ஹிட்லரின் காதலிகளும் முகச்சாயலும் - சிறு பத்தி

ஹிட்லர் என்ற படிப்பினையான சகாப்தம் "ஏவா பிரவுன்" ( Eva Braun) ஐ மட்டும் சந்திக்கவில்லை என்றால் ஆரம்பிக்கப் படாமலேயே முடிந்து இருக்கும். ஏவா பிரவுனிடம் அழகு இளமை அறிவு எல்லாம் இருந்தபோதிலும் அதையும் மீறிய ஈர்ப்பு ஒன்றை ஹிட்லர் கண்டார் அது , தற்கொலை செய்து கொண்ட ஹிட்லர் காதலித்த அவரின் அக்கா மகள் கெலி ரவுபலின் ( Geli Raubal) அச்சு அசலாக ஏவா பிரவுன் இருந்ததுதாம்.
ரவுபல் தற்கொலை செய்து கொண்டதும் , ஹிட்லரின் வக்கிரமும் கொடுமையும் தான் ரவுபலை தற்கொலை செய்து கொள்ள தூண்டின என பத்திரிக்கைகள் குற்றம் சாட்டின. நொந்துப் போன ஹிட்லர் தற்கொலை மனோபாவத்தில் இருக்க, அதில் இருந்து மீட்டு எடுக்க, ஹிட்லரின் நாசிக் கட்சியின் அதிகாரப் பூர்வ புகைப்படக்கலைஞர் ஹாஃப்மன் , தனது உதவியாளர்களில் ஒருவரான ஏவா பிரவுனை மீள் அறிமுகம் செய்து வைக்கின்றார். ஏவா ரகசியக் காதலி ஆகின்றார். ஹிட்லர் தனிப்பட்ட சோகத்தில் இருந்து மீண்டு வருகின்றார். ஏவா பிரவுனை சாவின் விளிம்பில் மணம் செய்து கொண்டாலும், கடைசி வரை கெலி ரவுபலைத் தான் ஹிட்லர் மிகவும் நேசித்து இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
தொட்ட குறை விட்ட குறை தொடர்ச்சிகள் பல சமயங்களில் நன்மையிலும் சில சமயங்களில் ஹிட்லரைப் போல படிப்பினையிலும் முடிவடைகின்றன. ஏவா பிரவுன் இல்லை என்றால், ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டு இருந்து இருக்கலாம். மிகப் பெரிய அழிவில் இருந்து ஐரோப்பா தப்பி இருந்தாலும், இரண்டாம் உலகப் போர் அழிவில் இருந்து கற்று கொண்ட பாடம் இல்லாமல் , இன்றைய நிலைமையைப் போல ஒற்றுமை இன்றி ஒருவருக் கொருவர் ஐரோப்பாவில் அடித்துக் கொண்டு இருந்திருக்க வேண்டிய நிலைமை வந்து இருக்கக் கூடும். ஒரு முகச் சாயல் வரலாற்றைப் புரட்டி போட்டு இருக்கின்றது.