Sunday, May 15, 2011

பின் தொடரும் பேய் - சிறுகதை

நள்ளிரவைக்கடந்தும் மடிக்கணினியில் இணையத்தை மேய்ந்து கொண்டிருந்ததனால் கண்களுக்கு ஏற்பட்ட இறுக்கத்தைக் குறைக்க நிமிர்ந்து வரவேற்பறையைப் பார்க்கையில் பகீர் என்றது. அங்கு ஒருவன் உட்கார்ந்து இருந்தான், என்னையே உற்றுப்பார்த்துக் கொண்டு ... பொன்னிறத்தில் தலைமுடி, ஸ்காண்டிநேவிய நிறம், உட்கார்ந்திருக்கும்பொழுதே உயரமாகத் தெரிந்தான்.


சன்னல்களையும் கதவையும் தாழிட்டுத்தானே வந்தேன், என்ற யோசனையில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு,

“ஹூ ஆர் யூ ... வெம் எர் டு” என ஆங்கிலத்திலும் சுவிடிஷிலும் மாறிக்கேட்டுக்கொண்டு அவனருகே நெருங்கினேன்.

அவனை நெருங்க நெருங்க அவன் உட்கார்ந்திருந்த நாற்காலியுடன் அப்படியே பின்னோக்கிப்போனான். வேகமாக நகர நகர அவனும் பின்னோடிப்போய் சுவற்றில் மறைந்துப்போனான். இல்லை இல்லை போனது, இது பேய் ... திரும்ப என் அறைக்கு வர, உருவமும் சுவற்றைக் கிழித்துக்கொண்டு அதே தூர இடைவெளியுடன் மீண்டும் வந்தது.

நான் வேகமாக ஓடி கதவைத் திறந்து கொண்டு வெளியே வர, உருவமும் என்னைப் பின் தொடர்ந்தது. நான் நின்றால் அதுவும் நின்றது. நான் அதை நோக்கிப்போனால் அது என்னைவிட்டு நகர ஆரம்பித்தது. பாதகமான பேய் இருக்கும் எனப் பார்த்தால் விளையாட்டு காண்பிக்கிறதே !!

சரி என்ன ஆனாலும் ஆகட்டும் என மீண்டும் வீட்டிற்கே வந்தேன். படுக்கை அறையினுள் நுழைந்து கதவைத் தாழிட்டுக்கொண்டேன். அந்த உருவம் நல்ல வேளை உள்ளே வரவில்லை. பயம் தூக்கத்தை விரட்டினாலும், அசதி இரட்டிப்பான தூக்கத்தைக் கொண்டு வந்தது.

மறுநாள் காலை படுக்கை அறையின் கதவைத் திறக்க அதே இடத்தில் அந்த உருவம் இருந்தது. நள்ளிரவிலேயே பேயைச் சமாளித்தாகிவிட்டது. பகலிலா தொந்தரவு செய்யப்போகின்றது, என சிரித்து வைத்தேன். பேயும் சிரித்தது. கண்டிப்பாக பிரமை இல்லை.

”பேர் என்ன, ஊர் என்ன என்ன வேண்டும்” ம்ஹூம் எந்த கேள்விக்கும் பதில் இல்லை. நான்கு பிரெட் துண்டுகள், கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே கிளம்பியதும் கதவைக் கிழித்துக்கொண்டு அந்தப் பேய் என்னைப்பின் தொடர்ந்தது.

பேருந்து, பின்னர் ரயில் என பயணச்சீட்டு இல்லாமல் அதுவும் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருந்தது. இது சிரிப்புப் பேயாக இருக்கும் என கொஞ்ச நஞ்சம் இருந்த பயமும் போனது.

அலுவலகத்தில் எனக்கு 20 அடிகள் தள்ளி நின்று கொண்டே இருந்தது. அலுவலக நண்பனிடம் , பேய் இருந்த இடத்தைச் சுட்டி அங்கு யாரேனும் நிற்கிறார்களா எனப்பாரேன் எனக்கேட்டேன். அவன் என்னை ஒரு தினுசாக “லூஸாப்பா நீ” என்ற வகையில் முறைத்துவிட்டுப்போனான்.

வீட்டிற்கு பேயுடன் திரும்பினேன். பிறரின் தனிமையை மதிக்கும் நாகரிகமான ஸ்காண்டிநேவியர்களின் குணம் அப்படியே இந்தப் பேயிற்கும் இருந்தது. படுக்கை அறையிற்கோ குளியல் அறைக்கோ நுழைவது இல்லை. வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளி விட்டு செல்லுங்கள் என்னும் வகையிலேயே அடுத்தப் பத்து நாட்களுக்கு என்னுடன் பயணம் செய்து கொண்டிருந்தது. இது என்னடா இழவு என , தமிழ்நாட்டிற்கு ஒரு வாரம் விடுமுறை எடுத்து வந்து சேர்ந்தேன். சொன்னால் நம்பித்தான் ஆகவேண்டும், விமானத்திலும், பின் சென்னையில் என்னுடைய டாக்ஸியிலும் பேயின் பயணம் தொடர்ந்தது.

சென்னை வீட்டில் தொந்தரவுகள் இல்லாத போதிலும், எதற்கு ஒரு மனநல மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து விடுவது என முடிவு செய்தேன்.

“தொடர்ந்து பிம்பங்கள் வருவது ஒரு விதமான ஹாலுசினேசன், நீங்கள் பார்த்து, உங்களைப் பாதித்த உருவங்கள் தெரிவது போல இருப்பது இயல்பானது”

“இல்லை டாக்டர், இப்பொழுது கூட உங்கள் மருத்துவமனையின் வரவேற்பறையில் தான் இருக்கின்றது”

என்னைப் படுக்கவைத்து ஆழ்ந்த மனநிலையில் ஏதோ ஏதோ முயற்சி செய்து, நான் பார்த்த ஒரு படு பயங்கரமான பழைய ஸ்விடீஷ் திகில் படத்தில் வந்த வில்லனின் உருவம் தான் அந்த பேயாக எனக்குத் தெரிகின்றது என முடிவு செய்தார். அந்தப் படத்தை அவரும் பார்த்து இருப்பதாகவும் சொன்னார்.

காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டதால், அந்த பிரமை என்னை விட்டு விலகி விடும் என என்னை ஆறுதல்படுத்திவிட்டு என்னை வழியனுப்பினார். வெளியில் அந்த பேய் இன்னும் உட்கார்ந்து இருந்தது. என்னை நோக்கி வருவது போல வந்து என்னைக் கடந்துப் போய் அந்த மனநல மருத்துவரின் அறைக்குள் நுழைந்தது. உள்ளே ஸ்விடிஷில் ஒரு ஆண் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது.

6 பின்னூட்டங்கள்/Comments:

said...

இது நல்ல பேயாக இருக்கிறதே... ;)

said...

:) :) :)

said...

அடப்பாவிகளா..பேயைக் கூட்டியாந்து டாக்டர்கிட்ட ஏவிட்டீங்களா..நல்ல கற்பனை செல்வா!

said...

அடப்பாவிகளா..பேயைக் கூட்டியாந்து டாக்டர்கிட்ட ஏவிட்டீங்களா..நல்ல கற்பனை செல்வா!

said...

யோவ் யோவ் என்னையா சொல்ற ippa enakku enamo pannuthupaa en room layum yaro iruka maathiri feelingu... awwwwww

said...

ஹாஹா , பாவம் அந்த பேய் உங்களிட்ட வந்தது மாட்டிட்டே