Thursday, November 04, 2010

காப்பி டம்ளர்கள் - சிறுகதை

மூன்று வருடங்கள் என்பது குறுகிய காலமாக இருந்தாலும், காதலில் தோற்றுப்போனவனுக்கு முப்பது வருடங்கள் போலத் தெரியும். இதேத் தெரு, இதே மார்கழி மாத குளிர்கால நாட்கள், இதே போல ஐந்து மணிக்கே இருட்டிய மாலைப்பொழுதுகளில் அம்முவுடன் எத்தனை சண்டைகள், சமாதானங்கள், ஒவ்வொரு சமாதானமும் காப்பி குடிப்பதில் தான் முடியும்.

என் அம்முவிற்கு சமாதானம் என கன்னத்தைக் காட்டுவதற்கு முன்னர் ஒரு காப்பி வாங்கித் தரவேண்டும், அதுவும் எதிர்த்த சந்தில் இருக்கும் நாதன் மெஸ்ஸில் தான் வாங்கித் தரவேண்டும். ஆவடியில் இருந்தாலும் சரி, கோவளத்தில் இருந்தாலும் சரி, மந்தைவெளிக்கு வந்து இதேக் கடையில் தான் குடிக்க வேண்டும், எல்லா விசயங்களையும் விட்டுத்தரும் அம்மு, இதில் மட்டும் பிடிவாதக்காரி. இரண்டு காரணங்கள், மெஸ்ஸின் அடுத்த தெருவில் அவளின் லேடிஸ் ஹாஸ்டல், இரண்டாவது இந்த மெஸ்ஸை நடத்திவரும் பாட்டி, அம்முவின் பாட்டியைப்போலவே இருக்கிறாராம். சுவீடன் போவதற்கு முந்தைய நாளில் காப்பி சுவையுடன் முதல் முத்தம் கிடைத்ததும் இந்த மெஸ்ஸில்தான்.

காப்பித் தூளின் விலை , டீத்தூளின் விலையை விட, அதிகம் என நடுத்தரக்குடும்பச் சூழலில் சிறுவயது முதல் டீ குடித்துப் பழக்கப்பட்டவனாதலால் காப்பியின் மேல் அவ்வளவு விருப்பம் இருந்தது இல்லை.

“உலகத்துல எனக்கு கார்த்திப்பிடிக்கும் , அதுக்கப்புறம் காப்பி பிடிக்கும்” என்றபடி

எவர்சில்வர் டம்ளரின் விளிம்பிற்கு இணையாக கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு மடக்கிற்கும் இடையில் ஒரக்கண்ணை சிமிட்டியபடி அம்மு காப்பிக் குடிக்கும் அழகே தனி. மெஸ்ஸில் ஏலக்காய் தட்டி தொண்டைக்குழியில் எப்பொழுதும் நிற்கும் சுவையுடன் கூடிய டீ கிடைத்தாலும், நான் காப்பி மட்டுமே குடிக்க வேண்டும் என்பது அம்முவின் கட்டளைகளில் ஒன்று.

முதல் தடவை காப்பிக் குடித்து முடித்தவுடன் அம்மு எவர்சில்வர் டம்ளர்களை ஒன்றினுள் ஒன்றாக இறுக்கமாக பிரித்து எடுக்க முடியாமல் வைத்து விட்டு, “நாம ரெண்டு பேரும் கடைசி வரை இப்படி பிரியாமல் இருக்கனும்” ஒவ்வொரு தடவையும் இப்படி டம்ளர்களுக்குள் கல்யாணம் நடக்கும்.

ஒரு தடவை அம்மு இரண்டு டம்ளர்களை ஒன்றினுள் ஒன்றாக வைக்க முயற்சிக்கும்பொழுது கடை பாட்டி வந்து சத்தம் போட்டுவிட்டார்.

அதற்கடுத்தாற்போல வரும் பொழுதெல்லாம், பாட்டியை வெறுப்பேற்ற அம்மு வேண்டும் என்றே டம்ளர்களை ஒன்று சேர்ப்பது போல பாவனை செய்து காட்டுவாள்.

“இனிமேல் உங்களுக்கு இதில் தான் காப்பி, உன்னால நாலு டம்ளர் இரண்டு ஆயிடுச்சு ” அம்மு சேர்த்து வைத்த இரு இரண்டடுக்கு டம்ளர்களில் காப்பி கொண்டு வந்து வைத்தார்.

மூன்று வருடங்களில் நாதன் மெஸ், நாதன் ஸ்வீட் ஸ்டால் ஆக சுருங்கி இருந்தது. கடையில் பாட்டி புகைப்படத்தில் மாலையுடன் வரவேற்றாள்.

“பாட்டி போன பிறகு சமைக்க ஆள் கிடைக்கல சார், அதுதான் வெறும் காப்பி, டீ ஸ்வீட் ஸ்னாக்ஸ் மட்டும் வச்சு, முதலுக்கு மோசமில்லாம ஓட்டிட்டு இருக்கேன்” இவர் பாட்டியின் தூரத்து சொந்தமாம், பாட்டிக்குப் பின் கடையை எடுத்து நடத்திக் கொண்டிருக்கிறாராம்.

காப்பியின் கசப்புகளின் எச்சம்போல, அம்முவும் கசப்புணர்வுகளை விட்டுவிட்டு போன பின்னர், காப்பியையும் வெறுக்க ஆரம்பித்து விட்டதால் ஏலக்காய் டீ சொல்லிவிட்டு, அம்மு இல்லாத வெறுமையை உணர்ந்து கொண்டிருக்கையில் இரண்டு மேஜைகள் தள்ளி இரண்டடுக்கு டம்ளர் ஒன்றிருப்பது கண்ணுக்குப் பட்டது. மெல்ல நகர்ந்து எச்சில் டம்ளராக இருந்த போதிலும் எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கையில்

“சார், இது மாதிரி ஒன்னுக்குள்ள ஒன்னா இருக்கிற இன்னொரு டம்ளரும் இருந்துச்சு, போன வாரம் தான் ஒரு பொண்ணு அமெரிக்கா போறேன், இது காலேஜ் மெமரீஸுக்காக வேனும்னு வாங்கிட்டுப்போயிடுச்சு”

”அண்ணே, ஏலக்காய் டீ வேண்டாம், ஸ்ட்ராங்கா காப்பி போட்டுடுங்க” சிறிது நேரம் இடைவெளிவிட்டு “இந்த டம்ளரை நான் எடுத்துக்கவா”

1 பின்னூட்டங்கள்/Comments:

சின்ன அம்மிணி said...

அந்த பொண்ணு அம்முன்னு கோடி காட்டியிருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்குமோ