Thursday, July 09, 2009

நாடோடிகள் - திரைப்பார்வை


சுப்ரமணியபுரம் டெம்ப்ளேட்டிலேயே நட்பு-காதல்-தோல்வி-துரோகம் என நகைச்சுவை இழையோட,எல்லாத் தரப்பு மக்களும் ரசிக்கும்படி சமுத்திரக்கனியின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் நாடோடிகள். நல்ல இயக்குனராகவும் நல்ல தயாரிப்பாளராகவும் தன்னை நிலை நிறுத்திக்கொண்ட சசிக்குமாருக்கு தனக்கு கதைக்கேற்ற நடிப்பையும் தரமுடியும் என்பதைக் காட்டும் படம் நாடோடிகள். கதையை நகர்த்திச் செல்லும் மையக்கதாபாத்திரமாக சசிக்குமார் பாராட்டும்படியே நடித்து இருக்கின்றார்.

பலவருடங்களுக்கு முன் சந்தர்ப்பவாத நட்பு + காதல் ஆகியவற்றை வைத்து கார்த்திக், பானுப்ப்ரியா நடிக்க, பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்த கோபுரவாசலிலே படத்தின் நேர் எதிர் துருவம் இப்படம்.

நண்பனின் நண்பன் தனக்கும் நண்பன் என்பதை வைத்து பின்னப்பட்ட இக்கதையில் சமூகத்தின் வெவ்வேறு பொருளாதார/சாதி தளங்களில் இருக்கும் நண்பர்களுக்குள் இருக்கும் அன்னியோன்யத்தையும் வாழ்வின் அடுத்தத் தளத்தை நோக்கி நடைபோட அவர்கள் எடுக்கும் முன் முயற்சிகளையும் அது ஒரு காதலால் எப்படி சின்னாபின்னமாகின்றது என்பதை அழகாக சொல்லியுள்ளார் இயக்குனர். காதலர்கள் தங்களைச் சேர்த்து வைத்த நண்பர்களின் தியாகத்தை எத்தனைத் தூரம் மதிக்கின்றனர் என்பதை சுவைபட சொல்லி இருக்கின்றனர். சசிக்குமாரின் கதாப்பாத்திரப்படைப்போன்று எல்லோர் வீட்டிலும் ஒரு உறவினர் கண்டிப்பாக இருப்பார். அலட்சியமாக இருப்பது போலத் தோன்றினாலும் உண்மையில் அக்கறையுடனும் பொறுப்பாகவும் நடந்து கொள்ளும் இயல்பான கதாபாத்திரம் சசிக்குமாருடையது. ஐந்து தந்தை கதாபாத்திரங்களை(மூன்று நண்பர்களின் தந்தைகள், முறைப்பெண்ணின் தந்தை, ஓடிவரும் காதலியின் தந்தை ) வெவ்வேறு பரிமாணங்களில் தந்தைக்குரிய குணாதிசயங்களுடன் காட்டி இருப்பது படத்தின் சிறப்பு.





உடற்பசிக்காகத்தான் அவர்கள் கல்யாணம் செய்து கொள்ள வந்தார்கள் என நண்பர்கள் சகட்டு மேனிக்குத் திட்டித் தீர்ப்பதை ஒரு சராசரி மனிதன் தன் தியாகங்கள் கேலிக்கிடமாகக்போய் விட்டதே என்று உணரும்போது வந்து விழும் வார்த்தைகளாகப் புரிந்து கொள்ள முடிகிறது. நம் சமூகம் மற்றவர்களைக் கேவலப்படுத்த பாலியல் ரீதியான வசவுகளின் மூலம் இழிவுப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது என்பதை இயக்குனர் உணர்த்துகிறாரோ!!.. உடற்பசி என்றால் பணக்கார காதலர்கள் எங்கு வேண்டுமானாலும் காதலிக்கும் காலங்களிலேயே தீர்த்துக்கொண்டிருக்க முடியும். காதலர்களை சுடுமணலில் நிராதரவாக விட்டுவிட்டு வரும்பொழுது காதலன் காதலியை நோக்கி நடந்து வரும் காட்சியை சிலவினாடிகள் நீட்டித்ததன் மூலம் அவர்களின் காதல் உண்மைதான், ஆனால் தாங்கள் வாழ்ந்த பணக்காரச் சூழல் இன்றி வாழும்போது ஏற்படும் பிரச்சினைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவமின்மை அவர்களுக்குள் வெறுப்பை ஏற்படுத்தி பிரிய வைத்தது என இயக்குனர் காட்டியிருப்பதாக தோன்றுகின்றது.



மற்றவர்களது காதலுக்காகப் போராடும் சசிக்குமார், முறைப்பெண் தனக்காக வீட்டைவிட்டு வெளியேறி இருந்தால் போராடி இருப்பாரோ!! பெண்ணின் சம்மதம் இல்லாமல் (காதல்/விருப்பம் இருந்தாலும் கூட)அவர்களின் பெற்றோருக்கு எதிராக்கி கவர்ந்து வருதல் அவசியம் இல்லை என சொல்லப்படுவதாக இருக்கின்றது. முறைப்பெண்ணாக வரும் அனன்யா, விஜய் தொலைக்காட்சியில் சினிமா காரம் காப்பி யில் வரும் நடுத்தரவயது பெண் இளமையாக இருந்தால் எப்படி இருப்பாரோ அப்படி இருக்கின்றார். அனன்யா தனது சொந்தக்குரலையேப் படத்தில் கொடுத்து இருக்கின்றார்.


மொட்டை மாடிக் காட்சியில் ”அவனுக்கும் ரொம்ப நாளா உன்மேல ஒருக் கண்ணு” என முறைப்பெண்ணை சீண்டுவதும் “முள்ளைப்பிடிச்சாலும் முழுசாப் பிடிக்கனும்” என்ற வசனமும் , சடுதி நேரத்தில் நண்பர்கள் காதலர்களைச் சேர்த்து வைக்க கிளம்பும் முன் சென்னை 28 விஜய் க்கு சசியின் தங்கை கன்னத்தில் முத்தமிடும் காட்சியும் அழகு.

முறைப்பெண்ணின் தந்தை தனது மருமகனுடன் உற்சாகமாகப் பேசிக்கொண்டு வர, முறைப்பெண் இறுக்கமான முகத்துடன் அவர்களைப் பின் தொடர்வதைப் பார்க்கும் சசிக்குமார் அந்த இடத்தை விட்டு நகர்வது அருமை.

இணைக் கதாபாத்திரங்களாக வாழ்ந்து இருக்கும் 'கல்லூரி' பரணி , சென்னை28 விஜய் ஆகியோரின் நடிப்பு தமிழ் திரையுலகில் நல்ல நடிப்புக்கு பஞ்சமில்லை என்பதற்கு மற்றும் ஒரு உதாரணம். மன்சூர் அலிகான் போன்று தோற்றமளிக்கும் நடிகர் செய்யும் அலப்பரைகள் அட்டகாசமாக இருக்கின்றன. கஞ்சா கருப்புவின் புலம்பல்கள் சிரிப்பாக இருந்தாலும் உண்மையில் அவரைப்போன்ற அப்பாவிகள் பலிகடாக்களாக ஆக்கப்படுகின்றனர் என்பது நிதர்சனம்.


மாற்றுத்திறன் உடையவர்களை அப்படியே நடிக்க வைத்து அனுதாபத்தை மட்டுமே பெற்றுத்தரும் இயக்குனர்கள் மத்தியில் சசிக்குமாரின் தங்கையாக மாற்றுத்திறன்கள் இருக்கும் பெண்ணை(அபிநயா) பேசும் கேட்கும் கதாபாத்திரமாக வாழ வைத்த சமுத்திரக்கனிக்கு தனிப்பட்ட முறையில் நன்றி.

சுந்தர்.சி பாபு வின் இசையில் சம்போ சிவசம்போ பாடல் இணையத்தில் படம் பார்க்கும்பொழுதே மிரட்டுகின்றது. குத்துப்பாட்டு அவசியம் இல்லாதது போலத் தோன்றினாலும் வணிக ரீதியிலும் நல்ல திரைப்படத்தை வெற்றிப் பெறச்செய்ய இது போன்ற சமாதானங்கள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதே.

இப்படத்தை பார்த்தவர்கள் “நண்பா, என் லவ்வை சேர்த்து வைங்கடா” என யாராவது வந்துக் கேட்கும்பொழுது இனி ஒருக் கணமாவது தங்களது வாழ்வாதரத்தைப் பற்றியும் சிந்தித்துவிட்டுத்தான் உதவப்போவார்கள் என்பது உறுதி.

படங்கள் நன்றி : cityhitsonline.com , mirchigossips.com


பின்குறிப்பு :
திரையரங்கத்தில் குடும்பத்துடன் போய் ரசித்துப்பார்க்க வேண்டிய படம் இது.
திரையரங்கிற்குப் போய் பார்க்கும் வாய்ப்பு, நான் இருக்கும் தேசத்தில் இல்லாததால் இணையத்தில் தான் பார்க்க முடிந்தது. திரைப்படக்குழுவினர் மன்னிக்கவும்.

12 பின்னூட்டங்கள்/Comments:

U.P.Tharsan said...

//பின்குறிப்பு :
திரையரங்கத்தில் குடும்பத்துடன் போய் ரசித்துப்பார்க்க வேண்டிய படம் இது.
திரையரங்கிற்குப் போய் பார்க்கும் வாய்ப்பு, நான் இருக்கும் தேசத்தில் இல்லாததால் இணையத்தில் தான் பார்க்க முடிந்தது. திரைப்படக்குழுவினர் மன்னிக்கவும்.//

விமர்சனம் நிறைய பார்த்தாச்சு... என்றாலும் பின்குறிப்பு செம கலக்கல் . :-))

VSK said...

தான் சேர்த்து வைத்த காதல் வீணாகி விட்டதே என்பதற்காக அந்த மூவர் காட்டும் வேகம் சற்று தேவையில்லாததாகப் பட்டது எனக்கு.

சேர்வதற்குத்தான் உதவி வேண்டும்.
பிரிய இரு மனங்கள் போதும்.
இடையில் இவர்கள் நிர்ப்பந்தத்துக்காக அவர்களைச் சேர்த்துவைக்க முயன்றது கொஞ்சம் ஓவர்தான்.

வலுவான இரு பெற்றோர்கள் இருந்தும் நாயகர்கள் தப்புவது செயற்கை.

ஆனால், படம் தொய்வில்லாமல் ரசிக்கும்படியாக இருந்தது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

கோவி.கண்ணன் said...

விமர்சனம் சிறப்பாக இருக்கு வினையூக்கி.

Ungalranga said...

நல்ல படத்துக்கான நல்ல விமர்சனம்.

வாழ்த்துக்கள்!!

சிவபாலன் said...

Excellent Review!

Matured Writings!

தகடூர் கோபி(Gopi) said...

//மாற்றுத்திறன் உடையவர்களை அப்படியே நடிக்க வைத்து அனுதாபத்தை மட்டுமே பெற்றுத்தரும் இயக்குனர்கள் மத்தியில் சசிக்குமாரின் தங்கையாக மாற்றுத்திறன்கள் இருக்கும் பெண்ணை(அபிநயா) பேசும் கேட்கும் கதாபாத்திரமாக வாழ வைத்த சமுத்திரக்கனிக்கு தனிப்பட்ட முறையில் நன்றி.//

அட.. இது புதிய செய்தி. சமுத்திரக்கனியின் இம்முயற்சி மற்ற இயக்குனர்களாலும் பின்பற்றப்பட வேண்டிய ஒன்று.

சாணக்கியன் said...

படம் நல்லாதான் இருக்கும் போல... நல்ல விமர்சனமும் கூட...

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Arun J said...

Good one nanba.I expect more movie review from you.

Arun J said...

Good one.

nepolean said...

selva nan intha film bangalore la parthen..romba nalla irukku...

Excellent writting....keep it up


With Love
Nepolean.P

Sateesh said...

இனிமேலாவது டிவர்ஸ் பண்றவங்களும் பிரேக் அப் ஆரவங்களும் யோசிக்கட்டும்!!!