520 ஈரோ - சிறுகதை
"இந்த மாசம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பணம் அனுப்ப முடியுமா" என்ற அப்பாவின் மென்மையான வேண்டுகோளும்
"எவ்வளவு நாள்தான்டா கார்த்தி படிச்சிக்கிட்டே இருப்ப, சீக்கிரம் வேலைக்குபோடா" என்ற அம்மாவின் புலம்பலும் காதில் இருந்து அகன்றுவிட்டாலும் இன்னும் மனதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தன.
நான் ஆராய்ச்சிப்படிப்பு மாணவன். ஆராய்ச்சிப்படிப்பிற்கு என் நிறுவனம் தரும் 1000 ஈரோ , வீட்டிற்கு அனுப்ப 500 எனக்கு ஐநூறு என சரியாகப் போய்விடுகின்றது. நான் ஊர்ச்சுற்ற, வெளிநிறுவனத்திற்கு , மாதத்தில் நான்கு ஐந்து நாட்கள் மென்பொருள் நிரலி அடித்து கொடுத்தால் இருநூறு முன்னூறு தேறும். பத்து நாட்கள் செய்ய வேண்டிய வேலையை, மாட்டினான்டா மங்குனிசாமி என, இரண்டே நாட்களில் செய்யச் சொல்வார்கள். எல்லா மாதங்களிலும் இந்த வேலை கிடைக்காது. வேலை இல்லாத மாதங்களில் Running Royal Life Only On Photos என முன்பு எடுத்த சுற்றுப்பயண போட்டோக்களை பேஸ்புக்கில் போடுவதோ அல்லது இப்படி இந்த பிரஸ்காட்டி மலை மேல் உட்கார்ந்து தூரத்தில் ரோம் நகரைப் பார்ப்பதிலோ நேரம் போகும்.
வெப்பமண்டல தமிழ் நாட்டுக்காரன் ஆன எனக்கு ஐரோப்பாவில் மழைப்பிடிக்கும். குளிர்காலத்தில் மழை பெய்தால் தட்பவெப்பம் சுழியத்திற்கு மேல் இருக்கின்றது எனப்பொருள். மேலும் மேகமூட்டம் வெப்பத்தை வெளியிடாமல் காத்து வைத்திருக்க , குளிர் வாட்டாது. ஆதலால் மனம் மழைக்கு ஏங்கும். இரண்டு நாட்கள் மழை அடித்து ஓய்ந்து இன்றுதான் கதிரவனின் வெளிச்சம் வந்து இருப்பதால் இந்தக் குட்டி மலை நகரத்தின் தெருக்களில் நல்ல சன நெருக்கடி. காப்பிக்கடைகள் இன்று களை கட்டின. மதியம் வந்ததில் இருந்து மூன்று காப்பிசினோ வகை காப்பிகள் குடித்தாகிற்று. வெளிச்சம் மறைய வெப்பம் குறைய குளிர் என்னை வாட்டியது. பசி இருந்தால் குளிர் அதிகமாக தெரியும். பசியுடன் வருத்தமும் சேர்ந்து கொண்டதால் மென்குளிர் நடுக்கக் குளிராக எனக்குத் தெரிந்தது.
மேலதிகமாக பணம் அனுப்பவில்லை என்றாலும் அப்பா சமாளித்துக்கொள்வார். ஆனால் அனுப்பினால் உதவியாக இருக்கும், யாரிடம் கேட்பது என்ற யோசனையை ஒரே இடத்தில் இருந்தபடி அசைபோடுவது அயற்சியாய் இருந்தது. இரண்டு கொண்டை ஊசி வளைவுகளை கடந்து கீழேப்போய் ரயில் நிலையத்தில் அமர்ந்து ரயிலை வேடிக்கைப் பார்த்தபடி யோசிக்கலாம். ரயிலும் ரயில் நிலையங்களும் பல சமயங்களில் எனக்கு போதிமரம்.
சாலையின் ஓரமாக வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த கார்களை ஒன்று இரண்டு என எண்ணிக்கொண்டே, பத்தாவது கார் இருந்த பெஞ்சில் ஒரு தாத்தா உட்கார்ந்திருந்ததால் அவரைக் கடந்து இருபதாவது கார் அருகே இருந்த மரப்பெஞ்சில் அமர்ந்தேன். ரயில் நிலையத்திற்கு இன்னும் சில கார்களை எண்ணவேண்டும்.
அந்த தாத்தாவுடன் உட்கார்ந்து இருக்கலாம் . மூன்று காரணங்களினால் அவருடன் உட்காரவில்லை. அவர் பேச ஆரம்பித்தால் என்னால் சரளமாக இத்தாலியத்தில் பேச முடியாது. இரண்டாவது , எனக்கு புன்னகையைக் கொடுத்தாலும் அவரின் தோற்றம் படு ஏழ்மையாக இருந்தது. மூன்றாவது மணி பத்து ஆகப்போகின்றது, சரியான மேலங்கி கூட இல்லாமல் குளிரில் உட்கார்ந்து இருக்கின்றார். ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று ஆகி நமக்கு ஏன் பிரச்சினை என்பதால் தான் இந்த இருபதாவது கார் அருகே இருந்த பெஞ்ச் தேர்ந்தெடுக்கப்பட்டது.
பெஞ்சில் உட்கார்ந்தவுடன் தாத்தா நினைவுப்போய், பணத்தின் நினைவு வந்தது. என்ன செய்யலாம் என்ற யோசனையின் அசை தொடர்ந்தது. கண்களுக்கு மட்டும் குளிர்வதில்லை. மனதிற்கு எது தேவையோ அதைக் காட்டும். தூரத்தில் ஈரோ பணத்தாள் இருப்பதாக மூளைக்கு சொன்னது. கவலையில் கானல் நீர் தென்படலாம் என பார்வையைத் திருப்பிக் கொண்டேன். உந்தப்பட்ட இரண்டாம் பார்வையில் அது பணத்தாள் என உறுதியானது. பணம் கிடந்த இடத்திற்கு அருகில் இருபத்திரண்டாவது கார் நின்றிருக்கவேண்டும். நான் ஓடிய வேகத்தில் 100 மீட்டர் பந்தயங்களில் ஓடியிருந்தால் உசைன் போல்ட்டைத் தோற்கடித்து இருப்பேன். ஓடிய வேகத்திற்குப் பரிசாய் அது 500 ஈரோத்தாள். கடைசியாக நான் இப்படி சாலையில் பணம் எடுத்தது , வியன்னா சென்றிருந்த பொழுதுதான். அன்று ஒரு பத்து ஈரோத்தாள் கிடைத்தது. ஆஸ்திரியாவில் பத்து ஈரோ அல்லது அதற்கு குறைவான மதிப்புள்ள பொருட்கள் கீழே கிடந்தால் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மீண்டும் பெஞ்சில் வந்து அமர்ந்து, பணக்கவலைத் தீர்ந்தது என கடவுளுக்கு நன்றி சொல்லும் தருணத்தில் புதுக்கவலைகள் முளைத்தன.
ஒருவேளை, என்னைப்போன்ற சிரமமான சூழலில் இருப்பவர்கள் பணத்தைத் தொலைத்துவிட்டு போய் இருந்தால் ;
கள்ளநோட்டாக இருந்தால் , இத்தாலியில் இது சர்வசாதாரணம், புழக்கத்திலே இல்லாத ஆயிரம் ஈரோத்தாள் கூட இத்தாலியில் கிடைக்கும்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வருவதைப்போல பணத்தை தரையில் போட்டுவிட்டு தூரத்தில் இருந்து படம்பிடித்து பகடி செய்யப்போகின்றார்களோ என்ற பயமும் வந்தது.
உன்னுடைய பணம் இல்லை.. வேண்டாம்...
உழைக்காத பணம் ஒட்டாது.
ஆனால் நான் திருடவில்லை. ஏமாற்றவில்லை. தானாகவே பணம் , இயற்கையாய் வந்து விழுந்து இருக்கின்றது.
முதன் முதலாய் ரோம் வந்து இறங்கியபொழுது, எனது கைப்பை கிட்டத்தட்ட 600 ஈரோ பணத்துடன் காணாமல் போனதற்கான இழப்பீட்டு பணமாக எடுத்துக் கொள்ளலாமே ...
எத்தனை நாட்கள் சம்பளம் இல்லாமல் வேலைப்பார்த்து இருக்கின்றாய் அதற்கான சன்மானமாய் இருக்கட்டும்.
மனம் இரண்டு பக்கத்திற்கும் பேசியது. கடைசிப்பேருந்திற்கு இன்னும் நாற்பது நிமிடங்கள் இருந்தன. இங்கிருந்து பேருந்து நிலையம் நடக்க 10 நிமிடங்கள். இன்னும் முப்பது நிமிடங்கள் காத்து இருப்போம். யாராவது வந்து தேடினால் கொடுத்துவிடுவோம். இல்லாவிடில் இன்று நான் அதிர்ஷ்டமானவன்.
ஒவ்வொரு நிமிடமும் மெல்ல நகர்ந்தது. யாரும் வந்துவிடக்கூடாதே என்று ஒரு புறமும் , முப்பது நிமிடங்கள் எப்படி கரையும் என மறுபுறமும் என்னிடம் நான் அருமையாக நடித்துக் கொண்டிருந்தேன். அந்த பத்தாவது பெஞ்ச் தாத்தா மெல்ல ஒவ்வொரு காராக தொட்டபடி என்னை நோக்கி வந்தார்.
கண்டிப்பாக இந்த தாத்தாவின் பணமாக இருக்காது. அருகில் வந்த தாத்தா,
"இந்த இருபது ஈரோத்தாள் நீ சென்றவழியில் கிடந்தது , இப்பொழுதான் பார்த்தேன் , உன் பணமா " என இத்தாலியத்தில் கேட்டார்.
ஐநூறுடன் மேலும் இருபதா... இதுவரை இரண்டு பக்கமும் வாசித்துக் கொண்டிருந்த மனம், விடாதே வாங்கிக் கொள் என்றது. முப்பது நிமிட கெடு ஒருமுகம் ஆன ஆசை மனத்தினால் வெறும் 5 நிமிடங்களில் மறந்து போனது.
"ஆம் என்னுடையதுதான் நன்றி " என பொய்யுடன் வாங்கிப் பையில் வைத்துக் கொள்ளும்பொழுது கொஞ்ச தூரத்தில் ஒரு கார் மெல்ல வருவதையும் கவனித்தேன். ஒருவேளை தொலைத்த பணத்தைத் தேட வரும் காரா !! .
தூரத்தில் ரயிலின் சத்தம் கேட்டது.
"சரி தாத்தா, ரயிலுக்கு நேரம் ஆகிவிட்டது, நல்லிரவு" என மற்றொருப் பொய்யை சொல்லிவிட்டு நடக்கையில் , ஒருகணம் கூடத்திரும்பிப் பார்க்கவில்லை , ஒரு வேளை அந்தக் கார் பணத்தைத் தேடும் காராக இருந்து, தேடுபவர்களைப் பார்த்தால் ஆசைமனம் தோற்றுவிடுமோ என்ற பயம்... நிமிடங்களில் மாறியதற்கு மனம் வெட்கப்படவில்லை. சமாதானத்தை தேடிக்கொண்டிருந்தது.
ரயில் எனக்கு போதி மரம் தானே ... ஊர் சுற்றிப்போகப் போகும் ரயில் பயணத்தில் இந்த 520 ஈரோக்களுக்கு ஏதாவது ஒரு சமாதானம் கண்டுபிடித்துகொள்ளலாம். மழைப்புழுக்கமா மனப்புழுக்கமா எனத் தெரியவில்லை...வெக்கையாக இருந்தது. மென்குளிரை வென்ற வெக்கையுடன் ரயில் நிலையம் நோக்கி நடந்தேன்.
--------------------