Sunday, July 17, 2011

லவ்வர்ஸ் - திரைப்பார்வை

அருமையான சினிமா க்விஸ் கேள்வியான ஆர்.மாதவன் மற்றும் ஜோதிகா இணைந்து நடித்து, ரஞ்சித் பாரோட், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து, சிவா மற்றும் கௌதம் இயக்கிய திரைப்படம் எது என்பதற்கான விடைதான் லவ்வர்ஸ் என்ற ஒரு காக்டெயில் சினிமா.

மாதவன் , ஜோதிகாவுடன், ஷோபனா, நாசர், சௌகார் ஜானகி, பிரதாப்போத்தன் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருப்பதுடன் , தியா மிர்ஸா கௌரவ வேடத்தில், (அவர் இந்த வேடத்தில் நடித்திருப்பது அவருக்குத் தெரியுமா தெரியாதா எனத் தெரியவில்லை) நடித்திருக்கின்றார்.




பாதி மீந்து போன நம் வீட்டு சாம்பாரை, பக்கத்துவீட்டு கோழிக்குருமாவுடன் கலந்தால் என்ன கிடைக்குமோ அதுதான் இந்தப்படம். ஒரு படத்தின் கதையையே எடுக்கவா கோர்க்கவா என இயக்குனர்கள் திண்டாடும் இந்தக்காலக்கட்டத்தில், இரண்டுப்படங்களை, அதிலும் இரு வெவ்வேறு மொழிப்படங்களை ஒன்று சேர்த்து, (அதில் ஒன்று தமிழில் ஏற்கனவே சக்கைப்போடு போட்டப்படத்தின் மொழிமாற்று வடிவம்) , கடைசிவரை பார்க்க வைத்ததிலேயே இயக்குனர் பாரட்டப்படவேண்டியவர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ணவம்சியின் இயக்கத்தில் அந்தப்புரம் என பாதி மொழிமாற்றம், மறுபாதி பார்த்திபன் நடிப்பில் நேரடிப்படம் என வந்து சுமாரான வரவேற்பைப்பெற்றது.

ஆனால் லவ்வர்ஸ் பட இயக்குனர் ஒரு படி மேலேயே சென்றுவிட்டார். ஆர்.மாதவன் , ஜோதிகாவை வைத்து எடுத்திருந்த பாதிப்படத்தை, அப்படியே கைவிடாமல், இந்தி மின்னலேயின் தேர்ந்து எடுத்தக் காட்சிகளைக் கோர்த்து, (வசீகரா பாடலின் அசைவுகளுக்கு வேறு ஒரு மெட்டுடன்) ஒரு முழுநீளப்படமாகக் கொடுத்து விட்டார்.

மதுரை தியாகராசர் பொறியியற் கல்லூரியில் கட்டிடப்பொறியியல் படித்துவிட்டு சென்னையில் வேலைத்தேட வரும் மாதவனுக்கு , சார்லி , விற்பனை பிரதிநிதி வேலை வாங்கித் தருகிறார். மாதவனுக்கு பீட்ஸா கடையில் வேலைப்பார்க்கும் ஜோதிகாவின் காதலும், செஸ் ஆட்டத்தில் விருப்பம் உள்ள பிரதாப் போத்தனின் நட்பும் கிடைக்கிறது. இடையில் நாசரின் மகள் ஷோபனா , மற்றும் ஷோபனாவின் கணவர் கே.எஸ் ரவிக்குமாரைக் காட்டுகிறார்கள். நாசரினால் ஒரு திருட்டு வழக்கில் மாதவன் மாட்டிவிடப்பட , சிறைக்குச் சென்றுத் திரும்பும் மாதவன் , ஷோபனாவின் குழந்தையைக் கடத்துகிறார். அந்தக் குழந்தையை அவரிடம் இருந்து கே.எஸ்.ரவிக்குமார் கடத்துகிறார். இடையில் பாம்பாயில் இருந்து வரும் நண்பர் , மாதவனின் பழையக் கதையை சொல்கிறார். அதுதான் இந்தி மின்னலே. இந்தி தியா மிர்ஸாவின் கோபத்தினால் சென்னைக்கு வந்துவிடும் மாதவனின் காதலை மீண்டும் சேர்த்து வைக்க ஜோதிகா முடிவு எடுக்கிறார். தனது சொத்துக்களை விற்றுவிட்டு , மாதவனுக்கு உதவி செய்து அமெரிக்கா போய்விடுகிறார். இது எல்லாவற்றையும் துண்டு காட்சிகளில், பின்குரலின் மூலம் படத்தில் சொல்லிவிடுகிறார்கள். கடைசிக்காட்சியில் தியா மிர்ஸாவுடன் மாதவன் சேர்ந்து விடுகிறார்.


படத்தில் இருந்து அழகிய கொலைகாரியே பாடல் காட்சி கீழே





உண்மையாக எடுக்கப்பட வேண்டிய படம் ஏன் கைவிடப்பட்டதென தெரியவில்லை. கோழிக்குருமா கலந்த சாம்பார் என்றாலும், ஒட்டு மொத்தமாக படத்தைக் கைவிடாமல் இரண்டுக் கதைகளைச் சேர்த்து ஏதோ ஒன்றைக் கொடுத்த இயக்குனரைப் பாராட்டத்தான் வேண்டும்.

ஐயா திரைப்படத்தில், வடிவேலு அருணாசலம் படத்தின் இறுதிக்காட்சிக்கு, பாட்ஷா படத்தின் இறுதிக்காட்சியை வைத்து ஒப்பேற்றுவதைப்போல இந்தப் படத்தின் தயாரிப்பு இயக்கம் இருந்தாலும், ஒரு கைவிடப்பட்ட படத்தை முயற்சி செய்து வெளிக்கொண்டு வந்ததற்காகவே இயக்குனரையும் தயாரிப்பாளரையும் பாரட்டலாம்.

அதிவேக இணைய இணைப்பு இருப்பவர்கள், வேறு எதுவும் முக்கியமாக வேலை இல்லாத பட்சத்தில் , இணையத்தில் தேடி இந்தப் படத்தைப் பார்க்கலாம்.





4 பின்னூட்டங்கள்/Comments:

நிரூபன் said...

வணக்கம் சகோ, அதிரடியாக வரும் பல படங்களுக்கு நடுவே, இது வரை பலரின் பார்வைக்கு எட்டாத ஒரு நல்ல படம் வரிசையில் லவ்வர்ஸ் படமும் அடங்கும் என நினைக்கிறேன். அதற்குச் சான்றாக உங்கள் விமர்சனம் அமைந்து கொள்கிறது.

செங்கோவி said...

யோவ், இப்படி எல்லாம் படம் வந்துச்சா? எப்போய்யா வந்துச்சு?

செங்கோவி said...

//மதுரை தியாகராசர் பொறியியற் கல்லூரியில் கட்டிடப்பொறியியல் படித்துவிட்டு// அப்படியா? ...ரைட்டு!

துளசி கோபால் said...

சரியா 6 ஆண்டுகளுக்குப் பிறகு உயிர்த்தெழுந்தது நம்ம பதிவு!!!!!

நன்றி.

அப்ப நல்ல படந்தான் போல:-)))))