Friday, October 26, 2012

எக்ஸ் ஒய் இசட் - சிறுகதை


கொரடாச்சேரி இதுதான் என் சொந்த ஊர் என்று யாரிடமாவது சொன்னால் எங்கள் குடும்பத்தினருக்கு பிடிக்காது. “பில்டிங் காண்டிராக்டர்” அப்படி என்று ஒரு படத்தில் வடிவேலு சொல்வதைப்போல, விஸ்வநாதபுரம், பழவனக்குடி என அருகில் இருக்கும் பெயரில் “சேரி” இல்லாத கிராமங்களை சுட்டி, மேட்டுக்குடிகளாக காட்டிக்கொள்ள எத்தனிக்கும்
சூழலில் வளர்ந்தவன் நான்.

ஆண்டுக்கொருமுறை ஊருக்குப்போகும் பொழுதெல்லாம், என் பெரியப்பா வீட்டில் இருந்து நான்கு வீடுகள் தள்ளி இருக்கும் எக் ஒய் இசட் வீட்டைத் தாண்டும்பொழுது, என் சொந்தக் காரர்கள் எல்லாம் எக்ஸ் ஒய் இசட் இப்பொவெல்லாம் முழுப்பைத்தியமாவே ஆயிட்டான் என்று சொல்லுவார்கள்.

எக்ஸ் ஒய் இசட்டின் பெயர் அதுவல்ல, அது ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதியின் பெருமைப் பெயரைச் சுட்டும் பெயர். அவன் அதைச் சார்ந்தவன் என்பதால், அந்தப் பெயரைவைத்துத்தான் அவனை அழைப்பார்கள்.
கருத்துதான் முக்கியம் என்பதால், அவர் எந்த சாதியைச் சேர்ந்தவன் என்ன என்பதெல்லாம் அவசியமில்லை என்பதால் எக்ஸ் ஒய் இசட் என்ற குறியீடு.

 இதே எக்ஸ் ஒய் இசட் சாதியைச் சேர்ந்தவர்கள் , டெல்டா மாவட்டங்களின் வேறு சிலப்பகுதிகளில் ஏபிசி எனவும் கே எல் எம் எனவும் பட்டம் வைத்துக்கொள்வார்கள். நான் கூட எக்ஸ் ஒய் இசட் என்றாலும் , என் அம்மா வழி ஏபிசி எனப்பட்டம் வைத்துக்கொண்டதால் கொஞ்சம் உயர்குடி ஆகிவிட்டோம் என்ற சிறிய பெருமையும் உண்டு.

சுற்றமேத் திட்டினாலும், என் அப்பா மட்டும் எக்ஸ் ஒய் இசட்டைப் பார்க்கும்பொழுதெல்லாம் காசு கொடுப்பார்.

”எதுக்குமே அசராதவனை ஒரு சின்ன விசயத்தில அசைச்சிட்டானுங்க,, நிஜமான போராளி ”  என்று பைத்தியக்காரனைப் பாராட்டும்பொழுது எல்லாம் என் அப்பாவின் மனநிலையின்  மேலேயே சந்தேகம் வரும்.

எக் ஒய் இசட் டிற்கு இப்பொழுது ஒரு 80 வயது இருக்கும்.  அந்தக் காலத்தில் எக்ஸ் ஒய் இசட் , பெரியாரின் கருத்துக்களில் தீவிர ஈடுபாட்டில் இருந்தவராம்.
 ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில்,  தாழ்த்தப்பட்டவர்கள் என்றழைக்கப்படும் நபர்கள் அதிகம் இருக்கும்  பொதுவுடமைக் கட்சிக்கூட்டங்களிலும் பங்கேற்றதால், எக்ஸ் ஒய் இசட், ஏபிசி, கே எல் எம் என அனைத்துக்கூட்டத்தினரும் அவரின் மேல் கடுங்கோபத்தில் இருந்தனாரம்.

 எக்ஸ் ஒய் இசட்டோட பழைய நண்பர்கள் ரங்கநாதன் , சுவாமிநாதன்
தட்சிணாமூர்த்தி போன்றவர்களுக்கு கூடப்பிடிக்கவில்லையாம். அவரோட சொந்த அண்ணன் சொத்தில் எந்தப் பங்கும் கொடுக்காத பொழுதும்
கவலைப்படாமல் களப்பணி செய்தார் என்று என் அப்பா எக்ஸ் ஒய் இசட்டின் பெருமைப்பாடுவார்.

ஒருதடவை வெட்டாற்றுப்பாலத்தில் வைத்து அடித்துக் கொலை செய்யக்கூடப் பார்த்தார்களாம், அப்பொழுது கூட அசரவில்லை.
அடி வாங்கியபின்னர் அவரின் வேகம் அதிகமாகத்தான் இருந்ததாம்.

அப்பா, எக்ஸ் ஒய் இசட்டை பற்றி சொல்லும்பொழுதெல்லாம், என் அலுவலகத்தில் இருக்கும் பசுபதி தான் நினைவுக்கு வருவான்.
எங்கு யாரு ஒடுக்கப்பட்டாலும், அவனுக்கு தூக்கம் வராது. இந்த சமுதாயத்தை மாற்ற ஏதாவது செய்யவேண்டும் சொல்லிக்கொண்டும்
அவனால் முடிந்ததை செய்து கொண்டும் இருப்பான். அவனுடைய கணினியில் அம்பேத்கார், பெரியார், விபிசிங் படங்கள் வைத்திருப்பது
எனது மேலாளர்கள் சிலருக்குப் பிடிக்காது. நேர்மையானவன், என் வீட்டிற்கு கூட வந்து இருக்கின்றான், என் அப்பாவிற்கு அவனது சிந்தனைகள் பிடிக்கும், அவனையும் பிடிக்கும். வேலையில் எள் என்றால் எண்ணெய் ஆக இருப்பான்.
ஆனாலும், அலுவலக நேரத்தின் பாதியில் இணையம் மேயும் எனக்கு கிடைக்கும் சம்பள உயர்வில்  அவனுக்கு கால்வாசி கூட கிடைக்காது. எங்கு அடித்தால் எங்கு வலிக்கும் என்பது எங்களுக்குத் தெரியும் என எனது மேலாளர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு இருக்கின்றேன்.

திரும்ப எக்ஸ் ஒய் இசட்டிற்கு வருவோம், ஏதோ ஒரு நாள் ரங்கநாதன், சுவாமிநாதன், தட்சினாமூர்த்தி குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாய் வாழும் தெரு வழியாக  நமது கதையின் நாயகன் வர, தெருமுனையிலேயே , அந்தத் தெருவில் இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைது செய்து கிட்டத்தட்ட ஒரு வருடம் நொங்கு நொங்கு என நொங்கிவிட்டனராம். அந்தப் பிரச்சினைக்குப் பிறகு அடங்கியவர்தானாம், பைத்தியம் மாதிரி உலாவுவாராம், யாராவது சோறு போட்டால் சாப்பிட்டு, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டை கழித்துவிட்டார்.

”சரியான நேரத்தில காயடிச்சிட்டானுங்க,  வேரில வெந்நீரை எப்போ ஊத்தனும்னு அவனுங்களுக்குத் தெரியும்”

”எவனுங்கப்பா ? “ என இது வரை அப்பாவிடம் கேட்டதில்லை.

காலையில் எழுந்தோமா, வழுவழுப்பான தாளில் வரும் ஆங்கில தமிழ் நாளிதழ்களைப் படித்தோமா, பேஸ்புக்கில் இளையராஜா பாட்டைப் போட்டுட்டு, பங்கு வணிகம் பார்த்துட்டு, மிஞ்சிய நேரத்தில் கொஞ்சம் மென் நிரலி அடித்து வீட்டு, மஞ்சள் வண்ணம் பூசிய வீட்டில் என் அம்முவை கட்டியணைத்துக் கொண்டு தூங்குவதுதான் என் வழமையான வாழ்க்கை.

விடுப்பு முடிந்து அலுவலகம் வந்து பின்னர் தெரிந்தது, பசுபதியின் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு  அவனை வேலையை விட்டு நீக்கிவிட்டார்கள் என்று. என்ன பிரச்சினை என்று விசாரித்ததில் , அவனது திட்டக்குழுவில் இருந்த  ஒரு பெண்ணை படுக்கைக்கு பகிரங்கமாக அழைத்தானாம்.

அவனின் வேலை நீக்க செய்தி , நமிபீயாவில் புயலடித்து நான்கு பேர் பலி என்பது எப்படி இருக்குமோ அந்த வகையில்தான் எனக்கு சாதாரணமாக இருந்தது. பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
அடுத்த வருடம் அமெரிக்கா போனேன். ஒரு வருடம் இருந்தேன். புறநகர்ப்பகுதியில் பங்களா கட்டினேன். ஒரு நாள் அப்பாவுடன் காரில் செல்லும்பொழுது,  ஒரு தெருமுனை மீட்டிங்கில் ஏதோ ஒரு வாழ்வாதார பிரச்சினைக்காகப் பசுபதி பேசிக்கொண்டிருந்தான்.

“தீர்க்கமாக தெளிவாப் பேசுறான், அப்ப மாதிரி, இப்ப எல்லோரையும் எக்ஸ் ஒய் இசட்டுக்குப் பண்ண மாதிரி ஈசியா நசுக்கிட  முடியாது”

என் அப்பா சொன்னதை நான் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.