Thursday, July 25, 2013

பேய் பயம் - சிறுகதை

பேய்கள் பயமுறுத்தாது. பேய்கள் யாரையும் கொல்லாது. நூற்றுக்கு நூறு பயம் தான் நம்மைக் கொல்லும், பேய்கள் அல்ல. இந்த உண்மையைப் புரிந்து கொண்டதால்தான்  பேய்களுக்கு நான் பயப்படுவதில்லை. மாக்கியவல்லி சொல்லியபடி எது நம்மைக் கொல்லாதோ அது நம்மை பலப் படுத்தும்.   கடமையின் காரணமாக காட்டு வழிப் போகும் பொழுது எல்லாம் என்னுடைய பெரிய பலம், மிகப் பெரிய துணை பேய்களே .  பல நேரங்களில் அவைகளே வழிகாட்டிகள். 

எதன் மேல் பயம் அதிகமாக இருக்கின்றதோ, அதை சந்தித்து விட்டால் பயம் அகன்று அபிமானம் வந்துவிடும். எனது சிறுவயது பேய் பயம் அப்படித்தான் போனது.  எனக்கு பத்து  வயது இருக்கும், நள்ளிரவில் அப்பா அம்மாவுடன் ,  பைவ் ஸ்டார் சாக்லெட் வாங்கித் தராத  கோபத்தில் கொட்ட கொட்ட விழித்தபடி ஓட்டுனர் இருக்கைக்கு பின் இருக்கையில் அமர்ந்து ஒரு நள்ளிரவில்  மன்னார்குடியில் இருந்து திருச்சி பயணப்பட்டுக் கொண்டு இருக்கையில்  , ஓட்டுநரிடம் இன்றைக்கு 15 பேர்  என்ற  நடத்துனர் உறங்கிப் போனார் திருச்சி போகும் வரை எங்கும் நிற்க வில்லை. திருச்சி நெருங்குகையில் தலைகளை எண்ணினேன். மொத்தம் 35. எங்களுக்குப் பின்னர் அவைகளை கண்டக்டர்  சீக்கிரம் இறங்கும் படி அதட்டினார் .  போகும் பொழுது அவைகளில் ஒன்று என் கையில் ஃபைவ் ஸ்டார் சாக்லெட் ஒன்றைத் திணித்து விட்டுப் போனது. 

பேய்கள் என் கண்களுக்கு மட்டும் தெரியும் படி பெரிய சக்தி எல்லாம் எனக்கு கிடையாது. எல்லோருக்குமே தெரியும்.  அந்தக் கண்டக்டருக்கு மனிதர்களாகவே தெரிந்தது போல ,உங்களுக்கும் கூட தெரியும்.  கூட்டத்தோடு கூட்டமாய் ஜனங்களுக்கு இடையிலேதான் இருக்கின்றன. என்ன அவை பேய்கள் எனப் புரிந்து கொள்ள கொஞ்சம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். பேய்களின் மீதான எனது பழைய பயமும் இன்றைய அபிமானமும் அவற்றை மனிதர்களிடம் இருந்து பிரித்து இனங்கண்டு கொள்ள உதவுகின்றன. 

மலை மேல் ஒரு பெட்டி கடை கூட இல்லாத ஓர் ஊரில் எனக்கு வேலை கொடுத்து இருக்கின்றார்கள். ஊர் என்றாலும் இப்பொழுது இது ஊர் கிடையாது. எப்பொழுதோ நடந்த ஒரு போரின் இறுதியில் இந்த காட்டுப் பகுதி கிராமம் சூறையாடப்பட்டு ஒட்டு மொத்த மக்களும் கொல்லப்பட்டுவிட்டதால், இங்கு அதன் பின்னர் யாரும் வசிக்கவில்லை. இறந்தவர்கள் பேய்களாக உலவுவதாக ஒரு வதந்தி. மற்றவர்களுக்கு வதந்தி என்றாலும் எனக்கு அது  உண்மை எனப் புரியும். 

என்னுடைய பணி சுலபமானது தான், , அந்த கிராமத்து  பாழடைந்த மலை வீட்டில் இருந்து கொண்டபடி  ஒரு கிலோ மீட்டர் தொலைவில்  இருக்கும் மலையடிவார  வேலியிட்ட மிகப்பெரும் மைதானத்தை கண்கானிக்க வேண்டும். மைதானத்தின் கீழ் ரகசிய அறைகளில் ஏதோ ஆராய்ச்சி நடைபெறுவதாக எனக்கு சம்பளம் கொடுக்கும் ஏஜென்சிகளுக்கு ஓர் ஐயம் , அதனால் தான் இங்கு நான் அனுப்பப்பட்டேன்.  

மலை வீட்டை நானே சீர்ப் படுத்தி எனக்கான ஓர் அறையை கதவுகளுடன்  அமைத்துக் கொண்டேன். கொடுக்கப்படும் மில்லியன் கணக்கான சம்பளத்திற்கு இவையும் செய்ய வேண்டும். வந்து ஒரு வாரம் ஆகின்றது. ஒரு நாள் , மைதானத்தில் மனிதர்கள் போல நடமாடுவதைப் போல தோன்றியதால் என அதிநவீன கேமராவினால் படம் எடுத்துப் பார்த்தால், எதுவுமே பதிவாகவில்லை. ஆம், பேய்கள் கண்களுக்கு மட்டும் தான் தெரியும் கருவிகளில் பதிவாகாது.  காட்டுப் பாதையில் சந்தித்த ஒருவனை இல்லை ஒன்றை படம் எடுக்க முயற்சித்தேன். முறைத்தது.  எடுக்காமல் விட்டுவிட்டேன், எடுத்து இருந்தாலும் தெரியப் போவதில்லை,. அதன் பின்னர் சிலப் பல பேய்களைப் பார்த்தேன். படம் எடுக்கவில்லை. அவைகளும் சிரித்தபடியே நகன்று போய்விட்டன.  சிலவை வீட்டிற்குள்ளும் அதுவாக வந்து அதுவாகப் போயின. 

மனித நடமாட்டம் இல்லை என மட்டும் தலைமைக்கு செய்தி அனுப்பினேன். பேய்களைப் பார்த்தேன் என சொல்ல முடியாது அல்லவா. இன்னும் ஒரு வாரம் இருந்துப் பார்க்க சொன்னார்கள். 

மறுநாள் காலையில்  ஏதோ ஒன்று கழுத்தை நெறிப்பதைப் போல உணர்வு. பேயாக இருக்க முடியாதே ... பேய்கள் கொல்லாதே !!  இடுங்கிய கண்களில் வழியேப் பார்த்தேன். என் கழுத்தை நெறிப்பதன்   கண்களில் குரூரம் தெறித்தது. என் நம்பிக்கை வீண் கிடையாது. அது பேய்  அல்ல .. அந்த முகத்தைப் பார்த்து இருக்கின்றேனே ... புகைப்படம் எடுக்க முயற்சிக்கையில் முறைத்ததே ... இல்லை இல்லை முறைத்தானே  .... நிஜமான மனிதன் !! 
"உளவாளி நாயே ".... எனத் திட்டியபடி அவனது பிடி இறுகியது .