

"ராக்கர்ஸ்" அணியின் ரகு(ஜெய்) விசாலாட்சி தோட்டத்திற்கு குடிவந்த பிறகு, அவரை எதிரிபோல் பாவிக்கும் "ஷாக்கர்ஸ்" கார்த்திக்(வானொலி தொகுப்பாளர் சிவா) பின் தன் காதலை சேர்த்து வைப்பதால், ரகுவிற்கு, கார்த்திக் ஒவ்வொரு கட்டத்திலும் அநியாயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது இயல்பான உணர்வுபூர்வமான நகைச்சுவை.
படத்திற்கு கதாநாயகன் என்று யாருமில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடத்தில் கதையோட்டத்துடன் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அரவிந்தின் கதாபாத்திரம், அவருடைய காதல் , பாடல்கள் கதையுடன் ஒட்டவில்லை, ஒரு வேளை வியாபார ரீதியாக படத்தை நிலைநிறுத்திக் கொள்ள இவை அவசியப்பட்டு இருக்கலாம்.

படத்தில் இன்னொரு காதல் கிளைக்கதையும் உண்டு. பழனியின்(நிதின் சத்யா) தங்கையை கார்த்தி(சிவா) காதலிக்கிறார். அது பழனிக்கு தெரிந்து கார்த்தியை அடித்து உதைத்துவிட்டு அழுதுக் கொண்டே பேசிச் செல்லும் வசனங்கள் பல நடுத்தரக் குடும்பத்து அண்ணன்களை கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தும்."யாரோ யாருக்குள்ள இங்கு யாரோ" பாடல் எஸ்.பி.பி - சித்ரா குரல்கள் அப்படியே வருடிக் கொடுக்கிறது. "சரோஜா சாமானிகாலோ" பாடல் இரண்டாவது ஆட்ட காட்சியிலும் ரசிகர்களை எழுந்து நின்று ஆடவைக்கிறது.

இளவரசு, ஷார்க்ஸ் அணியினர் கிரிக்கெட் உபகரணங்களை வைத்துக் கொள்ள தோதாக இருக்கும் சலூன் கடையை நடத்துகிறார். அவரின் கிரிக்கெட் ஆடும் விருப்பமும் அதனைச் சுற்றி பின்னப்பட்டுள்ள காட்சிகளும் படத்தை சுவாரசியமாக இறுதிப் போட்டிக்கு நகர்த்துகின்றன. படத்தோட மிகப்பெரிய "பஞ்ச்" இறுதிக் காட்சியும் அது சம்பந்தபட்ட முற்பாதிக் காட்சியும்.
"அட கலக்கிட்டாங்கடா" என்று நம்மையறியாமல் சொல்ல வைக்கும் இடங்கள் படத்தில் நிறைய,

ஆம்புலன்ஸ் வண்டி வைத்திருக்கும் ஏழுமலை, தன்னோட நண்பனை உயிருக்குப் போராடும் நிலையில் ஆம்புலன்ஸில் வைத்து ஓட்டி வந்து,

"இன்னக்கித்தாண்டா இந்த வண்டில வர்றவங்களோட வலி வேதனை புரிஞ்சது" என்று சொல்லி கதறும் இடத்தில் இந்த நடிகர் புதுமுகம் தானா என யோசிக்க வைத்தது. படத்தில் பெரும்பாலன நடிகர்கள் நடிகைகள் , புதுமுகங்கள் அல்லது அதிகம் அறியப்படாதவர்கள். அவர்களை வைத்துக் கொண்டு தைரியமாக இப்படத்தை தயாரித்த சரண் குழுவினரைப் பாராட்டலாம்.

"படவா கோபி" யின் கமெண்டரி பல இடங்களில் பின்னனி இசையினால் புரியாமல் போனாலும் காதில் விழுந்தவரை எல்லாம் சிரிப்பை வரவழைப்பவை.

"இவர் பந்தைப் பிடித்தாரா? அல்லது பந்து இவரைப் பிடித்ததா?"

"கௌரி ஆண்டி வீட்டு எண்டிலிருந்து ஓடி வரும் பவுலர்"

"முல்லைப் பெரியாறை விட பெரிய ஆறு"

"பேட்ஸ்பேன் அவர்களே , திருப்பதி லட்டு போல் வரும் மஞ்சள் கலரில் வருவதைப் பார்த்து அடியுங்கள்"

"இவருக்கு கிரிக்கெட் ஆடத்தெரியுமா தெரியாத என்பது இவருக்கேத் தெரியாது"

என்பவை கல்லூரிக் கிரிக்கெட் போட்டிகளில் கேட்ட சில வர்ணனைகளை ஞாபகப் படுத்தியது.

நகைச்சுவை நடிகனால் இப்படியும் ஒரு பரிமாணம் அளிக்க முடியும் என்பதற்கு பிரேம்ஜி அமரன். இவரின் "ஒன் லைனர்ஸுக்கு" தியேட்டரே அதிர்கிறது.
படத்திற்கு லெனின் எடிட்டிங்கும், ஷக்தி சரவணின் ஒளிப்பதிவும் பெரிய பலம். தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளைக் காட்டும்போது லெனினின் அனுபவம் தெரிகிறது.

தமிழ் திரையுலகில் படைப்புத்திறனுக்கும் பஞ்சமில்லை, ரசிப்புத்திறனும் குறையவில்லை என்பதை பறைசாற்றும் மற்றொருபடம் சென்னை - 600028.

படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, தனக்கு மீண்டும் அந்த பழைய கிரிக்கெட் காலங்கள் கிடைக்காதா என ஒருக் கணமாவது ஏங்க வைக்கும். அது தான் இந்தப் படத்தின் வெற்றி.

3 பின்னூட்டங்கள்/Comments:

said...

அப்ப படம் பார்த்திட வேண்டியதுதான்

said...

இந்த படத்தில் நான் ரசித்தவை...
///இவரின் "ஒன் லைனர்ஸுக்கு" தியேட்டரே அதிர்கிறது///
.. ""என்ன கொடுமை சார் இது.."" சொல்லி தலையிலே அடிச்சுக்கறது
////இவர் பந்தைப் பிடித்தாரா? அல்லது பந்து இவரைப் பிடித்ததா/////
பிரேம்ஜி இதில் சிம்பு style ல்..
... எத்தனை வருஷமா அம்பையரா இருக்கே..
...நான் எப்பவாவது பந்தை பிடிச்சு பார்த்திருக்கையா ? ?
--------
toss ஐ ஷார்க்ஸ் win பண்ணினப்புறம் chiefguest (அவர் பேர் எனக்கு தெரியலை)...கேட்ப்பது.."பௌளிங்கா..பீல்டிங்கா...""

said...

நன்றி சிவஞானம்ஜி & தீபா. அந்த சீஃப் கெஸ்ட் ஆக நடிப்பவர் சண்முகசுந்தரம். கரகாட்டக்காரன் படத்தில் கனகாவின் அப்பாவாக வருவார்.