Wednesday, May 11, 2011

Paraskevidekatriaphobia, 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை

மேற்கத்திய பாரம்பரிய நம்பிக்கைகளில் பொதுவாக 13 ஆம் எண்ணும் வெள்ளிக்கிழமையும் தனித்தனியாக துரதிர்ஷ்டமான விசயங்களாக கருதப்படுகின்றன. இவையிரண்டும் இணைந்து ,13 ஆம் தேதி வெள்ளியன்று வந்தால்,அன்று ஆரம்பிக்கப்பட வேண்டிய விசயங்களை கொஞ்சம் மிரட்சியாக அடுத்த வாரத்திற்கு தள்ளிப்போடுவது மேற்கத்திய நாடுகளில் இயற்பான ஒன்றாக இருக்கிறது. கிறிஸ்தவ நம்பிக்கைகளில் இயேசு கிறிஸ்து வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்டதும், அவரின் கடைசி இரவு உணவில் அவரின் சீடர்களுடன் அவரையும் சேர்த்து 13 பேர் இருந்ததும் , 13வதாக யூதாஸ் வந்ததும் இந்த Friday 13th மீதான பயத்தை வலுப்படுத்தும் ஒரு காரணி எனவும் சொல்லுவார்கள்.ஆதாமும் ஏவாளும் சாத்தான் அளித்த பழத்தை உண்டதும்,காயின் ஆபேலைக் கொன்றதும் இதே வெள்ளியன்றுதான் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.ஆண் மைய கத்தோலிக்க மடாலயங்கள் பெண் மைய பாகான் மதங்களை,வழிபாட்டு முறைகளை ஒழித்துக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, நோர்ஸ் கலாச்சார பெண் தெய்வங்களின் புனித நாளாகக் கருதப்பட்ட வெள்ளிக்கிழமையையும் , 13 என்ற ராசியான எண்ணையும் துரதிர்ஷ்டமானது ,அந்நாளில் துவக்கப்படும் எதுவும் சரியாக அமையாது என அவநம்பிக்கை ஏற்படுத்தினார்கள் எனவும் வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். பாகானிய வழிபாட்டு முறைகளில் ஒரு ஆண்டில் சந்திரனை அடிப்படையாக கொண்ட மாதங்களின் எண்ணிக்கை 13 என்பதும் குறிப்பிடத்தக்கது.

13 ஆம் தேதி வெள்ளியன்று வருவதனால் ஏற்படும் பயத்தை paraskevidekatriaphobia என்று அழைப்பார்கள். எண் 13, வெள்ளிக்கிழமை, பயம் ஆகிய மூன்று தனித்தனி கிரேக்க மொழி வார்த்தைகளின் தொகுப்புதான் மேற்சொன்ன வார்த்தை. மேற்கத்திய நாடுகளில் மட்டுமல்ல சீனாவிலும் எகிப்திலும் 13 ராசி இல்லாத எண்ணாக இன்றும் கருதப்படுகிறது.14ஆம் நூற்றாண்டில் நைட் டெம்ப்ளேற்ஸ் ஆட்களை பிரான்சு மன்னர் பிலிப் IV ,போப் கிளமெண்ட் V இன் ஆணையின் பேரில் அக்டோபர் 13 ஆம் வெள்ளிக்கிழமை,1307 அன்றுதான் வேட்டையாடிக் கொன்றனராம். அன்று முதல் இந்த 13,வெள்ளிக்கிழமைப் பற்றிய பயம் உருவெடுத்து இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. பன்னெடுங்காலம் வரை பிரிட்டனில் மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டது வெள்ளிக்கிழமைதான்.

பிரிட்டனில் வெள்ளிக்கிழமை பயத்தை உடைத்தெறிய அந்த நாட்டுக் கடற்படை எச்.எம்.எஸ் ப்ரைடே என்ற பெயரில் , ஜேம்ஸ்பிரைடே என்ற ஒருவரை கப்பற்தலைவனாகக் கொண்டு ,வெள்ளிக்கிழமையன்று பயணத்தை துவக்க வைத்தனராம். அந்தக் கப்பல் ஒரு அருமையான வெள்ளியன்று கடைசியாகப் பார்த்தபின் கரை திரும்பவே இல்லையாம். இது உண்மையிலேயே நடந்ததா இல்லையா என்று உறுதி செய்யப்படவில்லை எனினும், ஏப்ரல் 13 வெள்ளியன்று ,அப்போல்லோ 13 விண்கலத்தில் ஆக்ஸிசஜன் சிலிண்டர் வெடித்தது இந்த நம்பிக்கை ஆதரிப்பவர்களுக்கும் மூட நம்பிக்கை என ஒதுக்கியவர்களிடமும் அதிர்ச்சி அலைகளைப் பரவச்செய்தது. அந்த விண்கலத்தில் இருந்த மூவரும் பத்திரமாக பூமிதிரும்பினர் என்பது வேறுவிசயம். இதனை Successful Failure எனவும் சொல்வார்கள்.கனடாவிலும், அமெரிக்காவிலும் பன்மாடிக் கட்டடங்களில் பதிமூன்றாவது எனக் குறிப்பிடப்படாமல் 13 வது தளம் அமைந்திருக்குமாம். எண் பதிமூன்றைப் பற்றிய பயத்தை Triskaidekaphobia என சொல்லுவார்கள்.

மனோதத்துவ நிபுணர்கள், 13க்கும் வெள்ளிக்கிழமைக்கும் எந்த ராசி,ராசி இல்லாத காரணிகளும் கிடையாது, அவரவர் மனோபாவத்தை பொறுத்து அந்த நாள் அமைகிறது, அடடா, இன்றைக்கு 13 வெள்ளியாச்சே, காப்பி சிந்திவிட்டதே, சட்டை சரியாக சலவை செய்யப்படவில்லையே, போக்குவரத்து விதிகளை மீறி காட்டுத்தனமாக வண்டி ஓட்டுகின்றானே என தினசரி ஏற்படும் வருத்தங்கள் இது போன்ற சிலநாட்களில் நமக்கு பூதகரமானதாக தோன்றுகிறது என சொல்லுகின்றனர். காரணிகளால் நம்பிக்கை ஏற்படுவதில்லை, நம்பிக்கை உருவாக்கப்பட்டபின்னரே காரணிகளை தேடிக்கண்டுப்பிடிக்கப்படுகின்றன. மனம் சாட்சியங்களை தேடிக் கிடைக்காத போது , ஏதாவது ஒன்றை உருவாக்கி அதை தன்மேல் திணித்துக் கொள்கிறது. மனிதன் தனக்காக உருவாக்கிக் கொண்ட நாட்கள் எல்லாமும் நல்ல நாளே!!!

பதிவர் தமிழ்மாங்கனியின் வெள்ளிக்கிழமை 13 அனுபவம் வாசிக்க இங்கே சொடுக்கவும்

ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகி இதே தினத்தில் வெளியான தசாவதாரம் பெரும் வெற்றிப் பெற்றது ,2011 தமிழக சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் 13 ஆம் தேதி வெள்ளியன்று வெளியானது என்பதும் குறிப்பிடத் தக்கது.

6 பின்னூட்டங்கள்/Comments:

said...

//காரணிகளால் நம்பிக்கை ஏற்படுவதில்லை, நம்பிக்கை உருவாக்கப்பட்டபின்னரே காரணிகளை தேடிக்கண்டுப்பிடிக்கப்படுகின்றனர். மனம் சாட்சியங்களை தேடிக் கிடைக்காத போது , ஏதாவது ஒன்றை உருவாக்கி அதை தன்மேல் திணித்துக் கொள்கிறது.//

Good , c

said...

Nice post....good fry!!!!(day)
anbudan aruna

said...

Current Affairs, huh?

said...

//தசாவதாரம் பெரும் வெற்றிப் பெற்றது//..?????

said...

hey thanks for the link for my post:)))

said...

Hello sir,
can you explain this or give some link reg this ",காயின் ஆபேலைக் கொன்றதும்"??

G Hariprasad